Wednesday, October 19, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 20.எழுத்தாளர் சந்திப்பு - 7. சுரதா

அக்டோபர் 1968ல், கவிஞர் சி.மணியின் 'நடை' முதல் இதழில் கண்ணன் என்பவர் 'அகவன் மகளும் அகவும் மயிலும்' என்றொரு கட்டுரை எழுதி
இருந்தார். கவிஞர் சுரதாவின் 'தேன்மழை' என்னும் கவிதைத் தொகுப்பில்
'மயில்' என்னும் கவிதையின் முதல் வரியான, 'அகவும் மயிலே! அகவும் மயிலே!' என்பதை குறுந்தொகையில் வரும் ஒளவையாரின் கவிதையின்
முதல் வரியான'அகவன் மகளே! அகவன் மகளே!' என்பதுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை அது. அதில் ஒளவையின் கவிதையால் தூண்டுதல் பெற்ற சுரதாவின் கவிதை அந்தத் தரத்தை எடடியிருக்கிறதா என்பதுதான் விமர்சனத்தின் மையம்.

அப்போது நான் சென்னை சென்றிருந்தேன். வழக்கம்போல இலக்கிய
அன்பர்ஒய்ஆர்.கே சர்மா அவர்களைச் சந்தித்து, இருவருமாய் வாலாஜா
சாலை வழியாக திருவல்லிக்கேணியில் இருந்த கவிஞர் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிரே அதே சாலையில் - ஜிப்பாவுடனும் தோளில்
சால்வையுடனும் வந்து கொண்டிருந்த ஒருவரைக் காடடி, "அதோ சுரதா வருகிறார். வாருங்கள் அறிமுகப்படுத்துகிறேன்" என்று அழைத்தார். நாங்கள் சாலையில் இறங்கி அவரைச் சந்தித்தோம். சர்மாவை முன்பே அறிந்திருந்த
சுரதா எங்களது வணக்கத்துக்குப் பதில் வணக்கம் செய்து விட்டு "என்ன செய்தி?" என்றார். சர்மா என்னை அறிமுகம் செய்து வைத்தார். சுரதா தலையை மட்டும் அசைத்தாரே தவிர என்னை அதிகம் கண்டு கொள்ளவில்லை. சர்மா 'நடை'யில் வந்துள்ள அவரைப் பற்றிய விமர்சனத்தைச் சொன்னார். "என்ன எழுதியிருக்கான்?" என்றார் ஒருமையில். 'அமுதும் தேனும் எதற்கு?',
'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' என்பன போன்ற அற்புதமான பாடல்களை
எழுதியவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்த எனக்கு, சற்று அதிர்ச்சியாக இருந்தது. சர்மா அவரிடம் மேற்கொண்டு பேசியதில் எனக்கு சுவாரஸ்யம் ஏற்படவில்லை. சுரதாவிடம் விடை பெற்றுக் கொஞ்ச தூரம் நடந்ததும், "என்ன இப்படி ஒருமையில் பேசுகிறார்?" என்றேன். "அவர் அப்படித்தான்! அதையெல்லாம் பொருட்டுத்த வேண்டாம்" என்றார் சர்மா

பிறகு 18 ஆண்டுகளுக்குப் பின், மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ்
மகாநாட்டின் போது, மீண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மகாநாட்டுக்கு
கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மேல்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியரும் ஒரு தமிழாசிரியரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அதன்படி விருத்தாசலம மாவட்டத்தின் பிரதிநிதியாக நான் அழைக்கப்
பட்டிருந்தேன். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குரிச்சி மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் 'கவிஞர் செ.வ'என்று அறியப்பட்டிருந்த புலவர் செ.வரதராசன் அவர்களை மாநாட்டில் சந்தித்தேன். அவர் ஒத்த இலக்கிய ரசனை காரணமாக என்னோடு நீண்ட நாட்களாக நட்புக் கொண்டவர்; கவிஞர் சுரதாவின் அன்பர். அன்று மாலை, தான் கவிஞர் சுரதாவை அவர் தங்கி இருக்கும் விடுதியில் சந்திக்க இருப்பதாகவும் என்னையும் அழைத்துப் போய் அறிமுகப்படுத்துவதாகவும் அழைத்தார். சுரதா அவர்களைப் பல ஆண்டுகளுக்கு
முனபே சந்தித்திருந்ததையும் அப்போது அவர் என்னைக் கவனிக்கவில்லை என்றும் சொல்லி, அன்றிரவு அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.

அதன்படி அன்றிரவு 8 மணியளவில் இருவரும் சுரதா அவர்கள் தங்கி இருந்த
விடுதிக்குச் சென்றோம். அவரது அறைக்குள் நுழையுமுன் செ.வ அவர்கள்
என்னிடம் "கவிஞரைப் பார்க்கும்போது அவரது நூல் ஒன்றை வாங்கினால் மகிழ்ச்சி அடைவார்" என்றார். எனக்கு அதில் விருப்பமில்லை என்பதை என் முகமாற்றத்திலிருந்து உணர்ந்து, "உங்களுக்கும் சேர்த்து நானே தந்து விடுகிறேன். நீங்கள் அவரிடமிருந்து புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டால் போதும்" என்றார்.

உள்ளே நுழைந்து வணக்கம் தெரிவித்த பின், கவிஞரிடம் என்னைப் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்தினார் செ.வ. என்னை முன்பே பார்தத நினைவு அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் அது பற்றிச் சொல்லவில்லை. எடுத்தவுடனேயே, "நீங்க என்ன ஜாதி?" என்று கேட்டார் சுரதா. எனக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது. அதிருப்தியுடன் செ.வ வைப் பார்த்தேன். ஜாதியைச் சொல்வதில் எனக்குக் கூச்சம் ஏதும் இல்லைஎன்றாலும் அந்தக் கேள்வி, சாதிமறுப்புச் சிந்தனையாளர் புரட்சிக்கவிஞரின் தாசனான ('சுப்புரத்தினதாசனா'ன) சுரதாவிடமிருந்து வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. செ.வ என் தயக்கத்தை உணர்ந்து எனக்குப் பதிலாக அவரே பதில் சொன்னார். அத்தோடு விடவில்லை கவிஞர்! "அங்க எட்மாஸ்டர் ஒருத்தன் - செவிடன் - உடையான் ஒருத்தன் இல்லே.....?" என்று ஒருமையிலும் நாகரீகமற்றும் கேட்டார். எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவர் விசாரித்தவர் என் சக தலைமை ஆசிரியர்; சற்று செவிப்புலன் குறையுளவர். ஜாதியைக் குறிப்பிட்டதுடன் ஒருவரது ஊனத்தைச் சொல்லிக் கேட்பது அநாகரீகத்தின் உச்சம் என்று பட்டது. இதற்கும் செ.வ வே பதில் சொன்னார். அதற்கு மேல் அங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை. எழுந்து போக முயற்சித்தேன். ஆனால் செ.வ என் கையைத் தொட்டு, கண்களால் பொறுத்துக் கொள்ள ஜாடை காட்டினார். ஆனால் கவிஞர் என் முக மாற்றம், அதில் தென்பட்ட அதிருப்தி எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேற்கொண்டு அவர் செ.வ வுடன் பேசிய எதையும் நான் கவனிக்கவில்லை. பின்னர் அவரிடம் எனக்கும் என்று சொல்லிப் பணம் கொடுத்த இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு விடை பெற்றார் செ.வ..வெளியே வந்ததும் அவரது பண்பாடற்ற பேச்சு பற்றிய என் அதிருப்தியை செ.வ விடம் தெரிவித்தேன். "அவர் அப்படித்தான். அதைப்பொருட்படுத்த வேண்டாம். எல்லா மேதைகளிடமும் இப்படி ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே செய்கிறது" என்று சர்மாவைப் போலவே சொல்லி என்னைச் சமாதானபடுத்தினார்.

அடுத்த சந்திப்பு பிறகு சில ஆண்டுகள கழித்து கள்ளகுறிச்சியில கவிஞர் ஆராவமுதன்அவர்களது பாராட்டு விழாவில் நடந்தது. அவ்விழாவிற்குத் தலைமை தாங்க வந்திருந்தார் சுரதா. விழா தொடங்கு முன்னரே வந்து மேடையின் எதிரே அமர்ந்திருந்தவரின் அருகில், ஆராவமுதன் என்னை வரவேற்று அமரச் செய்து அவருக்கு என்னை அறிமுகம் செய்தார்.
இப்போதும் கவிஞருக்கு என்னை முன்பே பார்த்த ஞாபகம் இல்லை போலும்! தலைஅசைப்பு மட்டுமே செய்தார். உடனே தன் கைப்பையைத் திறந்து ஒரு ரசீது புத்தகத்தை எடுத்து அதில் ஏதோ எழுதிக் கிழித்து என்னிடம் கொடுத்தார் - விசிட்டிங் கார்டைக் கொடுப்பது போல. அந்த ரசீதைப் பார்த்தேன். அது அவரது மணிவிழாவிற்கான நன்கொடைக்கானது. என் பெயர் கூட அதில் இல்லை. தொகை மட்டும் ரூ.25 என்று எழுதப் பட்டிருந்தது. 'இது என்ன நாகரீகம்' என்பது போல நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். அதற்குள் அவர் வேறு யாருக்கோ ரசீது எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதும் பேசாமல் எரிச்சலோடு ரசீதைக் கையில் வைத்தபடி இருந்தேன். அரைமணி சென்ற பிறகு அவரை மேடைக்கு அழைத்தார்கள். அவர் என் பக்கம் திரும்பி கை நீட்டினார். நான் ரசீதை அவரிடம் திருப்பி நீட்டினேன். அதை எதிர் பார்க்காத அவர் "பணம்?" என்றார். "எனக்கு வேண்டாம். நான் கேட்கலியே?" என்றேன் - அவர் மீது எனக்கிருந்த எல்லா எரிச்சல்களுக்கும் பழிவாங்குகிற மாதிரி! எதுவும் பேசாமல் கோபத்துடன் ரசீதைப் பிடுங்கிக் கொண்டு மேடைக்குப் போனார். பெயர் போடாததால் அந்த ரசீதை இன்னொருவருக்குக் கொடுத்து விடலாம்! பிறகுதான் கேள்விப்பட்டேன் -
அது அவரது ஆத்மார்த்த சீடர்கள் நிரம்பிய ஊர். அவரது இத்தகைய செயல்கள் எல்லாம் அவர்களுக்குத் திருவிளையாடல்கள் போல - யாரும் அச்செயல்களுக்கு முகம் சுளிப்பதிலை என்று.

அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால் மறுபடியும் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன். 0

Tuesday, October 11, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 19. எழுத்தாளர் சந்திப்பு - 6. 'சிற்பி'பாலசுப்பிரமணியன்.

அண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ் ஆனர்ஸ் படித்த அதே காலத்தில் நான் பி.எஸ்.சி கணிதம் பயின்றேன். ஒரே விடுதியில் வெவ்வேறு சிறகுகளில் தங்கிப் படித்தோம். அவருடைய வகுப்புத் தோழரும் எங்கள் வட்டாரத்துக்காரருமான 'மருதூர் இளங்கண்ணன்'
(பாலகிருஷ்ணன்) என்ற நண்பர் மூலம் தான் எனக்கு சிற்பியின் அறிமுகம்
கிட்டியது. அப்போது 'சிற்பி' என்ற பெயரில் தான் கவிதைகள் எழுதி வந்தார்.
'சிற்பி' என்ற பெயரில் இலங்கையில் ஒருவர் எழுதியதால் பின்னர் 'சிற்பி'
பாலசுப்பிமணியன் என்று மாற்றிக் கொண்டார். 'முத்தமிழ்' என்ற கையெழுத்து இதழை அப்போது அவர் நடத்தினார். அவருடன் பயின்ற 'பதிப்புச் செம்மல்' மெய்யப்பன்(அப்போது அவர் பெயர் சத்தியமூர்த்தி) அவர்களையும் சிற்பியின் அறையில் தான் முதலில் சந்தித்தேன்.

சிற்பியினுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது 'முத்தழிழ்' காரணமாகத்தான்.
இதழின் ஆசிரியராக அவரும் திருவாளர்கள் மெய்யப்பன், மருதூர் இளங்கண்ணன், வேல்முருகன் மற்றும் சில ஒத்த ரசனை உடைய நண்பர்களும் ஆசிரியக் குழுவில் இருந்தனர். இதழின் ஓவியராக என்னை ஏற்றுக்கொண்டார் சிற்பி. நான் ஓவியம் வரைவதை அறிந்திருந்த மருதூர் இளங்கண்ண்ன், அதற்காகாகத்தான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

'முத்தமிழ்' காலாண்டு இதழாக, 'கல்கி' அளவில் வெளியிடப்பட்டது. அட்டைப்
படங்களையும் உள்ளே தலைப்பு மற்றும் சிறு சிறு ஓவியங்களையும் வரைய சிற்பி எனக்கு வாய்ப்பளித்தார். சங்க இலக்கியப் பாடல்களுக்கான ஓவியங்கள் தான் அட்டையில் வெளியாயின. அதற்கான விளக்கங்களை சிற்பி உள்ளே எழுதினார். சிற்யின் படைப்புகள் நிறைய வந்தன. சொல்லப் போனால் சிற்பி பின்னாட்களில் புகழ் பெற்ற கவிஞராவதற்கு 'முத்தமிழ்', பயிற்சிக் களமாக இருந்தது எனலாம். மெய்யப்பனும் இளங்கண்ணனும் இதர தமிழ் பயின்ற நண்பர்களும் சிறப்பான கவிதை, கட்டுரைகளை 'முத்தமிழி'ல் எழுதினார்கள். ஓராண்டு முடிந்ததும் 'முத்தமிழி'ன் ஆண்டு மலரை 1955ல் சிறப்பாகத் தயாரித்தார் சிற்பி.

கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர் அளவுக்கு பெரிய அளவில் பைண்டு செய்யப்பட்டு ஆர்டதாளில் ஜாக்கட் அட்டையுடன், அச்சு மலருக்கு இணையாக இருந்தது அம்மலர். சென்னிகிருஷ்ணன் என்ற என் வகுப்பு நண்பர் 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்' என்ற பாடலை நினைவூட்டும் - பாரிமகளிர் நிலவொளியில் அமர்ந்து ஏங்குவதைச் சித்தரிக்கும் காட்சியை அழகான வண்ணத்தில் வரைந்திருந்தார். நான் மலரின் உள்ளே பல ஓவியங்களையும், தலைப்புகளையும் வரைந்திருந்தேன். எனக்கும் கூட 'முத்தமிழ்' பயிற்சிக்களமாக இருந்தது என்றால் மிகை இல்லை.

ஆண்டு மலர் வெளியிட்டதும் 'முத்தமிழ்' இதழின் நினைவாக சிற்பி அவர்கள்
ஆசிரியக் குழுவினரையும் அதன் ஓவியர்களான எங்கள் இருவரையும் கொண்டதான ஒரு போட்டோ எடுக்கவும் ஏற்பாடு செய்தார். காலடியில் 'முத்தமிழ்' இதழ்களும் வைக்கப்பட்டிருந்த அந்தப் படம் 50 ஆண்டுகள் கடந்தும் என் வசம் இன்னும் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் சிற்பி அவர்கள் பாரதியார் பலகலையில் தமிழ்த்துறைத்
தலைவராக இருந்தபோது என்னையும், நண்பர்கள் பூவண்ணன், புவனைகலைச்செழியன், தம்பிசீனிவாச்ன், பூவை அமுதன் போன்ற 16 குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அழைத்து கோவையில் 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' நடத்திய போது, அவர் எங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தையும், விருந்தோம்பலையும் மறக்கவியலாது. தொடர்ந்து அவரிடம் தொடர்புக்கு வாய்ப்பு ஏற்படாதிருந்தும் இது போன்ற நிகழ்வுகளில் அவ்வப்போது சந்தித்திது வந்தேன்.

அதன் பின்னர் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் என்னை மறவாது அதே அன்புடன் இன்றும் நட்புப் பாராட்டும் அவருடைய இனிய பண்பில நான் மிகவும் நெகிழ்கிறேன். அண்மையில் நடைபெற்ற அவரது பவளவிழாவிற்கு எனக்கு அழைப்பு அனுப்பியதுடன் விழாஔ நினைவு மலருக்கு எனது கட்டுரையையும் கேட்டிருந்தார். உடல் நலிவு காரணமாய் என்னால் நேரில் சென்று விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.வாழ்த்தும் கட்டுரையும் அனுப்பி வைத்தேன். உடன் முத்தமிழ் ஆண்டு மலரின் நினைவாக எடுக்கப்பட்ட போட்டோவின் நகலையும் அனுப்பி வைத்தேன். 0

Friday, October 07, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 18.எழுத்தாளர் சந்திப்பு - 5. சி.மணி

சென்னை சென்றபோதெல்லாம் நான் தவறாமல் சந்தித்த இலக்கிய நண்பர்-
திரு.ஒய்ஆர்.கே.சர்மா என்பவர். நண்பர் பி.ச.குப்புசாமி அவர்கள் மூலம்
அறிமுகமானவர். அவருக்கு எல்லா எழுத்தாளர்களிடமும் நெருக்கமான பழக்கம்
உண்டு. ஜெயகாந்தனின் அணுக்கக் குழுவினரில் ஒருவர். எல்லா இலக்கியப்
பத்திரிகைகளுடனும், 'தமிழ்ப் புத்தகாலயம்' போன்ற பதிப்பகங்களுடனும்
தொடர்பு உடையவர். சென்னையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும்
அவரைப் பார்க்கலாம். சென்னை சென்றதும் முதலில் அவரைத்தான் பார்ப்பேன்.
அன்று சென்னையில் எங்கெங்கு, என்னென்ன இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க
உள்ளன என்று தெரிவிப்பார். அங்கெல்லாம் என்னையும் அழைத்துப் போவார்.
அங்கு வரும் எழுத்தாளர்களை அறிமுப்படுத்துவார். இலக்கியச் சிற்றிதழலாளர்
களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் - 70களில் பரபரப்பை ஏற்படுத்திய
இலக்கிய இதழான் 'ஒரு வல்லின மாத ஏடு' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட
'கசடதபற'வின் ஆசிரியர் குழு, மற்றும் அதன் முக்கியப் படைப்பாளிகளான
திருவாளர்கள் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி ஆகியோர். திருவல்லிக்கேணியில் திரு.ஞானக்கூத்தன் அறை தான் 'கசடதபற'வின் அலுவலகம். அங்கு தான் அநேகமாக எல்லா நாட்களிலும் கசடதபற குழுவினர் மாலையில்சந்திப்பார்கள். சர்மாவின்அறிமுகத்தால் நான் சென்னையில் இருக்கும் நாட்களில்எல்லாம், அவருடன் சென்று அவர்களது உரையாடல்களில் கலந்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் தான் திரு.ந.முத்துசாமியுடன் பரிச்சயம் ஏற்பட்டது.

அறிமுகம் ஆனபிறகு முத்துசாமி, என் ஊர், நான் படித்த கல்லூரி, படித்த ஆண்டு பற்றியெல்லாம் விசாரித்தர். நான் அண்ணாமலையில் 1956-57ல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்ததைச் சொன்னதும், "அப்படியானால் உங்களுக்கு சி.மணியைத் தெரிந்திருக்க வேண்டுமே! அவரும் அந்த ஆண்டில் தான் அங்கு ஆசிரியர் பயிற்சி பெற்றார்", என்றார். அப்போது சி.மணி 'எழுத்து' பத்திரிகை மூலம் புதுக்கவிதைக் கவிஞராய் பிரபலமாகி இருந்தார். "அப்படி யாரும் என்னுடன் படித்ததாக நினைவில்லையே" என்றேன். "இல்லை, உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இன்று மாலை அவர் வருகிறார். பாருங்கள் தெரியும்" என்றார். எனக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது. அப்போது அண்ணாமலையில் படித்து 15 ஆண்டுகள் ஆகி இருந்தபோதிலும் என்னுடன் படித்த 75 பேரையும் நன்றாக நினைவில் இருந்தது. எனவே பிரபல கவிஞரான சி.மணி என் வகுப்புத் தோழரா என்ற வியப்பில் அவரைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருந்தேன்.

மாலையில் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்ற போது, முத்துசாமி, அருகில்
அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டி, "இதோ, இவர் தான் சி.மணி" என்றார்.
"அடடே! நம்ம பழனிசாமி!" என்று நான் மகிழ்ச்சியில் கூவினேன். "ஆமாம், சி.மணி என்கிற பெயரில் எழுதுகிறவர் பழனிசாமி என்று நான் சொல்லத் தவறி விட்டேன்"என்றார் முத்துசாமி.

சி.மணி, பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்."முத்துசாமி உங்கள் பெயரைச் சொன்னதும் புரிந்து கொண்டேன். 'கன்னாங்குளம் கேம்பி'ல் நீங்கள் வரைந்த பாரதி போர்ட்ரெயிட்டை மறக்க முடியுமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தார் மணி. இப்படித்தான் என் வகுப்புத் தோழரான சி.மணியுடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது அவர் ஆங்கில விரிவுரையாளராக இருந்தார் என அறிந்தேன்.

பழனிசாமி எங்களுடன் பயின்றபோது மிகவும் அமைதியானவர். அதிர்ந்து
பேசாதவர். அவரது குரலே பலருக்குக் கேட்டிராது. மெலிந்த உருவம். தீர்க்கமான
கண்கள். எப்போதும் மெல்லிய பன்னகை. எல்லோராலும் விரும்பப்படுகிற அரிய
பண்பாளர். எங்களுடன் பயின்றபோது அவர் கவிதை எழுதுவார் என்று தெரியாது.
ஆனால், அப்போதே நான் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வந்ததை அவர் அறிவார்.

அதன் பிறகு, சென்னையில் கிடைத்தபோதெல்லாம் அவரைச் சந்தித்து வந்தேன்.ஒருமுறை, "சி.மணி, வே.மாலி என்ற பெயர்களில் நீங்கள எழுதிய கவிதைகளை 'எழுத்து'வில் படித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் தான் அவர் என்று அப்போது தெரியாது. தெரிந்த பிறகு மீண்டும் தேடிப் படித்தேன்" என்றேன். என் கவிதைகள் எப்படி உள்ளன என்று அவர் கேட்கவில்லை. நானாகச் சொன்னேன். "ஆனால் இப்போதும் உங்கள் கவிதைகள் எனக்குப் புரியவில்லை. புதுக்கவிதைகளை என்னால் ரசிக்க முடியவில்லை" என்றேன். அதற்காக அவரது முகம் வாடவில்லை. என்னிடம் விவாதிக்கவோ விளக்கவோ இல்லை. மென்னகை மட்டும் அவரது இதழ்களில் மலர்ந்தது. அவ்வளவு சாந்தசீலர் அவர். ஆனால் பின்னாளில் எனக்காகத்தானோ என்னவோ 'புததுக்கவிதை புரியவில்லை' என்ற தலைப்பில் 'நடை' இதழில் ஒருகட்டுரை எழுதினார்.

பிறகு அவரும் ந.முத்துசாமி போன்ற நண்பர்களும் சேர்ந்து 'நடை' என்றொரு
இலக்கிய இதழைத் தொடங்கியபோது, முதல் இதழைப் படித்து விட்டுப பாராட்டி
அவருக்குக் கடிதம் எழுதினேன். முதல் இதழில் சங்கக் கவிதைப் பாணியில்
சி.மணி என்ற பெயரில் கீழ்க்கண்ட கவிதையை எழுதி இருந்தார்.

'காதல் காதல் என்ப; காதல்
வெறியும் நோயும் அன்றே; நினைப்பின்,
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நீராம்' .

- இந்தக் கவிதை எனக்குப் புரிகிற மாதிரி இருந்தது. அதையும் அவருக்கு எழுதி
இருந்தேன். கவிதை மட்டுமல்லாமல், 'செல்வம்' என்ற பெயரில் 'திரைப்படப் பாடல்' என்றவொரு ஆய்வுக் கட்டுரையும் எழுதியிருந்தார். 3வது இதழுடன் யாப்பிலக்கணம் பற்றி 'செல்வம்' என்ற பெயரில் எளிமையான, கவிதை எழுதுவோருக்குப் பாடப்புத்தகம் போன்ற ஒரு 28 பக்க இணைப்பையும் எழுதி வெளியிட்டார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தும, ஒரு தமிழ்ப் பேராசிரியரையும் விடத் தெளிவுடன் எழுதி இருந்தது மிகுந்த பாராட்டுக்குள்ளாயிற்று .

அதே இதழில் 'வாழ்வு தந்த செல்வன்' என்ற, சி,.ஏ.பாலன்,மலையாளத்திலிருந்து
மொழிபெயர்த்திருந்த எம்.டி வாசுதேவன் நாயரின் சாகித்ய அகாதமி விருது பெற்ற
'நாலு கெட்டு' என்ற நாவலுக்கு சி.மணிகேட்டுக்கொண்டபடி, நான் விமர்சனம்
செய்திருந்தேன். அதுதான் நான் முதன் முதல் எழுதிய விமர்சனமும் ஆகும்.

தரமான படைப்புகளுடனும், புதிய சோதனை முயற்சிகளுடனும் சிறப்பாக
வெளிவந்து, தனக்கென ஒரு சிறப்பிடத்தை சிற்றிதழ் வரலாற்றில் பதித்த 'நடை'
8 இதழ்களுடன் நிறுத்தப்பட்டு விட்டது- இலக்கிய உலகுக்குப் பெரிய இழப்பு
என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக சிற்றிதழ்கள் நின்று போவதற்குப்
பொருளாதார நெருக்கடிதான் காரணமாய் இருந்திருக்கிறது. ஆனால் 'நடை'
அதனால் நின்று போய்விடவில்லை. நடையை நடத்தியவர்கள் அனைவரும்
வசதியான வருவாய் வரும் நல்ல வேலையிலதான் இருந்தார்கள். அதனால்
அவர்களுக்குப் பண நெருக்கடி இல்லை. ஒரு இலட்சியத்தோடு நடத்தியவர்கள்,
வெளியிடுவதற்குத் தரமான படைப்புகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்
தாமாகவே வெளியீடை நிறுத்தி அதிலும் ஒரு சாதனையைப் படைத்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்பு விட்டுப்போயிற்று.
அவரும் பணி ஓய்வுக்குப்பின் எழுதுவதை நிறுத்திக் கொண்டதாகக் கேள்விப்
பட்டேன். உடல் நலிவு காரணமாக, இலக்கிய நிகழ்வுகளையும் தன்னைச் சந்திக்க வருபவர்களையும் தவிர்த்து வந்ததாகவும் அறிந்தேன்.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு
நேரிட்டது. அவருக்கு 'விளக்கு' பரிசு வழங்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள் மூலம்
அறிந்து அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினேன். அவரும் நன்றி தெரிவித்து
அதற்குப் பதிலும் எழுதினார். பிறகு நான் விரும்பினாலும் அவருடன் தொடர்பு
கொள்ள முடியாதபடி 2009 ஏப்ரலில் அவரது மறைவுச் செய்தியையும், அடுதடுத்த
மாதங்களில் அவரது மறைவிற்கான அஞ்சலிக் கட்டுரைகளையும் இலக்கிய
ஏடுகளில் படிக்க நேர்ந்தது. இனிய நண்பரை நானும், ஒரு சிறந்த படைப்பாளியை
இலக்கிய உலகமும் இழந்த சோகத்தை, இன்னும் மனம் வலிக்க எண்ணிப்
பார்க்கிறேன். அவரது 'வரும் போகும்' கவிதைத் தொகுப்பு மட்டும் அவரை
நினைவூட்ட என்னிடம் இருக்கிறது. 0

Saturday, October 01, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 17. எழுத்தாளர் சந்திப்பு - 4. (மௌனி)

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு. மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை. அவர் எழுத்து நடையே அப்படிதானா? என்று எண்ணத் தோன்றுகிறது"

- நகுலனின் 'நினைவுப்பாதை' நூலை வாசித்த பிரவின் என்கிற வாசகரின்
விமர்சனம் இது. 'மணிக்கொடி' எழுத்தாளர் திரு.மௌனி அவர்களது சிறுகதைகளைப் படித்தபின் எனக்கும் இதே எண்ணம்தான் எழுந்தது. இன்னும் அதில் மாற்றமில்லை. புதுமைப்பித்தன் அவரை 'தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்' என்று விமர்சித்தது எதை உத்தேசித்து என்று எனக்கு இன்றளவும் புரியாத புதிர்தான். 'நிந்தாஸ்துதி' போல புகழ்வது போல கேலி செய்திருக்கிறாரோ என்று கூட நினைத்திருக்கிறேன்.ஜெயகாந்தன் அவரது 'மாறுதல்' கதைதான் தனக்குப் பிடித்த கதை என்று சொன்னதும் எனக்கு ஒத்துப் போகவில்லை. அந்தக் கதை மட்டுமல்ல அவரது மற்ற கதைகளும் என்னை ஈர்க்கவில்லை. 'எவற்றில் நடமாடும் நிழல்கள நாம்' என்பது போன்ற ஓரிரு வரிகள் ஒருவித மயக்கத்தைத் தருகின்றன என்ற அளவில் மட்டுமே அவரது எழுத்து என்னுள் நிற்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் 18-1-92 &19-1-92 தேதிகளில் நெய்வேலியில் 'வேர்கள் கலை இலக்கிய அமைப்பின் சார்பில் 'வேர்கள் ராமலிங்கம்' ஏற்பாடு செய்த 'மௌனி கதைகள்'என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மௌனி கதைகளைப் பதிப்பித்தவரும் இன்றளவும மௌனியைத் தூக்கிப் பிடிப்பவருமான திரு.கி.சச்சிதானந்தம் அவர்களும் மற்றும் எம்.டி.முத்துக்குமார், 'லயம் சுப்பிரமணியம் ', சா.தேவதாஸ், எம்.வேதசகாயகுமார், பூர்ணசந்திரன், ஞானி, அ.மார்க்ஸ், தமிழவன் எனப் பலரும் மௌனியின் படைப்புகளை விதந்து விமர்சித்தர்கள். அதில் கலந்து கொண்ட எனக்கு அப்போதும் மௌனியிடம்
ஏதும் பிரமிப்பு ஏற்படவில்லை. எல்லோரும் பாராட்டுகிற எழுத்தைப் புரியவில்லை என்று சொல்வது எனது அஞ்ஞானத்தைக் காட்டுவதாக யாராவது நினைத்தால் அது என்னைச் சங்கடப் படுத்தாது. உண்மையில் அதிகம் பேர், 'புரியவில்லை' என்று சொல்லக் கூச்சப்பட்டே அப்படிப் பாராட்டி இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

அதற்கு முன்பாகவே மௌனி அவர்களை நான் திட்டமிடாமலே சந்திக்கும் ஒரு
வாய்ப்பு ஏற்பட்டது. 1970ல் ஓருநாள் நான் அவர் வசித்த சிதம்பரத்துக்கு ஒரு
வேலையாகச் சென்றிருந்த போது அது நிகழ்ந்தது. தெற்கு ரத வீதியில், அவர் வசித்த சத்திரம் போன்ற வீட்டிற்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் விருத்தாசலம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த நேரத்தில், மௌனி இங்குதான் குடி இருக்கிறார் என்பதை முன்பே கேள்விப்பட்டிருந்தது நினைவுக்கு வரவே, அவரைப் போய் பார்த்தால் என்ன என்று திடீரென்று தோன்றவே உடனே பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு அவரது வீட்டை நோக்கி நடந்தேன்.

முன்புறம் ஒரு சின்ன திண்ணையும், மறுபுறம் விசாலமான நீண்ட திண்ணையும் இருந்தன. சின்ன திண்ணை மீது, கச்சலான கருப்பு உடம்புடன, சரியாகச் சீவப்படாமல் சிலும்பி நின்ற வெள்ளை முடியுடன், தீர்க்கமான பர்வையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். 'மௌனி கதைகள்' பின்னட்டையில் பார்த்த உருவம் போல இருந்தது. அருகில் நெருங்கி வணக்கம் தெரிவித்தேன். அவர் நிமிர்ந்து உட்கார்ந்து "வாங்கோ, யாரப் பார்ககணும்" என்றார். "மௌனி அவர்கள்.........." என்று இழுத்தேன். "நாந்தான்! என்ன வேணும்?" என்றார். நான் என்னை பற்றியும், என் எழுத்து முயற்சி பற்றியும் சொல்லி ஒரு மூத்த எழுத்தாளர் என்ற முறையில் அவரைப் பார்க்க வந்ததாகச் சொன்னேன். "என்ன எழுதி இருக்கேள்?" என்று கேட்டார். எப்போதும் கைப்பையில் வைத்திருக்கிற அந்த ஆண்டில் வந்த என் முதல் சிறுகதைத் தொகுதியை எடுத்து
நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியபடி, "என் கதைகளைப் படிச்சிருக்கேளா?" என்று கேட்டார். "படிச்சிருக்கிறேன்" என்றேன். பின் தயக்கத்தடன் "ஆனால் உங்கள் கதைகள் எனக்குப் புரியவில்லை" என்றேன். கையிலிருந்த என் புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு, "என்ன புரியவில்லை? எந்தக் கதை புரியவில்லை?" என்று கேட்டார். "எனக்குச் சொல்லத் தெரியவில்லை. எந்தக் கதையும் புரியவில்லை" என்றேன். அவர் என் பதிலால் ஏமாற்றமோ அதிருப்தியோ கொண்டமாதிரி தெரியவில்லை. "திரும்பவும் படிச்சுப் பாருங்கோ!" என்று மட்டும் சொன்னார்.

அப்போதுதான் பெரிய திண்ணையில் கடைசியில், ஒருவர் சம்மணமிட்டு
அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். அவரது முகம் எனக்குப் பரிச்சயமானது போல்
தோன்றியது. அவர் எங்கள் பக்கம் பார்காமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த வெள்ளைப் பேன்ட், வெள்ளைச் சட்டையில் - அண்ணாமலையில் நான் பயின்ற கடைசிநாட்களில் புகுமுக வகுப்பில் பயின்ற கிரிக்கட் விளையாட்டுக்கார மாணவரை ஒத்து இருக்கவே, "அவர்......" என்று இழுத்தேன். "அவன் என் பையன்!" என்றார். "கல்லூரியில் பார்த்திருக்கிறேன்" என்றேன். "அவனுக்கு கொஞ்சம் சித்த சுவாதீனம் இல்லை" என்று எந்த முகமாற்றமும் இன்றிச் சொன்னபோது அதிர்ந்து போனேன். கொஞ்சமும் இங்கிதமின்றி, ஒரு தந்தையிடமே அப்படி ஒரு விசாரிப்பைக் கேட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதற்கு மேல் அவரிடம் பேச்சைத்
தொடர எனக்குச் சங்கடமாய் இருந்தது. நெருப்பில் கை வைத்துவிட்ட துடிப்புடன் எழுந்து விடை பெற்றேன். அவரும் மேற்கொண்டு பேசாமல் தலை அசைத்து விடை கொடுத்தார்.

பின்னாளில், அதற்கு முன்னதாக அவரது இன்னொரு மகன் இறந்து போனதை
அறிந்தேன். புத்திர சோகத்தில் அவர் இருந்ததை அறியாமல் அவர் கதை பற்றிய என் கசப்பான விமர்சனத்தை அவரிடமே பேசி விட்ட எனது இங்கிதமற்ற செயலை எண்ணி, அதன் பின் அவர் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன். 0