எதுவும் சூனயத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை.
எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத்தான் வருகிறது. படைத்தவனின்
குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும்,
அவன் எண்ணங்களும் குணங்களும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்ததில்லை. அதற்கும்
முந்திய தடங்களைக் காட்டும் சங்கிலித்தொடர் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கும்.
அதுபோலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும்.. தான் ஒரு வரலாற்றோடு வந்தாலும்,
வந்தபின் தனித்து விடப்பட்டு அவ்வக்காலத்து சூழலுக்கு ஏற்ப இன்னொரு வரலாற்றை அது
உருவாக்கிக்கொண்டே போகிறது. சூன்யத்தில் பிறப்பதுமில்லை. சூன்யத்தில்
வாழ்வதுமில்லை.
இப்படிக் சொல்லிக்கொண்டே போனால், இன்றைய அரசியல்வாதிகளின்
வாய்ப்பந்தல் போலாகிவிடும் அபாயம் உண்டு. குறள் எழுதக் காரணமான வள்ளுவனின்
நிர்ப்பந்தங்கள் கட்டாயம் உண்டு. நாம் பலவாறாக ஆராய்ந்து தற்காலிகமாக யூகித்துப்
பலவற்றைச் சொல்லாம். அதுபோக அதன் அர்த்தங்கள் எனவும் நிறைய நம் அப்போதைய
தேவைகளுக்கு ஏற்ப பல சொல்வோம்.. வள்ளுவன் எழுத நேர்ந்த நிர்ப்பந்தங்களும் அவன்
ஒவ்வொரு குறளுக்கும் கொண்ட அர்த்தங்களும், இடைப்பட்ட நூற்றாண்டுகள் பலவற்றின்
நீட்சியில் அதற்குத் தரப்படும் அர்த்தங்களும் இன்று வள்ளுவனும் குறளும் அர்த்தம்
என்னவாக இருந்தாலும் பெறும் பயன்பாடும் வள்ளுவனாலோ குறளாலோ தீர்மானிக்கப்படவில்லை.
நம் தேவைகளால் தீர்மானிக்கப் படுகின்றன. அப்படித்தான் எல்லாமே. அவன்
ஏட்டுச்சுவடியில் எழுதும்போது அவனுக்கு இருந்த தேவையும், இன்று பேருந்துகளில் நாம்
காணும் குறள் எழுத நேர்ந்த தேவையும் ஒன்றாக இருக்குமா?
என்னால் எதையும் அதன் சூன்யத்தில் பார்க்க, படிக்க. புரிந்து
கொள்ள முடிவதில்லை. வார்த்தை விழும்போதே அதன் குரலுக்கு முன்னும் பின்னு முள்ளதெல்லாம்
அந்த வார்த்தைகளோடு சேர்ந்து விஸ்வரூபம் கொண்டுதான் என் காதில் அது விழுகிறது.
கேட்கும்போதும், படிக்கும்போதும், எந்த ஒரு எழுத்தையும் அதை எழுதியவனிடமிருந்து அவன்
சூழலிடருந்தும், அந்த எழுத்து பின் சேரும் சூழலிடமிருந்தும் பிய்த்துப் பார்க்க
முடிவதில்லை. அதன் பொய்மையும் உண்மையும் தெரியாது போய்விடுவதில்லை. மறுபடியும்
எந்த எழுத்தையும் படிக்கும்போதும் அதை எழுதியவனைப் பற்றி அவன் இதுகாறும்
எழுதியவற்றிலிருந்தும் அவனைப் பற்றி, வாழ்க்கை பற்றி அறிந்தவற்றிலிருந்தும் பெற்ற
சேமிப்பு அத்தனையோடும்தான் அந்த எழுத்து எனக்கு அர்த்தம் பெறுகிறது. அந்த
எழுத்தாளனின் ஆளுமை பற்றிய பிம்பம் இப்படி உருவாகிக்கொண்டே போகிறது. அந்த பிம்பத்தின்
இதுவரைய சேர்க்கை முழுதும், இப்போது நான் படிக்கும் அவனது எழுத்துக்கு அர்த்தம்
தந்து கொண்டிருக்கிறது. எழுதியது பேசியது மட்டுமல்ல, அவன் சொல்ல விரும்பாத நிர்ப்பந்தங்களின் மௌனங்களும் பேசுகின்றன,
அர்த்தம் கொள்கின்றன. பல பேச்சுக்களில், எழுத்துக்களில் பொய்மை பளிச்சிடுவதை உடனே
உணர முடிகிறது. அதற்கான காரணங்களை நான் அடுக்கலாம். உணர வைக்கலாம்.. ஆனால்
நிரூபிக்க முடியாது.
அதெல்லாம் இருக்கட்டும். எந்தப் படைப்பும் என்னனை எவ்வாறு
பாதிக்கிறது, நான் அவற்றை எப்படி
அர்த்தப்படுத்திக் கொள்கிறேன் என்பதை சொல்லத்தான் எழுதினேன். படிக்கும்போது என்
முன் நிற்பது அதுவரை நான் அந்தப் படைப்பாளியின் அறிந்த ஆளுமை முழுதும். அந்த ஆளுமை
உருவாகிக் கொண்டே இருப்பது. “நீங்கள் ஏன் ராஜ்கபூரின் அந்தப் படத்துக்கும் பாட
மறுத்தீர்கள்?”
என்று மிகப் பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டீர்களே என்ற அர்த்ததில் கேட்ட
கேள்விக்கு “எனக்கு
அந்தப் பாடலைப் பாடப் பிடிக்கவில்லை” என்று லதா மங்கேஷ்கர் பதில் சொன்னார். அவர் மறுத்தது
மட்டுமல்ல அவரது ஆளுமை பற்றிய உண்மையையும், அந்தப் பாடல், ராஜ்கபூரின் படம் பற்றிய
எல்லா உண்மைகளையும் அந்தப் பதில் சொன்னது. இன்னமும் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து,
அது ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர் இருவர் ஆளுமையையும் என் முன் நிறுத்தியது அந்தப் பதில்.
எந்த அரசியல்வாதியின் பேச்சிலும் உள்ள உண்மையும் பொய்யும் பளிச்சிடவில்லையா உடனுக்குடன்.
அப்படிப் பளிச்சிடச் செய்வது எது? “என் மூச்சில் தமிழிருக்கும்” என்ற பாடலைக் கேட்டிருக்கிறோம். சரி த்மிழ்
இருக்கிறதா? இருந்ததா? அது எந்த ஆளுமையைச் சேர்ந்தது? இப்படித்தான் எல்லாமே.
இலக்கியத்தின் அழகு அது பேசும்
உண்மையிலிருந்து பிறக்கிற.து. திட்டமிட்ட வடிவங்களால், சொல் அலங்காரங்களல் அல்ல.
அந்த உண்மையையும் அதன் பின்னிருக்கும் ஆளுமையையும் உணரத்தான் முடியும்.
இங்கு நான் சந்ததித்த ஆளுமைகள். இன்னும் சிலர்.
படித்தும், கண்டும் பழகியும் அறிந்த ஆளுமைகள்.
வெங்கட்சாமிநாதன்
19-11-06.
No comments:
Post a Comment