Tuesday, February 26, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........18. நாஞ்சில்நாடன் - ‘எட்டுத் திக்கும் மதயானை’



ள்ளத் தொண்டையில் பாடிக் கொண்டிருந்தாயிற்று கனகாலம்.
சற்றுத் திறந்து பாடலாம் என முக்கிப் பார்க்கையில் தொண்டை நெரிந்து போயிருப்பது புப்படுகிறது. அல்லது வெளியிலிருந்து குரல்வளை நெரிக்கப்படுகிறது.

இந்த சுதந்திரம்கூட இல்லாமல், எல்லாம் எதற்கென்று தோன்றுகிறது.
நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனை பூச்சொரிதல்...கையைத் தூக்கிப் பிடித்து நாய்க்குக் காட்டும் பிஸ்கட் போலச் சில பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா, அல்லது துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக் கண்கொள்ளாமல் கண்டு  களித்தலா என்று தெரியவில்லை.

படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு வளர்ப்பல்ல. போரிடும் திறனற்ற, கால்களுக்கிடையே வால் நுழைத்துப் பல்லிளித்து ஓடும் நாட்டு நாய் போலும். பசித்தால் மனித மலமும் அதற்கு உணவு. கார்த்திகை மாத்த்துக் கனவு என்பதோர் தோற்றுப் போகும் இனப்போர்.
இப்பட்டித்தான் இருந்து வந்திருக்கிறது இந்த இருபத்தைந்தாண்டு எழுத்து வாழ்க்கை. படைப்பாளி என்பவன் வேலிக்கு வெளியே நிற்பவன, போற்றுதலும் கவனிப்பும் மறுக்கப் பெற்று.

படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக்கொள்கிறார் எந்த நாணயமும் இன்றி.

பொதுச்சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவளமணிப்பூண்கள், பரிவட்டம்......
என்றாலும் அலுத்துப் போகவில்லை எழுதுவது. உங்களுக்கு அலுத்துப போகாதவரைக்கும் எழுதலாம் தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்!

நட்புடன்,
நாஞ்சில்நாடன்.

1998, டிசம்பர் 9,
கோவை-641 009.

Monday, February 18, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’



லக்கிய விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம் இவைகளின் ஜீவிதத்தைக்கொண்டு, தமிழுக்கு இலக்கிய விமர்சனம் புதிதல்ல என்று சாதித்துவிடமுடியாது. ஏனைய நாட்டு இலக்கியங்களின் மேதா விலாசத்தோடும் த்த்துவங்களோடும நம் நாட்டின் இலக்கிய தத்துவங்களையும் அசுர சாதனைகளையும் எடை போடுவது இந்த இருபதாம் நூற்றாண்டில் தலையெடுத்திருக்கிறது.

இந்தத் தலைமுறையைத் தொடங்கி வைத்தவர் காலஞ்சென்ற வ.வே.சு அய்யர் என்றே சொல்லலாம். அவருடைய ‘கம்ப ராமாயண ரசனைச்சுவையும், ‘கவிதையுந்தான் இன்றைய விமர்சகர்களுக்குப் பாதை காட்டிற்று என்றும் சொல்லலாம்.  அதன்பின் தமிழில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சில விமர்சகர்கள் தோன்றினார்கள். இவர்களும் சஞ்சிகைகளின் தேவைக் குட்பட்டு, உதிரியாகத் தமது கருத்துகளைப் பரவ விட்டார்கள். எனினும் சிலர் அந்த உதிரி மலர்களையும் தொடுத்து ஆரமாக்கி இருக்கிறார்கள். அவைகளில்  திரு.அ.சீனிவாசராகவன், எஸ்.வையாபுரிப் பிள்ளை. சொ.விருத்தாசலம் இவர்களின் விமர்சன நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்நூல் அம்மாதிரியான ஒரு முயற்சி. இந்நூலை வாசகர்கள் இலக்கிய விமர்சனமாகவோ, விமர்சன இலக்கியமாகவோ – எப்படிப் படுகிறதோ அப்படி ஏற்றுக் கொள்ளலாம்.

இதிலுள்ள கருத்துக்கள் பல ஆழமும் கனமும் கொண்டவை. கலைகளை – இலக்கியத்தை நான் எப்படிப் புரிந்து கொண்டேன் எனபதற்கு விடையளிக்கும் முயற்சியாகவே இந்நூல் அமைந்திருக் கிறது. கருத்துகளைக கல்யாண வீட்டுச் சாம்பாரைப்போல் தண்ணீர் விட்டுப் பெருக்காமல், கூடியவரை சுயம்பாகவே தந்திருக்கிறேன். ஆதலின் சிலவற்றை மேலோட்டமாகப் படித்தால் மனதில் ஒட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன. இந்த நூலிலுள்ள அத்தியாயங்கள் எல்லாம் அதனதன் தன்மையில் தனிப் பிண்டங்களைப் போலவே அமைந்திருந்தாலும், மொத்தத்தில் ஒரு கூட்டு முன்னணி அமைத்து, ஏகோபித்தே செல்லுகின்றன என்று கருதுகிறேன.

இதிலுள்ள கருத்துக்களை யெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதில்லை. வளமுறையை, மரபை ஒட்டிய விவகாரங்களை, பிறந்த மேனியாகவே தந்திருக்கிறேன். யுத்தகளத்து நிருபனாக, நடந்ததை நபந்தவாறே சொல்லும் சஞ்சயனைப் போலத்தான் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறேனே ஒழிய, கீதா போதனை செய்யும் கீதாசாரியனாகத் தோற்றமளிக்கவில்லை. அப்படித் தோற்றமளித்திருந்தால், அந்தக் கருத்துக்களில் என் கட்சியை வலியுறுத்த நான் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறேன் என்றே அர்த்தம்.

ரகுநாதன்.
ஏப்ரல் 1948.

Tuesday, February 12, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........16- இந்திரா பார்த்தசாரதி – ‘வேதபுரத்து வியாபாரிகள்’.



ல்லா மொழிகளிலுமே ‘அங்கதங்களுக்கு ஓர் ஆயுள் வரையறை (mortality rate) உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில், ஜனாதன் ஸ்ஃப்ட் (Jonathan Swift) கலிவரின் பயணங்கள்என்று ஒரு மகத்தான சமூக அங்கத நாவலொன்று எழுதினார். அது இப்போது குழந்தைகளின் செவ்விலயல் இலக்கியமாக வாசிக்கப்பட்டு வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ஜார்ஜ ஆர்வெலின், ‘1984, ‘விலங்குப் பண்ணை  (Animal Form) ஆகிய இரண்டு நாவல்களுமே மனித சுபாவம் பற்றிய உளவியல் படைப்புகளாக அறியப்படுகிறனவே அன்றி, கம்யூனிசக் கோட்பாடு பற்றிய விமர்சனம் என்ற கருத்தோட்டம் மறைந்து வருகிறது.

நல்லவேளை, இந்திய, தமிழ்நாட்டு அரசியல், சமூகச்சூழ்நிலைகள் நான் எழுதிய பத்தாண்டுக் காலத்தில் மாறுதல் இல்லாமலேயேயே இருந்து வருகின்றன என்பது இந்த நாவலின் அதிர்ஷ்டம். எந்தக் காரணத்துக்காக இந்த அங்கதம் அன்று எழுதப்பட்டதோ அதே காரணத்துக்காக இன்றும் அங்கதமாகவே இதைப் படிக்கலாம்.

நான் இந்த நாவலை எழுதத் தொடங்கியது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது அரசியல் தலைவரையோ கிண்டல் செய்வதற்காக இல்லை. அப்போது நிலவி வந்த கலாச்சார சூழ்நிலை தான் இந்த நாவலில் சொல்லப்படாத கதநாயகன். அதன் விளைவுகள் தாம் இந்த நாவலில் பயின்று வரும் கதை மாந்தர்கள்.

இத்தகைய கலாசார சூழ்நிலை உருவாவதற்கு யார் காரணம்?

நாம்தான். நமக்குத் தகுதியான அரசியலும் கலாசாரமுந்தான் நமக்குக் கிடைக்கின்றன.

பிந்தைய அறுபதுகளுக்குப் பிறகே, நம் கலாசார வீழ்ச்சி தொடங்கியது என்று கூறமுடியும். தாம் சார்ந்த அரசியல் கட்சி குடியரசுத் தலைவருக்கென்று அறிவித்த வேட்பாளரையே தேர்தலில் தோற்கடித்த பெருமை அன்றைய பாரத பிரதமரைச் சாரும். இரண்டு வேட்பாளர்களுக்குமிடையே பெரிய வேறுபாடு எதுவுமில்லை. Tweedledum and Tweedleddee தான். இருந்தாலும், குறைந்தபட்ச அரசியல், சமூகக் கோட்பாடுகள் விடைபெற்றுக்கொண்டன என்பது அது முதற்கொண்டுதான்.

தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் இரண்டறக் கலந்தன. “சினிமாவும் அரசியலும் இரண்டென்பர் அறிவிலார், அரசியலே சினிமா என்றறிந்தபின், நிழலே நிஜம் என்றிருப்பாரே என்ற ஓர் ‘ஆன்மீகக் கொள்கையின் அடிப்படையில் ஒரு புது சமயம் உருவாயிற்று. அதை உருவாக்கிய ‘சித்தர்களே அரசியல் தலைவர்கள் ஆனார்கள்.

இதன் வெளிப்படாக அமைந்ததுதான் தமிழ்நாட்டின் அன்றைய, இன்றைய கலாசாரம்.

இது சமூகத்தின் எல்லாத் துறைகளையும் பாதித்தது. இதைச் சுட்டிக்காட்டவே நான்இந்த நாவலை எழுதினேன். என்னுடைய இலக்கு ஸ்தாபானந்தான். தனி மனிதர்கள் அல்ல. வெளிநாட்டில் இருந்து இதை ஆராய்வதற்காக வரும் தமிழின மூலத்தைக் கொண்ட அமெரிக்கப் பெண், இக்கலாசாரத்தில் உய்யவேண்டுமென்றால் ஆட்கொள்ளப் படுதலைத் தவிர வேறு வழியில்லை என்ற ஓர் அவலநிலையை எய்துதல்தான், இந்த நாவலின் துன்பியல் முடிவு.


இந்திரா பார்த்தசாரதி

4-11-‘05  


Monday, February 04, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.........15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.



டி.கே.சி கடிதங்கள் எல்லாம் கலை அந்தஸ்து பெற்றவை. ஒரே ஹாஸ்யமும், உல்லாசமும், உணர்ச்சியுமாயிருக்கும். படிக்கத் தெவிட்டாத இலக்கிய ரத்தினங்கள் அவை. டி.கே.சி கடிதம் எழுதுவதைக் கைக்கொண்ட பின்தான் கடித இலக்கியம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் பிறந்தது.

ஒவ்வொரு கடிதமும் நேருக்கு நேர் நின்று பேசும். உடல் நிலை மோசமாயிருப்பது கேட்டு வருந்தி எழுதி இருந்தேன். அடுத்த தபாலில் கீழ்க்கண்ட பதில் வந்தது: “என் உடலைப் பற்றித் தாங்கள் கவலை கொள்வதாகத் தெரிகிறது. அது வேண்டாம். உடம்பு சரியாகத்தான் இருக்கிறது. இன்ஸுலின் (Insulin) இன்ஜெக் ஷன் கிடையாது. மற்ற குத்துகளும் இல்லை. மலை ஏற முடியாது. மரம் ஏற முடியது. அவ்வளவுதான்.

டி.கே.சி தமிழின் எளிமையைப் பார்க்கும்போது, அடே, நாம் கூட இப்படி எல்லாம் வெளுத்து வாங்கிவிடலாம் என்று தோன்றும். ஆனால், உட்கார்ந்து எழுதிப் பார்த்தால், அது நமக்குக் கைவராது என்று தெரியும். எளிய தமிழ் என்றால் வெள்ளைத் தமிழல்ல, மொட்டைத் தமிழும் அல்ல. நமக்கு எட்டாத ஆழத்திலும், தெளிவிலிமிருந்து உருவான எளிமை அது. பரிணாம நெறியை ஒட்டிப் பார்த்தால்தான் எளிமையைப் பற்றி டி.கே.சி இப்படி எல்லாம் ஏன் பிரமாதப் படுத்தினார்கள் என்று விளங்கும்.

எந்தத் துறையில் எளிமையைக் கண்டாலும் அதை டி.கே.சி அபாரமாக அனுபவித்து வந்தார்கள்.

ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். முற்றத்தில் மாப்பொடியினால் கோலம் போடப்பட்டிருதந்தது. அதைப் பார்த்து ஒரு மணி நேரம் ரஸித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் குருட்டுக் கண்ணுக்கு அவர்கள் எடுத்துச்சொன்ன பிறகுதான, கோலத்தின் அழகு தெரிய வந்தது. ஊருக்குப்போன பிறகு, ஒரு கடிதம் எழுதினார்கள். “இங்கேயும் வீடுகளில் கோலம் போடத்தான் செய்கிறார்கள. நூற்றுக்கணக்கான பொட்டுகள; நூற்றுக்கணக்கான கோடுகள். எல்லாம் சேர்ந்து ஒரே கரா புரா. அம்மாள் ரகத்தில் எளிமையும் கருத்தாழகும் சேர்ந்து கலையாய் விளங்கும். அந்தக் கலையை உணருவதற்கு மற்ற கோலங்களையும் பார்க்க வேண்டும். கம்பர் செய்யுளின் எளிமையை அனுபவிப்பதற்கு கந்தபுராணச்.செய்யுள்களையும், சீவகசிந்தாமணிச் செய்யுள்களையும் பார்க்க வேண்டும். பாரதியும் தேசிகவிநாயகம் பிள்ளையும் கவிஞர் ஆனதால் எளிமையைக் கையாண்டிருக்கிறார்கள். விஷயத்தை இப்படிச் சொல்வதை விட்டு விட்டு எல்லோருக்கும் விளங்குவதற்காக லேசாய் எழுதி இருக்கிறார்கள் என்று மாறாகச் சொல்லுகிறார்கள். கவிஞர்கள் தங்களுக்கே விளங்க வேண்டும் அல்லவா, அதற்காக எளிமையைக் கையாளுகிறார்கள் என்று சொன்னால்ப் பொருத்தமாக இருக்கும்.

“பூண்டுகள்கூட காரியத்தைச் சாதித்துக் கொளவதற்காக எளிமையைக் கையாண்டிருக்கின்றன.

“எட்டுத்திசையிலிருந்தும், பதினாறு கோணத்திலிருந்தும் மகரந்தத் துகள்களை வண்டுகள் கொண்டு வரவேண்டும். அதற்காகப் பதினாறு இதழ்களையா விரிக்கிறது? ஐந்து இதழ் போதும் என்றுதானே வைத்துக்கொண்டது?  Radial Symmetry  ஐந்து பட்டங்களால் ஆகிவிடுகிறது. பல அடுக்குப் பூக்கள் எல்லாம் கஷ்டப்படுகிற பூக்கள் தான். கோலத்தை எளிமையுடன் போடவில்லை அவைகள்.

இபடியாகக் கோலத்திலிருந்து கவிதைக்கும், கவிதையிலிருந்து சிருஷ்டித் தத்துவத்துகுமே டி.கே.சியின் எளிமைக் கடிதங்கள் நம்மை இழுத்துச் சென்றுவிடுகின்றன. சில்லறை விஷயங்களைப் பற்றிக் கடிதம் விளக்கிக்கொண்டிருக்கும்போதே அரிய உண்மைகள் எல்லாம், அந்த ஒளியிலே, தெளிவாகிவிடும். விஞ்ஞானம், சமயம், கடவுள தத்துவதம் - எல்லாவற்றையுமே, மத்தாப்பூ போட்டுவிடும் அந்தக் கடிதங்கள். 

தென்காசியிலிருந்து ரயிலிலே சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள. டி.கே.சியை ரயிலடியிலாவது சந்திக்கலாம் என்று போயிருந்தேன். சந்தித்து இரண்டு வார்த்தை பேசுவதற்குள், சீவில்லிப்புத்தூர் ஸ்டேஷனை விட்டு ரயில் நகண்டுவிட்டது. ஒரே ஏமாற்றம்! சென்னையிலிருந்து வந்த டி.கே.சியின் கடிதம், கீழ்கண்டவாறு ஏமாற்றதைத் தெரிவிக்கிறது: “எவ்வளவோ ஆத்திரத்தோடு, தாங்கள் வந்தீர்கள்.ஆனால், ரயிலும், காலதேவதையும் ரொம்பக் கேலி பண்ணி விட்டன. இரண்டு வார்த்தை பேசுவதற்குள் வாய்க்குருவியை (Whistle) ஊதிவிட்டான்...... வெறும் இருட்டிலிருந்து இந்த உலகத்துக்கு வருகிறோம். கண்ணைத் துடைக்கவே, பத்திருபது வருஷம் (நிமிஷந்தான்) ஆகிறது. அதைக் கொஞ்சம் பார்க்கிறோம்., இதைக் கொஞ்சம் பார்க்கிறோம். ஏதோ குருடன் தடவிப் பார்க்கிற கணக்குத்தான். ஆனால் ஒன்று தெரிகிறது, எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கிறதே, எவ்வளவோ அறிய வேண்டி இருக்கிறதே என்பதாக, கற்றது ஒன்றும் இல்லையே என்ற திகைப்பும் ஏற்படுகிறது. அப்போது உலகை ஓட்டி சங்கை ஊதி விடுகிறான், அடடா, உலகத்தோடு ஒன்றும் பேசவில்லையே என்று தோன்றுகிறது

இருபது வருஷங்கள் டி.கே.சியோடு பழகிய பிறகு இன்னும் எவ்வளவோ அவர்களிடம் அறிய வேண்டி இருக்கிறதே என்று பட்டது. அதற்குள்ளாக உலக ஓட்டி சங்கை ஊதிவிட்டான், டி.கே.சி தத்துவம் மறைந்துவிட்டது. திகைப்புத்தான் மிஞ்சுகிறது.


-         எஸ்.மகராஜன்.
1961.