எனக்குத் தெரிந்து 1948–லிருந்தே
சென்னையில தண்ணீர் ஒரு கவலைப் படவேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள்,
கிணறுகள்; ஆனால் குடிக்கும்படி இருக்காது. ஆதலால் (அன்று கார்ப்பரேஷன்)
குழாய்த் தண்ணீரை நம்பித்தான் சென்னை வாசிகள் எல்லோரும் இருந்தார்கள்.
தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும்.
தண்ணீருக் கென்று யாரும் தனியாகச் செலவழித்தது கிடையாது. குழாய்த் தண்ணீரை
நேரடியாகப் பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழாயடியில்
உள்ளங்கையைக் குவித்துக் கொண்டு தண்ணீர் குடித்திருக்கிறேன். ரயிலில்
வெளியூர் போவதாக இருந்தால்தான் ஒரு கூஜாவில் தண்ணீர் எடுதுத்துப்
போவார்கள். வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்று ஒரு பழமொழி அன்று
உண்டு. அன்று அது உண்மை.
முப்பது முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு
முன்புதான் தண்ணீர் வரி விதிக்கக்கூடியதாகவும் விலை கொடுக்க வேண்டியதாகவும்
மாறத் தொடங்கிற்று. இந்த மாற்றம் மிக மெதுவாக வந்தது. இது எளிதில்
புலப்படவில்லை.. உண்மையில் அன்று சென்னை மக்கள் அனுபவித்த பல இன்னல்கள்
இந்த மாற்றம் வந்து கொண்டிருப்பதை உணராததுதான். தண்ணீர் வினியோகமும்
ஒழுங்குபடவில்லை, இன்று சென்னை நகரில் குடிசைவாசிகள் உட்படத் தண்ணீருக்குக்
கட்டணம் ஏதாவது ஒரு வகையில் கட்ட வேண்டியிருக்கிறது. கூரையிட்ட வீடுகளில்
ஒரு குடும்பம் நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை மாதாமாதம் செலவழிக்க
வேண்டியிருக்கிறது. பத்து மாடி. பனிரெண்டு மாடிகளில் வசிக்கும்
செல்வந்தர்கள்(!) மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் தண்ணீர் வசதிக்காக
ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
‘தண்ணீர்’ நாவல் இதெல்லாம் பற்றியல்ல.
ஆனால் இவற்றிற்ககான அறிகுறிகள்ள் கொண்டதுதான். இதெல்லாம் நான் திட்டமிட்டு
எழுதவில்லை. ஊர் பெயர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக்கொண்டு அலைவதைத்
திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் கதை எழுதப்பட்டது.
இந்த 2006-ஆம் ஆண்டின் இந்தத் ‘தண்ணீர்’
நாவலுக்கு எப்படிப் பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது.
ஆனல் இந்தக் கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருட்களுக்காகவும்
காரணங்களுக்காவும் நிகழ்கின்றன. நிர்பந்தங்கள் தொடர்ந்து இருந்து
வருகின்றன. முயற்சி, வெற்றி, தோல்வி, நிராசை, இன்னும் வாழத்தான் வேண்டுமா
என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான். உள்ளன.
அசோகமித்திரன்
சென்னை,நவம்பர் 2005.
No comments:
Post a Comment