Monday, December 03, 2012

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து................7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை..




    இது என்னுடைய முதல் நாவல்.

தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத் திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை.  எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமையூட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை.. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்கு சுயநலக்காரன், திமிர் பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமென மதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள் மீது தீராத பொறாமை உணர்ச்சியை அடைகாத்து வருபவன், சில வேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன் அவன் – இவை எல்லாம் மறந்து போய்விட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில் அவன் அக்கிர கண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிற போது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஆமோதிக்க, உணமை உணர்ச்சி  அவனை உறுத்தும். மறுக்க அவனுடைய புகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப்படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணை இல்லை. 

எழுதாளனும் ஒரு கலைஞன். தன் எழுத்து எவ்வாறு பிறர் படித்து ரசிக்கும்படியாக அமைந்து விடுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் அப்பாவி அவன். அவன் வாழ்கிற காலத்தின் ஜீவரசம் அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய பொறிகளுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும், முடிப்பிலும் அவனுடைய ரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. வைஷ்ணவ நெற்றியில் நாமம் போல்  டைட்டில் பக்கத்தில் அவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது இல்லை. பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன. விஞ்ஞான பத்ததிக்கும், தருக்க சாஸ்திர முறைக்கும் இலக்காகாத அவ்வுணர்வுகளின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் சகஜம்; தவிர்க முடியாதவை. இதற்கு நேர்மாறாக, கலையுலகில் அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைப்பவன் கலைஞனே அல்ல. தெருக்கோடி கிறிஸ்துவ பஜனையில் தொண்டையைக் கிழித்துக் கொள்பவனுக்கும் அவனுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்: மொழி செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள். தலைகீழாகச் சொல்லிப் பழகி விட்டார்கள். சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள். கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல் பழகிவிட்டது.

நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தி தருகிறது..

படித்துப் பாருங்கள். இந்நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.

நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக்கூடுமென்று தோன்றுகிறது.


நாகர்கோயில்
23 ஜூன் 1966                              சுந்தரராமசாமி.




   

2 comments:

M. Shanmugam said...

நான் விரும்பி படிக்கும் எழுத்தாளரின் புத்தகம்.
தகவலுக்கு மிக்க நன்றி.

Latest Tamil News

வே.சபாநாயகம் said...

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

-வே.சபாநாயகம்.