Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Monday, June 08, 2015

கணையாழியும் நானும்

1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப்பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல இலக்கிய சிற்றேடுகளுக்கு சந்தா கட்டி வரவழைக்கும் ஆர்வமுடையவனாக இருந்தேன். அதற்கு முன்னோடியாகத்தான் தீபமும், கணையாழியும் என் சேகரிப்பில் வந்தன. இவை இரண்டும்தான் எனக்கு இலக்கிய உலகின் நான் அறியாத சாளரங்களைத் திறந்து விட்டன.

தீபம் முழுக்க முழுக்க இலக்கியம் என்றால் கணையாழி ஆரம்பத்தில் அதன் ஆசிரியக் குழுவினரின் அரசியல் ஈடுபாடு காரணமாய் - ‘தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளி லிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும், அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்ற முடிவோடு ஆரம்பமாயிற்று. நாட்பட நாட்பட கி.கஸ்தூரி ரங்கன் அவர்கள் சென்னை வந்த பிறகு இ.பா போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் கூட்டமைப்பில் முழுக்க முழுக்க இலக்கிய இதழாகி, இன்றைய ம.ராஜேந்திரன் அவர்களது ஆர்வத்தால் புதிய புதிய அம்சங்களுடன், புதிய பரிமாணங்களுடனும் வளர்ந்து 50ஆம் ஆண்டை நெருங்கி பொன்விழா கொண்டாட உள்ளது.

முதல் பத்து இதழ்கள் கிடைக்காத நிலையில், எனது இயல்பின்படி எதுவும் தொடக்க முதலே வேண்டும் என்ற அவாவில், தீபம் எஸ். திருமலையின் யோசனைப்படி பெல்ஸ் ரோடில் இருந்த அப்போதைய சென்னை அலுவலகப் பொறுப்பில் இருந்த திரு.அசோகமித்திரன் அவர்களைச் சந்தித்து, விட்டுப் போன இதழ்களைப் பெற்றுத் தர வேண்டினேன்.

அப்போது அ.மி அவர்கள் பொறுப்பில் கணையாழி சென்னையில் தயாரிக்கப் பட்டு தில்லியில் அச்சாகி வெளிவந்து கொண்டிருந்தது. அ.மி அவர்கள் சற்றும் சுணக்கமில்லாது, அலுவலத்தில் கிடைத்தவற்றோடு விற்பனையாளர்களிடம் தேங்கிப் போன இதழ்களை எனக்காக சிரமம் மேற்கொண்டு கேட்டுப்பெற்று உதவியதை நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன். அவர்களது அந்த உதவியால் தான் கணையாழியுடான எனது உறவு வலுப்பெற்றது எனலாம்.

தில்லியில் கஸ்தூரிரங்கனுடன் இ.பாவும், ஸ்ரீரங்கம் எஸ். ஆர் என்ற பெயரில் சுஜாதா அவர்களும், தி.ஜானகிராமன் அவர்களும் இணைந்து வித்தியாசமாக கணையாழியை வெளியிட்டு வந்தனர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற சுஜாதா வாசகர்கள்களை புதிய ரசனைக்கு இட்டுச் சென்று கணையாழிக்கு ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தித் தந்தார். தி.ஜாவின் மிகச் சிறந்த ‘மோகமுள்’ போன்ற நாவல்கள் வெளிவந்து கணையாழிக்கு கனம் கூட்டின. சென்னையில் அ.மி அவர்களது பங்கு மகத்தானது. தயாரிப்பில் பெரும்பணி யாற்றியதோடு அவரும் நிறைய எழுதி கணையாழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார். கி.கஸ்தூரி ரங்கன் சென்னையில் நிரந்தரமாய்த் தங்க நேர்ந்தபோது அ.மி யுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு அ.மி கணையாழியிலிருந்து விலகிக் கொண்டார்.

கி.க சென்னை வந்த பிறகு நான் சென்ன சென்ற போதெல்லாம் அவரை கணையாழி அலுவலத்தில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இ.பா வும் உடனிருப்பார். இருவரும் என்னை ஒரு நல்ல வாசகனாக உணர்ந்து எழுத உற்சாகப்படுத்தி வந்தனர். கி.க அவர்கள் கணையாழி விமர்சனத்துக்கு வந்திருக்கும் நூல்களை, எனது சென்னை சந்திப்போதெல்லாம் தந்து விர்சனம் எழுத வைத்தார். அதன் மூலம் கணையாழி வாசகருக்கு என்னை பரிச்சயப் படுத்தினார் இதன் மூலம் கணையாழி குடும்பத்தில் ஒருவன் போல ஆனேன்.

அடுத்து கணையாழியின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாகும் வாய்ப்பு 1987இல் தொடங்கப்பட்ட ‘தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி’ என்னை வாசகர்கள் கவனிக்கும்படி செய்தது. பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட என்னுடைய ‘அசல் திரும்பவில்லை’ பெரிதும் பாராட்டுக்கு உள்ளானது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நான் எழுதிய ‘இனியொரு தடவை’, ‘யானை இளைத்தால்.....’. ‘மீட்பு’ குறுதாவல்கள் ‘தி.ஜா. நினைவு’ப் போட்டியில் தேர்வாகி வெளிவந்தன. என்னுடன் மேற்கண்ட போட்டியில் பரிசு பெற்றவர்களில் ஒருவரான ம.ராஜேந்திரன் எனது ’இனியொரு தடவை’ ரசித்துப் பாராட்டியதுடன் அவரது பொறுப்பில் கணையாழி வந்த பிறகு ‘மீட்பு’ என்ற குறுநாவலை வெளியிட்டு கணையாழியுடனான எனது தொடர்பை உற்சாகப்படுத்தினார்.

1995இல் மே மாதம் நான் வழக்கம்பொல கி.கவைச் சந்தித்தபோது, கணையாழிக்கு முப்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கணையாழியின் புதிய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுப்படுத்தும் வகையில கடந்த 30 ஆண்டு இதழ்களை வரும் ஆண்டுகளில் அறிமுகப் படுத்த நினைப்பதாகவும் அதை நான் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார்கள்.

25 ஆண்டுகள் முடிந்தபோது ‘கணையாழி 25’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக மாலன் எழுதியதைச் சுட்டிக்காட்டி, ‘கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் 1965 முதல் ஒவ்வொரு இதழாக அறிமுகப்படுத்தி எழதச் சொன்னார். ஒரு ஆண்டு இதழ்களை மாதந்தோறும் எழுதலாமே, ஒவ்வொரு இதழாக எழுதினால் முடிவே இல்லமல் போய்க்கொண்டிருக்குமே என்று நான் சொன்னபோது, அதைப்பற்றிக் கவலைப் படாமல் தொடங்குமாறு சொன்னார்.

அதன்படி, 1995ஜூன் முதல் தொடங்கி 2000 வரை எழுதினேன். அனேகமாக கணையாழியில் தொடர்ந்து நீண்ட நாட்கள் இதழ் தோறும் எழுதியது நானாகத்தான் இருப்பேன் என்று எண்ணுகிறேன். பின்னர் கணையாழியில் புதிய அம்சங்களை வெளியிட எண்ணுவதால் என் தொடரை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைக்கக் கேட்டபொழுது, நான் அதன்படி செயல்பட்டேன். ஒவ்வொரு இதழாக அறிமுகப் படுத்தியதை மாலன் தினமணிக்கதிரில் ‘படித்ததும் பிடித்ததும்’ என்ற தலைப்பில் நான் எழுப்பிய அதே சந்தேகத்தை எழுப்பி விமர்சித்திருந்தார்.

இத்தொடரை வரவேற்றாலும் கணையாழியின் வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமாய் இருந்த அசோக மித்திரன் அவர்களது அதிருப்திக்கு ஆளாக நேர்ந்தது துரதிஷ்டமானது. அவரிடத்தில் யாரோ இத்தொடரில் அவரைப் புறக்கணிப்பதாகச் சொல்லக் கேட்டு என்மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார். உண்மையில் வெகுநாட்களாக அவரது அருமையை உணர்ந்த நான் நிறைய தடவை அவரது பங்களிப்பைப் பாராட்டி எழுதி இருக்கிறேன். அவர் அதிருப்தியில் இருப்பதை அறியாமல் ஒருதடவை இலக்கிய சிந்தனை விழாவொன்றில் அவரைச் சந்தித்த நான், ‘தொடரைப் பார்க்கிறீர்களா, உங்களைப் பற்றி நிறையக் குறிப்பிட்டுள்ளேன்’ என்றேன். அவர் என்னைப் பார்க்காமல், சுமுகம் காட்டாமல் ‘எல்லாரும் அப்பபடித்தான்’ என்றார். நான் பதறிப்போய் உண்மையை உணர்த்த முற்பட்டபோதும் அவர் சமாதானம் அடையவில்லை என்பது இன்னும் உறுத்தலாவே உள்ளது.

பின்னாளில் கி.க அவர்களின் வேண்டுகோளின்படி, கணையாழி இதழ் தொகுப்பை 4 பகுதிகளாக ‘கலைஞன் பதிப்பகம்’ வெளியிட்டபோது முதல் பத்தாண்டு இதழ்களைத் தொகுத்ததும் கணையாழியிண் தொடர்பில் எனக்குக் கிடைத்த பேறாகும்.

 பின்னர் தொடர்ந்து கணையாழியில் எழுதாவிட்டாலும் அவ்வப்போது என் சிறுகதையை வெளியிட்டும் , இணையத்தில் அறிமுகப்படுத்த ‘கணையாழியின் கதை’யை எழுத வைத்தும் இப்போது பொன்விழாத் தொடக்கத்தில் ‘கணையாழியும் நானும்’ என்ற தலைப்பில் என் கணையாழி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வைத்தும் என்னைக் கௌரவப்படுத்தும் ம.ராஜேந்திரன் அன்பில் நெகிழ்கிறேன். முதல் இதழ் 40 பைசா விலையில் செய்தித்தாள் போன்று கவர்ச்சியின்றி வெளியான கணையாழி, இன்று வெகுவாகத் தோற்றத்திலும் தரத்திலும் உயர்ந்து நிற்பதைக் காணும்போது ம.ராஜேந்திரன் அவர்களது இலக்கிய ஆர்வமும் கலாரசனையும் விதந்து போற்றுதலுக்கு உரியதாகும். மேலும் பல சாதனைகளை நிகழ்த்த கணையாழி நூற்றாண்டு விழாவும் காணவேண்டும் என வாழ்த்துகிறேன்.

Thursday, November 27, 2014

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்





1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது 
திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று 
பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் 
திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. 
அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற - 
அவரது காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தவரும் 
மணிக்கொடி காலத்தவருமான எழுத்தாளர். மறு ஜன்மம்’ 
என்ற அவரது சிறுகதை மணிக்கொடி’ யில் 
வெளிவந்திருக்கிறது. ’கலைமகள்’ நாவல் போட்டியில் 
பரிசு பெற்றவர்.

கலைமகள் காரியாலயம் சிறந்த எழுத்தாளர்களது 
அருமையான படைப்புகளை 1950களில் பதிப்பித்து 
வந்தது. கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி 
கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தேனீ போன்று புதுமையான 
படைப்புகளைத் தேடி, இனம் கண்டு அறிமுப்படுத்துவதில் 
ஆர்வமிக்கவர். புதுமைப்பித்தனது சர்ச்சைக்குரிய - 
ராஜாஜி முகம் சுளித்த - சாப விமோசனம்’ போன்ற 
கதைகளை கலைமகளில் வெளியிட்டவர். அவரது தேர்வில் புதுமைப்பித்தனின் ’காஞ்சனை’, தி.ஜானகிராமனின் 
கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்ஷா’, கி.சந்திரசேகரனின் 
பச்சைக்கிளி’ ந.சிதம்பர சுப்பிரமணியனின் இதயநாதம்’,  
ஆர்வி’யின் குங்குமச் சிமிழ்’ போன்ற அருமையான 
நூல்கள் கலைமகள்’ வெளியீடாக வந்தன. அந்த 
வரிசையில் பி.எம்கண்ணன் 1943 இல் எழுதிய 
பெண் தெய்வம்’ நாவலும் வெளியானது. அந்த நாவலைப் 
படித்த நான் மிகவும் பரவசமானேன். ஆரவாரமின்றி,  
பிரச்சார நெடியில்லாமல், மனித வாழ்வின் பெருமை 
சிறுமைகளை ரசமாக எளிய மொழியில் 
வெளிப்படுத்துகிறவராக பி.எம்.கண்ணனை நான் கண்டேன். 

படித்து 60 ஆண்டுகள் ஆகியும் அந்நாவலின் 
கதைமாந்தர்களும் அவர்களது பாத்திரப்படைப்பும்,  
யதார்த்தமான குடும்பப் பிரச்சினைகளின் சித்தரிப்பும் 
என் நெஞ்சில் நிழலாடுகின்றன. 

15 க்கு மேற்பட்ட நாவல்களும்,   3 சிறுகதைத் 
தொகுப்புகளும் வெளியிட்ட பி.எம்.கண்ணன் இன்று 
முழுதுமாக மறக்கப் பட்டவர். இன்றைய தலைமுறையினர் 
மட்டுமின்றி மூத்த தலைமுறையினர் பலரும் கூட 
அவரை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.  
இல்லாததே இல்லை’ என்று சொல்லப்படுகிற கூகிளி’ல் 
கூட அவரது சிறுகதை மறு ஜன்மம்’ மணிக்கொடி’யில் 
பிரசுரமான செய்தி தவிர வேறு எதுவும் பி.எம்கண்ணனைப் 
பற்றி நிறைவான தகவல் கிடைக்கவில்லை.

எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்கள் ஆசிரியராக இருந்த 
குமுதம்’ பத்திரிகையின் ஆரம்பக் கட்டங்களில் – 
1950 களில் சிறப்பான தொடர் நாவல்கள் வெளிவந்தன. 
எஸ்.ஏ.பி யின் காதலெனும் தீவினிலே’ போன்ற 
விறுவிறுப்பான நாவல்களைத் தொடர்ந்து 
பி.எம்.கண்ணனின் நிலவே நீ சொல்’, ‘பெண்ணுக்கு 
ஒரு நீதி’ ஆகிய நாவல்கள் 1964 இல் தொடராக வந்து 
வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

ஆனந்த விகடனில் வெளிவந்த லக்ஷ்மி’ (டாக்டர் திரிபுர சுந்தரி) அவர்களின் மிதிலா விலாஸ்’ நாவல் போல 
குடும்பப் பிரச்சினைகளை, பெண்களின் வாழ்க்கையில் 
நிகழும் சிக்கல்களை முன் வைத்தே பி.எம்.கண்ணனின் 
நாவல்கள் அதிகமும் அமைந்தன. வாழ்வின் எந்த 
சம்பவத்தையும் யதார்த்தத்திலிருந்து விலகாமல் 
நம்பகத்தன்மையுடன் படைத்ததால் வெற்றிகரமான 
படைப்பாளியாக அவர் கருதப்பட்டார். 

நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற புரட்சி எதையும் 
அவர் செய்து விடவில்லைதான். ஆனால் வாழ்க்கையின் 
மீது அக்கறை கொண்டவராக, தனிமனித, குடும்ப 
பிரச்சினைகளை, சந்தர்ப்பவசத்தால் கீழ்மையில் விழும் 
மனிதர்களின் வக்கிரங்களை, அவர்களிடையே 
அபூர்வமாய்த் தென்படும் மனிதநேய மேன்மைகளை 
எல்லாம் அவர் தன் அனுபவத்தால், மனங்கொள்ளும் 
அருமையான படைப்புகளாக்கியவர்.

அவரது பாத்திரங்களில் அற்ப மனம் படைத்த, நாக்கு 
வழியே பிறரை நோகடிக்கும் மானிடர்கள், மொட்டைக் 
கடிதங்களை அனுப்பி அப்பாவி மனிதர்களின் வாழ்வைச் 
சீர்குலைக்கிற கயவர்கள் மட்டுமல்லாமல் தெய்வத்தோடு 
வைத்து வணங்கத் தக்க மாமனிதர்களும் இருக்கிறார்கள். 
இவர்களில் அதிகமும் பெண்களாகவே இருக்கிறார்கள். 
பெண்தெய்வம்’ என்கிற நாவலில் இப்படிப்பட்டவர்களைக் 
காணலாம்.கீழ்மை மனங்கொண்டு பிறரது துன்பத்தில் 
இன்பங் கண்டவர் ஒரு கட்டத்தில் மனசாட்சியின் 
உறுத்தலால் பிராயச்சித்தம் காண்பவர்களையும் 
காட்டுவது நம்பகத்தனமையோடு உள்ளது.

நாவலில் வரும் நான்கு விதமான பெண்களை அவர் 
சித்தரிப்பது ரசமானது: 

இந்தப் பெண்களால் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமே 
ஆட்டம் கொடுத்துவிட்டது. அந்தக் குடும்பத்தையே 
திரஸ்கரிக்கத் தயாராக இருக்கிறது சமூகம்!

பெண்கள் என்ன, அத்தனை சக்தி வாய்ந்தவர்களா? ஆம்! 
அவர்கள் இல்லாமல் எந்தக் காரியம் ஆகும்! நல்லதுக்கும் 
சரி, கெட்டதுக்கும் சரி, பெண் இல்லாமல் முடியுமா? ஒரு 
புருஷனின் வாழ்க்கை பூரணத்துவம் பெற, பெண் 
இல்லாவிட்டால் எப்படி? அவ்விதம் இருப்பினும் 
பெண்களில்தான் எத்தனை வகை! எத்தனைகுணம்! 
எத்தனை பேதம்!

பெண்களை பூஜித்தால் தெய்வம்; தூஷித்தால் பிசாசு! 
ஆனால் பூஜித்தாலும் தெய்வம், தூஷித்தாலும் தெய்வம் 
என்று சொல்லக்கூடிய பெண்களும் இருக்கிறர்கள். 
அவர்கள் நூற்றுக்கு ஒன்று, ஆயிரத்துக்கு ஒன்று;  
அவ்வளவுதான். அவள் பெண்தெய்வம்! இந்த இரண்டு 
வகைகள் மட்டுமின்றி, பெண்களில் இன்னும் 
ஒரு வகை உண்டு. பூஜித்தாலும் பேய், தூஷித்தாலும் 
பேய் என்கிற ஜாதி அது. அந்த ஜாதிப் பெண்களுக்கு 
மனசில் எப்போதுமே சந்தோஷம் என்பது மருந்துக்கும் 
கூட இருக்காது. இது தவிர இன்னொரு ரகமும் உண்டு. 
பூஜித்தால் பிசாசு, தூஷித்தால் தெய்வம் என்பது அது.   
இந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கொண்டாடினாலோ 
வந்தது ஆபத்து! கடிந்து கொண்டாலோ அடங்கி 
நடப்பார்கள்  - 

இப்படி வாழ்க்கையில் நாம் காணும் யதார்த்தங்களை 
பி.எம்.கண்ணனின் படைப்புகளில் காணலாம். 
 
அவரது பாத்திரச் சித்தரிப்புகளும், வர்ணனைகளும் கூட 
அவரது எழுத்துவண்ணத்தை காட்டக்கூடியவை. 
பாசாங்கற்றுதன் சாமர்த்தியத்தைக் காட்டுவதாக
இல்லாமல் நம்பகத்தன்மையுடன் கதை சொல்பவராகவே 
அவரது நாவல்களைப் படித்தபின் நமக்குத் தோன்றும். 
கதை முடிந்த பிறகு உள்ளுக்குள் அது உண்டாக்கும் 
அலையடிப்பு வாசகனைக் கரைசேர்க்கும் வல்லமை 
உடையது அவரது எழுத்து! நவீனக்கூறுகள் நிறைந்த 
இன்றைய இலக்கியச் சூழலில் அவரது படைப்புகள் 
சனாதனமாக இன்றைய தலைமுறையினருக்குத் 
தோன்றலாம். ஆனாலும் அன்றைய நாவலாசிரியர்களில் 
பி.எம்.கண்ணன் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாளி 
என்பதும் அவரது நாவல்கள் மறு வாசிப்புக்கு 
உரியன என்பதும் மறுக்க முடியாதவை.

அவரது படைப்புகள் (எனக்குக்கிடைத்தவரை) :

சிறுகதைத்தொகுப்புகள்:

1. பவழமாலை 2.தேவநாயகி 3. ஒற்றை நட்சத்திரம்.

நாவல்கள்:

1.பெண் தெய்வம் 2.மண்ணும் மங்கையும் 3.வாழ்வின் ஒளி 
4.நாகவல்லி 5.சோறும் சொர்க்கமும் 6.கன்னிகாதானம் 
7.அன்னை பூமி 8.முள் வேலி 9.காந்த மலர் 10.ஜோதி மின்னல் 
11.நிலவுத் தாமரை 12.தேவானை 13.தேன் கூடு 
14.அன்பே லட்சியம் 15. மலர் விளக்கு 16.நிலவே நீ சொல் 
17.பெண்ணுக்கு ஒரு நீதி.    

-