Saturday, October 13, 2007

கால நதிக்கரையில் - 24

கால நதிக்கரையில் - 24

- வே.சபாநாயகம்

கீழ மந்தையிலிருந்து கிளம்பி நடுத்தெருவை நோக்கி நடந்தார்கள். சிதம்பரம் வாழ்ந்த வீடு அந்தத் தெருவில்தான் நடுப் பகுதியில் இருந்தது. தெருமுனையில் இருந்த முதல் வீட்டைப் பார்த்ததும் சிதம்பரத்துக்கு அந்த வீட்டின் மணியப் பிள்ளை ஞாபகத்துக்கு வந்தது.

"மணியப் பிள்ளை இருக்காரா மருது?" என்று கேட்டார்.

"இந்தத் தெருவின் அரவமே அவர் போனதுக்கப்றம் போச்சு!" என்றான் மருது.

"என்னப்பா சொல்றே? மணியப் பிள்ளை இல்லியா?" என்று சற்றே பதற்றத்து டன் கேட்டார். "வயதுகூட அதிகம் இருக்காதே! என்னைவிட ரெண்டு மூணு வருஷம்தானே பெரியவர்?"

"சாகிறதுக்கு வயசு ஒரு காரணமா? இது அவுரு தானே தேடிக்கிட்ட முடிவு. மணியப் பிள்ளை தற்கொல பண்ணிக்கிட்டாரு!" என்றான் மருது சாவதானமாக.

"அய்யய்ய! எப்பிடிப்பா - ஏன்?" என்று சிதம்பரம் பதறினார்.

"எதோ வீட்லே தகராறு! வருமானமுமில்லே. வறுமைதான் முக்கியமான காரண மாயிருக்கணும். அவருதான் ரோஷக்கார மனுஷர்னு உங்குளுக்குத் தெரியுமே! 'குடும்பத்த வச்சிக் காப்பாத்த வக்கில்லாத ஆளு' ன்னு அவரோட புள்ளைகளும் பொண்டாட்டியும் நினைச்சது அவருக்குத் தாங்க முடியாமப் போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. "

"அப்டியெல்லாம் மனசு தளர்ரவரில்லியே! மாட்டுத் தரகெல்லாம் பண்ணிக்கிட்டிருந்தாரே!"

"அதுலே ஒண்ணும் பெருசா வரல்லே. குடும்பமும் பெரிசாயிடுச்சு. ஒருத்தர் கிட்ட வேலைக்குப் போறதுக்கும் வரட்டுக் கௌரவம்.... விதி முடிஞ்சுட்டா எதாவது ஒரு எமப்பழி" என்றான் மருது வேதாந்தமாக.

சிதம்பரத்துக்கு மனது கனத்தது. எவ்வளவு வெகுளியான நல்ல மனிதர்! தான் அதிகம் படிக்காததால் சிதம்பரம் படித்திருப்பது பற்றி அவரிடம் ஒரு மரியாதை. விடு முறையில் அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தால் போதும், தேடி ஓடி வந்துவிடுவார்.

ஆள் வாட்டசாட்டமாக, சிவந்த மேனியுடன் நல்ல உடல் கட்டுடன் இருப்பார். தலை முழுதுமாக வழுக்கை விழுந்து பக்க வாட்டில் இருபுறமும் கொஞ்சமாக முடி இருக்கும். நீளமான கிருதா; இடுப்பில் ஜிப் வைத்த பச்சை சிங்கப்பூர் பெல்ட்; நீல வண்ணத்தில் கட்டம் போட்ட கைலியும் கலர் முண்டா பனியனுமாய், பார்த்தால் சாயபு என்றே நினைக்கத் தோன்றும். வலது முண்டாவில் சிவப்புக் கயிற்றில் கோர்த்த வெள்ளித் தாயத்து; எப்போதும் ஐந்தாறு நாள் தாடி - அரிசியும் உளுந்து கலந்த

மாதிரி. வெற்றிலைக் காவியேறிய பற்களும், சதா மெல்லப்படும் வெற்றிலைப் பாக்கால் சிவந்த வாயுமாக எப்போதும் எங்கேயாவது போய்க் கொண்டும் வந்து கொண்டும்தான் இருப்பார்.

ஊரில் எதற்கும் நியாயம் கேட்கிற முதல் ஆள் அவர்தான். பாரபட்சமாகப் பெரிய மனிதர்கள் யார் நடந்து கொண்டாலும் துணிச்சலாகப் பொது இடத்தில் வைத்தே கேட்டு அவர்களது அதிருப்தியைச் சம்பாதித்திருப்பவர். அவரிடம் எல்லோருக்கும் எப்பொழுதும் ஒருவித தார்மீகப் பயம் இருக்கும். உரிமையை விட்டுக் கொடுத்து யாருடைய தாட்சண்யத்தையும் யாசித்து நிற்பவரில்லை. நமக்கு ஏன் என்று எதையும் விட்டு விடாதவர். எதற்கும் மறுப்பும் சமயத்தில் விதண்டாவாதமும் பண்ணுகிற சுபாவம். அநேகமாக எதனோடும் யாரோடும் ஒத்துப் போகாத மனப் போக்கு.

சிதம்பரத்தின் அண்ணன் உருவாக்கிய கைப்பந்து கழகத்தில் உறுப்பினர் ஆக லேசில் அவரைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை. கடைசியில் அண்ணனின் மென்மையான அணுகுமுறையால் தான் சேர்க்க முடிந்தது. அண்ணன் வேலைக்குப் போன பிறகு கைப்பந்துக் கழகம் செயலற்றுப் போனதும், மற்றவர்கள்மீது நம்பிக்கை இழந்தவராய், பந்தாடிய வலையிலும் பந்திலும் தன் பங்குக்கு உரியதைத் தந்தாக வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தது நினைவுக்கு வருகிறது. பிறகு சிதம்பரம் தலையிட்டு, அதெல்லாம் சாத்யமில்லை விட்டு விடுங்கள் என்று சமாதானப் படுத்தியபிறகுதான் ஓய்ந்தார்.

இப்படி சில முரட்டுத்தனத்தினால் அவரது வெள்ளை உள்ளமும் நேர்மையான போக்கும் எடுபடாமல், பலருக்கு எரிச்சலையும் அவரைச் சீண்டி வேடிக்கை பார்க்கிற எண்ணத்தையும் உருவாக்கி இருந்தது. அதில் முக்கியமானவர் அவரது எதிர் வீட்டு நாராயணசாமி பிள்ளை.

நாராயணசாமி பிள்ளையும் விதண்டாவாதப் பேர்வழிதான். மணியப் பிள்ளையின் வயதை ஒத்தவர். பிள்ளைப் பிராயத்திலிருந்தே மணியப் பிள்ளையைச் சீண்டி ரசிப்பதில் ஒரு திருப்தி. எதிர்வீடு வேறே. தினமும் பார்த்துக் கொண்டாக வேண்டிய சூழ்நிலை. மணியப் பிள்ளை எது செய்தாலும், தேவையே இல்லாமல் நக்கலான விமர்சனம் அவரிடமிருந்து கிளம்பி மணியப் பிள்ளையை எரிச்சலூட்டும். நேரிடை விமர்சனமாக இல்லாமல் ஜாடைப் பேச்சாக இருப்பதால் நேரிட்டு அவரிடம் சண்டைக்குப் போக முடியாத நிலையில் மணியப் பிள்ளை உரத்துத் திட்டியபடி தெருவில் நடப்பார். சிதம்பரம் ஊரில் இருந்தால் அவரிடம் போய்ப் புகார் செய்வார். ஊரில் தன்னிடம் அனுதாபம் காட்டக் கூடியவர் என்பதால் சிதம்பரத்திடம்தான் தனது குறைகளையும் புகார்களையும் சொல்லுவார்.

மணியப்பிள்ளை தன் தரகுத் தொழில் காரணமாய் பகல் முழுதும் வெயிலில் நிற்க வேண்டி இருந்ததால், வெகுநாட்களாய்ச் சேமித்து ஒரு கருப்பு குளிர் கண்ணாடியை வாங்கி அணிந்து கொண்டார். அன்று மாலை இருட்டும் நேரத்தில் வீடு திரும்பியபோது கண்ணாடியைக் கழற்றாமலே தெருவில் வந்திருக்கிறார். தன் வீட்டில் இருந்தபடி அதைப் பார்த்த நாராயணசாமி பிள்ளை யாரிடமோ பேசுகிற மாதிரி எதிர்ப்பக்கம் திரும்பிக் கொண்டு "என்னுமோ சொல்லுவாங்களே 'எதுக்கோ வாழ்வு வந்தா அர்த்தராத்திரியிலே கொட பிடிக்கும்னு' அதும் மாதிரி இருக்கு" என்று நக்கல் செய்ததுடன், "எங்கியாவது சந்தையிலே அஞ்சு பத்துக்குக் கெடைச்சிருக்கும்" என்று வேறு சொல்லவே மணியப்பிள்ளைக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது. உடனே திரும்பி மூன்று வீடுகள் தள்ளி இருந்த சிதம்பரத்திடம் வந்தார்.

கருப்புக் கண்ணாடியைக் கழற்றி சிதம்பரத்திடம் நீட்டி. " இதப் பாரு சிதம்பரம், இது என்னா வெலை பொறும்?" என்று கேட்டார். சிதம்பரம் வாங்கிப் பார்த்து "நல்ல ஒசத்திக் கண்ணாடி மாதிரி இருக்கே! என்னா அம்பது ரூபா இருக்குமா?" என்றார். மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்து விட்டது. உண்மையில அவர் கொடுத்த விலை ஐம்பதுதான். "என்ன இருந்தாலும் பெரிய மனுஷங்க, படிச்சவங்கண்ணா அது தனிதான். உங்குளுக்கு இதோட மதிப்பும் வெலையும் தெரியுது. ஆனா செல நட்டா முட்டிக்கு, படிக்காத முண்டங்களுக்கு - குண்டு சட்டிக் குள்ள குதிர ஓட்டற ஜன்மத்துக்குத் தெரியலியே! என்னுமோ சொல்லுவாங்களே 'எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை'ன்னு அதும் மாதிரி பேசுதுங்க. இது அஞ்சோ பத்தோதான் இருக்குமாம். உச்சந்தல எரிய வெயில்ல நிண்ணு சம்பாரிச்சி, ஆசப்பட்ட பொருள வாங்கிகிட்டு வந்தா சில வக்கத்ததுங்களுக்கு வயிறு எரியுது" என்று தெருவே கேட்குமாறு உரத்துச் சத்தமிட்டார். சிதம்பரம் அவரை சமாதானப் படுத்தி 'யார் அப்படிச் சொன்னது என்ன விவரம்' என்று கேட்டதும் "ஆரு சொல்லு வாங்க? எல்லாம் அந்த ஆம்பளக் காந்தாரிதான். நான் நல்லதா ஒண்ண அனுபவிச்சா அவனுக்குப் பொறுக்காதே!" என்று அழாத குறையாய் சிதம்பரத்த்¢டம் நடந்ததைச் சொன்னார். சிதம்பரம் அவரை ஆசுவாசப் படுத்தி ஆறுதல் கூறி அனுப்பினார்.

மணியப் பிள்ளையை இன்னொரு விதத்திலும் நாராயணசாமி பிள்ளை சீண்டுவார். ஊரில் காமுட்டித் திருவிழா நடக்கும் போது முதல் நாள் காப்புக் கட்டும்போது யாராவது ஒருவரைப் பரமசிவனாகத் தேர்வு செய்வார்கள். அவர்தான் ஆற்றிலிருந்து கலசத்தில் நீர் கொண்டு வர வேண்டும். அப்படி ஒரு வருஷம் மணியப் பிள்ளை பரம சிவனாகத் தேர்வாகி காமதகனம் முடியும் வரை சுத்த பத்தத்துடன் இருக்க வேண்டி வந்தது. தினமும் இரவில் காமதகன கதை படிக்கப்படும். முறையாகப் பாடத் தெரிந்த வர்கள் ஊரில் இரண்டு மூன்று பேர் தான். நீட்டி முழக்கி ரசித்து ஒருவித லயத்தோடு பாடுவார்கள். அதற்கேற்றபடி சேரியாட்களின் பறைக் கொட்டு முழங்கும். அது தினமும் ஊரார் தவற விடாத பரவசமான நிகழ்ச்சி.

பாடலில் பரமசிவனுக்குத் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, அங்கு மூலவராக அமர்ந்திருக்கும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். திடீரென்று வலிப்பு வந்தவர் மாதிரி உடம்பை முறுக்கி குலுக்கி சாமியாட ஆரம்பித்து விடுவார்.

யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தாங்கிப் பிடித்து அவர் கீழே விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள். இது காமதகனம் முடியும் வரை தொடரும். நாராயணசாமி பிள்ளைக்கு இது அதீத அலட்டலாகப் பட்டது.. 'எல்லோரும் தன்னைப் பார்க்க வேண்டும், தாங்க வேண்டும் என்று அப்படிச் செய்கிறார், சாமியாவது பூதமாவது' என்று கரித்துக் கொட்டுவார். வெளிப் படையாகச் சொல்ல முடியாமலும் அதை நிறுத்த முடியாமலும் முணுமுணுத்தபடி இருப்பார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு யார் பரமசிவனாகத் தேர்வு செய்யப்பட்டாலும் காமதகனப் பாட்டு பாடும்போது தினமும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். அதிலும் இரவு ரதி மன்மதன் படம் ஊர்வலம் வரும்போது தெருவுக்குத் தெரு சாமியாட ஆரம்பித்து விடுவார் மணியப் பிள்ளை. இதற்கு ஒரு முடிவு கட்ட நாராயணசாமி பிள்ளை எண்ணினார். ஒருநாள் காமதகனப் பாடலில் உச்ச கட்டம். மன்மதன் ரதியிடம் அவளது தந்தையான பரமசிவனை இகழ்ந்து பேசும் கட்டம். ஊர்வலம் நடுத் தெருவில் வந்து கொண்டிருந்தது. மன்மதன் பக்கம் பாடுகிறவர், "அடீ! உங்கப்பன் பேயாண்டி........" என்று நீட்டி முழக்கிப் பாடியபோது ஊர்வலக் கும்பலுக்கு நடுவே "ஆய்.."என்று ஆவேசக் குரல் எழும்ப எல்லோரும் அங்கே திரும்பிப் பார்த்தனர். மணியப் பிள்ளைதான் ஆவேசம் வந்தவராய் கண்ணை மூடி உடலை முறுக்கி, கைகளை உயர்த்தியபடி குதிக்க ஆரம்பித்திருந்தார். அவர் விழுந்து விடப் போகிறாரே என்று இரண்டு பேர் அருகே ஓடி அவரை இறுக்கிப் பிடித்தார்கள்.

அதைப் பார்த்துவிட்டு நாராயணசாமி பிள்ளை அங்கு சென்று, மணியப் பிள்ளையைப் பிடித்திருந்தவர்களை ஜாடை காட்டி விலகிப் போகும்படி செய்தார். இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க மணியப் பிள்ளைக்கு ஆவேசம் அதிகமாகி ஆட்டமும் அதிகமாக ஆகும். இப்போதும் அப்படி ஆவேசமாய் அவர் குதித்த போது பிடித்தி ருந்தவர்கள் விலகிவிடவே தடாலென்று வெட்டிய மரம் போல கீழே விழ வேண்டியதாகி விட்டது. தலையிலும் உடம்பிலும் நன்றாக அடி பட்டு விட்டது. யாரும் போய்த் தூக்காதபடி நாராயணசாமி பிள்ளை பார்த்துக் கொண்டார். ஊர்வலம் நகர்ந்து விட்டது. அவரை அப்படியே விட்டுவிட்டு எல்லோரும் நகர்ந்து விட்டார்கள்.

"இனிமே ஜன்மத்துக்கும் அவன் சாமியாட மாட்டான் பாரு!" என்று நக்கலாகச் சிரித்தார் நாராயணசாமி பிள்ளை. அது உண்மையாயிற்று. அதற்குப் பிறகு மணியப் பிள்ளைக்கு ஒருபோதும் ஆவேசம் வரவில்லை.

அதை நினைத்தபோது சிதம்பரத்துக்கு மணியப் பிள்ளை மீது அனுதாபமும் நாராயணசாமி பிள்ளையின் குறும்பை எண்ணிச் சிரிப்பும் வந்தது.

"ஆனாலும் மணியப் பிள்ளை பாவம்'பா! எதிர்வீட்டு நாராயணசாமி பிள்ளை அவரை ரொம்பவும்தான் படுத்தி விட்டார்" என்றார் மருதுவிடம்.

'அவுரு மட்டும் என்னா வாழ்ந்துட்டார்? அவுரு மணியப் பிள்ளையை மட்டுமா படுத்தி எடுத்தார்? ஊரையே படுத்தியவர் தானே?" என்றான் மருது. பேசிக் கொண்டே மேலே நடந்தார்கள்.

( தொடரும் )

No comments: