Thursday, September 24, 2009

'தேவனி'ன் நாவல் 'கல்யாணி'

'சிலரது எழுத்துக்களில் காந்த சக்தி உண்டு. படிக்கத் தொடங்கினால் படித்து முடித்துவிட்டுத்தான் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றும். நாவல்களில் வாசகர்களை ஈர்த்து ஒன்றிடச் செய்ய ஆவலைத் தக்க வைக்க நீரோட்டமாய் கதை இருக்கும்' - இது தேவனின் நாவல்களுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். கதையானாலும், கட்டுரையானாலும், நாவலானாலும் வாசகரைக் கவர்ந்திழுக்கிற, கட்டிப் போடுகிற காந்த சக்தி தேவனின் எழுத்தின் சிறப்பு அம்சம். சுவாரஸ்யமான, நகைச்சுவை நிறைந்த, புருவம் உயர்த்த வைக்கிற யதார்த்த படைப்புகள் அவருடையவை.

பேராசிரியர் 'கல்கி' யின் கண்டுபிடிப்பு அவர். ஆனந்த விகடனுக்கு அவரது 20ஆவது வயதில் அனுப்பிய கட்டுரையைப் படித்த கல்கி, 'ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில் நாடெங்கும் பிரசித்தியாகிவிட்டார். தேவன். குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும் துக்கங்களையும் பற்றி மட்டுமல்ல; வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக்கூடியவர் தேவன்' என்று பாராட்டியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, கல்கியின் தூண்டுதலால் தேவன் நிறைய சிறுகதைகளும், தொடர் நாவல்களும், பயணக் கட்டுரை களும் விகடனில் எழுதிப் பிரபலமாகிப் பின்னாளில் அதன் நிர்வாக ஆசிரியராகவும் உயர்ந்து அப்பத்திரிகையின் விற்பனையையும் புகழையும் உயர்த்தியவர்.

சமீப காலத்தில் தனது வித்தியாசமான எழுத்துத் திறத்தால் பெருமளவு வாசகரைத் தன் வசமாக்கிய 'சுஜாதா' வின் ஆதர்ச முன்னோடி தேவன். 'அவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அவரது உரைநடையின் சரளமும் துடுக்கும், தொடர்கதை அத்தியாயங்களில் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்தி நிறுத்தியிருக்கும் அற்புதமும் அவரை விட்டால் தமிழ்
எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் தேவன் இருந்திருக்கிறார். அவரை இன்று படித்தாலும் புதிதாகவே இருக்கும். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்' என்கிற சுஜாதாவின் வியப்பை இந்நாவலைப் படிக்கிற எவரும் அடையவே செய்வர்.

எப்போதும் தர்மத்தின் பக்கமே பேசுகிற நாவல்கள் அவருடையவை. 'துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலனம்' என்கிற நீதியைப் பின்பற்றிச் சொல்லப் பட்டுள்ளவை அவை. இந்த நாவல் 'கல்யாணி'யும் அப்படித்தான். கல்யாணி என்கிற பெண் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். திடீரென்று கும்பகோணத்தில் இருந்த அவளது ஒரே ஆதரவான தாத்தா இறந்து போன செய்தி வந்து கிளம்புகிறாள். ரயில் பயணத்துக்கு டிக்கட் கிடைக்கவில்லை. அப்போது அதே ரயிலுக்கு கும்பகோணத்துக்கு டிக்கட் வாங்கியிருந்த சுந்தரம் என்கிற இளைஞன் தன் டிக்கட்டைக் கொடுத்து உதவுகிறான். தாத்தா வீட்டுக்கு வந்த கல்யாணி, வீட்டுச் சமையற்காரியாய் இருந்த நாகலட்சுமி என்பவள் தந்திரமாய் கிழவரை வசப்படுத்தி தன் மூத்த மகளை வயது வித்தியாசம்
அதிகமிருந்தும் பணத்தாசையால் மணம் செய்து வைத்து, பேத்தியுடன் அவருக்கு சாகும்வரை தொடர்பில்லாதபடி செய்து சொத்துக்களை வசப்படுத்தி இருப்பதை அறிகிறாள். அது மட்டுமல்லாமல் அவளுக்கு எதுவுமில்லாமல் துரத்தவும் முற்படுகிறாள். அப்போது கல்யாணியைத் தொடர்ந்து கும்பகோணம் வந்த சுந்தரம், நரசிம்மன் என்கிற தன் நண்பன் உதவியால் அவனுக்குப் பழக்கமான நாகலட்சுமியின் வீட்டுக்குக் குடிவருகிறான். வந்தபின்தான் தெரிகிறது அது கல்யாணியின் வீடு என்பதும் அவளும் அங்கேதான் இருக்கிறாள் என்பதும். அவளை நாகலட்சுமி வஞ்சனையால் துரத்த முயல்கிறாள் என்பதை அறிந்து, சென்னையில் அவளது டிக்கட் கிடைக்காத பரிதாபத்துக்கு இரங்கி உதவியது போலவே இப்போதும் அவளுக்கு உதவி அவளுக்கு உரியவற்றை நாகலட்சுமியிடமிருந்து பெற்றுத் தர முனைகிறான். அதற்காக தன் நண்பன் நரசிம்மன் உதவியை நாடுகிறான்.

நரசிம்மன் ஒரு போக்கிரி. பல இடங்களில் கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டு போலீஸின் குற்றப் பட்டியலில் இருப்பவன். அவனுக்கு நாகலட்சுமியின் விஷயம் முழுக்கத் தெரியும். கல்யாணியின் தாயின் நகைகள் மற்றும் வைரக்கற்களை அவள் கிழவர் இறந்ததும் கைப்பற்றி வைத்திருப்பதையும் அறிந்தவன். அந்த வைரக் கற்க¨ளை அடித்துக் கொண்டு போய்விட வேண்டும் என்பதற்காக அவன் நாகலட்சுமிக்கு ஒத்தாசையாய் இருப்பதாக நடித்துக் கொண்டிருப்பவன். இப்போது சுந்தரம் அழைத்ததும் அவனைக் கொண்டே வைரங்களைத் திருடிவிடத்
திட்டமிடுகிறான். அதன்படி ஓர் இரவு, தங்கையுடன் வந்தபோது தனது கார் ரிப்பேர் ஆகிவிட்டதாகச் சொல்லி இரவு நாகலட்சுமி வீட்டில் தங்குகிறான். நாகலட்சுமி இரவு தன் அறையில் இல்லாத சிறிது நேரத்தைப் பயன் படுத்திக்கொண்டு நரசிம்மன் வைரக் கற்களைத் திருடி சுந்தரத்திடம் கொடுத்து வெளியே அனுப்புகிறான். சுந்தரம் வெளியே எடுத்துப்போய் நரசிம்மனது கார் சீட்டினடியில் பதுக்கி வைக்கிறான். அதே வேளையில் நாகலட்சுமியின் மகன் விபூவும் திடீரென்று உறவு கொண்டாடி வந்து சேர்ந்திருக்கும் பெரியப்பாவுடன் சேர்ந்து வைரங்களை
எடுக்கத் திட்டமிட்டும், அவர்களுக்கு முன்பே அவை களவு போய்விடுகின்றன. நாகலட்சுமி போலீஸில் புகார் செய்கிறாள். தேவனது துப்பறியும் நாவல்களில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலனும், ஸி.ஐ.டி சந்துருவும் துப்பறிகிறார்கள், அதற்குள் வைரக் கற்கள் பல கை மாறி, நாகலட்சுமியின் இரண்டாவது மகள் காந்தாவுடன் தொடர்புள்ள அவர்களது டிரைவர் ராஜூவின் கைக்குக் கிடைக்க, அவன் காந்தாவுடன் காரில் பறந்து விடுகிறான். சுந்தரத்தின் மீது நாகலட்சுமி சந்தேகப்படுகிறாள். போலீஸ் சுந்தரத்தையும், நரசிம்மனையும் விசாரிக்கிறது. ஆரம்பத்தில் ஜவடாலாய்ப் பேசுகிற நரசிம்மன், சந்துருவின் கேள்விக் கணைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இறுதியில் பணிந்து விடுகிறான், கடைசியில் திருடு போனது போலி வைரங்கள் என்று தெரிய வருகிறது. கல்யாணியின் தாத்தா, நாகலட்சுமியிடமிருந்து நகைகளைப் பாதுகாக்கத் திட்டமிட்டு எல்லாவற்றிற்கும் போலிகள் தயாரித்து வைத்து விட்டு அசல் நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருப்பது, தற்போது கிடைத்த - தன் பேத்திக்கு எழுதிய அவரது கடிதத்தின் மூலம் தெரிகிறது. சுந்தரம் விடுவிக்கப்பட்டு நரசிம்மன் சிறையில் அடைக்கப் படுகிறான். சுந்தரத்துக்கும், கல்யாணிக்கும் திருமணம் நடக்கிறது என்று கதை முடிகிறது.

கதை ஒன்றும் புதிய விஷயமல்ல. கதையில் எதுவும் புதிதாகத் தேவன் செய்துவிடவில்லைதான். ஆனால் கதையைச் சிடுக்குகளுடன் அமைத்து விறுவிறுப்புடன் நடத்திச் சென்று இறுதியில் மர்ம முடிச்சுகளை லகுவாக அவிழ்த்து சுபமாகக் கதையை முடிக்கும் சாமர்த்தியத்தில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து வித்தியாசப் படுவதுதான் அவரது தனித்தன்மை. கதையை சுவாரஸ்யமாக்க இயல்பிலேயே அவரிடமுள்ள நகைச்சுவை உணர்வும் பெரும் பங்கு வகிக்கிறது. உரையாடல்களில், வருணனைகளில் எல்லாவற்றிலும் அவரது சாமர்த்தியம் நம்மை வியக்க வைக்கும்.

கதையை நடத்திச் செல்கையில், உச்சத்தை நெருங்கும்போது இடையே நிறுத்தி, பின்னோக்கிச் சென்று கதைக்கு அவசியமான பழைய சம்பவங்களைச் சொல்லும் Flash back உக்தி ஒரு நாவலுக்கு எப்படி உதவும் என்பதைச் சொல்கிறார். எதைச் சொன்னாலும் அதற்குத் தக்க உவமைகளோடு சொல்வது தேவனின் மற்றொரு சிறப்பு. இங்கு, தான் பிறந்து வளர்ந்த திருவடமருதூரின் தேர் உற்சவத்தை உவமைக்கு எடுத்துக் கொள்கிறார்.

"தேர் உற்சவம் ஆரம்பமானவுடனே உத்சாகிகள் சரசரவென்று பிள்ளையார் தேரை ஒரு மூச்சில் இழுத்து நிலைக்குப் பத்து கஜம்வரை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அடுத்தபடி சுப்ரமணியத்தின் தேரும் இவர்கள் கவனத்துக்கு வந்து, இரண்டு மூலைகளாவது திரும்பி வந்து நிற்கும். பிறகுதான் ஒரே மூச்சாக ஸ்வாமி தேர் கிளப்பப்படும். கொல்லங் கோடியில் ஒரு பக்க்ஷம்; வாணக்கோடியில் பதினைந்து நாள்; ராஜங்கோடியில் இரண்டு வாரம். இப்படியாக அது அசைந்தசைந்து கம்பீரமாக வந்து கொண்டிருக்கும்போது, சமயத்துக்கேற்றாற்போல் அம்மன் தேரும் சுப்ரமணியத்தின் தேரும் சிறிது சிறிதாக முன் நோக்கி நகர்த்தப்பட்டு வரும். கதையைத்
தொடர்ச்சியாகச் சொல்லி வரும் ஆசிரியரும், தமது மனதுக்குள் அநேகமாக ஒரு சின்னத் தேர் உத்சவத்தையே நடத்தி விடுகிறார்! ஒரு சம்பவத்தைத் திடுதிடுவென்று இழுத்துச் சென்று, ஒரு முக்கிய கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்திக் கொள்கிறார். திரும்பி, மற்றப் பெரிய சம்பவங்களுக்கு வருகிறார். பின் இவற்றைக் கிரமமாக நகர்த்திக் கொண்டே வருகிறார். பெரிய தேர் நிலையை அணுகி விட்ட சமயத்தில், சின்னத் தேர்களைச் சட்டுச்சட்டென்று நிலைக்குத் தள்ளுவது போலவே, கதையை முடிக்கும் காலத்திலும் நடந்து கொள்கிறார். இந்த நியதியை ஒட்டி நாமும் சில பழைய சம்பவங்களைத் திரும்பவும் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது." ஒரு துப்பறியும் நாவல்
எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு தேவன் தரும் பயன்மிக்க குறிப்பு இது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அந்த அத்தியாய சம்பவங்களுக்கேற்ற பொருத்தமான பாடல் அல்லது தகவல் அறிவிப்புக்களைத் தருவதும் தேவனின் நாவல்களில் நாம் ரசிக்கக் கூடிய அம்சமாகும். உதாரணத்துக்கு முதல் அத்தியாயத்திற்கு சங்கீதக் கச்சேரியின் முதல் பாட்டான 'வாதாபி கணபதிம் பஜே ஹம்.....' வரிகளையும் கடைசி அத்தியாயத்திற்கு கச்சேரியின் கடைசிப் பாட்டின் வரிகளையும் தருகிறார்.

நகைச்சுவை இல்லாமல் தேவனின் எந்தப் பகுதியும் நகர்வதில்லை. அது அவரது தனித்தன்மை. இந்நாவலில்நாகலட்சுமி தன் அசட்டு மகன் விபூவின் அசட்டுப் பேச்சுக்கெல்லாம் - 'அடக் கட்டேல போறவனே', 'கடங்காரா...' என்று செல்லமான வசவுகளால் அடிக்கடி அர்ச்சிப்பதும், நரசிம்மன் சுந்தரத்தை வார்த்தைக்கு வார்த்தை ' யூ சீல்லி டாங்கி', 'யூ சில்லி பொட்டட்டோ', 'யூ ஒல்ட் பிரிஞ்சால்' என்றெல்லாம் வகைவகையாய் நம் திரைப்படங்களில் கவுண்டமணி செந்திலைத் திட்டுகிற பாணியில் பேசுவதுமான அந்தப் பாத்திரங்களின் நகைச்சுவையான மேனரிசத்தைப் படிக்கையில் அழுமூஞ்சிக்கும் சிரிப்பு வரும்.

அவரது உரையாடல்களும் ரசமானவை; மென்சிரிப்பை உண்டாக்குபவை. எப்போதும் கிண்டலும் கேலியுமாய் பேசுகிற பாத்திரமான நரசிம்மன், சுந்தரத்தை நாகலட்சுமி வீட்டுக்கு அழைத்துப்போய் அவள் வீட்டில் தங்க ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பியதும், அவனது தங்கையாக வீட்டில் இருப்பவளிடம் பேசுவது அப்படிப் பட்டது:

"ரொம்ப சீக்கிரம் திரும்பிட்டேள்! போன காரியம் என்னாச்சு?

"பழந்தான்! நிமிஷத்திலே அந்தச் சமையல்காரியை மசிச்சுட்டேன். நல்ல கருணைக் இழங்குதான். எலுமிச்சம் பழத்தை அதன் தலையிலே பிழிஞ்சு, மத்தாலேயும் கடைஞ்சதிலே, காறல் எல்லாம் போயே போச்சு!"

அவரது வர்ணனைகளும் நகைச்சுவை கொண்டவையாக இருக்கும். பஞ்சுவய்யன் என்கிற பாத்திரம் அறிமுகம் ஆகும்போது இப்படி எழுதுகிறார்: 'ஒரு மகா அழுக்கு வஸ்திரத்தை அரையில் மூல கச்சமாகக் கட்டிக் கொண்டு, அதே வர்ணனைக்கு இம்மியும் குறைச்சல் இல்லாத ஒரு துணியை மேலேயும் போட்டுக் கொண்டு துணி மூட்டை ஒன்றைக் கையில் இடுக்கியவாறு வாசலில் நின்றார் கருவலாக ஒரு ஆசாமி. இடுப்பைத் தடவி ஒரு பொடி மட்டையை எடுத்துப் பெரிய சிமிட்டாவாக அதிலிருந்து அள்ளிக் கொண்டார். ஒரு தடவை பொடியைச் சுருதி சுத்தமாக இழுத்து விட்டு, மூட்டையையும் கீழே வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்."

அதோடு இலக்கிய ரசனையுடனும் வர்ணனைகள் இருக்கும்: 'நம் கதாபாத்திரங்களில் முக்கியமானவர்களாக மூன்று பேர் ஏககாலத்தில் 'பொழுதுவிடியட்டும்' என்று விரும்பிய காலத்தில், அந்த ஆதித்த பகவான் சவுக்கினால் இரண்டடி போட்டானோ என்னவோ! ஆறு முப்பத்தைந்துக்கு அவன் கிழக்கே உதயமாகி விட்டான்."

குறை என்று ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், கதை முடிவை நெருங்கும்போது, அவர் குற்¢ப்பிட்ட தேரோட்ட முடிவின் வேகத்தைப் போல சரசரவென்று நிகழ்வுகள் ஓட்டமாக ஓடுவதைச் சொல்லலாம். தொடர் கதையாக வந்த இக்கதை, முடிக்க வேண்டிய அவசரம் காரணமாகவும் அது நேர்ந்திருக்கலாம்.

இவ்வளவு அபூர்வமான எழுத்திறன் படைத்த அரிய எழுத்தாளரான தேவன் அவர்கள் 50 வயதுக்குள் மறைந்தது தமிழர்களின் துர்ப்பாக்கியமான - பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மேதைகளை அற்பாயுளிலேயே இழக்கிற - வழமையாய் ஆனது பெரும் சோகமாகும்.

இக்கதை 1944ல் ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. இரண்டு பதிப்பகங்களால் நூலாக வந்த பின் இப்போது 'கிழக்கு பதிப்கத்'தாரால் செம்பதிப்பாக வெளியாகி உள்ளது. 0


நூல் : கல்யாணி

ஆசிரியர் : தேவன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை.

1 comment:

ஜீவி said...

அவரது ஸி.ஐ.டி. சந்துரு சின்ன வயதில் நாம் மிகவும் ரசித்துப் படித்த நாவல். கதை நடக்கும் களமான சென்னைப் பட்டணத் தெருக்களை அங்கங்கே விவரித்துச் செல்வார்.
அதுவரை சென்னை வந்திராத, பத்திரிகை காரியாலயங்களின் இருப்பிடமான சென்னையின் மேல் மிகுந்த மோகமிருந்தது அப்போது எனக்கு. அமரர் தேவன் விவரித்திருந்த தெருக்களை சென்னை போகும் போது எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டுமென்று மனத்தில் குறித்துக் கொள்வேன்.

சித்திரத்தைப் பார்த்தால் கேரக்டரை நினைவு கொள்கிற மாதிரி, என்று எடுத்துக்கொண்டால், துப்பறியும் சாம்புவின் படம் தான் பாக்கியம் ராமஸ்வாமியின் அப்புசாமிக்கு
'ஜெ..'க்கு இன்ஸ்ப்ரேஷன் என்று நான் நினைப்பதுண்டு.