Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, July 04, 2016

இரங்கல் செய்தி


எழுத்தாளரும் கல்வியாளருமான திரு வே. சபாநாயகம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இங்ஙனம்

அவரது குடும்பத்தார்.

 

Wednesday, September 17, 2014

பார்த்ததில்லை படித்ததுண்டு

நாகரத்தினம் கிருஷ்ணா

[கடந்த பிப்ரவரி மாதம் (16) விருத்தாசலத்தில் நடைபெற்ற திரு வே.சபாநாயகத்தின் 80வது அகவை விழாவை முன்னிட்டு வெளிவந்த மலருக்கு எழுதிய கட்டுரை. கவிஞர் பழமலய் முன்னின்று நடத்திய விழாவில் திரு.வே.சா.வின் நண்பர்களும், மாணாக்கர்களும், எழுத்தாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்]
“கணினி பயன்பாட்டிலொன்று வணக்கத்திற்குரிய திரு வே.சபாநாயகம் அவர்களை எனக்குத் தெரியவந்தது. இக்கட்டுரையை எழுதும் தருணம் வரை அவரை பார்த்ததில்லை ஆனால் பருவப் பெண்கள்(அந்தநாள்)  வீட்டில் கதவை அடைத்துக்கொண்டு தொடர்கதை வாசித்த ஆர்வத்துடன் அவரது எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன். அவ்வெழுத்துகள் விதைகளாக என்னுள் விழுந்து முளைத்து வரித்துக்கொண்ட வடிவத்தை அவரை நேரில் காண்கிற நாளில் உறுதிபடும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. “யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்; யார்க்கும் அன்பனாய், யார்க்குமினியனாய்’ வாழ்ந்திடவேண்டி பாரதிகேட்ட வரத்தை இவரும் கேட்டிருக்கவேண்டும் என்ற மெலிதான ஊகமும் என்னிடத்தில் உண்டு. கட்டுரைதானே என  எழுத உட்கார்ந்தால், மனிதர் வாமணன் போல பிரம்மாண்டமாக நிற்கிறார், அவரை அளப்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பது விளங்கிற்று. கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நாவல், ஓவியம், விமர்சனம், பயணக் கட்டுரையென கலை இலக்கியத்தின் அத்தனை முகங்களோடும் அவருக்கு பரிச்சயம் இருக்கிறது, ஆற்றலுடன் அவற்றைக் கையாளவும் தெரிந்திருக்கிறார்.  எளிமையாய், இயல்பாய், பாசாங்கையும் தளுக்கையும் தவிர்த்து அவர் படைப்புகள் தென்திசைக் காற்றாய் நம்மைத் தாலாட்டும், அதிகாலை ஆண்டாள் பாசுரம்போல இதமாய் நெஞ்சில் பரவும். நிழல்போல அவரைத் தொடரும்  பெருமைகளை அவரே அறிவாரா என்கிற கேள்விகூட எனக்குண்டு.  ஒவ்வொருமுறையும் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் அவரை நான் சந்தித்க வேண்டும் என நினைப்பேன். இரண்டுகிழமைகளுக்கு மேல் பெரும்பாலும் இந்தியாவில் தங்குவதில்லை, குறுகிய காலமும், சொந்த பிரச்சினகளும் பல நல்ல படைப்பாளிகளைத் தேடிச்சென்று சந்திக்கிற வாய்ப்பினை எனக்கு நல்குவதில்லை. எழுத்தூடாக மெல்லமெல்ல நெஞ்சுக்குள் செதுக்கி  வைத்திருக்கிற சிற்பம், சம்பந்தப்பட்டவரை நேரில் காண்கிறபோது உடைந்து சிதறிவிடும் அபாயமும் இருக்கிறது. அபூர்வமாக ஒரு சிலரே அதில் தப்பி எனது கற்பனை வடிவை நேர் செய்திருக்கிறார்கள். தவிர தல்ல எழுத்துகளின் இருப்பும் வெளிச்சமும் வெகு எளிதாகக் கவனத்தை பெறுபவை, இரு உள்ளங்களின் இணைப்பிற்கு அதுபோதும், சம்பிரதாய உரையாடல்களும் சந்திப்புகளும் அவசியமற்றவை என நினைப்பவன் நான் (திரு. வே.ச. என்னை மன்னிப்பாராக).
பள்ளி பருவத்திலேயே, இட்டுக்கட்டுவதில் அவர் தேர்ந்தவராம் தனது ‘நான் ஏன் எழுதுகிறேன்’ கட்டுரையில் தெரிவிக்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கிறபோது சிதம்பர கும்மியை’ ஒட்டி நவராத்திரியை முன்னிட்டு, சகதோழர் தோழியருக்காக உள்ளூர் கோவிலைவைத்து  ‘நாலுபுரத்திலே ஒரு கோபுரமாம் அதன் நடுவிலும் ஒரு கோபுரமாம் என்று பாடல் எழுதியதும், எட்டாம் வகுப்பு படிக்க்கிறபோது நாடக நடிகரான உள்ளூர் நண்பருக்காக திரைப்பாடல் மெட்டில் கோடைகாலத்தை மையமாகக்கொண்டு நகைச்சுவையாக ஒரு பாடலை எழுதியதும் கவனத்திற்கொள்ளவேண்டியவை:
“எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
வெண்ணையா உருகுதே
என்னைக்குத்தான் கோடைகாலம்
போகுமிண்னு தோணுதே!
தண்ணித் தண்ணி யிண்ணு
தவியாத் தவிக்குதே
தாகத்துக்கு ஐஸ் போட்ட
ஆரஞ்சுண்ணு கேக்குதே!’
என்று எழுதிக் கொடுத்தேன்.”
இப்பாடலை அவர் நண்பர் மேடையில் பாடியபோது பயங்கர கைத்தட்டல் கிடைத்ததென்கிறார்.  எனக்கும், பிறந்து வளர்ந்ததெல்லாம் தென்னாற்காடு மாவட்டம் என்பதால் இதுபோன்ற பாடல்களுக்கு எத்தகைய வரவேற்பிருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் இங்கே அது முக்கியமல்ல தமிழில் பன்முகப்பட்ட படைப்பாளியாக பின்னாளில் அவர் அறியப்பட இதுபோன்ற தொடக்கங்களுக்கு பங்கிருக்க முடியுமா? என்ற வினா முக்கியம். பிற துறைகள் எப்படியோ, கலை இலக்கியத்தை பொருத்தவரை ஒருசிலர் குருதியில் அதற்கான ‘உயிரி’ பிறப்பிலேயே இருக்கிறது என நம்புகிற பலரில் நானும் ஒருவன். அதனை ஓர் தற்செயல் நிகழ்வாக காணவில்லை, இயல்பாக அவருக்குள் இருந்த அந்த ஊற்று கசிந்திருப்பதைத்தான் சம்பவம் தெரிவிக்கிறது.. இக்கசிவு உடன் படித்த ஒர் இருபது மாணவர்களில் நான்கைந்துபேர்களுக்கு மட்டுமே ஏன் நிகழ்ந்தது என்ற கேள்வியை முன்வைத்தால் நமக்குப் பதில் கிடைக்கலாம். ஆனால் அந்த நான்கைந்துபேரில் பின்னாளில் வே.சபாநாயகர் போன்று இரண்டொருவர் மட்டுமே எழுத்தையோ, ஓவியத்தையோ அல்லது இதுபோன்ற வேறு ஒன்றிலோ இறுதிவரை நாட்டத்துடன் செயல்படுகிறார்கள். அந்த நாட்டத்தை, அவர்களின் அந்த ஓயா ஆர்வத்தை நீரூற்றி உரமிட்டு வளர்க்க அதிட்டவசமாக சில நன்மக்கள் அமைந்துவிடுகிறார்கள்.
அப்படியொருவர் நமது வே.சபாநாயகத்திற்கும் கிடைத்திருக்கிறார், பெயர் சாம்பசிவ ரெட்டியார். அவரை திரு வே.ச. உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்கிறார். பத்தாம் வகுப்புவரை உரைநடையில் ஆர்வம் இல்லாதிருந்த நம்து வே.சபாநாயகத்திற்கு பள்ளியிற் புதிதாய்ச்சேர்ந்த தமிழாசிரியர் வருகை அத்தகைய ஆர்வத்தைத் தருகிறது. பள்ளியில் வெளிவந்த ‘கலைப்பயிர்’  என்ற கையெழுத்துபிரதிக்கு, கதையொன்று எழுதச்சொல்லி ஆசிரியர் கேட்கிறார். தனது திண்ணைபள்ளி அனுபவத்தையும் அதன் ஆசிரியரையும் கருவாகக் கொண்டு ‘திண்ணை வாத்தியார்’ என்ற கதையொன்றை எழுதி ஆசிரியரிடம்கொடுக்க அதனை ‘கலைப்பயிர்’ இதழில் பிரசுரித்ததோடு, சாம்பசிவ ரெட்டியார் வே.சபாநாயகத்தை, அந்நாளில் நாடறிந்த  எழுத்தாளர்களில் ஒருவரான நாரண துரைக்கண்ணனின்  ‘ஆனந்த போதினி’க்கு கதையொன்றை அனுப்பிவைக்குமாறு தூண்ட, மாணவர் வே.ச.வும் அனுப்பிவைத்த கதை பிரசுரிக்கப்பட, பள்ளிபருவத்திலேயே புனைகதை எழுத்தாளர் தகுதியை எட்டுகிறார்.  தமிழில் இன்று பரவலாக அறியப்பட வே.ச.வின் பிறவி ஞானம், ஆர்வம் இவை இரண்டையும் தவிர்த்து, அவரை வெளி உலகு கண்டுகொள்ள காரணமாக இருந்த திருவாளர்கள் சாம்பசிவ ரெட்டியாரையும், நாரண துரைக்கண்ணனையும் வே.ச. போலவே நாமும் மறக்கமுடியாது. ஏனெனில் இது வெ.ச.விற்கு விளைந்த நன்மைமட்டுமல்ல, ‘வே.சபாநாயகம் என்ற படைப்பாளியை அளித்து தமிழுக்கும் அவர்கள் நன்மை செய்திருக்கிறார்கள்.
என் முதல் கதை பிரசுரமாகாதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருக்க மாட்டேன். ஆரம்ப காலத்தில் நாரணதுரைக்கண்ணன் அவர்களும், எஸ்.எஸ்.மாரிசாமி அவர்களும் என் எழுத்தை அங்கீகரித்து அவர்களது ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், இமையம், பேரிகை ஆகியவற்றில் தொடர்ந்து பிரசுரித்ததால் நம்பிக்கை வளர்ந்து பின்னர் வணிக இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதினேன்.”  இது வே. சபாநாயகம் “நான் ஏன் எழுதுகிறேன்” என்ற கட்டுரையில் தரும் வாக்கு மூலம்.

வே.ச.வும் எழுத்தாளர் சந்திப்பும்.

திரு. வே.ச. அவர்களின் ‘ எனது இலக்கிய அனுபவங்கள், தமிழ் படைப்புலகம் ஆவணப்படுத்தவேண்டியவை. தமிழ்புனைகதை உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் அத்தனைபேருடனும் சந்திப்பை நிகழ்ந்திருக்கிறது. அச்சந்திப்பு மகிழ்ச்சியும், சிலிர்ப்பும், கசப்பும், கோபமும் என்கிற பன்முகப்பட்ட கதம்ப அனுபவங்களை அவருக்குத் தந்திருக்கின்றன. இயலுமெனில் இன்னும் விரிவாக அவற்றை எழுதவேண்டும். கடந்த காலத்தில் தமிழில் செயல்பட்ட அனைவரையும் விரும்பியோ எதிர்பாராமலோ உரையாடுகிற வாய்ப்ப்பினை அவருள் காலம்காலமாய் கனிந்துகொண்டிருக்கும்  இலக்கியத் தீகங்கு ஏற்படுத்தி தருகிறது. கி.வ.ஜ,, அகிலன், மௌனி, வாசன், சி.மணி, ஜெயகாந்தன், அசோக மித்திரன் என ஒரு பெரிய பட்டியல் அது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள். நமக்கும் அன்னார்பற்றிய முழுமையான சித்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பவங்கள் ஊடாக வே.சபாநாயகமும் எத்தகைய மனிதர் என்பதைத் தெளிவாய் புரிந்துகொள்கிறோம். சி.மணியிடம் ‘புதுக் கவிதை புரியவில்லை’எனத் தெரிவிக்கிற துணிச்சலாகட்டும்; அகிலன் சினிமா உலகில் நுழைந்தபோது, “திரை உலகத்தை மின்னுகிற உலகம் என்று எச்சரித்த நீங்களே அந்த மின்னுகிற உலகில் நுழையலாமா?” என்கிற வாஞ்சைகலந்த கண்டிப்பாகட்டும், சேமிப்பையெல்லாம், நிதிநிறுவனமொன்றில் இழந்து தவித்த தி.சு.சதாசிவத்திற்காக கலங்கும் மனமாகட்டும்; திராவிட பாரம்பரியத்தில் வந்த சுரதாவின் ஊத்தை குணத்தைப்பற்றிய நியாயமான பொருமலாகட்டும்; சிதம்பரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் மௌனியின் ஞாபகம் வர போன இடத்தில், உளநோய்க்கு ஆளாகியிருந்த அவர் மகனைப்பற்றிய உண்மை அறியாமலேயே எதார்த்தமாக விசாரித்து, மௌனியிடம் கிடைத்த விச்ராந்தியான பதிலால் உடைந்து போவதாகட்டும்; பாரதியையொத்து ஜெயகாந்தனுக்குள்ளிருந்த வினோத மனிதனின் தாண்டவத்தை தள்ளியிருந்து இரசிப்பதாகட்டும் வே.சபாநாயகம் ஓர் பாசாங்கற்ற மனிதர் என்பதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள். கணையாழி இதழ் வே.சபாநாயகத்திற்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. எத்தனை பெரிய உழைப்பை நல்கியிருக்கிறார். தமிழருக்குண்டான குணத்தின்படி அரை காயப்படுத்தியபோதிலும், போகிறபோக்கில் வெகு சாதாரணமாக தமது மனக்குறையை பதிவுசெய்கிறபோது  வே.ச. மீண்டும் மலைபோல உயர்ந்து நிற்கிறார்.

வே.ச. என்ற விமர்சகர்

தமிழில் நடுநிலையான விமர்சகர்கள் குறைவு. குலம் கோத்திரம் பார்த்து எழுதுகிற விமர்சகர்கள், பதிப்பகங்களுக்காக எழுதுகிறவர்கள், எழுத்தாளர்களின் நச்சரிப்பு தாளாமல் மதிப்புரை எழுதுகிறவர்கள், குழுமனப்பான்மையுடன் விமர்சிப்பவர்கள், தங்கள் இருப்பைக் காப்பாற்றிகொள்ள பிறரை நிராகரிக்க விமர்சிப்பவர்கள்  என்றெல்லாம் நமது விமர்சகர்களை வகைப்படுத்தலாம். நியாயமான விமர்சகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எக்குழுவிலும் தங்களை இருத்திக்கொள்ளாதவர்கள் அவர்களை அறிந்திருக்கிறார்கள். அத்தகைய நடுநிலையான விமர்சகர்களில் நமது வே.சபாநாயகமும் ஒருவர்.  யுகமாயினியின் இதழ் ஆசிரியர் சித்தன் எனது ‘மாத்தாஹரி’ நாவலுக்கு வே.ச.விடம்  மதிப்புரை கேட்க இருக்கிறேன் என்றார். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே சபாநாயகத்தின் விமர்சனங்களைப்பற்றியும், எக்குழுவும் வேண்டாமென்று ஒதுங்கியிருக்கிற இலக்கிய நண்பர்களிடத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் கேள்விப்பட்டிருந்ததாலும் சித்தன் எனக்காக செய்தது உயர்ந்தகாரியம். அம்மதிப்புரை அச்சாகி  யுகமாயினி இதழ் எனது கைக்குக் கிடைக்கும்வரை சித்தனிடமோ, மதிப்புரை எழுத முன்வந்த திரு.வே.சபாநாயகத்திடமோ தொடர்புகொள்ளவில்லை. விமர்சனம் வந்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவில்லை. திரு வே.ச. நூலை வாஞ்சையோடு பாராட்டியிருந்தார். இன்றைக்கு ஓரளவிற்கு நான் நன்கு அறியப்பட்டிருப்பதற்கு திரு.வே.சபாநாயகம்போன்றவர்களின் நடுநிலையான பாரபட்சமற்ற விமர்சகர்களே காரணம் என்பதை நன்றியோடு இவ்விடத்தில் நினைவுகூர்கிறேன்.
அண்மையில் புதுச்சேரி நண்பர் ஒருவர், திரு வே.சபாநாயகத்திடம் எங்கள் இதழுக்குக் கட்டுரையொன்று கேட்க இருக்கிறேன், என பேச்சிடையே  ஆர்வத்துடன் தொலைபேசியில் தெரிவித்தபோது:  “முடிவாகச் சொல்வதானால், என் எழுத்துக்குப் பத்திரிகைகளில் இடம் கிடைப்பதாலும் என்னைச் சுற்றி நிகழ்பவை என்னைப் பாதித்து எழுதத் தூண்டுவதாலுமே எழுதுகிறேன்”  என வே.ச.  கூறியது நினைவுக்கு வந்தது. பலரின் உண்மையான இத்தேடல்தான், அவரைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறதென்பதென் அனுமானம். ஓர் அசுர உரைப்பாளி, இன்றுவரையிலும் எங்கேயேனும் ஏதேனும் ஓயாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்,  அது தொடரவேண்டும் என்பதுதான் என்னைப்போன்றவர்களின் பிரார்த்தனை. ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ வாழ பெரியாழ்வார் மொழியில் வாழ்த்தி வனங்குகிறேன்.
———————————————————————

Monday, June 11, 2012

கணையாழியின் கதை




இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’.
‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. ‘கலைமகள்’ போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து ‘கணையாழி’என்று பெயர் வைத்தேன்’ என்று ‘கணையாழி’ பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார்.

            டெம்மி அளவில் 24 பக்கம் கொண்டதாக 40 காசு விலையில், ஜூலை 1965 என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த முதல் ‘கணையாழி’ ஆகஸ்ட் 15ல் வெளி வந்தது. தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரை எழுதி வந்த கே.சீனிவாசன் கட்டுரை, ஒரிரண்டு கதைகள், சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள் விமர்சனங்கள், ந.பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ஒரு அலசல் என்றெல்லாம் அதில் இருந்தன. அட்டைப் படமாக இந்தியாதேசம், அதற்குள் நேருவும் சாஸ்திரியும் – அதுதான் அட்டைப்படக் கட்டுரையும். தில்லியில் அபோது தமிழ் அச்சகம் இல்லாததால் சென்னை வந்து ஒருமாதம் தங்கி அச்சகமே கதி என்று கிடந்து 2000 பிரதிகள் அச்சடித்து எடுத்துக்கொண்டு போய், பிரதிகளை பாதிக்கு மேல் விற்க முடியாமல், 500 பிரதிகளை இலவசமாக அனுப்பி மிகுந்த சிரமங்களுக்கு ஆளானாலும் படித்தவர்கள் ‘நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று பாராட்டியதால், உற்சாகம் குறையவில்லை என்று எழுதுகிறார் கி.க. ஆரம்பத்தில் அசோகமித்திரனின் பங்களிப்பு கி.கவுக்குப் பெரிதும் துணையக இருந்தது.கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிலுருந்து அவர் செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன், பிரதிபலனை எதிர்பாராது மாதாமாதம் ‘கணையாழி’யை அச்சடித்து அனுப்பி வைத்தார்.


             பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சந்தாக்கள் வரத் தொடங்கியுள்ளன. விற்பனை உற்சாகம் தராதிருந்தும் எழுத்தாளர்களின் ஆதரவு பெருகியதால் கி.க உற்சகமாகவே தொடர்ந்தார். ‘தில்லி எழுத்தாளர்கள் சுப்புடு,’கடுகு’ என்கிற பி.எஸ்.ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ரங்கராஜன், இ.பா. தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.எஸ்.சீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளிவரத் தொடங்கின’ என்று பெருமிதப்படுகிறார் கி.க. இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் கணையாழி மூலம் முத்திரை பதித்தார்கள். ஞானக்கூத்தன், எஸ.வைத்தீஸ்வரன்,தி.சொ வேணுகோபாலன், சி.மணி முதலான ‘எழுத்து’க்கவிஞர்கள் புதுக்கவிதை எழுதினார்கள்.

             அசோகமித்திரனின்,   கதை, சுஜதாவின் கடைசி பக்கம், என்.எஸ் ஜெயின் ‘என்னைக்கேட்டால்’, சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் போன்றவை ஒவ்வொரு இதழையும் சுவாரஸ்யப்படுத்தின.இந்திராகாந்தி,மொராய்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி, மெரியார் போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன் நேர்முகப்பேட்டிகள் மூலம் ‘கணையாழி’க்கு ஒரு அந்தஸ்து ஏற்படத் தொடங்கியது.பின்னாளில் அரசியல் கைவிடப்பட்டு முழுக்க முழுக்க இலக்கிய ஏடாகப் பரிணாமம் கொண்டது. முப்பது ஆண்டுகள் நடத்தி பல சாதனைகள் செய்தபின், ‘கணையாழி’யின் பொருளாதாரமும் கி.கவின்
உடல் நிலையும் நலிந்துபோன நிலையில் யாரிடமாவது அந்த இனிய சுமையைத் தோள் மாற்றிவிட விரும்பினார். அப்போது தமன்பிரகாஷ், சுவாமிநாதன், ம.ராஜேந்திரன் ஆகிய நண்பர்கள் தங்களது ‘தசரா’ அறக்கட்டளை மூலம் எடுத்து நடத்த முன் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு கி.க அவர்களிடம் ‘கணையாழி’யை ஒப்படைத்தார். இதனை மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு, 1996ல் நடைபெற்ற ‘கணையாழி’யின் 31வது ஆண்டு தொடக்கவிழாவின் போது, ‘கணையாழி’யைத் தன் வளர்ப்பு மகளாக வர்ணித்து இந்தக் கல்யாண விழாவில் தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், கணையாழியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவையும் தான் ஆவலோடு எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பதினைந்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடத்திய பின் 2006ல் ‘தசரா’வும் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. திரும்பவும் 2011 மே முதல் கவிதா சொக்கலிங்கம் தனது ‘கவிதா பதிப்பகம்’ மூலம் வெளியிடும் பொறுப்பை ஏற்க, தசரா ‘கணையாழி’யை புதிய பாய்ச்சலுடன் நடத்தத் தொடங்கியது. ஒராண்டு வெற்றிகரமாக நடந்த பிறகு தற்போது மே – ’12 முதல் திரு.ம.ராஜேந்திரனின் முழுப்பொறுப்பில் வெளிவருகிறது.

       ‘கணையாழி’, கி.க பொறுப்பில் வெளியானபோது பல சோதனை முயற்சிகளைச் செய்து சாதனைகள் பல நிகழ்த்தி இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றது. புதிய இளம் எழுத்தாளர்களை ‘கணையாழி’யில் எழுத வைத்து இன்றைய நட்சத்திர எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதை முதல் சாதனையாகச் சொல்லலாம். வாசகர் கடிதத்தை இலக்கிய அந்தஸ்க்கு உயர்த்தியதை அடுத்துச் சொல்லலாம். புதியவர்களும் புகழ்பெற்ற மூத்த படைப்பாளிகளும் வாசகர் கடிதம் மூலம் பல சிறப்பான விவாதங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இலக்கியத்திலும் இட ஒதுக்கீடு கேட்டு கவிஞர் பழமலய் குரலெழப்ப ச.சமுத்திரம் பொன்றவர்கள் வழி மொழிந்ததும், என்.எஸ்.ஜகந்நாதனின் கட்டுரை ஒன்றில் மணிப்பிரவாள நடை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு தி.க.சி எதிர் வினையாற்றியதும் இன்றும் நினைவில் நிற்பவை.

         அடுத்து கணையாழி கதைகளும் கவிதைகளும் தனித் தொகுப்புகளாக வருமளவுக்கு சிறப்பாக இருந்ததைக் குறிப்பிடலாம். கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது என்றால் அது மிகை இல்லை. அதிலும் குறிப்பாக ‘தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளி’ல் வெளியானவை அத்தனையும் முத்துக்கள் என்றே சொல்லலாம். மேலும் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் வண்ணநிலவன் போன்றோரது அற்புதமான தொடர் நாவல்களும் ‘கணையாழி’க்குப் பெருமை சேர்த்தன. ‘கணையாழி’ கிடைத்ததும் முதலில் கடைசிப்பக்கத்தை பார்க்குமளவுக்கு பரபரப்பை ஊட்டியவர் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ ஆக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சுஜாதா அவர்கள். பல சித்திர விசித்திரங்களை சோதனை முயற்சிகளாக மேற்கொண்டு எழுத்தாளனை ஒரு நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திய அவரது சாதனை ‘கணையாழி’யில்தான் நிகழ்ந்தது. புத்திலக்கியத்துடன் பழைய காவிய நயங்களைக் காட்டும் கே.எஸ்.சீனிவாசன் அவர்களது ‘காவ்ய ராமாயாணம்’ தொடரையும் வெளியிட்டது கணையாழி. ‘முஸ்தாபா’ என்ற பெயரில் யார் என்று தெரியாத மர்மத்தில் வாசகரை ஆழ்த்திய கி.க அவர்களது ‘உள்ளது உள்ளபடி..’ ஒவ்வொரு இதழையும் ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. காலஞ்சென்ற அற்புத படைப்பாளி ஜெயந்தன் தனது ‘நினைக்கப்படும்’ நாடகத்தின் மூலம் தன்னை எழுத்துலகம் திரும்பிப் பார்க்கச் செய்தார். ‘கணையாழி’யின் முகத்துக்கு புதியதொரு பொலிவினை இத்தகைய பதிவுகள் கொடுத்தன.

              கிருஷ்ணன்நம்பியின் புகழ் பெற்ற சிறுகதையான ‘மருமகள் வாக்கு’ ‘கணையாழி’யில்தான் வெளியாயிற்று, மற்றும் இதழ்தோறும் வாசகர்களை ஈர்த்த சுந்தரராமசாமி அவர்களது ‘கேள்வி-பதிலு’ம், கே.சீனிவாசன் அவர்களது கூர்மையான அரசியல் கட்டுரைகளும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது சுவாரஸ்யமான ‘இலக்கிய விசாரமு’ம் குறிப்பிடத்தக்கவை. இன்னும் ‘கணையாழி’க்குப் பெருமை சேர்த்தவர்களும், ‘கணையாழி’யால் வெளிச்சம் பெற்றவர்களும் வழங்கிய அரிய படைப்புகள் பற்றி எழுதி மாளாது.

          தில்லியில் கி.க வுக்கு உதவியாக திரு லா.சு.ரங்கராஜன் – அசோகமித்திரன் போலவே கணையாழியின் பொறுப்பாசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார். கி.க சென்னைக்கு வந்ததும் சி.அண்ணாமலை என்பவர் உதவியாசிரியரகவும் இ.பா கௌரவ ஆசிரியராகவும் கணையாழியை நடத்தினார்கள். இ.பா இன்றுவரை கணையாழியின் சிறப்பாசிரியராகவே தொடர்கிறார்.

          கணையாழியின் வெள்ளி விழா ஆண்டில் ‘கணையாழி-25′ என்ற தலைப்பில் கவிஞர் ஞானக்கூத்தனை தொடர் எழுத வைத்த ஆசிரியர் 30 ஆண்டுகள் முடிந்த போது மீண்டும் கணையாழியின் கடந்த காலப் பதிவுகளை நினைவூட்டும் வகையில் ‘கணையாழியின் பரிணாம வனர்ர்ச்சி’ என்ற தலைப்பில் வே.சபாநாயகம் அவர்களை எழுத வைத்தார். 1997 பிப்ரவரியில் ‘கணையாழி’யின் முதல் இதழ் முதல் இணையத்தில் பதிவு செய்து வைக்க, அரவிந்தன்(கனிமொழி) மூலம் கி.க முயன்றார். கொஞ்சம் பதிவானபிறகு ஏனோ அம்முயற்சி கைவிடப்பட்டது. 30 ஆண்டுகாலத்தில் கணையாழியில் வந்த சிறப்பம்சங்களைக் கொண்ட கணையாழி தொகுப்பை ‘தசரா’ கொணர விரும்பியும் அது நிறைவேறாத நிலையில் கி.கவே வே.சபாநாயகம், இ,பா, என்.எஸ்.ஜெ மூலம் நான்கு தொகுதிகளாக ‘கணையாழி களஞ்சியம்’ என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பக வெளியீடாக பிறகு கொண்டு வந்ததும் கி.க வின் சாதனை எனலாம். 31ஆவது ஆண்டுமலர் வெளியீட்டை ‘தசரா’ ஒரு விழாவாகவே கொண்டாடியது. இலக்கிய அன்பர்களாலும் படைப்பாளிகளாலும் நிரம்பி வழிந்த அரங்கம், ‘தசரா’வுக்கு கிடைத்த அமோக வரவேற்பைக் காட்டியது. அது ‘தசரா’வுக்கு ‘கணையாழி’யை மிகுந்த உற்சாகத்துடன் தொடர வழி வகுத்தது.

          ‘தசரா’ பொறுப்பில் வந்த பிறகும் கணையாழிக்குப் பெருமை சேர்த்த அதன் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுஜாதா. என்.எஸ்.ஜெ, இ.பா. கி.க அசோகமித்திரன் எல்லோரும் தொடர்ந்து கணையாழியில் எழுதி வந்தார்கள். பிறகு ஒரு நாள் சுஜாதா காணாமல் போனார். அவரது கடைசிப் பக்கத்தை தோழர் தியாகு போன்றோர்களின் தொடர்கள் அணி செய்தன. பழைய எழுத்தாளர்கள் ந.முத்துசாமி, பா.செயப்பிரகாசம், சா.கந்தசாமி. இரா.முருகள் பிரபஞ்சன், த.பழமலய், அறிவுமதி, கல்யாண்ஜி, புவியரசு போன்றோரும் தொடர்ந்து எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ் சுப்பிரமணியன், மார்ஸ் போன்றோரின் விமர்சனங்களும் வெளியாயின. பழைய கணையாழியில் துடிப்பான இளைஞர்கள் இடம் பெற்றது போலவே இப்போதும் பின்னாளில் புகழ் பெற்ற புதிய எழுத்தாளர்கள் யூமா வாசுகி, பாப்லோ அறிவுக்குயில், அழகிய பெரியவன். இளம்பிறை, அ.வெண்ணிலா மற்றும் கணையாழியில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த நிஷார் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களும் இடம் பெற்றார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் கார்த்திகேசுசிவத்தம்பி, அ.முத்துலிங்கம், மாத்தளைசோமு, எஸ்.பொ, தேவகாந்தன் ஆகியோரது படைப்புகளும் தொடர்ந்து இடம் பெற்றன.
இதழ் தோறும் நிறைய புதிய நூல்களின் அறிமுகமும் பிரபஞ்சன், சா.கந்தசாமி ஆகியோர் தாம் படித்த நூல்களை விமர்சித்ததும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. ‘இந்த நூற்றாண்டின் எனக்குப்பிடித்த சிறந்த கதை’ என்ற தலைப்பில் பல மூத்த எழுத்தளர்கள் எழுதினார்கள். தி.க.சி யின் ‘காலத்தின் குரல்’, தோழர் தியாகுவின் ‘மார்க்சின் தூரிகை’ போன்ற தொடர் கட்டுரைகள் பாராட்டுகள் பெற்றன.

             மீண்டும் குறுநாவல் போட்டிகள் மூலம் வெளியான குறுநாவல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் இருந்தன.ஓவியர்கள் ஆதிமூலம், மருது இவர்களுடன் புதியவர்களான புகழேந்தி, செல்வம், மாரிமுத்து ஆகியோர் கணையாழியைத் தொடர்ந்து அழகு படுத்தினர். கி.க வின் ‘எட்டுத்திக்கும்’ அரசியல், கலை, இலக்கியம் ஆன்மீகம் என்று பவ துறைகளைப் பற்றியும் சாரமான தகவல்களைத் தந்தது. ம.ராஜேந்திரன் தலையங்கம் மட்டுமின்றி, ‘நினைக்கப்படும்’ என்ற தலைப்பில் ‘மரன்’ என்ற பெயரில் தொடர் எழுதி வந்தார். மற்றும் ‘படித்துப் பாருங்கள்’ என்று பிரபஞ்சன் பல சிறந்த நூல்களை அறிமுகப்படுத்தியதும் ‘பார்வை’ என்ற தலைப்பில் ‘பார்வையளர்’ என்பவரின் பதிவுகளும், சினிமா பற்றி அம்ஷ்குமார், எஸ்.சாமிநாதன் ஆகியோரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களும வாசகர்களுக்கு விருந்தாய் அமைந்தன. வெங்கட் சாமிநாதன் போன்றோரின் நூல்விமர்சனங்களும் குறிப்பிடத் தக்கன. வாசகர் கடிதங்கள் ‘எதிரொலி’, ‘எதிர்வினை’ என்ற பெயர்களில் பாராட்டியும் விமர்சித்தும் ‘கணையாழி’க்கு உற்சாகமூட்டின. சிறப்பான நேர்காணல்களும், பேட்டிகளும் இக்கால கட்டத்தில் வெளியாயின. முதல் இதழில் பேட்டி காணப்பட்ட ஜெயகாந்தன் ‘தசரா’ போறுப்பேற்றபோதும் மற்றும்  ஞானபீட பரிசினைப் பெற்றபோதும் என 3 முறை பேட்டி காணப்பட்டார். காலம் மற்றும் அவரது முதிர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு தடவையும் அவரது பேட்டிகள் பல புதிய தகவல்களைக் கொண்டதாய் இருந்தன. மற்றும் மறுபிரசுரம் ஆன ஆர்.சூடாமணி, இந்திரா கோஸ்வாமி ஆகியோரது பேட்டிகளும், புதிய இளம் படைப்பாளிகளான கண்மணி குணசேகரன், இளம்பிறை பொன்றோரது நேர்காணல்களும் கணையாழியின் பாரபட்ச மற்ற பார்வையை உணர்த்தின.
காலஞ்சென்ற முத்திரை பதித்த படைப்பாளிகள் கு.ப.ரா, பு.பி, சி.சு.செ, மௌனி,வையாபுரிப்பிள்ளை என பலரது நினைவு தினங்களையொட்டி அட்டையில் அவர்களது படங்களை வெளியிட்டு அவர்களைப்பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு கணையாழி கௌரவவித்தது. பல்வேறு சிறப்பிதழ்களுடன் மலேசிய, ஆஸ்திரேலிய, கனடா சிறப்பிதழ்களையும் கொண்டு வந்து பாராட்டுக்குரியதாயிற்று.

                     இக்கால கட்டத்தில் பாவண்ணன். ஜெயமோகன், ம.ந.ராமசாமி, அசோகமித்திரன். பா.செயப்பிரகாசம், ஸிந்துஜா. ம.ரா, விழி.பா இதயவேந்தன்.கீரனூர் ஜாகிர்ராஜா என பல பழைய புதிய எழுத்தளர்களின் கதைகள் பிரசரமாயின. எஸ். வைத்தீஸ்வரன், பழமலய், இளம்பிறை போன்றோர் நிறைய கவிதைகளை எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ், சுப்பிரமணியன், ஆர். நடராஜன் இன்னும் பல திறனாய்வாளர்களது சிறந்த கட்டுரைகள் வெளிவந்தன. பதிப்பாளர் தமன்பிரகாஷ் சட்டசபைத்தேர்தல் பற்றி எழுதிய தொடர்கட்டுரை பலரது பாராட்டுக்கு உள்ளாயிற்று.

              ஆசிரியர் பொறுப்பில் இருந்த மய்திலி ராஜந்திரனும் இடையில் சில மாதங்கள் காணாமல் போய் பிறகு மீண்டும் இன்று வரை தோடர்கிறார். அந்த இடைக்காலத்தில் பா.இராம்ஜி என்பவர் பொறுப்பிலும் பின்னர் ஆசிரியர் குழுவின் பொறுப்பிலும் கணையாழி தொடர்ந்தது. யுகபாரதி உதவியாசிரியராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

              1995 முதல் 2006 வரை பதினாறு ஆண்டுகள் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய கணையாழி 2006 செப்டம்பர் இதழோடு நின்றது, கணையாழி அன்பர்களுக்கும், இலக்கிய படைப்பாளிகளுக்கும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் அது ஏப்ரல் 2011ல் புத்துயிர் பெற்றபோது இலக்கிய உலகுக்குப் பெரும் ஆறுதல் ஏற்பட்டது.

            இந்த ஓராண்டிலும் கணையாழி தனது ஆரம்ப காலத்தை நினைவூட்டுவதாய், நவீன உள்ளடக்கங்களுடன் சிறப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. இ.பா இப்போது சிறப்பாசிரியர் என்பதோடு, சுஜாதா போல கடைசி பக்கங்களில் பழைய இலக்கியங்களிலிருந்த அன்றாட நடப்பை ஒட்டியும் நல்ல விஷயங்களை அளித்து வருகிறார். பாரவி, வாசந்தி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, எஸ்.சங்கர நாராயண் போன்றோரது கதைகளும், எஸ்.வைத்தீஸ்வரன், நீலமணி, ஈரோடு தமிழன்பன் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளும், தமிழவன், மு.ராமசாமி, கி.நாச்சிமுத்து, அன்பாதவன் போன்றோரது கட்டுரைகளும் மீண்டும் கணையாழிக்குக் கனம் சேர்த்துள்ளன. நரசய்யாவின் ‘காலம் கொன்ற விருந்து’ அரிய ஆவணங்களை வாசகர் பார்வைக்கு கொண்டு வந்தது. மரன் என்ற பெயரில் ‘நினைக்கப்படும்’ தொடர் எழுதிய ம.ரா இப்பொது நடுப்பக்கத்தில் ‘காணப்படும்’ என்ற தலைப்பில் தான் கலந்து கொண்ட இலக்கிய விழாக்கள் பற்றியும் அங்கு தான் கண்டவை பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.

       இப்போது கணையாழிக்கு மறுபடியும் வந்துள்ள சோதனையை ம.ராஜேந்திரன் அவர்கள் துணிவோடு எதிர் கொண்டு, தானே ஆசிரியர் வெளியீட்டாளர் என்கிற சகல பொறுப்புகளையும் ஏற்று மே 2012 இதழ் முதல்
கணையாழி மறுபடியும் இலக்கிய அன்பர்களை ஏமாற்றமடையாதிருக்க வேள்வி போன்ற இப்பெரும் பொறுப்பை ஏற்கிறார். இலக்கிய அன்பர்கள் நிச்சயம் அவருக்குக் கை கொடுப்பார்கள். 0

Sunday, February 15, 2009

ஆதவனின் 'இரவுக்கு முன்பு வருவது மாலை'

அபூர்வமும் அருமையுமாய் நாம் நினைப்பவை அதிக நாள் நீடிப்பதில்லை என்பது ஒரு சோகமயமான யதார்த்தம். இலக்கியத்திலும் அப்படித்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் மிக அபூர்வமான மேதைகள். அவர்கள் 50 வயதுக்குள் மறைந்து விட்ட மாதிரி நம் தலைமுறையின் அபூர்வ படைப்பாளியான ஆதவனும் 45 வது வயதில் அகால மரணமுற்றது தமிழ் இலக்கிய உலகின் ஈடு செய்ய முடியாத இழப்பு. 1965 வாக்கில் 'தீபம்', 'கணையாழி'யில் எழுதத் தொடங்கிய அவர் மிகக் குறுகிய காலத்தில் தனித்தன்மை கொண்ட சாதனைகளை தமிழ்ப் படைப்புலகில் நிகழ்த்தி தனக்கென ஒரு அழியாத இடத்தை வாசகர் நெஞ்சில் பிடித்துக்கொண்டவர்.

சமூகத்தின் அகமனப் பிரச்சினைகளை கூர்ந்து நோக்கி அவற்றை மையமாக வைத்து யதார்த்தமும், ரசனையும் மிக்க கதைகளை எழுதிய அவரது படைப்புகளை
தற்போது மறுபிரசுரம் செய்து வரும் 'கிழக்கு பதிப்பகம்', முதல் முயற்சியாக அவரது ஆறு குறுநாவல்கள் கொண்ட 'இரவுக்கு முன்பு வருவது மாலை' என்கிற தொகுப்பைக் கொணர்ந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு உவப்பளிக்கும் செய்தியாகும்.

தன்னைப்போலவே, பிழைப்பை முன்னிட்டு டில்லி போன்ற பெருநகரங்களின்
வாழ்க்கைப் பொறியில் சிக்கிக் கொண்டு, தமது வேர்களுக்காக ஏங்குபவர்களின் சமூக ஒவ்வாமைகள், தங்களுக்குத் தாங்களே அந்நியப்பட்டுப்போதல், அதன் காரணமாய்ப் படும் அல்லல்கள், இளம் தலைமுறையினரின் முகம் தேடும் முயற்சிகள், அவர்களது பாலுணர்வுச் சிக்கல்கள் ஆகியவைகளே அவரது கதைகளில் அதிகம் காணப்படுபவை.இத்தொகுப்பில் உள்ள ஆறு குறுநாவல்களிலும் அத்தகைய மனச்சிக்கல்கள் மனித நேயத்தோடு வெகு நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

'இரவுக்கு முன்பு வருவது மாலை' என்ற முதல் குறுநாவல், வாழ்வின் அந்தக் கணத்துக்குமேல் எதையும் நிச்சயம் செய்ய முடியாத மனநிலையில் உள்ள ஒரு இளைஞனது ஒருமாலை நேரத்து அனுபவத்தைச் சொல்கிறது. ஒரு நோக்கமும் இன்றி ஒரு மாலை நேரத்தில் ஒரு சிக்னல் சந்திப்பில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருப்பவன் சிக்னலில் காத்திருப்போரது அவசரம், பொறுமை இன்மை,அலுப்பு ஆகியவற்றைப் பொறுமையாய் அவசரமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறான். 'மனிதனால் மனிதனுடைய சௌகரியத்துக்காக ஏற்படுத்தப்படும் விதிகளும் சட்ட திட்டங்களும் இறுதியில் அவனுக்கே எஜமானனாக மாறி அவனுக்கு சங்கடத்தையும் வெறுப்பையும் அளிக்கும் ஒரு அந்தஸ்தையும் பலத்தையும் பெற்றுவிடும் வேடிக்கை'யை ரசித்துக்கொண்டிருக்கிறான்.

பச்சைவிளக்கு விழுந்து சாலை நெருக்கடி குறைந்தும் - அவன் சாலையைக் கடந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாததால், வேகமாக விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பதற்றமின்றி நின்ற இடத்திலேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டவனாக நிற்கிறான். தன்னுடைய இந்தத் தனித்தன்மை, தன்னால் நிராகரிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தவேண்டும் அல்லது குறைந்தபட்சம் கவனிக்கப்பட வேண்டுமென்றும் அவனுக்குள்ளே ஒரு ரகசிய மூலையில் இருக்கும் விருப்பம்' துரதிர்ஷ்டவசமாக
கவனிப்பாரின்றி வீணாகிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்ச்சாரியில் தன்னைப் போலவே சாலைக் கடக்கும் அவசரத்தில் இல்லாத, அவனைப் போலவே தனித்தன்மை வாய்ந்த, சமூகத்துடன் ஒத்துப்போகாத ஒரு பிரகிருதியாய் நின்று கொண்டிருக்கும் ஒருத்தியைப் பார்க்கிறான். அவளும் இவனைக் கண்கொட்டாமல் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவள், சற்றுப் பொறுத்து சாலையைக் கடந்து இவனை நோக்கி வருகிறாள்.

இருவரும் புன்னகை செய்தபடி பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு
நடக்கிறார்கள். பிறகு பரஸ்பர விருப்புவெறுப்புகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
தொடர்ந்து பரஸ்பர ஈர்ப்பு, கைகோர்ப்பு என நெருக்கம் அதிகமாகி அர்த்தமில்லாமல் எதிர்காலத் திட்டமேதுமின்றி அந்த மாலைப்பொழுது கேளிக்கையிலும் அசட்டு நெருக் கத்திலும் கழிகிறது. டில்லி போன்ற நகரக்குக்கு வரும் இளைஞர்களும் யுவதிகளும் இப்படி தனித் தன்மைக்கும் தன் வேர்களுக்கும் ஏங்கி தமக்குத்தானே சுமையாகிக் கொண்டிருக்கும் அவலத்தை மென்னகை பூக்கவைக்கும் தன் எழுத்தால் ரசமாகச் சித்தரிக்கிறார் ஆதவன்.

'சிறகுகள்' என்கிற அடுத்த குறுநாவல், பெண்மைச் சிறகுகள் முளைத்துப்
பிறந்த வீட்டின் சுவர்களுக்கு அப்பால் பறக்கத் துடிக்கும் இளம் பெண்ணொருருத்தி
யின் படிப்படியான அகபுற மாற்றங்களைச் சித்தரிக்கிறது. குஞ்சு என்கிற அந்தப் பெண்ணின் பாத்திரப்படைப்பு மிகச் சிறப்பானது. கல்லூரிப் படிப்பின் கடைசி நாள் முதல், பின்னர் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் வேலைக்கு முயற்சிப்பதும், அதற்கான யதார்த்தமான தடைகளும், பின்னர் வேலைக்குப் போனதும் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளும், அடுத்து திருமண ஏற்பாட்டை அவள் எதிர்கொள்வது வரையிலான இன்றைய இளம் உள்ளங்களின் தேடல்களையும் தனித்தன்மைக்காகப் போராடும் மனப்போக்கையும் இயல்பாய், வலிந்து கட்டாமல் ரசமாய்ச் சொல்கிறது கதை. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இன்றைய தலைமுறை இடைவெளிச் சிந்தனைகளின் பிரச்சினைகள் மிகையின்றி சித்தரிக்கப்படுகிறது. ஆதவன் பெண் பாத்திரமாகவே மாறி அவளது சிந்தனை, பேச்சு எல்லாவற்றையும் அசலாய் எழுதியுள்ளார் .

தலைமுறை இடைவெளிச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இதைச்
சொல்லலாம்:
"நம் நாட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் வாழ்க்கையில் ரொம்பக் குறுக்கிடு
கிறார்கள். இல்லை?" என்றாள் ருக்கு. "குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை வளர்த்துவிட்டு அவர்கள் போக்கில் விட்டுவிடவேண்டியதுதானே! அது கிடையாது. அவர்களுடைய உத்தியோகம், கல்யாணம், குடித்தனம், குழந்தை வளர்ப்பு எல்லாவற்றிலும் இடைவிடாமல் குறுக்கிட்டுக் கொண்டே இருகிறார்கள். அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ ஏற்பட்டிருப்பது போன்ற பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களோ மாறுதல்களோ, நம் நாட்டில் ஏற்படாததற்கு இதுதான் காரணம். ஒவ்வொரு தலைமுறையும் பிந்தைய தலைமுறைகளின் நிழலிலேயே வளருகின்றன. சுதந்திரமான மனோபாவங்களும் புதிய சிந்தனைகளும் வாய்ப்போ ஊட்டமோ இன்றிப் பழைமையின்
சுமைக்கடியில் நசுங்கிப் போகின்றன. ஒரு ஆயிரம் பேராவது துணிந்து இந்தச் சுமையைத் தலையைச் சுற்றி எறிந்துவிட்டுப் புத்தம் புதிதாகத் தொடங்கினால்தான் நமக்கு விடிவுகாலம்".

'பழைமையின் சுமை, புதுமையை நசுக்கப் பார்க்கிறது. புதுமை சுமையை இறக்கிவிட்டு தலை தெறிக்க ஓடப்பார்க்கிறது. சுமைக்குச் சுமப்பவர்களிடம் ஏன் இந்த அலட்சியமும் அவநம்பிக்கையும்? சுமப்பவர்களுக்குச் சுமையின்மீது ஏன் இந்த மிரட்சியும் வெறுப்பும்? இப்படிப் பிடிக்காமல் ஒருவருக்கொருவர் தொத்திக் கொண்டிருப்பானேன்? சுமப்பவர்கள் சுமையை அவ்வப்போது இறக்கி வேண்டாதவற்றை எடுத்தெறிந்துபளுவைக் குறைக்கட்டும்; அல்லது சுமையே சுமப்பவர்களை அனுசரித்து தன் பளுவைக் குறைத்துக் கொள்ளட்டும்; உருவை மாற்றிக் கொள்ளட்டும்; தானும் இறங்கி வந்து சற்று நடக்கட்டும்...' என்கிறார் ஆதவன் அந்தப் பாத்திரத்தின் மூலமாக.

'மீட்சியைத்தேடி' என்கிற குறுநாவல் டில்லி வாழ்க்கைபற்றியும் அது பற்றிய
மிகையான கற்பனையும் மிகையான அலுப்புமான இரு வேறு பார்வை பற்றியும்
சித்தரிப்பது.

இயந்திரமாய்ப்போன டில்லி வழ்க்கையில் அலுத்துப்போயிருக்கிற சங்கர்
விடுமுறையில் தன் சொந்த மண்ணான திருவையாறுக்கு வருகிறான். ரயிலை விட்டு இறங்கிய கணத்திலிருந்து அவன் பார்க்கிற முகங்களும், நுகர்கிற மணங்களும், ஓசைகளும் அவன் மனதில் ஒரு அழகிய அமைதியையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்துகின்றன. 'இந்தக் கணத்தை நிரந்தரமாக்க முடியுமானால்!' என்ற ஏக்கம் எழுகிறது. இறங்கியதும் குடிக்கிற காப்பி, வழியில் தென்படுகிற வயல்களின் செழிப்பு, குறுக்க்¢டுகிற ஆற்றுப்பாலம், அதனடியில் சுழித்துக்கொண்டு ஓடும் நீர் எல்லாமுமே 'இங்கேயே இருந்துவிடலாம் போலிருக்கிறது' என்று சொல்ல வைக்கிறது. அதைக் கேட்கிற - அவனை அழைக்க வந்திருக்கும் அவனுடைய சித்தப்பா மகன் கிச்சாவுக்கு
அது ரசிக்கவில்லை. அவன் படித்துவிட்டு பம்பாய்க்கும் டில்லிக்கும் வேலைக்கு மனுப்
போட்டு இண்டர்வியூகளுக்குப் போய், முடிவு தெரியாமல் அலுத்துப்போய் இருப்பவன். "நீ அப்படித்தான் சொல்வாய். இந்த ஊர், இந்த வாழ்க்கை - இவற்றுக்கு வெளியில் நீ இருக்கிறாய். இதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் உனக்கு இல்லை. எனக்கோ, இது என் மேல் திணிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். ஒரு தளை" என்கிறான். 'நிர்ப்பந்தமாகிவிடும்போது, எந்த விஷயமுமே சுவாரஸ்யம் அற்றதாகி விடுகிறதோ?' என்று இவனுக்குத் தோன்றுகிறது. ஆபீஸ் வேலை, நகர வாழ்க்கையின் பரபரப்பு அவசரம், காதலி மீராவின் புன்னகை - இவற்றையெல்லாம் விட்டு ஓடிப்போக வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்ற வேண்டும்?

இப்படி அவன் சந்திக்கிற ஒவ்வொன்றும் - தியாராஜர் சமாதியின் அழகான அமைதி, அருகில் யாருக்கும் எதற்கும் கவலைப்படாமல் தன் சொந்தப் போக்கில், சொந்த நியமங்களுக்கு உட்பட்டு ஓடும் காவிரி - எல்லாமும், 'படிப்பு, நாகரிகம், வக்கணையான பேச்சும் பாவனைகளும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மட்டத்திலும் புழங்குவதற்காக அவன் அணிய வேண்டியிருந்த எண்ணற்ற போர்வைகளைக் கழற்றி எறிந்துவிட்டு இந்த நதிக்கரையில், இந்த ஓசைகளின் மத்தியில், பெயர் இல்லாமல், டெலிபோன் நம்பர் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடியுமானால்!' என்று ஏங்க வைக்கிறது. சித்தப்பா வீட்டுக்குப் போனதும் சித்தப்பா, சித்தி சித்தப்பா மகள் எல்லோரும் காட்டும் பாசம், விருந்தோம்பல் அனைத்தும் அந்த ஏக்கத்தை வலுப் படுத்துகின்றன. மாறாக அவனுடைய சித்தப்பா மகன், அவனது இந்த மன அவசம் எல்லாம் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பது போலத்தான் என்று உணர வைக்கிறான். அவனுடைய சித்தப்பா சொன்ன, "எதிலுமே நீ உன்னைப் பூரணமாக ஆழ்த்திக்
கொள்ள வேண்டும். பூர்ண சமர்ப்பணத்தில் பந்தங்களே இருக்காது. பந்தங்களைப் பற்றி நினைப்பது ஒரு பக்குவமற்ற நிலை" என்பதும் அவனைச் சிந்திக்க வைக்கிறது. 'என்னை உருவாக்கிய, என் சிந்தனைகளை உருவாக்கிய வாழ்க்கை முறையை திரஸ்கரிக்க நினைப்பது எவ்வளவு மோசமானது! எவ்வளவு நாட்கள் இங்கே தங்கினாலும் அவன் என்றைக்காவது ஒரு நாள் திரும்பிப் போக வேண்டியவன்தான்; ஒரு அன்னிய உலகத்தின் பிரஜைதான். இதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு
வழியில்லை' என்பதை உணர்ந்து திரும்புகிறான்.

'கணபதி கீழ்மட்டத்து ஊழியன்' என்கிற குறுநாவலில் எல்லா அலுவலகங்
களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆரோக்கியமற்ற இன்றைய சூழ்நிலைகளின் எரிச்சல் அதிகமும் காட்டப்படுகிறது. கீழ்மட்டத்து ஊழியர்களின் சோம்பல், அலட்சியம், மேலதிகாரிகளின் ஆணவம், அடுத்த நிலை ஊழியர்களிடம் காட்டும் உதாசீனம், செய்யும் அவமதிப்பு ஆகியவை ஆதவனுக்கே உரிய மென்மையான நகைச்சுவையுடன் சித்தரிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனைபோலவே நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை, வாழ்வின்மீதான அதிருப்தியை இக்கதையில் வரும் கணபதி போன்ற பாத்திரங்கள் கசப்போடு வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எல்லோர் மீதும் எதற்கும் ஊமைக்கோபம் பீரிட்டு, சிறுமையாக உணர்கிறார்கள். அதிலும் டில்லி போன்ற வெளி மாநிலங் களில் வேற்றுமொழி அதிகாரிகளிடம் காணப்படும் தென்னிந்தியர் மீதான இளக்காரம், எள்ளல் எல்லாம் இவர்களை எரிச்சலூட்டி இயலாமையால் சோர்ந்து போகிற சுயபரிதாபத்தைச் சித்தரிக்கின்றன.

இவர்கள் வெளியில் மட்டுமின்றி வீட்டுக்குள்ளும் அவமதிப்பையே அதிகமும் உணர்கிறார்கள். இக்கதையில் வரும் கணபதிக்கு, 'வீட்டில் அண்ணன் சம்பாத்தியத்தில்
சாப்பிடுகிற தாழ்வுணர்ச்சி, பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுத்து அவனது
பாதுகாப்பில் அவனிருப்பதாக மறைமுகமாக உணர்த்தும் அண்ணனின் செயல், அலுவலகத்தில் தன்னிடம் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளாமலே வேலை வாங்கும் மேலதிகாரி போலவே அவனிடம் வேலை வாங்கும் அண்ணி, மாதாமாதம் பணம் அனுப்புவதற்குப் பிரதி உபகாரமாய் அவனுக்கு மனைவி தேடி அவமானப்படுத்தும் அப்பா'-எல்லாமும் தன்னை அவமதிப்பதாகவே படுகிறது. அவன் அலுவலகப் பொறுப்பில் இருக்கும்போது அவனை லட்சியம் செய்யாத அடுத்தநிலை ஊழியர்கள், மேலதிகாரியு டனான கௌரவமற்ற விவாதம், விதிகளைமீறிய விளையாட்டு - இவ்வளவும் எதனால்?' என்று குமைகிறான். கிராமத்தைவிட்டு வந்து இங்கே டில்லியில் அவனுக்கென்று
யாருமில்லாதது போன்ற பிரிவுணர்ச்சி, சமூகத்தின் ஜாதியமைப்பால் தனக்கு விரும்பிய கல்லூரியில் படிப்பில் இடம் கிடைக்காது போன ஆற்றாமை என்று எதிலும் அவனுக்கு ஏமாற்றமும் விரக்தியுமே மிஞ்சுகின்றன. எல்லோருக்குமான இந்த யதார்த்தமான ரசபேதமான அனுபவங்கள் கணபதி என்கிற கீழ்மட்டத்து ஊழியனுக்கு அதீதமாகத் தோன்றுவதை எள்ளல், நையாண்டி நிறைந்த சமூக விமர்சனங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளார் ஆதவன் இக்கதையில்.

'நதியும் மலையும்' என்கிற தலைப்புடனான குறுநாவல் நதியை நாடி மலை செல்வதான உருவகத்தைக் கருவாகக் கொண்டது. புதுமைப்பித்தனையே படிக்கிற மாதிரியான உணர்வவைத் தரும் அசல் திருநெல்வேலி வட்டார வாழ்வு முறை, சொல்லாட்சிகள் கொண்ட படைப்பு. இசக்கியாப் பிள்ளை என்பவரின் இளமை முதல் அவரது ஈடேறாத காதலின் மறுபிறப்பு ஈறாக, மரபுவழிப்பட்ட எதிர்பார்ப்பு, பெற்றவரால் கிட்டும் ஏமாற்றம், நிறைவேறாத காதலின் உயிர்ப்பு பற்றிய கனவு என கதை விஸ்தார மாக ரசமாகப் பின்னப்பட்டுள்ளது. டில்லி வாழ்வில் பிணைக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞனின் சுயபரிதாபத்துக்கு சற்றும் குறைவில்லாமல் திருநெல்வெலி கிராமத்து இளைஞனுக்கும் ஏற்படும் விரக்தி, எங்கும் எதிலும் பிடிப்பில்லாத மனப்போக்கு, தன்னையே தண்டித்துக் கொள்ளும் கோபம், எல்லோர்மீதும் ஏற்படுகிற கோபம் என ஆதவனின் எல்லாக் கதைகளையும் போலவே இதுவும் விரக்தியின் கசப்பையே அதிகமும் காட்டுகிறது. இவ்வுணர்வு திரும்பத் திரும்ப அவரது எல்லாப் படைப்புகளிலும் காணப்பட்டாலும், யதார்த்தமான வாழ்வின் சித்தரிப்புகளாலும் அவரது ரசனை மனதின் கூர்மையான அவதானிப்புகள் தரும் வாசிப்பு சுகத்தாலும் அது ஒரு குறையாகப் படவில்லை. கதையினூடே வரும் தலவருணைகள் அற்புதமானவை.

உதாரணத்துக்குச் சுட்டுவதானால்: காந்திமதி என்பவளின்மீது கொண்ட இளம் பருவத்து நேசம் அவள் மீது காதலாகப் பரிணமித்து, பெற்றவர்களின் கௌரவப்பிரச்சினையால் அக்கனவு தகர்க்கப்பட்டு இருவரும் வெவ்வேறு துணையுடன் பிணைக் கப்பட்டு, வாழ்க்கை திசை மாறிப்போய் இருவரும் தம் துணையின்றி வாழும் சூழ்நிலை யில், விதியின் விளையாட்டு மீண்டும் அவர்களை நெருங்கச் செய்கிறது. கணவனால் கைவிடப்பட்ட காந்திமதி, மனைவியை இழந்த இசக்கியாப் பிள்ளையைப் பார்க்க குற்றாலத்திலிருந்து அழைக்கிறாள். அவளது அழைப்பைப்பற்றிச் சிந்திக்கிற பிள்ளையின் மனவோட்டம் இப்படிச் சித்தரிக்கப்படுகிறது: 'சோ'வேன விழும் குற்றாலம் நீர்வீழ்ச்சி அவர் கற்பனையில் தெரிந்தது. நதி தன் பாதையில் வரும் மலையைத் தழுவி வசப் படுத்திக் கொள்ள முயலுகையில் நீர்வீழ்ச்சி உண்டாகிறது. தன் பாதையில் குறுக்கிடு பவற்றை அரவணைத்துக்கொள்ளத்தான் நதி முயலுகிறதே தவிர எதையும் அணைத்துக் கொள்வதற்கென்று தன் போக்கைவிட்டு விலகிச் செல்வதில்லை. மலை இல்லாவிட்டால் அது சமவெளியில் ஓடிக் கொன்டிருப்பதில்தான் நதியின் அழகும் கம்பீரமும் இருக்கிறது. பெண்கள் கூட நதியைப் போன்றவர்கள்தாமோ? ஆனால் நதிகள் கரைகளுக்கிடையில் செல்லும்போது மதிப்புப் பெறுகின்றனவென்றால், மலைகளும் தனியே இருக்கும்போது தானே மதிப்புப் பெறுகின்றன?'

கடைசியில் மலை நதியை நோக்கிப் போகிறது என்பதாகக் கதை முடிகிறது. வழக்கமான நகர்ப்புறச் சிந்தனைக்கு மாற்றாக இக்கதையில் கிராமத்து வாழ்வினைச்
சித்தரித்திருக்கிறார் ஆதவன்.

'பெண், தோழி, தலைவி' என்கிற கடைசிக் குறுநாவல் நடுத்தர வர்க்கத்துப் பெண் ஒருத்தி வேலைக்குப் போவது, அங்கு அவளுக்கு ஏற்படுகிற அனுபவங்கள் பற்றியும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் பெண்ணாகவும், அலுவகத்தில் உள்ளவர்களுக்குத் தோழியாகவும், பின்னர் அலுவலக சங்கத்தின் தலைவியாகவும் படிப்படியாய் பரிணாமம் பெறுவது பற்றியும் சொல்கிறது. லல்லிக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களான பெண்களின் வம்புப் பேச்சும், நேர் மேலதிகாரியான செல்வராஜ் என்பவனின் ஒட்டாத போக்கும் ஆரம்பத்தில் சுவாரஸ்யமற்றதாக இருந்தாலும் போகப் போக அவளுக்கு நடைமுறை அலுவலக யதார்த்தம் புரிந்து சுவாரஸ்யம் ஏற்படுகிறது. செல்வராஜைப் பற்றி மற்றவர் உருவாக்கும் சித்திரம் மெல்ல மெல்ல நாளடைவில் கலைந்து அவனிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதும் பின்னர் அவள் ஏகமனதாய் சங்கத் தலைவியாய் ஏற்கப்படுவதுமான நிகழ்ச்சிகள் ஆதவனின் வழக்கமான விரக்திப் பாணியில் இல்லாமல் ஆரோக்கியமான நம்பிக்ககயூட்டும் வாழ்வின் பதிவுகளாகக் கதை வளர்ந்து நிறைவு பெறுகிறது.

ஆதவனின் படைப்புகளில் நமக்கு இனிய வாசிப்பு அனுபவம் கிட்டினாலும் ஏன் அவர் வாழ்வின் நம்பிக்கை வறட்சியையே அதிகமாகச் சித்தரிக்கிறார் என்று அவர் மீதான அனுசரணை மிக்க ஒரு அனுதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியைவில்லை. அதற்குக் காரணம் அவரே சொல்வது போல "நானென்ன, என்னிடமிருந்தே தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னைக் கண்டுபிடிக்கவா?" என்பதுவாக இருக்கக் கூடுமோ என்றே சிந்திக்க வைக்கிறது. 0

நூல் : இரவுக்கு முன்பு வருவது மாலை.
ஆசிரியர்: ஆதவன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.
விலை : ரூ. 120/-

Sunday, February 01, 2009

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்

மக்களைப் பைத்தியமாக அடிக்கும் சினிமா என்கிற கனவுலகம் பற்றி
சுஜாதா எழுதிய 'கனவுத் தொழிற்சாலை' தொடர் 'ஆனந்தவிகடனி'ல் வெளியானதற்கு
வெகு காலத்துக்கு முன்பே அறுபதுகளில் 'தீபம்' இதழில் சினிமா உலகம் பற்றி,
திரு.அசோகமித்திரன் அவர்கள் எழுதிய 'கரைந்த நிழல்கள்' என்கிற நாவல் தொடராக
வெளியானது. முழு நேர எழுத்தாளராக ஆவதற்கு முன்னால் கொஞ்ச காலம் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய காலத்து அனுபவங்களை மிகை என்று எண்ண முடியாத
யதார்த்தத்துடன் ஆசிரியர் இந்நாவலில் பதிவு செய்துள்ளார். நாவல் இரத்தமும்
சதையுமாய் ஜீவனுடன் இருப்பதற்கு ஆசிரியரின் வெகு இயல்பான தனித்துவம் மிக்க
நடையே காரணமாய் உள்ளது.

'கரைந்த நிழல்கள்' வெறும் சினிமாவைப் பற்றி மட்டும் பேசுகிற நாவல் அல்ல.
சினிமா என்கிற மாய உலகத்தின் பிரமிப்புகளினூடே மறைந்து கிடக்கும் ஏமாற்றங்கள், இழப்புகள், வலிகள், கண்ணீர் என்று - அதில் பரிச்சயம் இல்லாத நம்மால் கற்பனை செய்ய முடியாத சோகங்க¨ளையும், முகமறியாத மனிதர்களின் காலநேரப் பிரக்¨¨ஞையற்ற உழைப்புகள் அர்த்தமற்று, அடையாளமற்றுப் போகிற பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல் ஆகும்.

கதை என்னவென்று கேட்டால உடனே சொல்லிவிட முடியாதுதான். இதில் ஒருவரது கதையல்ல - பலரது கதைகளும் பிணைந்துள்ளன. படப்பிடிப்பில் சகலத்துக்கும் பொறுப்பாய் உள்ள மிகக் கஷ்டமான பணியேற்றிருக்கும் 'சந்திரா கிரியேஷனி'ன்
புரொடக்ஷன் மானேஜர் நடராஜன், விடிய இன்னும் வெகு நேரம் இருக்கும்போதே
அன்று மாமண்டூர் அருகே நடக்க உள்ள 'அவுட்டோர் ஷ¥ட்டிங்கு'க்குப் புறப்படுவதில்
நாவல் தொடங்குகிறது. வீட்டிலிருந்து கம்பனிக்காரில் கிளம்பி ஸ்டூடியோவுக்குப்போய், அங்கு படப்பிடிப்பு உபகரணங்கள், அன்றைய படப்பில் குழுவாய் நடனமாட வேண்டிய துணை நடிகைகள் ஆகியோரை படப்பிடிப்பு ஸ்தலத்துக்கு வேன்களில் ஏற்றி அனுப்பிவிட்டு,
பட முதலாளியிடம் காட்டமுடியாத கோபத்தை புரொடக்ஷன் மானேஜரிடம் காட்டுகிற டைரக்டர், காமிராமேன், மோசமான சாலையில் வண்டியை ஓட்ட முனகும் டிரைவர்
ஆகியோரைச் சமாளித்து, படப்பிடிப்பின் இடையே எல்லோருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்துவிட்டு, சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு
திரும்புகிற - ஒரு சதாவதானியின் சாகசத்தை ஒத்ததாய் செயல்படுகிற புரொடக்ஷன்
மானேஜர் படும் பாடுகளைப் படிக்கும்போது 'பாவி மகன் படுந்துயரம் பார்க்கொணாதே' என்றுதான் பாடத் தோன்றும்.

வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டூடியோவுக்குள் நடைபெறும் படப்பிடிப்புக்கு எல்லோரும் வந்து காத்திருக்கிற நிலையில், உடம்பு சரியில்லை எனப் பொய்க்காரணம்
சொல்லி முக்கிய நடிகை வர மறுத்து விடுகிறாள். பட முதலாளியே நேரில் போய் மிரட்டியும் தன்னை நடிகையாக்கிய அவருக்கும் தண்ணிக் காட்டிவிட, படப்பிடிப்புமல்ல படத்தையே
நிறுத்திவிட நேர்கிறது. அதனால் படத் தயாரிப்பாளர் மட்டுமின்றி - அது சார்ந்த அனைவருமே நொடித்துப் போகிறார்கள். படத்தின் முக்கிய பொறுப்பாளனாய் அயராது உழைத்த புரொடக்ஷன் மானேஜர் பிச்சை எடுக்கு நிலைக்குத் தள்ளப்படும் பரிதாபத்தையும் கண்டு அதிர்கிறோம்.

தொடர்ந்து அந்தப் படத்தை வாங்கி முடிக்க எண்ணும் 'விநாயகா ஸ்டுடியோ'
உரிமையாளர் ராம அய்யங்காரது கதையும் சினிமாவால் சீரழிபவர்கள் பற்றிய இன்னொரு சோகச் சித்திரம்.

ஒரு திரைப்படம் முழுமையான பிறகு தியேட்டரில் கண்டு பரவசப்படும் நமக்கு, அதன் பின்னணியில் வாழ்வின் கனவுகளைச் சிதைத்துகோண்டு உருக்குலைகிற வர்க்கத்தின் துயரம் தெரிவதே இல்லை. கவி மில்டன் சொன்னது போல, ரோஜாவின் அழகு மட்டுமே
நம் கண்களுக்குத் தெரிகிறது; அதைப் பயிரிட்டு, பறித்து விற்பனை செய்கிறவர்கள்
அனுபவித்த வலிகள் நமக்குத்தெரிவதில்லை. அந்தப் பரிதாப யதார்த்தத்தை நாவல் படம்
பிடித்துக் காட்டுகிறது. இத்தனைக்கும் - கனமான, அடுக்கு மொழிஅலங்காரம், பரபரப்பு, அதிர்ச்சி எதுவுமற்ற லகுவான- அவருக்கு மட்டுமே சாத்யமாகியுள்ள அற்புத மொழிநடையில் அசோகமித்திரன் இந்த நாவலை எழுதி, வாசிப்பவர்களை நெகிழ்ச்சி கொள்ளச்
செய்துள்ளார். நமது கற்பனைக்கும் மாறான வேறு உலகத்தின் நிஜங்கள் பற்றி அறிந்து
அதிர்கிறோம்.

நாவலில் அசோகமித்திரனின் பாத்திரப்படைப்புகள் கச்சிதமானவை. வெகு
இயல்பானதாய், நாம் தினசரி பார்க்கும் மனிதர்களின் வாழ்வை மிகைப்படுத்தாமல் நாம்
ஏற்கும் வகையில் சித்தரிப்பதாய் அமைந்துள்ளன. புரொடக்ஷன் மானேஜர் நடராஜனின் முமுணுக்காத, எதற்கும் அலட்டிக் கொள்ளாத, கனவுகளற்ற வாழ்க்கை இறுதியில்
சிதைந்து போவதை திடீர் அதிர்ச்சியாய்த் தராமல், நாவலின் இறுதியில் ஒரு பேச்சுக்
கிடையே வாசகர் அறிந்து கொள்கிறமாதிரியான பாத்திர வார்ப்பு நம்மை வியக்க
வைக்கிறது. படத் தயாரிப்பாளர்களும் நமக்கு வெளியே தெரிகிறமாதிரி மகிழ்ச்சியாய்,
குடும்ப வாழ்வில் நிம்மதியாய் இல்லாத நிஜத்தை - ரெட்டியார், ராம அய்யங்கார்
ஆகியோரின் பாத்திரப் படைப்பின் மூலம் அறிகிறோம். தாமஸ்ஹார்டி நாவலில் வருவது
போன்று, ஊழ் மனிதனின் வாழ்வில் எப்படிப் புகுந்து சழற்றி அடிக்கிறது என்பதையும் -
ஆசிரியர் கூற்றாக அல்லாமல் - இவர்களது வாழ்க்கைச் சித்தரிப்பின் முலம் வாசகன்
தானாக உணர்ந்து கொள்ளச் செய்திருப்பது அவரது எழுத்தாற்றலைக் காட்டுவதாகும்.

சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட - சண்டித்தனம் பண்ணும் நடிகை
ஜயசந்திரிகா, அவளது தாயார் தனபாக்கியம், நடேச மேஸ்திரி, எடுபிடி ஆளாய்
இருந்து படத் தயாரிப்பாளராகும் சம்பத் என்று அனைவருமே - ஒரு கைதேர்ந்த
ஓவியன் சின்னச் சின்ன தூரிகைத் தீற்றலின் மூலம் முழு உருவமாக்கிக் காட்டி விடுவது
போல - சிறு நிகழ்வுகளையும் விடாது நுணுக்கமாய்க் கவனித்து சிறப்பான சித்திரங்களாய் ஆக்கி விட்டிருப்பதின் மூலம், நம் மனதில் நீங்கா இடம் பெறச் செய்திருக்கிறார்.

வருணனைனகளிலும் சின்னச் சின்ன விவரங்களையும் விட்டுவிடாமல் பதிவு செய்து ஒரு படக்காட்சியைப் பார்ப்பது போலவே சித்தரித்துள்ளது புதிதாக எழுத வருபவர்களுக்கு உதவும் குறிப்புகளாகும்.

மொழிநடை, பாய்ந்து பரபரவெனச் செல்வதில்லை என்றாலும். கதை வளரும்போது ஒரு துப்பறியும் நவீனம் போல் அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதை அறியத்துடிக்கிற ஆவலை உண்டாக்கி நாவலின் வாசிப்பு வேகத்தை உயர்த்திவிடுகிறது. அவரது நகைச்சுவை உணர்வும் ரசிக்க வைப்பது. அவரது சிறுகதைளில் மெலிதாய் வாசகனை மென் முறுவல் பூக்க வைக்கிற மாதிரி இந்த நாவலிலும் பல இடங்களில் காண்கிறோம். உதாரணத்துக்கு ஒரு இடம்: 'அவள் இன்னும் நட்சத்திர நடிகை ஆகிவிடவில்லை. ஒல்லியாகத்தான்
இருந்தாள். முகம், உடல், சருமம் எல்லாம் இன்னும் விசேஷமான, அபரிமிதமான சத்துள்ள உணவு உட்கொள்வதன் மூலம் ஏற்படும் மினுமினுப்பு இல்லாமல், ஒரு குழந்தைக்குத்
தாயான ஒரு நடுத்தர வீட்டுப் பெண்மணியினுடையது போல் இருந்தது'.

பலரும் கிராமம் சார்ந்த, வட்டாரக் கதைகளையும் மாந்தர்களையும் பதிவு செய்து வருகையில் - நகரம் சார்ந்த, குறிப்பாக சென்னை சார்ந்த நடுத்தர மக்களின்
வாழ்வின் ஆசாபாசங்கள், நிறைவேறாத அபிலாஷைகள், எப்போதும் எதிலும் நிறைவு
காணாத நடைமுறை வாழ்க்கை, அவற்றின் எதிர்வினைகள் போன்றவற்றைச் சித்தரிக்கும்
மாநகரக் கதைகளை எழுதி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் அசோகமித்திரன். அந்த மாநகர வாழ்வின் ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை, அதன் அவலத்தை இந்த நாவலிலும் அற்தமாய்ப் பதிவு செய்திருக்கிறார்.

பல இடங்களில் அவர் நேரடியாகப் பேசிவிடுவதில்லை என்பதால் வாசிப்பவன்
சூழ்நிலையைப் புரிந்து கொள்ள சிரமப்பட நேர்வதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
வாசகன் பலவற்றைத் தன் யூகத்தால் மட்டுமே உணர வைக்கும் எழுத்து அவருடையது.
இந்த நாவலிலும் அப்படிப் பல நிகழ்வுகளின் முடிவுகளை வாசகன் யூகத்தால் உணர்ந்தே
நிறைவு கொள்ள நேர்கிறது. அது ஒரு குறையாக இல்லாமல் அசோககமித்திரனின்
தனித்தன்மையின் ஒரு உக்தியாகவே அதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

நூல்: கரைந்த நிழல்கள்.
ஆசிரியர்: அசோகமித்திரன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.

----- 0 -----

'எதிர்காலம் என்ற ஒன்று' - அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்

ஜூல்ஸ்வெர்ன் என்பவர் 1873ல் எழுதிய 'பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்'
என்கிற அறிவியல் கற்பனைப் புதினம்தான் இன்றைய அறிவியல் புனைகதைகளுக்கெல்லாம் முன்னோடி. 'க்ரிப்டாலஜி' என்னும் துறையை யாரும் அப்போது கனவுகூடக் கண்டிருக்க
வில்லை. ஆனால் ஜூல்ஸ்வெர்ன் 'க்ரிப்டாலஜி'யின் நுணுக்கங்களைக் கிட்டத்தட்ட அப்படியே எழுதி விட்டார். இன்று 'க்ரிப்டாலஜி' ஒரு முக்கிய துறை. ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள், புலனாய்வு அதிகாரிகள் என்று பலரும் புலனாய்வில் சங்கேதக் குறியீடுகளை அனுப்பும் சவாலான பணி இது. இதுபோன்று, கற்பனை நிஜமாகும் சாத்தியத்தை அறிவியல் புனைகதைகள் நிரூபித்துள்ளன.

எனக்குத் தெரிந்தவரை, நாற்பதுகளில் வெளிவந்த டாக்டர் மு.வரதராசனாரின்
'கி.பி 2000' என்னும் புனைகதைதான் தமிழின் முதல் முழுநீள அறிவியல் புனைவு நூல் எனலாம். கி.பி 2000மாவது ஆண்டில் தமிழகம் எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதைக் கற்பிதமாக எழுதினார். அதில் அவர்
கொண்ட நம்பிக்கைகள் - மனிதனை மனிதன் இழுக்கும் நரவாகனமான கைரிக்ஷா ஒழிய வேண்டும், பள்ளிகளில் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் போன்றவை - அவர் காலத்திலேயே நிறைவேறத் தொடங்கி விட்டன.

ஐம்பதுகளில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு திரைப் படத்தில் 'ஐம்பதும் அறுபதும்' என்று ஒரு கற்பனையை மதுரத்துடன் இணைந்து காட்சிப் படுத்தினார். மதுரம் அடுக்களையில் பெண்களுக்கு வேலைப்பளு குறைய, எல்லாம் எந்திர மயமாக வேண்டும் என்று கேட்பார். அது இன்று நிறைவேறி விட்டது. ஏன் ராமாயணத்தில் ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்வதும், சீவகசிந்தாமணியில் சீவகன் மனைவி விசையை மயிற்பொறியில் ஏறித் தப்புவதும் இன்றைய வானஊர்திகளின் கற்பனைதானே?

மேலைநாடுகளில் சென்ற நூற்றாண்டுகளிலேயே ஹெச்.ஜி.வெல்ஸின் 'காலஇயந்திரம்', 'உலகங்களுக்கிடையேயான போர்' போன்ற அறிவியல் புனைகதை நாவல்கள் எழுதப்பட்டு, திரைப்படங்களாகவும் வந்து 'மக்களை இப்படியும் நடக்குமா?' என்று அதிர வைத்தன. அத்தகைய நாவல்கள், திரைப் படங்களில் கண்ட - விண்வெளி நிலையங்கள், ரிமோட் கண்ட்ரோல் போன்றவை இன்று நிஜமாகி விடவில்லையா? இத்தனைக்கும் இப்படிக் கனவு கண்டவர்கள் விஞ்ஞானிகள் அல்லர். அவர்கள் எழுத்தாளர் கள். வாழ்க்கையின் அச்சம் அல்லது நம்பிக்கைகளைத்தான் அவர்கள் எழுதினார்கள். அவை பின்னாளில் நிஜமானவை அதிகம். அதே போல இந்த 'எதிர்காலம் என்ற ஒன்று' - என்று 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டிருக்கும் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பும் வித்தியாசமான, பிரமிப்பூட்டுகிற, பயமுறுத்துகிற கற்பனைகளைக் கொண்டதாய் மனிதர்களின் 'அச்சம் அல்லது நம்பிக்கை'யின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

'திண்ணை.காம்' மற்றும் 'மரத்தடி குழுமம்' நடத்திய 'அறிவியல் புனைகதைப் போட்டி'
யில் பரிசு பெற்ற கதைகள் மற்றும் போட்டிக்கு வந்தவைகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளை 'எதிர்காலம் என்ற ஒன்று' என்ற தலைப்பில் திரு.கோ.ராஜாராம் தொகுத்தளித்
திருக்கிறார். இந்த நூல்தான் தமிழில் பலஎழுத்தாளர்களின் அறிவியல் சிறுகதைகளின்
முதல் தொகுப்பு என்கிறது பதிப்புரை.

இத்தொகுப்பில் 21 புனைகதைகள் உள்ளன. எல்லாமே விதம் விதமான கற்பனைகள். இனிய அதிர்ச்சியும் பிரமிப்புமாய் புருவத்தை உயர்த்த வைப்பவை. முதல் கதை, சுஜாதாவை அடுத்து அறிவியல் புனைகதைப் படைப்பில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவரான
திரு.ஜெயமோகன், போட்டிக்கு முன்னதாக 'திண்ணை'யில் எழுதிய கதையான 'நாக்கு' என்பது. அவரது பெயர் ஏற்படுத்துகிற அதிர்ச்சி பல என்பதற்கேற்ப இந்தக் கதை தரும் செய்திகளும் அதிர்ச்சியளிப்பவை. ஒரு கடுமையான பஞ்ச காலத்தில் ஈராக்கில் மனிதர் களையே கொன்று தின்கிற நிலை ஏற்பட்டது என்பதும் இப்போதும்கூட வெளியே தெரியாமல், ருசிகண்ட சில நரமாமிச பட்சிணிகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதும் தலையை உதற வைப்பவை. கதை முடிவும் அதிர்ச்சி தருவது.

அடுத்த இரு கதைகளும் திரு.ராமன்ராஜாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள - இன்று ஆங்கில அறிவியல் புனை கதைகளில், சிக்கலான மரபணு கதைகளுக்குப் பெயர்போன
நான்ஸி க்ரெஸ் என்பவரின் 'ஜீன் திருடனின் விநோத வழக்கு', 'நாலாவது குழந்தை' என்கிற கதைகளாகும். முதல் கதை மரபணுத் திருட்டு பற்றியது. ஒருவனது மரபணுவைத் திருடி
விஷக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த கம்பனி, உரிமையாளனுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்குத்தொகையைக் கொடுக்காமல் தப்பிக்க வேண்டி, அவன் நீதிமன்றத்துச் செல்லுமுன் அவன் மீது வழக்குத் தொடுக்கிற சுவாரஸ்யமான கதை. பத்திரிகைச் செய்தி, கடிதங்கள், மெமொக்கள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது கதை
'குளோனிங்' பற்றியது. கருக்களை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் சாத்தியம் பற்றிய கற்பனை. இருக்கிற குழந்தை நம் எதிர்பார்ப்பின்படி உருவாகாவிட்டால் அது போல இன்னொன்றை உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறது கதை.

அடுத்தது முதற்பரிசு பெற்ற திரு.சேவியர் என்பவரின் 'ஏலி ஏலி லாமா சபக்தானி' என்பது. 'கால இயந்திரம்' போல ஒரு பின்னோக்கிய காலத்துக்குப் பயணப்படுவது பற்றியது.
இந்தக் கதை 'ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது தடுக்கப்பட்டு பாரபாஸ் சிலுவையில் அறையப்பட்டிருந்தால்?' என்ற கேள்வியை எழுப்பி அதனால் உலகில் எத்தகைய மாற்றங்கள்
நிகழ்ந்திருக்கும் என்று நம்மைக் கற்பனை செய்ய வைக்கிறது.

இரண்டாம் பரிசைப் பகிந்து கொள்ளும், தலைப்புக் கதையான 'எதிர்காலம் என்ற ஒன்று' திரு.ரெ.கார்த்திகேசு எழுதியது. ஏற்றுக் கொள்ளக்கூடிய போர்க்காலக் கொலைகள், அழிவுகளை நியாயப்படுத்துகிற எதிர்கால விபரீதத்தை சுட்டிக் காட்டிப் பயமுறுத்துகிறது கதை.

இரண்டாம் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு கதையான 'வானத்திலிருந்து வந்தவன்' திரு.நளினி சாஸ்திரி எழுதியது. வேற்று கிரகத்து மனிதர்கள் பற்றியது. வேற்று
கிரகத்திலிருந்து வரும் உயிரினம் ஒன்றை வரவேற்கக் காத்திருப்பது பற்றி வித்தியாசமாக கற்பிதம் செய்து நகைச்சுவையுடன் சஸ்பென்ஸை உடைக்கிறது. வரும் விருந்தாளி மனிதன் தான் என்பதும் காத்திருப்பது நம்முடைய முன்னோர்களான குரங்குகள்தாம் என்பதும்
சுவாரஸ்யமான கற்பனை.

கணினியில் புரோகிராம் எழுதுகிற சிலரின் வக்கிரமான முயற்சிகள் வெற்றி பெற்றால் என்று ஆகும் என்று பயங்காட்டுகிறது அருண்வைத்தியநாதனின் 'பிம்ப உயிர்கள்'.

முன்றாம் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் என்.சொக்கனின் 'மழலைச்சொல் கேளாதவர்' என்கிற கதை குழந்தைகளே இல்லாத எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறது. உதவிக்கு என்று நாம் கண்டுபிடித்திருக்கிற ரோபோ போன்றவை எப்படி நமக்கு உபத்திரவமாகக் கூடும் போன்ற எதார்த்தத்தைச் சுட்டுகிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் செலவினங் களைக் குறைக்கும் அரசின் திட்டத்தின் புதிய உத்தரவின்படி எட்டரை மாதத்தில் ஒரு ஊசி போடப்பட்டு, பிறந்த உடனே பதினாறு வயது பிள்ளையாய் வளர்வதன் மூலம் நாட்டின் செலவினங்களைச் சேமிக்கலாம் என்கிற அரசின் நோக்கத்துக்கு, பெற்றவர்கள் தர வேண்டிய விலையை அதிர்ச்சி தரும் கற்பனையில் காட்டுகிறது.

திரு.துக்காராம் கோபால்ராவின் 'ஒரு சொட்டு இரும்பு', 'மரபணு', 'மூன்றாவது
தோல்வி' என்னும் மூன்று கதைகளும்கூட சிந்தனையைத் தூண்டும் புதிய கற்பனைகள்தாம். 'இயந்திரங்கள் மனித உணர்வுபெறும் அளவிற்குத் தொழில் நுட்பம் ஏற்பட்டுவிட்டால்
எதிர்கொள்ள நேரும் பிரச்சினையைக் கோடி காட்டுகிறது 'ஒரு சொட்டு இரும்பு'. இதுவரை அறிவியல் தொடக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்த மரபணுத்துறையில் இன்று அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் திணிக்க முயலும் அறிவியலாளர்களையும், அரசியல்வாதிகளையும் எதிர்க்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது 'மரபணு' என்கிற கதை. 'உலகங்களுக்கிடையேயான போர்' கதையைப் போல விண்வெளி யுத்தம் ஒன்றை,
கணினி விளையாட்டாய்க் காட்டி, மூளைச்சலவைக்குள்ளான முகமறியாப் போர் வீரர்கள் முகமறியா எதிரிகளுடன் போரிடத் தூண்டக்கூடிய அபாயகரமான தளத்தைக் காட்டுகிறது 'மூன்றாவது தோல்வி'.

திரு.நாகரத்தினம் கிருஷ்ணா இரண்டு கதைகள் எழுதி இருக்கிறார். 'ஆபரேஷன்
மஹாசங்காரம்' என்கிற கதை, கணினியில் 'மென்பொருள் செயலி' எழுதுவர்களின்
வக்கிரமான சிந்தனைகள் பற்றியது. உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதான 'மகா சங்கார'த்தில் இவர்கள் திட்டமிட்டிருப்பது - சீனாவில் சார்ஸ் நோயினைப் பரவச் செய்வது, ஈராக் மீது பிரிட்டிஷ் அமேரிக்கத் தாக்குதல், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பு போன்ற உலகை உலுக்கிய அழிவுகள். 'அமலா..விமலா..கமலா' என்கிற கதை குளோனிங்கின் எதிர்காலம் பற்றிய ரசமான கற்பனை. விறுவிறுப்பான கதை ஒட்டம்,
நறுக்குத் தெறித்த மாதிரியான சொல்பிரயோகங்கள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.

திரு.சன்னாசி எழுதியுள்ள 'பிறழ்ந்த குறிப்புகள்' வயது பின்னோக்கி வளர்வதன்
பிரச்சினையக் கற்பனை செய்கிறது. 'ஒருத்தி பிறக்கும்போது வயது 60. அதற்குப் பின் அவளது வயது இன்னும் குறையத் தொடங்கியபோதுதான் அந்தக் கேள்வி எழுந்தது.
கிழவியாக இருந்து வயது குறைந்து இளம் பெண்ணாக மாறிப் பின்னும் வயது குறைந்து
சிறுமியாகிப் பின்னும் வயது குறைந்து குழந்தையாகிப் பின்னும் வயது குறைந்து....?' - என்று
எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள் என்று புருவம் உயருகிறது.

திரு.மண்ணாந்தை என்பவரின் 'பழைய ஆல - விதைக்கதை' தாயுமானவர் சொல்லும் அட்டமா சித்திகளில் ஒன்றான 'ககனத்தில் உலாவலாம்' போல அண்டங்களில் எல்லாம் உலாவுகிற கற்பனை. விண்வெளியில் மற்ற கிரகங்களில் கிடைக்கும் உலோகங்களை அறிந்து அங்கு நம் குடியேற்ற சாத்தியம் பற்றியெல்லாம் பேசுகிறது.

'மூளை மாற்று ஆராய்ச்சி' என்கிற கதையில் திரு.நா.சுவாமிநாதன் மூளைமாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலம் பற்றிக் கற்பனை செய்கிறார். மனிதக்குரங்குகளுக்கு
மனிதமூளையைப் பொருத்தி ஆபத்தான காரியங்களுக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளைப் பற்றிய விபரீதக் கற்பனை.

திடுமென ஒரு திருப்பத்தைத் தரும் 'பால்பேதம்' என்கிற கதையில் திரு.மீனாக்ஸ்
அதிர்ச்சியோடு மென்னகை பூக்கவும் வைக்கிறார். பயணத்தின்போது எதிரே பேசிக்
கொண்டிருக்கிற இ¨ளைஞன் 'செக்ஸ்சேஞ்ச்' ஆபரேஷனுக்குக்குப் பின் ஆணாக
மாறியுள்ள தன் மகள்தான் என்று கதைசொல்லி அறிகிறபோது நமக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இத்தொகுப்பின் நீண்ட கதையான 'பகல் நிலம்' இன்னொரு வகையான பயத்தைத் தோற்றுவிக்கிறது. 'புவியீர்ப்பு மையவிலக்குவிசை' இல்லாமல் போய் புவியீர்ப்பு கொஞ்சம் அதிகமாகி விட்டால்......' என்று கற்பனை செய்திருக்கிறார் திரு.சீராளன். புவியின் ஒரு பக்கம் மட்டுமே சூரியனைப் பார்த்து சுற்றி வருவதும் அதனால் ஒர் பக்கம் முழுதும்
நிரந்தரப் பகலாகவும், மறுபாகம் முழுதும் நிரந்தர இரவாகவும் மாறிவிட்டதால் நாட்கள் என்பதே இல்லாமல் போய்விடுவதும், இருண்ட பகுதியில் ஆச்சரியமான, அபாயகரமான பூச்சிகள் பெருகி பகல்பகுதிக்கும் நகர்ந்து மக்கள் வாழமுடியாத நிலை எழுவதுமான பயங்கரம் எலும்புக் குருத்தையும் அதிர வைக்கிறது. இது தொடர்ந்தால் இன்னும் என்னென்ன சிரமங்கள் ஏற்படும் என்பதை எல்லாம் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்
போடு சொல்கிற கதை, முடிவில் நின்றுபோன பூமி கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் மீண்டும் பழையநிலைக்குத் திரும்புவதைச் சொல்லி வாசிப்பவரை ஆசுவாசப் படுத்துகிறது.

காலையில் கண்விழித்ததும் ஒருவனுக்கு, கனவோ என்று மருளும்படி உலகில் அவனைத் தவிர யாரும் இல்லாமல் போவதும் அது ஏன் எப்படி என்று குழம்புவதுமாய் கதையைச் சொல்லி முடிவையும் குழப்பத்தில் விடுகிறது திரு.இரா.மகேசனின் '14-10-2010' என்கிற கதை.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தவல்களைச் சேகரித்து, அதில் இருந்து புதிய - இதுவரை கண்டுபிடிக்காத, மனிதகுலத்துக்கு பயனுள்ள உண்மைகளைக் கண்டறிய முயலும் 'ஐ.டி.சி இன்டர்நேஷனல் டேட்டா கன்சார்ட்டியம்' செய்யும் ஆய்வையும் அதன் முடிவையும் பற்றிச் சொல்கிறது திரு.நந்தன் எழுதியுள்ள 'சம்பவாமி யுகே யுகே' கதை.

தொகுப்பின் கடைசிக் கதையான 'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' வின் ஆசிரியர்
திரு.நடராஜன் ஸ்ரீனிவாசனின் கற்பனை இன்னொரு புதிய புதிரைச் சொல்லி விடுவிக்கிறது.
கனவில் மஞ்சள் நிறத்தில் நிழல் வருவதான கற்பனை. அது சாத்தியமா, உண்மை என்ன என்று ஆய்வதாகக் கதை.

படித்து முடித்ததும் ஒரு புதிய, புதிரான உலகில் உலவித் திரும்பிய அனுபவம்
ஏற்படுகிறது. தொகுப்பாசிரியர் திரு.ராஜாராம் பதிப்புரையில் ஆசைப்படுகிற மாதிரி
'எனி இந்தியன் பதிப்பகத்'தின் இந்த நூல் வெளியீடு - அறிவியல் மீதும் அறிவியல் புனைகதைகள் மீதும் தமிழ் வாசகர்களுக்கு ஈடுபாடு கொள்ளச் செய்யும் என்று நிச்சயமாய்
நம்பலாம். 0

நூல்: எதிர்காலம் என்ற ஒன்று.(அறிவியல் புனைகதைத் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்: கோ.ராஜாராம்.
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.80.

Sunday, January 18, 2009

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 - கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)

1. ஒரு கதையின் வெற்றிக்கு முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முக்கியமான பாத்திரத்தின் மீதும், ஏதேனும் ஒரு கட்டத்திலாவது, கதை கேட்போருக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்பது நல்ல கதையின் கட்டுக்கோப்பின் முக்கிய அம்சம்.

2. உனக்கென - உன்னுடையது எனத்தக்க ஒரு தனித்தன்மை இருக்குமானால் அதை எழுது. அப்படி ஒன்றும் இல்லையானால் அதை நீ பெற்றாக வேண்டும். திறமை என்பது மிகுந்த பொறுமையின் விளைவு. நீ எழுத மேற்கொண்ட பொருளைப்பற்றி ஆழ்ந்து அதிக நேரம் எண்ணிப்பார். அதன் பின்பு வேறெவரும் கண்டுணராததை - வெளியிலே சொல்லாததைப் பற்றி எழுது. எதிலுமே ஆய்ந்து பாராத - அகழ்ந்து காணாத பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. காரணம், யாராவது கண்டு எண்ணியதை நம் நினைவிலே கொண்டுதான் எதையுமே பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். மிகமிக அற்பமான பொருள் எனப்படுவதில்கூட நமக்குத் தெரியாதது ஒன்று இருக்கத்தான் செய்யும். நாம் அதனைக் கண்டு பிடிக்கவேண்டும். எரியும் தீப்பிழம்பையோ, எதிரே
நிற்கும் பசுமரத்தையோ வருணிக்க முற்படும்போது அந்தப் பிழம்பும் மரமும் எவருக்குமே சொல்லாத புதுக்கருத்தை - விளக்கத்தை நமக்குத் தரும் வரை அவற்றின் முன்பு நாம் நிற்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் நாம் 'நம்முடையது' என்று ஒன்றைத் தரும் நிலைமையை அடைய முடியும்.

3. கடையொன்றின் முன்புறத்திலே உட்கார்ந்திருக்கும் ஒரு வணிகனையும், புகைபிடித்த படி நிற்கும் வாயில் காவலன் ஒருவனையும், ஒரு குதிரை லாயத்தையும் பார்ப்பதாக
நினைத்துக் கொள். ஒரு திறமை மிக்க ஓவியன் வணிகனையும், வாயிற்காப்போனையும் நம் கண்முன் காட்டுவது போல் வருணிக்க வேண்டும். அவர்களது உள்ளப் போக்குகளை யும் எழுத்திலே வடிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவ்விருவரையும் வேறு பல வணிகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இடையில் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு உன்னுடைய படைப்பு இருக்க வேண்டும்; அதைப் போல வண்டியிழுக்கும் அந்த ஒரு குதிரையை முன்னும் பின்னும் ஐம்பது குதிரைகள் நிற்கும்போது கூட பிரித்துணரக்கூடிய வகையில் ஒரு வார்த்தையாலே இலக்கணம் வகுத்து எழுது.

4. ஒரு நாவலுக்கு உரிய ஒரு நல்ல விஷயம் எடுத்த எடுப்பிலேயே மொத்தமாகவும், ஒரே உந்தலிலும் வருகிறதோ அதுதான் தாய்க்கருத்து. அதிலிருந்துதான் மற்ற எல்லாம் பெருக்கெடுத்து வழிகின்றன. இதையோ அதையோ ஏதாவது எழுதிவிட அவ்வளவு சுதந்திரம் யாருக்கும் கிடையாது. ஒருவன் தன் விஷயத்தை தானே தேர்ந்தெடுத்துக்
கொள்கிறான் என்பதல்ல. இதைத்தான் பொதுமக்களும் விமர்சகர்களும் அறிந்து கொள்வதில்லை. விஷயத்துக்கும் ஆசிரியரது சுபாவத்துக்கும் இடையே ஏற்படுகிற ஒருமைப்பாட்டைப் பொறுத்துத்தான் இருக்கிறது பெரும் படைப்புகளின் வெற்றிரகசியம்.

Sunday, January 04, 2009

அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்.....

பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் - வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக் காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் - 'மார்த்தாஹரி' அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.

கதையின் மையம் - பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் - எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் - மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன
மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படு
கிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது
ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி,
அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் 'மார்த்தஹரி சமயக்குழு' அவளை
மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின்
கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக்
காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.

பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை - பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம்
வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

- இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் 'அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக' அமைந்திருக்கிறது எனலாம்.

நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் - ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும்
தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே - அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ
ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.

பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் 'கல்கி'
யின் 'சோலைமலை இளவரசி' நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.

நடையில் 'சுஜதா'வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன்
ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் - இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக்
கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் - மழை பற்றிய வருணனையில் - எழுதப்பட்டிருக்கும்
வரிகளும், 'உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்" என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த
நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

--- 0 ---

'வாசந்தி கட்டுரைகள்' தரும் புதிய தரிசனங்கள்

பெண் படைப்பாளிகள் என்றில்லாமல் இருபாலர்க்கும் பொதுவாக, இன்று
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளர்களில் திருமதி.வாசந்தி முக்கியமானவர்.
பெண் படைப்பாளிகள் என்றாலே இளக்காரமாய் நினைத்த முன் தலைமுறையினரால்
கூட மிகச் சிறந்த படைப்பாளியாக ஏற்று மதிக்கப்பட்டவர். தான் பெண் என்பதால் பெண்ணியவாதியாகக் கருதப்படுவது தவிர்க்கப்பட முடியாதது என்று அவரே சொன்னாலும், அதையும் தாண்டி அவர் மிகச்சிறந்த மனிதாபிமானி, பொறுப்புணர்ந்த சமூகச்சிந்தனையாளர், உண்மையைக் கண்டடைவதிலும் அதை நேர்மையுடன் பதிவு செய்வதிலும் மனசாட்சிக்குத் துரோகம் செய்யாத பத்திரிகையாளர் என்பதை 'எனிஇந்தியன் பதிப்பக' வெளியீடான
'வாசந்தி கட்டுரைகள்' என்கிற நூல் காட்டுகிறது. அது காட்டும் 'புதிய தரிசனங்கள்'
சிலிர்ப்பானவை.

ஆரம்பத்தில் அவர் ஒரு சிறந்த சிறுகதை மற்றும் நாவலாசியராகவே அறியப்பட்டவர்.
திருமணத்திற்குப் பின் கணவரின் பணி நிமித்தமாய் நேபாளத்தில் நான்கு ஆண்டுகள் வாழ நேர்ந்தபோது வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட அப்பிரதேச மக்களின் வாழ்வு மற்றும்
அரசியல் நெருக்கடிகள் போன்றவை, அவருள் கல்லூரிநாள் முதலே கருக்கொண்டிருந்த அரசியல் மற்றும் சமூகவியல் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவரை ஓர் அரசியல்
விமர்சகராகவும் பத்திரிகையாளராகவும் மாற்றின. தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அவர்
'இந்தியா டுடே' வார இதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றிய பத்தாண்டுகளில் எழுதிய தலையங்கங்களும், மற்ற பத்திரிகைகளில் எழுதிய அரசியல் விமர்சனங்களும், இலக்கியக் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் 'வாசந்தி கட்டுரைகள்' என்ற நூலாக இப்போது வந்துள்ளது.

அவரது கதைகளிலும் நாவல்களிலும் புதுமைக் கண்ணோட்டமும், ரசமான உரையாடல்
களும், அறிவார்ந்த சிந்தனையோட்டமும், பாவனையற்ற சரளமும், அலுப்புத்தட்டாத வாசிப்பு சுகமும் தென்படுவது போலவே அவரது கட்டுரைகளும் அமைந்துள்ளன. மேல்நாட்டுக் கட்டுரையாªர்களுக்குச் சமமாகத் திகழ்ந்த முன் தலைமுறை எழுத்தாளர் 'தி.ஜ.ர'வின்
வாரிசாய், கட்டுரை இலக்கியத்தில் இன்று அவர் திகழ்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சமகாலப் பிரச்சினைகளை, நிகழ்வுகளை உடனுக்குடன் சூடு ஆறாமல் தெளிவான குழப்பமற்ற மொழியில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டவை. பதிப்புரையில் திரு.ராஜாராம் குறிப்பிட்டிருப்பதுபோல 'தன்னைச் சுற்றி
நிகழும் அவலங்களைப் பார்வையிடும் சாதாரண மனிதனின் அச்சத்தையும் அவநம்பிக்கையை யும் அவை எதிரொலிக்கின்றன'.

மே '96 முதல் ஜனவரி '2006 வரை 'இந்தியா டுடே'யில்' 'சிந்திக்க ஒரு நொடி' என்ற தலைப்பில் வெளியான 40க்கும் மேலான சின்னச் சின்னக் கட்டுரைகள் பல்வேறு பிரச்சினை களையும் அவற்றின் தாக்கங்களையும் அலசுகின்றன. கறாரான, தாட்சண்யமற்ற விமர்சனங் கள் சாட்டையடியாய் அரசியல்வாதிகளின் சிறுமைகளின்மீதும், மதவாதிகளின் மக்கள்
விரோதப் போக்குகள்மீதும், விற்பனையையே குறிக்கோளய்க் கொண்ட பாரபட்சமான
பத்திரிகையாளர் மீதும் விழுகின்றன. அன்றாடச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளாய் - ஜனநாயகத் தன்மை இல்லாத ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு அவரே காரணமாய் இருப்பதுபற்றியும், 'ஆரியமாயை' பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கிற கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் தமிழீழப் பிரச்சியினையில் அவர் அடிக்கும் பல்டிகள்பற்றியும், அன்னை தெரசாவிற்கு 'புனிதர்' பட்டம் வழங்கிய வாட்டிகன் திருச்சபை, போப் சொல்படி
நடக்கும் கத்தோ¡லிக்கர்கள் ஆணுறை உபயோகிக்கத் தடை விதித்ததால் எழும் எயிட்ஸ் பரவும் அபாயம் பற்றியும், ஜனநாயத்தின்மீது விழுந்த சம்மட்டியாய் 'இந்து', 'முரசொலி'
பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைபற்றியும், ஓரினத்
திருமணம் பற்றிய சர்ச்சைகள் பற்றியும், நதி நீர்ப் பங்கீட்டில் மக்கள் நலனைவிட அரசியல் ஆதாயமே குறியாய் உள்ள அரசுகளின் 'காவிரி நாடகம்' பற்றியும், தலைவர்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் தமிழ்நாட்டுத் தொண்டர்களின் வித்தியாசமான உளவியல் பற்றியும், போலிசாரையும் நீதிமன்றங்களையும் தன் விளையாட்டுப் பொருட்களாக்கிய ஜெயலட்சுமி தரும் பாடம் பற்றியும், காஞ்சிமடாதியின் கைது பற்றியும், வீரப்பனைக்
கதாநாயகனாக்கி தமக்குச் சமாதி கட்டிக் கொண்ட பத்திரிகைகள் மற்றும் அரசுகளின்
நச்சு அரசியல் பற்றியும், சுனாமி சோகத்தையும் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்திக்
கொண்ட அற்பர்கள் பற்றியும், கற்பு பற்றிய குஷ்புவின் கருத்துக்குச் சாமியாடிய -
தமிழ்தேசீயம் பேசுபவர்களின் சகிப்பற்ற போக்கு பற்றியும், பாரதத்தின் புதிய பாஞ்சாலியாய் அபத்தமாகச் சபதமிட்ட சுஷ்மா ஸ்வராஜின் ஆங்காரம் பற்றியும் இன்னும் பல கவலை
யளிக்கும் வெளிப்பாடுகள் பற்றியுமான - சுதந்திரச் சிந்தனையாளரின் உரத்தசிந்தனைகளாய் இவை அமைந்துள்ளன.

அடுத்து வரும் 'பெண்ணியச் சிந்தனைகள்' கட்டுரைகள் அவரது ஆரோக்கியமான,
நியாயமான பெண்ணிய வாதங்களைக் காட்டுபவை. இன்றைய கலகக்கார இளம் பெண் கவிஞர்கள் போல் பெண்களது உடல் அரசியலைப் பேசுவதுதான் பெண்ணியம் என்று
முரட்டடி வாதம் பேசவில்லை. பெண்ணியவாதிகளுக்கு அவர் சொல்வதெல்லாம்
'முதலாவதாக பெண்ணைப் பற்றிய மரபுச் சிந்தனையை நாம் உடைக்க வேண்டும். அதற்கு மேல் ஆணுக்கு மேலாகத் தகுதி பெற்றவர்கள் நாம் என்று நிரூபிக்க வேண்டும்- வெற்றிக்குக் குறுக்கு வழி எனக்குத்தெரிந்து வேறு இல்லை' என்பதுதான்.

'சீனா எனும் சிகரம்' என்கிற அவரது பயணக் கட்டுரை ஒரு முன் மாதிரியானது. கடந்த காலங்களில் 'ஆனந்தவிகடன் மணியன்' போன்றவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வந்து, 'எங்கு யார் வீட்டில், நாக்கு செத்துப் போன தங்களுக்கு உணக்கையாய் தமிழ் நாட்டு சாப்பாடு போட்டார்கள், என்னென்ன கிளுகிளுக்கும் கேளிக்கைகள் எங்கெங்கு இருக்கிந்றன' என்று எழுதியதுபோல் அல்லாமல் வாசிப்பவர் கண்ணகல, புருவம் உயர்த்தும் படியான - தான் சீனாவில் கண்ட புதுமைகளை, மாவோ காலத்துக்குப் பின் மக்களிடையே
ஏற்பட்டிருக்கிற சிந்தனை மாற்றம், நடைமுறை வாழ்வில் புதிய கண்ணோட்டம், அபார
பொருளாதார வளர்ச்சி, தீவிரமான மேற்கு நாகரீக ஈர்ப்பு, 'வெளியுலகத் தொடர்புக்கும்
வேலைவாய்ப்புக்கும் ஆங்கிலம் அவசியம்' என்கிற புரிதல் பற்றியெல்லாம் பதிவு செய்திருக்
கிறார். 'இன்னும் நூறாண்டு ஆனாலும்கூட நம்மால் சீனாவின் தரத்தை எட்ட முடியாது' என்கிற ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். அவர் பயணம் போகும் இடங்களுக்கு நாமும் உடன் செல்வது போலவும் அவர் காண்பவற்றை நாமும் காண்பது போலவும் பிரமையை ஏற்படுத்துகிறது கட்டுரை.

'எது பத்திரிகை தர்மம்?' என்கிற கட்டுரை அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர் களுக்கும் பதில் சொல்வதாக அமைந்துள்ளது.

பெண்களுக்கு அரசியல் தெரியாது என்கிற ஆண்களின் கருத்துக்குச் சவால் விடுபவை அவரது அரசியல் கட்டுரைகள். 'இன்றைய எல்லா கேட்டிற்கும் அரசியல்வாதிகளே
காரணம்' என்கிற அவரது தீர்மானமான குற்றச்சாட்டு அவருக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாத
சத்தியத்தைத் தேடும் பயணம் அவருடையது.

பின் பகுதியில் உள்ள அவரது இலக்கியக் கட்டுரைகளும் ரசமானவை. 'நானும் என் எழுத்தும்' என்கிற கட்டுரை துவக்க எழுத்தாளர்க்கு மட்டுமின்றி, மூத்த எழுத்தாளர்களுக்கும்
பல சுவையான தவல்களைச் சொல்வது. இசையரசி எம்.எஸ் பற்றிய 'உன்னதத்தின் உறைவிடம்' என்கிற கட்டுரை ஒரு அரிய சித்திரப் பிரதிமை. படிக்கத் திகட்டாத உள்ளத்தை உருக்கும் ஓவியம்.

ஹங்கேரிய எழுத்தாளர் 'ஸாண்டர் மராயி'ன் அற்புதப் படைப்பான 'கனல்' என்கிற நாவல் பற்றிய அவரது நூல்விமர்சனம் அவரது இன்னொரு இலக்கிய முகத்தைக் காட்டுவது. ஒரு
நல்ல படைப்பாளி செய்யும் விமர்சனமும் ஒரு அற்புத இலக்கியமாகிவிடமுடியும் என்பதற்கு இந்த விமர்சனம் நல்ல எடுத்துக்காட்டு.

நூல் முழுவதுமான இவரது எழுத்தில் - அது இலக்கியக் கட்டுரையாகட்டும் அல்லது அரசியல் விமர்சனமாகட்டும் - தென்படும் சுகமான நடையோட்டம், கலைத்திறம்,
சொல்லாட்சி, உவமை நயம், மிகைப் படுத்தாத வருணைகள். 'சகதர்மிகள்' போன்ற
சொல்லாக்கங்கள், இலக்கியங்களிலிருந்து பொருத்தமாய் எடுத்தாளும் நளினம், ராஜம்
கிருஷ்ணனைப் போல் ஆதாரபூர்வமான களப்பணியின் பதிவு, சிறுமைகண்டு சீறும்
அறச்சீற்றம், அரசியல் அங்கதம் ஆகியவை மீண்டும் மீண்டும் படித்து ரசிக்க வைப்பவை.

அவரது இலக்கிய நயமிக்க எழுத்தாளுமைக்கு ஒன்றிரண்டு உதாரணங்களை சுட்டிக் காட்டமல் இவ்விமர்சனத்தை முடிக்க எனக்கு மனமில்லை.

திருமதி.எம்.எஸ் பற்றிய கட்டுரையில் ஒருஇடம்: 'நீ அர்த்தம் உணர்ந்து பாடினா
ஜனங்க உன் பக்கம் வருவா' என்றார் சதாசிவம். வந்தார்கள். திரள் திரளாக கன்னியாக்
குமரியிலிருந்து தில்லிவரை. கல்கத்தாவிலிருந்து மும்பைவரை. அவர் 'சம்போ மஹாதேவா' என்று பாடியபோது நாஸ்திகர்களும் நெகிழ்ந்தார்கள். 'செந்தமிழ்நாடெனும் போதினிலே'
என்று ஆரம்பித்ததுமே பாமரர்கள் சிலிர்த்தார்கள். 'குறையொன்றுமில்லை' என்று உருகி உருகிப் பாடுகையில் சாமான்யர்களும் கரைந்தார்கள்.'

'கனல்' நாவல் பற்றிய விமர்சனத்தில்: 'மராயின் கதைக்களம் மத்திய ஐரோப்பா.
கதையின் காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இருந்தும் கதை மாந்தருடன்
என்னால் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிந்தது. பல சமயங்களில் வினோதமாக உபநிஷத்
காலத்துக்குச் சென்றாற்போல, நசிகேதனின் நிலையில் அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. வாழ்வியலைப்பற்றி, தர்மத்தைப்பற்றி, பொய்மையைப்பற்றி, மனித உறவுகள்
அவை கொடுப்பதாக நாம் நினைக்கும் உரிமைகள்பற்றி கேள்விகள் துளைத்தன'. இதை
வாசிக்கும்போது எனக்கு புதுமைப்பித்தன் 'அன்று இரவு' கதையில், அரிமர்த்தன பாண்டியன் பொற்பிரம்பால் ஈசனை அடித்தபோது அந்த அடி எவற்றின்மீதெல்லாம் விழுந்தது என்று அடுக்கிக் கொண்டே போகும் அழகு நினவுக்கு வருகிறது.

வாசந்தியின் இக்கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் புதியவாசகர்களுக்கு எழுத்துக்கலை பற்றி புதியதரிசனங்கள் கிட்டும் என்று திடமாக நம்புகிறேன்.


------ 0 ------

Saturday, December 20, 2008

'வண்ணநிலவனி'ன் கடல்புரத்தில் - ஒரு பார்வை

கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த 'தகழி'யின் 'செம்மீன்' நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் 'வண்ணநிலவனி'ன் 'கடல்புரத்தில்' நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். 'செம்மீனை'ப் போலவே- ஒரு அழகான காதல், சோகத்துடன் முடிவதுடன்
ஆசாபாசங்களும், நம்பிக்கைகளும், துரோகங்களும், போராட்டங்களும் நிறைந்த அவர்களது வாழ்வின் யதார்த்தமான, மிகைப்படுத்தாத சித்தரிப்புகள் நெஞ்சை உருக்குவதாகவும், நீண்ட நாட்கள் நெஞ்சில் அகலாமல் நிலைபெற்று நிற்பதாவும் உள்ளது.

'தலித்தியம்', 'பெண்ணியம்' ஆகியவற்றை அவர்கள்தான் அசலாக எழுத
முடியும் என்பதற்குச் சவாலாக, வண்ணநிலவன் இந்த நாவலில் பரதவர் வாழ்க்கையை அவரே அனுபவித்தது போல, கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர் போல அவரே மானசீகமாய் பரதவராக வாழ்ந்து வாசகர்க்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

நாவலின் அடிநாதம் அன்புதான். 'மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குவதற்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான்
இருக்கிறது' என்பதுதான் இந்த நாவலின் மூலம் அவர் சொல்லும் செய்தி எனலாம்.

கதை மெதுவாக, அவரைப் போலவே ஆரவாரமின்றி - ஆரம்பிக்கிறது. எல்லா இடங்களிலும் காலம் காலமாய் பூர்வீக சொத்தை விற்பதில் அப்பாவுக்கும் மகனுக்கும் ஏற்படுகிற உரசலோடு கதை தொடங்குகிறது. அப்பா குரூஸ் தன் பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, நகரத்தில் ஆசிரியராக வேலை செய்யும் மகன் செபஸ்தியுடன் செல்ல விரும்பவில்லை. அவன் சொல்கிறபடி பரம்பரைச் சொத்தான வள்ளத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு நகரத்தில் கடை வைத்துப் பிழைக்க மறுக்கிறான். அம்மா மரியம்மைக்கும் அவளது சினேகிதனான
வாத்தியைவிட்டு இடம் பெயர விரும்பவில்லை. தங்கை பிலோமிக்குட்டிக்கு அவளது
காதலன் சாமிதாஸோடு அங்கேயே தங்குவதற்குத்தான் விருப்பம். இதில் கசப்பும் மறுப்பும் அதிகமிருப்பினும் அவர்களுக்குள்ளான உறவு கசந்து விடுவதில்லை. நிறைய ஏமாற்றங்களும் இழப்புகளும் ஏற்படுகின்றன. சாமிதாஸிடம் தன்னை இழந்த பிலோமி அவன் வேறு திருமணம் செய்ததும் ஏமாற்றத்துக்குள்ளாகிறாள். அவளது அம்மா
மரியம்மை அதிகம் குடித்துவிட்டு இடறி விழுந்து இறக்கிறாள். மனைவியின் இழப்போடு, படகுக்காரர்களுக்கும் லாஞ்சுக்காரர்களுக்கும் எழும் பிரச்சினையால் மேலும் அங்கே தங்கி தொழிலை நடத்த முடியாத நிலையைப் புரிந்து கொண்ட குரூஸ், வீட்டையும் வள்ளத்தையும் விற்றுவிட்டு மகனுடன் செல்ல முடிவு செய்கிறான். ஆனால் வீட்டையும் வள்ளத்தையும் விற்றதிலும் ஏமாற்றம் ஏற்படுகிறது. புத்தி பிறழ்ந்தவனாய் குடித்துவிட்டுத் திண்ணையில் எப்போதும் விழுந்து கிடக்கிறான். பிலோமி சாமிதாஸின் துரோகத்தை
நினைத்து மறுகாமல், ஆதரவு காட்டிய அம்மாவின் சினேகிதன் வாத்தியின் வீட்டிலேயே தன் நினைவுகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள் என்பதாகக் கதை முடிகிறது.

வண்ணநிலவனின் கதைகளிலும் நாவல்களிலும் வரும் மாந்தர்கள் மறக்க முடியாதவர்கள். சா.கந்தசாமி குறிப்பிடுவதைப் போல் 'இயல்பாக வளர்ந்து, இயல்பாகப் பேசி, இயல்பாகவே நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்'. படித்த பின்னும்
நம் நெஞ்சைவிட்டு இறங்க மறுப்பவர்கள். அவரது பாத்திரப்படைப்பு அத்தகையது. இந்த நாவலிலும் அப்படி நம் நினைவில் நீங்கா இடம் பெறுபவர்கள் நாவலின் மையப்பாத்திரமான பிலோமிக்குட்டியும் அவளது அப்பா குரூஸ், அம்மா மரியம்மை, அவளது சினேகிதன் வாத்தி ஆகியோர்.

வண்ணநிலவன் படைக்கும் பெண்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களது ஏமாற்றங்கள் நம்மையும் வருத்துபவை. ஆனால் அவர்கள் அதை இயல்பாய் எடுத்துக் கொள்பவர்களாக, வாழ்க்கையின யதார்த்தத்தை அதிர்ச்சி இன்றி ஏற்றுக்
கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்நாவலில் வரும் பிலோமிக்குட்டி ஒரு அற்புதமான பாத்திரம். முதலில் அவளது மனித நேயத்தைக் குறிப்பிட வேண்டும். பரதவப் பெண்களின் பாவப்பட்ட
வாழ்க்கையை எண்ணி அவள் வருந்துகிறாள். பரிதாபத்துக்குரிய பெண் கேதரின் அவளது கணவனால் தினமும் அடித்துக் கொடுமைப் படுத்தப்படுவதை, அவளது பெண்மை அவமதிக்கப்படுவதை - காணும்போது, 'இது எவ்வளவு பெரிய கொடுமை. இதையெல்லாம் அழிக்க முடியாமல் கடலம்மை பார்த்துக் கொண்டு சும்மாதானே இருக்கிறாள்?' என்று மறுகுகிறாள். அடுத்து அனைவரிடமும் அவள் காட்டும் நேசம். குழந்தைகள் அவளிடம் ஒட்டிக் கொண்டு பிரிய மறுக்கின்றன. சிநேகிதிகளிடம் அவள் காட்டும் பிரியங்களும், அக்கறைகளும் பலனை எதிர்பாராதவை. அண்ணனால் வஞ்சிக் கப்பட்ட ரஞ்சியிடம் அவள் கொண்டுள்ள நட்பும், அவளது பிரசவத்துக்கு அருகிருந்து உதவுவதும் அவளது நேசத்துக்கு இன்னொரு சான்று. வாத்தியிடம் உறவு வைத்துக் கொண்டிருந்த அவளது அம்மாவையும் அவளால் நேசிக்க முடிகிறது. வாத்தியைப்
புரிந்து கொண்டு அவர் காட்டும் புதிரான அன்பை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
காதலன் சாமிதாஸைக் காண்பதே பெரிய இன்பமாகக் கருதும் அவள் அவனுடன் தனக்குத் திருமணம் நடக்காது என்று தெரிந்தவுடன் அதற்காக அதிர்ந்து போகாமல் அவனோடு உடலுறவு கொண்டதையே போதும் எனக் கொண்டு எல்லா இன்பங்களை யும் கண்டு தெளிந்தவளாகி விடுகிறாள். நிஜ வாழ்க்கையில் வெறும் உணர்ச்சிக்கு இடம் இல்லை என்பதை அவள் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாள். வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே உணர முடிந்தது அவளால். வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லாவிட்டாலும் அது சந்தோஷமானதுதான் என்று நம்புவதற்குத் தயாராகி விட்டாள். அதன் பிறகு அவளது உலகம் எல்லோரையும் நேசிக்கும் உலகமாகி விடுகிறது.

பிலோமிக்குட்டியின் அப்பா குரூஸ் மிக்கேலுக்கு கடல் அம்மையும் அதன் மச்சங்களும்தான் விசுவாசிகள். அவனது பிழைப்புக்கு உதவும் வள்ளம் அவன் அப்பன்
காலத்தது. அந்தமாதிரி ஜாதி மரமே கிடைக்காது என்பது அவனது தீர்மானமான எண்ணம். அந்த வள்ளம் தந்த மச்சங்களைக் கொண்டுதான் அவன் மகன் செபாஸ்தி
யான் படித்து வாத்தி வேலைக்குப் போனான். அந்த நன்றி விசுவாசமில்லாமல் அந்தப் பரம்பரைச் சொத்தை விற்கும்படி மகன் மல்லுக்கு நிற்பதை அவனால் சகித்துக்
கொள்ள முடியவில்லை. தான் பிறந்த மணப்பாடு வீட்டை விட்டுவிட்டு மகனுடன்
நகரத்துக்குப் போக அவனுக்க விருப்பமில்லை. மணப்பாட்டுக் கோயில் கல்லறைத்
தோட்டத்தில்தான் அவனது பிணத்தை அடக்கம் செய்யவேண்டும் என்பதில் அவன்
பிடிவாதமாக இருந்தான். பிறந்த மண்ணின்மீதான அவனது பாசம் அப்படி. மனைவி
மரியம்மையிடம் அளவுகடந்த ஆசை கொண்டிருந்தான். ஆனால், அவள் அவனுக்குத் துரோகம் செய்யாதுபோனாலும் வாத்தியோடு சினேகம் வைத்திருப்பதில் அவனுக்கு வெறுப்பு. சமயத் தில் அதற்காக அவளை அடித்து நொறுக்கி இருக்கிறான். ஆனாலும் அவளை ஒருநாளும் ஒதுக்க அவனால் முடியவில்லை. அவள் அதிகம் குடித்து விட்டு இடறி விழுந்து இறந்த போது அவனுக்குத் தாளவில்லை. அவன் அதிகமும் பாசம் வைத்திருந்த மகள் பிலோமியின் கல்யாணம் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் அதை அவன் நிறைவேற்று முன் லாஞ்சிக்காரர்களுக்கும் படகுக்காரர்களுக்கும் ஏற்பட்ட
மோதலில் உயிர்ப்பலி விழவும் அவனுக்கு இனி அங்கு வாழ்க்கை சாத்தியமில்லை என உணர்ந்து தான் பிரிய மறுத்த வீட்டையும் வள்ளத்தையும் விற்றுவிட்டு மகனுடன் போக முடிவு செய்தபோது, வாங்கியவர்கள் பணம் தராது ஏமாற்றிவிட மனம் பிறழ்ந்தவனாய் மகளுக்குப் பாரமாகிப் போகிறான்.

மரியம்மையும், நாவலில் கொஞ்சமே வந்தாலும் மறக்க முடியாதவள். அவள் கணவனுக்குத் துரோகம் செய்யவில்லை என்றாலும் அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காத வாத்தியுடனான உறவை அவள் சாகும்வரை விடவில்லை. 'அவளது ஆசைகள் என்ன
தான் என்று குரூஸ் அறியான். ஒருவேளை இதுபற்றி அவளுடைய வாத்திக்குத் தெரிந்திருக்கலாம்'. அவளுக்கு, நகரத்துப் பெண்கள் மாதிரி புதுப்புது உடைகள் உடுத்தி
சிங்காரித்துக் கொண்டு கோயிலுக்கும், கடைகண்ணிக்கும் சினிமாவுக்கும் போவதை
விட்டுவிட்டு நாத்தம் பிடித்த மீன்களைத் தொட்டுக்கொண்டிருப்பதா என்று ஆதங்கம். அதனால் மகனுடன் நகரத்துக்குச் செல்லவே விரும்புகிறாள். 'அவளது மரணம்தான் அவள் மீது மற்றவர்கள் கொண்டிருந்த பிரியத்தைக் காட்டிக் கொடுத்தது. அவள் இருந்தவரைக்கும், தன்னை யாருக்கும் பிடிக்காது வாத்தியைத் தவிர என்றுதான்
நினைத்திருந்தாள்'. குரூஸ் அவளது மரணத்தால் எவ்வளவு சோகமுற்றான் என்பது அவளுக்குத் தெரியாது. 'எனக்கு இந்த மண்ணுல இனிமே என்ன ஒறவு இருக்கு? அவளே போய்ட்டா...' என்று உண்ணாமல், கடலுக்குப் போகாமல் நிறையக் குடித்து
விட்டு துக்கத்தை மறக்க முயன்றான். 'அவளைக் கொடுமைக்காரி என்று அவன் ஒரு
நாளும் நினைத்தில்லை. அவளுக்கென்று ஒருஅழகு இருந்தது. அது அவளுடைய உடம்புதான். அவளுடைய மடியில் தலைசாய்த்துக் கிடந்தால் போதும், எந்த புருஷனுக்கும் மனசில் வீரமும் விவேகமும் விளையும். அவள் ஒரு அதிசயமான பறைச்சி' என்பதுதான் அவனது எண்ணம். பாவம் மரியம்மை! குரூஸ் அவள்மீது உள்ளுர அத்தனை பிரியமாய் இருந்ததை அறியாமலே போய்விட்டாள்.

முக்கிய பாத்திரந்தான் என்றில்லை - மரியம்மையின் சிநேகிதனான வாத்தி,
பிலோமியின் தோழி ரஞ்சி, கடற்கரையில் எது நடந்தாலும் சாட்சியாய் இருக்கிற தையல் வேலைக்காரி பெரிய மாமியா, எல்லோருக்கும் பிரியமான. மணப்பாட்டு
மக்களால் சேசுவுக்கு இணையாய் மதிக்கப்படுகிற கிராமத்தின் மூத்த ஜீவன் பவுலுப்
பாட்டா, கடன் கொடுத்து வாங்கினாலும் அனுசரணையுடன் பரதவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும் மீன் தரகர் - எல்லோருமே கொஞ்ச நேரமே கதையில் வந்து போனாலும் மறக்க முடியாதவர்கள். வண்ணநிலவனின் பாத்திரப் படைப்புத் திறன் அப்படி.

மனிதர்கள் மட்டுமல்ல - கடலும் அதில் மிதக்கும் வள்ளங்களும், அங்கு
நடக்கும் பண்டிகைகளும்கூட வண்ணநிலவனின் கைவண்ணத்தால் நம்மால் மறக்க முடியாத இடத்தைப் பிடித்து விடுகின்றன. 'வள்ளம் ஒரு ஜீவனுள்ள சாட்சி. அது
பேசாது. அது சொல்லுகிற கதைகளைக் கேட்டால் பறைக்குடியே தீப்பிடித்துவிடும். எல்லா வள்ளங்களுக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், தங்களுடைய எஜமான் களுடைய நன்மையைக் கருதி பேசாமலிருக்கின்றன' என்று ஏதோ உயிருள்ள ஜீவனைப் போல வள்ளங்களைக் காட்சிப் படுத்துகிறார்.

கடல் அவர்களுக்கு தாய். கடலன்னையை அவர்களுடைய சேசுவுக்கும்
மரியாளுக்கும் சமமாகச் சேவிக்கிறார்கள். பரதவக்குடி முழுதும் அவளது பிரியத்துக்
குரியவர்கள். 'அந்தக் கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், எவ்வளவு பெரிய
வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையைச் சப்புவது
கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்
தான் ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீரானது ஆண் பிள்ளையானால், அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும் போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு,
வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது. அவர்கள் ஒழுக்கங்கள் சீரானதில்லைதான். ஆனால் கடலம்மை அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறாள். ஏனென்றால் அவளுடைய பிள்ளைகளின் மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு'. கடல் பற்றிய இத்தகைய
சித்திரத்தினூடே பரதவர் வாழ்க்கைமுறைகளையும் நம்பிக்கைகளையும் நமக்குச்
சொல்லுகிறார்.

இன்னும் 'நீர்க்காக்கைகள் கூட்டமாய் வலமிருந்து இடமாகப் பறந்து
போனால் கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை, மணப்பாடுக் கிராமத்துக் கோயில் மணி யாராவது இறந்து போனால் அவரது வயதின் எண்ணிகைக்கேற்ப அத்தனை முறை
ஒலிப்பது போன்ற எத்தனையோ தகவல்கள்! எல்லாமும் நமக்கு அலுக்க வில்லை.

தல வருணனைகளும், இயற்கை வருணனைகளும் நெஞ்சுக்கு இதமாய்
வாசிக்கச் சுகமாய் உள்ளன. உதாரணத்துக்கு: 'கடலிலிருந்து கூட்டங்கூட்டமாக
மேகங்கள் மேற்கே சென்று கொண்டிருந்தன. யாரோ எய்த வர்ண அம்பைப் போல
வானவில் மேகங்களைக் கிழித்துப் புறப்பட்டிருந்தது'; 'இப்போது வெயிலைக் கண்டு மஞ்சு விலக ஆரம்பித்திருந்தது. குச்சியால் கலக்கி விட்டது போல, திட்டுத்திட்டாய்
கலங்கிப் போய்க் கொண்டிருந்தது மஞ்சு'; 'வானத்தைப் பார்த்தாள். நிலவுத் துண்டு
மேகங்களினூடே நடந்து கொண்டிருந்தது.'

வண்ணநிலவனின் வெற்றிக்கு அவரது லகுவான, சிக்கலில்லாத எழுத்து
நடையும் ஒரு காரணம். மென்மையும் குளுமையும் உயிர்த்துடிப்பும் கொண்டது அவரது மொழிநடை. கடல்புரத்து ரசமான வட்டார மொழியும் வெகு இயல்பாக, நமக்கு முன்பே பரிச்சயமானது போல அமைந்துள்ளது. 'குரலை உயர்த்தாமல் கதை சொல்லும் பாங்கும், துல்லியமான விவரணைகளும் கச்சிதமான கதை வடிவமும் அவருக்கென்றே அமைந்தவை. அவர் எழுதியது குறைவுதான். ஆனால் அவை காட்டும் உலகம் மிகப் பெரியதும் மாறுபட்ட மனவெழுச்சிகளும் நுட்பங்களும் கொண்டவை. தான் வாழும்
காலத்தின் கலாச்சார மாற்றங்களுக்கான எதிர்க் குரலைப் பதிவு செய்துள்ள பெருங்கலைஞன் அவர்' என்பார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இந்த நாவல் எழுதப்பட்டு பல ஆண்டுகள் ஆனபோதிலும், அவரது மற்ற படைப்புகளைப் போலவே இன்றைக்கும் வாசகர்களோடு அந்தரங்கமாய்ப் பேசிக்
கொண்டும் வாழ்வின் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டும் இருப்பதுதான் வண்ண
நிலவனின் சிறப்பு. இன்னும் பலகாலத்துக்கும் சிறந்த நாவலாகப் பேசப்படுவதாக
இது நிலைத்து நிற்கும்.

----- 0 ----

Wednesday, December 13, 2006

கவிதை அணியில் ஒரு புதிய 'அணி'

கவிதை அணியில் ஒரு புதிய 'அணி'

- வே.சபாநாயகம்

மும்பையிலிருந்து புதியமாதவிதான் இதுவரை தமிழரின் படைப்புத் திறனை வெளிப்படுத்திக்கொண்டிருநார். இப்போது அன்பாதவனும் அவரது நண்பர் மதியழகன் சுப்பையாவும் அணி சேர்ந்து 'அணி' என்றொரு இரு மாத கவிதை இதழைத் தொடங்கி மே '06 முதல் கொண்டு வந்திருக்கிறார்கள். மாறுபட்ட வடிவமைப்பில் - நீளவாட்டில் (A4 தாளை நெடுக்க வாட்டில் மடித்து) 32 பக்கங்களில் முழுதும் 'கவிதையும் கவிதை சார்ந்தும்' என்ற பிரகடனத்துடன் 'அணி' வந்திருக்கிறது. 3வது இதழ் இப்போது செப்டம்பர் - அக்டோபர் இதழாக மலர்ந்துள்ளது. இதழின் பெயரில் காணப்படும் logo எழுத்தும் புதுமையானது. முதல் எழுத்து இந்தியின் 'அ' வாகவும் அடுத்த எழுத்து 'ணி' தமிழ் எழுத்தாகவும் அமைந்துள்ளது. 'அணி என்பதை இந்தி எழுத்தின் அடிப்படையில் டிசைன் செய்திருப்பது புதுமையாக இருப்பினும் ஏற்பதற்கில்லை' என்ற விமர்சனத்துக்கு, 'ஹிந்தி பேச்சும் பகுதியிலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ் என்பதந் குறியீடு மற்றுமின்றி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற creative ஆவலும் காரணம்' என்று 2ஆம் இதழில் விளக்கம் தந்துள்ளார்கள்.


'அணி'யின் லட்சியமாக முதல் இதழில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்:

"தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும் முயற்சியில், மும்பையிலிருந்து தன் தமிழ்ப் பணியைத் தொடங்கும் 'அணி' தன்னையும் இணைத்துக் கொள்கிறது. கலை மக்களுக்காகவா அன்றி கலைக்காக மட்டுமேவா என்ற விவாதங்களைத் தாண்டி தமிழின் மரபையும், நவீன சிந்தனைப் போக்கையும் இணைக்கும் பாலமாக அணி செயல்பட விரும்புகிறது. 'அணி' அனைத்துப் படைப்பாளிகளுக்குமான சங்கப் பலகை. தமிழ் இலக்கியத்தில் எந்த அணியையும் சாராத, கவிதை வளர்ச்சி ஒன்றையே குற்¢க்கோளாய்க் கொண்டது நமது 'அணி' "

முதல் இதழில் 'அணி'க்கு இத்தனை பொருளா என்று புருவம் உயர்த்துமாறு 'அழகு, வரிசை, படை, வகுப்பு ஒப்பனை, அருகில், அலங்காரம், ஆபரணம், ஒழுங்கு, நன்மை, பெருமை, மாலை, எல்லை, கருவி, சம்பாரம், வேடம், கோலம், கூட்டம், நிரை, நுணா என்று ஒரு அகராதிப் பட்டிலையே தந்திருப்பதும் புதுமையாய் இருக்கிறது.

முழுதும் கவிதைக்கே என்றாலும் ஓரிரண்டு உரைநடைப் படைப்புகளும் இதழ்தோறும் சிறப்புச் சேர்க்கின்றன. அவற்றில் ஒன்று இணைய இதழ்களின் அறிமுகம்.

இதழ்தோறும் ஒரு இணைய இதழ் என்று இதுவரை 'அந்திமழை', 'கீற்று', 'பதிவுகள்' என்று அறிமுகம் செய்துள்ளார்கள். இது ஒரு நல்ல முயற்சி. 'உலகக் கவிஞர்கள் வரிசை' என்றொரு தலைப்பில் இதழ்தோறும் உலகக் கவைஞர்களை அறிமுகப் படுத்தும் முயற்சியில் 'மைக்கேல்கோப்', 'புகோவஸ்கி', 'ஜெரால்டு மான்லே ஹாப்கின்ஸ்' என்ற கவிஞர்கள் இதுவரை அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இரண்டாம் இதழிலிருந்து 'இந்தியக் கவிஞர்கள் வரிசை' என்ற அறிமுகத் தொடர் வருகிறது. உருதுக் கவிஞர் 'தரன்னம் ரியாஜ்', இந்திக் கவிஞர் 'குல்ஜார்' பற்றிய பதிவுகள் குறிப்பிடும்படி உள்ளன.

தமிழுக்குப் புதிய அறிமுகங்களான ஹைக்கூ, ஹைபுன், லிமரைக்கூ, சென்ரியூ, இயைபு நகைத் துளிப்பா எனும் லிமெரி சென்ரியூ (லிமரைக்கூ + சென்ரியூ = லிமரி சென்ரியூ விளக்கக் கட்டுரைகளும் அம்மரபிலான கவிதைகளும் இதழ்தோறும் இடம் பெற்றிருப்பது 'அணி' யின் சிறப்பாகும்.

முதல் இதழில் கறாரான விமர்சகன் நக்கீரன் பாணியில் 'கம்ப்யூடர் தராசும் சமகால ஹைக்கூவும்' என்ற தலைப்பில் வந்துள்ள ஒரு அரிய அலசல் கட்டுரை அவசியம் படிக்கத் தக்கது.

நிறைய நூல் விமர்சனங்களும் இதழ் தோறும் வெளியாகின்றன. தனது கூர்மையான விமர்சனங்களின் மூலம் 'அன்பாதவன்' தான் கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த விமர்சகர் என்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். கவிஞர்கள் தமிழன்பன், பழமலய் போன்ற கவிதையில் சாதனை படைத்த கவிஞர்களும் இதழ்தோறும் எழுதுகிறார்கள். இதழ் 3ல் கவிதையிலும் சாதனை காட்டிய

புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற 'தொழில்' கவிதையை 'புதையல்' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். நிறைய கவிதைகள், நிறைய கவிஞர்கள் என்று படித்து மாளவில்லை. கவிதைகளுக்கான சிறு ஓவியங்களும் கருத்தை ஈர்க்கின்றன.

'அணிச்சேர்க்கை' என்ற தலைப்பில் புதிய, பழைய சிற்றிதழ்களையும் பட்டியலிட்டு வருகிறார்கள்.

4வது இதழ் 'பெண் கவிஞர்களின் சிறப்பிதழா'க வர உள்ளது.

மொத்தத்தில் இதுவரை வந்துள்ள இதழ்களிலிருந்து 'அணி' வித்தியாசமான, புதிய சாதனைகளை நிகழ்த்தும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. 'அணி'க் குழுவினர்க்குப் பாராட்டுக்கள்!

'அணி' - இருமாத இதழ்,
ஆண்டு சந்தா ரூ.50/-
10/1 Trivedi & Desai Chawl,
D'Monte Lane, Orlem, Malad-West,
MUMBAI - 400 064.

Friday, November 03, 2006

தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்

இராமமூர்த்தியின் "தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்"

- வே.சபாநாயகம்


ஆற்றங்கரை நாகரீகம் எப்போதும் சிறப்பாகப் பேசப்படுவது. அது போலவே இப்போது ஆற்றங்கரைக் கதைகளும் பேசப்படுவனவாகிக் கொண்டிருக்கின்றன. மணிமுத்தாற்றங் கரையில் அந்தப் பிராந்திய வழக்குகளோடு கதைகள் அமைந்துள்ளது போல தென் பெண்ணையாற்றங்கரையிலும் வட தமிழ் மாவட்ட வட்டாரப் பின்னணியில் ரசமான சொல்லாட்சிகளுடன் கதைகள் - இராசேந்திரசோழனில் தொடங்கி இன்று இரா. இராமமூர்த்தியால் பெருமைப் படுத்தப் பட்டுள்ளதை அவரது முதல் கதைத் தொகுப்பான 'கனவு துளிர்த்த கதை' காட்டுகிறது.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே வாசகனுக்கு நெருக்கமாய், கதாபாத்திரங்கள் முன்பே பரிச்சயமானவர்களாக இருப்பதால் கதை லகுவாக தடையற்று அலுப்புத் தராமல் ஓடுகின்றன. ஆசிரியர் அடிப்படையில் கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசலான கிராமத்து நடைமுறை வாழ்க்கை, பேச்சு எல்லாவற்றையும் வெகு நுட்பமாக உள்வாங்கி, தேனீ- மலர்களில் சேகரித்ததை திடமான சுவைமிக்க தேனாக மாற்றித் தருவது போல- தன் அநாயசமான நடை ஓட்டத்தால் ரசமான கதைகளாக ஆக்கி அளித்திருக்கிறார். கதைகள் எல்லாமே மனித நேயத்தைப் பேசுபவை. அதோடு மனித மனத்தின் ஆசாபாசங்களையும், அற்பத்தனங்களையும், அற்புதத்தையும் படம் பிடித்துக் காட்டுபவை. நாம் தினமும் பார்க்கிற மனிதர்களின் குண வேறுபாடுகளை, விசித்திரங்களை - ஆமாம் நாம் சொல்லியிருக்கலாமே என்று நினைக்கும்படியான நிகழ்வுகளை - அதாவது நித்திய யதர்த்தங்களை ஆரவாரமில்லாமல் அலங்கார ஜோடனையின்றி நாமே நேரில் நின்று காண்பது போலப் படைத்தளிப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.

'வாத்து' கதையில் வாத்துமேய்க்கிற சிறுவன் அவைகளை வழி நடத்திச் செல்கிற உக்தியும் வாத்துக்களின் இயல்புகளும், வாத்துக்களுடன் நடந்து நடந்து அவனுக்கும் வாத்து நடை வந்துவிடுகிற யதார்த்தமும் - கதையோடு கதையாய் சொல்லப்படுவது கதாசிரியரின் கூர்ந்த நோக்குக்கும் நுட்பமான வெளிப்பாட்டுத் திறனுக்கும் உதாரணம்.

'திருப்பதி சட்டை' என்கிற கதை மேல்ஜாதியினரின் அற்பத்தனத்தில் பெண்களும் விதிவிலக்கல்ல என்பதைச் சொல்லுகிறது. வேலைக்காரியின் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதும், கொடுத்ததை விரும்பிச் சாப்பிடுவதும், சூட்டிகையாய்ப் பேசுவதும் - எல்லா வசதிகளும் கிடைத்தும் தன் பேரக் குழந்தை அப்படி இல்லாததை ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமை கொள்ளும் எஜமானியம்மாள், மருமகள் தன் குழந்தையின் பயன்படுத்தாத சட்டையை வேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்குத் தந்திருப்பதைப் பொறுக்க முடியாது கழற்றித் துவைத்துத் தரச் சொல்கிற அற்பத்தனம் - 'இப்படியுமா பெண்கள்?' என்று முகம் சுளிக்கச் செய்கிறது?

'நாற்றுகள்' கதை இன்னொரு விதமான - வசதி படைத்தோரின் வக்கிரத்தைச் சொல்கிற கதை. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அரசாங்கம் ஊக்குவிப்பதை மறுக்கும் விதமாக தன் மண்ணில் குடிசை போட்டிருக்கும் பணியாளின் மகன் நட்டு வத்திருக்கிற செடியைப் பிடுங்கி எறிந்து அதன் மூலம் அவன் தன் மண்ணில் சாந்தம் கொண்டாடு வதைத் தடுக்கிற நிலவுடைமை அதிகாரத்தின் சிறுமையை உளம் நெகிழ இக்கதை சொல்கிறது. 'அண்ணா'வின் 'செவ்வாழை'க் கதையின் சோகமும், பூர்ஷ¤வா அக்கிரமும் நினைவுக்கு வருகிறது.

தலைப்புக் கதையான 'கனவு துளிர்த்த கதை' அடிமட்ட மக்களின், எளிய கனவுகள் கூடப் பொய்த்துப் போவதும், பிறகு தன் வாரிசுக்கு அந்த வாய்ப்புக் கிட்டும் போது நிறை வேறாத தன்னுடைய கனவு மீண்டும் துளர்ப்பதில் பெருமிதம் கொள்வதுமான வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு சின்னப் பூசல் என்றதும் நேர்மையைப் புறக்கணித்து விட்டு சாதிப்பற்று வெறிநாய் போலப் புகுந்து பிடுங்குகிற இன்றைய சாதீய வெறியின் கேவலத்தைப் பதிவு செய்துள்ளது - 'ஒரு மனிதன் சோகப்படுகிறான்' என்கிறகதை.

காந்தியடிகள் போராடிய ஹரிஜன ஆலயப்பிரவேசத்தை இன்னும் மேல் வர்ணத்தார் மனதார ஏற்காத நிஜத்தை 'வர்ணம்' என்கிற கதை காட்டுகிறது.

ஒடுக்கப்படுகிறவர்களும் ஒரு நாள் விழித்துக் கொள்வார்கள், அப்போது பழிதீர்க்கும் அவர்களது செயல் எவ்வளவு குரூரமாக அவர்களை இயக்கும் என்பதை 'சேதி' என்கிற கதை எச்சரிக்கிறது.

'பஞ்சாயத்துக்காரன் அடியாளா மாறுனா நீதி செத்துப் போகும்' என்று நியாயம் பேசும் நியாயவான்கள் 'கட்டப் பஞ்சாயத்து' மலிந்திருப்பதாய் நாம் கருதும் கிராமங்களில் இன்னும் இருக்கவே செய்கிறார்கள் என்று காட்சிப்படுத்தும் கதையான 'நியாயம்' ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.

'கண்ணாலம்' கதை வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான ஒரு கிராமத்துப் பெண்ணின் ஆவேசமான குரலைப் பதிவு செய்துள்ளது.

காலந்தோறும் எல்லா ஊர்களிலும் 'சீசனு'க்குத் தக்கவாறு மக்கள் பிழைப்பை நாடி தூரப் பயணம் செய்வது இயல்பான காட்சிதான். ஆனால் தென்னார்க்காடு மக்களின் 'மல்லாட்டை'ப் பொறுக்கச் செல்பவர்களது கோராமையை அம்மாவட்டத்தின் வடபகுதியான திண்டிவனம் - விழுப்புரம் பகுதியின் ரசமான வட்டார மொழிநயத்துடன் சொல்வதில் 'கி.ரா' போலவே இராமமூர்த்தி வெற்றி பெறுகிறார் - 'மேற்கிலிருந்து ஒரு பயணம்' என்கிற கதையில்.

'வாய்ப் பேச்சு' ஒரு ரசமான நையாண்டி கதை. 'கூட்டத்தில் கூடி நின்று கூவ்¢ப் பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாத' வெட்டி மேடைப் பேச்சாளர்களைக் கேலி செய்கிறது கதை.

'வெற்றிகள்' இன்னொரு வித அரசியல் அங்கதக் கதை. அரசியல் கட்சிகளின் தலைவர்களது சுயநலமிக்க, காரியம் ஆனதும் கண்டு கொள்ளாத பாராமுகம் அவர்களைநம்பும் அப்பாவித் தொண்டர்க¨ளைச் சிறுமைப் படுத்துகிற அவலத்தை ஆதங்கத்தோடு சித்தரிக்கிறது இக்கதை.

கடைசிக் கதையான 'பலி' ஒரு நெடுங்கதை. பெண்ணையாற்றங்கரையில் மட்டுமே இன்னும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் தெருக்கூத்துக்கலை அதற்கு ஆதரவு காட்டுபவர்களாலேயே பலியாக்கப் படுகிற கொடுமையை உருக்கமாகக் சொல்லுகிறது. இளைத்தவர்களை இடைத் தரகர்கள் எப்படி ஆளாளுக்கு அடித்துப் பிடுங்குகிறார்கள் என்கிற சொல்லி அழ முடியாத சோகத்தைக் கதை காட்சிப் படுத்துகிறது.

எல்லாக் கதைளுக்குமே மனித நேயமே அடிநாதமாய் இருக்கிறது. தான் பார்க்கும் தன் மக்களின் அவல வாழ்வினை, அவர்களது பெருமைகளை, சிறுமைகளை ஆச்சரியத்தோடும் ஆதங்கத்தோடும் - வாசப்பவர் மனம் கொள்ளுமாறு கதையாக்கித் தருவதில் பெரும் வெற்ற்¢ கண்டிருக்கிறார் ஆசிரியர். பாத்திரப் படைப்புகள் அருமை. நாம் நேரில் பார்க்கிற மாதிரியான மயக்கம் தரும் வருணனைகள், வாக்கு சாதுரியங்கள், ரசமான சொல்லாட்சிகள், சொலவடைகள் என்று எல்லாவகையிலும் திரு. இராமமூர்த்தி தான் ஒரு தேர்ந்த கதாசிரியர் என்ற இத்தொகுப்பின் மூலம் மெய்ப்பித்திருக்கிறார். 'கரிசல் காட்டுக் கதைகள்' தொகுப்பு போல 'ஆற்காட்டுக் கதைகள் ' என்று ஒன்று வெளி வருமானால் தவறாமல் இராமமூர்த்தியின் கதைகள் இடம் பெறும். பெண்னையாற்றங்கரைக்கு ஒரு புதிய வெளிச்சத்தை அவர் கொடுத்திருக்கிறார்.

Thursday, December 11, 2003

கணையாழி அனுபவம் - தொடர்ச்சி

சென்னை செல்லும்போதெல்லாம் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களைச் சந்தித்துப் பேசுவேன். ஆரம்பத்தில் அவர் அதிகமும் நெருக்கமாகப் பேசியதில்லை. என் குறுநாவல்கள் கணையாழியில் பிரசுரமாகத் தொடங்கிய பிறகுதான் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார். தி. ஜா நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற என் `இனியரு தடவை` என்ற குறுநாவலை மனந்திறந்து
பாராட்டினார். அவருடன் பழகியவர்க்குத் தெரியும்- பாரபட்சம் காட்டாமல், இளையவர் முதியவர் என்றில்லாமல் ஒரு படைப்பு பிடித்திருந்தால் மேட்டிமை இல்லாமல் பாராட்டிப் பேசும் உயர்ந்த பண்பாளர். நான் மூன்று தடவை தொடர்ந்து தி.ஜா. நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றேன். கணையாழியால் அவருக்குப் பெருத்த நஷ்டமே தவிர லாபமில்லை. அந்த நிலையிலும் படைப்புகளுக்கு சன்மானம் வழங்கி வந்தார். சிற்றிதழ்களில் படைப்பாளி?க்குப் பணம் கொடுத்தவர் அவர் மட்டுமே என்
நினைக்கிறேன். கணையாழியில் வெளியான என் ஒரு கவிதைக்கும் 4 குறுநாவல்களுக்கும் சன்மானம் கிடைத்திருக்கிறது. தி.ஜானகிராமன் என் ஆதர்ச எழுத்தாளர். கதை முழுவதையும் ஆசிரியன் குறுக்கீடு இன்றி பாத்திரங்களின் உரையாடல் களாலேயே அலுக்காமல் நடத்திச் செல்லும் அவரது அற்புதத் திறன் என்னைப் பரவசப்படுத்தும். அதன் தாக்கம் என் கதைகளில் என்னையறியாமலே வெளிப்பட்டது. அவரது`சத்தியமா` என்ற கதை என்னைக் கிறங்க அடித்தது. அந்த பாணியில் `இனியரு தடவை` குறுநாவலை முழுதும் உரையாடல்களாலேயே அமைத்தேன். தி. ஜாவின் எழுத்தில் மோகம் கொடிருந்த எனக்கு அவர்
பெயரால் நடத்தப் பட்ட போட்டியில் பரிசு கிடைத்ததைப் பெரும்பேறாகவே கருதுகிறேன். அதைவிடப் பெரிய பேறு கணையாழியின் பரிணாம வளர்ச்சியை, தொடர்ந்து 5 ஆண்டுகள் எழுதியது. தொடர்ந்து அவ்வளவு நீண்ட காலம் கணையாழ்?யில் எழுதியது நானாகத்தான் இருக்கும். கஸ்தூரிரங்கன் பொறுப்பில் இருந்திருந்தால் இன்னமும் அத் தொடரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.


1965ல் தொடங்கப் பட்ட கணையாழிக்கு 1995ல் 30 ஆண்டு முடிந்திருந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்த இலக்கியப் பத்திரிகையும் விடாமல் நடந்ததாக வரலாறு இல்லை. 1995 ஏப்ரலில் நான் கி.க அவர்களைச்சந்தித்த போது முப்பது ஆண்டுகள் முடிந்ததையட்டி சில புதிய அம்சங்களை வெளியிட விரும்பினார். அதில் ஒன்றாக கணையாழியின் வளர்ச்சியைச்
சொல்லும்படி முதல் இதழிலிருந்து ஒவ்வொரு இதழாகத் தொடர்ந்து விமர்சித்து எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். 25ஆண்டு முடிந்தபோது மாலன் அவர்கள் `கணையாழி-25 என்று ஒரு தொடர் எழுதினார். நான் அதைக் குறிப்பிட்டபோது,`அது ஒட்டு மொத்தமான விமர்சனம். இப்போது நீங்கள் இதழ் இதழாக எழுதுங்கள்` என்றார். `மாதம் ஒரு இதழ் என்றால் இன்னொரு 30 வருஷம் ஆகுமே சாத்யமா? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு ஒரு ஆண்டு என்று எழுதினால் 30 மாதங்களில் முடித்து விடலாமே` என்றேன். `அதனால் என்ன/ முடிந்தவரைஎழுதலாம். மாதம் ஒரு இதழ் என்றே எழுதுங்கள்` என்றார்.

இதை மாலன்கூட அவர் தினமணி ஆசிரியராக இருந்தபோது தினமண்? கதிரில் எழுதினார். `படித்ததில் பிடித்தது- படித்ததில் இடித்தது` என்ற தலைப்பில் வாரா வாரம் கட்டம் போட்டு எழுதிய போது, ஒரு வாரம் `படித்ததில் இடித்தது` என்ற பகுதியில் `கணையாழியில் மாதம் ஒரு இதழ் என்று தொடங்கியது முதல் எழுதுகிறார்கள். அப்படியானால் இது வந்த இதழ்கள் எழுத 30 ஆண்டுகள் ஆகும். அதற்குள் அடுத்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கும். எப்படி- இடிக்கிறதே!` என்று எழுதினார். ஆனாலும் கி.க விரும்பியபடியே மாதம் ஒரு இதழ் வீதம் எழுதினேன். அட்டையையும் சுவையான பகுதிகளையும் ஒளி நகல் எடுத்து இணைத்து இதழ் முழுதும் ஒரு அம்சமும் விட்டுப்போகாமல் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. கணையாழியின் ஆரம்ப காலம் முதல் அது சாதித்ததை இளைஞர்கள் அறிந்து கொள்ள `கணையாழியின் பரிணாம வளர்ச்சி` என்ற அத் தொடர் உதவியது. அதைப் படித்த ஆய்வு மாணவர்கள் பலர் தொடர்பு கொண்டு பயன் பெற்றார்கள். மயிலாடுதுரையில் ஒரு ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரி 1967ல் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் துறை மாநாடு பற்றிய அறிக்கை வந்ததை நான்
குறிப்பிட்டதைப் பார்த்துவிட்டு 30 ஆண்டு கழிந்தபின் அதை நினைவு கூர்ந்ததில் நெகிழ்ந்து தான் அதில் பங்கேற்றதைக் குறிப்பிட்டுப் பா?ட்டி அக் கட்டுரையின் பிரதி கேட்டு எழுதினார். கி.க அவர்களும் `நன்றாக வருகிறது. எனக்கே இதையெல்லம் நாமா செய்தோம்` என்று மலைப்பாய் இருக்கிறது. இ.பா கூடப் பாராட்டினார்` என்றார். அவ்வளவு பெரிய பத்திரிகையாளர் என்மீது நம்பிக்கை வைத்து அப் பெரும் பணியை ஒப்படைத்ததுடன் பாராட்டியும் உற்சாகப்படுத்தினார் என்பது சாதாரண விஷயமா?

ஆனால் அதை சுஜதா கொச்சைப் படுத்தி அவருக்காந `கடைசிப்பக்கத்` தில் ஒருமுறை எழுதினார். நான் ஒவ்வொரு இதழிலும் அவரது கடைசிப்பக்கத்தைக் குறிப்பிட்டு ரசமான பகுதிகளை எடுத்துத் தந்து பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். ஒரு மாதம் ` பெர்?யாரின் ஆணவப் பேச்சு` என்ற தலைப்பில் கடைசிப்பக்கத்தில் `தமிழ் காட்டுமிராண்டி பாஷை` என்று அவர் சொன்னதை விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. அடியில் `தொடித்தலை விழுத்தண்டினார்`என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக கடைசிப்பக்கம் எழுதுவது சுஜாதா என்பதால் நான் அதை உறுதி செய்து கொள்ளாமலே- கி.க அல்லது சுஜாதாவைத்தான் கேட்டிருக்கமுடியும். அதற்கான நேரமோ சந்தர்ப்பமோ இல்லாத நிலையில்- சுஜாதா தான் அதை எழுதினார் என்று எழுதிவிட்டேன். அது நானில்லை என்று அவர் மறுப்புக் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம். அவர் எழுதினார்: `சபாநாயகம் 30 ஆண்டு கணையாழி அவரிடம் உள்ள ஒரே தகுதியில் நக்கலாக கணையாழியில் எது வந்தாலும் அது நான் எழுதியது தான் என்று என் தலையில் போட்டு விடுகிறார். சத்தியமாக அதை எழுதியது நான் இல்லை`. நான் அவரது கதை பின்- னும் திறத்திலும் ரசமான நடையழகிலும் மனம் பறிகொடுத்தவன். அவரைக் குறைகூறி நான் ஏதும் எழுதி?விடவில்லை. ஆனாலும் ஏதோ ஈகோ பிரச்சினை-அப்படிக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டார். பிறகு விசாரித்ததில் `தொடித்தலை
விழுத்தண்டினார்` என்ற பெயரில் எழுதியது நா.பா என்று கேள்வி?ப் பட்டேன். நான் சுஜாதாவுக்கு `நான் உங்கள் ரசிகன். உறுதிப் படுத்திக் கொள்ளாமல் எழுதியது தவறுதான். ஆனால் உங்களை மலினப்படுத்தும் நோக்கத்தில் நான் அதை எழுதவில்லை` என்று எழுதினேன்.அவரிடமிருந்து பதில் வரவில்லை. அதிலெனக்கு வருத்தமும் இல்லை. நான் இன்னும் அவரது ரசிகன்தான்.


பொருளதார நெருக்கடி அதிகமாகி தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் `தசரா` தமன் பிரகாஷ் அதை ஏற்று நடத்த முன் வந்தபோது எப்படியாவது தான் தொடங்கியது இல்லாமலே போவதைவிட யாராவது நடத்தட்டுமே என்று சிறிதும் வருத்தமின்றி கி.க கொடுத்துவிட்டார். அதற்குப்பின்னும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். கி.க போல அல்லாமல் என் கட்டுரைகளில் அவ்வப்போது வெட்டு விழுந்தது. 2 பக்கம் ஒரு பக்கமாகக் குறைக்கப்பட்டது. கி.க தொடங்கியதை நிறுத்தத் தயங்கியமாதிரி தெரிந்தது.அடுத்து ஒரு மாதம் பெட்டிச் செய்திபோலச்சுருக்கி என் பெயரும் இல்லாமல் அரைப் பக்கத்தில் வந்தது. அதற்கு மேலும் பொறுக்காமல் நான் ஆசிரியர்க்கு,` என் கட்டுரையைத்தொடர விருப்பம் இல்லையென்றால் நேரடியாகவே சொல்லி?விடுங்கள்.எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இப்படி மலினப்படுத்த வேண்டாம்` என்று எழுதினேன். `இல்லை. நீங்கள் எப்போதும் போலவே எழுதலாம். அப்படியே வெளியாகும் ` என்று வருத்தம் தெரிவித்து பதில் வந்தது.
அப்புறம் தொடர்ந்து ஏப்ரல் 2000 வரை எழுதினேன். அம்மாதக்கடைசியில் உதவி ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ` கணையாழியில் புதிய பகுதிகள் வரவிருப்பதால் தங்களது தொடரை தற்போதைக்கு நிறுத்தி வைக்க ஆசிரியர் குழு எண்ணுகிறது. உங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம்`. ஒப்புதல் இல்லை என்றா சொல்லமுடியும்? `ஆகா! அப்படியே செய்யலாம்`
என்று எழுதினேன். இப்படி 58 மாதங்கள் தொடர்ந்து வந்த `கணையாழியின் பரிணாம வளர்ச்சி` நிறுத்தப்பட்டது. கி.க அவர்களுக்கும் தொடர்ந்து அதைப் படித்து வந்தவர்களுக்கும் வருத்தந்தான். ஆனால் பத்திரிகை நடத்துபவர்கள்
விருப்பம் அது. அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? என்னைப் பொறுத்தவரை அத் தொடர்மூலமே நான் இலக்கிய உலகில் பெரிதும் அறியப்பட்டேன் என்பதில் மன நிறைவு கொள்கிறேன்.

பின்னர் கி.க அவர்கள் `அம்பலம்` மூலம் கணையாழியின் 30 ஆண்டு இதழ்களையும் இணைய தளத்தில் கொண்டுவர இருப்பதால் 30 பைண்டுகளையும் அனுப்பி வைக்கும்படியும் வேலை முடிந்ததும் பத்திரமாக திருப்பி அனுப்புவதாகவும் கேட்டார்கள். பிரிய மனம்?ல்லை என்றாலும் அதன் சாசுவதம் கருதி அனுப்பி வைத்தேன். கொஞ்சம் வலைஏற்றம் நடந்த பிறகு ஏதோ காரணத்தால் அம் முயற்சி கைவிடப்பட்டது. பிறகு கலைஞன் பதிப்பகம் தொகுப்பாக வெளியிட விரும்பிக் கேட்டதால் கி.க அவர்கள் என்னையே முதல் பத்தாண்டுகளைத் தொகுத்துத் தர வேண்டினார். அதன்படி 1965 முதல் 1974 வரை முதல் தொகுப்பாக எனது தேர்வில் `கணையாழி களஞ்சியம்`வெளியாயிற்று. தொடர்ந்து 1975 முதல் 1984 வரையிலான 10 ஆண்டு
கள் இ.பா அவர்களது தேர்வில் `கணையாழிக் களஞ்சியம்`-2 வெளியாகி உள்ளது. 3வது தொகுதி 1985 முதல்
1994 வரை என்.எஸ்.ஜெகந்நாதன் அவர்களது தேர்வில் வெளியாக உள்ளது.


அதே கலைஞன் பதிப்பகத்தார் இப்போது `தீபம் இதழ்த் தொகுப்பை` 2 பாகங்களாக என் தேர்வில் கொணர இருக்கிறார்கள். முதல் தொகுப்பு அச்சாகிக் கொண்டிருக்கிறது. 2வது தொகுப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கிய ஆர்வலர்களுக்கு இதுவும் பெருவிருந்தாக அமையும்.

- வே.சபாநாயகம்.