Wednesday, July 27, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 8.கம்பாசிட்டர் கவிதை

1970 களில் புதுக்கவிதை பற்றிய வாதப் பிரதிவாதம் உச்சத்தில் இருந்த
காலகட்டத்தில், நான் ஒரு சின்ன ஊரின் உயர்நிலைப் பள்ளியில் தலைமை
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாடம் தவிர்த்த 'நல்லொழுக்கக்
கல்வி' போன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் நவீன இலக்கியப் படைப்பு
களையும், படைப்பாளிகளையும், சிற்றிதழ்களையும் அறிமுகப்படுத்தி வந்தேன்.

அப்போது 'எழுத்து'வில் சி.சு.செல்லப்பா அவர்கள், 'புதுக்கவிதை' அறிமுகத்தை
ஒரு வேள்வி போலச் செய்து வந்தார். புதிய சோதனை முயற்சிகளையும், புதிய
படைப்பாளிகளையும் 'எழுத்து'வில் அறிமுகப்படுத்தி வந்தார். அவரது புதுக்
கவிதைப் பிரச்சாரத்துக்கு ஆதரவும், கண்டனமும் நிறைய எழுந்தன. அவரது
முயற்சிகளைக் கேலி செய்தும் மலினப்படுத்தியும் பலர் பேசியும், எழுதியும்
வந்தனர். சி.சு.செ வின் முயற்சி அசலானதுதான் என்றாலும், கவிதை எழுத
முடியாதவர்கள் அவர் காட்டிய பாதை என்று சொல்லி 'புதுக்கவிதை' என்ற
பெயரில் அந்த இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி, புற்றீசல்களாய்ப்
பெருகி வாராந்திரிகளிலும், திடீர்ச் சிற்றிதழ்களிலும் எழுதினார்கள். பொருளோ
கவிநயமோ இல்லாத சக்கைகளாக, வெற்று வார்த்தைகளை ஒன்றன் பின்
ஒன்றாக எழுதியும், வார்த்தைகளைக் கூட கால், அரையாக ஒடித்து அடுக்கியும்
புதுக்கவிதை என்று சொல்லி எரிச்சலூட்டினார்கள். இதை 'சோ' கேலி செய்து
'கம்பாசிட்டர் கவிதை' என்று 'துக்ளக்'கில் எழுதினார்.

எனது பள்ளி இறுதி வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் இது பற்றிக்
கேட்டான். 'கம்பாசிட்டர் கவிதை' என்றால் என்ன என்று கேட்டான். உடனே
நான் மாணவர்கள் ஒவ்வொருவரையும், வாய்க்கு வந்த ஏதாவது ஒரு
வார்த்தையைச் சிந்திக்காமல் உடனடியாகச் சொல்லும்படி சொன்னேன்.

ஒருவன் 'நள்ளிரவு' என்றான். அதனைக் கரும்பலகையில் எழுதினேன்.
அடுத்தவன் 'பச்சரிசி' என்றான். முதல் வார்த்தைக்கு அடியில் அதை எழுதினேன்.
அடுத்தடுத்து சொல்லப்பட்ட 'வெள்ளிக்கிழமை', 'ஓடினான்', 'வயிற்றுவலி',
'பரப்பு', 'முழு நிலவு', 'போயேபோச்சு', என்பனவற்றைத் தொடர்ந்து எழுதி,
'போதும்! அடுத்தவன் ஒரு தலைப்பு சொல்லு' என்றேன். 'ஓடாதே' என்று
ஒருவன் சொன்னான். அதைத் தலைப்பாக எழுதினேன். அது இப்படி அமைந்தது;

ஓடாதே!
--------

நள்ளிரவு
பச்சரிசி
வெள்ளிக்கிழமை
ஓடினான்
வயிற்று வலி
பரப்பு
முழுநிலவு
போயேபோச்சு.

"இதுதான் கம்பாசிட்டர் கவிதை! இப்போது நீங்கள் எல்லோருமே கவிஞர்கள்!"
என்றேன். மாணவர்கள் சிரித்தார்கள்.

"சிரிக்கிற விஷயமல்ல இது! இப்படி - சி.சு.செல்லப்பா அவர்களின்
புதுக்கவிதை முயற்சியைச் சீரழிக்கிற கேவலத்தைத்தான் 'சோ' கேலி செய்து
எழுதினார். அவர் வேறு ஒரு சூழ்நிலையில் இத்தகைய முயற்சிகளை இப்படிச் சாடினார்.'மக்களே போல்வர் கயவர்' என்று வள்ளுவர் சொன்னபடி, இந்தப்
போலிகள் நல்ல கவிதைப் பயிருக்குக் களை போன்றவர்கள். இவர்களை
இனம் கண்டு ஒதுக்க வேண்டும்" என்று சொல்லி சி.சு.செ பற்றியும் அவருடைய
'எழுத்து' பத்திரிகை பற்றியும், புதுக்கவிதை படைப்பாளிகள் சிலரையும், அவர்களது
கவிதைகளையும் அறிமுகப்படுத்திப் பேசினேன்.


வீட்டுக்கு வந்த பின், ஒரு நல்ல காரியம் செய்த திருப்திக்கிடையே ஒரு குரூர
ஆசையும் எழுந்தது. நான் தலைமை ஆசிரியராகுமுன் 20 ஆண்டுகளுக்கு முன்பு
பட்டதாரி ஆசிரியராக எனது ஊரில் பணியாற்றிய போது, இதுபோல் என்னால்
இலக்கிய அறிமுகம் பெற்ற மாணவர்களில் சிலர் இப்போது ஆசிரியர்களாக,
இலக்கியப் பிரக்ஞை மிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு
பேர் மேற் சொன்ன புரியாத போலிக் கவிதைகளைப் புரிந்ததாகப் பம்மாத்து
பண்ணி, 'கடவுளைக் காண மூக்கை அறிந்து கொண்டவன் கதை'யாய், 'புரிய
வில்லை' என்று சொன்னவர்களைப் புழுவைப் போல நோக்கி 'ஞானசூன்யங்களா'ய்க்
கருதுகிறவர்கள். தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல என்னிடமே என் கவிதைப்
புரிதலைப் பற்றி, மதிப்பீடு செய்பவர்கள். அவர்களிடம் இந்தக் கவிதையைக் காட்டி
சீண்டிப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.

அடுத்தமுறை ஊருக்குப் போன போது அவர்கள் இருவருமே தனித்தனியாக
எனக்கு எதிர்ப்பட்டாரகள். முதலில் சந்தித்தவரிடம் இந்தக் கவிதையைக் காட்டி
கருத்துக் கேட்டேன். அவர் கவிதையை வாங்கி ஜாதகக் குறிப்பைப் பார்க்கிற
மாதிரி சற்று எட்ட வைத்துப் பார்த்து, தலையை அசைத்தபடி, "படிமம் பிரமாதம்
சார்! உள்ளடக்கம், உருவம் நல்லா வந்திருக்கு. தலைப்பு பிரமாதம்! யார் எழுதினது
சார் இது? நீங்கதான் கவிதை எழுத மாட்டீங்களே!" என்றார். "உன்னைப்போல என்
மாணவன் தான். பள்ளி இறுதி வகுப்பு" என்றேன். "அட்டே! பள்ளி இறுதி வகுப்பு
மாணவனா? அதற்குள் இவ்வளவு முதிர்ச்சியா?" என்று அவர் புருவம் உயர்த்தினார்.
"ஒரு மாணவன் இல்லையப்பா - ஒன்பது மாணவர்!" என்று குறும்பாய்ச் சிரித்தேன்.
"என்ன சொல்றீங்க? ஒம்பது மாணவர்களா இதை எழுதினாங்க?" என்று வியப்புக்
காட்டினார். "ஆமாம்" என்று அந்த கவிதை பிறந்த கதையைச் சொல்லி, அவரது
பாராட்டை இடித்துக்கூறி "இதுதான் உங்களுடைய புரிதலின் லட்சணம்!" என்றேன்.
அசடு வழிந்தபடியே அவர் விடை பெற்றார்.

அடுத்து அன்று மாலையே எதிர்ப்பட்ட மற்றவரிடமும் கவிதையைக் காட்டிக்
கருத்துக் கேட்டேன். அவரும் அசடு வழிந்ததை ரசித்தேன்.

எல்லோரிடமும் இந்த விளையாட்டு பலித்து விடவில்லை. சென்னையில்
ஒரு தடவை மார்க்ஸ் முல்லர் பவனில் நடந்த புதுக்கவிதை பற்றிய கூட்டத்தில்
கவிஞர் ஞானக்கூத்தன் பேசிய போது சென்றிருந்தேன். அவர் என் நெடு நாளைய
நண்பர். அவரது பேச்சு முடிந்து கலந்துரையாடலின் போது, இந்தக் கவிதையைக்
காட்டிக் கருத்துக் கேட்டேன். வாங்கிப் பார்த்த அவரது முகம் சுருங்கியது. "வேண்டாம்
சபா! வேண்டாம் இந்த சோதனை விளையாட்டு! தயவு செய்து கேலி செய்ய வேண்டாம்"
என்று கவிதையைத் திருப்பித் தந்தார். அவர் அசலான கவிஞர் எனபதால் போலியைப்
பார்த்ததுமே இனம் கண்டு விட்டார.

கூட்டம் முடிந்ததும் அவரை அணுகி அந்தக் கவிதையின் பின்னணியைச் சொல்லி,
அவரைப் புண்படுத்தி இருந்தால் பொறுத்தருள வேண்டினேன். பெருந்தன்மையுடன்
அவர் அதைப் பெரிது படுத்தாமல், "இபடித்தான் போலிகள் எங்கும் புகுந்து நம்
முயற்சிகளைப் பாழ் படுத்துகிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் போலிகள்
காணாமல் போய்விடுவார்கள். அசல் நிற்கும்" என்றார்.

அது இன்று உண்மையாகி விட்டது. புதுக்கவிதைக்கு இன்று அந்தஸ்து கிடைத்து
விட்டது. 0

Wednesday, July 20, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது புத்தகப் பதிப்புகள் புற்றீசல் போல் புறப்பட்டு வாசகர்களைத் திணற அடிக்கின்றன. பரம்பரை வணிக வெளியீட்டாளர்களுக்குச் சவால் விடுவதைப் போன்று இன்றைய புதிய பதிப்பாளர்கள் அச்சு நேர்த்தியிலும் கட்டமைப்பிலும் ஆங்கில நூல்களுக்கு இணையாகப் பதிப்பித்து சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்கள் போக, கணினிப் பயன்பாடு வசப்பட்டதனால் கிராமங்களில் கூட, அரும்பு விடும் படைப்பாளிகள் தாங்கள் எழுதிப் பார்த்த கன்னிப் படைப்புகளை – அதிகமும் கவிதைகளே – 40, 50 சேர்ந்தவுடன் தம் சொந்தச் செலவில், இணையத்திலிருந்து பதிவிறக்கிய அழகான படங்களை அட்டையில் தாங்கி புத்தகங்களை அச்சிட்டு, கையோடு வெளியீட்டு விழாவும் அரசியல்வாதிகள் போல் வெளிச்சம் போட்டு நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதில் நூறு விழுக்காடு பேர்களும் சிறு பத்திரிகையாளர்களைப் போல் கையைச் சுட்டுக் கொண்டு பரதவிப்பதையும் பார்க்க முடிகிறது.

முன்பெல்லாம் பத்திரிகைகளில் நிறைய எழுதிப் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்கள் கூட ஒரு புத்தகம் கூட வெளியிடமுடியாத நிலை இருந்தது. எழுத்தாளர் ‘தேவன்’ அதற்கு உதாரணம். விகடனில் தான் அவரது படைப்புகள் எல்லாம் வெளியாயின. அவரது ஆயுட்காலம் வரை அவற்றின் உரிமை விகடனிடமே இருந்து, அவர் காலமான பின்னரே உரிமையைப் பெற முடிந்தது. அவர் தன்னுடைய எழுத்து நூலானதைப் பார்க்காமலே இறந்து போனது பெரிய சோகம். பத்திரிகைகளில் எழுதியவற்றின் உரிமை படைப்பாளிகளுக்கு இல்லா திருந்ததும், தமது புதிய படைப்பை பத்திரிகையில் வெளியிடாமல் நேரிடையாக தாமே தம் செலவில் பிரசுரிக்க வசதியற்றிருந்ததும், விஷப்பரீட்சையில் இறங்கப் பயந்ததும் காரணங்களாகும். டாக்டர் மு.வ அவர்கள்தான் துணிந்து எந்தப் பத்திரிகையிலும் எழுதாமல் நேரடியாகத் தன் நூல்களை வெளியிட்டுப் பிரபலமானவர். பிரபலமானாரே தவிர தன் புத்தகங்களால் அவர் பொருளீட்டியதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் தம் எழுத்துக்களைப் பிரசுரகர்த்தகர்களிடம் ‘அவுட்ரைட்’டாக சொற்ப தொகைக்கு விற்று விடும் சூழ்நிலையே அப்போது இருந்தது. டாக்டர் மு.வ அவர்கள் இலட்சக்கணக்கில் விற்ற தனது ‘திருக்குறள் தெளிவுரை’யை அப்படி அவுட்ரைட் ஆக, பிரபலமாகாத ஆரம்ப காலத்தில் விற்று விட்டதால் இன்று வரை அமோக லாபம் பெற்று வருவது அதை வெளியிட்ட ‘சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ தான்.

அப்போதெல்லாம் கை எடை பார்த்து, குத்து மதிப்பாக அரிய நூல்களை எல்லாம் நூறுக்கும் இருநூறுக்கும் வாங்கிக் கொண்டு, படைப்பாளிகளின் உரிமையைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளை நடைபெற்று வந்தது. அகிலன், ஜெயகாந்தன் போல மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர்கள் தலையெடுத்த பின் தான், ‘ராயல்டி’ என்கிற படைப்பாளிக்கு ஓரளவு நியாயம் செய்கிற முறை வந்தது. அதாவது, நூல் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை படைப்பாளிக்குத் தருவது. அதிலும் சில கெட்டிக்காரப் பதிப்பாளர்கள் விற்பனையைக் குறைத்துச் சொல்லி ஏமாற்றுவதும் உண்டு. ஜெயகாந்தன் போல கிராக்கி அதிகம் இருந்தாலொழிய, ‘உங்கள் நூல் விற்கவே இல்லை’ என்று நாமம் போடுவதும் உண்டு. இது பற்றி அகிலன் அவர்கள் ஒருமுறை, ‘வெள்ளைத்தாள் வியாபாரிகள், ஓவியர்கள், அச்சகத்தார் போன்ற வர்களிடமெல்லாம் இவர்களது ஏமாற்று வேலை நடக்காது. காசு கொடுத்தால் தான் அவர்களிடம் காரியம் நடக்கும். ஆனால் யாரால் பிழைப்பு நடக்கிறதோ அந்த எழுத்தாளர்களிடம் மட்டும் பேரம் பேசவும், கடன் சொல்லவும், ஏமாற்றவும் அவர்களுக்கு முடிகிறது’ என்று அப்போதே புத்தக வெளியீட்டில் எழுத்தாளர்களின் அவல நிலை பற்றி எழுதினார். புத்தகம் வெளியானால் போதும் என்ற ஏக்கத்தால் அந்தக் கொடுமைக்கெல்லாம் படைப்பாளிகள் தெரிந்தே உடன்பட்டார்கள். சில பதிப்பகத்தத்தார் ‘அவுட்ரைட்’டாக வாங்கிய நூல்களை ஆசிரியர் பெயர் போடாமல், தங்கள் பதிப்பக ஆசிரியர் குழு என்று போட்டு அதிலும் படைப்பாளிகளை வஞ்சித்ததும் உண்டு. இப்போது பதிப் புரிமைச் சட்டம் வந்த பிறகு படைப்பாளிகளின் உரிமை பாதுகாக்கப்படுகிறது.
ராயல்டி முறை இல்லாமல், பாரத்துக்கு( 16 பக்கம்) இவ்வளவு என்று பேசிக்கொண்டு ‘உரிமை ஆசிரியருக்கே’ என்று அச்சிட்டு ஒரு பதிப்போடு நிறுத்திக் கொள்வதும் நடக்கிறது. இதிலும் கூட முதல் பதிப்பை மட்டும் சொல்லி விட்டு, அடுத்தடுத்த பதிப்புகள் பற்றி மூச்சுக் காட்டாமல் ஏமாற்று பவர்களும் உண்டு. தெரிந்து படைப்பாளி கேட்டால் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வார்கள். எப்போதும் இழப்பவர் படைப்பாளி யாகவே இருக்கிறார்.

இப்போதெல்லாம் இளம் படைப்பாளிகள் எழுதத் தொடங்கியதுமே – தம் எழுத்தை பத்திரிகைகளில் பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் – தாமே வெளியிட அவசரப்பட்டு, ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக 200 பிரதிகளை வழங்கிவிட்டு மீதியை வீட்டில் அடுக்கி வைத்து கறையானுக்கு இரையாக்கு வதும், வைக்க இடமில்லாதவர்கள் எடைக்குப் போடுவதுமான சோகமும் நடக்கிறது.

என் நண்பர் ஒருவர் – நிறைய பத்திரிகைகளில் எழுதி பிரசுரமும் கண்டவர் – தன் படைப்புகளை நூலாக வெளியிட எந்தப் பதிப்பகமும் கிடைக்காமல் விற்பனை சிரமம் தெரிந்தும், மனைவியின் வளையல்களை அடகு வைத்துப் பணம் புரட்டி புத்தகம் போட்டார். மேலே சொன்னபடி இலவசப் பிரதிகள் தான் செலவாயின. நூற்றுக்கணக்கில், வைக்க இடமில்லாமல் வாடகை வீட்டில் பிரதிகள் சீரழிவதில் எரிச்சலுற்ற அவரது மனைவி ‘பேசாமல் மணிமுத்தாநதியில் கொண்டு போய்ப் போடுங்கள்’ என்றார். அதை என்னிடம் சொல்லி நண்பர் வருத்தப் பட்டபோது, நான் சொன்னேன்: ‘அதுவும் கூட சாத்தியமில்லை. மணிமுத்தாநதி வறண்டு கிடக்கிறது!’. ஒராண்டிற்குப் பின் எங்கள் மணிமுத்தாநதியில் வெள்ளம் வந்தபோது நான் நண்பரிடம் மனைவியின் யோசனையை நினைவூட்டினேன். அவர் ‘அதற்கு அவசியமில்லாமல் நான் வேறோரு நதியில் போட்டு விட்டேன்’ என்றார். விவரம் கேட்டபோது, ஒரு பிரபல விற்பனையாளரிடம் நூல்கள் தேங்கிக் கிடப்பதைப் பற்றி புலம்பியபோது, அவர் ‘இங்கேகொண்டு வந்து போடுங்கள். நான் தள்ளி விடுகிறேன்’ என்று சொன்னதை நம்பி மூட்டை கட்டி அவரது கடைக்கு லாரி சர்வீஸ் மூலம் அனுப்பி வைக்க, அவரும்சொன்னபடி தள்ளி(!) விட்டிருக்கிறார். அதாவது தன் கடைக்கு வந்தவர் போனவருக்கெல்லாம் சினிமா நோட்டீஸ் போல இலவசமாக வாரி வழங்கி விட்டார்! லாரி செலவும் சேர்ந்ததுதான் மிச்சம்.

இன்னொரு நண்பர் – குழந்தை இலக்கியப் படைப்பாளி. நிறைய கண்ணன், கோகுலம் போன்ற இதழ்களில் எழுதிப் பிரபலமானவர் – என் எச்சரிக்கையையும் மீறி சொந்தமாக அவரது நூல்களை வெளியிட்டார். அவரது தைரியத்துக்குக் காரணம் விற்பனை செய்ய அவருக்கு வாய்ப்பிருந்தது தான். அவர் ஒரு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். அதனால் தன் சக தலைமை ஆசிரியர்கள் மூலம் அவர்களது பள்ளி நூலகங்களுக்குக் கொஞ்சம் பிரதிகளை விற்க முடிந்தது. எவ்வளவு தான் அப்படி விற்று விட முடியும்? அப்பாவியான அவர் தன்னிடம் பவ்யமாய் நடந்து கொண்ட ஆசிரியர்களை நம்பி, அவர்களது வகுப்பு மாணவர்களிடம் கொஞ்சம் பிரதிகளை விற்கக் கொடுத்தார். பிரதியாக – தாமதமாக வருதல் போன்ற சலுகைகளை உத்தேசித்து, சிலர் விற்றுக் கொடுத்தார்கள். பண நெருக்கடி உள்ள சிலர், இதைப் பணம் கிடைக்கும் ஒரு வழியாக் கருதி விற்று எடுத்துக் கொண்டு ‘இன்னும் பையன்களிடமிருந்து பணம் வரவில்லை’ என்று டபாய்த்தார்கள். விஷயமறிந்து இவர் கடிந்து கொண்ட போது, மேலிடத்துக்கு ‘தன் புத்தகங்களை விற்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்’ என்று புகார் எழுதி விட்டார்கள். அதிலிருந்து மீள அவருக்குப் பெரியபாடாகி விட்டது. இந்தச் சிரமங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்ததால், சொந்தமாக நூல் வெளியிடும் விஷப் பரீட்சையில் நான் இறங்கவே இல்லை.

எவ்வளவோ துர்அதிஷ்டங்களுக்கு இடையே ஏதிர் பாராத அதிர்ஷ்டங்களும் எனக்கு நேர்வதுண்டு. அதில் இந்த நூல் வெளியீடும் ஒன்று. எழுதிப் பத்து ஆண்டுகள் ஆகியும் பிரசுரம் காணாத என் முதல் நாவலில் அக்கறை கொண்டு, என் நண்பர் குறிஞ்சிவேலன் அவர்கள், தன் நண்பரும் உறவினருமான குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பக உரிமையாளரிடம் சொல்லி வெளியிட வைத்தார். அவரும் தன் நண்பருக்காகத் தட்ட முடியாமல் அரை மனதுடன் வெளியிட்டார். என் அதிர்ஷ்டம் 1994ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நாவலுக்கான கோவை ‘கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை’ யின் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அந்த நாவலுக்கும், பதிப்பாளருக்கு 2500 ரூபாயும் கிடைக்கவே என் எழுத்தின் மீது அவருக்கு நம்பிக்கை பிறந்து தொடர்ந்து என் நூல்களை இன்று வரை அவர் வெளியிட்டு வருகிறார். பிறகு இன்னும் சில பதிப்பகங்களும் என் நூல்களை வெளியிட வாய்ப்பு கிடைக்க, நான் மட்டும் இந்த பதிப்புப் பிரச்சினையிலிருந்து தப்பித்திருக்கிறேன்.

எல்லோருக்கும் இப்படி நேர்வதில்லை தான். இன்று சில புதிய பிரசுரகர்த்தர்கள் புதிய எழுத்தாளர் என்று உதாசீனப் படுத்தாமல் தரம் பார்த்து வெளியிட்டு ஊக்குவிப்பது, பிரசுரம் காணாத தரமான படைப்பாளிகளுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகும். பிரசவம் எவ்வளவு கஷ்டமானது என்று தெரிந்திருந்தும் பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவது போல, எல்லா எழுத்தாளர்களும் சிரமம் இருந்தும் தமது நூல்களை வெளியிட விரும்புவதில் ஒரு ரகசியம் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், புகழ் பெற்றவராக இருந்தாலும், உங்கள் எழுத்து அச்சாகி நூலாக வந்தால்தான் போட்டிகளுக்கு அனுப்பி அது தேர்வு செய்யப்படும் வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் பரிசோ பிரபலமோ அப்போது தான் சாத்தியமாகும். 0

Thursday, July 14, 2011


எனது இலக்கிய அனுபவங்கள் - 6.

பத்திரிகை சந்தா

வே.சபாநாயகம்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலில் இரண்டு பத்திரிகைகள் வந்தன. ஒன்று நான் சந்தா கட்டியது; மற்றது நான் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டது.முதலாவது இதழின் ஆசிரியர் நல்ல கவிஞர். தமிழில் புலமை மிக்கவர். தமிழ் மீது கொண்ட பற்றினால் ஒரு மரபிலக்கிய சிற்றிதழைப் பத்தாண்டுகளுக்கு மேலாக பொருள் இழப்புடன் நடத்தி வருபவர். அந்தக் காலத்து ‘செந்தமிழ்ச் செல்வி’ போல தரமான மரபுக் கவிதைளும், இலக்கியக் கட்டுரைகளும் கொண்ட பத்திரிகை அது. ஆனால் புதிய நவீனக் கூறுகள் ஏதுமின்றி, அரைத்த மாவையே அரைத்தபடி பழம் பாதையில் நடை போட்டு வந்தது. எனவே அலுத்துப்போய் நிறுத்தி விட இருந்தேன். இதுவரை இரு முறை நிறுத்தி முக தாட்சண்யம் கருதி அவரது வேண்டுகோளால் புதுப்பித்து வந்தேன். இப்போது ‘சந்தா முடிந்து விட்டது. புதுப்பித்து உதவுங்கள்’ என்ற நறுக்குச் சீட்டுடன் இதழ் வந்திருந்தது. இரண்டாவது இதழ் நல்ல கட்டமைப்புடன் கூடியது. முன்னதைப்போல் ‘நியூஸ் பிரிண்டி’ல் இல்லாமல், பால் வெள்ளைத் தாளில், தெளிவான அச்சில் புகைப்படங்களுடன், வழவழப்பான கெட்டி அட்டையுடன் 25.ரூ விலை கொண்டது. அதன் ஆசிரியர் பிரபல மூத்த எழுத்தாளர். பத்திகை அனுபவம் மிக்கவர். ஆனால் இதுவும் பஞ்சாங்கம் தான். முன்னது தட்டுச்சுற்று வேட்டி, அங்கவஸ்திரம் போட்ட தமிழாசிரியர் என்றால் – பின்னது பேன்ட், ஸ்லாக் போட்ட தமிழாசிரியர். உடையில் தான் நவீனம்; உள்ளத்தில் அதே தான். இதுவுமே ஆசிரியரின் தட்ட முடியாத வேண்டுகோளால் இரண்டிரண்டு ஆண்டுக்கான சந்தாவாக இரு முறை புதுப்பித்து, இப்போது சந்தா முடிந்துதும் தொடராமல் நிறுத்தி விட்டதால், இரண்டு நினைவூட்டுகள் வந்திருந்தன. இம்முறை, இனி தாட்சண்யம் கருதி நஷ்டப்படுவதில்லை என்று தீர்மானமாக இருந்தேன். இப்போது மாத இதழாக மாறி இருந்த நிலையில் சமீபத்திய இதழுடன், எனது இலக்கிய ரசனை, நட்பு, படைப்பாக்கம், எல்லாவற்றையும் நினைவூட்டி, ‘வேலைப் பளுவால் புதுப்பிக்காது விட்டிருக்கலாம், புதிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து ஆதரிக்கவும்’ எனக் கேட்டு தனிக் கடிதமே இணக்கப் பட்டிருந்தது. என் கடந்தகால சந்தா அனுபவங்களின் கசப்பில் இந்த இரண்டு வேண்டுகோள்களையும் கிடப்பில் போட்டேன்.

ஏறக்குறைய 50 ஆண்டுளுக்கு மேலாக சிற்றிழ்களோடு தொடர்பு கொண்டிருப் பவன் நான். 1957ல் பணியில் சேர்ந்தது முதல், பார்வைக்கு வந்த எல்லா சிற்றிதழ் களுக்கும் சந்தா கட்டி வருபவன். சரஸ்வதியில் தொடங்கி தீபம், கணையாழி, கசடதபற, நடை என்று இன்றைய காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து வரை எல்லா இதழ்களுக்கும் தொடக்கம் முதலே சந்தா கட்டிப் பெற்று, முதல் இதழ் முதல் பத்திரப்படுத்தி வருபவன். இதனால் நல்ல படைப்புகளையும், தரமான படைப்பாளி களையும் அறிந்து ரசித்து வருவதுடன், எல்லா சிற்றிதழ்களையும் ஆதரித்து ஊக்கு விக்கும் திருப்தியும் கிடைத்தது. என்றாலும், கொஞ்சம் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதையும் சொல்ல வேண்டும்.‘சரஸ்வதி’ இதழை விஜயபாஸ்கரன் அவர்கள் மிகுந்த சிரமங்களுடனேயே நடத்தினார். முதல் நான்கைந்து ஆண்டுகள் அதன் இலக்கியத்தரம் கருதியும், அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்க பலம் காரணமாயும் ஆதரவு பெருகி, விற்பனையிலும் சாதனை படைத்தது. பிறகு பொருளாதார நெருக்கடியாலும், இயக்க ஆதரவின்மை யாலும் தள்ளாட ஆரம்பித்தது. விட்டு விட்டு வெளியாவதும், இரண்டு மூன்று இதழ்கள் சேர்த்து ஒரே இதழாக வருவதுமாய் ஊசலாடியது. ஆனால் சந்தா மட்டும் ஆண்டு முடிந்ததும் இதழ் கணக்கிடாமல் மாதக் கணக்கிட்டு சந்தாவைப் புதுப்பிக்கக் கேட்டபோது அதிருப்தி ஏற்பட்டது. இப்படி நிறைய சிறு பத்திரிகைகள் சந்தா விஷயத்தில் வாசகரை அதிருப்திக்கு ஆளாக்கி ஆதரவை அப்போது இழந்தன.

ஆனால் ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா அவர்கள் மட்டும் இது விஷயத்தில் கறாராக இருந்தார். ‘எழுத்து’ நின்று போய், ‘பார்வை’, ‘விருந்து’ போன்ற நூல் பிரசுர முயற்சிகளில் ஈடுபட்ட போது, எஞ்சியிருந்த சந்தாவை புதிய இதழ்களில் ஈடுகட்டி, தனது நாணயத்தை வாசகரிடையே தக்க வைத்துக் கொண்டார். பல சிற்றிதழ்கள் ஒரே இதழுடன் நின்று போனாலும் இப்படி நடந்து கொள்ள முடியாததால், புதிய அற்பாயுசு இதழ்களை ஆதரிக்கத் தயக்கம் ஏற்பட்டது. எல்லோரும் செல்லப்பா அவர்களைப் போல் தனது சொத்தை எல்லாம் இப்படி இலக்கிய வேட்ககைக்குப் பலி தர முடியாதுதான்!

சிற்றிதழ்களிலும் இழப்பைப் பொருட்படுத்தாது, சொல்லப்போனால் அதை எதிர் பார்த்தே இலட்சிய வெறியுடன் ‘கசடதபற’ போன்று சுய திருப்திக்காக நடத்தப்படுபவையும் உண்டுதான். தன்னை ‘விலையிலாக் கவிமடல்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டு ‘வானம்பாடி’ இதழை, பேராசிரியர் போன்ற வசதியான பதவிகளில் இருந்துகொண்டு இலட்சிய தாகத்துடன் இலவசமாக இதழ்களை வழங்கி சாதனை படைத்தவர்களும் இருக்கிறார்கள். ‘நடை’ என்ற இதழுக்கு நல்ல சந்தா ஆதரவு இருந்தும் காலம் தவறாமல் வெளியிட முடிந்தும், தரமான படைப்புகள் கிடைக்காததால் நிறுத்திக்கொண்டு, சந்தா மீதமிருந்தவர் களுக்கு நாணயமாய்த் திருப்பி அனுப்பினார் கவிஞர் சி.மணி அவர்கள்.

கி.ராவின் ‘கதை சொல்லி’, சந்தா ஏற்பாடு இல்லாமல் ‘எண்வழிச் சிற்றிதழா’க – இதழ் வெளியானதும், பணம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளச் செய்தது – சந்தா தாரரின் அவநம்பிக்கையைப் போக்குவதாக இருந்தது. சில சிற்றிதழ்கள் சீரான வெளிப்பாடு, பக்கஅளவு பற்றி எல்லாம் கவலைப் படாமல் ஒரு சமயம் கனத்த பக்கங்களுடனும், அடுத்த இதழ் 8,10 பக்கங்களுடன் மெலிந்தும், விலையில் மாற்றமின்றி வந்து புதிராக விளங்கின. சில சிற்றிதழ்கள் எவ்வளவு பெரியவர் களாக இருந்தாலும் சந்தா வரவில்லை என்றால் – தொடர்ந்து அனுப்பியவராய் இருந்து இப்போது மறதியில் புதுப்பிக்கவில்லை என்றாலும் நினைவூட்டு ஏதும் அனுப்பாமல் நிர்த்தாட்சண்யமாய் இதழை அனுப்புவதை நிறுத்திவிடுகிற செயல், சந்தாதாரருக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவர்களது முன்னெச்சரிக்கை மனப்பாங்கை பாராட்டவே தோன்றுகிறது.

நிறைய சிற்றிதழ்கள் நம் முகவரியை எவ்வாறோ அறிந்து, நமக்கு முன்பரிச்சயம் இல்லாதிருந்தும் நமது இலக்கிய ரசனை மீது நம்பிக்கை வைத்து அனுப்புவதுண்டு. விமர்சனத்துக்காகவும் அனுப்புவோரும் உண்டு. அப்படிப்பட்டவற்றிற்கு உடனடியாக விமர்சனத்துடன் நன்கொடையாக ஐம்பதோ, நூறோ அனுப்பி உற்சாகப்படுத்தி உள்ளேன். ஆனால் அதையே சந்தாவாகக் கணக்கிட்டு, ‘உங்கள் சந்தா தீர்ந்து விட்டது, புதுப்பிக்கவும்’ என்று கேட்டு எழுதும் போது, தொடர ஆர்வமில்லாதபடி அவற்றின் தரம் இருந்ததால் ஊக்குவிக்க முடியாது போனதுண்டு.

சிலர் விடாது அனுப்பி நம் பொறுமையைச் சோதிப்பதும், நம்மைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதும் எரிச்சலூட்டுகிறது. ‘நல்ல இலக்கியம் என்றால் எத்தனை நந்திகள் வழி மறைத்தாலும் உரிய இடம் போய்ச் சேர்ந்தே தீரும்’ என்ற புதுமைப் பித்தனின் கருத்தை சிற்றிதழ் நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ளலாம். அதை விட்டு, சந்தா கட்டாமல் தொடர்ந்து இதழைப் பெற்று வருவதைக் கடும் சொற்களால் இடித்துக் கடிதம் எழுதி வாசகரைக் குற்றவாளியாக்குவதைத் அப்படிச் செய்கிற சிற்றிதழாளர்கள் தவிர்க்கவேண்டும். தமக்குப் பயனளிக்கும் என்றால் என்ன விலை கொடுத்தும் நல்ல பொருளை வாங்க விழையும் நுகர்வோர் உணர்வை இவர்கள் மதிக்க வேண்டும்.

சிற்றிதழாளர்களின் சிரமங்கள் அவர்கள் கோணத்தில் நியாயந்தான் என்றாலும் செலவிவிடும் பணத்துக்குத் தரமான பொருளை எதிர்பார்க்கும் வாசகரின் நியாயத்தையும் பார்க்க வேண்டும்தானே? 0

Tuesday, July 05, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 5.விமர்சனமும் எதிர் வினையும்

விமர்சனம் ஒரு கலை. விமர்சனம் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் -
விமர்சனத்துக்காக அதிகமும் கண்டனக் கல்லடி பட்ட திரு.க.நா.சு அவர்களும்
திரு. வெங்கட்சாமிநாதன் அவர்களும் தான். ஆரோக்கியமான அனுசரணை மிக்க
விமர்சனங்கள் என்றால் நினைவில் நிற்பவர்கள் திரு.வல்லிக்கண்ணன் அவர்களும்
திரு.திக.சி அவர்களும்.கறாரான, தாட்சண்யம் கருதாத விமர்சனம், முன்னவர்
இருவருடையதும். 'கடிதோச்சி மெல்ல எறிக' என்ற பண்பு கொண்டவர்கள் மற்ற
இருவரும். இளம் படைப்பாளிகள் தங்கள் விமர்சனத்தால் முளையிலேயே கருகி
விடக்கூடாது என்கிற தாய் உள்ளத்துடன், பாராட்டுக்குரியவற்றை மட்டும் எடுத்துக்
காட்டி உற்சாகப்படுத்தி எழுதியதால் அவர்கள் ஏச்சு, கண்டனக் கல்லடிக்கு
ஆட்படாதவர்கள்.

எனக்கும் விமர்சனம் செய்வதில் அப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு.
கணையாழி, புதிய பார்வை இதழ்களில் வந்த எனது விமர்சனங்களால் மு.முருகேஷ்,
சூர்யகாந்தன, விழி.பா.இதயவேந்தன் போன்றோரது பாராட்டும், நட்பும் கிடைத்தன.
அதே சமயம் ஏச்சும், கண்டனமும், நட்பு இழப்பும் கூட ஏற்பட்டன.

அரசுப் பணியில் உயர்ந்த பதவியில் உள்ள ஒரு எழுத்தாளரின் முதல்
சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு முறை விமர்சனம் எழுத நேர்ந்தது. அந்த நூலை
வெளியிட்ட பதிப்பாளர் தன் உரையில், 'நூலாசிரியர் கவிஞர் என்பதால் அவரது
கதைகளில் கவித்துவம் தெரிகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். கதைகளின் வருணனை
களில் வாசிப்புக்குத் தடையாக அதீத சொல் அலங்காரமும், எதுகை மோனைகளு
மாய் பொறுமையைச் சோதிப்பதாக இருந்ததால் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. நான்
எனது விமர்சனத்தில், 'அதுதான் பிரச்சினையே! பொதுவாக கவிஞர்கள் கதை
எழுதினால் ஒரு மயக்கமும், வாசிப்பைத் தடை செய்யும் பின்னலும் இருக்கும்.
கண்ணதாசன் முதல் மு.மேத்தா, வைரமுத்து வரை இந்தக் குறை இருக்கும். அவ்வாறே
இவரது கதைகளும் இவரது கவிதைகளைப் போலவே குழப்பமாகவும் தொடர்ந்து
படிக்க முடியாமல் காலைப் பிடித்து இழுப்பதான நடை கொண்டதாகவும் உள்ளன'
என்று எழுதினேன்.

இந்த விமர்சனம் சம்மந்தப்பட்ட எழுத்தாளரைக் கோபமூட்டியதோ இல்லையோ
தெரியவில்லை. ஆனால் அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட, அவரது தாட்சண்யம்
தேவைப்பட்ட ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.
அவரைத் திருப்திப் படுத்த வேண்டி, நேரடியாக என் விமர்சனத்தை அடிக்க
முடியாமல், எனது வேறொரு விமர்சனத்தைச் சாக்கிட்டு அவர்களது இயக்கப்
பத்திரிகையில் 'எல்லாம் தெரிந்த எழுத்தாளர்' என்று தலைப்பிட்டு, சாடி
இருந்தார்கள். அந்த மாதம் வெளியாகி இருந்த ஹைஐகூ கவிஞர் மு.முருகேஷ்
தொகுத்து அளித்திருந்த 'ஒரு கோப்பை நிறைய கவிதை' என்ற நூலுக்கு எழுதிய
எனதுவிமர்சனத்தில், 'இந்த வகையில் இதுதான் முதல் முயற்சி எனலாம்' என்று
எழுதி இருந்தேன். 'பலரது ஹைகூக்களைத் தொகுத்திருக்கிற முதல் முயற்சி' என்று
நான்குறிப்பிட்டதை 'ஹைகூத்தொகுப்பே இதுதான் முதல்' என்று நான் குறிப்பிட்டதாக -
தெரியாமல் (அல்லது) தெரிந்தே கற்பித்துக் கொண்டு, 'எல்லாம் தெரிந்த இந்த
விமர்சகருக்கு இதற்கு முன் மித்ரா, அறிவுமதி போன்றவர்களின் ஹைகூத்தொகுப்புகள்
வந்திருப்பது தெரியாது போலும்!' என்று இடித்திருந்தார்கள்.

அதோடு அப்போது நான் கணையாழியில் எழுதி இருந்த 'மீட்பு' என்ற
குறுநாவலைக் குறிப்பிட்டும் எழுதி இருந்தார்கள். அந்தக் கதையிலு ஒரு புரோகிதரை
உதவி செய்வது போல் ஏமாற்றி, ஒரு முஸ்லிம் அவருடைய டி.வி.எஸ் 50 வண்டியை
அடித்துக் கொண்டு போனதைச் சித்தரித்திருந்தேன். உண்மையில் எங்கள் புரோகிதருக்கு
நேர்ந்த அனுபவம் அது! வழியில் நின்றுபோய் பரதவித்த புரோகிதருக்கு உதவுதாய்
அந்த வழியே போன ஒரு முஸ்லிம் சொல்லி, வண்டியை எடுத்துப் போனவன்
திரும்பவே இல்லை என்ற அவரது வாய்மொழியை அப்படியே கதையில் எழுதி
இருந்தேன். வர்க்கப் பார்வை கொண்ட அந்தப் பத்திரிகை, ஏமாற்றியவன் முஸ்லிம்
ஆகத்தான் இருக்க வேண்டுமா என்று அதற்கு மதச்சாயம் அடித்து என்னைக்
கண்டித்திருந்தார்கள். என் விமர்சனம் இப்படிக் கற்பிதங்களைத் தேடி எழுத
வைத்திருந்தது!

விமர்சனத்தால் நட்பை இழந்ததும் உண்டு. ஒரு இலக்கிய நண்பர். அருமையான
சிறுகதை எழுத்தாளர். நானும் அவரும் தீபம், கணையாழி இதழ்களில் ஒரே கால
கட்டத்தில் எழுதியபோது நட்பு ஏற்பட்டது. தரமான அவரது சிறுகதைகளை நான்
அவ்வப்போது வெகுவாக மனந்திறந்து பாராட்டி எழுதுவேன். நண்பர் என்னைப் போல
ஊதாரி அல்லர். கதைகளில் கையாள வேண்டிய சொல் சிக்கனத்தை அவரது விமர்சனத்
திலும் கைக் கொள்பவர். என் கதைகள் பிரசுரம் ஆகும் போது, ' உங்கள் கதையைப்
படித்தேன், பார்த்தேன்' என்ற வகையில் எழுதுவார். ஆனால் எனக்கு அதில் வருத்தம்
ஏற்பட்டதில்லை. ஆனால் ஒரே ஒரு தடவை அவரது பரிசு பெற்ற நாவலின் தொடக்கம்
பற்றி சற்று அதிருப்தியாக விமர்சித்து அவருக்கு நான் எழுதிய போது அவர் வெகுண்டு
எழுந்தார்.

ஒரு பழம் பெரும் இலக்கியப் பத்திரிகையில் ஆண்டு தோறும் நடக்கும் நாவல்
போட்டியில் ஒரு முறையேனும் பரிசு பெற வேண்டும் என்ற அவரது நீண்டநாளைய
லட்சியம் பல தோல்விகளுக்குப் பின் ஒரு தடவை நிறைவேறிற்று. அவர் முதல் பரிசு
பெற்ற செய்தியை பத்திரிகையில் பார்த்ததும், உடனே தந்தி அடித்துப பாராட்டுத்
தெரிவித்தேன். வழக்கம் போல அது அவரை மகிழ்வித்திருக்கும். ஆனால் அந்த நாவல்
பத்திரிகையில் வந்த போது முதல் அத்தியாயத்தைப் படித்து விட்டு நான் எழுதிய
அபிப்பிராயம் அவருக்குக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. மெகா பரிசு பெற்ற
ஒரு நாவல் முதல் அத்தியாயத்திலேயே அதன் பரிசுக்கான தகுதியை வாசகர்க்குத்
திருப்தி ஏற்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். கவி ஷெல்லி,
'ஒரு கவிதை தன் தொடக்க வரியிலேயே ஒரு பந்தயக் குதிரை வேடிச்சத்தம் கேட்டதும்
பாய்ந்தோடுகிறமாதிரி வாசிப்பவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். முதல்
பாய்ச்சலில் தொய்வு இருந்தால் வெற்றியை அது பாதிக்கும்' என்பார். நான் அதைக்
குறிப்பிட்டு, நண்பரின் நாவலின் முதல் அத்தியாயம் வேகமாக இல்லை, நாவலின்
தலைப்பைப் போலவே மந்த கதியில் நடக்கிறது என்று எழுதினேன். மறு தபாலில்
சீறிக்கொண்டு வந்தது நண்பரின் கடிதம். 'நீங்கள் எதைக் குறை என்று குறிப்பிட்
டிருக்கிறீர்களோ அதையே நாவலின் சிறப்பு என்று பலர் எழுதியுள்ளார்கள். நாவல்
மந்தமாக நடக்கிறது என்று எழுதியுள்ளீர்கள். இனியும் அபடித்தான் இருக்கும்'
என்று கோபப்பட்டிருந்தார். நான் பதில் எழுதினேன்: 'ஒரு வாசகனாக நான்
உண்மையில் உணர்ந்த என் அபிப்பிராயத்தை எழுதினேன். அது உங்களுக்குப்
பிடிக்கவில்லை. இனியும் இப்படித்தான் இருக்கும் என்று பயமுறுத்தி இருக்கிறீர்கள்.
எனக்கு ஆட்சேபணை இல்லை.'

பதினைந்து ஆண்டுகளாய் பாராட்டியே எழுதி வந்ததை விரும்பி ஏற்றவர் ஒரு
சின்ன வாசக அபிப்பிராயத்தை ஏற்காமல் அவரது அத்தனை ஆண்டு நட்பையும்
துறந்து விட்டார். பிறகு தொடர்பு விட்டுப் போயிற்று. 0