Sunday, October 26, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 35. தாலமி.

=========
1. வேறு வார்த்தைகளில் வெளியிட முடியாத ஒன்றை' சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லத்தான் எழுத்தாளன் ஒரு சிறுகதையை எழுதுகிறான். அவனிடத்து ஒரு வாசகன், ''இதன் பொருள் என்ன?'' என்று விளக்கம் கேட்டால், ஒன்று அவன் எழுத்தாளனது திறமைக்குறைவை அல்லது வாசகர்களது வளர்ச்சியின்மையைக் குறிக்கும்.

2. தந்தி மூலம் வரும் செய்திகள் பல நம்மை அதிர வைக்கின்றன; அல்லது பேரானந்தத்தில் ஆழ்த்துகின்றன. சிறுகதைகள் தந்தி மூலம ்வரும் செய்திகள். சொற்செட்டும், பொரூளட்செட்டும்் சிறுகதையின் இன்றியமையாத இலக்கியப் பண்புகள்.

3. ''அவன் கண்கள் நெருப்புப்போல் சிவந்தன,'' என்று எழுதுவதைக் காட்டிலும், நெருப்புப்போல் கண்கள் சிவந்துவிட்ட ஒருவன் சொல்லும், சொல்லத்தடுமாறும், சொல்லத்தவறிவிட்ட சொற்களை, அல்லது செய்யும், செய்ய நினைக்கும் செயல்களை உணர்த்துவதே, சிறுகதைப்பாங்கு. சிறந்த இலக்கியத்தில் உள்ளமும், உளநிலையும் சொல்லிலும், செயலிலும் பிடிபடுகின்றன.

4. சிறுகதை ஒரு நோக்குடன் அமைய வேண்டும். அது ஆசிரியனின் நோக்காவோ கதையில் வரும் பாத்திரத்தின் நோக்காவோ இருக்கலாம். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை எழுத்தாளன் செய்யக்கூடாது.

5. ஏனையக் கலைகளைப்்பொல்வே, அறிவுணர்வாலொ அல்லது சிந்தனை உணர்வாலோ தொடப்படாதொன்றத் தொடுவது சிறுகதை. அது எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. தீ்ர்ப்பது அதன் நோக்கமோ, ஆளுகையோ அல்ல. ஜோசப் கார்நாடின் ''இளமைய''யோ , கார்க்கியின் ''ஏதாவது ஒன்று செய்வதற்காக''வோ , ஹெமிங்வேயின் ''கொலைகாரர்''களோ , ஷெர்வுட் ஆண்டர்சனின் ''காட்டிலோ ஒரு சா''வ'ோ , எந்தப் பிரச்சினையத் தீர்க்கிறது?

6. துணிந்த சிறுகதை எழுத்தாளன், ஆஸ்்கார் ஒயில்டுவின் ''்எல்லாக் கலையும் பயனற்றது'', என்ற முடிவை ஏற்றுக் கொண்டு எழுதவேண்டும்.

7. சிறந்த சிறுகதைகளை எழுதுவதோ, , படிபதோ பொழுதுபோக்கல்ல. இரண்டுமே மனிதத்துவம் நிறைந்த செயல்கள்.



----- o -----

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 34.பிரபஞ்சன்

1. சிறுகதை என்பது குளத்தில் விழுந்த கல். அமைதியைக் குலைத்துக்கொண்டு 'களக்' என்கிற சிறு சப்தத்துடன், தண்ணீர்ப் பரப்பைப் பொத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்து, சலனங்களை ஏற்படுத்துகிற முயற்சி. வாழ்வின் ஒற்றைச் சலனத்தின் படப்பிடிப்பு. மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களின் ஒற்றைச் சித்தரிப்பு. ஒரு சிறு நிகழ்ச்சி, சிறுகதைக்குப் போதுமானது.

2. திட்டவட்டமாகப் பக்கக் கணக்கில் சிறுகதையை அடக்க முடியாது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரம்' இரண்டு பக்கங்களில் அமைந்த கதை. 'சாப விமோசனம்', 'சிற்பியின் நரகம்' ஆகிய கதைகள் பத்துப் பக்கங்களுக்கு மேலாகப் போகும். ஆகவே, பக்கங்களை வைத்துக் கணக்கிடலாகாது. உள்ளடக்கக் குணாம்சங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்.

3. ஒரு நாவல், சொல்ல வந்த விஷயங்களின் அல்லது விஷயத்தின் சகல பரிமாணங் களையும், சரித்திர, பொருளதார, மனோபாவ பரிமாணங்கள் அத்தனையையும் உள்ளடக்கி விவரிப்பது. சிறுகதைக்கு அத்தனை பரிமாணம் தேவையில்லை. விவரணங்களும் தேவையில்லை. ஒரு சிறு சம்பவமும், அதன் தன்மையைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு விவரிப்பும் போதும். ஒன்றிரண்டு மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எவ்வாறு அதை எதிர்கொண்டு, எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பது ஒரு சிறுகதைக்குப் போதும். இன்னும் சொன்னால், அந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதேகூடப் போதுமானது.

4. சிறுகதை குறியை நோக்கி, ஒரு துப்பாக்கித் தோட்டா மாதிரி பயணம் செய்யும் தன்மையது. பள்ளிக்கூடப் பையன் மாதிரி பராக்குப் பார்க்கக்கூடாது. சிறுகதை ஆசிரியன், கண்பட்டை போட்ட குதிரை மாதிரி, மற்றதைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாதவன். அவன் இலட்சியம் அவன் சொல்லத் தேர்ந்த விஷயம்!

5. சிறுகதைக்குரிய கருவை எங்கிருந்தும் பெறலாம். அது எங்கும் காற்றுப்போலவும், ஓளி போலவும் நிறைந்திருக்கிறது. பார்ப்பதற்குக் கண்களையும், உணருவதற்கு மனத்தையும் இயக்குவதொன்றே கருவைப் பெறும் வழி. உங்களுக்கு நேரும் அனுபவமே உங்களுக்குக் 'கரு' ஆகுமே!

6. சிறுகதை எந்த விஷயத்தையும் தொடலாம். வானமும், அதற்குக் கீழே இருக்கிற அனைத்தையும் அது தொடும். ஆனால், தொடும் விஷயம் நீங்கள் நன்கு அறிந்ததாய் இருக்க வேண்டும். விமானப் பயணம் செய்யாத எழுத்தாளன், விமானப் பயணம்செய்யும் தன் பாத்திரத்தின்அனுபவத்தைச் சரியாகச் சொல்ல முடியாது.

7. சிறுகதைகளில் சம்பவ ஓர்மை அவசியம். ஒரு நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிக்கு வழியமைத்து சொல்ல வந்த விஷயத்துக்கு இசைவாக இருத்தல் முக்கியம். கதை இறுக்கம் கொண்டு இலங்குவது நல்லது.

8. முதல் வாக்கியத்தில் கதை தொடங்கியிருக்க வேண்டும். கதை நேரான தளத்தில் மளமளவென்று நடக்க வேண்டும். தயக்கம் கூடாது. சொல்ல வந்த விஷயந்தான் தீர்மானம் ஆகிவிட்டதே அப்புறம் ஏன் தயக்கம்?

Sunday, October 05, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 33..அனுராதா ரமணன்.

1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும்.

2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில் அன்றையச் சம்பவங்களைச் சுவைபட எழுத முயலுங்கள். தவிர கதைக்
கருக்களைக் குறித்து வைத்துக்கொள்ள ஒரு நோட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

3. கதையைப் பொறுத்தவரை நல்ல கருதான் அதன் ஜீவநாடி. ஒரு தொழிலுக்கு மூலப்பொருள் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கதைக்குக் கரு.

4. கதையின் கரு, ஏதோ ஒரு கால கட்டத்தில் நடந்த அல்லது நடக்கிற ஒரு சம்பவமாக இருக்க வேண்டும். சொல்ல வந்ததை சுவைகுன்றாமல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். முடிவு படீரென்று பொட்டிலடித்தாற்போல இருக்க வேண்டும்.

5. ஒரு நாளைக்குப் பத்துப் பக்கங்கள் நாம் எழுதுகிறோம் என்றால், ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு பக்கங்களாவது படிக்க வேண்டும். கையில் கிடைக்கிற புத்தகங்களை எல்லாம் படியுங்கள். நம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்த எழுத்தாளர்கள் படைப்புகளைப் படிப்பதனால், அவர்களது அனுபவங்களை மட்டுமின்றி உழைப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.

6. ஒரு நல்ல சிறுகதையைப் படித்தால், படிப்பவரின் நெஞ்சில் சுமார் இரண்டு நாட்களுக்காவது அதன் பாதிப்பு இருக்க வேண்டும்.

7. ஆரம்ப வரி - வாசகரைப் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தால்தான் முழுக்கதையையும் படிக்க வேண்டும் என்கிற உற்சாகம் கிளம்பும்.

8. முகத்துக்குப் பவுடர் பூசுவதும், பொட்டு வைப்பதும் ஓரளவுக்குப் புத்துணர்ச்சியையும்,
இயல்பான களையையும் தோற்றுவிக்கும். அது போலத்தான் வருணனையும்.

9. சிறுகதைக்கு வருணனை அவசியம்தான். அதைவிடவும் சம்பவத்துக்கு நாம் தரும்
முக்கியத்துவம் அவசியம்.

10. சிறுகதை தரம் மிகுந்ததாக இருக்கிறதா, எழுத்தில் இலக்கண இலக்கியம் உண்டா என்று துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் எழுதவே முடியாது.

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 32 .ஹெப்ஸிபா ஜேசுதாசன்.

--------------------------------------------



1. சிறுகதையொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகர்களின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்கமுடிகிறதில்லை, என்று வாசகனை அப்படி ஆட்டி வைக்கிறதா? இந்தக்கதைக்குப் படம் எதற்கு விளம்பரம் எதற்கு என்று தோன்றுகிறதா? அப்பப்பா வாழ்கையில் அற்புதம் இத்தனையா என்று வியக்க வைக்கிறதா? அணுவை அண்டமாகவும், அண்டத்தை அணுவாகவும் மாற்றுகிறதா? கண்ணீர் விடவேண்டிய கட்டத்தில் ஆனந்த சிலிர்ப்பையும் மகிழ்ச்சியின் சிகரத்தில் கண்ணீரையும் தருகிறதா? சிறிய ஒரு விஷயம் பெரியதொரு உண்மையாகி விடுகிறதா? அப்படியானால் அடுத்தபடியான ஆராய்ச்சிக்கு அந்தச் சிறுகதை தகுதி பெற்றுவிட்டது.

2. இலக்கிய ஆசிரியனின் "டெக்னிக்", விமர்சனத்துக்குப் பாத்திரமாகிறது. கதை மட்டில்
"சப்"பென்று தூங்கிவழிந்து கொண்டிருந்தால் "டெக்னிக்"கின் புதுமை யாரைக் கவரப்போகிறது? சமையல் நன்றாயிருக்கலாம், உப்பு மட்டும் இல்லாவிட்டால்? டெலிவிஷனில் புதுமை இருக்கிறது. "டெக்னிக்" ஒன்றும் மட்டமில்லை. ஆனால் பொய்ச் சிரிப்புக் காட்டும் அந்த முகத்தை எத்தனை நாள் சகித்துக் கொள்கிறது? சில வேளைகளில் 'பொய்க்கால்" குதிரை ஆடுகிற சிறுவன் போடுகிற போடு எப்படி இருக்கிறது? அவன் உற்சாகமும்., பெருமிதமும் நம்மையுமல்லவா பிடித்துக்கொள்கிறது?
அவன் "டெக்னிக்" மிகப்பழையது. உற்சாகமோ மிகமிகப் புதியது!

3. சிறுகதை ஆசிரியன் வாசகனின் ஒரு தோழன் மாதிரி. சில வேளைகளில் அந்தத் தோழமை அற்புதமாகி விடுகிறது. வாழ்க்கைச் சகதியின் நடுவில் நின்றுகொண்டே, காணாதனவெல்லாம் காட்டி, தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறான்.ஆனால் சில வேளைகளில், ஊட்டி என்றும் கொடைக்கானல் என்றும் அழைத்துப் போனாலும் அங்கேயும் நம்மை "போர்" அடிக்கிறான். கொட்டாவி விட்டுக்கொண்டு காசு செலவழித்த உணர்ச்சியோடு திரும்புகிறோம். இப்பேர்ப்பட்ட தோழமை என்றும் வேண்டாம்! 'போர்" அடிக்கிற சிறுகதை உங்களுக்கு வேண்டாம்! அதைக் கீழே வைத்துவிடுங்கள்!

Saturday, October 04, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31. பேராசிரியர் கல்கி

1. சிறுகதை என்ற உடனேயே அதில் ஒரு கதை இருக்க வேண்டும், அது சின்னதாக
வுமிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது.

கதை என்றால் என்ன? ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தனாம் என்று பாட்டி சொன்ன உடனேயே 'உம், அப்புறம்' என்று குழந்தைக்குக் கேட்கத் தோன்றுகிற தல்லவா? இம்மாதிரி 'அப்புறம் என்ன?' என்று தெரிந்து கொள்வதில் நமக்கு ஆவலைக் கிளப்பக்கூடிய முறையில், ஏதாவது நடந்த சம்பவத்தையோ அல்லது நடக்காத சம்பவத்தையோ சொன்னால், அதுதான் கதை. சரி, சிறுகதை என்றால் எவ்வளவு சின்னதாக இருக்க வேண்டும்? அது அந்தக் கதையின் போக்கையே பொறுத்தது.
சிறுகதையின் முக்கியமான அம்சம் அதில் ஒரு பிரதான சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்த சம்பவத்தை வெறும் வளத்தல் இல்லாமல் வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக்கொண்டு போனால், அது நாலு வரியிலிருந்தாலும் சிறுகதைதான். நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்.

2. பொழுதுபோக்கிற்காகப் படிப்பதுடன் பயனுக்காகவும் படிக்க வேண்டும். படித்த
பயன் எழுத்தில் தெரியவேண்டும். எதையும் எதிர் பார்த்தால்தான் துல்லியமாக இருக்கும். எழுத எழுதத்தான் சிந்தனை தெளிவடையும்.

3. பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் துவைத்துக் கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலக்கணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியாக இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.

4. எதை எழுதினாலும் அதை நாலு பேர் போற்றவாவது வேண்டும் அல்லது தூற்றவாவது வேண்டும். இரண்டுமில்லை என்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருந்து விடலாம்.

எழுத்துகலைபற்றி இவர்கள் - 30.விந்தன்

1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது உறங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்க¨ளை, அந்த மனிதாபிமானத்துக்கு விரோதமாயிருக்கும் - இருந்து வருகின்ற மனித மிருகங்கள் மேல் வெறுப்பைக் கக்கி உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் கதைகளை.....எழுதவேண்டும். இதுவே என் எண்ணம்.

2. எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும்
என்பது நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துடுக் கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்? படிப்பதில்தான் என்ன பயன்?

3. கதைகள் வாழும் மக்களைப்பற்றி எழுத வேண்டும். அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும்
துன்ப துயரங்களைப்பற்றி எழுத வேண்டும். மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்களைப்பற்றி எழுதி, படிப்பவர்கள் மனத்தில் பரிவு ஏற்படும்படி செய்ய வேண்டும்.

4. 'மனிதன்' - ஆகா அவனுடைய பெயர்தான் எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய அவனுக்கு மேலாக ஒருவனை வேறு எதையும் என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

5. 'நாவல் எப்படிப் பிறக்கிறது?' என்னைப் பொறுத்தவரை ஏழை எளியவர்கள், துன்பப்படுவோர் விடும் பெருமூச்சில் இருந்து என் நாவல் பிறக்கிறது.

6. இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை. வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கிறது.
கற்பனையிலிருந்து நான் கதைகளை மட்டும் சிருஷ்டித்தால் போதுமானது; அவற்றைப் படிப்பதற்கு வாசகர்களையும் கற்பனையிலிருந்தே சிருஷ்டிக்க வேண்டு. - என்னால் முடியாதய்யா, என்னால் முடியாது.