Showing posts with label எனது கதைகளின் கதை. Show all posts
Showing posts with label எனது கதைகளின் கதை. Show all posts

Monday, May 16, 2016

எனது கதைகளின் கதை



2. மனிதனுக்கு மனிதன்
     
1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளிக்காக சிதம்பரம் – விருத்தாசலம் பேருந்தில் எனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். முன்னிரவு. பஸ் குறுக்கு ரோடில் நின்றது. மறுநாள் தீபாவளி என்பதால் பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கூட்டமாக பேருந்தில் ஏற முண்டியடித்தார்கள். நடத்துனர் அவ்வளவு பேரையும் சமாளித்து ஏற்றிக் கொண்டு விசில் கொடுத்தார்.

பேருந்து நகரத் தொடங்கியதும் சீட்டு போடத் துவங்கினார். ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் என்னருகே வந்து அமர்ந்திருந்த ஒரு ஏழைத் தம்பதியர் பதற்றத்துடன் இருப்பதைக் கண்டேன். “கால் ரூவா குறையுது”  என்று கணவன் கவலையுடன் சொல்ல, “கண்டக்டருகிட்டே சொல்லிப்பாரேன் என்றாள் மனைவி. அதற்குள் நடத்துனர் அவர்கள் அருகில் வந்து கை நீட்டினார். கணவன் சங்கடத்துடன் நடத்துனரிடம் “ஐயா ஓரு நாலணா குறையுதுங்க.....என்றார். “அதுக்கு நா என்ன செய்யறது? யார்ட்டியாவது கேட்டுப் பாரு. இல்லேண்ணா எறங்கிக்கோ என்று சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சென்றார். கணவன் சோகமாக சுற்றுமுற்றும் பார்த்தான். மனைவி முன் பக்கம் ஓடடுநருக்கு பக்கத்து இருக்கையில் (அப்போதெல்லாம் அப்படி ஒரு இருக்கை இருந்தது) அமர்ந்திருந்த செல்வந்தர் போலக் காட்சி தந்தவரைச் சுட்டிக் காட்டி, “அங்க பாரு, நம்ப ஊரு கண்டிராக்டர் இருக்காரு. அவரக் கேட்டுப் பாரேன் என்றாள். எழுந்து நின்று அவரை அழைத்து பணிவுடன், “ஐயா! டிக்கட்டுக்கு நாலணா குறையுது. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி குடுத்து உதவினீங்கன்னா ஊர்ல போயிக் குடுத்துடுவேன் என்றான். அவர் இவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இவன் மீண்டும் கெஞ்சினான். அவர் வெறுப்புடன், “ஏம்பா எங்க போனாலும் பஞ்சப் பாட்டு தானா? எங்கிட்ட சில்லறை இல்லே! என்றார் கடுப்பாக. “இல்லேண்ணா எறக்கி உட்டுடுவாருங்க! ஊட்ல புள்ளைங்க காத்துக்கிட்டிருக்கும்.... என்றான் பரிதாபமாக. அவர் இரங்குவதாக இல்லை. மாணவனான எனக்கு மனம் துடித்தது. நடத்துனர் இறங்கச் சொல்லி கடுமை காட்டினால் நான்  அந்த நாலணாவைக் கொடுத்து விட முடிவு செய்தேன். எல்லோருக்கும் சீட்டுப் போட்டு முடிந்தும் நடத்துனர் நெருங்கி வந்து “என்னய்யா காசு தரப் போறியா, எறங்கப் போறியா? என்றார் தாட்சண்யம் காட்டாமல். அவன் பரிதாபமாக மனைவியைப் பார்த்தான். அவள் “ ஐயா. கொஞ்சம் தயவு பண்ணுங்க. எறங்குனதும் தெரிஞ்ச கடையில வாங்கிக்கு குடுத்தடறோம்  கெஞ்சினாள். “அதல்லாம் சரிப்படாது! சாவுக்கிராக்கிக்கங்க! எறங்குங்க! ‘ஓல்டான் என்ற ஊதலை ஊதினார். கணவனும் மனைவியும மிகுந்த துக்கத்துடன் தடுமாறி தம் மூட்டை முடிச்சுடன் இறங்க யத்தனித்தபோது நான் குறுக்கிட்டேன். அதற்குள் நடத்துனரின் மனிதம் உந்தியதோ என்னவோ, ஒக்காரு ஒக்காரு!. தெனம் ரெண்டு கேசு இப்படி வந்து கழுத்த அறுக்குதுங்க! என்று சலித்துக்கொண்டு, ரைட்! போலாம் என்றார். 

வேகம் குறைந்த வண்டி மீண்டும் வேகம் பிடித்தது. தம்பதிகள் நிம்மதியுடன் நடத்துனரைக் கும்பிட்டபடி அமர்ந்தனர். என்னை இந்த நிகழ்ச்சி வெகுவாக உறுத்திற்று. நடத்துனருக்கு இருக்கும் மனித நேயம் இந்த முதலாளிக்கு ஏன் இல்லாமல் போயிற்று? மனம் கனத்தது இதுவே இந்த முதலாளிக்கு பணம் குறைந்து இதே நடத்துனர் அவரை நடுக்காட்டில் இறக்கிவிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு குரூர ஆசை எழுந்தது. வீட்டுக்கு வந்ததும் உடனே அதையே கற்பித்து கதையாக எழுதினேன். அதுதான் ‘மனிதனுக்கு மனிதன் என்ற கதை.

மாணவனாக 1966இல் எழுதிய இந்தக் கதையை  1963இல் குமுதத்துக்கு அனுப்பி அது பிரசுரமும் ஆயிற்று. ஆனால் தலைப்பை மாற்றி இருந்தார்கள். ‘கொஞ்சம் குறைகிறது என்று தலைப்பிட்டிருந்தார்கள. பத்திரிகை ஆசிரியருக்கு அந்த உரிமை உண்டென்றாலும் முதலில் எரிச்சல் ஏறபட்டாலும் கதை பிரசுரமானதே – அதிலும் அப்போது பிரபலமாயிருந்த குமுதத்தில் என்று மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தக் கதைக்கு சன்மானம் 30ரூ. வந்தது. 1963ல் அது பெரிய தொகை. அப்போது பட்டதாரி ஆசிரியராய் பணியாற்றிய எனக்கு மாத ஊதியம் 180ரூ. தான்!

அடுத்த வாரம் ஆசிரியருக்கு வந்த கடிதங்களில் எனது இந்த கதை பற்றி விமர்சனங்கள வந்திருந்தன. கொஞ்சம் குறைகிறது தலைப்பு பிரமாதம்; பணம் மட்டுமல்ல, பண்பாடும் குறைகிறது என்பதைக் காட்டுகிறது- என்று ஒரு வாசகர் எழுதியிருந்தார். கதையில் பணக்காரரை அவரது மணிபர்ஸ் தொலைந்து விட்டதால் டிக்கட்டுக்கு பணம் தர முடியாத நிலையில் கண்டக்டர் அவரை தாட்சண்யமின்றி  இறக்கி விட்டுவிடுவதாக எழுதி இருந்தேன். அதைக் குறிப்பிட்டு ஒரு வாசகர் அந்தப் பகுதியின் பிரபலமான ஒரு காண்டிராக்டரை இறக்கி விடுவது யதார்த்தமாகஇல்லைஎன்று குறிப்பிட்டு விட்டுஆனாலும் இப்படிப்பட்டவர்களை தாட்ணசண்யமின்றி இறக்கிவிடத்தான் வேண்டும் என்று கதை சுட்டுவது ஆரோக்கியமானதுஎன்றும் குறிப்பிட்டிருந்தார்.

கதையில், ஏழைக்கு உதவ முயலும் ஒரு சாமியாரிடம் பக்கத்தில் இருக்கிற காண்டிராக்டர் நீங்க எதுக்கு? அவன் போடுறது வேஷம் என்று தடுக்க முயன்ற போது, சாமியார்போகட்டும்! ஏதோ மனிதனுக்கு மனிதன் என்று சொல்கிறார். பிறகு பணம் இல்லாததால் கண்டக்டர் இறங்கச் சொன்ன போது சாமியாரிடமே உதவி கேட்கிறார். சாமியார் தாட்சண்யமின்றி மறுக்கிறார். அப்போது பணக்காரர், ‘என்னங்க, மனிதனுக்கு மனிதன் இது கூடச் செய்யக் கூடாதாஎன்று அவரது வாசகத்தை அவரிடமே படிக்கிறார். சாமியார் அமைதியாக, உண்மைதான்! மனிதனுக்கு முன்பே நான் செய்து விட்டேன்என்கிறார்

இதை ஒட்டிதான் நான் கதைக்கு தலைப்பை மனிதனுக்கு மனிதன்என்று வைத்தேன். பத்திரிகை ஆசிரியர் அருமையான தலைப்பை இப்படி மாற்றி விட்டாரே என்று நான் வருத்தப்பட்ட போது, என் நண்பர் டாக்டர் பூவண்ணன், இதில் என்ன வருத்தம் வேண்டிக் கிடக்கிறது? அவர் தலைப்பை மாற்றினால் தான் என்ன? நூலாக உங்கள் கதைகளைத் தொகுத்து வெளியிடும் போது நீங்கள் விரும்புகிற மாதிரி போட்டுக் கொள்ள வேண்டியது தானே?என்றார். அதன்படி கதை எனது அடுத்த தொகுப்பில் மனிதனுக்கு மனிதன் என்றே வந்தது. 1978இல் அக்கதை தமிழக அரசின் எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூலில் புதிய பாடத் திட்டத்தின்படி, சிறுகதை இலக்கியமும் இடம் பெற வேண்டும் என்ற விதிப்படி முதன் முறையாக எனது இந்தக் கதையும் இடம் பெற்றது!  0          


Friday, December 05, 2014

எனது கதைகளின் கதை


1.எங்கள் வாத்தியார்.

கதைகள் அனைத்துமே கற்பனையால் மட்டுமே 
எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது 
ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே இருக்கும். எனது கதைகள் 
எதுவுமே கற்பனை இல்லை. நான் கண்ட, கேட்ட,  
பரவசப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே 
எழுதப்பட்டவை. தங்கத்துக்கு செம்பு சேர்ப்பது போல 
கதையின் முழுமைக்கு கற்பனை துணையாகும்.

எனது முதல் கதை எங்கள் வாத்தியார்’ கதையா 
நடைச்சித்திரமா என்று புரியாத நிலையில் எழுதப்பட்டது. 
பின்னாளில் பல ஆண்டுகளுக்குப்பின் வ.ரா’ வின் 
நடைச்சித்திரங்களை மணிக்கொடி’ படித்த பின்தான் 
நான் எழுதியது நடைச்சித்திரம்தான் என்று புரிந்தது. 
ஆனலும் அதில் சிறுகதையின் சுவாரஸ்யம் இருந்தது.

1950ல் நான் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது 
வித்துவான் சாம்பசிவ ரெட்டியார் என்றொரு தமிழாசிரியர் 
எங்களுக்குத் தமிழ் உணர்வை தனது போதனையின் ஊடே 
ஊட்டியவர். அவர் பிற தமிழாசிரியர்களிமிருந்து 
மாறுபட்டவராய் பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். நான் 
அப்போதே நிறைய கல்கி. விகடன், கதிர் போன்ற 
த்திரிகைகளையும், நாவல்கள். சிறுகதைத் தொகுப்புகள் 
என்று கிடைத்தவற்றை எல்லாம் வாசிக்கும் ரசனை 
உள்ளவன் என்பதை அறிந்த அவர் அவ்வப்போது ஆனந்த 
போதினி’யில் வெளி வந்த அவரது படைப்புகளை என்னிடம் 
காட்டுவார். 

அந்த காலகட்டத்தில் புதிய முயற்சியாக கலைப்பயிர்’ 
என்றொரு கையெழுத்துப் பத்திரிகையை பள்ளியில் 
தொடங்கி வைத்தார். அந்தப் பத்திரிகையின் ஒவியன் 
நான்தான். அதோடு நிறுத்தாமல் கதை ஒன்றையும் 
எழுதும்படியும் அவர் என்னைத் தூண்டினார். மற்ற 
மாணவர்களையும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதத் 
தூண்டினார். 

கல்கியின் முதல் படைப்பான ’ஏட்டிக்குப் போட்டி’ 
கட்டுரைத் தொகுப்பைப் படித்த பாதிப்பில், என்னை 
மிகவும் ஈர்த்த வித்தியாசமான எனது தொடக்கக் கல்வி 
ஆசான் பற்றி எழுத எண்ணி, எங்கள் வாத்தியார்’ 
என்ற தலைப்பில் எழுதினேன்.

தொடக்கமே வாசிப்பவரை ஈர்க்குமாறு இருக்க வேண்டும் 
என்று கல்கி, துமிலன் பாணியில் இப்படி ஆரம்பித்தேன்: 
சிம்ம சொப்பனம் சிங்காரவேலு’ வாத்தியரை உங்களில் 
பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ..... என்று 
தொடங்கி எங்கள் ஆசிரியரது குணாதிசயங்கள, கல்வி 
போதிப்பில் அவர் காட்டிய அக்கறை, கண்டிப்பு 
எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் எழுதினேன். 

அதுதான் என் முதல் படைப்பு. அதை கலைப்பயிர்’ 
பத்திரிகையில் வெளியிட தமிழாசிரியரிடம் கொடுத்தேன். 
அதைப் படித்த ஆசிரியர், ‘நன்றாக இருக்கிறது. இதைப் 
பத்திரிகைக்கு அனுப்பலாம். பிரசுரமாகும்.” என்றார்.

எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. அய்யா, சிறுவர்களது 
எழுத்தையும் பிரசுரிப்பார்களா?” என்று வியப்புடன் 
கேட்டேன்.நான் எழுதும் ஆனந்தபோதினி’ ஆசிரியர் 
நாரண துரைக்கண்ணன் வித்தியாசமானவர். 
பெரியவர் சிறியவர், புதியவர் பிரபலமானவர் 
என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. தரமான எழுத்து 
என்றால் அவர் விருப்புடன் ஏற்று வெளியிடுவார் அதிலும் 
மாணவர் என்றால் திறமை இருந்தால் ஊக்குவிக்கும் 
உயர்ந்த பண்பாளர். நிச்சயம் உனது இந்த படைப்பை 
வெளியிடுவார்” என்று உற்சாகமூட்டி உடனே  
ஆனந்தபோதினி’க்கு அனுப்பும் வழிமுறையைச் 
சொன்னார். அதன்படி அன்றே என் கதையை வெள்ளை 
முழுத்தாளில் ஒரு பக்கம் மட்டும் படி எடுத்து அஞ்சல் 
மூலம் அப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.
 
அடுத்த மாதமே அக்டோபர் 1950 ஆனந்தபோதினி’ இதழில் 
என் கதை பிரசுரமானது.எனக்கு பிரதி ஏதும் வரவில்லை. 
ஆனால் எங்கள் தமிழாசிரியர் அப்பத்திரிகையின் சந்தாதாரர் 
ன்பதால் அவருக்கு பிரதி வந்திருந்தது. அவர்தான் 
பார்த்துவிட்டு என்னிடம் காட்டி பாராட்டினார். அப்போதிருந்த மனநிலையை இப்போது நினத்தாலும் உடலெங்கும் 
பரவச உணர்ச்சி பரவுகிறது. பின்னாளில் காண்டேகர் 
எழுத்தில் நான் படித்த முதல் காதல், முதல் குழந்தை,  
முதல் படைப்பு எல்லாமே பரவசமானதுதான்’ 
என்றபடியான பரவசநிலையில்தான் அப்போது நான் 
இருந்தேன். 

ஆசிரியரிடம் பிரதியை வாங்கி வந்து திரும்பத் திரும்ப 
வாசித்தேன். இரவு படுக்கும் போது தலைமாட்டில் 
பல நாட்கள் வைத்திருந்தேன். இந்த பிரசுரத்தால் 
ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் 
என் மதிப்பு உயர்ந்தது.

இந்த முதல் பிரசுரம் தந்த நம்பிக்கையில தொடர்ந்து 
எழுதி நானும் எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட்டேன். 
அதற்காக என் ஆசிரியருக்கும் என் முதல் படைப்பையே 
பிரசுரித்த ஆனந்தபோதினி ஆசிரியர் திரு. நாரண 
துரைக்கண்ணன் அவர்களுக்கும் என்றும் நன்றி 
மிக்கவனாக  இருப்பேன். 

பள்ளி மாணவன் என்று அலட்சியப்படுத்தாமல் 
ஊக்குவித்த அவர்கள் இருவரது பெருந்தன்மையால்தான் 
இன்று நான் ஒரு படைப்பாளியாகத் திகழ முடிகிறது 
என்பது சத்தியம். நா.பார்த்தசாரதி, அசோகமித்திரன்  
போன்ற புகழ் பெற்ற படைப்பாளிகளின் தொடக்கமும் 
ஆனந்தபோதினி’ தான் என்று அறியும்போது என் மனம் 
பூரிக்கிறது.பின்னாளில் நான் பல பரிசுகளும் விருதுகளும் 
பெற்றபோது அதைக் கேட்டு மகிழவும் ஆசீர்வதிக்கவும் 
என் தமிழாசிரியர் வித்துவான் சாம்பசிவ ரெட்டியார் 
இல்லையே என்று மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை 
என் குறுநாவல் தொகுதி ஒன்றை அவருக்குச் சமர்ப்பித்து 
சமாதானம் அடைகிறேன்.