Monday, June 17, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’



      சிறு வயசிலிருந்தே நான் பொம்மைகள் செய்ய ஆசைப்பட்டே.ன். முதலில் சில காலம் பாடல் பொம்மைகள் செய்து பார்த்தேன். பின்னால் கதைப் பொம்மைகள் செய்ய முற்பட்டேன்; பாடல் பொம்மைகளை விடவும் கதைப் பொம்மைகளிடமே  எனக்கு ஆசை மிகுந்தது. ஆனால் ஒரு பொம்மையைச் செய்து முடித்துவிட்ட மறுகணமே  அப்பொம்மை எனக்கு அலுத்துப் போய்விடும் ; சலித்துப் போய்விடும். வேறு பொம்மைகளுக்கான திட்டங்களைĪ போடத் தொடங்குவேன். சிலர் அடுக்கடுக்காகப் பொம்மைகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். அது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ! அவர்களிடம் பொம்மை பண்ணும் யந்திரம் ஏதேனும்  இருந்தாலும் இருக்கலாம். என்னிடம் அம்மாதிரி எந்திரம் எதுவும் இல்லை. வெறும் கையாலேயே நான் என் பொம்மைகளைச செய்கிறேன். யந்திரம்தான்  இல்லை, சிறிது  சுறுசுறுப்பாக இருக்கக்கூடாதா? அதுவும் இல்லை. சோம்பல்  என் அருமை நண்பன்; எக்காரியத்தையும் சோம்பலை அணைத்தபடிதான் செய்து தீர்ப்பேன் ; அல்லது செய்து தீர்க்காமலிருப்பேன்.

     கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில் நான் படைத்துத் தீர்த்த கதைப் பொம்மைகள் இரண்டு டஜன் இருக்கலாம். இந்த இரண்டு டஜனிலிரிந்து நான் தேர்ந்தெடுத்த அரை டஜனின் தொகுப்பே நீலக்கடல். அதை ஒரு வியாபாரி ஜோராக  வெளியிட்டிருக் கிறார். அதுவும் ஒரு பொம்மைதான் ; புத்தகப் பொம்மை. அது எனது முதல் புத்தகப் பொம்மை. 

     இதோ இந்த காலை முதல், இது என் இரண்டாவது புத்தகப் பொம்மை. இதில் பத்து கதைப் பொம்மைகள் இருக்கின்றன. நான் படைத்துள்ள பொம்மைகளில் எனக்குப் பிரியமானவை நாலோ ஐந்தோதான்.  அந்த நாலோ ஐந்தில் இரண்டோ மூன்றோ இந்த காலை முதலிலும் அடங்கியுள்ளன. இவ்விரண்டோ மூன்றோ, பத்தோ இருபதோ தரமான இலக்கிய வாசகர்களுக்குப் பிடித்திருக்குமாயின் அதுவே என் வெற்றி என்று கருதுபவன். 

     இன்னும் முப்பது நாற்பது கதைப் பொம்மைகளும், நாலைந்து நாவல் பொம்மைகளும் பண்ணிப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். என்று தெரிவித்துவிட்டு என் வணக்கத்தையும் உங்களுகுகுத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கிருஷ்ணன் நம்பி.
பூதப்பாண்டி                
14-6-1965.




2 comments:

இராஜராஜேஸ்வரி said...

முன்னுரை அருமை..

வே.சபாநாயகம் said...

தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி.

- வே.சபாநாயகம்