Tuesday, November 30, 2004

உவமைகள்-வருணனைகள் - 32: இந்திரா பார்த்தசாரதி

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 32 : இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளிலிருந்து:

1. மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கி, ஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கி, வியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போது, ஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்? காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம், சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமா? எலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக்கொண்டு சாகின்றன.

- 'ஒரு ரூபாய்' கதையில்.

2. சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்த ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. சர்வாதிகார நாட்டில் ஒரு நாய்க்கு எல்லாவிதமான சௌகர்யங்களும் இருந்தன; ஆனால் அதற்கு ஒரு ஏக்கம், தன்னிஷ்டத்திற்குக் குரைக்க முடியவில்லையே என்று.

- 'வழித்துணை'.

3. மந்திரிகளின் பூதாகரமான உடம்பு அவருக்கு எரிச்சலை ஊட்டியது. இது செல்வத்தின் வளர்ச்சியா அல்லது வறுமையின் வீக்கமா?

- 'கருகத் திருவுளமோ?'.

4. நேற்று சூரியனுக்கு ஓய்வு. சாம்பல் பூசிய நாளாய் இருந்தது. இன்று, நேற்றுப்பெற்ற ஓய்வில் கலைப்பு நீங்கி புதுப்பொலிவுடன் வானத்தில் பவனி வந்தான். அவனை வாரி உடம்பில் பூசிக் கொள்ள மணலில் மல்லாந்து கிடந்தன பல வெள்ளை உடல்கள். இளைஞர்கள், வயதானவர்கள், பால் வேறுபாடின்றி, கண்களில் மட்டும் கறுப்புக் கண்ணாடி திரையிட்டு உடம்பில் மற்றைய பகுதிகளை சூரியனின் அரவணைப்புக்குச் சமர்ப்பித்திருந்தனர்.

- 'குன்று'.

5. சாமான்களையெல்லாம் சரிபார்த்து. நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு என் சீட்டில் உட்காரப் போன போதுதான் அவரைக் கவனித்தேன். அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களைத் தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கே உட்காரவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்.

- 'அவஸ்தைகள்'.

6. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ட்யூப் வெளிச்சத்தில் உயிர்பெற்றெழும் அந்த ஓட்டலில், நெற்றியில் திருநீறு துலங்க, பளிச் சென்ற முகத்துடன், உடையுடன், 'காப்பியா அண்ணா?' என்று ஒருவர் கேட்கும்போது உலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. காலம் பின்னோக்கிக் கிழிந்து, நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால், கும்பகோணம் அம்பி அய்யர் ஹோட்டலில் நிற்பது போல் ஒரு பிரமை.

- 'கோட்சேக்கு நன்றி'.

7. அருணகிரிக்குச் சற்று பெரிய சரீரம். கனத்த சரீரம். அவர் பக்கத்தில் உட்காரும்போது அவன் சற்றுத் தள்ளித்தான் உட்காரவேண்டும். அருணகிரியின் சரீர ஆக்கிரமிப்பு ஒரு காரணம். இன்னொன்று அவர் உரக்கப் பேசினால் சப்தம் அவரிடமிருந்தா அல்லது கார் இஞ்சினிலிருந்தா என்று சொல்வது கஷ்டம். கார் இஞ்சினில் ஏதாவது தகராறு இருந்து சப்தம் வந்து, அந்த சப்தம் அவரிடமிருந்து வந்ததாக நினைத்துக் கொண்டுவிட்டால் விபத்து ஏற்படுவதற்கான சாத்யக்கூறு உண்டு. அவர் உரக்கப் பேசும்போது குரலை அப்படி ஏன் கனைக்கிறாரென்பது தான் அவனுக்குப் புரியவில்லை.

- 'இறுதிக் கடிதம்'.

8. நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுதும் வாரியிறைத்தது.

- 'அறியாமை என்னும் பொய்கை'.

9. அரை மணி நேரமாக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு பஸ் கூட வரவில்லை. பஸ் நிலையத்தில் நல்ல கூட்டம். இத்தனை பேரும் பஸ்ஸில் ஏறிப் போயாக வேண்டும். இந்தியாவில் வேறெதுவும் பொங்கி வழியாவிட்டாலும், மக்கள் கூட்டத்துக்குப் பஞ்சமே இல்லை. தனி மனிதனின் தனித்வம் கரைய வேண்டுமானால் தில்லியில் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்.

- 'பிரச்சினையின் நிறம்'.

10. 'ஸிந்தியா ஹவுஸ்' அருகே அவன் நின்ற போது, அவனை உராய்ந்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. பஸ் தன்னை 'வா'என்று அழைக்கும் போது உட்காராமல் இருப்பது அதன் நட்பை அலட்சியம் செய்வது பொல. அவன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான்.

- 'அவன் பெயர் நாகராஜன்'.

- தொடர்வேன்.

- அடுத்து ஜெயந்தன் படடைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Monday, November 29, 2004

நினைவுத் தடங்கள் - 26

காலை 9 மணிக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வந்த பின் தான் முறைப்படி காலைப்பள்ளி துவங்கும் என்றாலும், அய்யாவின் எதிர் பார்ப்பின்படி எல்லா பிள்ளகளும் 8 மணிக்கே வந்துவிட வேண்டும். ஆசிரியர்கள் வருவதற்குள் காலைப் பிரார்த்தனை, முறைபோட்டு எழுதுதல், காப்பி எழுதுதல் எல்லாம் அய்யா பார்வையில் நிகழும்.

எல்லொரும் காலையில் குளித்து நெற்றியில் அவரவர்க்குரிய மதச் சின்னங்களை இட்டுக் கொண்டு கையில் விறகோ வரட்டியோ அய்யாவின் சமையலுக்காகக் கொண்டு வருவது கட்டாயம். சம்பளம் என்பது வெறும் எட்டணா தான். அதுவும் பெண்களுக்கும் ஹரிஜனங்களுக்கும் கிடையாது என்பதால் பெற்றோர் இந்த விறகு விஷயத்திற்குச் சுணங்குவதில்லை. விறகைக் கொண்டு வந்து அய்யா தங்கும் கூடத்திற்கு வெளியே வெயிலில் போட்டு விட்டுப் போய் உட்கார்ந்ததும், சட்டாம் பிள்ளை ஆண்கள் ஒவ்வொருவரையும் பின் பக்கம் தடவிப் பார்த்துக் கோவணம் கட்டியிருக்கிறார்களா என்று சோதிப்பான். யாராவது கோவணம் கட்டாது வந்தால், அய்யாவிடம் அவன் கொண்டு போகப் படுவான். அய்யா அவனது துண்டை உருவி அம்மணமாக்கி வீட்டுக்குத் துரத்தி விடுவார். அப்படியே வீட்டுக்கு ஓடி கோமணம் கட்டிக்கொண்டு வந்தால் தான் ஆயிற்று. சிலர் மறதியாலோ கோவணத்துக்குத் துணி கிடைக்காமலோ கட்டாது வரும்போது சட்டாம்பிளையிடமிருந்து தப்பிக்க பின்புறம் அரணாக் கயிற்றில் பேப்பரைச் சுருட்டிச் செருகி முட்டாகக் காட்டுவது உண்டு. சட்டாம்பிள்ளைக்கு அவ்வப்போது ஏதாவது தின்பண்டம் கொண்டு வந்து கொடுத்தால் காட்டிக் கொடுக்க மாட்டான். இல்லாவிடில் அய்யாவிடம் மாட்ட வைத்துவிடுவான். துணியை உருவி துரத்துவதுடன், ஏமாற்றுவேலையில் ஈடுபட்டதற்காக கடுமையாய்ப் பிரம்படியும் கிடைக்கும்.

பிரார்த்தனை ஆரம்பிக்கு முன் அய்யா எல்லோருடைய நெற்றியையும் சுற்றி வந்து பார்ப்பார். யாராவது நெற்ற்¢க்கு இட்டுக் கொண்டு வராதிருந்தால் அய்யா உடனே சட்டம் பிள்ளைக்குக் கையைக் காட்டுவார். அவன் வெளியே போய், தெருவில் கிடக்கும் சாணியை எடுத்துவந்து நெற்றிக்கு இடாதவன் நெற்றியில் மூன்று வரிகளாக விபூதிப் பட்டை மாதிரிப் பூசி விட்டுவிடுவான். நாழியாக ஆக, சாணி காய்ந்து வறவற வென்று இழுக்கும். அப்புறம் அவன் நெற்றிக்கு இட ஒரு நாளும் மறக்க மாட்டான்.

அடுத்து அய்யா "கடவுள் வணக்கம் பாடுங்க" என்றதும் எல்லோரும் எழுந்து நின்று கைகூப்பியபடி உரத்த குரலில் ஒரே இரைச்சலாய்ப் பாட ஆரம்பிப்பார்கள். குரு வணக்கத்தில் தொடங்கி, விநாயகர், சரஸ்வதி என்று, ஒரு கடவுளுக்கு ஒரு பாடல் வீதம் வள்ளலார், அருணகிரியார் பாடல்களைப் பாடுவார்கள். எல்லோருடைய வாய்களும் அசைகின்றனவா என்று அய்யா கவனமாகப் பார்ப்பார். மற்றபடி இரைச்சலை அவர் கண்டு கொள்வதில்லை.

கடவுள் வணக்கம் முடிந்ததும் முறைபோட்டு மணலில் எழுதுவதும் காப்பி எழுதுவதும் தொடங்கும். மூன்றாம் வகுப்புக்கு மேல்தான் காப்பிநோட்டு. அரிச்சுவடி வகுப்பும், ஒன்று, இரண்டாம் வகுப்புகளும் மணலில் ஒருவன் உரத்து ராகமாய்ச் சொல்லிக் கொண்டே எழுத மற்றவர்கள் பின்பற்றி உரத்துச் சொல்லியபடி எழுதவேண்டும். மாற்றி மாற்றி முறை போட்டுக் கொண்டு தொடர வேண்டும். இப்படி 'அ' தொடங்கி 'ன்' வரை 247 எழுத்துக்களையும் வாய்ப்பாடுகளையும் தினமும் எழுதியாக வேண்டும். இதனால் எழுத்துப் படிவதோடு மனப்பாடமும் ஆகிவிடும். ஒரு பக்கம், அய்யா மேசை மீது அடுக்கி வைக்கப் பட்டிருக்கு காப்பி நோட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்துத் தன் கைப்பட எதாவது வாசகங்களை எழுதிப் பொடுவார். அவற்றை எடுத்து எல்லோரும் அவரவர் நோட்டுகளில் அய்யா எழுதி இருப்பது போலவே அச்சு அச்சாய்க் காப்பி எழுதுவர். அடுத்து எல்லோரும் தலைக்கு எண்ணெய் தடவி தலைவாரி இருக்கிறார்களா, சட்டைப் பொத்தான்களைச் சரியாகப்
போட்டிருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பார். அது முடிந்ததும் அய்யா வருகைப் பதிவேட்டை எடுத்து வகுப்புவாரியாகப் பெயர்க¨ளை அவர்களது சாதியுடன் பதிவு செய்துள்ளபடி, வாசிப்பார். பெயரோடு சாதியையும் சேர்த்து எழுதுவதும் அழைப்பதும்தான் அய்யாவின் வழக்கம். புதுப் புத்தகத்தில் பெயர் எழுதிக் கொடுக்கும்பொதும் அப்படித்தான். அதை யாரும் அப்போது ஆட்சேபிப்பதில்லை. விட்டுவிட்டால் தான் ஆட்சேபணை எழுமே தவிர சேர்ப்பதில் புகார் வராது.

இதற்குள் மணி ஒன்பது ஆகிவிடும். மற்ற ஆசிரியர்களும் வந்துவிடுவர். அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அய்யா தன் கூடத்துக்கு சமையல் செய்யப் பொய்விடுவார். மணி பனிரெண்டு வரை பாடத்திட்டப்படி பாடங்கள் நடக்கும். காலை வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் சாப்பிடப் போய் விடுவார்கள். அவர்கள் போனாலும் பிள்ளைகள் உடனே போய்விட முடியாது. அய்யா வெளியே வந்து ஒரு அரைமணி நேரம் மனக்கணக்குகளை எல்லோருக்கும் போட்டுச் சரி பார்ப்பார். பிறகு "சரி, போய்ச் சாப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க" என்று அனுப்பி வைப்பார். எங்களுக்கு முன் தலைமுறைவரை அதிகாலை பாடியது போல இப்போதும் மதியச் சாப்ப்பாட்டுக்குப் போகும்போதும் ஒரு பாட்டுப் பாடுவது உண்டு.

"சட்டம் சரவை தானெழுதி
சரவா இலக்கத் தொகை ஏற்றி
இட்ட கணக்கும் வாசகமும்
எல்லாக் கணக்கும் பார்த்துவிட்டோம்
வட்டமான சூரியனும்
மதியம் திரும்பி மேற்காச்சு
திட்டம் பண்ணி அனுப்புமையா
திருவடிசரணம் தானே!" - என்று ஒரே குரலில் பாடி விடைபெறுவதுண்டு.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

களஞ்சியம் - 11: பாட்டுக்குப் பாட்டு

எனது களஞ்சியத்திலிருந்து - 11: பாட்டுக்குப் பாட்டு:

"பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்
பாட்டனாரைத் தோற்கடிப்பேன்
எதிர்ப் பாட்டுப் பாட வந்தா
ஏணி வச்சுப் பல்லுடைப்பேன்"

- என்று தெருக் கூத்தில், நடிக நடிகையர் தம் மீது வீசப்படும் பாட்டுக் கணைகளுக்கு அதே பாணியில் பதிலளிப்பது உண்டு. இலக்கியத்திலும் இது போன்று பாட்டுக்குப் பாட்டாலேயே பதிலளித்திருப்பதைக் காணலாம்.

கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கும், ஔவையாருக்கும் இப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பர் ஔவையை "ஒரு காலடீ நாலிலைப் பந்தலடி!" என்று சொல்லிப் பொருள் கேட்டதாகவும் அதை 'அடீ' என்று தன்னைக் கேலி செய்து பாடியதாகக் கொண்டு ஔவை 'அடா!' என்று வருமாறு அமைத்து எதிர்ப் பாட்டாக கீழ்க்கண்ட பாடலைப் பாடியதாகவும் சொல்கிறார்கள்.

கம்பர் கேட்டது ஒரு கொடியை அடியாகக் கொண்டுள்ளதும் நான்கு இலைகளைப் பந்தல் போல உடையதுமான ஆரைக் கீரையைப் பற்றியதாகும். ஔவை அதற்கு விடை தருவது போலப் பாடுகிறார்:

"எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே!- முட்டமேல்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரை அடா சொன்னாய் அடா!

( எட்டேகால்- தமிழ் எழுத்தில் 'எட்டு'க்கு 'அ' என்றும், 'கால்' அளவைக்கு 'வ' என்றும் குறியீடு உள்ளது. அதன் படி, எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே! யமன் ஏறி வரும் எருமை மாடே! அழகு கெட்ட மூதேவி(பெரியம்மை)யின் வாகனமாகிய கழுதையே! முழுதும் மேலே கூரை இல்லாத குட்டிச் சுவரே! ராம தூதனாகிய குரங்கே! நீ சொன்னது ஆரைக்கீரையடா.)

இப்படியா கடுமையாக ஏசிக் கொள்வார்கள்? நமது நவீன எழுத்தாளர்களின் 'நாச்சியார்மட' ஏச்சு இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்!

கம்பரின் எதிரியான ஒட்டக்கூத்தருக்கும் இப்படி ஒரு ஏச்சு கிடைத்திருக்கிறது. குயவர் இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரை " நீ யாரடா?" என்று அகம்பாவத்தோடு கேட்க, அதற்குப் பதிலாக அவர் பாடிய பாடல் இது:

"மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன் வந்து எதிர்த்தவன் யாரடா?' - என்று கேட்டதற்கு

"கூனையும் குடமும் குண்டுசட்டியும்
பானையும் வனை அங்குசப் பையல் யான்" - என்று பதில் வந்தது.

- 'மோனை முதலியவை நன்கு அமைந்த முத்தமிழ்க் கவிதைகளான மும்மதங்களையும் பொழிகின்ற யானையைப் போன்ற எம்முன் வந்து நின்ற நீ யாரடா?' என்று ஒட்டக்கூத்தர் கேட்க, 'நான் சால், குடம், குண்டுசட்டி, பானை முதலிய மண் பாத்திரங்களைச் செய்யும் அழகிய குயவன் ஆவேன்' என்று பதில் கிடைத்தது. 'அங்குசம் - அழகிய குயவன், யானைய அடக்கும் அங்குசம் போன்றவன் என்றும் பொருள். கூனை - சால்.

நமது புதுமைப்பித்தனும் இப்படி ஒரு கவிஞரைச் சாட நேர்ந்தது சுவாரஸ்ய மானது.

'கிராம ஊழியன்' என்ற பத்திரிகையின் ஆண்டுமலரில் புதுமைப்பித்தன் 'ஓடாதீர்' என்றொரு பாடல் எழுதினார். 'வேளூர் வே.கந்தசாமிப் பிள்ளை' என்ற புனைபெயரில் அவர் எழுதிய முதல் பாட்டு இது. அதற்குச் சில மாதங்களுக்கு முன் காலமான எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் குடும்பத்துக்கு நிதி திரட்டிய தமிழர்களின் தாராள மனப்பான்மை நன்றியறிதலைக் கண்டெழுந்த வயிறெரிச்சலைத்தான், இந்தப்பாடலில்,

"ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
"வானத்து அமரன்
வந்தான் காண்! வந்ததுபோல்
போனான்காண்" என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்.
அடியேனை விட்டுவிடும்". - என்று எழுதினார்.

கலைஞனைச் சாக விட்டுவிட்டு, அவனது புகழுடம்பைத் தூக்கி வைத்துக் கூத்தாடும் ரசிகத்தனத்தைக் குத்திக் காட்ட எழுந்த 'வீராப்புத் தார்க்குச்சி'தான் இந்தப் பாடல்.

'ஓடாதீர்' என்ற பாடலைப் படித்த ஒரு எழுத்தாளர், 'மளிகைக் கடை மாணிக்கம் செட்டியார்' என்ற புனைபெயரில், 'ஓடும் ஓய், உம்மால் ஒரு மண்ணும் ஆகாது' என்று புதுமைப்பித்தன்பாணியிலேயே புதுமைப்பித்தன் பாட்டுக்கு ஒரு எதிர் வெட்டுப் பாடல் எழுதி 'கலாமோகினி' என்ற பத்திரிகையில் வெளியிட்டார். அந்தச் 'செட்டியாரு'க்கு மீண்டும் 'கிராம ஊழியன்' மூலம் புதுமைப்பித்தன் அளித்த பதில் இது:

'உருக்கமுள்ள வித்தகரே' என்ற தலைப்பிலான் அந்தப் பாடலில்,

'ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழுமென்று-
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே!
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்ல வந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கட்டுப்பாடு!

குப்பைகூளம், செத்தை
கூட்டிவைத்த தூசு தும்பட்டம்,
அத்தனைக்கும்-
உப்பு, பருப்பு,
உளுத்தம்பயறு,
சித்தரத்தை, புளி,
சீமை இலந்தை
எனவே,
செப்பி விலை கூறும்
வாணிபத்துக்கு
ஒத்து வருமோ
உயர் கவிதை?

புத்தி சொல வந்தவர் போல்,
ஏனையா
வித்தாரக் கவிதை
கையாண்டீர்?
ஒத்து வராது
ஓட்டாண்டிப் பாட்டு;
உமக்கேன் இந்தப் பொல்லாப்பு!

விட்டுவிடும்
வேறே கணக்கிருந்தால்
பாரும்!
ஐந்தொகையில் புத்திதனைக்
கட்டியழும்
ஆசைக் கனவெழுப்பும்
அமிஞ்சிப் பையல்களின்
காசுக்குதவா
கவைக்குதவா,
கதையிலே
செல்லாதீர்!
புத்தி சொல வந்தவரே
புத்தி தடுமாறி விட்டால்
புத்தியெமக் கெப்படியோ
சித்திக்கும்!
வீணாம் கனவுகளை
எங்களுக்கே விட்டு
பெட்டியடிச் சொர்க்கத்தில்
புகுந்து விடும்!

.........................
........................

சொத்தைக் கதை எல்லாம் அளக்காதீர்
ஒற்றச்சிதையினிலே
உம்மெல்லோரையும்
வைத்து எரித்திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது! - என்று திட்டித் தீர்த்தார்!.

- மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

Wednesday, November 17, 2004

வருணனைகள்- உவமைகள் - 31: நாஞ்சில்நாடன்

வருணனைகள்- உவமைகள் - 31

நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து:

1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது.

- 'பாலம்' கதையில்.

2. கொம்புச் சீப்பை எடுத்துப் 'பறட் பறட்' டென்று தலை வாரினான். கோவிலுக்குப் போவதால் திருநீறு பூசினால் நல்லதோ என்று அவனுக்குத் தோன்றியது. சந்தேகத்தின் பலனைச் சாமிக்கு அளித்து மூலையில் தொங்கிய தேங்காய்ச் சிரட்டைக் கப்பரையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசினான்.

- 'ஆசையெனும் நாய்கள்'.

3. ஏனோ தெரியவில்லை., சமீப காலமாய்த் தமிழ் சினிமா தியேட்டருக்குள் நுழைவது என்பது ஏதோ தகாத காரியம் செய்வது போன்ற கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காமிராக்கள் கிராமத்தின் அழகைக் காட்டிக் கொண்டே இருக்கையில் ஒலிபெருக்கிகள் நரகலை உமிழ்ந்து கொண்டிருந்தன.

- 'ஒரு வழிப் பயணம்'.

4. தெரு முற்றங்களில் தெளிபடுகிற சாணித் தண்ணீரின் சளசளப்பு, உழப் போகிற மாட்டுக்குத் தண்ணீர் வைக்கின்றதால் எழும்பும் உலோக வாளிகளின் கிணுக்காரம், 'கடக் கடக்' என்று வட்டக் கொம்புகளைப் பிணைத்துக் கொண்டு செல்லச் சண்டை போடும் எருமைக் கடாக்கள், கழுநீர்ப் தொட்டிக்குள் முகத்தை முக்கிமூச்சு விட்டுக் 'கட கட'வெனச் சத்த மெழுப்பும் எருமைக் கன்று, சம்பாத் தவிட்டின்
ரேகைகள் கண் மட்டத்துக்கு வட்டம் போட நாடி மயிர்களிலிருந்து தண்ணீர் சொட்ட மேலுதட்டை உயர்த்தி£ இள்¢த்து 'ங்றீங்ங்....'என்று குரலெழுப்பும் தாய் எருமையின் பின் புறத்தை முகர்ந்து பார்த்து நக்குகின்ற இரண்டு பல் கிடாக் கன்று, "சவத்துப் பய சாதிக்கு ஒரு
வகுதரவு கெடையாது!" என்று கிடாக்கன்றின் புட்டியில் அழிசன் கம்பால் சாத்துகிற செல்லையா-

இதையெல்லாம் மௌனமாய்க் கவனித்துக் கொண்டு கட்டிலில் கிடந்து புரண்டான் சிதம்பரம்.

- 'தேடல்'.

5. பெட்டியினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு சின்னப் படையெடுப்பு நடத்துவது போல அந்தக் குடும்பம் ஏறியது.

- 'சிறு வீடு'.

6. வேறு குத்தகையில் தான் என்ன வருமானம்? தென்னை, பனைகளுக்குக் கிளைகள் இல்லை என்பதால் பெரிய லாபமில்லை. மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளைஅழிக்க ஆச்சு என்பது போல், தென்னை மரங்கள் உச்சிக் கொண்டையில் நாகமணி போல் சேமித்து வைத்திருக்கும் காய்களைப் பறித்தால் ஏற்றுக் கூலிக்குத் தான் சரியாக இருக்கும்.

- 'புளி மூடு'.

7. வைத்தியனாருக்குப் பிள்ளைகள் கிடையாது. ஒரு புராண கதா பாத்திரம் போல இருந்தார். காதில் வெள்ளைக் கடுக்கன், முன்தலை சிரைத்த குடுமி, வெள்ளை உடம்பெல்லாம் வெள்ளை ரோமம், சிறிய தொந்திக்கு மேல் கட்டிய அகலக்கரை வேட்டி,தோளில் துவர்த்து, மூக்குப் பொடி வாசம் வீசும் மீசையற்ற முகம், கைத்தடி, மருந்துப் பெட்டி....கொண்டு போன ஆறவுன்சு குப்பியில் 'முள்ளெலித் தைலம்' என்று ஒரு சொந்தத் தயாரிப்பை நாலு அவுன்சு ஊற்றிக் கொடுத்தார்.

- 'முள்ளெலித்தைலம்.'

8. அறையினுள் இருள் சேமித்து வைத்திருந்தார்கள் போலும்.

- 'பேய்க்கொட்டு'.

9. சுப்பையாப் பிள்ளைக்கு ஒரே புழுக்கமாய் இருந்தது. காற்று நிறைமாத கர்ப்பிணி போல அசைந்தது.

- 'சைவமும் சாரைப்பாம்பும்'.

10. அது 1951ல் கட்டப்பட்ட கட்டிடம். மாடிப்படிகள், கைப்பிடிச் சுவர்கள் எல்லாம் மூளிபட்டுக் கிடந்தது. சொசைட்டிக் காரர்கள் எல்லா நிலைகளிலும் பதிமூன்று வாட் பல்பு போட்டிருந்தார்கள். வெளிச்சுவர்கள் சுண்ணாம்பு கண்டு பதினேழு ஆண்டுகள் ஆகியிருந்தபடியால் மின் விளக்கின் ஒளியில் முக்கால் பாகத்தைச் சுவர்கள் உண்டு ஜீவித்திருந்தன. எலியன்று மூன்றாம் மாடியிலிருந்து யாரையோ சந்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அவசரமாக.

- 'சதுரங்கக் குதிரை' நாவலில்.

- தொடர்வேன்.

- அடுத்து இந்திராபார்த்தசாரதி படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Tuesday, November 16, 2004

நினைவுத் தடங்கள் - 25

எனது ஆரம்பக் கல்வி அரசு உதவி பெற்ற துவக்கப் பள்ளியில்தான் என்றாலும் அது பழைய திண்ணைப் பள்ளிக்கூட பாணியில் தான் நடைபெற்றது. அதன் நிர்வாகியான லிங்காயத் இன சிதம்பரம் சாமிநாத அய்யர், பள்ளிப் பாடத் திட்டத்துக்கு அப்பாற் பட்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைதான் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவரை நாங்கள் 'அய்யா' என்றுதான் சொல்லுவோம். அப்படித்தான் சொல்ல வேண்டும். 'சார்' என்றெல்லாம் சொல்லக் கூடாது. 'சாராவது, மோராவது' என்று அவர் கண்டிப்பார்.

அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரில்லை. பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை என்றால் அதற்கு முன்னும் பின்னும், எல்லா வகுப்புகளையும் அவரே பார்த்துக் கொள்வார். பள்ளி நேரத்தில் மற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வர்கள். அய்யா பார்த்துக் கொள்ளும் நேரம் தான் உருப்படியானது, கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்டது. பிள்ளகள் பயந்து அமைதி காக்கும் நேரமும் அதுதான்.

அய்யாவின் நேரம் அதிகாலையிலேயே தொடங்கி விடும். எல்லோரும் பொழுது புலருமுன்னே எழுந்து, கைகால் சுத்தம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு, புத்தகம் எதுவுமில்லாமல் சிலேட்டு மட்டும் எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு வந்து விட வேண்டும். முதலில் வருபவன் 'வேத்தான் சீட்டு' என்கிற வரிசைப் பட்டியலை, சிலேட்டில் பதிவு செய்வான். முதலில் வந்தவன் 'வேத்து' - அடுத்து வருபவன் 'ஒன்று' எனப் பதிவாகும். எல்லோரும் கையெழுத்து தெரியுமுன்னரே வந்து சேர்வார்கள். அய்யா குடும்பம் இல்லாதவர் என்பதால் பள்ளியிலேயே - ஊர் மக்கள் கொடுத்த பொதுச் சாவடி- தங்கி இருப்பவர், சரியாக ஆறு மணிக்கு எழுந்து வெளியில் வருவார் - அக்குளில் மணிப்பிரம்புடன். அதுவரை மூச்சு விடுவதுகூடக் கேட்காதபடி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். முதலில் வந்த 'வேத்து'- பட்டியலை வாசிப்பான். வேத்துக்கு அடி கிடையாது. அதனால் முதலில் வரப் போட்டி போடுவோம். பிறகு, வந்த வரிசைப்படி நீட்டும் கரங்களில் வரிசை எண்படி பிரம்படி விழும். பிரம்படி என்றால் பலமாக இராது. கடைசி அடிக்கு முன் வரை லேசாகப் பிரம்பு ஆடி உள்ளங்கையைத் தட்டும். கடைசி அடி சற்றுப் பலமாக விழும். 'உஸ்' என்று கையை உதறி வாயால் ஊதிக் கொள்கிற மாதிரி இருக்கும். அடி வாங்குபவரது முகத்தையோ அது காட்டும் வேதனையையோ அய்யா கவனிப்பதில்லை. முதலாக வந்தவனைப் பாராட்டுவதோ, கடைசியாக வந்தவனைக் கண்டிப்பதோ இல்லை. இது பிள்ளைகள் விடியற்காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும் அமைதியாக இருக்கவுமான பயிற்சியே தவிர வேறு கண்டிப்பு கிடையாது.

'வேத்தடி' முடிந்ததும் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான். திரும்பு முன் எல்லோ ரும் உரத்த குரலில் ராகம் போட்டு ஒரு பாட்டு எங்களுக்கு முன் தலைமுறைகளில் பாடுவது உண்டு.

'காலமே எழுந்திருந்து
கைகால் சுத்தம் செய்து
கோலமாய் நீறும் பூசி
குழந்தைகள் பசியும் ஆற,
பாடமும் சொல்லிக் கொண்டோம்
'படியடி' ஏந்திக் கொண்டோம்
சீலமாய் அனுப்புமையா
திருவடி சரணம்"

- என்று தண்டமிட்டு சிலேட்டுடன் வீடு திரும்புவார்கள். பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி நிகழ்ச்சிகள் நடக்க வேண்டுமென்பதில்லை. விடியற்காலைப் பள்ளி முடிந்ததும் பாடியாக வேண்டிய சம்பிரதாயம் அது. போய்க் குளித்து. சாப்பிட்டு, சீக்கிரம் புத்தகங் களுடன் திரும்பவேண்டும். ஆனால் இதற்கு 'வேத்தடி' கிடையாதாகையால் ஓடிவர வேண்டியதில்லை. நிதானமாக வரலாம். ஆனால் ஒன்பது மணிக்குள் வரவேண்டும். அப்புறம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பொறுப்பு. அய்யா மாலைப் பள்ளி நேரம் முடிகிற வரை தலையிட மாட்டார். பிள்ளைகளுக்கு சுதந்திரமான நேரம் அது.

-மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.