Showing posts with label விமர்சனங்கள். Show all posts
Showing posts with label விமர்சனங்கள். Show all posts

Thursday, February 25, 2016

தடம் பதித்த சிற்றிதழ்கள் - புத்தக அறிமுகம்- நாகரத்தினம் கிருஷ்ணா


நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும் பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, .  இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம், ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம்; ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து,  நவீன தமிழிலக்கிய மரபுப்படி  இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும்  முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.  

நண்பர்  சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர்  எங்கோ எப்போதோ  படித்ததாகச்  அடிக்கடி சொல்வார்:

 இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி
அந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி
இருவரும் போடவில்லையெனில்
நீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி
எல்லோரையும் கிழி

 திரு வே. சபா நாயகம் அவர்களின் தடம் பதித்த சிற்றிதழ்கள் கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது  உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு  சிற்றிதழ் என்பது  தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும்,   களத்தில் இருக்கிற சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி.  காரணங்கள்  எதுவாயினும்  தரமான சிற்றிதழ்கள் மற்றும்  இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும்  கிடைத்திருக்கின்றன.

 சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம்,  தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை  அனைத்துமே அதனதன் பாதையில்  நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.  

 இருந்தபோதிலும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ  சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்  போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில்  எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை,   ஆசிரியரே எத்தனை பெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக   நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து,  அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.

கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன.  புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது  பிறகு  நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட  இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சாமர்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத  சிற்றிதழ்கள்  வீழ்ச்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலகுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை.  இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்.

 இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்  திரு வே. சபாநாயகம். சிறுகதைகள்,  நெடுங்கதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும்,  பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை  ஒவியம் ஆகியவற்றிலும்  தேர்ந்தவர்  விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய எழுத்துக் கலை பற்றி இவர்கள்என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்”  என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன்.  அதே ஆர்வத்துடனேயே தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.

இக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவான கட்டுரைகள். அதென்ன  இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று? என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல:

மணிக்கொடி தொடங்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால்  நின்று போன இலக்கியப் பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.

பொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு  சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதுகின்றவரின்  ஞானத்தை முன்னிலைப்படுத்தும்  நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே  நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத்  தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம்  எழுத்து அப்படி அல்ல.  தவிர அவருடைய கட்டுரைகளில்  பாகுபாடுகளில்லை. அவரால்  நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம்  வானம்பாடியென  எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி  சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது.  

 முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள்,  எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது?  இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார்?  எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன  போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவும் கடுமையான பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசடதபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும்   நிறையவே இருக்கின்றன.  இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட  ஐந்து விடயங்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:

 அ. இதற்கு முன்பு வேறொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள்  அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்குகிறார்கள்.

ஆ. தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.

இ. இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில்  எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.

ஈ தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.

நாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன.  நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடையில் வந்தனஎன்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த கசடதபறஇதழில் சா. கந்தசாமி நா.முத்துசாமி, அசோகமித்திரன் முதலான பெயர்களைச் சந்திக்கிறோம்.  கசடதபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதையென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.  

வானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது’, கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம்,  நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகருக்கு விருந்தளித்தது என்கிறார்  வே.சபா நாயகம்.  இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லைஎன்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த  குறை இருந்திருக்கிறது.

இலக்கிய வட்டம் “  முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது.  நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை, கவிதை எழுதியதாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் நம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியோரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன என்கிறார் வே.சபா நாயகம்.

இத்தொகுப்பிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று.   மானுடம் பாடும் வானம்பாடிஎனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவியரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம்,  சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல  ‘சுட்டி’  என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும்  கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ்  ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர்களுக்குக் கூடத் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.

இச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில்  முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே  நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ  அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக  கசடதபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது.  க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.

சிற்றிதழ்களைப் பற்றிய தகவல்களைக் குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என்கிற போதும் அவற்றால்  நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா  நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட்டத் தவறுவதில்லை.

மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் செல்வம்பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லலாம் (பக்கம் 11)

கசட தபறசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுக்கவிதைக்கு  அது நிறையவே செய்தது(பக்கம் 16)

ஆரோக்கியமான அருமையான விஷயங்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட்ட அன்னம் (பக்கம் 33)

ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் அஃக்என்றொரு இலக்கியப் பத்திரிகை(பக்கம் 59)

 திரு.வே. சபாநாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை.  ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்தது தான் , தவிர தொடங்கும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த  முடியாமற் போனதற்குக் காரணமாக இருக்கலாம்.  புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள்  இந்த நூலிலிருந்து கற்பதற்கு,  தெரிந்துகொள்வதற்கு  நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும்  சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை  ஒப்பிட்டுப் பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்லச் சாத்தியமெனில் சில சமரசங்களும்  செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை  வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல  ஏதேனும்  செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற்றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.

 

- நன்றி: சொல்வனம்

Monday, September 07, 2015

ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.

‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம் வெகுவாக உயர்ந்த பின் அது சோகமான வியாபாரம் அல்ல- கொழுத்த வியாபாரம்!

ஊதியம் மிகக் குறைவாக இருந்த போது, ஆசிரியர்களது வாழ்க்கை - வசதிக் குறைவாக இருந்தும் மனநிறைவோடு மனசாட்சிக்குப் பயந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பிள்ளைகளுக்குப் போதித்தார்கள். இப்போது தேவைக்கு அதிகமான ஊதியம் கிடைப்பதால், அர்ப்பணிப்பு எல்லாம் வருமானத்தை மேலும் பெருக்குவது, கற்பிப்பதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்றாகி விட்டது.

இந்நிலையில் திரு.பி.ச.குப்புசாமியின் அனுபவங்களைச் சொல்லும் இந்த ’ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ - ‘இப்படியும் கூட ஒரு ஆசிரியரால் பணியாற்ற முடியுமா?’ என்று புருவம் உயர்த்த வைக்கிறது!

இலக்கியவாதியான திரு.குப்புசாமி வித்தியாசமான ஆசிரியர்.. தொழிலை மிகவும் நேசித்தவர். ‘மலை வாழை அல்லவோ கல்வி’ என்று பிள்ளைகளுக்கு ருசி காட்டி அன்போடும் பரிவோடும் போதித்து பிள்ளகளின நேசத்தையும் பெற்றவர்களின் மதிப்பையும் பெற்றவர். இவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ஆரம்பப்பள்ளியின் குறிக்கோள் ‘குறைந்த பட்ச அன்பு – அதிக பட்சம் அமரத்துவம்’.

இந்த வாசகத்தை பள்ளி முகப்பில் பார்த்த கல்வி அதிகாரி இதன் விளக்கத்தைக் கேட்டபோது இவர் சொன்னார் ; “முடிந்தால் நமது மாணவர்களை மகாத்மா காந்தி மாதிரியும் மகாகவி பாரதி மாதிரியும் அமரத்துவம் வாய்ந்தவர்களாக ஆக்கி விடுவது; அது இயலாத பட்சத்தில், குறைந்த பட்சம் அந்த மாணவர்களிடம் அன்பாவது செலுத்துவது” -

அதிகாரிக்கு மட்டுமல்ல நமக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது! இது சாத்தியமா? ஆம் என்று, முழு நம்பிக்கையுடன் அந்த இலட்சியத்தை எட்ட அவர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அவரது ஒவ்வொரு அனுபவமும் காட்டுகிறது.

பாடப் புத்தகத்தில் இல்லாதவற்றைப் போதிக்கும் சுதந்திரம் ஆசிரியருக்கு வேண்டும் என நினைப்பவர். அதனால் தன் மாணவர்களுக்கு அவர்கள் 4,5 வகுப்பில் படிப்பவராக இருந்தும் படிப்பை ரசிக்கும் வண்ணம், விரும்பி பள்ளிக்கு வரும்படி ஆர்வமூட்ட பாடத்துக்கு இடையே இசையும் கவிதையும், இலக்கியமும் புகட்டி தன் மாணவர்களை மட்டுமல்ல தன்னையும் உயிர்ப்புடன் வைத்திருந்தவர்.

இவரது போதனா முறைக்கு ஒரு சான்று - இந்நூலில் இல்லாதது, தனிப்பட்ட முறையில் நானறிந்ததைச் சொல்லுகிறேன். ஆரம்பப்பள்ளி நிலையில் பயிலும் இளம் பிள்ளைகளுக்கு எளிதில் புரிகிற மாதிரி யதார்த்தமாக அவர் விளக்குவது ரசமானது. மகாபாரதத்தில் வரும் பகாசுரனைப் பற்றி பாடம். பகாசுரன் பிரம்மாண்டமான அரக்கன். அவனது பிரம்மாண்டத்தை இளம் நெஞ்சங்கள காட்சிப்படுத்திக் கொள்ள, இவர் அறிமுகம் செய்கிறார். “இந்தப் பகாசுரன் இருக்கிறானே அவன் பெரீய்ய மலை போல இருப்பான். அவன் எத்தனை பெரியவன் தெரியுமா? அவன் கண்களில் ஏதொ உறுத்தியது – கண் ரெப்பையை நிமிண்டினான். பார்த்தால் ஒரு கட்டை வண்டி! மூக்குத் துளையில் விரலை விட்டு இழுத்தால் ஒரு யானை புகுந்திருக்கிறது!” பிள்ளைகள் கண் அகல, அதைப் புரிந்து கொள்வார்கள் தானே?

அவர் பணியாற்றிய சின்னக் கிராமத்து மக்கள் - ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ‘வில்லேஜ் ஸ்கூல் மாஸ்டரில் கிராமத்து ஆசிரியரை வியப்பது போல - தங்கள் பிள்ளைகளிடம் இவர் ஏற்படுத்தும் மாற்றங்களை வியந்து இவரை 'மந்திரக்காரர்' என்று வியக்கிறார்கள். வீட்டில் திருடுகிற மாணவனுக்கு தினமும் ஒரு ரூபாய் தந்து திருடும் பழக்கத்திலிருந்து அவனை மீட்பதும், பள்ளிக்கு ஒழுங்காக வராத மாணவனிடம் ‘நீ நேற்று வராததால் எனக்குப் பாடம் நடத்தவே மூடு இல்லைடா’ என்று சந்தனம் பூசி அவனை தினமும் பள்ளிக்கு வரும்படி செய்வதும், விடியற்காலையில் ஒரு நாடோடிப் பெண் பாடிய மழைப்பாடலை தான் ரசித்ததுடன் தன் மாணவர்களுக்குச் சொல்லி ரசிக்க வைத்து, மாலை வீடு திரும்பும் போது கூட்டமாய் அந்தப் பாடலை உரக்கப் பாடிச் சென்றால் மழை பெய்யும் என்று சொல்ல, அதன்படி அவர்கள் பாட மழையும் பெய்கிறது என்றால் ஊர்க்காரர்கள் அவரை ‘மந்திரக்காரர்’’ என்று ஏன் சொல்ல மாட்டார்கள்?

இந்த மந்திரக்காரரின் சாதனைகள் இன்னும் பல. பணிக்காலம் முழுதும் சலிக்காமல் நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறார்,

சின்ன கிராமம் ஒன்றில், கதவில்லாத ஒரு எளிய கூரை வீட்டில் குடி இருந்தபோது வீட்டுக்கு வெளியே உலர்த்தி இருந்த வாயில் வேட்டி அவர் பள்ளிக்குச் சென்ற போது திருடு போய்விடுகிறது. ஊர்க்காரர்கள் ஒரு திருட்டுப் பழக்கம் உள்ளவனை சந்தேகிக்கிறர்கள். அவனை பஞ்சாயத்தில் நிற்க வைத்து அபராதம் விதிக்க முனைகிறார்கள். அவன் மகன் சகாதேவன் இவரிடம் படிக்கிறவன். ஊர்க்காரர்களை இவர் சமாதானப் படுத்தி அதை நிறுத்துகிறார். அன்றைய வகுப்பில் திருக்குறளில் ‘பண்புடமை’ பாடம் நடத்தும் போது, சகாதேவன் அதில் நெகிழ்ந்து தன் அப்பா திருடிய வேட்டியை அவரிடம் சேர்ப்பிக்கிறான்.

பள்ளியில் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது சைக்கிளில் தொங்கிய பைக்குள் இருந்த 5000 ரூபாய் பணக்கட்டு திருடு போய் விடுகிறது. பள்ளி விட்டு பாதி மாணவர்கள் போய் விடுகிறார்கள். ஆசிரியர்கள் இருக்கிற மாணவர்களைச் சோதனையிடுகிறார்கள். குப்புசாமி பதற்றப் படவில்லை. ‘விடுங்கள், நாளை பார்க்கலாம்’ என்று வீட்டுக்குக் கிளம்பிப் போய் விடுகிறார்.

ஆசிரியர்கள் பணம் போனது போனதுதான் என்று தீர்மானிக்கிறார்கள். மறுநாள் குப்புசாமி எல்லா வகுப்பு மாணவர்களையும் உட்கார வைத்து யாரிடம் என்றில்லாமல், மாணவர் எவரையும் பார்க்காமல் சூன்யத்திடம் பேசுவது போல பேசுகிறார். ‘பணத்தை எடுத்தவன் யார் என்று எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்’ என்றெல்லாம் உருக்கமாய்ப் பேசி, எடுத்தவன் இப்போது இன்டர்வெல் நேரத்தில் தனித்தனியாய் போய் இருந்து, யாரும் கவனிக்காதபடி, எடுத்த பணத்தை காம்பவுண்டு சுவரோரம் போட்டு விடலாம், நான் யாரிமும் சொல்லமாட்டேன்’ என்கிறார்.

ஆசிரியர்களுக்கு இந்த ஜாலத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் மந்திரஜாலம் போல பணம் சுவரோரம் போடப் படுகிறது. நம்ப முடிகிறாதா? ஆனால் குப்புசாமி அதனைச் சாதித்திருக்கிறார். இது வயது முதிர்ந்த உயர் கல்வி மாணவரிடையே நடக்குமா? கபடறியாத குழந்தைகளிடம் இந்த மாயத்தை நிகழ்த்தியுள்ளார் குப்புசாமி!

கல்வி போதனையிலும் இவர் வித்தியாசமாய்ச் சிந்தித்து மாணவர் முன்னேற பல திட்டங்களை நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் நிறைவுற்றபோது அதை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார். தலைமை ஆசிரியர் பெரிய வகுப்பை எடுக்க வேண்டும் என்ற வழக்கத்துக்கு மாறாக ஒன்றாம் வகுப்பை எடுத்துக்கொண்டு ஐந்தாம் வகுப்புவரை அவரே போதிக்கும் நடை முறையைச் செயல்படுத்தி அதன் மூலம் அந்த குறிப்பிட்ட செட் மாணவர்களது தரத்தை உயர்த்திக் காட்டுகிறார்.

‘ஆழ உழு தம்பி! அத்தனையும் பொன்னாம்’ என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரியைச் சொல்லி, 5 வருஷ காலதில் ஆழ உழலாம் என்று சக ஆசிரியர்களுக்கும் சிபாரிசு செய்கிறார். ஒரு குறிப்பிட்ட மேலதிகாரி அதை ஆட்சேபித்தும் அதை ஏற்காமல் அவருக்கும் மேலே உள்ள அதிகாரியின் ஒப்புதலையும் பாராட்டையும் பெறுகிறார். ஆசிரியருக்கு, போதனையில் சுதந்திரம் வேண்டும் என்பதை மீண்டும் நிலைநாட்டுகிறார்.

உயர், மேல்நிலைப் பள்ளிகளிலேயே சாத்தியப் படாத – தனக்கு இளமையில் பள்ளியில் வாய்க்காத - ‘உல்லாசப் பயண’ அனுபவத்தைத் தன் பள்ளிகளில் நிகழ்த்தி,. சஞ்சீவிராயர் குன்றில் காடும் கானாறும் தரும் பரவச உணர்வுகளைத் தன் மாணவர்களுக்குத் தருகிறார்.

பிள்ளைகளை அடிப்பதில் அவருக்கு சம்மதம் இல்லை. ‘படிப்பு வரவில்லை என்பதற்காக உங்களை அடிக்க மாட்டேன்’ என்று தன் மாணவர்களிடம் சொல்பவர் அவர். அதே சமயம் மாணவர்களை ஆசிரியர்கள் அவமதிப்பதையும் கடுமையாக எதிர்த்தவர். ’ஒரு வாத்தியார் தன் மாணவனை அடிக்கக் கூட அடிக்கலாம் ஆனால் அவனை அவமதிக்கக்கூடாது’ என்கிறார்.

காந்தியடிகளைப் போலவே தன் கையெழுத்து அழகாக இல்லை என்ற ஏக்கம் காரணமாக தன் மாணவர்களின் கையெழுத்தை அழகாக ஆக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தினார். காப்பி நோட்டில் எழுதிக் கொடுபதிலும் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டார். ‘அன்பு உலகை வெல்லும்’ என்று முதல் வரி அமையும். அடுத்த வரி ‘அதையே வேதம் சொல்லும்’ என்று எழுதித் தருவார் எங்கும் எதிலும் அன்பையே ஆராதித்தார். ஒரு ஆசிரியனுக்கு அது மிக அவசியம் என உணர்ந்தவர்.

எண்ணும் எழுத்தும் கற்பிப்பதோடு அல்லாமல் வாழ்வில் கொள்ள சில மேலான மனோபாவங்களையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த தன்னால் முடிந்த அளவுக்கு முயன்றிருக்கிறார். பெண்களை மதிப்பதும் போற்றுவதும் அவற்றில் பிரதானமாயிருந்தன..

கிராமப்புறங்களில் ஆசிரியராக இருப்பவர்கள் உடல்நலக் கேட்டிற்கு சிகிச்சை அளிக்கும் அடிப்படை உபாயம் தெரிந்தவர்களாயிருப்பது எவ்வளவு உத்தமமானது என்பதை உணர்ந்திருந்த இவர், தான் பணியாற்றிய இடங்களில் பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்தவனையும் ‘டெட்டனஸ்’ பாதிப்பு ஏற்பட்டவனையும் உடனடியாக மருத்துவ மனைகளில் சேர்த்துக் காப்பாற்றியது – சில இழப்புகளை அவருக்கு ஏற்படுத்தினாலும் மன நிறைவைக கொடுத்திருக்கிறது.

ஆசிரியர் தொழிலை இவர் நேசித்தாலும், ‘என்னத்துக்குஇந்த வேலைக்கு வந்தோம்?’ என்ற சலிப்பும் ஒரு காலகட்டத்தில் வந்திருக்கிறது.

‘ஆசிரியரின் அந்தஸ்து பெரிது’ என்ற ஒரு அந்தரங்கச் செருக்கு இவருக்கு எப்போதுமே உண்டு. ஆசியர்களை இழிவு படுத்துபவர் யாராக இருந்தாலும் இவருள் இருக்கும் புரட்சியாளன் பொங்கி எழுவான். மேலதிகாரிகள் – குறிப்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை, அவர்கள் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்த போது துச்சமாக எண்ணி அவமதிக்கும்போது, தைரியமில்லாத பலரும் வாய் மூடி மௌனம் காத்த போது குப்புசாமி சீறி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அதனால் இவருக்கு பணப் பயன்கள தாமதிக்கப் பட்டாலும் அற்ப பணத்துக்காக இவர் கவலைப் படவில்லை.

அரசாங்கத் திட்டமான குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் பிடித்தல், பல திட்டங்களுக்கு போதனைப் பணியைக் கவனிக்க விடாமல் ஈடு படுத்துதல் போன்றவற்றிற்கு இவர் காட்டிய தார்மீக எதிர்ப்பும், தர்க்கமும் அதிகாரிகளைப் பதில் சொல்ல முடியாமல் நழுவி விலகச் செய்துள்ளது. அதனால் அவரது பள்ளிக்கு பார்வையிடச் செல்வதை ஊழல் அதிகாரிகள் தவிர்த்தனர். நேர்மையான அதிகாரிகள் இவரது பணி அர்ப்பணிப்பையும் நியாயத்துக்குப் போராடும் தீரத்தையும் பாராட்டி அங்கீகரித்ததும் நேர்ந்திருக்கிறது.

மேலே நான் சொன்னவை வெறும் தகவல்கள்தாம். அவற்றை உயிர்த்துடிப்புடன் அனுபவிக்க நீங்களே தொகுப்பை .படித்தால் தான் முடியும். குறிப்பாக குப்புசாமியின் எழுத்துத் திறனை, பரந்துபட்ட அவரது நூலறிவை, வாசிப்பு சுகமளிக்கும் நடையழகை முழுவாசிப்பில் தான் உணரமுடியும்.

வாசிப்பினிடையே, கவித்துவம் மிக்க ஆசுகவியாய் அவர் பாடிய வெண்பாக்களையும், கம்பர், பாரதி, கவிமணி ஆகியோரின் கவிதை வரிகளையும் ரசிக்கலாம். கலிங்கத்துப்பரணியும் காரல்மார்க்ஸும் சிந்தனைக்கு விருந்தளிப்பார்கள். அவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்பதையும் அறியலாம். போதனைப் பணியில் அர்ப்பணிப்பும், குழந்தைகளிடம் பாசாங்கற்ற நேசமும், சுய கௌரவத்தைப் பேணிய அந்தரங்கச் செருக்கும் மிக்கவராக திரு.குப்புசாமி எனகிற ஆசிரியரின் இருப்பு கல்வித்துறையில் ஒரு அசாதாரணமான அரிய நிகழ்வு (A rare phenomenon) என்றே சொல்வேன்.


(கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள பி.ச.குப்புசாமியின் "ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்" என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரை)

Tuesday, June 10, 2014

கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம் -- வே.சபாநாயகம்




சோலை அருகாவூர் கவிஞர் ஆதிராஜ் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நினைவூட்டும் அற்புதமான மரபுக் கவிஞர். எளிய இனிய தமிழ்நடையில், சந்த அழகுடன் ஆற்றல்மிகு சொல் நயம்மிக்க கவிதை பாடுவதில் வல்லவர். தேவிஅவரது இரண்டாவது சிறு காவியம். சமண மத போதனையை அடிப்படையாகக் கொண்ட கதையை தன் கவித்திறத்தால் தெவிட்டாத இனிய காவியமாக்கி இருக்கிறார்.
அகிம்சையைப் பேணும் சீலம்
அன்புடன் கருணை உள்ளம்
சகிப்புடன் சமம் புரத்தல்
சத்தியம் காக்கும் தீரம்
பகிர்ந்திடும் பரந்த பண்பு
பகையல்லா வாழ்வு! தங்கள்
அகமெலாம் அறத்தின் நோக்கம்
அடைந்தவர்க்கேது துன்பம்  
- என்று மிக எளிமையாய் சமண தத்துவத்தை கதையின் ஊடே பதிவு செய்கிறார்.
 
இனம்புரியாத உணர்வுப் போராட்டதில் சிக்கினாலும், காதல் எனும் மாயைக்கு அடி பணியாமல் அறத்தின் வழி நிற்கும் நாயகன், நாயகியின் புனிதமானசோகமானது என்றாலும் - வாழ்வை வெகு இயல்பாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.  
அவரது எல்லாக் கவிதைகளிலும் இயற்கை வருணனை மனம் கவர்வதாக இருக்கும். இப்படைப்பிலும் அத்தகு காட்சிகள் நம்மை மகிழ்விப்பதைக் காணலாம் உதாரணத்துக்கு நாட்டு வளம் பற்றி பாட வந்த கவிஞர் இப்படிப் பாடுகிறார்.
வாழையும் தென்னையும் விளைவதுண்டு அங்கு  
வற்றாத பாலாற்றில் தண்ணீர் ஒடும் போகும் 
மோழையைத் தேடி அடைப்பதில்லை அவை  
மொத்தமாய் அடுத்த ஊருக்கேகும்!
 

- என்று பாலாற்றின் வளம் பற்றிச் சொல்ல வருபவர் இன்றைய பாலாற்றின் பரிதாப நிலையையும் கவலையோடு பதிவு செய்கிறார்.
காலத்தின் மேவிய கோளாறு – இன்று 
காய்ந்து கிடக்குது பாலாறு – ஐயா 
ஏலத்தில் போகுது ஆற்று மணல் – மிக 
ஆழத்தில் எங்கோ ஊற்றுப்புனல்!,
சமகாலப் பிரக்ஞையுடன் கவிஞர் பேசுவது மனதை நெகிழ்விப்பதாகும். இவ்வாறே சமணக் கருத்துக்களையும் அழகு நடையில் பதிவு செய்திருக்கிறார்.
சமணமத அன்பர்கள் அதன் பெருமையை அறிய இக்காவியத்தை ரசிப்பது போல,கவிதைக் காதலர்களும் – கவிஞரின் துள்ளும் மறியைப் போல துள்ளும்கவிஇன்பத்துக்காக நெஞ்சைப் பறி கொடுப்பார்கள்.  
நூல்    :            தேவி
ஆசிரியர்:          கவிஞர் அருகாவூர் ஆதிராஜ்
வெளியீடு:          ஸ்ரீ ஜினகாஞ்சி பதிப்பகம், காஞ்சிபுரம்
விலை  :           அறுபது ரூபாய்