எல்லா மொழிகளிலுமே ‘அங்கதங்களுக்கு’ ஓர் ஆயுள் வரையறை (mortality rate) உண்டு.
பதினெட்டாம் நூற்றாண்டில், ஜனாதன் ஸ்ஃப்ட் (Jonathan Swift) ’கலிவரின் பயணங்கள்’ என்று ஒரு மகத்தான சமூக அங்கத நாவலொன்று எழுதினார். அது இப்போது குழந்தைகளின்
செவ்விலயல் இலக்கியமாக வாசிக்கப்பட்டு வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு,
ஜார்ஜ ஆர்வெலின், ‘1984’, ‘விலங்குப் பண்ணை’ (Animal
Form) ஆகிய இரண்டு நாவல்களுமே மனித சுபாவம் பற்றிய உளவியல்
படைப்புகளாக அறியப்படுகிறனவே அன்றி, கம்யூனிசக் கோட்பாடு பற்றிய விமர்சனம் என்ற
கருத்தோட்டம் மறைந்து வருகிறது.
நல்லவேளை, இந்திய,
தமிழ்நாட்டு அரசியல், சமூகச்சூழ்நிலைகள் நான் எழுதிய பத்தாண்டுக் காலத்தில்
மாறுதல் இல்லாமலேயேயே இருந்து வருகின்றன என்பது இந்த நாவலின் அதிர்ஷ்டம். எந்தக்
காரணத்துக்காக இந்த அங்கதம் அன்று எழுதப்பட்டதோ அதே காரணத்துக்காக இன்றும்
அங்கதமாகவே இதைப் படிக்கலாம்.
நான் இந்த நாவலை
எழுதத் தொடங்கியது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது அரசியல் தலைவரையோ
கிண்டல் செய்வதற்காக இல்லை. அப்போது நிலவி வந்த கலாச்சார சூழ்நிலை தான் இந்த
நாவலில் சொல்லப்படாத கதநாயகன். அதன் விளைவுகள் தாம் இந்த நாவலில் பயின்று வரும்
கதை மாந்தர்கள்.
இத்தகைய கலாசார
சூழ்நிலை உருவாவதற்கு யார் காரணம்?
நாம்தான்.
நமக்குத் தகுதியான அரசியலும் கலாசாரமுந்தான் நமக்குக் கிடைக்கின்றன.
பிந்தைய
அறுபதுகளுக்குப் பிறகே, நம் கலாசார வீழ்ச்சி தொடங்கியது என்று கூறமுடியும். தாம்
சார்ந்த அரசியல் கட்சி குடியரசுத் தலைவருக்கென்று அறிவித்த வேட்பாளரையே தேர்தலில்
தோற்கடித்த பெருமை அன்றைய பாரத பிரதமரைச் சாரும். இரண்டு வேட்பாளர்களுக்குமிடையே பெரிய வேறுபாடு எதுவுமில்லை. Tweedledum and Tweedleddee தான். இருந்தாலும், குறைந்தபட்ச அரசியல், சமூகக்
கோட்பாடுகள் விடைபெற்றுக்கொண்டன என்பது அது முதற்கொண்டுதான்.
தமிழகத்தில்
சினிமாவும் அரசியலும் இரண்டறக் கலந்தன. “சினிமாவும் அரசியலும் இரண்டென்பர்
அறிவிலார், அரசியலே சினிமா என்றறிந்தபின், நிழலே நிஜம் என்றிருப்பாரே” என்ற ஓர் ‘ஆன்மீக’க் கொள்கையின் அடிப்படையில் ஒரு புது
சமயம் உருவாயிற்று. அதை உருவாக்கிய ‘சித்தர்களே’ அரசியல் தலைவர்கள் ஆனார்கள்.
இதன் வெளிப்படாக
அமைந்ததுதான் தமிழ்நாட்டின் அன்றைய, இன்றைய கலாசாரம்.
இது சமூகத்தின்
எல்லாத் துறைகளையும் பாதித்தது. இதைச் சுட்டிக்காட்டவே நான்இந்த நாவலை எழுதினேன்.
என்னுடைய இலக்கு ஸ்தாபானந்தான். தனி மனிதர்கள் அல்ல. வெளிநாட்டில் இருந்து இதை
ஆராய்வதற்காக வரும் தமிழின மூலத்தைக் கொண்ட அமெரிக்கப் பெண், இக்கலாசாரத்தில்
உய்யவேண்டுமென்றால் ஆட்கொள்ளப் படுதலைத் தவிர வேறு வழியில்லை என்ற ஓர் அவலநிலையை
எய்துதல்தான், இந்த நாவலின் துன்பியல் முடிவு.
இந்திரா
பார்த்தசாரதி
4-11-‘05
No comments:
Post a Comment