Friday, July 21, 2006

கடித இலக்கியம் - 14

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 14

சாமியே சரணம் ஐயப்பா!


நாகராஜம்பட்டி
14- 12- 76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். ரொம்ப நாட்களாகக் காஞ்சி ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமிகளைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. JK வின் 'ஜயஜய சங்கர' கதை கிளறிவிட்டு விட்டது. இதற்கு முன்பு கூட எப்பொழுதுமே நான் 'கல்கி'யில் அவர் பக்கத்தை மட்டும் கண்ணில் பட்டால் தவறாமல் படிப்பதுண்டு. சந்தையில் பொரி போட்டுக் தருகிற காகிதப் பைகளில் கூட ஓரிரு பக்கங்கள்
அகப்பட்டதுண்டு. படிப்பு என்றாலே லைப்ரரிகளைத் தேடிப் போகிற புத்தி போய் ரொம்ப நாளாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் இப்படித்தான் படிப்பு. அதிர்ஷ்டவசமாக முந்தா நாள் திருப்பத்தூரில் ஒரு பிராமண நண்பரிடம் 'ஆசாரிய ஸ்வாமிகளின் உபந்நியாஸங்கள்' என்கிற புஸ்தகங்கள் இரண்டு கிடைத்தன. பழைய கலைமகள் வெளியீடு.

அவரது தமிழைப் பற்றி ஏற்கனவே எனக்கிருந்த ருசிக்கு நல்ல பண்டம் கிடைத்தது. இவரும் ராஜாஜியும் எழுதுகிற தமிழ் நன்றாய் இருக்கும். எப்பொழுதாவது படித்துப் பாருங்கள்.

நான் சனிக்கிழமை, பாரதியின் ஆத்ம தினத்தன்று, சபரிமலைக்குப் போக வென மாலையணிந்து கொண்டேன். வைஷ்ணவி அணிவித்தாள். மூன்று நாட்களாக ரொம்ப நன்றாக இருக்கிறது. கோபிக்கக் கூடாது என்றிருக்கிறேன். அஞ்சாது இருக்கிறேன். ஏதோ ஓர் உயரமான சிகரத்தில் ஏறிக் கொண்டது போல் இருக்கிறது. என்ன நடந்தாலும், எதைப் பார்த்தாலும் மனசை ஒன்று கரகரவெனச் சுத்திகரிக்கிறது. ஆறு வருஷமாய்ப் போய்க் கொண்டிருக்கிற மாதிரியே தெரியவில்லை. பக்தியின் மீது, சந்ந்¢யாசத்தின் மீது, வாழ்வின் மீது, உலகின் மீது, என் பிறவியின் மீதும் மரணத்தின் மீதும் புதிது புதிதாய் மனம் படிகிறது. பக்திக்கு நான் முயற்சி செய்வதாக மட்டும்தான் சொல்லிக் கொள்ள முடியும். ஆனால் ஒன்று தெரியுமா? லலிதா நவரத்ன மாலையைச் சொல்லுகிற போது, மூடிக் கொண்டிருக்கிற கண்ணின் கடைக் கோடியில் கண்ணீர் ஒதுங்குகிறது. என்ன விநோதமான வாழ்க்கை! திருப்பத்தூரிலேயே இருக்கிற கம்யூனிஸ்ட் நண்பர்கள் "நாமெல்லாம் சேர்ந்து ஒரு இலக்கிய சங்கம் வைக்க வேண்டும்" என்கிறார்கள். இதோ நான் அவர்கள் எதிரே சபரிமலைக்கோலம் போட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே என் அறையில் லலிதா நவரத்ன மாலை பாடுகிறேன். என் உணர்ச்சிகளுக்கு அறிவார்த்தமான வடிவம் கொடுத்து உதவு
கிறது JKவின் 'காவியும் சிவப்பும்' கட்டுரை. (இப்பொழுது இருந்தால் இன்னொரு முறை படிக்கலாம்).

காலையும் மாலையும் பச்சைத் தண்ணீரில் குளிக்கிறேன். முன்பெல்லாம் குளிர்கிறதே என்று அவசர அவசரமாய்க் குளித்து விடுவேன். இப்பொழுதோ, குளிரட்டும் என்று மனசைச் சூடாக்கிக் கொண்டவன் போல், நிதானமாக நின்று, நுரைக்கச் சோப்பு தேய்த்து நிறைய நேரம் குளிக்கிறேன். பூஜையறை ஊதுவத்தியின் மணமேறிக் கிடக்கிறது. வெள்ளையாகத் தும்பை மலர்களைக் கொட்டி மேலே ஒரு சிவப்பு செம்பருத்தியை வைத்து அழகு பார்க்கிறேன். அடுப்பங்கரை மணைக்கு மஞ்சள் பூசி அதையே ஐயப்பனின் பீடமாக்கி விட்டேன். முதல்நாள் சூட்டிய புஷ்பம் உலர்ந்து சருகான பின்னும் எடுக்க மனம் வரவில்லை. என்னமோ அதன் மீது ஒரு பந்தம். எடுத்துக் குப்பையில் போட மனமில்லாமலேயே எடுக்காமலிருக்கிறேன். காமம் வெறுப்பாயிருக்கிறது. ஆனால் பெண்களின் கண்களைச் சந்திக்காது இருக்கப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.

வாத்ய சங்கீதம் பிடிக்கிறது. சங்கீதம் மட்டும் தெரிந்தால் வாழ்க்கை மஹத்தான பொக்கிஷமாகிவிடும் போல் இருக்கிறது. புறத்தின் அலை ஒன்று போய், உள்ளே இருக்கும் சங்கீதத்தைத் தொடும் பாக்கியம் சிறிதளவு எப்போதேனும் கிடைக்கிறது.

- இதெல்லாம் எந்த நிலையில் தெரியுமா? குடும்பக் கட்டுப்பாட்டை நான் எதிர்த்துப் பேசி விட்டதாகவும், அதிகாரிகளிடம் மிரட்டும் தோரணையில் பேசியதாகவும், கேஸ் கொடுக்காத கடுப்பில், BDO 'மெமோ' அனுப்பியிருக்கிறான். அந்தச் சூழ்நிலையில்.

அதிசயம். ஐயப்ப விரதம் இருக்குங் காலை 'இந்த மெமோ குறித்து நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்' என்று இருந்தேன். இன்று பேப்பரில், குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக ஆசிரியர்களை அச்சுறுத்தும் சுற்றறிக்கைகளை வாபஸ்பெறச் சொல்லி தமிழ் நாடு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.

நிறைய வேலை. எனக்கு - போதகனுக்கு - சம்பந்தமேயில்லாத ரிக்கார்டுகளோடும் சாங்கியங்களோடும் அதிகாரிகளோடும் இவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கிறதே, பிள்ளைகளிடம் நியாயமாக இன்னும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? குறைந்த பட்சம் இன்னும் எவ்வளவு நிறைய பேச வேண்டும்? அவர்களையும் புறக்கணிப்பதில்லை. சொல்லப் போனால், ரொம்ப அன்யோன்யமான நேயமான சுகமான உறவு அவர்களிடத்தில் தான். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். 'அங்கம் குலைவது அறிவு' என்பது மாதிரி அவர்களுக்குச் சில விஷயங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறேன். திருடக்கூடாது என்று தெரிந்தால் மட்டும் போதாது. திருடப் போனால் கையே, தேகாந்தமே நடுங்க வேண்டும். 'கூழானாலும் குளித்துக் குடி' சொன்னால் மட்டும் போதாது. குளிக்காவிட்டால், ஒரு நாளைக்கு என்றாலும் உடம்பு அரிப்பு எடுக்க வேண்டும் - இந்த மாதிரி.

சிலர் இன்னும் தான் திருடுகிறார்கள் போல் இருக்கிறது. சிலர் இன்னும் குளியலைத் தினசரிப் பழக்கமாகக் கொள்ளவில்லை.

ஆனால் என் பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமையானால் வெகு அழகாகப் பள்ளிக்கு வருகின்றன. என்னிடம் புகழ்ச்சி பெறுவதற்கு அன்றைக்கு மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு வந்தால் போதும் என்கிற ரசியத்தைப் புரிந்துகொண்டார்கள் போல் இருக்கிறது.

ஒரு நாள் மங்கை என்கிற பெண் - கருமையும் மென்மையும் கலந்த தோற்றம் - அழகாக பேதை மாரியம்மன் போல் வந்தாள். அன்றைக்கு நான் வர்ணக் கலப்புகளைப் பற்றிப் பிள்ளைகளுக்கு ஒரு பாடம் சொன்னேன். அவள் கன்னத்தில் எனக்கொரு பசுமை தெரிந்தது. "கருமையும் மஞ்சளும் சிறிது கலந்தால் ஒரு பசுமை தெரியும் போலும். நீங்களெல்லாம் பெயிண்டிங்கையும் இப்பொழுதிருந்தே பழகுகிற மாதிரி நம் பள்ளிக்கூடம் இருந்தால் - இந்த இந்த வர்ணத்தோடு இது இது கலந்தால் இப்படி இப்படி ஆகும் என்று தெரிந்து கொள்வீர்கள் அல்லவா?" என்று இப்படிப் பாடம். நீலமும் பச்சையும் கலந்தாலும் இப்படிப் பச்சை வருமோ? நீங்கள் எனக்கு எழுதுங்கள் சபா.

உங்களுக்கு இப்பொழுது சில நாட்களாகத் தொடர்ச்சியாக எழுதாமல் என்ன செய்து கொண்டிருந்தேன்? இப்படித் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். வேலை தானே?

இன்றைக்கு இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பதற்குச் சற்று முன் கண்ணைச் சுழற்றியது. வரவரத் தூக்கத்தில் விருப்பம் விட்டுப் போகிறது - அதிகாலையில் தவிர. உங்களுக்கு எழுத ஆரம்பித்துவிட்டேன். என்னென்ன எழுதுவதோ, எப்படித் தூங்குவதோ?

நான் வேறு எதற்காகவும் எழுதவில்லை. எதை எழுதிப் போட்டாலும், இப்படித் தாங்கிக்கொள்வற்கு நீங்கள் இருக்கிறீர்களே, ஒரு பொருளுக்கு ஒரு இடத்தில் தீராத கிராக்கி இவ்வளவு இருக்கிறதே, என்னதான் அந்தப் பொருள் தன்னைத் தான் இளப்பமாக நினைத்தாலும் இந்தக் கிராக்கியைப் புறக்கணிக்கலாமா என்றெல்லாம் தான் எழுதுகிறேன். இது எனக்கு ஒரு ஆணவமாய்ப் போய் விடாமல் நான் தப்பிக்க வேண்டுமே. அதற்காகவே அவ்வப்பொழுது கொஞ்சம் வாலை மடக்கிக் கொள்ள வெண்டும் போல் இருக்கிறது. இன்னொன்றும் உண்மைதான். எனக்கும் சுகமாக இருப்பதனால் தான் எழுதுகிறேன்.

- இதிலே இலக்கியத்தை வேறு நினைத்துக் கொள்கிறோம். அந்தப் புண்ணியத்துக்கு நடையாவது நன்றாக வந்தால் சரி.

வேறேதாவது எழுதலாம் என்று நினைத்தால், சிதம்பரம் கோயிலுக்குப் போகவேண்டும் என்று இருக்கிற விருப்பம் நினைவுக்கு வருகிறது. பெரிய கோயிலாமே? உள்ளே போயிருக்கிறீர்களா? பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களா? சோழமண்டலக் கலாச்சாரம் மனசில் நிறைந்து நிற்க, ஒரு கொடி போல் உள்ளம் படபடவென்று பறக்குமே? அதுவும் உங்களுக்கெல்லாம் ரொம்ப நெருங்கிய கோயிலாயிற்றே?

***** ***** *****

15-12-76

மேற்கொண்டு என்ன எழுதுவது?

வீட்டிலனைவர்க்கும் குழந்தைகளுக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.

அப்பாவின் உடல்நிலை குறித்து ஒவ்வொரு கடிதத்திலும் உற்சாகமான செய்திகளை எதிர் பார்க்கிறேன்.

நமது கடிதங்களுக்கு முடிவு என்பது ஏது? இது, இடையில் ஒரு கையெழுத்துத்தான்.

- பி.ச.குப்புசாமி
15-12-76.

Friday, July 14, 2006

கடித இலக்கியம் - 13

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 13

நாகராஜம்பட்டி வ.ஆ.
15-11-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

அடுத்தடுத்துத் தங்கள் பதில்கள் கிடைக்கப் பெற்றேன். சந்தோஷமாக இருந்தது. ஒருவகையில் சிரிப்புக் கூட வந்தது. தாங்கள் அதிசயப்படுவது போலவே நானும் ஓர் இடத்தில் அதிசயித்திருக்கிறேன். இது நம்மிடையே சகஜம். அதனால்தான் நாம் நண்பர்களாக இருக்கிறோம்.

- J.K. ஒருமுறை சொன்னார். சகோதரர்கள் - சக கோத்திரர்கள் என்பதாம். சஹிருதயர்கள் என்றும் உண்டாம். அது சக - ஹிருதயர்கள் என்று பொருள் படுமாம். இந்த சஹிருதயர்கள் சகோதரர்களைக் காட்டிலும் மேன்மையானவர்களாம்.

ஒரு விதத்தில் நீங்கள் என்னைக் கண்டு பொறாமைப் படலாம். ஆனால் நானும் பல அபத்தங்கள் பண்ணி இருக்கிறேன். தவறாக ஏதாவது செய்தாலும்தெளிந்த மனத்தோடு செய்கிறோமே என்றுதான் நினைத்தேன். அதே மாதிரி, எல்லாக் குழப்பங்களுக்கும் பிறகு ஒரு தெளிவு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

அன்பு கொண்டால் மனிதர்கள் எல்லாம் இவ்வளவு துன்பப்படுவார்களா?

வாழ்க்கை எவ்வளவு நாடகப் பாங்குடையதாய் இருக்கிறது!

குமுதத்துக்கு ஏதாவது நினைத்த பெயர்களில் எல்லாம் எழுதுவது. உஷாராகப் பெண்பாலார் பெயர்கள் வைத்துக் கொள்வதில்லை. சமீபத்தில், சிவகுமார் சொன்னான் என்று 'சிம்ஹவிஷ்ணு' என்று புனைபெயர் வைத்துக் கொண்டேன்.

ஒன்று தெரியுமா உங்களுக்கு? எனக்குக் குமுதத்தில் வரும்படியாகக் கதை எழுத உண்மையில் தெரியவில்லை. இந்தப் பத்திரிகைகளில் எல்லாம் என் எழுத்து ஏதோ ருசியற்ற வேதாந்த அவல் மாதிரித் தெரியும் போலிருக்கிறது. எல்லாவற்றையும் துறந்து நான் விரும்புகிற வண்ணமே எழுதுவதென்பதற்கும் எனக்கு இன்னும் சக்தி வரவில்லை. இதற்கிடையில் எப்பொழுதாவது கொஞ்சம் சில்லறை வருமே என்று மனம் சபலப்படுகிறோம். இந்த அசட்டுத்தனங்களைக் கம்பனின் மஹா சந்நிதானம் ஏற்குமா? கவி பாரதி பொறுப்பானா? JKவுக்கு
நாமும் ஒரு எழுத்தாளர்களா?

'கண்ணதாசனி'ல் எழுதலாம். ஆனால் அங்கே எழுதப் பயமாயிருக்கிறது. எதை எழுதினாலும் போடுவார்கள் என்கிற வாய்ப்பு இருக்கையில் எழுதுவது சிலவேளைகளில் அபாயகரமானதாகும். ஒருவன் எழுதுவதை எல்லாம் போட்டுக் கூட அவனைக் கெடுத்து விடலாம். 'பூவாடைக்காரி'க்கப்புறம் JK ஒருமுறை சொன்ன பாடம் இது.

சரி, என்ன இப்பொழுது? நான் எழுதாதது குறித்து எனக்கு உண்மையில் ரொம்ப வருத்தமெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரு விதத்தில் நான் எழுதாதிருக்கிறேன் என்று கூட நான் உணரவில்லை. உங்கள் மாதிரி நண்பர்களுக்கும், நினைத்தால் அவ்வப்பொழுது டைரியிலும், பிள்ளைகளுக்கு ஏதாவது கட்டுரை வழங்கும்போதும் இப்படியெல்லாம் எழுதுகிறேனே, இதிலேயே அந்தக் குறை தீர்ந்து போகிறதோ என்னவோ?

ஆனால் சிருஷ்டியின்மேல் நமக்கு ஆசை இல்லையா? ஆசை வேண்டாமா?

நாம் நம் உள்நாடியில் அறிந்து, உலகின் ஆயிரம் உருக்களில் தேடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஒரு சித்திரம் தீட்டி ஒற்றைச் சிறுகதையிலாவது காலத்தை வென்று நிற்க வைத்துவிட வேண்டியதில்லையா? எப்பொழுதோ அந்தி சந்திகளில் அனுபவித்த அந்த உணர்ச்சிகளின் ஆழம் குறித்து வைக்க வேண்டாமா?

வேண்டும்தான். என்ன செய்வது? அதற்கு அலையாமலே இருக்கிறேன். ஏதாவது ஓர் ரூபத்தில் அதுவும் நானும் ஐக்கியமாகியே தீருவோம். அது என் விதி.

- (போகட்டும். ஆழமான சமாச்சாரம். எனக்கு நானே முரண்டுகிறேன் போல் இருக்கிறது.)

உங்களுக்கு விளையாட்டாக ஒரு கேள்வி கேட்கிறேன். நான் இந்த இந்த மாதிரி நிறைய நிறைய எழுதி அனுப்புகிறேனே இதை எல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்? எனது மரணத்துக்குப் பிறகு ஒரு சிறு நினைவுப் பிரசுரமாகத் தொகுத்துப் போடுவதற்காவது இவற்றுள் ஏதாவது விஷயமிருக்கிறதா? இருந்தால் போதாதா, பிறந்த கடன் ஈடேறும். இனி என்ன கவலை? இலக்கிய 'விசாரமே' வேண்டாம். இலக்கிய சுகானுபவமே வேண்டப்படுவது.

ரொம்ப மகிழ்ந்து போகாதீர்கள். நான் ரொம்ப சோம்பேறி. திரும்பிப் படுப்பதையும் ஒரு சிரமம் என்று கருதுபவன். இரவில் மொட்டுமொட்டென்று விழித்து உட்கார்ந்து எழுத வேண்டுமே!

பேனா எதையாவது ருசியாக எழுதத் துடிக்கும் போதெல்லாம் உங்களுக்கு எழுதுவது என்று தான் தீர்மானித்திருக்கிறேன். தொடர்ந்து திடமாக எழுதுவேனா என்பதுதான் சோதனை.

எல்லாச் சோதனைகளிலும் தெளிந்து நிற்போம்.

சோதனை நம்மை மேலும் உயர்த்துவதாகவே இருக்கட்டும்.

நமக்கு எதையும் சோதிக்கும் விருப்பமில்லை. நாம் வழிபடுகிறோம். நம்புகிறோம். ஏமாந்து, அழாமல் சிரிக்கத் திடம் உள்ளோம். வாழ்க்கை நாடகத்தை அங்ஙனம் விளையாட்டாய்க் கற்றோம். சோதிப்பவனின் ஆவலாதிகளுக்குத் தீனி இல்லையேல் சோதனை தோல்வி. நமது விளையாட்டில் நமது தோல்வியும் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தால் அதை ஏன் மறைக்க வேண்டும்?

J. கிருஷ்ணமூர்த்தியை நீங்கள் எப்போதாவது படித்ததுண்டா? நான் சரியாக அர்த்தம் புரியாமலே ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது அவரை நான் படிக்கவோ, புரிந்து கொள்ளவோ விரும்பவில்லை. அந்த முயற்சி - அவரைப் பின் தொடர்ந்து போவது - மஹா ஆயாஸம் மிக்கது. எனக்கு நம் பிரபந்தமே வழி காட்டப் போதுமானது. வானம் முழுக்க ஒன்றாக வருங்காலத்தில்
எனது பெயர் ஒன்றும் எழுதப்பட வேண்டாம்.

J. கிருஷ்ணமூர்த்தியைப் படித்தபோது அறிவு கொஞ்சம் துளிர்த்தது. அனுபவமோ நிர்க்கதியாயிருந்தது. அவரே சொல்வார், அவர் காட்டுகிற மாதிரி பார்க்க abundent strength வேண்டும் என்று. அதெல்லாம் நம்மிடமில்லை. நம்பிகையின் சக்தி அல்லால் வேறொன்றும் நம்மிடமில்லை. ஒதுங்கி விட்டேன்.

- இப்பொழுது ஏன் இவர் கவனம் வந்தது என்றால், நாம் நம் கடிதங்களில் இப்படியெல்லாம் வாழ்க்கை மற்றும் கலை, மனித உறவுத் தத்துவங்களை இப்படி மரக்கால் மரக்காலாக அளக்கிறோமே, இதையெல்லாம் J. கிருஷ்ண மூர்த்தி நோக்கில் கண்டால் அவருக்கு எப்பேர்ப்பட்ட specimen ஆக இருக்கும்!

***** ***** *****

16-11-76.

நமது JKவுக்கு எழுதியும் பார்த்தும் பேசியும் ரொம்ப நாளாயிற்று. 'ஜயஜய சங்கர'விற்குப் பின்பு இன்னும் நான் பேச்சு மூச்சுக்கூட காட்டவில்லை. அவரை வரவழைத்து, ஒர் இரண்டு நாட்கள் ஜம்னாமரத்தூருக்குக் கொண்டு போய் விடலாமா என்று நானும் தண்டபாணியும் பேசிக் கொண்டோம். இல்லாவிட்டால் சென்னைக்காவது ஒரு சனி ஞாயிறில் போய் வர வேண்டும். முன்பு மாதிரி, நினைத்தபடி யெல்லாம் இப்போது திட்டங்கள் வகுக்க முடியவில்லை.

தாங்கள் வந்தால் தங்கள் சாக்கிலாவது ஜம்னாமரத்தூர் போகலாம். பள்ளிக்கூடம், வீடு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி ஒரு சந்தோஷ வனாந்திரத்தில் நண்பர்களோடு சஞ்சரிக்க மனம் ஏங்குகிறது.

தாங்கள் புறப்படுவது பற்றி ஏதேனும் சகுனம் தெரிகிறதா?

தங்கள்,
பி.ச. குப்புசாமி
16 -11 76.

கடித இலக்கியம் - 12

('சந்திரமௌலி" என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 12

நாகராஜம்பட்டி
7-11-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பிரபந்தத்தில் ஆழ்வார்கள், 'ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்ளுவதா'கச் சில பாடல்கள் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடலும் ஓவ்வொரு பாவனையில். பெண்ணின் பொய்க் கோபம், அவள் வீம்பு. ரகசியமாய் அவள் பேசுகிற பேரம் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டில்.

அதில் ஒரு பாடல் ரொம்பவும் சோகமாயிருக்கிறது. வார்த்தைகள் என்னும் தோணியேறப் பழகிக் கொண்டால் மட்டுமே அதன் அர்த்த சஞ்சாரத்தின் அழகை எல்லையற்று அனுபவிக்கலாம்.

"பையர வின்னணைப் பள்ளியினாய்
.....பண்டையோம் அல்லோம் நாம்
..........நீ யுகக்கும்

மையரி ஒண் கண்ணினோரும் அல்லோம்
.....வைகி யெம்
..........சேரி வரவொழி நீ

செய்ய உடையும் திருமுகமும்
.....செங்கனி வாயும்
..........குழலும் கண்டு

பொய்யொருநாள் பட்டதே யமையும்
.....புள்ளுவம் பேசாதே
..........போகு நம்பீ!"

பண்டையோம் அல்லோம் என்பதும், நீயுகக்கும் மையரி ஒண் கண்ணினோம் அல்லோம் என்பதும், எங்கள் சேரிப்பக்கம் வராதே என்பதும், எல்லாவற்றையும் கண்டு ஒரு பொய்க்கு ஏமாந்த காலம் போதும் என்பதும், கண்ணனைப் போகச் சொல்வதும் - எவ்வளவு நயமான ஆழ்ந்த உணர்ச்சிகள்! எவ்வளவு அழகாக ஆழ்வார்கள் தீட்டியிருக்கிறார்கள்!

எல்லாம் என்றோ படித்தவைதாம். ஆனால் இந்தமுறை பிரபந்தத்தைத் தொட்டபோது இதன் அழகு கருதி இது எனக்கு மனப்பாடம் ஆயிற்று. எப்பொழுதாவது சொல்லிப் பார்த்துக் கொள்கிறபோது, எவருடனாவது பகிர்ந்து கொள்கிற ஆசை பிறக்கிறது. தங்களுக்கு எழுதினேன்.

இன்று நவம்பர் ஏழாம் தேதி. ருஷ்யப் புரட்சியின் ஞாபகார்த்த நாள். இந்த நாளைக் குறித்து நமக்கு என்றும் ஒரு விசேஷ உணர்ச்சி இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் தி.க.சிவசங்கரன்கள் எல்லாம் சேர்ந்தால், ஆழ்வார்களுக்கு அவர்களது சமுதாய இலக்கியத் திறனாய்வில் என்ன கதி என்று நினைத்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. வருந்தி ஆவது என்? லெனின் என்கிற மகாபுருஷன் நமது டால்ஸ்டாயைக் காத்தது போல, அவன் தந்த பார்வை இன்னும் அந்தப் புதிய ருஷ்யாவைத் துர்கனேவின் புகழ் பாட வைத்திருப்பது போல, நம் தேசத்திலும் அப்படி ஒரு அதிர்ஷ்டம் நிகழும் என்று நம்புவோம்.

தமிழ்நாட்டின் மார்க்ஸிய இலக்கியவாதிகளுக்கு, அவர்களது திறனும் அறிவாற்றலும் கருதி பல ஸ்தாபன வாயிலாக அளிக்கப்பட்ட நல்ல சம்பளமுள்ள குமாஸ்தா உத்தியோகங்களே அவர்களைப் பாட்டாளியைப் பற்றி அர்த்தமற்றுப் பேசும் "சூடோ" இலக்கியவாதிகளாக்கி விட்டன. இவர்கள் தான் டாங்கே என்றால் பயங்கரம் தான்.

***** ***** *****
10-11-76

இப்பொழுதெல்லாம், ஒரு மூன்று நான்கு தடவைகளுக்கு மேல் தங்களுக்கு எழுதவாரம்பித்து, போஸ்ட் செய்யாமலேயே பாதியில் கடிதங்கள் நின்று விடுகின்றன. ஓரிரு நாள் கழித்து அவைகளைப் படித்துப் பார்க்கிற போது, சில சரியாக எழுதப்பட்டனவாகவும், சில 'அமெச்சூரிஷ்' ஆகவும் தோன்றுகின்றன.

இவற்றை எழுதுகிற என்னை விடவும், பெறுகிற நீங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொல் ஒளிந்து கொண்டபோது ( அதாவது "உண்மை" மனதில் தோன்றாத போது ) ஓடி அலைந்து தடவி, சுவரில் முட்டிக் கொண்ட 'இடறல்'கள் இவற்றில் இருக்கலாம்.

இந்தக் கடிதத்தோடு, அப்படி எழுதின, நிறுத்திய இன்னொரு கடிதம் வருகிறது. அதைத் திருத்த வேண்டும், crisp ஆகச் செப்பனிட வேண்டும், அல்லது கிழித்தாவது போட வேண்டும் என்ரு கருதினேன். தப்பி, தங்கள் கைக்கு வருகிறது.

இங்கு எப்போது வருகிறீர்கள்? குளிர்காலம் அதிகமாகிக் கொண்டு போகிறதே! வெளியில் நிறையத் திரிய முடியாதே! கூடிய சீக்கிரம் வாருங்கள். அழைப்பு அப்படியே இன்னும் எதிரே நின்று கொண்டு உங்களை வற்புறுத்துவதாகக் கருதி, ஆன மட்டும் சீக்கிரமாக நாற்காலியை விட்டு எழுங்கள்.

துணைவியாருக்கு அன்பான விசாரிப்புகளையும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் கூறுங்கள்.

தங்கள்
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 11

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம்- 11

நாகராஜம்பட்டி,
2-11-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதம் வந்தது.

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்றும், துன்பங்களை வெல்வது எப்படி என்றும், சஞ்சலங்கள் அற்றுத் தெளிந்து நிற்பது எப்படி என்றும் நாம் நிறையப் படித்திருக்கிறோம். இருந்தும், அந்தச் சரியான வழியை, நமக்குச் சோதனைகள் வரும்போது நாமே தான் தேடி அலைந்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இனிமேல் நான் உங்களுக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதக்கூடும். நீங்கள் துன்புற்றிருப்பதாகக் கருதி இப்படி ஒரு நினைப்பு இல்லை. எனக்கே, பலவிதத் தொல்லைகளும், அடுக்கடுக்கான அமைதியின்மைகளும் ஏற்பட்டு- சடாரென்று அவற்றிலிருந்து விடுபட விரும்பிவிட்ட தீவிர க்ஷணத்தில் இப்படி தோன்றுகிறது.

இந்த நினைவுகளில், நமது பாக்கியம், நம்முள் ஒரு மேன்மையான குரலும் கேட்கிறது. நிதரிசனமான வாழ்வின் ஓலம் பல சமயங்களில் அதை அடக்கி மறைத்து விட்டாலும், எப்பொழுதும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டால் அந்தக் குரலைத் தெளிவாகக்
கேட்க முடியும். அதைக் கேட்போம்.

நமக்குத் துன்பம் எவர் பொருட்டு அல்லது எவரால் வருகிறது? நமது மகிழ்ச்சிக்கென்று நாம் தேர்ந்துகொண்ட, நம்முடன் ரத்த சம்பந்தமும் சித்த ஒருமையும் கொண்டு அவற்றின் பேரிலான அன்புடன் உறவு கொண்ட - அவர்களாலேயே நமக்கு நம் வாழ்வில்
துன்பமுண்டாகக் காண்கிறோம்.

நமக்கு ஒரு பிரச்சினையாகி நிற்கும் இந்த உறவுகளோடு ஊடாடுவதில், அவரவர் இயல்புக்கு ஏற்ப பல தனி வழிகள் இருக்கக் கூடும். நமது இயல்பை அனுசரித்து நாம் நமது உறவுகளுக்கு - அவற்றுடன் அமைதியாகச் செல்வதற்கு, ஒரு வழி காணவேண்டும்.

வேதாந்தியாகவும் மகானாகவும் ஆவது பெரிய விஷயம் தான். நாம் அவர்களல்ல என்பதற்கு நம்மிடையே பல ருசுக்கள் உண்டு. ஆனால் அப்படி கொஞ்சம் வேஷம் தரித்துப் பாருங்களேன்! சில்லறை வாழ்வின் சிறுவர் சிறுமியர் வந்து உங்களைச் சீண்டி நச்சரிக்கிற போது, அவர்கள் உங்களை அவமானம் செய்து ஆரவாரிக்கிற போது, என்ன குரூரம் என்று அறியாமலேயே ஹிருதய வலிக்கு உங்களை ஆளாக்குகிற போது, அவசியம் ஒருமுறை அந்த வேஷத்தைப் போட்டுப் பாருங்கள். நமது சுகம் என்று நாம் கருதுவனவற்றை ஒவ்வொன்றாக நாம் துறக்கத் துறக்க, இந்த வேஷத்தின் கம்பீரம் ஏறி, நம்முள் அந்தப் புராதனமான குரல் பேச ஆரம்பித்துவிடும்.

அது உங்களுக்கு மந்திரம்போல் பல விஷயங்களைச் சொல்லும். ஆரம்பத்தில், சிரமமான வைராக்கியச் சித்தத்துடன்தான் நமது துன்பங்களைச் சகிக்க நேரும். பிறகு அந்தச் சகிப்பு லகுவாகிவிடும் என்கிற உண்மையைக் கவனம் வைத்து, அந்தக் குரலின்படி நடக்க வேண்டும்.

எனது துன்பங்களுக்குக் காரணமான இந்த மனிதர்களின் மீதெல்லாம் எனக்குப் பெருங்காதல் இருக்கிறது. இவர்கள் பற்றிய எனது நலமான கனவுகள் எண்ணற்றவை ஆகும். ஏதோ ஒரு கோளாறில் இவர்களே எனது வலியின் முனகல்கள் ஆகிவிட்டார்கள். கொஞ்சம் யோசித்தால், துன்பம் இவர்களுக்குத்தான் என்று தோன்றுகிறது. என்னை இணக்கமற்றவனாக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் இவர்கள், என்னால் பெறக் கூடிய இன்பங்களை எல்லாம் இழக்கிறார்களே என்று எனக்கு ஒரு விதத்தில் பரிவு தோன்றுகிறது. என் உள்ளம் சந்தோஷத்தை அறிந்திருக்கிறது. இப்போதும் கூட அந்த ஆற்றின் நீரிலிருந்து, இடுப்பளவு தான் எழுந்து நின்று பேசுகிறேன். இவர்கள் நிரந்தரம், சந்தோஷம்
என்று கருதத்தக்க அந்த நீரலைகளில் இன்னும் பாதங்களைக் கூட நனைக்காதவர்களாய் இருக்கிறார்களே!

ஆனால் இவர்கள் பொருட்டு நாம் என்ன செய்வது? வாழ்வில் இவர்கள் போகிற மாதிரியேவா நாமும் போக முடியும்? அதை அப்படியே விழுங்கி ஜீரணித்து, ஒரு சாபம்போல் அவர்களை மன்னித்து-

இப்படி அடிக்கடி நடப்பதுண்டு. அந்தக் குரலைத் தொடர்ந்து கேட்டு வந்தால் அவற்றின் இடைவேளை அதிகமாகி இறுதியில் எந்தச் சச்சரவும் இன்றி அமைதியாகப் போகலாம் என்று 'மூட நம்பிக்கை' கண்டு அந்த வேஷத்தை இப்போதெல்லாம் நான் மிகுந்த பாவனையுணர்ச்சியோடு போடுகிறேன்.

"உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பரோ?
.......மாயையே - மனத்
திண்மை யுள்ளாரை நீ செய்வது
.......மொன்றுண்டோ மாயையே!"

"இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
.......மாயையே - தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
.......நிற்பையோ? - மாயையே!"

- இன்னொன்று கவனம் கொள்ளத் தோன்றுகிறது. இந்தச் சுரண்டல் சமுகத்தில், எல்லா மட்டங்களிலும் வாழ்வின் பிரச்சினைகளுக்குப் பணம் ஒரு மூல காரணம். அந்த எடைக் கல்லைப் போட்டால், தட்டு சரியாகி விடுமா என்று சொல்லமுடியாது தான். ஆனால் ஒட்டும் இரண்டுளத்தின் தட்டுகள் மேலும் கீழுமாய்த் தாழ்ந்து கிடப்பதற்கு வேறு நியாயமான காரணங்கள் இல்லை.

இது ஒரு சிந்தனை. சீக்கிரம் தங்களுக்கு இதைச் சேர்ப்பிக்க வேண்டுமெனில், முன்பின் சிந்தியாது கறாராகக் கடிதத்தை இந்த நள்ளிரவில் நிறுத்தி நாளைத் தபாலில் உடனே போட்டால் தான்.

- பி.ச.குப்புசாமி
2-11-76.

எனது களஞ்சியத்திலிருந்து - 23

சிவப்பிரகாசர் செந்தமிழ்:

கற்பனைக் கருவூலமெனப் புலவர்களால் பாராட்டப் படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் நாம் சிறு வயதில் படித்த 'நன்னெறி' உட்பட 32 நூல்களை எழுதி சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர். அவர் வாழ்ந்த காலம் 17-ஆம் நூற்றாண்டாகும்.

அவரது கவிதைகள் எளிமையும் நயமும் மிக்கவை. எடுத்துக்காட்டாக இரு கவிதைகளைக் கீழே தருகிறேன்.

சைவ நெறியைச் சார்ந்தவர் என்பதால் சிவபெருமானையே தன் கவிதைகளுக்குக் கருப் பொருளாக்கிப் பாடுபவர். புதுமணம் புரிந்த ஒரு தம்பதியரை வாழ்த்திப் பாடுகிறவர், சிவபெருமான்-உமையவள் ஊடலையும், அவர்களது மக்கட் செல்வங்களின் சிறு குறும்புகளையும் நகைச்சுவயுடன் தம் கவிதையில் அமைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

முதல் பாடல் இறைத் தம்பதிகளுக்கிடையே ஆன ஒரு ஊடலைக் காட்சிப் படுத்துகிறது.

உமையவள் சிவபெருமானின் தலையில் உள்ள கங்கா தேவியைப் பார்த்து விடுகிறாள். அது யார் என்று
கேட்கிறாள். "உமது முடியின் மீதுள்ள இளமங்கை யார்?"

"அது மங்கையல்ல; வெண்மையான அலைகளை எறிந்து அழகு கொழிக்கும் குளிர்ச்சியான ஆறு" என்கிறார் ஈசன்.

"அப்படியானால் ஒளி பொருந்திய முகமும், கரிய கண்களும், காதும், வாயும் ஆற்றுக்கு உண்டா?"

"உனக்கு அவ்விதம் தோன்றுவது முகம் போன்ற தாமரையும், கண் போன்ற குவளை மலரும், காது போன்ற வள்ளைக் கொடியும், வாய் போன்ற செவ்வல்லி மலரும் அல்லவா?" என்று சமாளிக்கிறார் இறைவன்.

அது பொய் என்றுணர்ந்த உமையவள் "கொங்கையும் கூந்தலும் கூட நீரினில் இருக்குமோ?" என்று மடக்குகிறாள்.

"அது நீரில் உண்டாகிற நீர்க் குமிழிகளும், நீர்ப்பாசியும் ஆகும். என்ன சொன்னாலும் நீ அதை மறுத்துக் கூறுவாய் பெண்ணே!" என்று மழுப்புகிறார்.

'பெண்ணே!' என்றழைத்தது தன்னைத்தான் என்று நினைத்த கங்காதேவி, " ஏன்சுவாமி" என்று கேட்க குட்டு உடைந்து விடுகிறது. ஈசன் வெட்கத்தோடு தலைகுனிந்து "என்னை மன்னித்து விடு" என்று வேண்டுகிறார். அதனால் மனமகிழ்ச்சியுற்ற அம்பிகை உங்களைக் காப்பாற்றுவாள் - என்று திருமண வாழ்த்தை முடிக்கிறார்.

பாடலைப் பார்க்கலாம்:

'ஐய! நின் சென்னி மிசை உறைகின்ற மடமங்கை
.......யார்?' என்ன உமை வினவவும்,
'அன்னது ஒரு மடமங்கையன்று; வெண்திரை கொழித்து
.......அழகு ஒழுகு தண்புனல்' எனத்,
'துய்ய ஒளி ஆனனம் கரிய விழி காது வாய்
.......தோயத்தில் உண்டோ?' எனச்,
'சொல்லரும் கமல மலர், காவி மலர், கொடிவள்ளை
.......தூய செங்குமுதம்' என்னப்
பொய்யென நினத்து 'நல் கொங்கையும், கூந்தலும்
.......புனலினிடை உண்டோ?' எனப்,
'புற்புலம் சைவலம் அது' எனவே மறுத்துப்
.......'புகன்றிடுதி நங்காய்' எனத்
தையல் அவள் 'ஏன்' என்ன, நாணொடு வணங்கி, 'எந்
.......தன் பிழை பொறுத்திடு' என்றே
சங்கரன் உரைத் திடத் திருவுள மகிழ்ந்த சிவ
.......சங்கரி உமைக் காக்கவே!

( சென்னிமிசை - தலைமீது; திரை - அலை; தண்புனல் - ஆறு; துய்ய - தூய்மையான; ஆனனம் - முகம்; தோயம் - நீர்; கமலம் - தாமரை; காவி - குவளை; வள்ளை - வசலைக்கொடி; குமுதம் - அல்லி; புற்புதம் - நீர்க்குமிழி; சைவலம் - பாசி; )

இறைத் தம்பதிகளின் ஊடலைக் காட்டி, மணமக்களுக்கு அத்தகைய ஊடல் அவர்களுக்கும் நிகழும், உமையவள் காப்பாள் என்று சொல்லி வாழ்த்தும் நயம் வித்தியாசமாக இல்லையா?

அடுத்த பாடலும் அதே மணமக்களை வாழ்த்திப் பாடியது தான். இப் பாடல் பிள்ளைப் பேறு எவ்வளவு இனிமையானது என்பதைக் காட்டுவதாகும்.

இங்கே தெய்வக் குழந்தைகளான விநாயகரும் முருகனும் தமக்குள் குறும்புகள் செய்து தந்தை அரனிடம் புகார் செய்கிற காட்சி விவரிக்கப் படுகிறது.

சிவபிரானிடம் மூத்த பிள்ளையான விநாயகர் வந்து தம்பி முருகனைப் பற்றிப் புகார் சொல்கிறார். " அப்பா! தம்பி முருகன் என்னுடைய காதுகளை மிகவும் நோகிறமாதிரி கிள்ளி விட்டான்" என்று சிணுங்குகிறார்.

ஈசன் வேலவனைப் பார்த்து, "ஏன் அப்படிச் செய்தாய்?" என்று விசாரிக்கிறார். அதற்கு முருகன் "அண்ணன் என் தலையில் உள்ள கண்களை எண்ணிப் பார்த்தான்" என்று பதில் கூறுகிறார்.

தேம்பி அழுகிற கணபதியை நோக்கி இறைவன், "நீ ஏன் அவ்வாறு வேடிக்கை செய்தாய்?' என்று வினவ, " என் முகத்தில் உள்ள தும்பிக்கையை அவன் எத்தனை முழம் என்று அளந்து பார்த்தான்" என்று சொல்லவும் முருகன் அதைக் கேட்டு சிரிக்கிறார். சிவபெருமான் அவர்களது தாயான உமாதேவியிடம், "உன் பிள்ளைகளின் குறும்புகளைப் பார்த்தாயா?" என்று கேட்க, அம்பிகை புன்னகைத்தபடி கணபதியை அருகழைத்து அணைத்து மகிழ்கிறாள். அந்த தேவி களிப்புடன் உங்களைக் காப்பார் என்று சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்துகிறார்.

பாடலைப் பார்ப்போம்:

அரனவனி டத்திலே ஐங்கரன் வந்து தான்
.......'ஐய! என் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்' என்றே சிணுங்கிடவும்,
.......அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே, 'அண்ணன் என் சென்னியில்
.......விளங்கு கண் எண்ணினான்' என,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து 'நீ அப்படி
.......விகடம் ஏன் செய்தாய்?' என,
மருவும் என் கைந்நீளம் முழம் அளந்தான்' என்ன
.......மயிலவன் நகைத்து நிற்க,
மலையரையன் உதவ வரும் உமையவளை நோக்கி 'நின்
.......மைந்தரைப் பாராய்!' எனக்
கரு அரிய கடலாடை உலகு பல அண்டம்
.......கருப்பமாய்ப் பெற்ற கன்னி,
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
.......களிப்புடன் உமைக் காக்கவே!

(ஐங்ககரன் - விநாயகர்; சென்னி - நெற்றி; மருவும் - பொருந்திய ; )

- இப்படி இன்னும் பல இனிய, கற்பனை வளம் மிக்க, நயமான கவிதைகளை 'சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்' தொகுப்பில் ஆர்வமுள்ள இலக்கிய அன்பர்கள் படித்துச் சுவைக்கலாம்.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.