Friday, August 20, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 7: இரங்கற்பா

கவிவளம் மிக்க கவிஞர்கள் எது பாடினாலும் - அது பாராட்டோ, வசையோ, பரவசமோ எதுவாக இருந்தாலும் கவிநயத்துடனும் நெஞ்சைத் தொடுவதாகவுமே இருக்கும். அப்படியே, தமக்கு அருமையானவர் மறைந்தால் மனம் நொந்து கவிஞர்கள் பாடும் இரங்கற்பாக்களும் அற்புதமானவை.

கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். வாணியன் தாதன் என்பது அவரது பெயர். தமிழில் உத்தரகாண்டத்தைப் பாடியவர். கம்பருடன் சதாபோட்டி. கம்பரது வாழ்நாள் முழுதும் அவரிடம் விரோதம் பாராட்டியவர். ஆனால் அந்தரங்கத்தில் கம்பரது புலமையில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கம்பர் காலமானபோது அவரோடு கவியும், கலையும், கல்வியுமே செத்துவிட்டதுபோல் வாணியன் தாதனுக்குத் தோன்றியது. கவிச்சக்கரவர்த்தி மறைந்த நாளிலேயே சரஸ்வதிதேவி தன் மாங்கல்யத்தை இழந்து விட்டாள் என்றும் அவர் கருதினார். அதோடு இனி அற்பமான புலமையுடை யவர்கள் பாடு கொண்டாட்டமாய்ப் போய்விடும். கம்பர் இல்லாத உலகில் அவர்கள் பேரும் புகழும் சம்பாதித்து வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வாணியன் தாதனுக்குத் துயரம் பொறுக்கவில்லை. கம்பர் இல்லாத உலகத்தில் மகாலட்சுமிக்கு வாழ்வு உண்டு; பூமாதேவியும் என்றும் போல் இருப்பாள்; சரஸ்வதியின் பாக்கியந்தான் போய்விடும் என்று புலம்புகிறார்:

` இன்றோ நம் கம்பன்
இறந்தநாள்! இப்புவியில்
இன்றோ அப் புன்கவிகட்கு
ஏற்ற நாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப்
புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும்
நாள்!`

நமச்சிவாயப் புலவர் என்பவர் வள்ளல் சீதக்காதியால் மிகவும் மதிக்கப் பெற்றவர். சீதக்காதி இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரம் கொண்டார். `சீமான் இறந்திட்டபோதே புலமையும் இறந்ததுவே` என்று புலம்பினார். மனம் குழைந்து அவர் வருந்திப் பாடுகிறார்:

பூமாது இருந்தென்
புவிமாது இருந்தென்? பூதலத்தில்
நாமாது இருந்தென்?
நாம் இருந்தென்? நல் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்
சீதக்காதி கொடை மிகுந்த
சீமான் இறந்திட்ட போதே
புலமையும் செத்ததுவே!
( பூமாது- லட்சுமி; புவிமாது - நிலமகள்; நாமாது- பிரமன் நாவிலிருக்கும் சரஸ்வதி; பூதலம்-நிலவுலகம்; மால் - திருமால் )

இந் நிலவுலகில் இலக்குமி இருந்து என்ன பயன்? நிலமகள் இருந்தும் யாது பயன்? நல்ல புலமை வாய்ந்த புலவர்களுக்கு வள்ளலும் திருமால் போன்று அழகு பொருந்தியவனுமான மன்னன் சீதக்காதி உயிர் நீத்தபோதே புலவரின் கல்விச் சிறப்பும் ஒழிந்து போயிற்று.

தமக்கு அருமையானவர் இறந்தால் மனம் வெதும்பி சாபமிடும் புலவர்களும் உண்டு. கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். அவர் இறந்தபோது ஒரு புலவர் கதறிப் புலம்பினார். அவரது உயிரைப் பறித்த எமனை வயிறெரிந்து சாபமிட்டார்.

`உலகத்தில் வள்ளல்கள் ஒரு சிலர் தான். ஆனால் உதவி நாடி யாசிப்பவர்களோ மிகப் பலர். இதைத் தெரிந்திருந்தும் கூவத்து நாரணன் உயிரை எமன் கொண்டு போய் விட்டான். எமனே! நீ நாசமாய்ப் போக! கரி வேண்டுமென்றால் ஏதாவது காட்டு மரங்களை வெட்டி எரித்துக் கொள்ளாமல் கற்பக விருட்சங்களையா வெட்டுவது? அநியாயமாகக் கூவத்து நாரணனைக் கொன்று விட்டாயே?`

`இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?

கூவத்து நாரணன் உயிரை அபகரித்து விட்டான் எமன் என்று சொல்லாமல், அவனைக் கொலை செய்துவிட்டான் என்றே புலவர் உக்கிரத்துடன் சொல்லுகிறார்.

ரசிகமணி டி.கே.சியின் அருமைப் புதல்வர் தீத்தாரப்பன் நல்ல கவிஞர்; கதாசிரியர்; அவரது கதை - கவிதை சேர்ந்த தொகுப்பு ஒன்று `அரும்பிய முல்லை` என்ற பெயரில் வெளியாகியுள்ளது. டி.கே.சியின் இந்த அருமைப் புதல்வர் 32 வயதில் இறைவனடி சேர்ந்தார். டி.கே.சியின் சோகம் அவரது ரசிகர்களின் சோகம் அல்லவா? கவிமணி டி.கே.சியின் அரிய நண்பர். அவரது அருமை மகன் இறந்த செய்தி கேட்டதும் ஒரு பாடல் எழுதி டி.கே.சிக்கு அனுப்பி வைக்கிறார்.

`எப்பாரும் போற்றும்
இசைத் தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்
லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச்
சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்த நாள் காண்பேன்
இனி?`
(செல்லையா என்பது தீத்தாரப்பனின் செல்லப் பெயர். தீபன் என்ற புனை பெயரில் எழுதினார்.)

இந்தப் பாடலைப் பார்த்ததும் டி.கே.சி எப்படித் துடித்தாரோ என்று தானே நினைக்கத் தோன்றுகிறது? அதுதான் இல்லை! டி.கே.சி மகனை மறந்தார்; அவர் இறந்ததை மறந்தார்; பாட்டின் அருமையை மிக ரசித்து அனுபவித்தார். அதன் பிறகு அவர் சொன்னார்: " இப்படி ஓர் அற்புதமான கவி தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்!''

" இப்படி மகனைப் பிரிந்த காலத்தும் அவன் மேல் பாடப்பட்ட பாட்டை அனுபவிக்கும் அற்புதப் பிறவியை என்ன என்பது! அவரை `ரஸஞ்ஞான்¢` என்கிறார் நண்பர் மகராஜன். ஆம், ரஸிகத்தன்மை சிலருக்கு இருக்கலாம். இவ்வுலக நிலையாமையைப் பற்றி ஞானம் பிறக்கலாம் பிறருக்கு. ஆனால் தன் உடல் ஆடும்போதுகூட, ஞான திறமும் மீறி ரஸமாகப் பாட்டை அனுபவிப்பது என்றால் அப்படி அனுபவிப்பவரை ரஸஞ்ஞானி என்று கூறாமல் என்ன கூறி விளக்க முடியும்? " என்று எழுதுகிறார் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Friday, August 06, 2004

நினைவுத் தடங்கள் - 22

கோடைவிடுமுறை வரைக்கும் கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் நிறைய எடுத்தேன். சிதம்பரம் கோயிலுக்குப்போய் கோபுரங்களையும் சிவகங்கைக் குளத்தையும் பொன்னம்பலத்தையும், நடன சிற்பங்களையும் கல்சங்கிலி தொங்கும் பிரம்மாண்ட தூண்களையும் எடுத்தேன். எடுத்து மாளவில்லை. ஏகப்பட்ட படங்கள் எடுத்தும் சலிக்க வில்லை. எடுத்த பிலிமை பல்கலைக் கழக வளாகத்திலேயே இருந்த ஆர்.டி.வேலு ஸ்டூடியோவின் கிளையில் கொடுத்து டெவலப் செய்து பிரிண்ட் போடுவேன். ஸ்டூடியோ உரிமையாளர் சின்ன பேபி ப்ரௌனி காமிராவில் எடுத்தவைகளா என்று நம்ப முடியாமல் கேட்டார். என் படங்கள் அவருக்குத் திருப்தியாக இருந்ததால் பிறகு சலுகை காட்டத் தொடங்கினார். இருட்டறைக்குள் உடனிருந்து டெவலப்பிங் ப்ரிண்டிங்கு களைப் பார்க்கவும் அனுமதித்தார். அவ்வப்போது விளக்கமாகச் சொல்லியும் கொடுத்ததோடு நானே அங்கு ப்ரிண்ட் போடவும் அனுமதித்தார். அதன் பிறகு கோடைவிடுமுறைக்கு ஊர் திரும்பியபோது டெவலப்பிங் மற்றும் ப்ரிண்ட்டிங் செய்யத் தேவையான கரைசல்கள், ப்ரிண்டிங் தாட்கள் எல்லாம் சலுகை விலையில் கொடுத்தார்.

ஊருக்கு வந்ததும் மச்சுவீட்டின் ஒரு அறையை என் இருட்டறையாக ஆக்கிக் கொண்டு, எடுத்த பிலிம்களைக் கழுவவும் ப்ரிண்ட் போடவும் செய்தேன். நாள் முழுதும் காமிராவைத் தூக்கிக்கொண்டு,பால்ய நண்பன் ஒருவனோடு காடுமேடெல்லாம் சுற்றிக் கண்ணில் பட்டதையெல்லாம் படமெடுத்தேன். போட்டோ அப்போது பிரமிப்பான விஷயமானதால், இப்போது சினிமா ஷ¥ட்டிங் நடந்தால் கூடுகிறமாதி ஒரு கூட்டம் எங்கு போனாலும் ஒரு சிறியவர் பெரியவர் பேதமன்றித் தொடர்ந்து வரும். ஸ்கூட்டர் வழியில் நின்று விட்டால் ஒர் கூட்டம் சூழ்ந்து கொண்டு மேற் கொண்டு செய்யவிடாமல் டென்ஷன் உண்டாக்குவார்களே அதுபோல் இந்தக் கூட்டமும் நம்மைப் படம் எடுக்கவிடாமல் தொல்லை கொடுக்கும்.

நான்கு மைலுக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்தில் முருகன் கோயிலில் மயில் ஒன்று இருப்பதாக அறிந்து அதைப்படம் எடுக்க நண்பனுடன் போனேன். கோயிலை விசாரித்துப் போவதற்குள் ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து கொண்டுவிட்டது. மயிலைப் படம் எடுக்கப் போகிறோம் என்றதும் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். கோயிலை அணுகி மயிலைப் படம் எடுக்க முயன்றபோது கூட்டத்தின் கூச்சலால் மிரண்டுபோய் மயில் பறந்து விட்டது. அதைத் தொடர்ந்து தேடிப் போய் எடுக்கும்போது மீண்டும் தூரத்தே போய் உட்கார்ந்தது. நாங்களும் விடாது தொடர்ந்தோம். கடைசியில் அது பஸ் போகும் சாலைக்குப் போய்விட்டது. அப்போது வழியோடுபோன பஸ்ஸ¤ம் கூட்டத்தைக் கண்டு நின்று விட்டது. மதியம் தாண்டியும் மயிலைப் படம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்தொடு திரும்பினோம்.

இப்படி 4 வருஷங்கள் சின்னக் காமிராவில் படம் எடுத்து சலித்தபின் என் அத்தான் ஒரு விலையுயர்ந்த காமிரா, கொஞ்சம் சல்லிசான விலைக்கு வந்தபோது 150ரூ.க்கு வாங்கிக்கொடுத்தார். அப்போது நான் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராகப் பணியேற்றிருந்தேன். யாஷிகா-ஏ என்ற ஜப்பான் காமிரா. இதுவும் ரோலிப்ளெக்ஸ் போல ரிப்ளெக்ஸ் காமிராதான். இதில் டைமிங் அப்பர்ச்சர் எல்லாம் உண்டு. பெட்டிக் கேமிரா போல அல்லாமல் தேவையான ஒளியை நாமே கணக்கிட்டுச் சரியாக அமைத்தால்தான் நல்ல தெளிவான படம் எடுக்க முடியும். இதற்காக சில போட்டோப் புத்தகங்கள் வாங்கிப் படித்து சோதனை முயற்சியாகப் பல படங்கள் எடுத்தேன். கண்ணன், தினமணிக் கதிர் போன்ற பத்திரிகைகளில் நான் எடுத்த படங்கள் வெள்¢யாகின. ப்ளாஷ் லைட் வாங்கியதும் நெருங்கிய உறவினர்கள் திருமணங்களில் எல்லாம் நான் தான் போட்டோகிராபர். இப்போது வெளிநாட்டுக்கு எல்லோர் வீட்டிலும் யாராவது போயிருப்பதால் எல்லோர் வீட்டிலும் இளைஞர்கள் கல்யாணமண்டபத்தில் காமிராவும் கையுமாய் நிற்கிறார்கள். நமக்கு இப்போது மவுஸ் இல்லை. வருந்தி அழைத்தாலும் போகமுடிவதில்லை.

பிறகு வன்னப்படங்களின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டது. வண்ணப் படங்கள் எடுக்க ரிப்ளெக்ஸ் காமிராக்கள் அதிக செலவை உண்டாக்கும் என்பதால் 35mm காமிரா ஒன்று வாங்க வேண்டி வந்தது. மஸ்கட்டில் என்ஞினீயராக இருந்த என் மைத்துனன் மூலம் cannon QL-1.9 என்ற காமிராவை வாங்கி ஸ்லைட் படங்களாக நிறைய எடுத்தேன். அதற்காக ஒரு சின்ன ஸ்லைட் புரொஜெக்டரும் வாங்க வேண்டியிருந்தது.
இதைக் கொண்டு மாமல்லபுரம், செஞ்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாக்குமரி போன்ற இடங்களுக்குக் கெல்லாம் குடும்பத்துடன் போய் சிலிர்ப்புடன் ஏராளமாய் எடுத்தேன். என் அம்மா குறைப் பட்டுக் கொண்டபடி நான் என் சம்பளத்தில் அதிகம் செலவழித் தது டைகள் வாங்கவும் போட்டோ எடுக்கவும் தான். ஒன்றையொட்டி ஒன்று வாங்குவது போல் ஓய்வுபெற சில ஆண்டுகள் இருக்கும்போது கட்டிய வீட்டில் போட்டொ டார்க் ரூம், அதில் என்லார்ஜிங் மிஷின் என்று வளர்ந்து கொண்டே போயிற்று. இப்படி போட்டோக் கலை ஒரு 50 வருஷம் என்னைப் பிடித்து ஆட்டியது. இப்போது தான் கொஞ்ச நாட்களாக, கணினி வாங்கி அதில் தீவிரமாய் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு
போட்டோவுக்கு நேரமில்லை. இருந்தாலும் அவ்வப்போது கை துறுதுறுக்கத்தான் செய்கிறது.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

Wednesday, August 04, 2004

நினைவுத் தடங்கள் - 21

சின்ன வயதிலேயே எனக்கு ஓவியத்தைப் போலவே புகைப்படக் கலையிலும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. எங்கள் தாய்மாமா வீட்டில் பெரிய பெரிய ரவிவர்மா ஓவியங்கள் இருந்ததையும் அவை எனக்கு சின்ன வயதில் பிரமிப்பையும் ரசனையையும் ஏற்படுத்தின என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதுபோலவே நிறைய புகைப்படங்களும் வீடு முழுக்க மாட்டப் பட்டிருந்தன. அப்போதெல்லாம் ஒருவர் வீட்டில் குழந்தையையோ, குடும்பத்தையோ படம் எடுத்தால் அதில் ஒரு பிரதியை கண்ணாடி சட்டம் போட்டு உற்றார் உறவினர்க்குக் கொடுப்பார்கள். புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளும் ஸ்டூடியோவுக்குப் போய், நின்று கொண்டு உட்கார்ந்துகொண்டு என்று பல் போஸ்களில் படம் எடுத்துக் கொண்டு அதன் பிரதிகளை நெருங்கிய உறவினர்க்குத் தருவர்கள். அப்படிச் சேர்ந்த படங்கள் ஒவ்வொரு வீட்டிலும் புகைபடிந்து ஒட்டடை பின்னி நிறையத் தொங்கும்.

அப்போதைய படங்கள் எல்லாம் அனேகமும் `செப்பியா` எனப்படும் செம்பழுப்பு நிறத்திலேயே இருக்கும். என் மாமாக்களில் ஒருவர் உடையார் பாளையம் ஜமீனில் அந்தக் காலத்தில் பேஷ்கார் ஆக இருந்தார். அவர் நிறைய அவரது அலுவலக உடையில் பல போஸ்களில் எடுத்து மாட்டியிருந்தார். குடுமித்தலையில் சேட் தொப்பி போல பூப் போட்ட பட்டைத் தொப்பி, உக்கழுத்துவரை பொத்தான் போட்ட கோட்டு, நெற்றியில் விபூதிப் பட்டை, சந்தனப் பொட்டு, காதில் காவடிமாதிரி அடியில் இருக்கும் சிவப்புக் கல் வைத்த கடுக்கன், கோட் பையில் செருகிய கர்ச்சீப், கழுத்தில் விசிறியடுக்கு அங்கவஸ்திரம்- பரமசிவம் கழுத்துப் பாம்பு மாலை போல, பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய
வேட்டி, காலில் முன் பக்கம் வளைந்த வார் செருப்பு என்று தான் யார் படம் எடுத்துக் கொண்டாலும் ஒரே மாதிரியில் இருக்கும். என் மாமா ஒரே பிளேட்டில் எடுத்த மாதிரி ஒரு டஜன் பாஸ்போர்ட் சைஸ் படங்கள் - டை கட்டியும் கட்டாமலும், கோட் போட்டும் போடாமலும்,வெயிஸ்ட் கோட்டுடனும் என்று பனிரெண்டு போஸ்களில் எடுத்து அமைத்த படம் ஒன்றும் ஏதோ கும்பகோணம் மகாமக ஸ்பெஷல் சலுகைப் படம் என்று எடுத்து மாட்டியிருந்தார்.

தம்பதிகள் படமும் அந்தக் காலத்துப் பாஷனில் இருக்கும். ஆண்கள் மேல் சொன்ன லட்சணங்களுடனும் பெண்கள் கழுத்து நிறைய நகைகளுடன் காதில் கொப்பு, மாட்டல், மூக்கில் பேசரி, புல்லாக்கு, முழங்கைக்குமேல் நெளி, இடுப்பில் ஒட்டியாணம் என்று என்று சர்வாலங்கார பூஷிதையாய்த்தான் போட்டோவுக்கு நின்றார் கள். ரவிக்கையின் கை முழங்கை தாண்டி முக்கால் கைக் கொண்டதாக அந்தக்
காலத்து பாஷனுக்கு அத்தாட்சியாக இருக்கும். படம் எடுப்பவர் வீட்டுக்கு வந்தோ அல்லது தன் ஸ்டூடியோவிலொ கருப்புத்துணி மூடிய முக்காலி ஸ்டேண்டில் நிற்கும், பிளேட் காமிராவில் தான் படம் எடுப்பார். கைக்காமிராவெல்லாம் பின்னால்தான் வந்தது. அந்தச் சின்ன வயதில் நான் பார்த்து ரசித்த போட்டோப் படங்களும் போட்டோ எடுத்தபோது பார்த்ததும் எனக்கு போட்டோ எடுக்கும் ஆசையை ஏற்படுத்தியது.

எட்டு ஒன்பது வயதில் அதுவும் அந்தக் காலத்தில் என் ஆசை எப்படி நிறைவேறும்? ஒரு சதுர அட்டைப் பெட்டியில் ஒரு வட்டமான பழைய மூக்குக் கண்ணடி லென்சைப் பொருத்தி லென்சை கையால் மூடித்திறந்து ஸ்டூடியோக் கேமிராவில் செய்வது போலச் செய்து படம் எடுத்த மாதிரி பாவனை செய்தேன். ஆரம்ப வகுப்பு பாடப் புத்தகங்களிலிருந்து கிழித்த மரம், செடி, ஆடு, மாடு, ஊஞ்சல் ஆடும் பெண், வண்டியோட்டும் ஆள் படங்களை சின்ன அட்டைகளில் ஒட்டி, அதற்கேற்றபடி படம் எடுத்தமாதிரி பாவனை செய்து அப் படங்களை நண்பர்களிடம் காட்டுவேன். அவை அசல் அல்ல என்று தெரிந்தாலும் என்னிடம் போட்டொ எடுத்துக் கொள்ள சிறுவர்கள் கெஞ்சுவார்கள். இப்படித் தான் என் ஆரம்ப காலப் போட்டோ முயற்சி இருந்தது.

பிறகு கல்லூரிக்குப் போன பிறகு இண்டர் படிக்கும் போது தான், நிஜ போட்டோ எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. என் இன்னொரு மாமா மகன் ஜே.எம்.கல்யாணம் - சென்னை மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனின் அப்பா ஒரு சிறந்த போட்டோக் கலைஞர். அவர் தான் எனக்கு இக் கலையில் குரு. அவர் அப்போது `ரோலிப்ளக்ஸ்' என்ற அப்போதைய விலை உயர்ந்த, தரமான கேமராவால் அற்புதமான படங்களை எடுத்து வந்தார். அனேகமாக எங்கள் உறவினர்கள் எல்லோர் வீட்டிலும் அவர் எடுத்த படங்கள் தொங்கின. அவர் என் போட்டொ ஆர்வத்தைப் பார்த்து தன்னிடம் இருந்த அமெச்சூர் `பேபி ப்ரவ்னி` கேமிராவை எனக்குக் கொடுத்து அதில் பழகும்படி சொன்னார்.

அது ஒரு சின்ன கையடக்கமான காமிரா. அது கொடாக் பெட்டி காமிரா போல இல்லாமல் ரோலிப்ளக்ஸ் கேமிரா மாடல்¢ல் - ரிப்ளெக்ஸ் டைப்பில் இருந்தது. ஆளை போக்கஸ் செய்து பட்டனை அமுக்க வேண்டியது தான். வேறு டைமிங், அப்பர்ச்சர் என்று எதுவும் கிடையாது. நல்ல வெளிச்சத்தில் கை நடுங்காமல் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அற்புதமாக வரும். மேலும் பெட்டி கேமரா மாதிரி இல்லாமல் இது மிகவும் சிக்கனமாக இருந்தது. அதற்கு வேண்டியது 1 1/4" க்கு 1 1/4" அளவில் சதுரமான 12 படங்கள் எடுக்கும் 128பிலிம் தான். அதன் விலை அப்போது - 1951ல் - ரூ.1.25 தான். அப்பா அனுப்பும் மாதாந்திர பணத்தில் சிக்கனம் செய்து மாதம் ஒரு பிலிமாவது வாங்கி விட முடியும். அந்த கேமிராவால் நான் முதலில் எடுத்த படம் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாக கட்டடம் தான். நாலு புறமும் பெரிய கடிகாரங்கள் காட்டும் மணிக்கூண்டுடன் அமைந்த - பல்கலைக் கழக அடையாளம் சொல்லும் பெரிய கட்டடம், என் முதல் படத்திலேயே வெகு அழகாகப் பதிவாகி இருந்தது. என் முதல் கதையை அச்சில் பார்த்த பரவசத்தை அது ஏற்படுத்தியது. முதல் ரோல் முழுதும் பல்கலைக் கழகத்தின் பல்வேறு காட்சிகள் தான். ஒரு படம் கூட சோடையில்லாமல் பளிச் சென்று அற்புதமாய் அமைந்து விட்டது பெரிய சாதனை புரிந்து விட்ட பூரிப்பை ஏற்படுத்தியது.

- மீதி அடுத்த மடலில்.

-வே.சபாநாயகம்

Monday, August 02, 2004

நினைவுத் தடங்கள் - 20

'கொடுப்பினை வேண்டும்' என்று ஏங்க வைக்கும் கலைகளில் ஒன்று இசை. எல்லோருக்கும் இசை வசப்படுவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை மணி அய்யர், கே.பி.சுந்தராம்பாள் என்று மிகச் சிலருக்கே அந்த பாக்யம் கிட்டுகிறது. ஆனால் இசையை ரசிக்க அனேகமாக
அதிகப்படியானவர்க்கு வாய்த்திருக்கிறது. 'பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்பார்கள்' என்பார் மகாகவி பாரதி. அப்படியிருக்க மனித
இனம் பாட்டை ரசிப்பதில் அதிசயமென்ன?

எனக்கும் பிள்ளைப் பிராய முதலே இசையில் ஈடுபாடு இருந்தது. எங்கள் வீட்டில் யாரும் பாட வல்லவர்களாக இல்லை. வீட்டின் சூழ்நிலையும் பாரம்பரியமும்கூட இந்தக் கொடுப்பினைக்கு அவசியமானவை. பிராமணக் குடும்பங்களில் இது சர்வ சாதாரணமாக குழந்தைகளுக்கு அமைந்து விடுகிறது. வளைகாப்புத் தொடங்கி பிள்ளைப் பேறு வரை கர்ப்பிணியை அமரவைத்துப் பாடுவதும், பிள்ளை பிறந்தது முதல் தாலாட்டுக்குப் பதில் தாய் கர்நாடக இசையைப் பாடுவதும் குழந்தைக்கு இசைஞானம் கருவிலேயே ஏற்பட வாய்ப்பாகிறது. இன்றைய நகரீய வாழ்வில் அந்த வாய்ப்பு குறைந்து போனாலும் மற்றக் குழந்தைகளை விட பிராமணக் குழந்தைகளுக்கு இசை ரசனையும் இசைத் திறனும் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம். இசை வேளாள ருக்கும் இது சாத்யமே.

எனக்கு இசைரசனை எப்போது தொடங்கியது எண்ணிப் பார்க்கிறேன். எங்கள் வீட்டின் மறுபாதியில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டில் நவராத்திரி தோறும் கொலு வைப்பார்கள். எங்கள் பெரியப்பா மகள் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். அவருக்கு கொலுவைப்பதிலும் கொலுவின் முன்னால் பாடவும் ஆசை. அவருக்குப் பாட வராது. அவரது சினேகிதி - எங்கள் புரோகிதரின் பெண்ணுடன் சேர்ந்து ஏதாவது பாடுவார். அதை எங்கள் உள்ளூர் நாதசுரக்காரர் அவர்கள் பாடியதை நாதசுரத்தில் வாசிப்பார். வெளியூரிலிருந்து புதிதாகக் குடிவந்த ஒரு நாயுடு அம்மாவும் தெலுங்கில் எதாவது பாடுவார். நாதசுரம் அதையும் அடியொற்றி இசைக்கும். அந்த சின்ன வயதில் - 5,6 வயதில் அதை நான் ரசிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து எங்களுர் இளைஞர்கள் சிலர் - புரோகிதர் மகன், நாதசுரக்காரர் மகன் மற்றும் சில இசையார்வமுள்ள இளைஞர்கள் பக்கத்து நகரத்தில் நடக்கும் டெண்ட் சினிமாக் கொட்டகைகளில் பார்த்து வந்த படங்களிலிருந்து பாடல்களை எப்போதும் பாடியபடி இருபார்கள். அப்போதைய படங்களில் பாட்டுதான் பிரதானம்.

எம்.கே.தியகராஜ பாகவதரும் பி.யூ.சின்னப்பாவும், எம்.எஸ்ஸ¤ம் நடித்தபடங்கள் அப்போது பிரபலமானவை. பாட்டின் எண்ணிக்கையை வைத்தே விளம்பரம் வரும்.

'..........இன்னார் நடித்த 48 பாடல்கள் கொண்ட படம்' என்று விளம்பரம் இருக்கும்.

எம்.கே.டி நடித்த சிவகவி, பில்கணன் - பி.யூ.சின்னப்பா நடித்த மங்கையற்கரசி, குபேர குசேலா - எம்.எஸ் நடித்த பக்த மீரா, சேவாசதனம் -எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் - கே.பி.எஸ் நடித்த மணிமேகலை போன்ற படங்களை அவர்கள் பார்த்துவிட்டு வந்து சின்னப் பிள்ளைகளான எங்களுக்கு நடித்தும் பாடியும் அந்தப் படங்களைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துவார்கள். அதனால் ஏற்பட்ட
ரசனை எனக்கு கர்னாடக இசைமீது ஈர்ப்பை வளர்த்தது.

முதன்முதலாக கிராமபோன் என் பத்து வயதில் தான் எனக்கு அறிமுகமானது. எங்கள் வீட்டின் மறுபாதியில் இருந்த என் பெரியப்பா மகன் அன்றைய பாணி மைனர். புதுமைப்பித்தன் சித்தரிக்கிற - குதி புரள கிளாஸ்கொ மல் வேட்டி, மஸ்லின் ஜிப்பா, 'நெஞ்சின் பெட்டைத் தன்மையைக் காட்டும் மைனர் செயின்' சகிதமாய் சென்ட் மணக்க ரேக்ளா வண்டியில் தினமும் மாலையில் ஜமாவோடு பக்கத்து நகரத்துக்குப் போய் இரண்டு ஆட்டமும் சினிமா பார்த்து விட்டு திரும்புவதுதான் தினசரி ஜோலி.

அவர் இசைப் பிரியர். அவர் திடீரென்று ஒரு நாள் ஒரு கிராமபோன் பெட்டியைத் தன் ரேக்ளா வண்டியில் கொண்டு வந்தார். ஒரு ஆள் அணைத்துத் தூக்கும் படியான பெரிய சதுர அளவிலான பெட்டி அது. நூக்க மரத்திலான அந்தப் பெட்டி புதுப் பாலிஷில் பளபளத்தது. தங்க
நிறத்தில், ஊமத்தை பூ வடிவிலான அதன் ஒலி பெருக்கிக் குழல் எல்லோரையும் வசீகரித்தது. தெருத் திண்ணையில் வைத்து, பெட்டியைத் திறந்து கூடவே அவர் கொண்டு வந்திருந்த சதுரப் பெட்டியிலிருந்த இசைத்தட்டைப் பொருத்தி ஓடவிட்டார். கணீரென்ற எம்.கே.டி யின் 'அம்பா மனங்கனிந்து..' என்ற பாடல் எழுந்ததும் அதுவரை கிராமபோனைப் பார்த்திராத என்னைப் போன்ற சிறுவர் களும் பெரியவர்களூம் 'ஆ'வென வாய்பிளந்து அதிசயித்தது இன்னும் மனதில் பசுமையாய் நிற்கிறது. தொடர்ந்து பாகவதரின் 'அப்பனைப் பாடும் வாயால்', 'மன்மத
லீலையை வென்றார் உண்டோ' போன்ற அவரது புகழ்பெற்ற பாடல்களையும் எம்.எஸ், தண்டபாணி தேசிகர் சின்னப்பா, அரியக்குடி பாடல்களையும் தினமும் போட்டு எங்க ளைக் கிறங்க வைத்தார். தொலைக் காட்சி வந்த புதிதில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ள வீடுகளில் கூடிய கூட்டம் போல தினமும் எங்கள் வீட்டின்முன் ரசிகர் கூட்டம்தான். என்.எஸ். கிருஷ்ணன், காளி.என்.ரத்தினம் ஆகியோரது நகைச்சுவைத் தட்டுகளும் டம்பாச்சாரி, தூக்குத் தூக்கி போன்ற நாடகங்களும் எங்களுக்குக் கேட்கக் கிடைத்தன. திரும்பத் திரும்பத்
தினமும் கேட்டு எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. தூக்கத்தில் கூட பாகவதர் பாட்டுதான். அப்படி கர்னாடக இசை என்னை ஆட்கொண்டது.

அதனால் ஏற்பட்ட தாக்கம்தான் உறவினர் வீட்டுக் கல்யாணங்களில் கண் விழித்துப் பிரபல பாடகர்களின் இசைக் கச்சேரிகளை ரசிக்க வைத்தது. அத்தோடு அண்டை கிராமங்களில் நடைபெறுகிற அரிச்சந்திரன், வள்ளித்திருமண நாடகங்களில்
புகழ்பெற்ற சோழமாதேவி நடேசன் போன்ற அற்புதக் கலைஞர்களின் நாடகப்பாடல்களைக் கேட்க அந்த வயதிலிலேயே மைல்கணக்கில் அயர்வு பாராமல் நடக்க வைத்தது. பின்னாளில் அண்ணாமலையில் பயின்றபோது சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை மற்றும் தண்டபாணிதேசிகர் தலைவர்களாக இருந்த இசைக் கல்லூர்¢யில் நடந்த கச்சேரிகளைத் தேடிக் கேட்க வைத்தது. அப்படி கர்னாடக இசையை ரசித்து விட்டு இப்போதைய சினிமாப் பாடல்களைக் கேட்க மனம் சம்மதப் படவில்லை.

-தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

எனது களஞ்சியத்திலிருந்து - 6: வசைக் கவி

போற்றினும் போற்றுவர் : பொருள் கொடாவிடின்
தூற்றினும் தூற்றுவர்: சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர்: வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடியவர் ஆவரே!

- என்று ஒரு அரசன் புலவர் இயல்பைப் பற்றி பாடினான். இதற்குக் காளமேகம் சரியான உதாரணம். ஒருநாள் பசியோடு நாகைப்பட்டினம் வழியே காளமேகம் போகிறான். அந்த ஊரில் காத்தான் என்பவரது சத்திரத்திற்குப் போனால் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ
சொன்னதைக் கேட்டு அங்கே போகிறான். வெகுநேரம் காத்திருந்தும் சாப்பாடு தயாராகிற வழியாகத் தெரியவில்லை. கடும்பசி கண்ணை இருட்டுகிறது. காளமேகத்துக்குக் கடுங்கோபம் வருகிறது. கோபத்தில் ஏதாவது வசைப்பாடு விட்டால் காரியம் கெட்டுவிடும். எனவே சாப்பாடு தயாராகும்வரை பல்லைக் கடித்தபடி காத்திருக்கிறான். ஓரு வழியாக இரவு கழிந்து விடிகிற நேரத்தில்தான் உணவு பரிமாறப்படுகிறது.
ஆத்திரத்தோடு காளமேகம் பாடுகிறான்;

கத்துக்கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில் அரிசி வரும்; - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளியெழும்.

-`என்னய்யா சத்திரம் நடத்துறார் இந்த காத்தான்? காலைலேர்ந்து காத்திருக்கிறோம், அஸ்தமிக்கிற நேரத்துலதான் அரிசி வருது; அப்புறம் அதைக் குத்தி உலையிலே போடும்போது ஊரே அடங்கி தூங்கப் போயிடுது; சாதம் வெந்து ஒரு அகப்பைச் சோறு இலையிலே விழறத்துக்குள்ளே கிழக்கே வெள்ளி நட்சத்திரம் கெளம்பிடுது!` என்று வசை பாடுகிறான். ஆனால் அதற்காக சாப்பிடாமல் இருக்க முடியாதே! சாப்பிடுகிறான். சத்திரத்து நிர்வாகியின் காதுக்கு காளமேகம் பாடிய இந்த வசைப்பாட்டு போகிறது. வந்திருப்பவர் காளமேகம் என்று தெரிகிறது. ஐயோ! இந்த ஆள் பாடினார் என்றால் சத்திரத்துப் பெயர் கெட்டுப் போகுமே என்று பதைத்து புலவரிடம் ஓடி வருகிறார்.`ஐயா! மன்னிக்கணும்!இன்னிக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. உண்மைதான். நீங்க புகழ் பெற்ற கவிஞர்1 நீங்க இப்படி வசைபாடினது வெளியே தெரிஞ்சா சத்திரத்துப் பெயர் கெட்டிடும். பெரியமனசு பண்ணிப் பாட்டை மாத்திப் பாடணும்` என்று மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறார். இப்போது பசியாறிவிட்ட நிலையில் கோபம் குறைந்திருக்கிறது காளமேகத்துக்கு. அதோடு சத்திரத்து நிர்வாகியின் பணிவான வேண்டுகோள் நெஞ்சை நெகிழ்விக்கவே மனம் இளகிச் சொல்கிறான்: `பாட்டை மாத்தவேணாம்! அப்படியே இருக்கட்டும்.` என்கிறான். `அது எப்படி ஐயா?` என்கிறார் நிர்வாகி. பொருளை மாற்றி விளக்கம் தருகிறான்:

`நாகைப் பட்டினத்து காத்தான் சத்திரத்துக்குப் போனால் அங்கே சாப்பாடு எப்படிப் போடுறவார்கள் தெரியுமா? காலையிலிருந்து அஸ்தமிக்கும் வரையிலும் அரிசி வந்து கொண்டே இருக்கும்; அவ்வளவையும் உலையிலே இட்டு சமைத்தால் ஊரே சாப்பிடலாம். ஒரு அகப்பை அன்னம் இலையில் விழும்போது பார்த்தால் அப்படியே வெள்ளி நட்சத்திரம்போலப் பளிச்சிடும்! அவ்வளவு வெண்மையாயிருக்கும் சோறு`

`ஆகா!` என உருகிப்போகிறார் நிர்வாகி. `சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர்` என்றது உண்மையாகிறது.

முத்துராம முதலியார் என்ற கவிஞரின் அனுபவம் வேறு வகையானது! 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த புலவர் இவர். தனவான்கள் ஊருக்கு விருந்திடுவது பாராட்டுகுரிய செயல்தான். ஆனால் விருந்துண்ண வருவோரை அன்போடு வரவேற்று அடக்கமாக நடந்து கொள்ளாமல் அகம்பாவத்தோடு அவமரியாதையாய் வந்தவரை நடத்துவது பண்பாடில்லாத அற்பரின் செயல். அப்படி நடந்து கொண்டஒரு பணக்காரரைச் சாடுகிறார் கவிஞர்.

`அட்டைக்கேன் மணிமந்த்ரம்? அறுகினுக்கேன் கூர்வாள்? கால் அலம்பிடும்பீக்
குட்டைக்கேன் பொற்படிகள்? குருடனுக்கேன் கண்ணாடி? கொல்லும் கள்ளிப்
பட்டைக்கென் சம்பாரம்? படுபாவி முருகன் எனும் பழந்துடைப்பக்
கட்டைக்கேன் ஊர்விருந்து? புலவர்காள்! நீங்கள் இது கழறுவீரே!`


- நிரில் கிடக்கும் அட்டை கடித்தால் அதற்குப் பரிகாரம் செய்ய மணிமந்திர ஔஷதம் எதற்கு? அறுகம் புல்லறுக்க கூரிய வாள் எதற்கு? கால்கழுவும் குட்டைக்கு எதற்குத் தங்கப்படிகள்? குருடனுக்கு எதற்குக் கண்ணாடி? உயிரைக் கொல்லும் பாலைச் சுரக்கிற கள்ளி என்ன லவங்கப்பட்டையா - அதன் பட்டையைப் போட்டுச் சமையல் செய்ய? அதுபோல முருகன் என்னும் இந்தப் பழையத் துடைப்பக் கட்டைக்கு ஊர்விருந்து எதற்கையா? புலவர்களே! நீங்களே சொல்லுங்கள்!`

( மணிமந்த்ரம் - விஷம் போன்றவற்றைப் போக்குவதற்குப் பயன்படும் கல்மணி¢யும் மந்திரமும்; சம்பாரம் - கறிக்குப் போடும் மசாலைச் சரக்குகள்; முருகன் என்பது சென்னையில் அப்போது வாழ்ந்த முருகப்ப முதலியாரைக்குறிக்கும்)

-மேற்கண்ட பாடலைப் படித்ததும் பலருக்கு சிவாஜி நடித்த -கலைஞர் வசனம் எழுதிய `குறவஞ்சி` திரைப்பட வசனம்

`நெருப்புக்கு ஏன் பஞ்சு மெத்தை? - இந்த
நீதிகெட்ட ஆட்சிக்கு ஏன் மணிவிழா? -

நினைவுக்கு வரக்கூடும்! இது கலைஞருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் சர்வசாதாரணம். நாம் ரிஷிமூலம் நதிமூலமெல்லாம் பார்க்கக் கூடாது.

இந்தப் பாடலுக்கும் மூலம் ராமச்சந்திரக் கவிராயரின் ஒரு பாடல் என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்.

`கள்ளிக்கேன் முள்வேலி? கழுதைக்கேன் கடிவாளம்? கறுப்பில்லாத
உள்ளிக்கேன் பரிமளங்கள்? உவர்நிலத்துக்கேன் விதைகள்? ஒடித்துப் போடும்
சுள்ளிக்கேன் கோடாலி? துடைப்பத்திற்கேன் கவசம்? சும்மா போகும்
பள்ளிக்கேன் அதிவீர மழவரங்கப் பூபதியேனும் பட்டம் தானே?

- ராமச்சந்திரக் கவிராயர்.

-நகலைவிட அசல் கலைதன்மை மிகுந்திருக்கிறதில்லையா?

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

எனது களஞ்சியத்திலிருந்து - 5: பாராட்டுக் கவி

கவிஞர்கள் பொன்னுக்கும் புகழுக்கும் மட்டும் பாடியவர்களில்லை. அரசர்களையும் செல்வந்தர்களையும் மட்டும் படியவர்களில்லை. எளியோர்களையும் சாதாரண மக்கள் ஊழியர்களையும் கூடப் பாடியிருக்கிறார்கள். பெரிய உதவி என்றில்லை; பெரிய விருந்து என்றில்லை. அற்ப உதவி செய்தாலும் எளிய உணவளித்தாலும் அதையும் மனம் நெகிழ்ந்து பாடியிருக்கிரார்கள்.

அப்படிப்பட்ட கவிஞர்களில் முன் நிற்பவர் ஔவை. `உப்புக்கும் பாடி கூழுக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம்` என்று தன் கவிப்பொருள் பற்றிக் கூறுகிறவர். ஒரு தடவை மழையில் நனைந்து பசியோடு ஒரு குடிசைக்குள் ஔவை நுழைகிறார். அது, தந்தையை இழந்து ஏழ்மையில் ஆதரவற்று தனியே வாழ்ந்த பாரி மன்னனின் மக்களான அங்கவை, சங்கவை யின் குடிசை. தந்தையின் நண்பரான ஔவையைக் கண்டதும் அப் பெண்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தந்தையைப் போல் அவருக்கு விருந்தளிக்க வசதியில்லை. தங்களுக்காகக் சமைத்திருக்கிற எளிய உணவை இடுகிறார்கள். நல்ல உணவை அளிக்கமுடியாமைக்கு வருந்துகிறார்கள். ஆனால் கவிஞருக்கு
அது அமுதமாகப் படுகிறது. வயிறும் மனமும் நிறைய, ஔவை பாடுகிறார்.

`வெய்தாய் நறுவிதாய் வேணளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப் - பொய்யே
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு?

`அடடா! என்ன அருமை! சூடாக, நறுவிசாக, வேண்டியமட்டும் தின்னும்படியாய் நிறைய நெய்விட்டு `கீரை` என்று பொய் சொல்லி விட்டு அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் கைகளுக்கு இரத்தினக் கடகம் அல்லவா செய்து போட வேண்டும்?` என்று உருகுகிறார்.

( வெய்து - சூடு; அடகு - கீரை )

இன்னொரு இடத்திலும் பசிக்கு ருசியான - ஆனால் மிக எளிமையான உணவு படைக்கப் பட்டபோதும் இப்படித்தான். கவிஞருக்கு உணவின் தரம் பெரிதல்ல. அளிக்கும் மனமே முக்கியம். புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்கிற ஒரு எளி-யவன் விருப்பத்தோடு
ஔவையாருக்கு மிக எளிய உணவைப் படைத்தான். வரகு அரிசியைக் கொண்டு சமைத்த சோறு; கத்தரிக்கய்ப் பொரியல்; முரமுர வெனப் புளித்த மோர்; இதுதான் அவன் இட்டது. ஆனால் கவிஞருக்கு எல்லா உலகங்களையும் ஈடாகக் கொடுத்தாலும் அந்த விருந்துக்கு இணையாகச் சொல்ல முடியவில்லையாம்!

கவிதை பிறக்கிறது:

`வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முர முர வெனவே புளித்த மோரும் - திரமுடனே
புல்வேளுர்ப் பூதன் புரிந்து விருந்திட்டான்; ஈது
எல்லா உலகும் பெறும்.

( வழுதுணங்காய் - கத்தரிக்காய்; புரிந்து - விரும்பி )

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கும் கவிதையின் பாடு பொருள் - உயர்ந்ததாக, உயர்ந்த மனிதர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. எள்¢ய மனிதர் செய்யும் சிறு உதவியையும் பெரிதாகக் கருதி அவர்களைப் பாராட்டிக் கவி புனைந்தளிப்பார்.

ஸ்ரீராமன் என்றொரு சலவைத் தொழிலாளி ஒருமுறை கம்பருடைய ஆடைகளை மிக அருமையாய் ஒப்புமை காட்டவியலாத வெண்மையுடன் வெளுத்துக் கொடுத்தான். அவனது சலவையின் நேர்த்தியை வியந்த கம்பர் அத்திறனை கொஞ்சம் உயர்வு நவிற்சியுடன் பாராட்டிக் கவிதையை வழங்கினார்.

வெள்ளைவெளேரென்ற - ஸ்ரீராமன் வெளுத்துக் கொடுத்த வேட்டியைப் பார்த்தார் சிவபெருமான். உடனே தம் தலையை அண்ணாந்து பார்த்தார். ஏன்? அந்த சலவை அதிகப் பிரகாசமாகமாக இருக்கிறதா அல்லது தாம் தலையில் சூடியுள்ள பிறைநிலா அதிகப் பிரகாசமாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கத்தான்!

பிரம்மதேவர் தம் மனைவியான சரஸ்வதி தேவியைப் பார்த்தார். சரஸ்வதி ஸ்படிகம் போன்று வெண்மையானவர். ஸ்ரீராமனது வெண்மையான சலவை, தம் மனைவியோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கச் செய்தது.

மும்மூர்த்திகளில் மூன்றாமவரான மகாவிஷ்ணுவுக்கும் ஸ்ரீராமனின் சலவையை கண்டு வியப்புண்டாகி தன் கையிலிருக்கிற வெண்சங்கைப் பார்க்கிறார் - எது அதிக வெண்மையானதென்று!

- இப்படி மும்மூர்த்திகளும் வியக்குமாறு மலைபோன்ற தோள்களையுடைய வண்ண ஸ்ரீராமனின் சலவையின் நேர்த்தி இருந்ததாம்!

இப்போது கவிதையைப் பார்ப்போம்:

`சிரம் பார்த்தான் ஈசன்; அயன்
தேவிதனைப் பார்த்தான்;
கரம் பார்த்தான் செங்கமலக்
கண்ணன்; - உரம்சேர்
மலை வெளுத்த திண்புயத்து
வண்ணான் சீராமன்
கலை வெளுத்த நேர்த்திதனைக்
கண்டு.

(சிரம் - தலை; அயன் - பிரம்மா; மலை வெளுத்த - மலையையும் தோற்கடித்த;
கலை - துணி)

இப்படித்தான் இன்னொரு தொழிலாளி - கம்பரின் பாராட்டுக் கவியைப் பெறுகிறான். மாமண்டூர் என்ற ஊரில் இருந்த சிங்கன் என்ற கொல்லன் கம்பருக்கு ஒரு அருமையான எழுத்தாணியை கலைநேர்த்தியுடன் வடித்துக் கொடுத்தான். இரும்பு வேலையில் மகா நிபுணனான அந்தக் கொல்லனைப் பாராட்டி கம்பர் ஒரு கவிதை பாடினார். பாராட்டு என்றாலே கொஞ்சம் உயர்வு நவிற்சி இருக்கும்தானே?

இந்தக் கலைஞனைத் தேடி மும்மூர்த்திகளும் அவனது உலைக்களத்துக்கே வந்து காத்துக் கிடக்கிறார்கள். ஏன் தெரியுமா?

மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் ஆயுதமான சக்கராயுதம் அநேக யுத்தங்களில் பயன்படுத்தியதால் தேய்ந்து போயிருக்கிறது. அடுத்து அதற்கு வேலை வருவதற்குள் புதிய சக்கராயுதம் செய்தாக வெண்டும். நல்ல வலுவான இரும்பில் செய்ய வல்லவன் மாமண்டூரில் இருக்கிற சிங்கன் என்கிற கொல்லன்தான். எனவே அவரே நேரில் உலைகளத்துக்கே வந்து `அப்பா, எனக்கு அவசரமாய் ஒரு சக்கரம் செய்து கொடு` என்று கேட்டுக் கொண்டு நிற்கிறார்.

அப்போது பிரம்மதேவன் அங்கு வருகிறார். கோடிக்கணக்கான மக்களது தலையில் எழுதி எழுதி அவரது எழுத்தாணி தேய்ந்து போய்விட்டது. இனிப் பிறக்கிறவர்களுக்கு புது எழுத்தாணி கொண்டுதான் தலையெழுத்தை எழுதவேண்டும். என்வே ` எனக்கு உடனே ஒரு எழுத்தாணி செய்து கொடப்பா` என்று கேட்டுக்கொண்டு அவர் நிற்கிறார்.

இந்த சமயத்தில் கோழிக்கொடியோனான முருகப் பெருமான் அங்கு வந்து குன்றைத் துளைக்கும்படியான கூரிய வேல் ஒன்றை வடித்துக் கொடு என்று கேட்கிறார். கடைசியாக சிவபெருமானும் வந்து விட்டார். `சிங்கா! எனக்கு ஒரு மழு செய்து கொடேன்` என்கிறார்.

இப்படி - தெய்வங்களே கொல்லனைத் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து ஆயுதங்களைச் செய்யச் சொல்லாமல் தாங்களே நேரில் சென்று கேட்கிறார்கள் என்றால் சிங்கன் எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருக்க வேண்டும்!

இப்போது பாடலைப் பார்ப்போம்:

`ஆழியான் `ஆழி`
அயன் `எழுத்தாணி` என்பார்;
கோழியான், `குன்றெறிய
வேல்` என்பான்; - பூழியான்
`அங்கை மழு` என்பான்,
அருள்பெரிய மாவண்டூர்ச்
சிங்கன் உலைக் களத்தில்
சென்று.

(ஆழியான் - திருமால்; ஆழி - சக்கரம்;ராயன் - பிரும்மா; கோழியான் கோழிக் கொடியோனான முருகன்; பூழியான் - உடலெங்கும் புழுதி போல விபூதியைப் பூசியுள்ள சிவபெருமான்; அங்கை மழு - கையில் வைத்துக் கொள்ளும் அழகிய மழு; அருள் பெரிய - கருணை மிகுந்த; மாவண்டூர் - மாமண்டூரின் பழைய பெயர் )

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.