Tuesday, November 28, 2006

எனது களஞ்சியத்திலிருந்து - 24

பாராட்டுக் கவி

கவிஞர்கள் எதையும் மிகைப் படுத்துபவர்கள் என்பது பொதுவான கருத்து. பாராட்டுவதானாலும் ஏசுவதானாலும் எதிலும் அதிகம்தான்.பரிசில் வழங்கியவர் மட்டுமல்ல பசிக்கு வயிறார உணவிட்டாலும் பாராட்டிப் பாடல் எழுதி விடுவார்கள்.

அவ்வையார் இப்படி அற்ப உணவுக்கும் பாராட்டுக் கவி எழுதுபவர். அவரே சொல்கிறார்,

'உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்' -என்று.

ஒருமுறை மழையில் நனைந்து, மிகுந்த பசியோடு பாரி மளிர் அங்கவை, சங்கவை வாழும் குடிசைக்குச் செல்கிறார்.அந்தப் பெண்கள் அவருக்கு மாற்றுடை அளித்து, குளிருக்கு கணப்பு மூட்டிக் குளிர் போக்கி, முருங்கையுடன் சமைத்த கேழ்வரகுக் களியினையும் தந்தனர். அதை
வியந்து பாடுகிறார்."என்ன இந்தப் பெண்கள் கீரைக்கறி என்று சொல்லி, அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் குளிரில் வெப்பமுடை யதாய், நல்ல மணமுடையதாய் நெய் நிறைய பெய்து, வேண்டுமட்டும் உண்டாலும் கெடுதியை உண்டாக்காததாய் அமுதத்தை அளித்துள்ளார் களே!" என்று வியக்கிறார்.

"வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செரிந்த கையார்".

(வெய்தாய் - வெப்ப முடையதாய்; நறுவிதாய் - நல்ல மணமுள்ளதாய்)

இதேபோல் இன்னொரு பாராட்டுக் கவி. வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்பவன் விரும்பி அளித்த விருந்தை வியந்து பாடிய பாடல் அது. சாதாரண வரிகரிசிச் சோறு; கத்தரிக்காய்ப் பொரியல்; மிகவும் புளித்த மோர். இவ்வளவுதான் அந்த விருந்து! இந்த விருந்துக்கு ஈடாக உலகம் முழுவதையும் தந்தாலும் தகும் என்கிறது பாடல்.

"வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்,
முரமுரெனவே புளித்த மோரும், - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து இட்ட சோறு
எல்லா உலகும்பெறும்".

(வழுதுணங்காய் - கத்தரிக்காய்; முரமுரென - நுரை உண்டாகுமாறு புளித்த;
புரிந்து - விரும்பி)

கீரைக்கறியின் மகத்துவம் பற்றி நாமறிந்த நம்காலத்துக் கவிமணியும் ஒரு மணியான கவிதையை எழுதியிருக்கிறார்.

ஆரைப்பதி என்கிற ஊரில் அவர் விரும்பி உண்ட கீரைக்கறிக்கு அவர் படிய பாராட்டுக் கவி இது:

"பச்சடியும் தீண்டேன் பருப்பினிலும் கைவையேன்
கிச்சடியும் தீண்டேன் கிழங்கு மெடேன் - மெச்சு புகழ்
ஆரைப்பதியில் அவித்துக் கடைந்து வைத்த
கீரைக்கறி கிடைக்குமேல்."

வெண்பா இவரிடம் வெகு சரசமாய் விளையாடும்.

சாப்பாடு என்றில்லை, புலவர்க்குப் பிடித்த எதுவும் பாராட்டுக் கவி பெறும்.'பொடி'விஷயம் கூடப் பாராட்டுப் பெறுகிறது -தமிழ்த்தாத்தா வின் 'என்சரித்திரத்'தில்.

அய்யரின் ஆசான் தியாகராச செட்டியார் பொடி போடும் பழக்கம் உடையவர். ஆசானுக்காக திருவானைக்காவலில் சோமசுந்தரம் பிள்ளை என்பவரின் கடைக்கு அடிக்கடி சென்று பொடிவாங்கி வருவது வழக்கம். பொடிக்கடை சோமசுந்தரம் பிள்ளை செட்டியாரிடம் பாடம் கேட்டவர். அவர் தயாரிக்கும் பொடி மிகவும் பிரபலமானது. சுடச்சுட அப்பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்வதற்காகப் பலர் அவர் கடையில் காத்திருப்பார் களாம். வெளியூர்களுக்கும் அவரது பொடிக்கு நல்ல டிமாண்ட்.

செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் பொடி மகிமை யைக் குறிப்பிட்டு பாடல் அமைக்க வேண்டும் என்று அய்யரிடம் சொல்லியிருக்கிறார். அதன்படி செட்டியாரும் சாமிநாத அய்யரும் சேர்ந்து ஒரு பாடலை இயற்றினார்கள். அப் பாடல்:

'கொடியணி மாடமோங்கி குலவுசீர் ஆனைக்காவில்
படியினி லுள்ளார் செய்த பாக்கிய மனையார் செங்கை
தொடியினர் மதனன் சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே".


சாப்பாடு சுமாராய் இருந்தாலும் பாராட்டிச் சொல்லுவது மரபு. 'பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நாகரிகம்'பற்றிப் பேசுவார் திருவள்ளு வர். சாப்பாடு மோசமாக இருந்தால், பாராட்டாது விட்டாலும் இகழ்ந்து சொல்வதில்லை. ஆனால் ஒரு புலவர் ஒரு வீட்டில் தனக்களித்த உணவு பற்றி மிகவும் இகழ்ந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

அவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்கிற பெரும் புலவர். பிறக்கும் போதே அவருக்குப் பார்வை இல்லை.ஆனால் பிற்காலத்தில்
சிறந்த கவிஞராகவும் விளங்கியதால் 'அந்தகக்கவி' என்றழைக்கப் பட்டவர். இவர் 'சீட்டுக் கவி' பாடுவதில் வல்லவர். நகைச்சுவை ததும்பப் பாடல் எழுதுவதில் புகழ் பெற்றவர்.

நாகதேவன் என்பவன் இவருக்கு உணவளித்தான். மகா மோசமான சாப்பாடு அது. மறக்கமுடியாத அந்த சாப்பாடு குறித்துக் கேலியும் குமுறலுமாய் இப்படிப் பாடினார்:

"வாயிலொன்று கல்லுமொன்று நெல்லுமான அன்னமும்,
வாடலாக ஆறு மாதம் வைத்திருந்த கத்தரிக்
காயிலிட்ட கறியும், உப்பி லாத கஞ்சி அன்னமும்.
காம்பொடிந்த ஓர் அகப்பை கைப் பிடித்த வண்ணமும்,
தூயதாகத் துலக்கலின்றி அழுக்கடைந்த பாத்திரம்
தூக்கியுள்ள அசுத்த நீர் துறுத்து வந்த நேர்த்தியும்,
ஓயலின்றி ஈக்கள் வீழ்ந்து மொலுமொலென்ற சட்டியும்,
உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண் மறப்பதில்லையே!

( தூக்கியுள்ள - முகர்ந்துள்ள; துறு - அழுக்கு )

நகைச்சுவையும், துள்ளும் சந்தமும், திட்டினாலும் பாடல் அழகுக்காகவே ரசிக்கலாம் தானே?

'போற்றினும் போற்றுவர், பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர்'அல்லவா புலவர்கள்? பொருள் என்று இல்லாது சாப்பாட்டுக்கும் அதுவே புலவர் மரபு என்பதைக் காட்டுகிறது பாடல்.

No comments: