Tuesday, January 18, 2005

களஞ்சியம் - 15

எனது களஞ்சியத்திலிருந்து - 15 : விவேகசிந்தாமணி விருந்து - 4

ஆபத்தும் அழிவும்:

விவேகசிந்தாமணி நம்பிக்கை வறட்சியையே அதிகம் பேசுவதாகத் தோன்றும். ஆனால் நம்பிக்கை ஊட்டுவதும், அழிவு ஆபத்து பற்றி எச்சரிக்கை அளிப்பதுமான பாடல்களும் இருக்கின்றன. விரைந்து உயிர் இழக்கச் செய்வதான சில ஆபத்தான செயல்களை ஒரு பாடல் பட்டியலிடுகிறது.

அரவினை ஆட்டுவாரும், அருங்களிறு ஊட்டுவாரும், இரவினில் தனிப் போவாரும், எறியும் நீர் நீந்துவாரும், விரைசெறி குழலியான வேசியை விரும்புவாரும், அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர்தாமே.

பாம்பை எடுத்து ஆட்டுபவர்களும், அரிய யானையை ஆட்டுவிக்கும் பாகர்களும், இரவிலே தனியே அயல் ஊர் செல்பவர்களும், நீர்நிலையில் நீந்துபவர்களும், மணமிக்க கூந்தலையுடைய வேசியரை விரும்புகிறவர்களூம், மன்னரைப் பகைத்துக் கொண்ட வர்களும் அதிலேயே தம் இன்னுயிரை இழப்பர்.

விரைவில் அழிந்துபோகக்கூடியவை எவை என்றும் ஒரு பாடல் எச்சரிக்கிறது:

மூப்பிலாக் குமரி வாழ்க்கை,
முனையிலா அரசன் வீரம்,
காப்பிலா விளைந்த பூமி,
கரையிலாதிருந்த ஏரி,
கோப்பிலான் கொண்ட கோலம்,
குருவிலான் கொண்ட ஞானம்,
ஆப்பிலாச் சகடு போலே
அழியும் என்று உரைக்கலாமே.

தனக்கு மூத்தவர் துணையில்லாமல் தனியே வாழும் இளம் பெண்ணின் வாழ்வும், கோபமில்லாத அரசனின் வீரமும், காவல் அற்ற விளைச்சலை உடைய நிலமும், கரை இல்லாத ஏரியும், தன்னிடம் இருக்க வேண்டியவை இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசாரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும், அச்சாணி இல்லாத வண்டியைப் போல அழிவுக்கு ஆட்படும் என்று சொல்லலாம்.

இன்னொரு வகை ஆகாத செயல்களையும் ஒரு பாடலில் காணலாம்:

தந்தை உரை தட்டியவன், தாய் உரை இகழ்ந்தோன்,
அந்தம் உறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தம் உறு வேதநெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்கண்டீர்.

தந்தையின் சொல்லைக் கேளாது மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து ஒதுக்கியவன், நல்ல குருவின் ஆணையை மறந்தவன், அழகிய வேத நெறிகளைக் கடந்தவன் ஆகிய இந்த நான்கு பேரும் சிவந்த அக்கினிவாயின் கண் அடைவது உண்மை என அறியவும்.

இயல்புக்கு மாறாக நடப்பதாலும் கேடு விளையும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:

நிட்டூரமாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் - முட்டவே
கூசி நிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.

குடிமக்களைக் கொடுமைப் படுத்தி நிதி திரட்டும் மன்னவன் அழிவான். தனக்கு அளித்த தானத்தைப் போதும் என்று பாராட்டாத யாசகனும் அழிவான். அயல் ஆடவனிடம் நெருங்கக் கூச்சமடைந்து கற்பு நிலையில் நில்லாத குலமகளும் கெடுவாள். தன்னை விரும்பி வந்தவரிடம் நெருங்கிப் பேசக் கூச்சப்படும் வேசியும் கெடுவாள்.

இப்படி இன்னும் பல எச்சரிக்கைகளையும் அறிவார்ந்த நெறி முறைகளையும் வரும் பாடல்களில் காணலாம்.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: