Tuesday, July 05, 2005

களஞ்சியம் - 20

எனது களஞ்சியத்திலிருந்து - 20

விவேக சிந்தாமணி விருந்து -9

காதலில் மலர்ந்த கவிதைகள்:

விவேக சிந்தாமணி ஒரு பல்சுவைக் களஞ்சியம். `எல்லாப் பொருளும் இதன் பாலுள' என்று திருக்குறளைச் சொல்வது போல, `எல்லாச் சுவையும் இதன்பால் உள' என்று விவேக சிந்தாமணியைச் சொல்லலாம். மென்மைமையான காதல் உணர்வைவைச் சித்தரிக்கும் இனிய பாடல்கள் பல இதில் உள்ளன.

ஒரு தலைவன் தன் தலைவியை இப்படிப் புகழ்கிறான்:

வண்டு மொய்த் தனைய கூந்தல்
.....மதன பண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள்
.....கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ
.....கனியொடு கலந்த பாகோ
அண்டமா முனிவர்க்கு எல்லாம்
.....அமுதம் என்று அளிக்கலாமே.

`என் காதலி வண்டுகள் மொய்த்தாற் போன்ற கூந்தலை உடையவள்; கயல்மீனைப் போன்ற விழிகளை உடையவள்; கிளியின் பேச்சு போன்ற மொழியினள்; `மதனக் களஞ்சியம்' என்ற கொடி போன்ற இவளது வாயின் நீர் கற்கண்டோ, சர்க்கரையோ, தேனோ, பழத்தோடு கூடிய பாகோ அறியேன். ஆனாலும் அதனைத் தேவர்கள் முனிவர் எல்லோருக்கும் அமுதம் என்று கொடுக்கலாம்' என்று புகழ்ந்துரைக்கிறான்.
(பண்டாரம்- களஞ்சியம்)

அதோடு மட்டுமல்ல அவள் மன்மதனும் மயங்கிப் போகும் மயக்கத்தினைத் தரக் கூடியவள் என்கிறான்:

அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகம் கண்டுஎதிர் செஞ்சிலை மாறனும்
கலகமே செயும் கண் இதுவாம் என
மலரம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்.

`ஒருதடவை - கரும்பு வில்லை உடையவனான மன்மதன், என் காதலியைப் பார்த்தான். வாளாயுதத்தைப் போன்ற கண்களை உடைய அவளது அழகிய நெற்றியில் உள்ள பொட்டின் அழகைக் கண்டான். இவளுடைய கண்கள் சாதாரணமானவை அல்ல - கலகம் விளைவிப்பவை, இவள் முன்னே நம் அம்புகளுக்கு வேலை இல்லை எனக் கருதி, தன் கையில் உள்ள மலர் அம்புகள் ஐந்தையும் அவள் முன்னர் வைத்து வணங்கினான் தெரியுமா?' என்கிறான்.
( அலகு வாள் - வாளாயுதம்; ஆயிழை - பெண்; நுதல் - நெற்றி; செஞ்சிலை - செவ்விய வில்; மாறன் - மன்மதன் )

அவளை முதன் முறையாகக் கண்டபோது தனக்கு ஏற்பட்ட கிளர்ச்சியையும், மயக்கத்தையும் சொல்கிறான்:

அருகில் இவள், அருகில் இவள், அருகில் வர உருகும்,
கரிய குழல் மேனி இவள் கானமயில் சாயல்
பெரிய தனம் சிறிய இடை பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.

`கரிய நிறம் கொண்ட கூந்தலையும், அழகிய மேனியையும், கானகத்து மயிலினை ஒத்த சாயலையும், பெரிய மார்பகங்களையும், சிறுத்த இடையினையும் கொண்ட அவள் அருகில்வர அருகில்வர உள்ளம் அப்படியே உருகிப் போகும். ஐயோ, இவள் தெருவில் நிற்கும் நிலையை நோக்கில் தெய்வப்பெண் என்றே மயங்கிச் சொல்லுதல் வேண்டும்` என உருகிப் பேசுகிறான். கம்பன் ராமனை `ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என்று உருகுவதை நினைவூட்டுகிறது. சந்தமும் கூட கம்பனது சந்தமே.

அவள் அருகில் வந்ததும் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து ரசிக்கிறான். அவளது நாசியைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் வருகிறது. அதை அவளிடமே கேட்கிறான்:

கொல்உலை வேல் கயல் கண்
.....கொவ்வையங் கனிவாய் மாதே!
நல்அணி மெய்யில் பூண்டு
.....நாசிகா பரண மீதில்
சொல்அரில் குன்றி தேடிச்
.....சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும்
.....புதைத்தனள் வெண்முத்து என்றாள்.

''கொல்லன் உலைக்களத்தில் காய்ச்சிக் கூர்மை செய்யப்பட்ட வேலாயுதத்தையும், கயல்மீனையும் போன்ற கண்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையையும் உடைய பெண்ணே! நல்ல ஆபரணங்களை தேகத்தில் அணிந்து மூக்கில் மட்டும் குற்றம் பொருந்திய குன்றிமணியை அணிந்து கொண்ட காரணம் யாதோ?"

அதற்கு அந்தப் பெண் வெட்கம் கொண்டு தனது கண்களையும் சிவந்த வாயையும் மூடிக் கொண்டு, ''அது குன்றிமணி அன்று; வெண்மை நிறமுடய முத்து'' என்றாள்.

அப்பெண்ணின் வாய்ச் சிவப்பாலும் கண் மையின் கருப்பாலும் வெண்மையான முத்து குன்றிமணி போலத் தோன்றியது என்பது குறிப்பு. அவள் வாயையும் கண்ணையும் மூடியதும், முத்து வெண்மையாக விளங்கியது. (அரில் - குற்றம்)

இன்னும் இது போன்ற நயமான அநேக சிருங்கார ரசப் பாடல்கள் நிறைந் துள்ள இலக்கியப்
பெட்டகம் விவேக சிந்தாமணி.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.

No comments: