கள்ளத் தொண்டையில் பாடிக் கொண்டிருந்தாயிற்று கனகாலம்.
சற்றுத் திறந்து பாடலாம் என முக்கிப்
பார்க்கையில் தொண்டை நெரிந்து போயிருப்பது புப்படுகிறது. அல்லது வெளியிலிருந்து
குரல்வளை நெரிக்கப்படுகிறது.
இந்த சுதந்திரம்கூட இல்லாமல், எல்லாம்
எதற்கென்று தோன்றுகிறது.
நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல்,
அபூர்வமான வாசக ரசனை பூச்சொரிதல்...கையைத் தூக்கிப் பிடித்து நாய்க்குக் காட்டும்
பிஸ்கட் போலச் சில பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா, அல்லது துள்ளித் துள்ளி
ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக் கண்கொள்ளாமல் கண்டு களித்தலா என்று தெரியவில்லை.
படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு
வளர்ப்பல்ல. போரிடும் திறனற்ற, கால்களுக்கிடையே வால் நுழைத்துப் பல்லிளித்து ஓடும்
நாட்டு நாய் போலும். பசித்தால் மனித மலமும் அதற்கு உணவு. கார்த்திகை மாத்த்துக் கனவு
என்பதோர் தோற்றுப் போகும் இனப்போர்.
இப்பட்டித்தான் இருந்து வந்திருக்கிறது
இந்த இருபத்தைந்தாண்டு எழுத்து வாழ்க்கை. படைப்பாளி என்பவன் வேலிக்கு வெளியே
நிற்பவன, போற்றுதலும் கவனிப்பும் மறுக்கப் பெற்று.
படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில்
வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக்கொள்கிறார் எந்த
நாணயமும் இன்றி.
பொதுச்சொத்து என்பதாலேயே அது மரியாதை
இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவளமணிப்பூண்கள், பரிவட்டம்......
என்றாலும் அலுத்துப் போகவில்லை எழுதுவது.
உங்களுக்கு அலுத்துப போகாதவரைக்கும் எழுதலாம் தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக
முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்!
நட்புடன்,
நாஞ்சில்நாடன்.
1998, டிசம்பர் 9,
கோவை-641 009.
No comments:
Post a Comment