Monday, July 26, 2010

இவர்களது எழுத்துமுறை - 3 அகிலன்

1. நான் பகலில் முக்கியமாக அதிகாலையில் எழுதும் பழக்கமுள்ளவன். எழுதும்போது
கண்டிப்பாகத் தனிமை வேண்டும். அந்த வேளைகளில் மட்டும் யாருடைய குறுக்கீடும்
எனக்குப் பிடிப்பதில்லை. காப்பியும் தண்ணீரும் எனக்கு உற்சாகம் தருபவை.

2. அதிகாலையில் 5 மணி முதல் எழுகிறேன். ஒரு நாளைக்கு 5,6 பக்கங்கள் எழுதுவேன்.
மறுநாள் எழுதியதைப் படிப்பேன். அடிப்பேன். திருத்துவேன். சரியில்லாவிட்டால்
கூசாமல் கிழித்து எறிந்துவிட்டு, வேறு ஒன்று எழுதுவேன். பத்திரிகைக்குப் போகும்
வரை, நான் எழுதியவைகளைப் பன்முறை படித்துத் திருத்துவதுண்டு.

2. சில நாட்களில் மணிக்கணக்காகச் சிந்தித்தும்ஒரு வரிகூட எழுத முடிந்ததில்லை.
கற்பனைத் தேவியின் ஊடல், மிகுந்த தாபத்தைத் தருவதுண்டு. ஆனால் மறுநாளே அனுதாபம் கொண்டு என் வயப்பட்டுப் பல பக்கங்களாக உருவாகிச் சிரித்திடுவாள்.
பத்திரிகாசிரியர்களின் தந்திகளும் அவசரத் தூதுவர்களும் கற்பனை ஓட்டத்தைத்
தூண்டிவிடுவதும் உண்டு.

3. கதாபாத்திரங்களுக்காக நான் எங்கும் தேடிப் போய்ச் சிரமப்படும்
வழக்கமில்லை.என்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களில் என்னைப் பாதிjfபவர்கள் என்
கதாபாத்திரங்களாகிவிடுவார்கள்! வழக்கமான மனிதர்களைவிடச் சிற்சில விஷயங்களிலாவது
குண மாறுதல்கள் உள்ளவர்களே என்னை மிகவும் கவர்ந்து விடுகிறார்கள். அவர்களை நான்
தப்ப விடுவதில்லை.

4. தினமும் இத்தனை பக்கங்கள் என்று நான் கணக்குப் பார்த்து கதை எழுதுவதில்லை.
அச்சு இயந்திரங்கள், பத்திரிகை வெளிவரும் தேதி இவைகள் என்னை நெருக்கினாலும்
என்கற்பனை என்னவோ இயந்திர ரீதியில் கட்டுப்பட மறுக்கிறது. ஒவ்வொரு வாரமும், சில
தினங்கள் அதன் போக்கில் விட்டுவிட்டு, திடீரென்று அதை வளைத்துக் கொள்வேன்.
முதலில் அது என்னிடம் கண்ணாமூச்சி விளையாடும். பிறகு அகப்பட்டுக் கொள்ளும்.
கற்பனை மனத்தின் ஊடலில் எழுத்தாளர் தவிக்கும் காலம், மிகவும் விந்தைக்குரிய
காலந்தான். இளம் காதலர்களின் ஏக்கம் நிறைந்த காலத்துக்கு அதனை ஒப்பிடலாம்.

5. வாழ்கையில் சந்திக்கிற அல்லது பழகுகிற ஒரு சிலரை நான் மாற்றியோ அல்லது
கற்பனைக் கலப்புடனோ கதாபாத்திரங்களை அமைக்கிறேன். சொல்ல விரும்பும் கதையைப்
பற்றி மேலெழுந்தவாரியாக ஒரு உருவம்(Outline) அமைத்துக் கொள்ளுவேன். கதையை எழுதப்போகும் சமயத்தில், கதாபாத்திரங்களுக்குரிய பண்புகளும், குணங்களும், நிகழ்ச்சிகளும் கதையின் ஓட்டமும் தாமாகவே அமைந்துவிடுகின்ற என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது எழுதும் நிலையில் (Semi conscious or Unconscious) அரை நினைவோ அல்லது
நினைவற்ற நிலையில் இருந்தோதான் என்னுடைய கதைகள் அநேகமாக எழுதப்படுகின்றன.
உலகத்தின் ஓரத்துக்கே சென்று ஓரளவு என்னை மறந்து எழுகிறேன் என்றுகூடச்
சொல்லலாம். கொஞ்சமும் சத்தம் இல்லாத இடத்திலிருந்துதான் எழுதுவேன். நான்
எழுதும்போது என்னை மறப்பதால், யாரும் என்னை எழுதும் நேரத்தில் பார்ப்பது
இயலாது.

6. சிறுகதைகளுக்குக்குறிப்பு எடுப்பதில்லை. நாவல்களுக்கு எழுதுவதற்கு முன்பாகவே
எழுதவேண்டிய விஷயங்களைச்(Raw materials) சேகரித்துக் குறிப்பில் சேர்ப்பேன்.
நான் எழுத நினைக்கும் பாத்திரங்களோடு பழகி, அவர்களுடைய இயல்புகளையும்
குணங்களையும் எழுதப்போகும் நிகழ்ச்சிகளில் பொருத்திப் பார்ப்பேன்.பெரும்பாலும் கதை மனத்தில் உருவானதும், தலைப்பும் உருவாகிவிடுகின்ற காரணத்தால் தலைப்புகளை முன்னதாகவே நான் வைக்கிறேன். 0

இவர்களது எழுத்து முறை - 2 . புதுமைப்பித்தன்

1. அச்சுப்பிழை பார்ப்பவரை ஒதுக்கி விட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வளவு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதனால் எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். கோர்வையாக, எழுத்து ரூபத்தில் என் கதைகளை நான் அச்சில்தான் பார்த்து வருகிறேன்.

2. பிரசுரிக்கும் நோக்கமே இல்லாமல் நான் கிழித்துப்போட்ட கதைகள் எந்தனயோ. எழுத்துக்கும் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட இயந்திரம் மாதிரி தானே ஒரு இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம்.

3. நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி பெறுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்போதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்தக் கிடங்கில் இருந்து எப்போதும் நான் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இவற்றை விவரப் பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள். நான் அப்படியல்ல. ஞாபகமறதிக்கு அரிய வசதியளிப்பேன். ஆனால் ஒன்று. எழுத்து ரூபத்தில் அமையும்வரை மனதில் உறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில்அந்தக் கதைகள் யாவும் இதைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை. எழுதி முடித்த பிறகு அவை சற்று ஏமாற்றம் அதிகநேரம் நீடிப்பதில்லை.

4. கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அந்த முறையை சிறிதுகாலத்துக்குப் பிறகு கைவிட்டு விட்டேன். காரணம் அது சௌகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன்.

5. ரகுநாதன்: புதுமைப்பித்தன் கதையோ கட்டுரையோ எழுதும்போது நிதானமாக ஆர அமர இருந்து எழுதமாட்டார். பேனாவை எடுத்து விட்டால், அந்தப் பேனாவுக்குள் எங்கிருந்தோ ஒரு அசுரவேகம் வந்து புகுந்துவிடும். விறுவிறு என்று மெயில் வேகத்தில்கை ஓடும். இடையில் வெற்றிலை போட்டுக்கொள்ளும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் எழுதுவதில் ஸ்தம்பிப்பே ஏற்படாது.

(அடுத்து அகிலன்)

Monday, July 19, 2010

இவர்களது எழுத்து முறை - 1 . லா.ச.ராமாமிர்தம்

கேள்வி: எழுதுவதற்கு எவ்விதச் சூழ்நிலையை நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குப் புத்துணர்வு தரும் தூண்டுதலாக ஏதேனும் பழக்கம் உண்டா?

எனக்கு லேசாக ரத்தக்கொதிப்பு இருப்பதால் இரைச்சல் ஆவதில்லை. எனக்கு அமைதி வேண்டும். தூய வெண்மையான தாளையும், பட்டையடிக்காமல், சன்னமாய் எழுதும் பவுண்டன் பேனாவையும் நான் பெரிதும் விரும்புவேன். கதை எழுதுவதற்கென்று தனியாக எனக்கு எந்தப் பழக்கமும் கிடையாது. காலை ஏழு மணியிலி ருந்து ஒன்பது மணி வரையிலும், மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரையிலும் எனக்கு எழுத உகந்த நேரம்.

என் எழுத்தைப் பொறுத்தவரை நான் அயராத உழைப்பாளி! நான் தேடும் அந்த லயம் எனக்குக் கிட்டும் வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே திருப்பித் திருப்பி பலமுறை எழுத நான் அலுப்பதில்லை. ஒரு கதையை எழுத எனக்குக் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். அவை நினைவின் அடிவரத்தில் வருடக் கணக்கில் ஊறிக்கிடந்தவை. அம்மாதிரி இன்னும் கிடப்பவை. அவை தாம் உருப்பெறக் காத்திருக்கும் வேளையை நான் தடியால் அடித்துக் கனிய வைப்பதில்லை. அம்மாதிரி அவசரமாய் எழுதவே எனக்குத் தெரியாது.

எந்தச் சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள என் நினைவை நான் பழக்கிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வதெல்லாம் ஒன்றும் சித்து வித்தையல்ல. தளராத சாதனை காரணமான விளைவுதான். படிப்பதே தவமானால், எழுதுவது அதைவிடக் கடினமான, கடுமையான தவம். இல்லையா? ஆனால் தவமும் ஒரு பழக்கம் என்பதைத்தான் இங்கு உறுதி கூற விரும்புகிறேன்.



கேள்வி : உங்கள் படைப்பையும் வார்த்தைகளையும் பற்றி?

என் கதைக்கான வார்த்தைகள் எல்லாமே என்னோடதுன்னு சொந்தம் கொண்டாடறதில்லை. சிலநேரம் சுவரின் கிறுக்கல், தெருவில் அகஸ்மாத்தாய் காதுலே விழும் சம்பாஷணை இவையெல்லாம் கூட கதையில் வார்த்தைகளாய் அமைஞ்சிருக்கு.

கேள்வி: நீங்கள் எழுதும் முறை பற்றி?

அதை மண்உணிப் பாம்புடன் ஒப்பிடலாம். அது ஊரும் விதம், வாயால் பூமியைக் கவ்விக் கொண்டபின் உடலின் பின் பாகத்தை இழுத்துக் கொள்ளும். அது நகரும் வழியும், விதியும் இப்படித்தான். அதுபோல, கதையை ஆரம்பித்து முதல் ஒன்று, அல்லது இரண்டு பக்கங்கள் முன்னேறிய பின்னர், அதை அடித்துத் திருத்தி திரும்ப எழுதி, அன்றைய பொழுதுக்குப் படுத்த பின், மறுநாள் காலை திரும்பவும் திருத்தி, பூராத் திரும்பவும் அந்த இரண்டு பக்கங்களையும் எழுதி - அந்த இரண்டு பக்கங்கள் இந்த சிகிச்சையில் ஒரு பக்கமாய்ச் சுண்டி விடும் - கதையின் அடுத்த இரண்டு பக்கங்கள் எழுதியாகும். உடனே கதையை ஆரம்பித்திலிருந்து, அதாவது இந்த மூன்று பக்கங்களைத் திருத்தித் திரும்ப எழுதுவேன். மறுநாள் காலை இதே processing. இப்படியே எழுதி எழுதி, ஏதோ ஒரு கட்டத்தில் நடை தன் ச்ருதியில் விழுந்து விடும். அது எனக்கே அடையாளம் தெரியும். பிறகு இந்த
மண்உணிப் புழுவின் பிரயாசை அவ்வளவாகத் தேவையிருக்காது. இப்படி முதல் draft முடிந்தபின் Revision, re-writting முதலிலிருந்து. இதற்குமேல் மெருகு சாத்யமில்லை என்று கண்டபின் - அப்பாடா! கரடி ஆலிங்கனத்தி லிருந்து விடுபடுவேன்.


கதைக்கரு ஊன்றி, சிந்தனையில் ஊறி வேளிப்படத் தயாரான பின்னர் மேற் சொன்ன விதத்தில் எழுத்தில் வடித்து முடிக்க, சிறுகதைகளுக்கு எனக்கு மூன்று மாதங்களேனும் ஆகும். நான் வேகமாக எழுதவல்லேன். ஆனால் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன். ஆமை நடை. எறும்பு ஊரக் கல் குழியும். தவிர, எழுதுவதையே திரும்பத் திரும்ப எழுதுவதில் மெருகு எழுவது மட்டுன்று. எழுத்துக்கே சக்தி கூடுகிற ஜபமாலை உருட்டுவது போல், உருவேற்றுவது போல, உருவேறத் 'திரு'வேறும். திரு இந்த சந்தர்ப்பத்தில் உருவேற்றலின் சக்தி.

திரும்பத் திரும்ப எழுதுகிறேன். சொல்லுக்குக் காத்திருக்கிறேன். வார்த்தைகளளை உட்செவியில் ஒட்டுக் கேட்டு, ஓசை நயம் தட்டிப் பார்ப்பேன். வார்த்தைகளைக் கோர்ப்பது, வாக்கியங்களை ஒன்றுக்கொன்று அடுத்தடுத்து, பொருள் நயம் ஓசை நயம் குன்றாமல் அமைப்பது, பூஜைக்கு மலர் தொடுப்பற்குச் சமானம்.



( அடுத்து புதுமைப்பித்தன் )