Tuesday, June 12, 2007

கால நதிக்கரையில் .... - 9

கால நதிக்கரையில் .... - அத்தியாயம் - 9

- வே.சபாநாயகம்

ரெங்கம்மாவுக்குப் பொட்டுக் கட்டியதை சிதம்பரம் பார்த்ததில்லை. அவ்வாறெல்லாம் அவர் அதற்குப் போக முடியாது. வீட்டில் விட மாட்டார்கள். ஆனால் எங்கும் புகுந்து புறப்படுகிற தொந்தி மாமாதான் அப்போதைய செய்திச் சேகரிப்பாளர். எந்தச் செய்தியும் அவருக்குத் தெரியாமலிருக்காது. அந்த ஊரின் வரலாற்று ஆசிரியர் அவர். அழைக்காது போனாலும் எல்லா இடத்துக்கும் எல்லா நிகழ்வுக்கும் அவர் சாட்சி யாக இருப்பவர். அவர் ரெங்கத்துக்குப் பொட்டுக் கட்டிய போது சிவன் கோயிலுக்குப் போனவர். பார்த்ததை சிதம்பரத்துக்குச் சொல்லியிருக்கிறார்.

பொட்டுக் கட்டியது ஒரு சின்னக் கல்யாணம் போல நடந்திருக்கிறது. சிவன் சன்னதியில் வைத்து கோயில் செலவில் நடந்தது. சீர் வரிசையெல்லாம் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் பெண் வீட்டுக்கு எடுத்துச் சென்று ஊர்வலமாய் ரெங்கத்தை அழைத்து வந்தார்கள். முறைப்படி அய்யர் மந்திரம் ஓத, கெட்டிமேளம் முழங்க ரெங்கத்தின் பெரியம்மாதான், சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து குருக்கள் கொடுத்த சின்ன தங்கக் பொட்டினைத் தாலியாக அந்தக் கோயிலின் மூலவர் கைலாசநாதர் சார்பில் கட்டினாள். அதற்குப் பின்னர் அவளுக்குக் கைலாசநாதர்தான் கணவர். வாழ்நாள் முழுதும் இனி அவரது சேவைக்கு அவள் அர்ப்பணம். கோயில் திருவிழாவில் அவள் பாடவேண்டும். அந்தக் காலத்தில் சதிர் ஆடவும் வேண்டும். இப்போது பெயருக்குத்தான் கோயிலுக்குச் சொந்தம். வேறு பந்தமோ உரிமையோ எதுவும் இல்லை.

பள்ளிக்கூட வயதில் அதில் மறுப்புச் சொல்ல ரெங்கத்துக்கு ஏதுமில்லை. பரம்பரை பரம்பரையாக அவளது பெரியம்மா, பாட்டிகளைப்போல கோயிலுக்கான ஒரு சடங்கு என ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் அந்தச் சடங்கு நடந்த கொஞ்ச நாட்களுக்கு, அவளது கழுத்தில் குட்டையாய்த் தொங்கும் அந்தச் சின்னப் பொட்டுத் தாலியைப் பார்த்துப் பிள்ளைகள் புதுச் செய்தியாய்த் தங்களுக்குள் ரகசியமாய்ப் பேசிக் கொண்டார்கள். பிறகு எல்லோரும் - ஏன் அவளும் கூட அதை மறந்து போனார்கள்.

முன்பே சொன்னபடி ரெங்கத்துக்கு மனதுக்குப் பிடித்த ஒருவன் - அவளுக்கு முன்னர் அதே பள்ளியில் இரண்டு வகுப்புகள் மேலாகப் படித்துகொண்டிருந்தவன் - கோபு என்கிற கோபாலன் இருந்தான். பள்ளியில் ஏற்பட்ட பரஸ்பர ஈர்ப்பு காதலாக மாறியது. பிள்ளைக் காதல்தான் என்றாலும் வயதாக வயதாக அது தீவிரக் காதலாக வளர்ந்தது. என்னதான் ரகசியமாய்ச் சந்தித்தாலும் கிராமத்தில் அது வெளிப்படாமல் இருக்குமா? ஆனால் யாரும் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. 'பிஞ்சிலேயே ஆளைப் பிடித்து விட்டாள்' என்ற விமர்சனம் தவிர வேறு பேச்சு இல்லை. ரெங்கத்தின் பெரியம்மாக்கள் தெரிந்தும், அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. எப்படியானாலும் ஒருவன் அவளுக்கு வரத்தானே வேண்டும் - அது யாராக இருந்தால் என்ன?

ஆனால் கோபுவின் தாயால் அப்படி இருக்க முடியுமா? தகப்பனில்லாத - வீட்டுக்கு ஒரே வாரிசான, எதிர்கால ஊர் மிராசுகளில் ஒருவனான அவனை இப்படி விட்டுவிட முடியுமா? அவள் கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் காவலிருந்தாள்.

ரெங்கம் ஒரு நாள் வயதுக்கு வந்து அதற்கான சடங்குகள் முடிந்ததும் பெரியம்மாக்கள் அவளுக்குச் சாந்தி முகூர்த்தம் நடத்திவிட ஆயத்தம் செய்தார்கள். கோபுவுக்குத் துடித்தது. ஆனால் அம்மா தன் அருமைப் பிள்ளையைத் தாசிக்கு தத்தம் செய்துவிடுவாளா? காதலர்கள் இருவரும் செய்வதறியாது தவித்தார்கள்.

கடைசியில் அவளுக்குச் சாந்தி செய்து வைக்க அடுத்த ஊர் மைனர் ராஜக்கண்ணு முன் வந்தான். கோபுவுக்கு ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ரெங்கம் அழுது ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை.

ராஜக்கண்ணு என்ன தாலி கட்டவா போகிறான்? ஆரம்பிக்கிறவன் அவன் என்பதால் அவனிடமே இருக்க வேண்டும் என்று சட்டமா என்ன?

ராஜக்கண்ணுவுக்கு வயது நாற்பதுக்கு மேல். இளமையும் இல்லாமல் முதுமையும் இல்லாமல், தலைமுடியில் ஆங்காங்கே பளிச்சிடும் வெள்ளி நரை, முறுக்கு மீசை, எப்போதும் தாம்பூலம் நிறைந்த சிவந்த வாய், கழுத்தில் மைனர் சங்கிலி, காலில் கட் ஷ¥, வலது புஜத்தில் கறுப்பு முடிக்கயிற்றில் வெள்ளித் தாயத்து, வெள்ளை வெளேரென்ற மஸ்லின் வேட்டி, கைவைத்த வெள்ளை பனியன், தோள்மீது கனத்த தேங்காய்ப்பூத் துண்டு, நெற்றியில் அரகஜா சந்தனம், தூக்கி வாரிய நெளிநெளியான அமெரிக்கன் கிராப், கூடவே வெள்ளி வெற்றிலைப் பெட்டியை ஏந்திய ஒரு எடுபிடியு டன் - பளிச்சென்று புத்தம் புதிது போலத் தோற்றமளிக்கும் ரேக்ளாக் குதிரை வண்டியைக் கடகடவென ஓட்டியபடியபடி தான் வருவான். வடக்குத் தெருவுக்கு அந்த ரேக்ளா முரட்டு ஆவேசத்துடன் ஓடி நுழைகையில், தெருவில் திரியும் கோழிகளும் பன்றிகளும் கிறீச்சிட்டுப் புறம் ஓடும். சிறு பிள்ளைகளும் பெண்களும் இந்த பந்தாவில் சற்று மனம் பறிகுடுப்பார்கள். ஆனால் ரெங்கம் இதற்கெல்லாம் மயங்கி விடவில்லை.

தடபுடலாக அவளது சாந்தி முகூர்த்தம் நடந்தேறியது. சோபன அறைக்கு வேண்டிய இரட்டைக்கட்டில், மெத்தை, அலமாரி எல்லாம் ராஜக்கண்ணு ஏற்பாட்டில் வண்டியில் வந்து இறங்கின. அப்போதைய நடைமு¨றைப்படி நல்ல முகூர்த்த நாளில் உற்றார் உறவினர் முன்னிலையில் கெட்டி மேளம் முழங்க ரெஙகத்தின் கையைப் பிடித்து அழைத்து, சோபன அறைக்குள் நுழைந்தான் ராஜக்காண்ணு. ரெங்கம் உடம்பை அவன் வசம் விட்டுவிட்டு மனதைக் கோபுவிடம் தொடர விட்டாள்.

எல்லோருக்கும் அது தெரிந்த விஷயந்தான். ஆனால் நாளடைவில் சரியாகிவிடும் என்று எண்ணினார்கள். ஆனால் இலைமறைவு காய்மறைவாய் அதுவரை இருந்து வந்த காதலர் சந்திப்பு அதற்குப் பிறகு போகப்போக வெளிப்படையாகவே அதிகரிக்கலாயிற்று. ராஜக்கண்ணு ஊரில் இல்லாத நாட்களில் கோபுவைத் தேடி ரெங்கம் இரவில் குறிப்பிட்ட இடத்துக்கு வருவதும் பாதி ராத்திரியில் திரும்புவதும் தொடர்ந்தது. ஊரில் 'கிசு கிசு' வளர்ந்து சுவற்றில் இவர்கள் காதல் ரகசியத்தை எழுதும் அளவுக்குப் போயிற்று.

தாமதமாகத்தான் ராஜாக்கண்ணுவுக்கு விஷயம் தெரிந்தது. நல்லதனமாக ஆரம்பித்து புத்திமதிபோல ரெங்கத்தைக் கண்டித்தான். அவள் ஒன்றும் எதிர்த்தோ மறுத்தோ பேசவில்லை. 'இப்போதைக்கு இது போதும்' என்று அதிகம் மிரட்டாமல் விட்டான். ஆனால் தொடர்பு நிற்பதாகத் தெரியவில்லை. பிறகு மிரட்டி, உருட்டிப் பார்த்தான். ஊகூம், ரெங்கத்தின் போக்கில் மாற்றமில்லை. ஆனால் இப்போதும் அவள் மறுப்பு, எதிர்ப்பு எதுவும் காட்டவில்லை.

வாய்ப்பேச்சால் பலனில்லை என்றதும் அடி உதை என்று ஆரம்பித்தான். அப்போதுதான் ரெங்கம் எதிர்க்க ஆரம்பித்தாள். நேரடியாகவே "நா என்ன ஒனக்குத் தாலி கட்டின பொண்டாட்டியா? நா தேவடியா, யார்கூட வேணுமானாலும் போவேன்.

நீ அதக் கேக்க முடியாது!" அவள் சீற ஆரம்பித்ததும் ராஜக்கண்ணு அவளிடம் நேருக்கு நேராகப் பேசுவதை விட்டு, அவளுடைய பெரியம்மாக்காள், உறவினர்களிடம் சொல்லித் தடுக்க முயற்சித்தான். யார் பேச்சையும் ரெங்கம் கேட்பதாக இல்லை.

மேலும் ராஜக்கண்ணுவுக்கு உள்ளூரில் அவ்வளவாக செல்வாக்கும் இல்லை.

நியாய அநியாயம் பார்க்காமல் ஊர்க்காரர்கள் உள்ளூர் விசுவாசியாக இருந்தார்கள். விதேசி மோகம் எல்லாம் வெள்ளைக்காரனிடம் மட்டும்தான் இருந்தது. "அவ சொல்றதும் ஞாயம்தானே? இவுரு சாந்தி முகூர்த்தம் பண்ணி வச்சுட்டாருன்னு இவுருக்கே சொந்தமாயிடுவாளா? அவ கோயிலுக்குப் பொட்டுக் கட்டினவ. அவ காசு குடுக்குற எவங்கிட்டியும் போவாதான்!" என்று நரிப் பஞ்சாயத்துப் பேசினார்கள்.

ஆனால் காசு இங்கு பிரச்சினை இல்லையே? ராஜக்கண்ணு அதில் சுணக்கம் காட்டியவன் இல்லை. அத்தோடு ரெங்கமும் காசுக்காக கோபுவிடம் போகவும் இல்லை. அவளுக்கு கோபுவிடம் பால்யத்தில் ஏற்பட்டுவிட்ட மோகம் தான் இதற்குக் காரணம். அதை ராஜக்கண்ணுவால் தடுக்க முடியாது.

மிகவும் யோசித்து ராஜக்கண்ணு வேறு உக்தியைக் கையாள முடிவு செய்தான். 'எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுதானே ஆக வேண்டும்?'

(தொடரும்)

Friday, June 01, 2007

கால நதிக்கரையில்... - 8

பள்ளிக்கூடத்திலேயே அப்போது ரெங்கம்மா தான் வயதில் மூத்தவள். அவள் ஒருத்திதான் பெண்களில் தாவணி போட்டுக் கொண்டிருந்தவள். கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறமாதியான தோற்றம். ஒடிசலாக, மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதலாக - மற்றப் பெண்களுக்கு சற்று அழகுதான். அவள் மட்டும் எப்படி அழகாகத் தெரிகிறாள் என்று சிதம்பரம் நினைப்ப துண்டு. அப்போதெல்லாம் எதிர் வீட்டுத் தொந்தி மாமா சொல்லும் பழமொழி ஞாபகத்துக்கு வரும். இயல்பான ஒன்றை யாராவது வியந்து சொன்னால் அவர் சொல்வார்; "ஆமாம்! 'தேவிடியா ஊட்டுப் பொண்ணு அழகா இருக்கா'ன்னு சொல்ற மாதிரிதான்!"

அவளது கவர்ச்சி காரணமாகவும், அவள் தாசி வீட்டுப் பெண் என்பதாலும் மூத்த பையன்கள் பலருக்கு அவள் மீது ஒரு கண். ஆனால் அவள் யாரையும் சட்டை செய்ய மாட்டாள். அவளுக்கும் ஒருவர் மீது அந்த வயதிலேயே ஈடுபாடு இருந்தது வெகு தாமதமாகத்தான் மற்றவர்களுக்குத் தெரிந்தது.

ரெங்கம்மாவின் அம்மா, பாட்டி எல்லோருமே உள்ளூர் சிவன் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிக் கொண்டவர்கள்தாம். சிறுவயதிலேயே பொட்டுக் கட்டிக் கொள்வ தும் பின்னர் வயதுக்கு வந்ததும், யாராவது உள்ளூர் அல்லது வெளியூர் மைனர் அவளுக்கு சாந்தி முகூர்த்தம் செய்து, வைத்துக் கொள்வதும் வழக்கமாக இருந்தது. அந்த சாந்தி முகூர்த்தம் ஊரைக் கூட்டி மேளதாளத்தோடு ஒரு திருமணம் போலவே - அதனால்தான் அதையும் 'முகூர்த்தம்' என்றார்களோ என்னவோ - நடப்பதும் ரெங்கம்மாவுக்கு அப்படி நடந்த போது பார்த்ததில் சிதம்பரத்துக்குத் தெரிந்திருந்தது. ஆனால் பெண்ணின் உற்றார் உறவினர்தான் அதற்குக் கூடுவார்கள். மற்றவர்கள் போவதில்லை.

அழகும் இளமையும் இருக்கும்வரை தனி ஒருவனின் அனுபோக பாத்தியதையாய் - கொத்தடிமையாய் இருப்பதும் பிறகு அவன் கைவிட்டால் சுயமாகத் தொழில் செய்வதும் நடைமுறைதான்.

இந்த ரெங்கம்மாவின் பெரியம்மாக்களில் ஒருத்தியான 'பவுனு' என்கிற பவுனம்பாளை சிதம்பரத்தின் பெரியப்பா பராமரித்து வந்தது சிதம்பரத்துக்கு நினைவிருக்கிறது. அப்போது அவர் சின்னப் பையன். பின்னாளில் தொந்தி மாமா அது பற்றிக் கதைகதையாய்ச் சொல்லியிருக்கிறார். பவுனுக்கு மூத்தவளான சுந்தரத்தை பெரியப்பாதான் முதலில் சாந்தி முகூர்த்தம் செய்து பராமரித்து வந்ததாகவும் பிறகு பவுனு வயதுக்கு வந்ததும் அக்காவை விட்டுவிட்டுத் தங்கையையும் சாந்தி முகூர்த்தம் செய்து கொண்டதையும் தொந்தி மாமா சொல்லிக் கேட்டிருக்கிறார். அந்தக் குடும்பம் முழுதையும் பெரியப்பாதான் பராமரித்து வந்திருக்கிறார்.

பெரியப்பாவின் ஆளுமையை சிதம்பரம் நேரில் அறிந்துகொண்டது கொஞ்சம்தான். அவரது ஊர் ஆளுமை பற்றியும் தாசி ஆளுமை பற்றியும் தொந்தி மாமா நிறையச் சொல்லி இருக்கிறார்.

பெரியப்பா பெரிய முன்கோபி. முரட்டுத்தனமும் முகம் கொடுத்து பிறர் சொல்வதைக் கேட்காத முரட்டுக் குணமும் காரணமாய், அவரை நெருங்கி யாரும் பேச அச்சப்படுவார்கள். யார் வீட்டுக்கும் போவதைக் கௌரவக் குறைவாகக் கருதுபவர்.

யார் வீட்டுத் திண்ணையிலும் அவர் உட்கார்ந்ததில்லை. நெஞ்சு வரை உயர்த்திக் கட்டிக் கீழே கணுக்காலுக்குச் சற்று மேலேறி நிற்கும் நாலுமுழ வேட்டியும், எலும்புகள் தெரியும் மார்புக்கூட்டின் நடுவிலான குழிவில் சந்தனப்பொட்டும், நெற்றியில் திருநீரும், தோளில் தொங்கும் சாதா ஈரிழைத் துண்டுமாய் அவர் தெருவோடு நடந்து போனால், திண்ணைகள் மீதும், தெரு நடைகளிலும் உட்கார்ந்திருக்கிற ஆணும் பெண்ணும் அச்சத்துடன் கூடிய மரியாதையுடன் எழுந்து நிற்பார்கள். பெரியப்பா யாரையும் நிமிர்ந்தோ திரும்பியோ பார்ப்பதில்லை. ஒரு சிங்கத்தின் பிடரி போல பின் கழுத்தில் படர்ந்து தொங்கும் குட்டை முடியை உதறி, இடது கைவிரல்களால் சிக்கெடுத்தபடி வலதுகையில் சுருட்டு புகைய நிமிர்ந்த தலையுடன் நடந்து போவார்.

ஊர்ப் பெரிய தனக்காரர் என்பதால் 'உஷார்க் கமிட்டி' என்கிற அரசாங்கம் அந்தக் காலத்தில் ஊர்க் காரியங்களைக் கவனிக்க உருவாக்கிய அமைப்பின் தலைவர் அவர்தான். ஊரில் நடக்கும் திருட்டு புரட்டு, அடிதடி, வம்பு வழக்கு எல்லாவற்றிற்கும் அவர்தான் நீதிபதி. அவரது பேச்சுக்கு எதிர்ப் பேச்சுக் கிடையாது. கண்டிப்பும் கறாருமான மனிதர்.

வீட்டிலும் அதே அதிகாரம் தான். பெரியம்மா எதிரே நின்றுபேசி வீட்டில், யாரும் பார்த்ததில்லை. பிள்ளைகள் எதிரே வரவே முடியாது. அப்பாவுக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. ஆனால் தம்பி பிள்ளைகளிடம் சமயங்களில் பேசுவதுண்டு, அதிலும் சிதம்பரத்தை அதிகமும் அழைப்பதுண்டு. அதுவும் பெரியம்மாவிடம் கேட்டு சுருட்டும் நெருப்புப் பெட்டியும் வாங்கி வரச் சொன்னதே அதிகம். பெரியம்மாவிடம் முகம் கொடுத்துப் பேசாத இவருக்கு எப்படி ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள் என்று அந்த நாளில் சிதம்பரம் நினைத்ததுண்டு.

பகலில் யாரையும் மதித்து, யார் வீட்டுப் படியையும் மிதிக்காதவர் - ஊர் அடங்கிய பிறகு, இரண்டுதெரு தாண்டி வடக்குத் தெருவுக்கு தாசி பவுனு வீட்டுக்குப் போவதைத் தெருவில் அனேகரும் பார்த்திருப்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்? ஆனால் அதெல்லாம் அப்போது பெரிய மனிதர்களுக்கு வாடிக்கைதான் என்பதால் பெரியப்பா ஒருநாளும் அதற்காக வெட்கப்பட்டிருக்க மாட்டார் என்றே சிதம்பரத்துக்குத் தோன்றும்.

பெரியப்பா தாசி வீட்டுக்குப் போவது பற்றி தொந்திமாமா சொல்வார்:

"உங்கப் பெரியப்பா பகல்லே அந்தத் தெருவுக்குப் போனவரில்லே. மோளக்காரத் தெருன்னு கவுரவம் பாப்பாரு. ஆனா தேவிடியா ஊட்டுக்கு போறப்ப மட்டும் கவுரவம் பாக்குறதில்ல. ராத்திரி சாப்புட்டுட்டு ஊரு அரவம் அடங்குனப்பறம் போவாரு. அப்பன்காரன் அப்பாவு முதலி வாசத் திண்ணையிலே காத்துக் கிட்டுருப்பான். இவரு படியேறினதும் மரியாதையா எழிந்திருச்சி, உள்ளே தலையை நீட்டி, 'பாப்பா! பெரிய புள்ள வந்திருக்காங்க' என்று சன்னக் குரல்லே சொல்லிட்டுக் கதவைத் தொறந்து விடுவான். இவுரு மெதப்பா நடந்து உள்ளே போவாரு. பவுனு கதவச் சாத்திக்குவா. அவரு ஊடு திரும்புற வரைக்கும் அப்பன்காரன் தெருத் திண்ணையிலே காவக்காரன் மாதிரி படுத்திருப்பான். அண்ட அயல்லே இருக்குறவங்க பாத்துச் சொன்னதுதான். நாம எங்கே பின்னாலியே போய்ப் பாக்க முடியுமா?"

அந்த பவுனம்மாவுக்கு பெரியப்பா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அது வளர்ந்து பெரிய பையனான பின்னும், பெரியப்பா வீட்டுக்கு வந்ததில்லை. சிதம்பரம் பள்ளிச் சிறுவனாக இருக்கும் போது அந்தப் பையன் வாலிபனாகி தோற்றத்தில் பெரியப்பா போலவே இருந்தார். பெரியப்பா தாலி கட்டிய மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளைவிட அவர்தான் அச்சு அசலாக, பார்த்ததுமே இன்னார் பிள்ளை என்று சொல்லிவிடும்படி இருந்தார். பெரியப்பா போலவே சற்றுக் கூனலாய், நெஞ்சு எலும்புக் கூட்டுக்கு மத்தியில் குழியும் அதில் சந்தனப் பொட்டும், கழுத்துக் கண்டத்தின் துறுத்தல், பின் கழுத்தில் பிடரியில் தொங்கும் தலைமுடி, நெற்றியில் விபூதி - என்று அவர் நடந்து வந்தால் பெரியப்பாதானோ என்று சந்தேகம் வந்து விடும். ஆனால் பெரியப்பா காலமாகும் வரை அவர் இந்த வீட்டுக்கு வந்ததில்லை. பிறகுதான் வந்துபோய் அண்ணன், தம்பி, தங்கை என்று பெரியப்பா பிள்ளைகளிடம் உறவு கொண்டாடி பெரியம்மாவும் பிள்ளைபோல அங்கீகரித்து நெருக்கமானார். ஆனாலும் அவர் தன் அம்மாவுடன்தான் இருந்தார்.

''அந்த சுந்தரத்துக்கும் பவுனுக்கும் அடுத்து தங்கம்மான்னு ஒருத்தி இருந்தா. அவளோட மவதான் ரங்கம்மா. இவ பொறந்ததுமே அம்மாக்காரி செத்துப்போக பெரியம்மாக்காரிவ தான் வளத்து ஆளாக்கி தங்கள மாதிரியே சிவங்கோயிலுக்கு பொட்டுக் கட்டி வச்சாளுவ" என்று மாமா ரங்கம்மா பற்றி சொல்லியிருக்கிறார்.

வயதுக்கு வராததால், அதுவரை பள்ளிக்குப் பெரியம்மாக்கள் அவளை அனுப்பி படிக்க வைத்தார்கள். வயதுக்கு வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு சாந்திமுகூர்த்தத் துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

(தொடரும்)

கால நதிக்கரையில் ... - 7

விளையாட்டுத் திடலைத் தாண்டியதும், ஏதோ இதுவரை போயிராத புதிய வழியில் போகிற மாதிரியான உணர்வு ஏற்பட்டது. ஏதோ மாற்றம் தெரிந்தது. அது என்ன?

சற்றே நிதானித்து யோசித்தபின்தான் அந்தப் புதிர் விடுபட்டது. திடல் முடிகிற இடத்திலிருந்து கூப்பிடுதொலைவுக்கு ஒரு நீண்ட வாய்க்கால் போன்ற நீர்ப்பரப்பு இருக்குமே- அது இல்லை!

பாதைக்கு வலப்பக்கத்தில் இருந்த பெரிய பாசன ஏரியிலிருந்து நீர், பாதையைக் கடந்து கீழ்ப்பக்கத்து நிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர், மதகு அமைத்து குழாய் வழியாக பாதையைக் கடக்க ஏற்பாடு செய்யாததால் சாலை முழுதுமே வாய்க்காலாகி, ஊர்முனை வரை ஒரே நீர்ப்பரப்பாகி கடப்பவர்கள் காலம்காலமாய் அவஸ்தைப்படுகிற இடம் அது. எப்போதும் முழங்காலளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். வேட்டியை அல்லது புடவையை முழங்கால் வரை உயர்த்திப் பிடித்தபடி அவ்வளவு தொலைவும் நீந்தாத குறையாய் மக்கள் சிரமப்பட்டே கடந்து வந்தார்கள். குழந்தைக¨ளைத் தூக்கிக் கொண்டோ அல்லது வண்டியில் வைத்தோதான் அழைத்துச் செல்லவேண்டும். சைக்கிள்காரர்கள் பளுதூக்குகிறவர்கள் போல இரண்டு கைகளாலும் சைக்கிளை தலைக்கு மேலே உயர்த்தி தூக்கிப் பிடித்தபடியேதான் செல்லவேண்டும். சிதம்பரமே அந்த அவஸ்தையை அவருக்கு வினவுதெரிந்த நாளாய் அனுபவித்திருக்கிறார்.

ஆனால் ஊரில் பணக்காரர்களும் அறிவார்ந்தவர்களும் இருந்தும், அத்தனை ஆண்டுகளாய் யாருக்கும் மாற்று யோசனை ஏன் தோன்றாது போயிற்று? ஊரில் அதிகம் படித்து மக்களுக்கு வழிகாட்டியாய் விளங்கிய அப்பாவுக்கும், சமூக சேவையில் ஈடுபட்ட அண்ணனுக்கும்கூட ஏன் அதில் கவனம் செல்லவில்லை? சாலைகளைப் பராமரிக்கும் அரசுத்துறை அத்தனை ஆண்டுகளய் இந்தப் பக்கமே வந்ததில்லையா? இப்போதுதான் சிதம்பரம் அதை எண்ணிப் பார்க்கிறார்.

இப்போது ஊருக்குப் பஞ்சாயத்து வந்திருக்கிறது. அதன் காரணமாய் இப்போது சாலையை உயர்த்தி, மதகு கட்டி குழாய் அமைத்து - நீர் அடக்கமாய் வெளியேறச் செய்திருக்கிறார்கள். அதனால்தான் முன்னேறிச் செல்ல பழைய ஆயாசம் ஏற்படவில்லை.

வாய்க்காலின்- அந்த முனையில் தெருக்கள் தொடங்குமிடத்தில், ஏரிக் கரையின்மீது ஒரு பெரிய அடர்ந்த அத்திமரம் இருந்ததே- அதை நோக்கி நடந்தார்.

அத்திமரத்தடியில் எப்போதும் சிறுவர் கூட்டம் இருக்கும். மங்கிய பவழத்தின் நிறத்தில் பெரிது பெரிதாக உதிர்ந்து கிடக்கும் அத்திப் பழங்களை ஆவலுடன் பொறுக்கிப் பிட்டுப் பார்த்தால் உள்ளே சின்னச் சின்னக் கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். அரிதாக ஒன்றிரண்டு தேறினால் அதிர்ஷ்டம்! கொசு மொய்த்தாலும் ஊதி விட்டுத் தின்கிறவர்களும் இருந்தார்கள்.

இப்போது அதற்கும் வாய்ப்பில்லை போலிக்கிறது. அந்த அத்தி மரம் இருந்த இடத்தில் நாலைந்து கட்சிக் கொடிகள், உயரத்தில் போட்டிபோட்டுக் கொண்டு நின்றன. அத்திமரம் முன்பு பார்த்த ஆல, இலுப்பை மரங்களைப் போல கால வெள்ளத்தில் தானாகச் சாய்ந்ததோ அல்லது விளையாட்டுத் திடல் போல கட்சிக் கொடிகளுக்காகக் காலி செய்யப்பட்டதோ? ஒவ்வொரு இடமும் ஊரின் பழைய அழகுகளை ஒவ்வொன்றாய் இழந்து போயிருப்பதைக் காட்டியது.

கொடிக்கம்பங்களை நிமிர்ந்து பார்த்தார். 'அட! நம்மூரில் இத்தனை கட்சிகளா? பஞ்சாயத்து வரும்வரை எங்கும் சாதி, மத, இனக் குழுக்களின் ஆதிக்கம் இருந்ததில்லை. திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் பெற்ற பிறகு அவை கிராமங்களிலும் நுழைந்து இளம் தலைமுறையினரைக் கட்சி கட்டச் செய்திருக்கிறது. அதற்கு நம்மூர் மட்டும் எப்படி இலக்காகாமல் இருக்கமுடியும்?' என்று சிந்தனை ஒடியது.

அத்திமரத்துக்கு எதிரில்தான் ஊர்த் தொடக்கத்தின் முதல் தெருவான வடக்குத் தெரு இருக்கிறது. அத்தெருவின் முதல் வீட்டின் முன்னால் கயிற்றுக் கட்டில் போட்டு ஆதிமூல முதலி உட்கார்ந்திருப்பார். இந்த ஊரின் 'மாட்டு வைத்தியர் அவர். இந்த வட்டாரத்துக்கே மாடு வாங்கவும், விற்கவும், நோய்ப்பட்டால் வைத்தியம் பார்க் கவும் பிரசித்திபெற்றவர். ஊருக்குள் நுழைகிற எவரும் அவர் பார்வையிலிருந்தும் விசாரிப்பிலிருந்தும் தப்பி விடமுடியாது. சிதம்பரம் வெளியூருக்குப் படிக்கப்போய் விடுமுறைகளில் வீடு திரும்பும்போது அவர் நிறுத்தி குசலம் விசாரிக்காமல் விட்டதில்லை. .

இப்போதும் அவர் தன்னை விசாரிக்க மாட்டாரா என்று இருந்தது சிதம்பரத்துக்கு. ஆனால் அது அசட்டு எதிர்பார்ப்பு என்று அவருக்குத் தெரிந்தே இருந்தது. அந்தக் காலத்திலேயே- இவர் சிறுவனாய் இருந்தபோதே அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். இப்போது கால விருட்சங்களே காணாது போய்விட்ட நிலையில் அவர் மட்டும் சிரஞ்சீவியாய் இருப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? இவர் போல ஊருக்குள் இன்னும் எத்தனைபேர் மறைந்து விட்டார்களோ? இவரை அடையாளம் காண மூத்த தலை எதுவும் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். இவர் வயது ஆட்கள் யாராவது இருந்து அடையாளம் கண்டு பேசினால்தான் உண்டு.

கொடிக் கம்பங்களின் பக்கத்தில் இருந்த படிகள் வழியே ஏறி, ஏரிக்கரையின் மீது நின்றார். ஏரியிலும் பெரும் மாறுதல் தெரிந்தது. கண்ணுக்கு எட்டியவரை கடல் நீல- நீர்ப்பரப்பால் விரவி, உள்கரையில் அலைவாரி கட்டப்பட்டு சின்னக் கடல் போன்ற பரப்பில் அலைகள் கரை நோக்கி வந்து 'சளார் சளார்' என அதில் மோதி சிலிர்ப்பை உண்டாக்குமே அது எங்கே? நீர் அனேகமாக வற்றி ஆங்காங்கே சின்னச் சின்னக் குட்டைகளாய்த் தேங்கி அந்தப் பெரிய ஏரி அழகிழந்து நிற்கிறது. அக்கரையில் அடர்ந்து செழித்து, இந்த ஊரின் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாய் இருந்த பெரிய விழல்காட்டைக் காணோம். அவை இருந்த இடமெல்லாம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சாகுபடி செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

ஏரியின் கரைதான் எவ்வளவு அகலமாய் இருந்தது? ஒரு வண்டி போகிற அளவுக்கு அகலமாய் இருந்த கரை இப்போது குடிசைகளால் நிரம்பி நடக்கவே இடமில்லாதபடி ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. பாசன வசதியைப் பாழ்படுத்துவதில் அனைவருமே மும்மரமாய் ஈடுபட்டிருக்கிற மாதிரி தெரிந்தது. மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையோ? இது எதனால்? மக்கள் பெருக்கமா? அல்லது மனிதர்களின் சுயக்கட்டுப்பாடு இழப்பின் பிரதிபலிப்பா?

பெருமூச்சுவிட்டபடி திரும்பி, படி இறங்கி கடைசிப் படியில் நின்றபடி வடக்குத் தெருவை ஒரு கண்ணோட்டம் விட்டார். குடிசைகளே அதிகமும் நிரம்பி, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஆடோ, பன்றியோ, கோழியோ மேய்ந்தபடி, ஈரக்கசிவும் குப்பைகளும் நிரம்பி நடக்கவே கூசும் தெரு, இப்போது பளிச் சென்று- தெரு நெடுக சிமிண்ட்சாலை போடப்பட்டு குடிசைகள் குறைந்து ஓட்டு வீடுகளும் மச்சு வீடுகளுமாய் கண்ணுக்கு நிறைவாய் இருந்தது. பஞ்சாயத்து வந்ததின் பலன் போலிருக்கிறது!

சிறுபிள்ளையாய் இருந்தபோது இந்தத் தெருவுக்குப் போகவே அம்மா விடமாட்டார்கள். அதிகமும் இசைவேளாள சாதியினர் வசித்த இத்தெருவில் மேல் சாதிக் காரர்கள் நடமாடுவதில்லை. அத்திமரத்தடியில் நின்றபடியே அத்தெருவில் யாரிடமாவது வேலை இருந்தால் அழைத்துப் பேசுவது தானே வழக்கம்?

கௌரவமானவர்கள் அத்தெருவுக்குச் செல்லாதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அந்தத் தெரு தாசிகள் தெருவாக வெகுநாட்கள் இருந்திருக்கிறது. 'தேவடியாத்தெரு' என்று கொச்சையாய் அழைத்திருக்கிறார்கள். இசைவேளாளர்கள் வீடுகளில் பெண்களை சிவன் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விடுகிற பழக்கம் இருந்தது. எல்லா வீடுகளிலும் என்றில்லாவிட்டாலும் பரம்பரையாய் சில வீடுகளில் தொடர்ந்து இப்படிப் பெண்களை ஆண்டவனுக்கு அடியார்களாக்கி இருக்கிறார்கள். அதனால் 'தேவரடியார்' என்று அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் அது 'தேவடியாள்' என்று ஆகி விட்டது.

சிதம்பரம் சிறு பிள்ளையாய் இருக்கையில் அந்த ஊரில் பரம்பரையாய் மூன்று வீடுகளே இந்தத் தேவதாசிகள் கொண்டதாக இருந்தது. அவர் படித்த போது அவருக்கு மேல் வகுப்பில் படித்த ரெங்கம்மா என்ற ஒருத்தி, பரம்பரைத் தேவதாசி வீட்டிலிருந்து ஐந்து வயதிலேயே பொட்டுக்கட்டப் பட்டவள். அப்போது அவளுக்கு ஒன்பது வயது இருக்கும். சிதம்பரம் வகுப்பில் படித்த ஒருத்தி - பொன்னம்மா என்பவள் - புதிய குடும்பம் ஒன்றிலிருந்து பொட்டுக்கட்டப் பட்டது அவருக்கு நினைவிருக்கிறது. அவளுக்கு அப்பா அம்மா இருந்தார்கள். ரெங்கம்மாவுக்கு அம்மாதான் உண்டு; அப்பா யாரென்று தெரியாது. பொன்னம்மா குடும்பம் மிக ஏழ்மையானது. அவள் அப்பா சிவன் கோவிலில் மெய்காவல் வேலை பார்த்தார். அவள் அம்மா வீடுகளில் வேலை செய்து கொண்டிருந்தாள். பரம்பரையாக தாசித்தொழிலில் அவர்கள் குடும்பம் இல்லாதிருந்த போதும் வறுமை காரணமாக பெண்ணாவது கூலி வேலை செய்யவேண்டாம் என்று கருதி அவளை சிவன் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டார்கள். அவளுக்குப் பிறகு வேறு யாரும் அவருக்கு வினா தெரிந்த பிறகு பொட்டுக்கட்டிக் கொள்ளவில்லை. இப்பொது அந்த வழக்கம் முற்றிலும் அற்றுப் போயிருக்கலாம். இப்போது அந்தத் தெருவைத் தாசித்தெரு என்று சொல்லவோ அத்தெருவுக்குச் செல்லக் கூச்சப் படவோ அவசியம் இருக்காது என்று தோன்றியது.

அவருக்கு மேல் வகுப்பில் படித்த ரெங்கம்மாவைப் பற்றி சிந்தனை ஓடியது. அதைச் சிந்தித்தபடியே அங்கிருந்து நகர்ந்து மெல்ல நடை போட்டார்.

(தொடரும்)

கால நதிக்கரையில்... - 6

சின்ன வயதிலிருந்தே அவருக்கு இந்தக் குளம் பிடித்தமானது. அந்தக் குளத்தின் அழகும் அமைதியும் அவரை அங்கே அடிக்கடி தேடி வரச் செய்திருக்கிறது.

பச்சை வட்டத் தகடுகள் போல மிதக்கும் அல்லி இலைகளும், நீர்ப்பாம்பு தலை நீட்டுகிறமாதிரித் தெரியும் அல்லி மொக்குகளும், அடுத்தடுத்து வெள்ளி நட்சத்திரங்களாய்ச் சிரிக்கும் அல்லி மலர்களும் , அடித்தண்டு வரை ஆழம் காட்டும் கருமையான நீரும், மணற்பாங்கான தரையும் வேறு எந்தக் குளத்திலும் காண முடியாதது. அதன் தண்ணீருக்கு ஒரு அலாதியான குளிர்ச்சி. குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த மாதிரி 'சிலீர்' என்ற ஜில்லிப்பு. அந்த நீரின் ருசி கூட வித்தியசமானது. ஊர் முழுதும் குடி நீருக்கு இதிலிருந்துதான் எடுத்துப் போவார்கள்.

'ஸ்படிகம்' போன்ற அதன் தெளிவான நீர்ப் பரப்பு வழியோடு போகிற எவரையும் ஒருகணம் இழுத்து நிறுத்தும். நீரில் இறங்கி ஒரு வாயாவது எடுத்து அருந்தாமல் எவரும் செல்ல முடியாது. அந்தக் குளத்தைப் பார்ப்பதே ஒரு சுகம்!

இப்பொது அந்த அழகின் தரிசனம் கிட்டாதபடி முழுதுமாய் மறைத்து ஆக்கிரமித்துக் குடிசைகள் கட்டி இருக்கிறார்களே! நல்ல வே¨ளை, நகரங் களைப் போல குளத்தையே தூர்த்து மேடாக்கிக் குடிசைகட்டாது விட்டார்களே! அழகை மறைத்துக் கட்டுவதும் ஒருவகையில் அந்தக் குளத்தை அழிப்பது போல் தானே!

ஒரு சில சிவப்புத் தாமரைகளும் அங்கே தென்பட்டதுண்டு. அவற்றினூடே நீர்க்கோழிகள் புகுந்து நீந்தி விளையாடுவதும், 'குபுக்'கென முழ்கி வேறொரு இடத்தில் அவை தலை நீட்டுவதும் சிறு வயதில் அவருக்குத் தெவிட்டாத காட்சிகள். நீளமான அல்லித்தண்டை ஒடித்தெடுத்து ஒருமுனையை நீரில் போட்டு மறுமுனையை வாயில் வைத்து நீரை உறிஞ்சுகையில் 'சிலீரெ'ன்று அடித்தொண்டையில் குளிர்ந்த நீர் சிலிர்க்குமே அந்த அனுபவம் இனி எங்கே கிட்டும்?

இழப்பின் தாக்கம் நெஞ்சை வருத்த மேலே நடக்கிறார்.

குளம் முடிகிறவரை அதை முழுமையாக அவரால் பார்க்க முடியவில்லை. கடைசிக் குடிசை வந்ததும் அதன் சுவரை ஒட்டி நடந்து போய்க் குளத்தைப் பார்க்க முயன்றார். ஒரே கோரையும் புல்லும் பாசியும் அடர்ந்து - குளமாகவே தெரியவில்லை.

இந்தக் குளக்கரையை ஒட்டி ஒரு சின்னத்திடல் இருந்ததே! அதைக் காணோமே! அந்த இடத்தில் ஒரு சின்ன நஞ்சைப் பகுதி தெரிந்தது. நீர் மட்டத்தைவிட உயரமாக இருந்த அந்த இடம் ஒரு கைப்பந்து விளையாட்டுத் திடலாக இருந்தது. அதை இப்போது மண்ணெடுத்து ஆழமாக்கி நஞ்சையாக்கி இருக்கிறார்கள். கோயில் குளத்தையே தூர்த்து நிலமாக்கியவர்களுக்கு இந்தப் புறம்போக்கு இடத்தைத்தானா அபகரிக்க முடியாது?

இத்திடலுக்கு இந்த ஊரின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு இருந்தது. எல்லா ஊரையும் போல இந்த ஊர் இளைஞர்களும் வழிகாட்டுவார் இன்றி, சீட்டாடியும் வம்பு வழக்கில் ஈடுபட்டும் சீரழிந்து கொண்டிருந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சின்ன அண்ணன் இவர்களைத் தடம் மாற்றிஆரோக்கியமான பொழுது போக்கில் ஈடுபடுத்தினார்.

அப்பாவைப் போலவே சின்னண்ணனும் பொது மக்களிடம் சுமுகமான, நம்பிக்கைக்குரிய உறவை வளர்த்துக் கொண்டிருந்தார். சோம்பிச் சுற்றிவந்த இளைஞர்களை - அவர் கோடை விடுமுறையில் வந்திருந்தபோது ஒருநாள் இரவு கூட்டிப் பேசி, வேலையில்லாத நாட்களை வீணே சீட்டாட்டத்தில் செலவழிக்காமல் பயனுள்ள வழியில் செலவிட 'பாரதி கைப் பந்துக் கழகம்' என்ற ஒன்றை உருவாக்கி அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தினார். யார் பேச்சுக்கும் கட்டுப் படாத அவர்கள் அண்ணன் பேச்சுக்கு அடங்கி அதை ஏற்றுக் கொண்டார்கள். வாலிபர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர் பலரும் அக் கழகத்தில் உறுப்பினர் ஆனார்கள். ஊரின் ஓரத்தில் இருந்த இந்தப் புறம்போக்கு இடத்தில் களம் அமைத்து, கால்கள் நட்டு, வலை பந்து எல்லாம் வாங்கி ஒரு நல்ல நாளில் ஊர்ப் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் கைப்பந்து விளையாட்டு துவக்கப் பட்டது. அண்ணனேதான் அவர்களுக்கு அந்த விளையாட்டின் ஆசானாகவும் இருந்தார். வெட்டிப் பேச்சும், வீண்வம்பும், சீட்டாட்டமும் ஒழிந்து உருப்படியான விளையாட்டில் இளைஞர்களின் கவனம் திரும்பியதில் பெரியவர்களுக்கெல்லாம் மெத்த மகிழ்ச்சி.

கோடை விடுமுறை முடிந்து அண்ணன் கல்லூரி திரும்பிய பின்னும் ஒரு ஆண்டுக்கு மேலாக மாலை வேளையில் ஆர்வமுடன் இளைஞர்கள் விளையாடி வந்தார்கள். அண்ணன் படிப்பு முடிந்து கோயம்புத்தூருக்கு - அடிக்கடி வரமுடியாதபடி - வேலைக்குச் சென்ற பிறகுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வமிழக்கப்பட்டு ஒரு நாள் நின்று போனது. ஊர் இளைஞர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய அந்த இடம்தான் இப்போது அந்த விளையாட்டைப் போலவே காணாமல் போய்விட்டது!

விளையாட்டுக் கழகம் அமைத்த சூட்டோடு அண்ணன் பெரியவர்களையும் ஈடுபடுத்த 'பாரதி தமிழ்க் கழகம்' என்ற ஒன்றையும் உருவாக்கி அதன் சார்பாக ஒரு படிப்பகம் ஒன்றையும் ஊர்ச்சாவடியில் தொடங்கச் செய்தார். அப்பாவுக்கு வரும் தினமணி மற்றும் இதர பத்திரிகைகளையும் அதில் போட்டு படிக்கத் தூண்டினார். உயர்நிலைப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த சிதம்பரம் போன்ற மாணவர்களை செய்திக¨ளைப் படித்துக்காட்டச் செய்தார். ஊர் மக்களும் ஆர்வமுடன் ஒழிந்த போதெல்லாம் வந்து கேட்டார்கள்.

தொடங்கி ஒரு ஆண்டு கழிந்ததும் ஆண்டு விழா நடத்தியபோது அது ஊர்த் திருவிழா போல மக்களிடம் ஒரு மலர்ச்சியை உண்டு பண்ணியது. கோயில் திருவிழாவில் காட்டும் உற்சாகத்தை இந்த ஆண்டு விழாவிலும் எல்லோரும் காட்டினார்கள். ஊர்த் திருவிழாவிற்கு தலைக்கட்டு வரி தருகிற மாதிரி, முகம் சுணங்காமல் இதற்கும் கொடுத்தார்கள். பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தினார் கள். கோயில் விழா போல ஒரு தமிழ்ச் சங்கக் கூட்டத்தை மக்கள் ஒத்துழைப் போடு கோலாகலமாகக் கொண்டாடப் படுவதை அப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அந்த ஆரோக்கியமான புரட்சியை சின்ன அண்ணன் செய்தார்.

ஊர் மந்தையில் பந்தல் போடப்பட்டு மேடை அமைக்கப் பட்டது. மாவிலைத் தோரணங்களும் தென்னங்கீற்றுத் தோரணங்களும் பின்னிக் கட்டுவதில் முதியவர்கள் பங்கேற்றார்கள். சிதம்பரம்தான் வரவேற்புப் பதாகைகளை நீளமான வெள்ளைத் துணியில் குருவி நீலத்தில் எழுதினார். சிதம்பரம் படித்த உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் - தமிழ்ப் பற்று மிக்கவர் - தலைமை தாங்க அழைத்து வரப்பட்டார். சிறப்புச் சொற்பொழிவாற்ற, தமிழ்க் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த உள்ளுர் இளைஞர் தன் கல்லூரிப் பேராசிரியரை அழைத்து வந்தார். விழாவின் தொடக்கத்தில் பாரதிதாசனின் 'வாழ்க வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு'' என்கிற வாழ்த்துப் பாடலை கடவுள் வணக்கத்துக்குப் பதிலாகப் பாட வேண்டும் என்று புலவர் மாணவர் ஆசைப் பட்டார். தமிழ் படிக்கிறவர்கள் எல்லோருமே 'சூனா மானா' எனப்பட்ட பெரியார் கட்சிக்காரர்கள் என்கிற ஒரு அபிப்பிராயம் அப்போது நிலவியதால், கடவுள் வணக்கம் பாடா விட்டால் அது 'சூனா மானா' கூட்டம் போல ஆகிவிடும் என்று சிலர் எதிர்த்தார் கள். அண்ணன் தமிழ்விழா என்பதால் அதைப் பாடுவதில் தவறில்லை என்று சொல்லி எதிர்ப்புச் சொன்னவர்களை சமாதானப் படுத்தினார். அந்தப் பட்டைப் பாட அங்கே யாருமில்லையே என்றபோது புலவர் மாணவர் பக்கத்து ஊரில் இப்படிக் கழக மேடைகளில் இந்தப் பாட்டைப் பாடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவரை அழைத்து வருவதாகச் சொன்னார். ஆனால் அந்தப் பாட்டைப் பாட அவருக்கு பத்து ரூபாய் தரவேண்டும் என்றும், அதோடு அவர் மேடையில் தலைவர், பேச்சாளர் போலத் தனக்கும் நாற்காலி போட்டு சமமாக உட்கார வைக்கவேண்டும் என்றும் கேட்பார் என்றும் சொன்னார். முதல் விழாவில் தடங்கல் வேண்டாம் என்று எல்லாவற்றையும் அண்ணன் அனுமதித்தார்.

விழா திட்டமிட்டபடியே கோலாகலமாய் நடந்தது. அப்போதெல்லாம் திருமணங்களில் மட்டுமே கொண்டு வரப்படும் ஒலிபெருக்கியும் பக்கத்து நகரத்திலிருந்து அமர்த்தப்பட்டது. கோயில் உற்சவரை ஊர்வலமாய் அழைத்து வருகிறமாதிரி தலைவர் பேச்சாளரை ஊர்ப் பொதுச் சாவடியிலிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வந்தார்கள். அதிர்வேட்டு முழங்க விழா தொடங்கியது. அதுவரை கோயில் திருவிழா தவிர இப்படி ஒரு கொண்டாட் டத் தைப் பார்த்திராத பொது மக்களுக்கு இது ஒரு புதுமையாக, பூரிப்பை அளித்தது.

அந்த ஆண்டோடு - அண்னன் வேலைக்குப் போய் விட்டாதால், கைப் பந்து கழகம் போலவே தமிழ்க் கழகமும் பிறகு செயலிழந்து போயிற்று.

- இவ்வளவும், அந்த மாஜி விளையாட்டுத் திடலைப் பற்றி எண்ணியதும் தொடர்க் காட்சியாக நினைவுத் திரையில் பரபரவென்று ஓட்டியது. அந்த சுகமான நினைவுகளை அசைபோட்டபடியே மேலே நடந்தார்.

(தொடரும்)

கால நதிக்கரையில்... - 5

சற்றே உட்காரத் தக்கதாய்த் தோன்றிய பெஞ்சின் உடையாத பகுதியில் உட்கார்ந்தார்.

இதே இடத்தில்தானே அப்பா தண்ணீர்ப் பந்தல் கோடைகாலத்தில் வைப்பார்கள்! தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்தவென்றே தாத்தா காலத்திலிருந்து கொஞ்சம் நிலம் ஒதுக்கியிருந்தது. அதில் வந்த வருமானத்தைக் கொண்டு அப்பா காலம்வரை அந்தத் தருமம் நடந்து வந்தது.

சுமைதாங்கிக்கு மறுபுறம் இருந்த இந்த தண்ணீர்ப் பந்தலில், வழிப்போக்கர் களும் சுமை இறக்கி வைத்திருப்பவர்களும் வந்து நீர்மோரும் பானகமும் அருந்திக் களைப்பாறுவதுண்டு. இந்தத் தர்மப் பணியை அலுக்காமல் எதிர் வீட்டுத் தொந்தி மாமா நடத்தி வந்தார். சிறு பிள்ளையாய் இருந்தபோது சிதம்பரம் அவருடன் சிலதடவை இங்கு வந்ததுண்டு. புதுப் பானைகளில் குளிந்த நீரும், நீர்மோரும் ஒரு தவலையில் பானகமும் நிரம்பி இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அலுமினியத் தம்ளர்கள் இருக்கும். அவற்றில் மாமா தன் வசமிருக்கும் பெரிய தம்ளரால் மொண்டு ஊற்றி வழங்குவார்.

சேரி ஆட்கள் யாரும் வந்தால் அவர்களுக்கு அலுமினியத் தம்ளர் கிடையாது. பந்தலில் ஒரத்தில் நடப்பட்டிருக்கும் - உச்சியில் கிளையாய் உள்ள ஒரு கம்பில், இருபுறமும் ஒழுங்காய் நறுக்கப்பட்ட ஒரு நீண்ட பாக்கு மட்டை சாய் வாய்ப் பொருத்தப் பட்டிருக்கும். அதன் மேல் முனையில் தொந்தி மாமா நீர் மோரை ஊற்றுவார். மறுமுனையில் அவர்கள் கையைப் பாலமாக்கி உறிஞ்சிக் குடிப்பார்கள். உள்ளங்கையில் நிறைந்து முழங்கையில் நீர்மோரோ பானகமோ வழிகையில் சிதம்பத்துக்கு மனம் வலிக்கும். இதென்ன பாரபட்சம் என்று தோன்றும். ஆனால் குடிப்பவர்கள் முகம் சுளிக்காமல் மூச்சு முட்டக் குடித்து விட்டுத் திருப்தியாகச் செல்வார்கள். அதை அவர்கள் குறைவாக நினத்ததாக அப்போது தெரியவில்லை.

தனக்கும் அப்படித் தரும்படி சிதம்பரம் மாமாவைக் கேட்பார். மாமாவும் சிரித்தபடி ஒரு பனைஓலையை இரண்டு புறமும் நறுக்கி ஒரு முனையைச் சிதம்பரத்தின் வாயில் வைத்து மறுமுனையில் குவளையிலிருந்து சன்னமாக ஊற்றுவார். தொடர்ச்சியாய் மூச்சுத் திணறாமல் சிதம்பரத்துக்கு குடிக்க வராது. "ம்...ம்.. மெதுவா.." என்று மாமா கனிவு காட்டுவார். அதெல்லாம் படம் படமாய் இப்போது மனத்திரையில் ஓடுகிறது.

எதிர்ப் பக்கமிருந்து திடீரென்று 'தடதட' வென்று பேரிரைச்சல் கேட்கிறது.

பிறகு 'தடதட'த்த சத்தம் மாறி சீராக எஞ்சின் ஒலி கேட்கிறது. எழுந்து சற்று நடந்து போய்ப் பார்க்கிறார். அட! இதைப் பார்க்கலியே! அரிசி ஆலை ஒன்று அங்கே முளைத்திருந்தது. ஊரின் வளர்ச்சிக்கு ஒரு சாட்சியாக அது தோற்றம் தந்தது. முன்பெல்லாம் நெல் அரைக்கவோ அல்லது மற்ற அரவைகளுக்கு. இரண்டு மூன்று மைலுக்கப்பால் உள்ள ராஜேந்திரப்பட்டணத்து மில்லுக்குத்தான் போக வேண்டும். அப்போது மின்சாரம் இந்தப் பக்கமெல்லாம் இல்லை. ஆயில் எஞ்சின் வைத்து ரயில் இஞ்சின் போல 'குப் குப்' பென்று புகை விட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்திலிருந்து பலவகை அரவை எஞ்சின்கள் எழுப்பும் ஓசை அந்த வயதில் திகிலை எழுப்பும். இப்போது மின்சாரம் வந்திருக்கிறது. திடுக்கிட வைக்கும் சத்தமோ புகைக் கக்குதலோ இல்லை. மூன்றுமைல் தலையில் சுமந்தோ வண்டிகட்டிக் கொண்டு எடுத்துப்போயோ அரைத்து வருகிற பாடும் இல்லை. சுற்றிலும் உள்ள விளைநிலங் களுக்கும் மின்வசதி கிடைத்து மின் மோட்டார் வைத்து நீர் இறைப்பதும் தெரிகிறது.

சிரமபரிகாரம் போதும் என்று எழுந்து கொண்டார். பெட்டியையும் தோள் பையையும் எடுத்துக்கொண்டு மெதுவாக ஊரை நோக்கி நடக்கிறார். கொஞ்ச தூரம் போனதும் ஊர்ச் சேரிக்குப் போகும் பாதையருகில் நின்று எட்டிய தொலைவுக்குப் பார்க்கிறார். அங்கேயும் மாற்றம் வந்துதானே இருக்கும்? குடிசைகள் அப்படியே தான் இருக்கின்றன. தெருஓர மின்விளக்கும் உயர்நிலை தண்ணீர்த் தொட்டியும் தெரிகின் றன. பஞ்சாயத்து போர்டு வந்திருப்பதன் அடையாளம்! சாலை ஓரத்து நிலங்களில் கரும்புப் பயிர்கள் விளைந்து தோகைகள் காற்றில் அசைகின்றன. நிலங்களினூடே குறுக்காகத் தெரியும் தந்திக்கம்பிகளில் சரம் கோர்த்தமாதிரி துக்கணாங் குருவிகளின் கூடுகள் தொங்குவது பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

சாலைத் திருப்பம் வந்து விட்டது. வலப்புறத்தில் மாட்டுக்காரப் பையன் சொன்ன சிமிண்ட் வளைவு தெரிகிறது. மேலே ' அண்ணன் பெரியநாயகி கோயில்' எனவும் கீழே 'முகம்மது சலீம் உபயம்' என்றும் எழுதப்பட்டிருக்கிறது. கோயிலுக்குள் போய்ப் பார்க்கலாமா என்று ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு மேலே நடக்கிறார்.

திருப்பத்தில் திரும்பியதும்தான் ஞாபகம் வருகிறது - இது 'பாடைத் திருப்பி' அல்லவா? ஊரிலிருந்து மயானத்துக்குப் பாடையில் வைத்துச் சடலத்தை எடுத்துச் செல்லும் பொழுது ஆரம்பத்தில் தலை தெற்கு நோக்கியும் கால் வடக்கு நோக்கியும் இருப்பதை, ஊரின் எல்லைப் பகுதியில் இருக்கும் இந்த இடத்தில் தலைமாடு கால்மாடு திசை மாற்றப் பெற்று - தலை வடக்கு நோக்கியும் கால் தெற்கு நோக்கியும் இருக்கும்படி பாடையைத் திருப்புவதால் இதைப் 'பாடைத் திருப்பி' என்று அழைப்பதாக சிறுவயதில் கேட்டிருக்கிறார். அந்த வயதில் பகலிலும் இந்தப் பக்கத்தைக் கடக்கும்போது நெஞ்சு 'திக் திக்' என்று அடித்துக் கொள்ளும். சிறு பிள்ளைகள் யாராவது மயக்கம் போட்டு விழுந்தால் 'பாடைத் திருப்பி'க்கிட்டப் பயந்திருப்பான்' என்று பலரும் சொல்வது நினைவுக்கு வருகிறது.

அதைத்தாண்டியதும் செவ்வகத்தின் மீதமைந்த வெள்ளைப் பிரமிடின் தோற்றத்தில் இருக்கும் செல்லியம்மன் கோயில் தென்படுகிறது. அதன் முன்னே இருந்த குட்டையைக் காணோமே! பள்ளிக்கூடத்தில் படிக்கையில் தசராவை ஒட்டி கோலாட்டம் கோயில்களில் அடித்து வரும்போது கடைசியாய் இந்தச் செல்லியம்மன் கோயிலுக்கு வருவதுண்டு. பிள்ளைகள் வட்டமாக நின்று கோலாட்டம் நிகழ்த்த விசாலமான முன்பக்கமும் அதை ஒட்டி நீர் நிரம்பிய பரந்த குட்டையும் இருந்தன. இப்போது அந்த இடம் கோயிலின் வாசலையும் ஒட்டி, உள்ளே நுழைய இடமின்றி நெல் வயலாக மாற்றப் பட்டிருந்தது. கோயிலுக்குச் செல்பவரின்றி கோயிலும் பாழடைந்து இருக்கிறது. தடுப்பவர் இன்றியோ தடுத்தாலும் மீறி 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்கிற மனோபாவத்தில், அகப்பட்ட இடத்ததையெல்லாம் எவர் வேண்டுமானலும் ஆக்கிரமிக்கும் மனப்போக்கினாலோ இப்படிப் பொது இடங்கள் தனியார் வசமாகி இருப்பதை எங்கும் காண முடிகிறது.

இதோ ஊர் முனை வந்து விட்டது. வலப்புறம் இருந்த அல்லிக்குளம் எங்கே? ஆற்றங்கரை மரங்கள் போலக் குளமும் அழிந்து போனதா? திகைப்புடன் சற்றே நின்று பார்த்தார். குளத்தின் கரைநெடுக குளத்தை மறைத்து நிறையக் குடிசைகள் முளைத்திருந்தன. இங்கேயும் செல்லியம்மன் கோயிலில் கண்டது போலத்தான். மக்கட் பெருக்கம் பொது இடங்களை ஆக்ரமிக்கச் செய்து விட்டிருக்கிறது. எல்லாம் மக்கள் ஆட்சி வந்த பிறகுதானோ? இந்த ஆக்கிரமிப்புகளைத் தடுத்தால் தான் வெற்றி பெற முடியாது என்கிற தேர்தல் நோயின் பிரதிபலிப்புதானோ? ஊரில் நியாயம் பேசுபவர், புத்தி சொல்பவர் எல்லாம் இந்தப் புதிய மக்களாட்சி முறையில் ஒழிக்கப் பட்டிருப்பார்களோ?

ஊருக்கு வெளியே இது போன்ற நீர்நிலைகள் இருப்பது மக்களுக்கு எவ்வளவு வசதியாக இருந்திருக்கிறது! காலையும் மாலையும் ஆண்கள் காலை மாலைக் கடனைக் கழிக்கவும், மேச்சலுக்கு வரும் ஆடுமாடுகள் நீர் அருந்தவும் பயன்பட்டு வந்த இந்தக் குளம் இன்று இப்படிக் குடிசைகளால் சூழப்பட்டு அதையெல்லாம் மறுப்பதுபோல ஆக்ரமிக்கப் பட்டிருப்பதை என்ன சொல்ல? அடடா! குளத்தின் அழகே மறைந்து போயிற்றே! ஊரின் நுழைவாயிலில் கண்ணையும் கருத்தையும் கவரும் அந்த அழகை இப்படிப்பொறுப்பின்றித் திரை போட்டு மறைத்து விட்டார்களே என்ற ஆதங்கம் மேலிட பெருமூச்சு விடுகிறார்.

சிதம்பரத்தைப் பொறுத்தவரை அந்த அல்லிக்குளம் அவரது அழகுணர்ச்சிக்கு ஊட்டம் தரும் இடமும் அல்லவா? அந்த அழகான குளக்கரையில் நின்று அவர் ரசித்த காட்சிகளை மனத் திரையில் ஒரு முறை ஓட்டிப் பார்க்கிறார்.

(தொடரும்)

கால நதிக்கரையில்... - 4

சாலையின் இருபுறமும், அண்ணாந்து பார்த்தால் உச்சி தெரியாமல் உயர்ந்து பரந்து நின்றிருந்த இலுப்பை மரங்க¨ளைக் காணோமே! மனிதனின் பேராசைக்கு அவையும் பலியாகி விட்டனவா? அல்லது ஆற்றின் வெள்ளப் பிரவகிப்பில் அவை தலைகுப்புறச் சாய்ந்து மறைந்தனவா?

அதிகாலையில் அம் மரங்கள் உதிர்த்திருக்கும் - சின்னக் குடுமியுடன் கூடிய குட்டிக்குட்டித் தேங்காய்கள் போல, பளீரன்ற வெண்முத்துக்கள் பரவிக்கிடக்கிற மாதிரி - அபூர்வ மணத்துடனான இலுப்பைப் பூக்கள் எவ்வளவு இதமான காட்சி!

அதிவேக மனித வளர்ச்சியில் அழகுணர்ச்சியும் ஆன்ம நேயமும் அற்றுப் போகிற வக்கரிப்பு கிராமத்தையும் பீடித்திருப்பது தெரிகிறது.

அவசரமின்றி நடந்து, ஊருக்குத் திரும்பும் வலப்பக்கச் சாலையை அடைகிறார். இங்கே வலப்புறத்தில் - ஒரு சுமைதாங்கி இருக்குமே! தன் சுமையைச் சற்று நேரம் இறக்கி வைக்க எண்ணி சுற்று முற்றும் பார்க்கிறார். பலகையான முதுகுடன் நான்கு கால்களையும் வெளிப் பக்கமாய் அகலப்பரப்பி நிற்கிற ஒட்டகம் போல- கற்பலகையின் பக்க வாட்டில் 'றா.சின்னய்யாப் பிள்ளையின் பாரியாள் லோகாம்பாள் ஆச்சி தருமம்' என்று கோணல்மாணலான எழுத்தில் செதுக்கி வைத்து - எந்த நேரத்தில் சரிந்து விழுமோ எனும்படி அச்சம் தருவதாய் ஆண்டாண்டு காலமாய் நின்று கொண்டிருந்த அந்தச் சுமைதாங்கி எங்கே?

அந்தக் கல் எத்தனை உபயோகமாய் இருந்தது! பயண வசதிகள் இல்லாத காலகட்டத்தில், வழிப்போக்கர்களுக்கு ஆசுவாசம் தந்த அந்தச் சுமைதாங்கியும் கால ஓட்டத்தில் ஆற்றங்கரைக் கால விருட்சங்களைப் போல வீழ்ந்து பட்டிருக்கலாம்!

அது இருந்த இடத்தை ஒரு சின்னக் குடிசை ஆக்கிரமித்திருந்தது. இடப் பக்கம் ஒரு பேருந்து நிழற்குடை - 'ஜவஹர் வேலைவாய்புத் திட்டப் பணி' என்று எழுதப்பட்டு நிறம் மங்கி நின்றிருந்தது. உட்கார அமைக்கப் பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சு உடைந்து கம்பிகள் வெளியே எலும்புக்கூடாய்க் காட்சி தருகிறது. உட்காரவோ, வெயிலுக்கு ஒதுங்கவோ லாயக்கில்லா நிழற்குடை!

சாலை முக்கில் '0' என்று பொறிக்கப்பட்ட மைல்கல் இருந்தது. 'சைபர் கல்' என்று அடையாளம் சொல்ல அழைக்கப் பட்ட - நினைவு தெரிந்த நாளாய் இருந்த அந்தக் கல் இப்போது காணப்படவில்லை. அந்த இடத்தில், சாய்ந்து திசை திரும்பி இருக்கிற கைகாட்டி 'தெ.வ.புத்தூர்- 1கிமீ' என்று தூரம் காட்டிக் கொண்டிருக்கிறது. உடைந்த பெஞ்சின் மீது உடையாதிருக்கும் பகுதியில் தன் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சற்று இளைப்பாறுகிறார்.

இந்த '0' கல்லுக்குப் பக்கத்தில், ஊர் நடேச ஆசாரி செய்த காந்திஜியின் சுதைச் சிற்பம் ஒன்று நின்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கினால் இப்படி ஊருக்கு ஊர் காந்தி சிலைகளும் கைராட்டைக் காங்கிரஸ் கொடிகளும் இடம் பெற்றிருந்தன. இப்போது அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சிலையும் பலகட்சிக் கொடிகளும் காலமாற்றத்திற்கு ஏற்ப இடம் பெற்றிருக்கின்றன.

ஊரை நோக்கிச் செல்லும் சாலையைப் பார்க்கிறார். கப்பிசாலை இப்போது தார்ச்சாலை ஆகி இருந்தாலும் அங்கே போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து காலைப் பதம் பார்ப்பதாக- நடக்க முடியாத நிலையிலிருக்கிறது.

எதிர்ச்சாரியில் புளியமரத்தை ஒட்டி ஒரு கூரைவீடு. முன்னால் தட்டி உயர்த்தி ஒரு டீக்கடை. தள்ளித்தள்ளி சில குடிசைகள் நெடுஞ்சாலை ஓரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு சேரி வரை தொடர்கின்றன. சாலை ஓரமாக சற்று நடந்தார். அதோ ஒரு ஓட்டுவீட்டின் தாழ்வான திண்ணையின் ஓரத்தில் சிவப்புநிறம் மங்கிப்போன தபால் பெட்டி ஒன்று தூணில் கட்டித் தொங்குகிறது. 'அஞ்சல் நிலையம்' என்று ஒரு சின்ன அறிவிப்புப் பலகை காட்டுகிறது.

ஓ! அஞ்சல் நிலையமும் வந்து விட்டதா? அந்தக் காலத்தில் இப்படி ஊருக்கு ஊர் அஞ்சல் நிலையம் ஏது? பஞ்சாயத்து வந்தும்கூட இங்கு அஞ்சல் நிலையம் வந்திருக்க வில்லை. ஐந்து மைலுக்கு அப்பாலுள்ள இதைவிடச் சற்றுப்பெரிய ஊரில் இருந்துதான் தினமும் மாலையில் வெயில்தாழ்ந்து, தபால் வரும். ஒரு கிழட்டு சைக்கிளில், முண்டாசு கட்டிய கிழட்டு ஆள் ஒருவன் சாலையின் செம்மண் முழுதையும் தன் மீதும் சைக்கிள் மீதும் ஏற்றிக் கொண்டு மெதுவாக ஊர்ந்து வருவான். பகுதி நேர அஞ்சல் அதிகாரியான ஒரு மிராசுதாரரின் பண்ணை ஆள் அவன். பகுதிநேர அஞ்சலகம் என்பதால் தபால்காரன் என்று தனியாக இல்லை. அஞ்சல் அதிகாரியே சகலமும். அவர் வரமுடியாதென்பதால் கொஞ்சம் விலாசம் படிக்கத் தெரிந்த இந்த ஆளை அனுப்புவார்.

சின்ன வயசில் பத்து மைலுக்கு அப்பால் உள்ள நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஒரு ஊரிலிருந்து வாரத்திற்கு இரண்டு நாள் தபால் வந்தது நினைவுக்கு வருகிறது. மிகவும் நலிந்த, தாடிக்கார சாயபு ஒருவர் தோளில் காக்கிப் பை தொங்க கையில் குடையுடன் நடந்தே அவ்வளவு தொலைவும் தள்ளாடியபடி வந்தது நினைவிருக்கிறது. அனேகமாக, ஊரில் அப்பாவுக்கு மட்டுமே தபால் வரும். அதுவும் அப்பா சந்தா கட்டிய 'தினமணி' பத்திரிகை இரண்டு மூன்றாய்ச் சேர்ந்து வரும். மாதம் ஒருமுறை தருமமைஆதீன வெளியீடான 'ஞானசம்பந்தம்' என்கிற ஆன்மிகப் பத்திரிகையும், அபூர்வமாக தபால் ஏதாவதும் வரும். 'செந்தமிழ்ச்செல்வி" என்றொரு பொடி எழுத்துப் பத்திரிகையும் வரும். அப்பா அந்தக் காலக் கட்டத்து ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவாளர். அந்தக் கட்சிப் பத்திரிகை ஒன்றும் வரும். ஒரு முறை அந்தப் பத்திரிகை இதழொன்றின் அட்டையில் கோட்டுடன் பெரிய முறுக்கு மீசைத் தலைவர் ஒருவரது படத்தைப் போட்டு 'தலைவர் பன்னீர்ச் செல்வம் மறைவு' என்று போட்டிருந்ததைக் காட்டி அவரது மறைவுவு பற்றி அப்பா வருத்தம் தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அதில் வரும் சிறுவர்க்கான பக்கங்களில் கதைகள் படித்ததுதான் தனது வாசிப்பு ரசனை யின் தொடக்கம் என்பதும் நினைவில் புரள்கிறது.

அப்பா அந்தக் காலத்து மெட்றிகுலேஷன் படித்தவர். அந்த வட்டாரத்தில் ஆங்கிலம் தெரிந்தவர் அவர் மட்டுமே என்பதால் - தந்தி, நீதிமன்றத் தீர்ப்பு, பதிவு அலுவகப் பத்திரங்கள் போன்றவற்றைத் தமிழ்ப் படுத்திச் சொல்ல அப்பாவிடம்தான் வருவார்கள். தினமும் மாலை நேரத்தில் அப்பா தெருவோடு போகிறவர்களை அழைத்து தினமணி செய்திகளைப் படித்துச் சொல்லுவார். அவர், தான் படித்ததனால் தன் பிள்ளைகளும் விவசாயத்தை நம்பி இருக்காமல் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டுமென்று எல்லோரையும் அப்போதே படிக்கவைத்தார். யாராவது 'என்னங்க எல்லாப் பிள்ளைகளையும் படிக்கவச்சு வேலைக்கு அனுப்பிச்சுட்டா இருக்கிற நெலபுலத்த உங்களுக்கு அப்புறம் ஆரு பாக்கறது?" என்று கேட்பார்கள்.

"ரஷ்யாவிலேயும், சைனாவிலும் கம்யூனிஸ்டுகள் புரட்சி பண்ணிக்கிட்டுருக்காங்க. உழுறவனுக்கே நெலம் சொந்தம்னு கேக்கறாங்க. இன்னும் முப்பது வருஷத்திலே நம்ப நாட்டிலும் அப்பிடி வந்துடப் போவுது. அப்போ என் பிள்ளைகள் நெலத்தையே நம்பிக் கிட்டு மிராசுதாரா இருந்துட முடியாது. அதனாலே தான் உங்க பிள்ளைகளையும் படிக்கவைங்கன்னு சொல்லிகிட்டு வர்ரேன்" என்று அப்பா அப்போதெல்லாம் சொன்னது இப்போது உண்மையாகி விட்டதுதானே!

டீக்கடையை ஒட்டி நடக்கையில் அங்குள்ள பெஞ்சு மீது கொட்டை எழுத்துக்களில் அச்சாகியுள்ள ஒரு பத்திரிகை - 'தினத்தந்தி'யாக இருக்கலாம் - கலைந்து கிடக்கிறது. அதில் ஒரு தாளை நிதானமாக வாய்விட்டுப் படித்துக் கொண்டி ருந்தவர் இவரை நிமிர்ந்து பார்க்கிறார். வெளியூர்க்காரரோ என்னவோ? இவரை அடையாளம் தெரியவில்லை. இவருக்கும் அவரைத் தெரியவில்லை. உள்ளூர்க்காரராக இருந்தாலும், முப்பது வருஷத்துக்குப் பிறகு பார்க்கும் அடுத்த தலைமுறையைத் தெரியாது தானே?

''என்னாங்க! டீ வேணுமா?" என்கிறார் அவர். அவர்தான் கடைக்காரராக இருக்க வேண்டும். மௌனமாகத் தலையசைத்துவிட்டு நிழற்குடைக்குத் திரும்புகிறார்.

(தொடரும்)

கால நதிக்கரையில்... - 3

மெதுவாகக் கரையை நெருங்கினார். வலதுபுறம் சற்றுத்தொலைவில் தெரிந்த இடுகாட்டில் ஒரு பிணம் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். 'அட! இது நம் அப்பாவை எரித்த இடமல்லவா?' எந்த குறிப்பிட்ட இடத்தில் எரித்தது என்று காண முடியவில்லை. நினைவுச் சின்னமோ தகரக் கொட்டகையோ வைக்கமுடியாத, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிற பகுதியல்லாவா! இங்கேதான் ஆற்றையொட்டிய பகுதியில் தகனம் செய்த ஞாபகம். சற்றே அப்பாவின் நினைவில் தோய்ந்து நிற்கிறார். மனதில் சோகம் மூட்டமிடுகிறது. அப்பாவின் அந்தத் தகனக் காட்சி கண் முன்னே விரிகிறது.

- சிதைமீது உடலை ஏற்றி, விரட்டி கொண்டு மூடி, வைக்கோல் பரப்பி, சேறிட்டு மெழுகி, முகம் மட்டும் கடைசி தரிசனத்துக்காக மூடாமல் விடப்பட்டிருக்கிறது. கடைசித் தடவையாக சகோதரர்கள் ஒவ்வொருவராக, அப்பாவின் அந்த சாந்த மான முகத்தைத் தரிசித்து அழுகை வெடித்துப் பீரிட்டது கண்முன்னே தோன்றுகிறது.

தொடர்ந்து - மரணாவஸ்தையில் அப்பாவின் இறுதிக் கணங்களில் ஏற்பட்ட தவிப்பும், சோகமும் காட்சியாகிறது.

அப்பாவின் உடல் நிலை மோசம் என்று தந்தி வந்து - மற்றச் சகோதரர்கள் வெகு தொலைவில் இருந்ததால் தான் மட்டும் - அடித்துப் புடைத்துக் கொண்டு புறப்பட்டு ஊர் வந்த போது -

- வீட்டில் மரணக்களை நிலவியிருந்தது.

"உனக்காகத்தாம்பா உசிரு துடிச்சிட்டுக்கிருக்கு. இல்லேண்ணா எப்பவோ அடங்கி இருக்கும்'' என்று வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த எதிர்வீட்டு மாமா எழுந்து வந்து அணைத்தபடி உள்ளே அழைத்துப் போகிறார்.

நெஞ்சு பதைக்க வாசற்படி தாண்டி கூடத்தை அடைந்ததும், "தம்பீ! அப்பாவைப் பாருடா! உனக்காகத்தான் காத்திருக்காங்க...." என்று உடைந்த குரலில் அம்மா விம்ம, அருகில் போய்ப் பார்க்கிறேன்.

''அப்பா.....''

அப்பாவா அது? எதிலும் சுத்தமும், ஆரோக்கியமும், நறுவிசும், ஒழுங்குமாக இருந்த அப்பா - இதோ கால்மாடு தலைமாடு மாறி, பஞ்சுமெத்தையின் குறுக்காக அசைவற்றுக் கிடக்கிறார்கள். கண் பஞ்சடைந்து, சுருங்கி மெலிந்த முகமும், எலும்புக்கூடாய்த் தெரியும் உடலுமாய்- வாய் அங்காந்து வெட்டி வெட்டி உள்ளிருந்து காற்றை விசிற, உயிரின் இறுதிப் போராட்டத்தில் ஆட்பட்டு.......

பார்க்கவே பதறுகிறது.

"அப்பா......." என்று குரல் நடுங்க, குனிந்து முகத்தருகே அழைக்கிறேன்.

"ஆரு வந்திருக்கா பாருங்க! செதம்பரம் வந்திருக்கான்'' என்று அம்மா அழுகையினூடே சொல்கிறார்.

"அப்பா.........அப்பா.........சிதம்பரம் வந்திருக்கேன்பா"

கொஞ்சம் நினைவு மீள்கிறது. மறுபடியும் அழைக்கிறேன். பஞ்சடைந்த கண்கள் மெதுவாய் விரித்து எங்கோ நோக்குகின்றன. பின்னர் குரல் வந்த திசைக்குத் திரும்புகின்றன. நடுங்கும் மெலிந்த குரலில் "ஆரு......செதம்பரமா ......"

அதற்குமேல் கேட்க முடியாமல் குரல் அடங்குகிறது. ஆழ்கிணற்றின் அடியிலிருந்து நலிந்த குரலில் ரகசியம் பேசுகிறமாதிரி இருக்கிறது.

"வ..ந்..து..ட்..டி..யா..." என்பதுதான் இறுதிச் சொல்லாகக் கேட்கிறது. கண்கள் பழையபடி தொய்கின்றன. வாய் வெட்டி இழுக்கிறது. தலை துவள்கிறது.

"தம்பீ, தம்பீ! மடியிலே தலையை எடுத்து வச்சுக்கோப்பா. உனக்காகத்தான் இத்தினி நேரம் இருந்த மாதிரி இருக்கு........" என்றபடி அம்மா அப்பாவின் தலையைத் தூக்கி என் தளர்ந்த மடிமீது வைக்கிறார். அதற்குள் அண்டை அயலில் இருப்பவர்கள் கூடிவிடுகிறார்கள்.

"ஆமாண்டாப்பா! மவனோட மடியிலேதான் போவணும்னு புடிவாதமா உசிரு தொத்திக்கிட்டிருந்திருக்கு." என்கிறார் பக்கத்து வீட்டு மூதாட்டி.

எனக்கு அழுகை உள்ளுக்குள் முட்டி மோதுகிறது.

"இந்தா இந்தப் பவுனை வாயிலே போட்டு காசித் தீர்த்தத்துலே கொஞ்சமா விடு" என்று அம்மா மூக்குப்பொட்டளவு உள்ள ஒரு சின்னப் பொன் துணுக்கையும், பற்றவைப்பு மூடி நீக்கிய ஒரு சின்னக் காசிச்சொப்பையும் நீட்டுகிறார், முன்பே தீர்மானித்து ஆயத்தப்படுத்தி இருந்தபடி.

மூச்சு விசிறிவிசிறி..... மரண அவஸ்தையை நேரில் தரிசிக்கிறேன். மனம் வலிக்கிறது.

"வேண்டாம்மா. தொண்டையிலே சிக்கிக்கும். மூச்சை அடக்கிடும்....." என்று அம்மாவிடம் கெஞ்சுகிறேன்.

"இல்லைப்பா! அவ்வளவுதான். இனிமே தாங்காது! போட்டு தீர்த்தத்தை விடு" என்று எதிர்வீட்டு மாமா ஆதரவுடன் தோளில் தட்டுகிறார்.

கை நடுங்க, குமுறும் அழுகையினூடே அந்தப் பொட்டுத் தங்கத்தை அப்பாவின் வாயில் இட்டு காசித் தீர்த்தத்தைக் கொஞ்சமாக விடுகிறேன். லேசான 'களக்' ஒலியுடன் நீர் அடித்தொண்டையில் இறங்குகிறது. அமைதியாக தலை என் மடியில் சரிகிறது. உயிரின் அவஸ்தை முடிகிறது. 'அப்பா.........." என்று அதுவரை நெஞ்சுக் குள் முட்டிமோதிய சோகம் வெடித்துப் பீரிடுகிறது.

"அழப்படாது....அழப்படாது....இன்னும் வழிவுடலே..." என்று பக்கத்து வீட்டுப் பாட்டி என்னைப் பரிவோடு தட்டிக் கொடுக்கிறார்.

மெல்லப் பூப்போல அப்பாவின் தலையை இறக்கி வைத்துவிட்டு, உடலை நேராக்கிவிட்டு கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டபடி தெரு நடைக்கு வருகிறேன்.

தெருவாசலில், போகிற உயிருக்கு வழியனுப்பி வைக்கும் ஏற்பாடு நடக்கிறது. அம்மா எல்லாம் முன்னதாகத் தயார் செய்து வைத்திருக்கிறார். முக்கிளையாக ஒரு சின்னக் கிளையைத் தேடி ஒடித்து முனைகளில் சின்னப்பந்தம் போல துணிசுற்றி எண்ணையில் நனைத்து வைத்திருக்கிறது. அதை வாசலுக்கு எதிரே தெருநடுவில் சின்ன மண்முட்டில் செருகிப் பற்றவைத்து முக்கிளையாய்ப் பந்தம் எரிகிறது. தேங்காய் உடைத்து, கற்பூரத் தீபம் காட்டி, பங்காளிகள் புடைசூழ சுற்றிவந்து பூமியில் நெஞ்சு பட விழுந்து எழுகையில், அழுகைப் பிரவகித்து 'ஓ' வென்று அழுகிறேன். அம்மாவின் ஓலம் குபீலென்று எழுகிறது. அதற்காகக் காத்திருந்தது போலப் பெண்களின் ஒப்பாரி ஆரம்பமாகிறது.

- ''இன்னா சார்! பொடி சுடலே? அப்பிடியே வெறிச்சு என்னாத்தப் பாக்குறீங்க?" என்ற குரல் கேட்டு நினைவுத் தடத்திலிருந்து மீள்கிறார். மாட்டுக்காரச் சிறுவன் மீட்கிறான்.

அதற்கப்புறம் எத்தனை பேரை அந்த இடத்தில் எரித்திருப்பார்கள்! எத்தனை முறை வெள்ளம் வந்து அத்தனைபேர் சாம்பலையும் அடித்துக் கொண்டுபோய்க் கடலில் சேர்த்திருக்கும்! உத்தேசமான, அப்பாவின் தகன பூமியை மனதுள் வணங்கிவிட்டு மெல்ல மணலை விட்டு நீங்கி, திடமான தார்ச்சாலையை அடைந்து நடக்கிறார். பையன்கள் அவரை விசித்திரமாய்ப் பார்த்தபடி தமக்குள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

(தொடரும்)

கால நதிக்கரையில்..... - 2

ஆற்றோரமாக விழற்கட்டைகள் திட்டுத்திட்டாக பச்சையும் மஞ்சளுமாய் முளைத்திருக்கின்றன. அவற்றிற்கிடையே ஆங்காங்கே பசுக்களும் எருமைகளும் 'மடுக் மடுக்'கென புற்களைக் கடித்தபடி மேய்ந்து கொண்டிருக்கின்றன. சில எருமைகளின்மீது மாடுமேய்க்கும் சிறுவர்கள் உல்லாசமாய்ச் சவாரிசெய்தபடி பேசிச் சிரித்த படி இருக்கிறார்கள். மந்தமாய் அரைத் தூக்கத்தில் நடக்கும் ஒரு எருமைமீது ஒரு கரிய வாலாட்டிக்குருவி அமர்ந்து சவாரி செய்து கொண்டிருக்கிறது.

சிதம்பரம் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடக் கையில், எதிரே மண்திட்டுகளில் சில சிறுவர்கள் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பச்சைப்பசேலென்ற, நெடுக்கே பூமி உருண்டயின் அட்சரேகைகள் போல வெள்ளைக் கோடுகளுடனான 'ஆத்துக் கொமட்டிக்காய்' களைத்தான் அவர்கள் கோலால் தட்டி விளயாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சுடுகிற மணலில் ஆங்காங்கே இருக்கும் ஈரநைப்பில் முளைத்துப் பரந்து கிடக்கிற பச்சைக் கொடிகளினூடே சின்னதும் பெரியதுமாய் பந்துகள்போல் கொமட்டிக் காய்கள் காய்த்துக் கிடக்கின்றன. மாடு மேய்க்கிற பையன்களுக்கு அதுதான் விளையாட்டுப் பொருள்.

ஒரு பந்து எதிரே விழுந்து அவரது காலடியில் உருண்டு தேங்குகிறது. அதைக் குனிந்து எடுக்கிறார். அதைத் தொடர்ந்து ஓடிவருகிற பையனிடம் மெதுவாகத் தூக்கி எறிகிறார். அவன் கைக்கோலால் அதை லாகவமாக கிரிக்கட்வீரன் மாதிரி, அடித்து வீசுகிறான். பந்து பறந்து தெறிக்கிறது. 'பளீரெ'ன்ற வெள்ளைப்பற்கள் தெரிய அவன் சிரிக்கிறான்.

சிதம்பரத்துக்கு, சின்னவயதில் அம்மா சொன்ன 'அண்ணன் பெரியநாயகி' கதை நினைவுக்கு வருகிறது. 'இந்தப் பந்தாட்டமும் இதனிடையே நிகழும் இந்தக் குறுக்கீடும் வழக்கமான நடைமுறையா? அந்தப் பெரியநாயகி ஆடிய பந்தும் இப்படி இடறப்பட்டதால்தானே..............' என்று சிந்தனை ஓடுகிறது.

அந்தப் பத்தினிப் பெண்ணின் கோயில், இங்கே எதிரே ஆற்றங்கரையில்தானே இருந்தது? இப்போது எங்கே அது? இடது கையைக் கண்களுக்கு மேலாகக் கவித்து எதிர்க்கரையைப் பார்க்கிறார். எதிரே ஆற்றங்கரையில் ஒரு சின்னத்தோப்பு தெரிகிறது.

"ஏம்ப்பா! பெரியநாயகி கோயில் எங்கே இருக்கு?" என்று காயைத் தட்டி விட்ட பையனைக் கேட்கிறார்.

"என்னா கோயிலு?" என்று புருவத்தை உயர்த்துகிறான் அவன்.

"அண்ணம் பெரியாயி கோயிலா?" - "எலே அந்த இலுப்பத் தோப்புக்குள்ளே இருக்கே அண்ணம்பெரியாயி சாமி - அதக் கேக்குறாரு!" என்று, அதற்குள் அவரைச் சுற்றிக் கூடிவிட்ட பையன்களிலிருந்து ஒருவன், கேட்கப்பட்டவனுக்கு விளக்கம் தருகிறான்.

"அதா? அதோ தெரியுதில்லே இலுப்பத் தோப்பு அதுக்கு முன்னாலே ஒரு ஆர்ச்சி தெரியும் - அதுக்குள்ளாற இருக்கு" என்கிறான் அவன் விவரம் புரிந்து கொண்டதும்.

'ஆர்ச்சா? அப்படி ஏதும் இருக்காதே!' என்று அவர் தனக்குள் கேட்டுக் கொண்ட மாதிரி முணுமுணுக்கிறார்.

"ஆமாங்க! சிங்கப்பூரு சாயபு கட்டுனது. இப்பதான் ரெண்டு வருஷமாவுது" என்கிறான் அவர்களில் பெரியவனான ஒரு பையன்.

'சிங்கப்பூர் சாயபுவா? யாரு 'ஆறுமாத்தியார்' சாயபுவா இருக்குமா? சாயபுக்கும் பெரியநாயகி கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?' என்று இவர் சிந்தனையில் ஆழ, அவன் தொடர்ந்தான். "அதாங்க! ஊர்க்கோடீலே கட வச்சிருக்காரே கரீம்பாயி - அவுருதான் எதோ வேண்டுதல்னு கட்டிக் குடுத்திருக்காரு"

"ஆரு அது? புதுசாக் குடிவந்திருக்கிறாரா?" என்று சிதம்பரம் கேட்டார்.

" இல்லீங்க! அவங்க தாத்தா காலத்திலேர்ந்து கட வச்சிருக்குற சாயபு" என்கிறான் அந்தப் பையன்.

சின்ன வயதாக இருக்கும்போது ஊர்க் கோடியில் கடை வைத்திருந்த ஒரு முஸ்லிம் கிழவரை நினைவு படுத்திப் பார்க்கிறார். நாடாறு மாதம் காடாறு மாதம் என்பது போல அவர் சிங்கப்பூரில் ஆறு மாதம் இங்கே ஆறு மாதம் இருந்ததால் 'ஆறு மாதத்திய சாயபு' என்று பெயர் வந்து விட்டது. அது மருவி 'ஆறுமாத்தியார்' ஆகிவிட்டது. அவரது பேரனாக இருக்குமோ இந்தக் கரீம்பாய்?

அவரை நினைத்ததும் அவரால் சின்ன வயசில் அப்பாவிடம் அடிபட்டது நினைவுக்கு வருகிறது. ஒருதடவை அவரது கடைக்குப் போன போது, "வாங்க குட்டிப் புள்ளே! மீனு தரட்டுமா - ஊட்டுக்கு எடுத்திட்டுப் போயி கொளம்பு வச்சிச் சாப்பிடலாம்?" என்று பரிகாசமாய்ச் சொல்ல, அதை அப்பா சாப்பிடும்போது சொல்லி அப்பாவிடம் அடி வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

பையன்கள் காட்டிய இலுப்பைத் தோப்பை நோக்கி மெல்ல, சுமையுடன் நடக்கிறார். அந்தப் பெரியநாயகி - இவர் வீட்டுக்குத் தெய்வமும் அல்லவா? பெரிய நாயகி தெய்வமான கதையை அம்மா சின்ன வயதில் சொன்னது, காட்சிப் படம்போல மனதுக்குள் ஓடுகிறது.

ஒருதடவை இவரும் இவரது அண்ணன், தங்கைகளும் அம்மாவுடன் மாட்டு வண்டியில் இந்த ஆற்றைக் கடக்கும்போது, மணலில் மாடு இழுக்கச் சிரமமில்லா திருக்க எல்லாப் பிள்ளைகளும் அம்மாவுடன் இறங்கி மணலில் வண்டிக்குப் பின்னா லேயே நடந்தார்கள். அப்போது வழியில் கிடந்த கொமட்டிக்காயை இவர் காலால் உதைத்துத் தள்ள தங்கைகளில் ஒருத்தி அதை எடுக்க ஓடினாள். "அதத் தொடாதே! நம்மக் கோத்திரத்துப் பொண்ணு அதத் தொடப்படாது!" என்று அம்மா அவளைத் தடுத்ததும், "ஏன் தொடப்படாது?" என்று எல்லோரும் கேட்க அம்மா அந்தக் கதையைச் சொன்னார்.

"நம்ப கோத்திரத்துலே - அதான் விழுப்பதரிய கோத்திரத்திலே பொறந்த பொண்ணு ஒருத்திய - பெரியநாயகின்னு பேரு, நம்மூர்லேர்ந்து ஆத்துக்கு அக்கரை யில சத்தியவாடிங்கிற ஊர்லே கட்டிக் குடுத்திருந்துது. ஒருதடவ, ஏதோ வீட்டுலே புருஷங்கிட்டியோ, மாமியார்கிட்டியோ சண்டை - கோச்சிக்கிட்டு அம்மா ஊட்டுக்கு பொறப்பட்டுத் தனியா வந்திருக்கா. குறுக்கே ஆத்தத் தாண்டி இந்த மணலு வழியா வந்தப்போ இப்பிடித்தான் கொமட்டிக்காய் வழியிலே நெறையக் கெடந்திருக்கு. அதுல ரெண்டு மூணை எடுத்து, மாத்தி மாத்தி மேலே எறிஞ்சிப் பிடிச்சி அம்மான ஆட்டம் ஆடிக்கிட்டே வந்திருக்கா. அப்போ அங்க மாடு மேச்சிக்கிட்டிருந்த பையன் ஒருத்தன், காய்களுக்குக் குறுக்கெ மாடுமேய்க்கிற கோல வெளையாட்டா நீட்டி இருக்கான். ஆட்டம் தடப்பட்டு காயெல்லாம் கீழேவுழுந்துடிச்சி. மாட்டுக்காரப் பையன் அதப் பாத்துக் கெக்கலி கொட்டிச் சிரிச்சிருக்கான். இவுளுக்கு ரோஷம் தாங்கல. 'நாம வெளையாடுறத ஒரு மாட்டுக்காரப் பையன் தடுக்கறதா! இத ஆரும் அக்கரையிலிருந்து பாத்துக்கிட்டிருந்து புருஷன் வீட்டுல சொன்னா அங்க மாமியாரும் புருஷனும் என்ன நெனைப்பாங்க! முன்னியே புடிக்கல, தகறாரு. இப்போ கேக்க வாணாம்! யாரோ முன்னபின்ன பழக்கமில்லாமியா கோலக் குறுக்க நீட்டியிருப்பான்னு கதே கட்டிப்பிடுவாங்களே' ன்னு கவலையாப்போச்சு அவுளுக்கு. அப்பிடி அவதூறு கெளம்பிட்டா இந்த உசிர வச்சிக்கிட்டு எப்பிடி நடமாடுறதுன்னு ஆவேசம் உண்டாயிடுச்சு.

"ஒடனே நெருப்ப மூட்டி அதுலெ எறங்கப் போறேன்னிருக்கா. அந்த மாட்டுக்காரப் பையன் பயந்து போய்ட்டான். 'என்னடாது! நாம வெளையாட்டா செஞ்சது வெனையாப் போயிடுச்சேன்'னு பதறிப்போயி, 'தாயி! ஏதோ வெளையாட்டுப் புத்தியிலே இப்பிடிப் பண்ணிப்பிட்டேன். நீ மனசுலே வச்சுக்க வேணாம். இதுக்காகப் போயி உசுர விடுறதா? பத்திரமா ஆயா ஊடுக்குக்குப் போய்ச்சேரு"ன்னு கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிட்டான்.

'அதெல்லாம் முடியாது! இனிமெ நான் இதத் தாண்டி ஊடு போயிப் படியேற யோக்கித இல்லே! நெருப்புலே எறங்கியே தீருவேங்' கறா.

"அதுக்குள்ள, மத்தப் பசங்க எல்லாம் ஓடி அண்ட அயல்ல சொல்லி ஊரே தெரண்டு வந்துடுச்சி. அக்கம் பக்கத்து ஊர்க்காரங்களும் ஞாயம் பேசவும், வேடிக்கை பாக்கவும் கூடிட்டாங்க.

"வந்தவுங்க கிட்டெல்லாம் ஞாயம் கேக்குறான் மாட்டுக்காரப் பையன். 'அவன் சொல்றதும் ஞாயந்தான். ஏதோ வெளையாட்டுத்தனம்! இப்ப என்ன ஆயிடுச்சு? அதுக்காக நெருப்புலே எறங்கறதாவுது?' ன்னு ரெண்டு மூணு பேர் சொன்னாங்க. அவங்கெல்லாம் அவ பொறந்த புத்தூருக்காரங்களும் எதிர்க்கரையிலே இருக்கிற நேமத்துக்காரங்களும்தான்.

"ஆனா அவளுக்கு ஒத்துப் பாடறவங்களும் இருந்தாங்க. அவ வாக்கப்பட்ட சத்தியவாடிக்காரங்களும், இக்கரையிலே புத்தூருக்குப் பக்கத்துலே இருக்குற கிளிமங்கலத்துக்காரங்களும், நேமத்துக்குப் பக்கத்துலே இருக்குற கார்மாங்குடிக்காரங்களும் அவ பக்கம் பேசுனாங்க. 'பொண்ணு சொல்றது சரிதான். ஒரு மாட்டுக் காரப் பையன் எப்பிடி ஒரு குடுத்தனக்காரப் பொண்ணு வெளையாட்டுலே குறுக்கே வரலாம்? அதனால குல ஆசாரம் கெட்டுப் போச்சு! கட்டுன புருஷனத் தவிர வேத்து ஆம்பிள அவகூட வெளையாடுனதாலே அவளோட புனிதம் கெட்டுப் பொச்சு! நெருப் புலே எறங்கி அதுக்குப் பரிகாரம் காண வேண்டியதுதான்' னு சொன்னாங்க.

"புத்தூரும் நேமமும் விடலே. 'இதுலே புனிதம் கெட்டுப் போறதுக்கு என்ன இருக்கு? அநியாயமா, ஆண்டவன் கொடுத்த உசுர இப்பிடி அர்த்தமில்லாம உணர்ச்சிக்கு பலியாக்கக் கூடாது!' ன்னு மறுத்துப் பேசுனாங்க.

"ஆனா அவ அத ஏத்துக்க மாட்டேன்னுட்டா. தன்ன நெருப்புலே எறங்கக் கூடாதுங்கிறவங்க, தான் பொறந்த ஊட்டுக்குக்கும் குலத்துக்கும் தலமொற தலமொறைக்கும் பழி சேக்கறத்துக்காக சொல்றாங்கன்னு கோவப்படுறா. கோவத்துல அந்த ரெண்டு ஊர்க்காரங்க மேலியும் சாபங் கொடுக்குறா.

'நேமம் நெருஞ்சி மொளைக்கட்டும்; புத்தூரு பொகைஞ்சு போகட்டும்' ன்னு சாபங் குடுக்குறா. தன்ன நெருப்புலே எறங்கிப் பத்தினியின்னு நிருபிக்க ஆதரவு காட்டுன மத்தவங்கள வாழ்த்திச் சொல்லுறா. 'கிளிமங்கலம் எளமங்கலம் ஆகட்டும்; கார்மாங்குடி கனகதண்டி ஏறட்டும்; சத்தியவாடி சரக்கெடுத்துப் பெருகட்டும்'.

"புத்தூருக்காரங்களும் நேமத்துக்காரங்களும் வாயடைச்சுப்போயி நிக்குறாங்க. அவ நெருப்ப மூட்டி எறங்கிட்டா. 'அய்யோ, நம்மளாலதான ஒரு பத்தினிப் பொண்ணு நெருப்புல ஏறங்கிடுச்சு! நானும் கூடப்பொறந்த அண்ணனா இதே நெருப்பிலே எறங்கிடுறேன்' ன்னு அந்த மாட்டுக்காரப் பையனும் அவ பின்னாலியே நெருப்புலே எறங்கிட்டான். எரிஞ்சுப்போன அவங்க ரெண்டுபேருக்கும் இங்கே பக்கத்து இலுப்பத் தோப்புலே செல எழுப்பி வச்சாங்க. அந்த எடம் கோயிலாயிடுச்சு. அண்ணங்காரன் மாதிரி உருகி உசுரவிட்டதால 'அண்ணன் - பெரியநாயகி' ன்னு அவம் பேரையும் சேர்த்துப் பேரு வந்துடுச்சு. அண்ணையிலேர்ந்து அந்தப் பொண்ணு கோத்திரத்துலப் பொறந்த பொண்ணுங்க யாரும் இந்தக் கொமட்டிக்காயை தொடறதில்ல. எங்கெங் கெல்லாம் 'விழுப்பதரிய' கோத்தரத்துக்காரங்க இருக்காங்களோ அவங்கெல்லாம் அப்பப்ப வந்து குலதெய்வமா இதக் கும்புடுறாங்க!"ன்னு அம்மா கதைய முடிச்சாங்க.

'அப்புறம் அந்த் சாபம் என்னம்மா ஆச்சு?" என்று தங்கை கேட்டாள்.

"பத்தினிப் பொண்ணு விட்ட சாபமாச்சே - பலிக்காமப் போவுமா? இண்ணிக் கும் நேமத்துக்குப் போனா ஒரே நெருஞ்சி முள்ளாத்தான் இருக்கு. புத்தூரு அடிக்கடி நெருப்புப் புடிச்சிக்கிட்டு புகைஞ்சபடிதானே இருக்கு. கிளிமங்கலம் எப்பிடி வறண்டு காடாக் கெடந்த ஊரு? முன்னல்லாம் நெல்லுக்கு நம்ம ஊருக்குத் தானே வருவாங்க வாங்கிப் போறதுக்கு? இப்போ நெலம ரொம்ப மாறிப்போச்சு.கேணி வெட்டி, ஆயில் இஞ்சின் போட்டு முப்போகமும் நெல் வெளைச்சி ஊருக்கே இளமை வந்துட்டாப்பல - இளமங்கலம் ஆயிப்போச்சு! கார்மாங்குடியும் இண்ணைக்கு வச்தி பெருகி, கல்லுக் கட்டமெல்லாம் மெத்தை வீடாமாறி, பொன்னும் பொருளுமாக் கொழிக்குது. சத்தியவாடியும் கரும்பு போட்டு, வெல்லம் காய்ச்சி, சரக்கெடுதுக்குக்கிட்டு நாடுகண்ட மட்டும்போயி, வித்துக் கொழிக்குது. பொறந்த ஊருதான் போக்கத்துப் போச்சி!"

இப்பொழுது நினைத்துப் பார்த்தால், ஊருக்கு ஊர் இப்படி ஒரு பத்தினிக் தெய்வம் இருப்பது தெரிகிறது. எதற்கோ, எந்தக் கொடுமை காரணமாகவோ தீக்குளித்த பெண்களுக்கு இப்படி ஒரு அங்கீகாரம்! சேத்தியாத்தோப்புக்கு அருகே சென்னை- கும்பகோணம் சாலையில் இப்படி ஒரு பத்தினிக் கோயில் - 'தீப்பாய்ந்த நாச்சியார் கோயில்' இருப்பது நினைவுக்கு வருகிறது. இந்தக் காலத்தில் இப்படி தீகுளிக்கிற அல்லது தீக்குளிக்க வைக்கப்படுகிற பெண்களுக்கெல்லாம் கோயில் எழுப்புவதானால் இடம் காணாமல் போய்விடுமோ என்று சிந்தனை ஓடுகிறது.

(தொடரும்)

கால நதிக்கரையில் - 1

கால நதிக்கரையில்...... (நாவல்) - அத்தியாயம் - 1

நடத்துநரின் ஊதல் 'ப்ர்ர்ர்.....ரிக்' என்று சிக்கனமாக ஆணையிட, பேருந்து நிற்கிறது.

"கொல்லத்தங்குரிச்சி...........கொல்லத்தங்குரிச்சி எல்லாம் எறங்கு!" என்கிறார் நடத்துநர். ஓரிருவர் இறங்குகின்றனர். சிதம்பரம் சிந்தனை கலைந்து வெளியே பார்க்கிறார்.

'கொல்லத்தங்குரிச்சியா? இங்கேயே இறங்கிக் கொள்ளலாமே!'

உடனே சிந்தனை செயல்பட, கைப்பெட்டியையும், தோள்பையையும் எடுத்துக் கொண்டு எழுந்து கொள்கிறார்.

"அய்யா, நீங்க புத்தூருக்கில்ல சீட்டு வாங்கி இருக்கீங்க. அது அடுத்த நிறுத்தம் - உக்காருங்க!" என்கிறார் நடத்துநர்.

"ஆமா! ஆனா இங்கியே எறங்கிக்கிறேன்" என்று புன்முறுவலுடன் சொல்லி விட்டு இறங்குகிறார். நடத்துநர் புருவம் நெருக்கி ஒரு கணம் அவரை நோக்கிவிட்டு, 'சரி, நமக்கென்ன?' என்று, அவர் இறங்கியதும் "போலாம் ரை.. ரை.." என்று கத்துகிறார். பேருந்து புழுதியைக் கிளப்பிக் கொண்டு சீறிப் பாய்கிறது.

தோள்பையை மாட்டிக் கொண்டு, கையில் பெட்டியுடன் மெதுவாக நடக்கிறார். அவரைப் பொறுத்தவரை, அவரது ஊர் இங்கேயே துவங்கிவிடுகிறது என்று நடத்துநருக்கு எப்படித் தெரியும்? அதோ தூரத்தில் தெரிகிறதே - அந்த ஆற்றுச் சரிவுதான் ஊரின் ஆரம்பம்.

ஒரு கூப்பிடு தொலைவு நடந்து, ஆற்றின் விளிம்புக்கு வருகிறார். ஆற்றின் சரிவுக்கு முன்பாகவே நீண்ட பாலம் தொடங்கி விடுகிறது. பாலத்தின் முனையில் நின்று பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, ஆற்றின் பரப்பை கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, ஒரு 'பருந்துப்பார்வை' யாகப் பார்க்கிறார். கண்ணுக்கெட்டியவரை இருபுறமும் வெண்மையான மணல்தான் தெரிகிறது. கூர்ந்து பார்த்தால், தொலைவில் ஒரு சிறு வாய்க்கால் போல சன்னமான நீரோட்டம் வளைந்து நெளிந்து பச்சைப் பாம்பு தன் மெல்லிய உடலால் வளைந்து நெளிந்து ஊர்வதுபோல தோற்றம் தருகிறது. பாலத்தினடியில் சற்று அகன்று கால்கள் பிரிந்து, பாதத்தைக்கூட முழுதும் நனைக்க முடியாத நீர் மட்டத்துடன் பளிங்குபோல் நீரோட்டம் கிழக்கு நோக்கி ஊர்ந்து செல்கிறது.

இது ஸ்வேத நதி - வெள்ளாறு. மெய்கண்டதேவர் அவதரித்த புண்ணியத் தலம் - திருத்தூங்கானைமாடம் எனும் பெண்ணாகடம் - இதன் கரையில் பத்துகல் தொலைவில் இருக்கிறது. புண்ணியத்துறைகள் ஏழும் இதன் கரைகளில்தான் உள்ளன. புனிதமும் தொன்மையும் மிக்க இந்த ஆற்றின் கரையில்தான் நாம் பிறந் தோம் என்கிற பெருமிதம் ஒரு கணம் அவருள் எழுந்து பரவுகிறது.

இவ்வளவு சாதுவாக அழகாக ஓடுகிற நீரோட்டம்தான் வெள்ள காலத்தில் எப்படி ஆக்ரோஷமாய் சீறிப் புரண்டோடும்? சின்ன வயதில் அப்படிப் பார்த்த வெள்ளக் காட்சிகள் மனத் திரையில் விரிகின்றன.

ஒருமுறை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அடைமழை. தெருவெல்லாம் மழை நீர் பெரு ஓடைபோலப் பிரவகித்து வேகமாய் ஓடியது. வெள்ளாற்றில் பெருவெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு 'ஹோ என்ற பேரிரைச்சலுடன் வேகமாக வெகு தொலைவில் இருந்த சமுத்திரத்தை அவசரமாய்ச் சந்திக்க விழைகிற மாதிரி பரபரத்து ஓடியது. மழைத்தூரல்களினூடே ஊரே திரண்டு வெள்ளத்தை வேடிக்கை பார்க்கப் போனது. அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு சின்னப் பையனான சிதம்பரமும் போனார்.

அப்பா! இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. என்ன உக்கிரம்! என்ன இழுப்பு! என்ன இரைச்சல்! நொப்பும் நுரையுமாகப் பொங்கி, பெரிய காபி ஆறு ஓடுகிறமாதிரியான காபி வண்ணத்தில் நீர்ப் பரப்பு தெரிந்தது. மரங்களும் கிளைகளும், ஆடுமாடுகளும் வேகமாக இழுத்துச் செல்லப் பட்டன. கரையிலிருந்த பலர் வெள்ளத்தில் பாய்ந்து நீந்தி கைக்குக் கிடைத்த கிளைகளைக் கரைக்கு இழுத்து வந்தார்கள். கூரைகளும் கூட, மேலே தலைநீட்டிக் கொண்டிருந்த பாம்பு களுடன் மிதந்து போயின. மூன்று நாட்கள் ஆயின நீர்மட்டம் குறைய. அப்போதும் கூட இறங்க முடியாத ஆழமும் இழுப்பும் இருந்தன. அக்கரைக்குப் போகவும் திரும்பவும், தெப்பக்கட்டைகளை மிதக்கவிட்டு குழுகுழுவாக 'ஷட்டில்' அடித்தார்கள். அதற்கென்றே பழக்கப்பட்ட சேரி ஆட்கள் லாகவமாக கட்டையுடன் மிதந்து கயிறு கட்டி இழுத்து பிரயாணிகளைக் கரை சேர்த்தார்கள். இறங்கிய இடத்திலிருந்து ஒரு கூப்பிடு தொலைவு தள்ளித்தான் எதிர்க்கரையில் ஏறமுடியும். ஒரு வாரத்துக்கு ஆட்களுக்கு நல்ல வசூல்!

வெயில் காலத்திலும் வரும்படிக்குப் பஞ்சமிராது. வெள்ளம் வற்றி சிற்றாறாய் சாதுவாக ஆறு ஓடும்போது, வெள்ளம் பாய்ந்து வறண்ட மணற்பரப்பாக இரண்டு பர்லாங்குக்கும் அதிகமாய் நீண்ட வண்டிபாட்டையுடன் காட்சி தரும். விருத்தாசலம் சந்தை நாட்களிலும் பிற விசேஷநாட்களிலும் ஆற்றைக் கடக்க பாரவண்டிகளுக்கு இந்த ஆட்களின் உதவியின்றி முடியாது. பாரவண்டிகளைத் தள்ளி விடவும் எப்போதாவது அந்த வழியே வரநேரும் கார்களைக் கயிறு கட்டி அக்கரைக்கு இழுத்துப் போகவும் நல்ல கூலி கிடைக்கும்.

ஒரு சமயம் மாமா மகன் திருமணத்துக்கு உடையார்பாளையத்திலிருந்து விருத்தாசலத்துக்குப் பெண் வீட்டுக்குச் சென்ற ஒன்பது கார்கள் இப்படித்தான் கரையேற்றப் பட்டன. அப்பா முன்னேற்பாடாகச் சொல்லி வைத்தபடி பத்திருபது ஆட்கள் தாம்புக் கயிறுகளுடன் காத்திருந்தார்கள். அந்த வழியே காரைக் காண்பதே அதிசயம். அதிலும் ஒன்பது கார்கள் பல வண்ணங்களில் வரிசையாக வருவதென்றால்? ஊரே திரண்டு ஆற்றங்கரைக்கு வந்துவிட்டது வேடிக்கை பார்க்க.

ஒவ்வொரு காராகக் கயிறுகட்டி முன்னே நாலுபேர் இழுக்க பின்னாலிருந்து நாலுபேர் தள்ளிவிட கார்கள் அனைத்தும் இந்த எதிர்க்கரை மேடு வரை கொண்டு வந்து விடப்பட்டன. அந்தக் கார்கள் ஒன்றினுள் தானும் சிறுவனாக அமர்ந்திருந்து பார்த்தது பசுமையாய் இன்னும் நினைவில் ஆடுகிறது.

இப்போது வெள்ளத்தைக் கடக்க தெப்பமும் தேவையில்லை; அடிக்கடி காரும் லாரியும் பேருந்துமாய் போவதால் நின்று பார்க்க யாருக்கும் நேரமுமுமில்லை; அது ஆச்சரியமாகவும் இல்லை. பாலம் கட்டி வெகுநாட்கள் ஆகியிருப்பது தெரிகிறது.

மெல்ல நடந்து பாலத்தின் மேலாகப் போகாமல், ஆற்றுச் சரிவில் சரிந்து இறங்கி மணல் வழியே நடந்து நீரோட்டத்துக்கு வந்தார். தோள்பையையும் கைப்பெட்டியையும் நீர்ப்பரப்பைத் தாண்டி ஒரு புல்திட்டில் வைத்து விட்டு திரும்ப நடந்து நீரோட்டத்து வந்தார். குனிந்து தெளிந்த நீரில் கைகளைத் தேய்த்து அலம்பிக் கொண்டு நாலுகை அள்ளிப் பருகினார். புத்துணர்வு வந்தமாதிரி ஒரு பரவசம் படர்ந்தது.

ஆகா! இது நமது ஊர்த் தண்ணீர். இது நமது மண். உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவுகிறது. பிழைப்புக்காக எங்கெங்கோ சுற்றினாலும், எத்தனை ஆண்டுகள் வெளியூரில் வாழ்ந்தாலும் நாம் பிறந்த மண் என்கிறபோது ஒரு பந்தமும் நெகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. காலுக்கடியில் கிச்சுக் கிச்சு மூட்டுகிறமாதிரி, மணலை அரித்து ஓடுகிற நீரின் ஸ்பரிசம் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்க, சற்றுநேரம் நிற்கிறார். எதிரே, தான் இறங்கி வந்த மேட்டுச் சரிவைப் பார்க்கிறார்.

பள்ளிப் பருவத்தில், இங்கு பதினெட்டாம் பெருக்கு படைக்கவும், தைப்பூசம் தீர்த்தவாரிக்கும் வரும்போதும் இந்த நீர்மட்டத்திலிருந்து எதிரே பார்த்தால், சாலை யின் சரிவின் இரு பக்கமும் மிகப் பிரம்மாண்டமான இரண்டு ஆலமரங்கள், ஊரின் துவாரபாலகர்போல - நாலாபக்கமும் கிளைவிட்டுப் பரந்து விழுதுகள் தொங்க நிற்கிற காட்சி பிரமிப்பைத் தரும். அவற்றின் அடிவேர்கள் சாலை மட்டத்திலிருந்து ஆற்று நீர் மட்டம் வரை நாலுஆள் உயரத்துக்கு, தடித்து பின்னிப் பிணைந்து, இடையிடையே குகைகள் போல இருண்ட சந்துகள் தெரிய, ஆயிரங்கால்களுடன் நிற்பது போலத் தோன்றும். இன்று அவை இல்லை. "ஆற்றங்கரையின் மரமும் அரசரிய வீற்றிருந்த வாழ்வும் விழும்" என்ற ஆரம்பப் பள்ளியில் படித்த ஔவையாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நிலையாமைக்கு எவ்வளவு யதார்த்தமான உதாரணம்!

கால ஓட்டத்தில் எத்தனை மாற்றங்கள்! இந்தப் பிரம்மாண்ட மரங்கள் ஒருநாள் இல்லாமல் போகும் என்று அன்று நினைத்திருப்போமா? இந்த ஆறுதான் எத்தனை முறை தெற்குப் பக்கமும் வடக்குப் பக்கமுமாய் மாறிமாறி தன் பாதையை மாற்றி பெரு வெள்ளக் காலங்களில் விளை நிலங்களை எல்லாம் அழித்து மணற்பாங்காக மாற்றி இழப்பை உண்டாக்கி இருக்கிறது!

ஊரிலும்தாம் எத்தனையோ மாற்றம்! இருபத்தைந்து வயதில் வேலை நிமித்த மாய் ஊரை விட்டுப் போய் வடக்கே எங்கெங்கொ சுற்றி, ஓய்வு பெற்ற பிறகு சொந்த மண்ணை, அதன் மாறங்களைத் தரிசிக்க வந்திருக்கிறவருக்கு இன்னும் எத்தனைவித மாற்றங்கள், பரிணாம வளர்ச்சிகள் அதிர்ச்சியும் ஆனந்தமும் தரப்போகின்றனவோ? சில்லென்ற நீர்ப்பரப்பிலிருந்து எழுந்து லேசாக முகத்தில் வீசும் மென்காற்றை அனுபவித்தபடி கரை ஏறினார்.

(தொடரும்)

கடித இலக்கியம் - 50

கடிதம் - 50

('சந்திரமௌலி'என்கிற பி.ச.குப்புசாமி கவிஞர்ஆதிராஜுக்கு எழுதிய கடிதங்கள்)

திருப்பத்தூர்.வ.ஆ.
1-3-65

பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.

ஜெயகாந்தனின் 'உன்னைப்போல் ஒருவன்' படம் அருமையாக வந்திருக்கிறது.

"இந்தப் படம் சேரிவாழ் மக்களைப் பற்றியது; அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றியது; அவர்களின் ஆத்மாவைப் பற்றியது. எனவே இதுவும் அவர்கள் வாழ்வைப் போலவே மெதுவானது; மந்தமானது; தேக்கமானது." - என்கிற சிறு விளக்கத்தோடு படம் ஓடத் துவங்குகிறது.

சரியாக இரண்டு மணி நேரம் ஐந்து நிமிஷம் படம் ஓடுகிறது. 11145 அடி.

சில விமர்சனங்களைச் சுட்டிக் காட்டுகிறேன். படத்தின் சிறப்பை அவை விளக்கும்.

காமராஜ்:

"இந்த மாதிரிப் படங்களையெல்லாம் அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி, ஜனங்களுக்கு இலவசமாகக் காட்டி அவர்கள் ரசனையை மாத்தணும்."

ஸாதூல் என்கிற உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு விமரிசகர்:

"மனித மனத்தில் பெரிய அளவுக்குச் செயல் விளைவுக¨ª உண்டாக்குகிற படங்களின் வகையைச் சேர்ந்தது அது."

இல்லஸ்ரேட்டட் வீக்லி (7 - 2 -65) :

யதார்த்தம் என்பது - ஜெயகாந்தன் சத்யஜித்ரேயை வழிகாட்டியாகக் கொண்டிருந்த போதிலும் - ரேயை விட ஜெயகாந்தனிடம்தான் உண்மையில் உள்ளது. இதைப் போன்ற படங்கள் இந்தியாவிலேயே மிகக் குறைவு. ஜெயகாந்தன் நேர்மையானவர்; துணிவு மிக்கவர்; புரட்சிகரமானவர். விரைவில் இவர் ரேயைப் போல் இன்னொரு தனி நட்சத்திரம் ஆகிவிடுவார்"

அநேகமாக இவ்விஷயங்களை நீங்கள் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். மொத்தத்தில், படத்துக்கு ஜனாதிபதி பரிசு நிச்சயம் கிடைத்தே தீரவேண்டும்.

இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம். ஜெயகாந்தன் சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கிறார்.

விவேகாநந்தரின் 'ஞானதீபம்' படித்ததாக எழுதியிருந்தீர்கள். எந்தச் சமயத்தினருக்கும் பொதுவாகப் பயன்படக்கூடிய சொத்துக்கள் ஹிந்துசமயத்தில் சில உள. அவைகளுள் சரஸ்வதி, கவிதை, சமஸ்கிருதம் போலவே விவேகாநந்தரும் ஒருவர்.

'ஞானதீபம்' இரண்டாவது பாகம் படியுங்கள். இந்தியாவின் வரலாறு, இந்தியா வளர்ந்தவிதம், இந்தியாவின் சமண பௌத்த சாக்த சமயங்களுக்கு, ஹிந்து சமயத்தோடு உள்ள உறவு - இவைகளையெல்லாம் பிரமிக்கத்தக்க வகையிலே ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

விவேகாநந்தரைப் படிப்பதால் ஹிந்து சமயத்தினருக்குச் சமய ஞானமும் அது பற்றிய பலமுமே லாபமாகக் கிடைக்கிறது என்பது பலரது அறியா முடிவு. ஆனால், உண்மையில் விவேகாநந்தர் ஹிந்து சமயத்தினருக்கு மட்டும் பயன்படக் கூடியவரல்ல. வாழ்வுத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள ஹிந்து சமயமும், அறிவுபூர்வமான - ஆஸ்திகத்திற்கு ஒருவகையில் நாஸ்திக 'எதிர்விளைவு மருந்தை' அளிக்க வந்த சமண சமயமும், மனிதன் இறுதியில் ஆசையை நிராகரிக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்த வேண்டி அவன் பருவங்களின் வேறு இயல்புகளுக்கு வழிவகுக்கத் தவறிய பௌத்த சமயமும் - எல்லாம் விவேகாநந்தரால் பயன்பட முடியும்.

இந்தியாவில் ஒர் ஆன்மீகவாதிக்குச் சமுதாயத்தில் உள்ள பொறுப்பும், சமுதாய வாதிக்கு ஆன்மீகத்தில் உள்ள பொறுப்புமே விவேகாநந்தர் அறிவுறுத்துபவை.

சமுதாயமும், ஆத்மாவும் எல்லா சமயங்களுக்கும் பொது அல்லவா?

கம்பராமாயணம் படித்து வருகிறீர்களா? கவிஞர்களுக்கு அது ஒரு தெய்வீக மருந்து. தேவர்கள் ஒரு காலத்தில் அமிர்தம் உண்டதை நான் சிறுவயதில் கேட்டு அதற்காகப் பொறாமைப் பட்டதுண்டு. ஆனால் கவிஞனுக்கு கம்பராமாயணத்திலிருக்கிற விருந்து தேவர்களுக்குக் கூட வேறெங்கும் இருக்காது. எனவே எப்பாடு பட்டாவது கம்பனை முதலிலிருந்து கடைசிவரை ஒருமுறை படித்துவிடுங்கள். பாரதி யின் 'பாஞ்சாலி சபதத்தை'யும் அவ்வாறே சிபாரிசு செய்கிறேன்.

நீங்கள் ஆற்காட்டிலிருந்து கொண்டுவந்ததாக எழுதிய புஸ்தகங்களுள் 'சித்தார்த்தன்' அவ்வளவு நன்றாயிருக்காது. மற்றவை பயனுள்ளவையே! படித்து முடியுங்கள்.

என்னிடம் ஜவஹர்லால் நேருஜியின் ஆங்கிலப் பிரசங்கங்கள் முழுத் தொகுதியாக இருக்கிறது. மெள்ள மெள்ளப் படித்து வருகிறேன். மற்றபடி, வேறு புஸ்தகங்களெதுவும் சமீபத்தில் படிக்கவில்லை. Hindu Marriage Bill பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்டபொழுது நேருஜி ஆற்றியிருக்கிற உரை மிகப் பிரமாதமாயிருக்கிறது. ஒரு பெரும் தத்துவ ஞானியினுடைய உரை அது.

'புதுமைப்பித்தனின் கட்டுரைகள்' அங்கு லைப்ரரியில் இருந்தால் எடுத்துப் படியுங்கள்.

நமது நண்பர்களைப் பற்றி எழுதுங்கள். நண்பர்கள் பெருஞ்செல்வம் என்று எழுதினேன். அப்படி இருந்த போதிலும் யாரிடத்தும் என்னை நான் பூர்ணமாக வெளிப் படுத்திக் கொள்ளவில்லை. நானோ அல்லது நண்பர்களோ - யார் காரணம் என்று என்னால் சொல்ல முடியாது. எதுவோ அதற்குக் காரணம். நம் சிதம்பரம் அடிக்கடி கடிதம் போடுகிறது.

புதிய நண்பர்களுள் ஒருவரை, இன்னும் உங்களுக்குச் சரிவரத் தெரியப் படுத்தவில்லை என்று நினைக்கிறேன். சிதம்பரத்தின் ஹெட்மாஸ்டர் - தற்போது மங்கலம்பேட்டை(தெ.ஆ)யில் இருக்கிறார் - சபாநாயகம் என்பவரைப் பற்றிச் சொல்லி இருக்கிறேனா?

நல்ல நண்பர். நமது ரகம். ஓவியம், புகைப்படம், சங்கீதம், எழுத்து, ரேகை என்று பல விஷயங்களில் - பரிச்சயமுள்ளவர். எழுத்து சம்பந்தமாக நம்மோடு பூர்ண ஒற்றுமையுள்ள அபிப்பிராயங்களைக் கொண்டவர். 'சபா' என்கிற பெயரில் கதைகள்எழுதியிருக்கிறார். எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார். நானும் பதில் போடுகிறேன். சற்று அந்தரங்கமான நண்பராக விரைவில் அமைவார். சந்தர்ப்பம் நேரும்போது தங்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்விக்கிறேன்.

தங்களது அந்த நீண்ட கடிதத்தில் ஒரு அருமையான வரி இருந்தது - "வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது" என்று.

வாழ்க்கை மாறித்தான் விட்டது. மிக மிக மாறிவிட்டது.

கடிதம் எழுதுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

( இத்துடன் இக் கடிதஇலக்கியத் தொடர் முடிவுறுகிறது. - வே.சபாநாயகம் )

கடித இலக்கியம் - 49

கடிதம் - 49

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-65

பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.

முன்பொருமுறை எழுதி அனுப்பினேனே, 'தமிழ் ஒளி'யின் கவிதைகள் சில, அவைகள் எப்படி? நீங்கள் அவற்றைக் குறித்து எழுதவில்லை என்று கருதுகிறேன். அதிலே 'கண்ணம்மா பாட்டு' எனக்கு மிகவும் பிடித்தது. அதில் தென்படும் ஆழ்ந்த
சோகம் அற்புதமானது. என் நினைவுகளை அது அடிக்கடி தனது அந்தச் சோகத்தால் இப்பொழுதெல்லாம் இடைமறிக்கிறது. 'தமிழ் ஒளி'யின் உள்ளம், வண்ணங்கள் குழைப்பதில் தெய்வத்தின் வரப்பிரசாதம் பெற்ற ஓர் அபூர்வ சித்ரக் கலைஞனைப் போல் எத்தகைய சௌந்தர்யத்தோடிருக்கிறது! இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க் கவிஞன் அவன். அவனுக்கு டி.பி. அவனுக்கு இருப்பிடம் இல்லை! ஏன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே தெரியவில்லை!

'தமிழ் ஒளி' அந்த நாட்களில் எழுதிய 'வீராயி' என்கிற காவியத்தை, சென்னை செல்லும்போதெல்லாம் 'கன்னிமாரா' என்கிற கடலுக்குள் வலைவீசித் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. வேறு, புதிதாகவும் எதுவும் கிடைக்கவில்லை.

'தமிழ் ஓளி' இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க்கவி என்கிற விஷயத்தை நான் பிரஸ்தாபித்தபொழுது, வல்லிக்கண்ணன் வீட்டில் தி.க.சிவசங்கரன் என்ற விமரிசக நபருக்கும் ('தாமரை'யில் பார்த்திருப்பீர்கள்) எனக்கும் அது சம்பந்தமாக அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. கடைசியில், அதுபற்றி ஒரு பட்டிமன்றத்திலேயே பேசத் தயார் என்று அறிவித்துவிட்டேன்.

மறந்திருக்கக் கூடும் - இப்பொழுது நினைவுகூர்வதில் நீங்கள் மகிழக்கூடும் என்று கருதி அவனது சில பழைய கவிதைகளை எழுதுகிறேன்.

சூறைக் காற்று..........மழையைப்பற்றி:

'மக்கள் தொடுத்திடும் யுத்தம் - என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று - பெருந்
செல்வர் மணிமுடி சட்டம் சிறைகள்
பொக்கென வீழ்வது போலே - யாவும்
போயின! பொட்டென்று விட்டது காற்று
செக்கச் சிவந்தது வானம் - அன்னை
சேல்விழி காட்டினள் காலை'.

* * * * * * * * * * * * * * *

'தட்டி யெழுப்பினாள் காற்றை - அது
தாவி யுருட்டுது மாமரக்காட்டை'

* * * * * * * * * * * * * * *

கார்த்திகை மாதத்து மின்மினிகளைப் பற்றி வருணனை:


'கீர்த்தி இளமை கிழியாப் பழம் பெருமை
சீர்த்தியிவை நான்கும் சிறப்புரு பெற்றதுபோல்
தென்னையின் பாளை சிதறும் புதுமலர் போல்
பொன்னை உருக்கும் புதுமை போல், மற்றும்
அகழ்வாரைத் தாங்கும் அவல நிலத்தில்
புகழுருவம் ஒன்று புறப்பட்ட தோற்றம் போல்
பொய்யே மலிந்த புலையிடையே நன்னெஞ்சம்
'ஐயோ' என்றேங்கி அழுத கண்ணீர்த்துளி போல்
பிரிந்தார் அகத்திற் பிறந்ததோர் வேட்கை
எரிந்த பொரியாகி எங்கும் பறந்தது போல்
நெற்றித் திலகம் நிறம் பெற்றெழுந்தது போல்
சுற்றித் திரிந்து சுடர்கின்ற பொன்விளக்கு
சொல்லுக் கடங்காது தோன்றுகின்ற கற்பனைபோல்
அல்லுக்கடங்காத ஆனந்த மின்விளக்கு!
ஐப்பசித் தூதை அனுப்பி வைத்துக் கார்த்திகையைக்
கைப்பிடித்த வாளின் ககனத் திருவிளக்கு!
பூவின் இதழ்ஒன்று பொன்சிறகு பெற்றதுபோல்
நாவின் சிறுசொல் நறுக்குப்போல், நல்லோர்கள்
வாழும் இடத்திற்கு வாழ்த்தாகி வான்விருந்தாய்ச்
சூழும் சுடர்போன்ற தோற்றங்காண்! மின்மினிகாண்!'.

இங்கே எனது இலக்கிய முயற்சிகள் சற்று ஒய்ந்திருக்கின்றன. ஒருக்கால், நிரந்தரமான சாவுக்கு இவை முன்னறிகுறிகளோ என்னவோ? P.U.Cக்குப் படிக்கிற ஒரு சாக்கு. ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. முன்பு விகடனுக்கு ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாய்ச் சொன்னேனே, அது இன்னும் ஆரம்பப் பாராவைக் கூடத் தாண்டவில்லை.

சிறுகதை என்றால் என்ன என்பது ஓரளவுக்குப் பிரக்ஞையில் நன்றாக உறைத்து விட்டது. அதன் dimensions அனைத்தையும் அறிந்திருக்கிற காரணத்தால், நம் காரியங்களை அளவுகடந்த ஜாக்கிரதையுணர்ச்சியோடு செய்ய வேண்டியிருக்கிறது. இடையில், சேகரிக்கிற ஒவ்வொரு இலக்கியத் தகவலும் நம்மை மிரட்டிக்கொண்டிருக் கின்றன. ஓ, இலக்கியம்! அது பெரிய விஷயம் -

- அதே சமயத்தில், வற்றாது வரளாது சமயாசமயங்களில் பீரிட்டுக் கிளம்புகிற நம் உற்சாகமும் இன்னும் ஓயவில்லை.

எனவே பார்ப்போம்! ஜெயகாந்தன் சொல்கிறபடி, "சரஸ்வதி தேவியின் அருள் பெற்று, அவள் கரம்பற்றி நடந்த எத்தனையோ கோடி கலைக் குழந்தைகளில்" நாம் ஒன்றாக முடியாதா?

'சரஸ்வதி' என்கிறது வெறும் சமயத்தைக் குறிக்கிற பிரதிமை மட்டுமன்று. அது ஒரு கலையின் பெரிய உருவகம். எனவே, ஜைனராகிய உங்களுக்கும் அவ்வுருவத்தின் அழகு விளங்காது போகாது. பாஞ்சாலி சபதத்தின் ஆரம்பத்தில் பாரதி எழுதுகிறானே அதைப் பாருங்கள்:

அவள் - அந்த சரஸ்வதி -

வேதத் திருவிழியாள் -அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்
போத மென் நாசியினாள் - நலம்
பொங்கும்நல் சாத்திர வாயுடையாள்
கற்பனைத் தேனிழதாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்'.

- எப்பொழுதாவது கவிதைகள் எழுதுகிறேன். ஆயினும் கவனம் சிறுகதைகளின் மீது அதிகம் காதல் கொள்கிறது. இது சிருஷ்டி விஷயத்தில் மட்டும்தான். ரஸனை, வாசிப்பு, லயிப்பு எல்லாம் கவிதைதான். அல்லும் பகலும் வாய் கவிதையையே அலப்பிக்கொண்டிருக்கிறது. படிப்பதும் கவிதையே. சிறுகதைகளை தொடுவதுமில்லை.

- ஏனெனில் நாம் படிக்கிற தகுதியுள்ள சிறுகதைகள் இன்று தமிழ்நாட்டில்
பிரசுரமாவதேயில்லை - ஜெ.கா.வைத் தவிர்த்து.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 48

கடிதம் - 48

திருப்பத்தூர்.வ.ஆ.
14 - 2- 65

பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களது நீண்ட கடிதம் கிடைத்தது. நெடுநாட்களுக்கப்புறம் உங்கள் கையெழுத்தை ஒரு நாலு பக்கத்துக்குமேல் பார்க்க நேர்ந்தது வெகுவாக சந்தோஷ மளித்தது. அதற்கு நன்றி கூறுகிறேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகுஅதற்கு இப்போது தாமதமாகப் பதிலளிப்பதற்காக மன்னிக்கவும் கோருகிறேன்.

தங்களது கடிதம் வந்த இரண்டொரு நாட்களிலேயே நான் சென்னை செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டு விட்டது.

ஆனால் சென்னையிலிருந்து வந்தபிறகு பல வேலைகள் குறுக்கிட்டு விட்டன. சற்று ஓய்வுடன் வந்த பொங்கல் விடுமுறையையும் வெள்ளக்குட்டையிலிருந்து கழிக்க வேண்டி வந்தது. அடுத்து பல நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டின் பிரஜாவுரிமையை ரத்து செய்துவிட்டு பிற மாநிலங்களுக்குக் குடி போய்விடலாமா என்கிற அளவுக்கு சுயஜாதியின்மீது வெறுப்பைக் கிளப்புகிற தமிழக அரசியலின் அசிங்கங்கள்....அக்கிர மங்கள்..... ஆபாசங்கள்..... இத்யாதி.

- இவைகளைக் கண்டு சும்மாயிருக்க முடியவில்லை. 'விவேகாநந்தா சங்கம்' என்று ஒன்றைத் துவக்கினோம். மாணவர்கள் என்கிற மிருகங்களின் மந்தை மீது உள்ளூரில் ஒரு அறிக்கைத் தாக்குதல்........ இடையில் போலீஸ் விசாரிப்பு...... அது முன்னிட்ட பரபரப்பு....... பள்ளியில் நிறைய பாடங்கள் பாக்கி...... P.U.C க்கான படிப்பு....... ஜெயகாந்தனின் படத்துக்குச் சில ஏற்பாடுகள்...... பஞ்சாயத்துத் தேர்தல்கள்.....

இக்காரணங்களால் கவிதை உணர்வோடு தங்களுக்கு எழுதப்பட வேண்டிய பதில் தாமதமாகித் தவறிப் போயிற்று. எனவே தாங்கள் மன்னிக்கலாம்.

இப்பொழுது இந்தப் பதிலில், தங்களது கடிதத்திற்குப் பதிலளிப்பதா, இத்தனை நாளைய இடைவெளியில் நிகழ்ந்த விஷயங்களை எடுத்துரைப்பதா, அல்லது புதிதாய் மாறுதல் கண்டு வளர்ச்சியடைந்துள்ள அரசியல், சமூக, தத்துவ அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதா என்று குழம்பி, எல்லாவற்றையும் எழுதுவது என்று தெளிந்து எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

எனது பெங்களூர்ப் பிரயாணத்தைப் பற்றி விசாரித்திருந்தீர்கள். அது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பிரயாணம். ராகவன் என்று எழுதியிருந்தேனே, அவர் ஒரு BSc மாணவர். பிராமண வகுப்பு. ஆனால், அசல் ஐயர் தானில்லை நாம்தான் என்பதை ஆமோதிப்பவர். The most progressive type amoung students. பெங்களூருக்கு அழைத்துச் சென்றவர் அவர்தான்.

பெங்களூரில் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. பார்த்ததும், அறிமுகமானதும், அனுபவித்ததும், ஆனந்தித்ததும் வேறு உலகம்.

'போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்
பொலியுங் கள்வெறி துய்த்தல் மற்றோர்பால்'

- என பாரதியின் வரி ஒன்று உண்டு. துயர நினைவுகள் ஒழிக்கப்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு எப்பொழுதுமே ஒரு 'லிப்ட்' இருக்க வேண்டும். அதாவது உணர்வுகளின் உச்ச சிகரத்திலேயே நாம் இடையறாது உலவ வேண்டும். அதே சமயத்தில், இவை அற்பமாகிவிடாமல் ஞானபோதம் என்கிற நடுலட்சியம். இவைகளைப் பாரதி வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு ஒரே வழிதான்.

உங்கள் கடிதம் வந்த இரண்டொரு நாட்களில் சென்னைக்கு நானும் தண்டபாணியும் ராகவனும் சென்றோம். 'உன்னைப்போல ஒருவன்' படம் பார்த்தோம். பின்னணி இசை அமைக்க வேண்டி, சங்கீத டைரக்டர் வீணை சிட்டிபாபுவுக்கும், ஈ.வி.கே சம்பத்துக்கும், பிற நண்பர்களுக்கும், எங்களுக்கும் சென்ஸார்போர்டு படங் களைப் பார்க்கிற 'ப்ரிவியூ பாரடைஸ்' என்கிற தியேட்டரில் படம் போட்டுக் காண்பிக்கப் பட்டது. பிறகு தண்டபாணியும் ராகவனும் மதுரை சென்றுவிட்டார்கள்.

நான் சென்னையிலேயே இருந்து, ஜெயகாந்தன் சொல்லச் சொல்ல அவரது 'விழுதுகள்' இரண்டிரவுகள் எழுதிக் கொடுத்துவிட்டு, பிறகு திருப்பத்தூர் வந்தேன்.

பொங்கல் விகடனில் 'விழுதுகள்' படித்தீர்களா? அற்புதமான நாவல். அதில் வருகிற ஓங்கூர் சாமியார் ஜெயகாந்தனுக்கு உண்மையிலேயே பழக்கம். பிரம்மாதமான காரெக்டர்.

வையவனும், தண்டபாணியும் நலமே. ஆறுமுகமும் சௌக்கியம். பாட்டரிக்கு அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், மனசின் கவிதைத் தன்மையும் உருக்கபாவமும் சற்றுக் குறைகிற போதெல்லாம் அதன் ஊருக்குச் சென்று நிறைவு செய்துகொள்ள முடிகிறது.

தங்கள் கவிதைகளில் 'சிறைவிடு' என்கிறதும், 'கடல்தாண்ட முயல்கிற மனிதா' என்கிறதும் நன்றாயிருந்தன. முன்னதைவிடப் பின்னது எடுத்த வேகத்துடன் கடைசி வரை வந்திருந்தது.

'அஞ்சனக் கீற்றுக் கரையினுள்.......'

என்கிற மாதிரி வருகிற நயமும் லாகவமும்,

'என்றன் உலகம் பரந்தது - புவி
ஏழு கடல்களும் என்னதே'

என்றும் தொடர்ந்து 'என்றன் சிறை விடு' என்று முடிவது நன்றாயிருந்தது. வடிவத்தை விட விஷயம் நன்று.

'வேதாந்தப் பாட்டு' பல இடங்களில் நல்ல பாவத்துடன் வந்திருக்கிறது.
கடைசியில்,

'புகழ்ஞாலக்கரை வந்து சேரும் - உனைப்
புவிமாந்தர் மரியாதை சூழும்
இகழ்ஞாலக் கடல்தாண்டி சென்றோய் - உனக்(கு)
இருகரங் கூப்பினேன் ஐயா!'

என்று முடிகிற 'ஸ்டான்ஸா' கவிதையின் மொத்த மனோபாவத்துக்கும் சிகரம்.

ருஷ்ய புரட்சியைப் பற்றிய கவிதை வளமான சொற்கோவைகளோடு வந்திருந்தபோதும் அது பழைய விஷயம் (அதுவும் பாரதி பாடியது) என்பதால், எடுப்பாகத் தோன்றவில்லை. நாம் அவைகளைப் பாட வேண்டிய அவசியமில்லை.

'கண்கவரும் ஆலைகள்நற் றொழில் வளங்கள்
கட்டிடங்கள் சாலைகள்நீள் இருப்புப் பாதை
பண்ணை விளையுள்களென இவ்வாறெல்லாம்..........'

இங்கே கவிதை நடை வெகு லகுவாக, இன்பகரமாக இருக்கிறது.

'மண்ணகத்துத் தீமைகளின் தலைமைப் பீடம்'

சரியான போடு!

இவைகளோடு நீங்கள் எழுதிய அத்தனை கவிதைகளையும் நான் படித்து
விட்டேன் என்று எழுதி இருக்கிறீர்கள். ஒன்றிரண்டு தவறியிருக்கலாம். அல்லது,
இவைகளுக்கப்புறம் புதிதாக எழுதி இருக்கலாம். அவைகளை அனுப்பி வையுங்கள்.

'கடல்தாண்ட முயல்கின்ற மனிதா'வை கலைமகளுக்கு அனுப்புங்கள்.

'அன்பெனும் பாய்மரம் விரித்தால் - மக்கள்
ஆதரவெனுங் காற்று வீசும்'

'பொருளாசைக் கடல்மலை மோதும் - வீண்
பொறாமைச் சுறாமீன்கள் தாக்கும்'

என்பன போன்ற நல்ல உருவகங்களோடு அது சிறப்பாய் வந்திருக்கிறது.

இனி ஓய்ந்திருக்க மாட்டீர்கள்; ஓயவும் முடியாது எனக் கருதுகிறேன். நிறைய எழுதுங்கள். மற்ற எல்லோரையும் விட கவிஞன் பாக்கியசாலி. அவன் தொழில் மிக உயர்ந்தது. தனது ஆத்மாவை உணர்ச்சிகளின் உயிர்த் துடிப்போடு சிறுகச் சிறுக பிற ஹிருதயங்களுக்கு அனுப்பி, இறுதியில் பரம்பொருளைப் போல், அங்கிங்கெனாத படி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி, எல்லா உயிர்களிலும் அவனேயாகிறான்.

தங்கள்
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 47

கடிதம் - 47

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்')

திருப்பத்தூர்.வ.ஆ.
19 - 7 - 97.

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் கடிதம் கிடைத்தது. உடனடியாகப் பதில் எழுதாமைக்குக் காரணம், உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டு என்று, அதற்காக நாளூம் வேளையும் பார்த்தது தான்.

தங்களுக்கு ஏற்பட்ட பாரிசவாயு பாதிப்பினை அறிந்து அனவருமே அதிர்ச்சியடைந்தோம். நல்ல வேளையாக உடனே சென்னை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றதால் பெரும் பாதிப்பின்றி மீண்டிருப்பது பெருத்த நிம்மதியை அளிக்கிறது.

இறைவனருளால் வந்த ஆபத்து இவ்வளவோடு தவிர்ந்ததே என்று அவனுக்கு நன்றி செலுத்தினோம். பழையபடி கை நன்றாக எழுதமுடிகிறது என்பதறிய மகிழ்ச்சி.

அஞ்சற்க - சபா! நிமிர்ந்து நில்லுங்கள். நம் புண்ணியங்கள் நம் முதுகெலும்பைத் தாங்குகின்றன. நமது சிந்தனைகள் நமது மூளையைச் சேமப்படுத்துகின்றன. வாழ்வை ரசித்து ரசித்து உருகினோமே, அந்த ரசனை நம் உயிர்வாழ்வை இன்னும் நெடுங்காலம் ரட்சிக்கும். அஞ்சற்க!.

வைத்தியர்கள் வகுத்த விதிப்படி நடவுங்கள். உணவுக் கட்டுப்பாடு வெகு எளிது! "உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்" எனக் கருதிய மரபில் வந்த நமக்கு எல்லாமே எளிது!

படிப்பதையும் எழுதுவதையும் தொடருங்கள். தியானம் எப்பொழுதுமே புரிகிறீர்கள். உங்கள் வாழ்வு மிக அருமையாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்கிற அபூர்வமான திருப்தியும் தைரியமும் எஞ்ஞான்றும் நெஞ்சில் நிலவட்டும்.

இவையே நோயை விரட்டும் மந்திரங்கள்.

இறைவன், எப்பொழுதும் போல் இனியும் தங்களைக் காத்தருள்வான். அதற்கான பிரார்த்தனைகளை எங்கள் பூஜாவேளைகளின் போதெல்லாம் நாங்கள் புரிகின்றோம்.

விரைவில் நண்பர்களுடன் வந்து தங்களை நேரில் சந்திக்கிறேன்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

( இத்துடன், திரு.பி.ச.குப்புசாமி வே.சபாநாயகத்துக்கு எழுதிய கடிதங்கள் முடிவுறுகின்றன. அடுத்து இன்னொரு நண்பர் கவிஞர் ஆதிராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்கிறது. )