Monday, November 26, 2012

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து................6. எஸ்.வைதீஸ்வரன் - உதய நிழல்..




நீங்கள் வாசிக்கப்போகும் இவைகள் - கவிதைகள். சாதாரணமானதாக பொருளற்றதாக பழகிப்பொய்விட்ட தவிர்க்க முடியாத நியதியாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து ஆசையால் அறிவால் உணர்வால் கல்லிடியடுக்கபட்ட சில கலையுண்மைகள் இவைகள்.

பூமியில் வெகு நாட்களாகப் பதிந்து போய்க்கிடக்கிற ஒரு பாறாங்கல்லை சலித்துப் போன வெறும் ஆத்திரத்தால் புரட்டிவிட அடியிலிருந்து திடீரென்று கொப்பளிக்கும் நீரூற்றையோ நெளியும் அநேக ஜீவராசிகளையோ கண்டு பிரமிப்படைந்து நிற்கும் நிலைகள் - எனக்கு கவிதை யுணர்வுகளாகத் தோன்றுகின்றன.

வாழ்க்கைப் பாறாங்கல்லை நாம் அடிக்கடி புரட்டிப் பார்க்க நமக்கு சக்தியும் ஆவலும் கோபமும் அவசியம். இரண்டாவதாக வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும் சுதந்திரம்.

பிறந்த கணத்திலேயே பூமியின் ஆகர்ஷணப் பிடிப்பில் சிக்கிக்கொண்டு விடுகிற நமக்கு வளர வளர வாழ்வில் நம்மை சுற்றிக் கொள்ளுகிற சூழ்நிலைக் கட்டுகளை சதா எதிர்த்துப் போராடி நம்மை நாம் உறுதிப் படுத்திக் கொள்ளுகிற முயற்சியிலேயெ வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

குடும்பம் சமூகம் அரசியல் மதம் இவைகள் ஒவ்வொன்றும் தங்கள் விசேஷ ஆக்ரமிப்பைச் செலுத்தும்போது தனி மனிதனின் சிந்தனை வெறும் சந்தை மாடாக உணர்வற்றுப் போய்விடுகின்ற நிலை ஏற்படுகின்றது.

மனிதன் வாழ்வதாலேயெ தூசுபடிந்துபோய்விடுகிற அவனுடைய உண்மை வாழ்க்கையைகண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவி செய்ய முடியும். ஆனால் கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான தெளிவான பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப் பட்ட சிருஷ்டி - சுதந்திரம் கூடியவரை மக்களிடமிருந்து பற்க்கப் படாமலோ அல்லது நசுக்கப்படாமலோ இருக்கிறதோ அங்கே இயல்பான வளர்ச்சிக்கும் ஆரோக்யத்திற்கும் இடமுண்டு. ஒரு நாட்டின் நல்ல எதிர்காலம் இப்படிப்பட்ட ஒரு சுதந்திர நிலையை வெகுவாக நம்பி இருக்கிறது.அப்படிப்பட்ட தனிமனித சுதந்திரத்தின் அத்தாடசிகளாக என் கவிதைகளை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன்.

முக்கியமாக இக்கவிதைகள் நீங்கள் வாசித்துஅனுபவிப்பதற்காகத்தான் எழுதப்பட்டவைகள் - புரிந்துகொள்ளக் கூடாதென்ளோ உங்களை அனாவசியக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும என்பதோ என் நோக்கமல்ல. ஆனால் வாசகன் என்ற முறையில் நீஙக்ள எந்த கலைப்படைப்பை ரஸிக்க அணுகும்போதும் அவசியமாகிற ஆரம்ப முயற்சியை  இவைகளை ரஸிக்கும்போதும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

நான் இக்கவிதைகளை இன்று திரும்பப் படித்தபோது எனக்குப் புலப்பட்ட அடிப்படையான கருந்தை உங்களுக்குச் சொன்னால் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக என் கவிதைகள் மனத்துக்கும்   வயிற்றுக்கும் மனத்துக்கும் கொள்கைக்கும் மனத்துக்கும் உயற்கைக்கும் ஏற்படுகிற நிலையான மோதல்களாகக் கூறலாம். இம்மோதல்களின் விளைவுகள் - இன்பமாகவோ துயரமாகவோ ஏமாற்றமாகவோ தொனிக்கலாம். ஆனால் அந்த உணர்வுகளை மீறிய ஒரு அமைதி நிலைக்கு வழிகாட்டும் ஏணிகளாக இவைகள் பயன்பட வேண்டும் என்பதுதான் என் உள் ஆசை.

இக்கவிதைகளின்  வடிவங்கள் அவைகள் சொல்லும் கருத்துக்களாலேயே தீர்மானிக்கப் பட்டவைகள். இவைகள் இன்று வாழ்கின்ற என்னால் எழுதப்பட்ட கவிதைகள் என்பதைத் தவிர இவைகளைப் புதுக் கவிதைகள் என்றோ பழங்கவிதைகள் என்றோ பெயரிட்டு விளையாட நான் விரும்பவில்லை.

தமிழ் கவிதைகளிலே மரபு என்று கூறப்படும் ஒன்றை வளர்ப்பதோ அல்லது வெட்டி வீழத்துவதோ இப்படைப்புகளின் நோக்கமேயில்லை. அதனாலேயே அந்தமாதிரி வளர்ச்சி வீழ்ச்சி விளைவுகளுக்குஇக்கவிதைகள் நேரடியாக பொறுப்பேற்காது.

முடிவில் என் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. கவிதைகள் ஒரே மூச்சில் படித்து அனுபவித்துவிடக்கூடிய நாவல்கள் அல்ல. ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட மன அவகாசம் தேவை. ஒவ்வொரு கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதும் ஆர்வமுள்ள திறந்த மனம் மிக மிக அவசியம்.

கவிதையனுபவம் நல்ல கனவு காண்பது போல. நல்ல கனவுகள் தனைமறந்த துயிலில்எதிர்பார்க்கலாமே தவிர நினைத்தபோது தோன்றி நிற்கும்படி கட்டளையிட முடியாது.

                - இனி நீங்கள என்னைத் தாண்டிப் படிக்கலாம்.

சென்னை                                                                    எஸ்.வைதீஸ்வரன்.                                                           
மார்ச் 1970



Tuesday, November 20, 2012

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..................5. ஜெயகாந்தன் - உன்னைப்போல் ஒருவன்.




                சிலர் தங்கள் கடிதங்களில், "நீங்கள் எப்படி சார் 'பிரம்மோபதேச'த் தையும் எழுதி விட்டு, 'உன்னைப்போல் ஒருவ'னையும் எழுத முடிகிறது?" என்று கேட்டிருந்தனர்.

எல்லா மட்டத்திலும் (standards) உயர்த தரம்(levels)  தாழ்ந்த தரம், வளர்ச்சி வீழ்ச்சி, ஆக்கம் அழிவு, என்ற இரண்டு பகுதிகள் உண்டு. எந்த மட்டத்திலிருந்தாலும்,  (இந்த மட்டங்களின் இடையே எவ்வளவு பேதங்களிருப்பினும்) வளர்ச்சி ஆக்கம் ஆகிய குணப்பண்புகள் உடைய உயர்ந்த தரம் அனைத்தும் ஒரினமாகும். அதே போல் வீழ்ச்சி அழிவு ஆகிய பண்புகள் படைத்த தாழ்ந்த தரங்களும் எவ்வளவு பேதங்கள் மிகுந்த மட்டங்களில் தோன்றினாலும் ஒரே இனமாகும். ஆகவே எதையும் கணிக்கும்போது (standars) மட்டத்தை வைத்துக் கணிப்பது சரியான விடையைத் தருவதில்லை. அதிலுள்ள (levels) தரத்தை வைத்துக்கணிப்பதே சரியென்றாகும்.

அப்படிப் பார்த்தால்தான் 'பிரம்மோபதேசமும்' 'உன்னைப்போல் ஒருவ'னும் மட்டத்தில் பேதப்பட்டிருப்பினும் தரத்தில் ஓரினத்தவை என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.

வாசகரான உங்களுக்கு இதைத் தெரிவித்தால் போதும் - புரிந்து கொண்டு விடுவீர்கள். இப்படிப் பார்க்கப் பழகிவிடுவீர்கள்.

ஆனால், நமது'விமர்சகர்கள்' என்று சொல்லப்படும் பெரியோர்கள் இருக்கிறர்களே அவர்கள் விஷயமே வேறு. அவர்கள், என்ன எழுதியவனோ படித்தவனோ ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்வதற்கா விமர்சகராகி யிருக்கிறார்கள்?  இல்லை ஐயா! இல்லை! எவன் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பதற்காகத்தான் விமர்சகாகவதாரம் எடுத்துள்ளார்கள்.

'நயம்பட உரை' என்ற பாலபாடமே படிக்காத அல்லது அதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளாத மேதாவிகள்! நான் விமர்சகர் என்று குறிப்பிடும்போது பழைய இலக்கணம் என்று ஒன்று இருப்பதை முற்றாக அழித்துக் கலைத்து விட்டு (அதற்குக் காரணம் அதில் பயிற்சியின்மையே) ஒரு புதிய இலக்கணத்தை மூங்கில் சட்டத்தால் கட்டி அதன் சட்டாம்பிள்ளைகளாகத் தங்களை ஏற்றுக் கொள்ளவேண்டுமஎன்று கஜகர்ணம் கோகர்ணம் போட்டு வரக்கூடியவர்களைத்தான் நான் நினைக்கிறேன் (இதற்குக் காரணம் 'இந்தப் புதிய இலக்கணத்திலாவது பயிற்சி பெற முடியுமா என்று தாங்களே பார்த்துக் கொள்வதற்குத்தான்). மற்றபடி வேறு சில பயந்த சுபாவ விமர்சகர்கள் இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு ஆங்கில தினசரிக்குத் 'தமிழ்ச் சிறுகதை' என்று ஒரு கட்டுரை வரையும்போது எவரும் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்று சகட்டுமேனிக்கு எல்லாப் பெயரையும் நாமாவளி செய்வார்கள். அவர்களை நான் சொல்லவில்லை.

இப்படியெல்லாம் சொன்னால் உடனே இவர்கள் என்ன கேட்பார்கள் தெரியுமா?  விமர்சனமில்லாமல் இலக்கியம் வளர்ந்து விடுமோ? - என்ற ஒரு பிரம்படிக் கேள்விதான்.

இதே பிரம்படிக் கேள்வியைத் தமிழ்ப் பண்டிதர்கள் இலக்கணம் குறித்துக் கேட்டால் மட்டும் இவர்கள் 'ஆஊ' என்று சிரித்து ஆர்ப்பரிப்பார்கள்.

நமக்குத்தெரியும்; இலக்கணத்தால் இலக்கியம் உருவாகவில்லை. இலக்கணத்தால் இலக்கியம் செழுமையுற்றது; செழுமையுறும் என்று.

அதே போல் நவீன இலக்கியமும் நவீன விமர்சனத்தால் உருவானதல்ல, நவீன விமர்சனத்தால் செழுமையுறும்; செழுமையுற வேண்டுமென்பதே.

ஆனால் விமர்சனம் என்ற லேபிலை ஒட்டி எதைச் செய்தாலும் அது விமர்சனம் என்றாகிவிடாது. எப்படி இலக்கியம் என்ற லேபிளால் ஒன்று இலக்கியமாவதில்லையோ அதேபோல - நமது விமர்சனக்காரர்கள பல புதிய சிந்தனைகளுக்கு வழி வைத்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க மாட்டேன். இருப்பினும் (ஒதுக்கப்பட்ட காரணத்தாலோ என்னவோ) ஓதுங்கி இருப்பதே கவுரவம் என்று எண்ணி 'வெளிச்சத்தில் நடப்பது எல்லாமே வேஷம்' என்று இவர்கள் கூறி வருகின்றனரே, இது எவ்வளவு பேதமை!

முப்பது ஆண்டுகளுக்கு முன்  ஒரு சில ஆண்டுகள் புது அலையாய்த் தமிழ் நாட்டில் வீசிய - எவ்வளவு அழுக்கும் குப்பையும் கலந்து வந்தாலும் புது வெள்ளம் புனித வெள்ளம் தான் என்று ஏற்றத்துக்கும் போற்றுதலுக்கு முரிய மணிக்கொடி பிரலாபத்தோடு இன்னும் எத்தனை ஆண்டுகள் காலம் கழிப்பது? இப்படி நான் கேட்டவுடன் 'ஆ! மணிக்கொடியைப் பழித்து விட்டானே' என்று sentimental கூச்சல் போடவேண்டாம்!

அது மகத்தான வருகை என்பதை நானும் அறிவேன். அது மகத்தானது என்றால் அதன் விளைவு எங்கே? விளைவு இப்படியென்றால் விதைப்பும் அப்படித்தானே? பதரைக்காட்டிப் பேச வேண்டாம். பதரும் இயல்பே! பதர் மட்டும் விளைவதில்லை.

தமிழ் இலக்கியக் குடும்பத்தில் பண்டிதத் தாத்தாக்கள் முனகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் முனகிக்கொண்டு மட்டுமில்லை, ஒருகாலத்தில் அவர்கள் தமிழுக்கு நிறையச் செல்வம் சேர்த்ததுண்டு. முப்பது வருஷத்துக்கு முன் வாழப்போய்..... வீட்டோடு வந்துவிட்ட இந்த 'விமர்சன அத்தைகள்' இருப்பதும் குடும்பத்துக்கு ரொம்ப ஒத்தாசைதான். ஆனால் 'முப்பது வருஷத்துக்கு முன் வாழ்ந்தேனே... அதுதான் வாழ்கை! இதெல்லாம் என்ன.....ம்',  என்று அடிக்கடி பீத்திக் கொள்ளும் தொணதொணப்பும் மொறுமொறுப்பும்தான் தாங்க முடியவில்லை.

விஷயம் இதுதான். நவீனத் தமிழ் இலக்கிய 'ஸ்டாண்டர்டு பொதுவாகவே ரொம்ப உயரமில்லைதான். முப்பது வருஷத்துக்கு முன்னே கூடத்தான்! ஆனால் 'தரம்' என்று ஒன்று இருக்கிறதே அது உண்டு அல்லவா, இரண்டு விதத்திலும்? அதில் உயர்வை எப்படி வளர்ப்பது? அதன் மூலம் 'ஸ்டேண்டர்டை'யே  எவ்விதம் உயர்த்துவது என்பதே பிரச்சினை. 'உருப்படவே மாட்டோம்' என்று சொல்ல ஒரு விமர்சகன் வேண்டுமா, என்ன?

எல்லாம் 'பத்திரிகைக் கதைகள்' என்று ஒதுக்கிவிடுவதும் சரியில்லை. எல்லோரும் பத்திரிகையில் எழுதினார்கள்; எழுத முயன்றார்கள்! மணிக்கொடியும் பத்திரிகைதான்.

ஒவ்வொரு சிறிய எழுத்தையும் கூர்ந்து பார்த்து அதன் தனமையை அறிபவனே விமர்சகன். புருவத்துக்கு மேலே அபிப்பிராயங்களை வைத்துக்கொண்டு அலட்சியப்படுத்தும் இயல்பு கொண்டோர் அந்தப் பீடத்துக்குத் தகுதியற்றவர்கள். திரும்பிக்கூடப் பார்க்காமல் காலம் அவர்களை ஒதுக்கிவிட்டுப் போய்விடும்.

இவ்வளவும் நான் சொல்வது இதற்குத்தான். இந்தக் கதை ஏதொ பெரிய சாதனையென்றெல்லாம் எனக்கு எவ்வித நினைப்பும் கிடையாது.

நான் பெரிதினும் பெரிதையே நாடுபவன். எனக்குத் திருப்தி ஏற்படவே முடியாது.


ஏப்ரல், 1964.                                                                                                              - ஜெயகாந்தன்.







               

Tuesday, November 13, 2012

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து... 4. லா.ச.ராமாமிருதம் - கங்கா




                  என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் 'கோவில்மாடு' என்று பெயர் வைத்திருக்கிறார். ''ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார், சிந்தனையோ சொல்லோ,  இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ, மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியபின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! கோவில் மாடு! இப்படியே இவர் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்!!

எனக்கு உவகை பொங்குகிறது.

                இன்னொரு எழுத்தாளருக்கு என்மேல் ஒரு குறை. ''என்ன அவர் வெளியுலகத்துக்கே வரமாட்டேன் என்கிறாரே!'' 

எங்களுக்கிடையே இன்னொரு சர்ச்சை: ''எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான்?''

நான் ''தனக்காக'' என்கிறேன்.

அவர் ''பிறருக்காக'' என்கிறார். ''தனக்காக அவன் எழுதிக்கொள்வதாக இருந்தால் அவன் எழுத வேண்டிய அவசியமே என்ன இருக்கிறது? அப்படியே எழுதினாலும் அவன் தன் பெட்டிக்குள்ளேயே வைத்துக்கொண்டு அழகு பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கலாமே!''

அவர் பின் கூறியது வாஸ்தவந்தானோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரொரு கதை, எழுதி முடித்த பிறகு அதை விட்டுப் பிரிய மனம் வருவதில்லை. நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கொண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம். கருவுற்றதைப் பெற்றுத்தான் ஆகவேண்டும். பெற்றது பிரிந்துதான் போகும்.
யாருக்காக எழுதுகிறேன்?
யாருக்காகக் கருவுற்றேன்?
இரண்டும் ஒரே கேள்விதான். அந்தக் கேள்விக்கு ஒரே பதில்தான். ஆனால் இந்தக் கேள்வி நேர்வதுண்டு:

''நானா இதை எழுதினேன்?  என்னிடமிருந்தா இது வெளிப்பட்டது? இந்தப் பூதம் என்னுள் எப்படி இத்தனை நாள் ஒளிந்து கொண்டிருந்தது?'' 

வாசகனின் வியப்பு இன்னொரு வகையில்:

''எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது? எனக்குக்கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின? எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. ஆனால் இவை என் எண்ணங்கள், என் வேதனைகள்,  என் வேட்கைகள், நான் என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்த தெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின்,  உணமையில் அவை என் ஆத்ம தாபம் என்று என்று இப்போதுதான் தெரிகிறது'' என்று கன்னத்தில் கண்ணீர் குளிரத் தலை நிமிர்கையில், எழுத்து, இருவருக்குமிடையில் ஊமைச் சிரிப்பு சிரிக்கிறது.  

அதற்குத் தெரியும்,  இருவர் கதையும் ஒரு கதைதான், உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று. அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான், சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று. உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாயத்தையும் தன் சிமிழில் அடக்கிக்கொண்டு, இன்னும் இடம் கிடைக்கும் சொல்.

                எத்தனை விதங்களில் எழுதினாலும்,  நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான்; உலகில் - அது உள் உலகமோ வெளியுலகமோ, அதில் நடக்கும் அத்தனையிலும்,  அத்தனையாவும் எனக்குக் கிட்டுவது என் நோக்குத்தான். ஆகையால் நான் எனக்காக வாழ்ந்தாலும் சரி,  யாருக்காக அழுதாலும் சரி, அப்படி என் நோக்கில் நான்தான் இயங்குகிறேன்,  என் நோக்கில் நான் காண்பவர் காணாதவர் எல்லோரும் என் கதையுடன் பிணைக்கப்பட்டவரே. என் கதையின் பாத்திரங்களால்,  அவர்கள் ப்ரவேசங்களில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வேளைகளில் தான்,  நெடுநாளைய பிரிவின் பின் சந்திக்கும் பரபரப்பு, பரிமளம், ஜபமாலையின் நெருடலின் ஒவ்வொரு மணியும் தன் முறை வந்ததும், தான் தனி மணி என அதன்மேல் உருவேறிய நாமத்தின் தன் பிரக்ஞையை அடையும் புது விழிப்பு.

என் சொல்தான் என் உளி. நான் தேடும் பொருளோ, நயமோ தரும் சொல் கிட்ட, ஓரொரு பக்கத்தை, பதினெட்டு இருபத்தியேழு தடவைகள் எழுத நான் அலுத்ததில்லை. தேடியலைந்த போதெல்லாம் கண்ணாமூச்சி ஆடிவிட்டு,  சொல் என்னை நள்ளிரவில் தானே தட்டி எழுப்பி இருக்கிறது. ஒரு சமயம் கனவில், பாழும் சுவரில் ஒரு கரிக் கட்டி தானாகவே ஒரு வாக்கியத் தொடரை எழுதி அடி எடுத்துக் கொடுத்தது. சம்மந்தா சம்மந்தமற்றவை போன்று வார்த்தைகளை மூளையுள் வேளையில்லா வேளைகளில் மீன் குட்டிகள் போல், பல வர்ணங்களில் நீந்திக் காண்பிக்கும். சில சமயங்களில் நான் தேடிய சொல், அதே சொல், நான் தேடிய அதேஉருவில், காத்திருந்தாற்போல், நடுத் தெருவில் நான் போய்க் கொண்டிருக்கையில் யார் வாயிலிருந்தேனும் உதிரும்.

"நீ ஒன்றும் கழற்றிவிடவில்லை. என் கட்டியங்காரன். நான் சொன்னதை நீ சொல்" என்று அது எனக்கு உணர்த்துகிறது.

இத்தனை கதைகள் எழுதியதும்,  இனி எழுதப்போவது எத்தனையானாலும் அத்தனையும் நித்தியத்துவத்தின் ஒரே கதையின் பல அத்தியயங்கள்தான். அத்தனையும் ஒன்றாக்க எனக்கு சக்தியோ ஆயுளோ போதாது. என்னால் முடிந்தது ஒரு சொல்தான்,  அச்சொல்லிலின் உருவேற்றல்தான்.

4-11-1962                                    லா.ச.ராமாமிருதம்                    

               





Wednesday, November 07, 2012

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.............3. புதுமைப்பித்தன் - 'காஞ்சனை'..




                காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக்கோவைகள்தாம் இவை.

பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலைவளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல. அதனால்தான் என்னுடைய கதைகளில் இந்தக் கலை வியவகாரத்தை எதிர் பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

என்கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக் காஞ்சனை கதையைப் படித்துவிட்டு என்னிடம் வந்து.''உங்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?'' என்று கேட்டார். நான்,''பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே'' என்றேன். ''நீங்கள் சும்மா விளையாட வேண்டாம். அந்தக் கதைக்கு அர்த்தமென்ன?'' என்று கேட்டார். ''சத்தியமாக எனக்குத் தெரியாது'' என்றேன். அவருக்கு இது திருப்தி இல்லை என்று தெரிந்து கொண்ட பிற்பாடு அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு, இலக்கியப் பக்குவம் மிகுந்த என் நண்பர் ஒருவரிடம் போனேன். அவர் அட்டகாசமாக வரவேற்றார். ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி கதை எழுதி இருப்பதாகவும் 'கயிற்றரவு' என்று சொல்லுவார்களே ஒரு மயக்க நிலை, அதை அழகாக வார்த்திருப்பதாகவும் சொன்னார். இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசிக்கொழுந்து என்று கருதப் படுகிறவர் ஜேம்ஸ் ஜாய்ஸ். அப்படிச் சொன்னால் யாருக்குத்தான் தலை சுற்றி ஆடாது? அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயம் காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டுகொண்டேன்.

நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர் பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சிகள் அபிவாதையே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் 'கல்லுப் பிள்ளையார்' மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துத்கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு.

கடைசிக் கதை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆர்வத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக்குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்டதெய்வத்தை நான் மெதுவாகப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால்  கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துகொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்தசாமிப் பிள்ளையுடன், ஊர்சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?

பொதுவாக என்னுடைய கதைகள் உலகுக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணிவைக்கும் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்கவைத்து முகம் சிவப்பதைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் கோபிப்பவர்கள் கூட்டம் குறையக் குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.

இவர் இன்ன மாதிரிதான் எழுதுவது வழக்கம், அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கௌரவம் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போட்டு மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது. மனப்போக்கிலும் பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் வெகு காலம் ஒதுங்க முயன்ற கலைமகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன் உங்களுக்குப் பரிச்சயம் செய்து வைக்கும் காஞ்சனை. நீங்கள இவைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன். 

விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகஎ கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.

22-12-43                                                                                      ''புதுமைப்பித்தன்''