Tuesday, July 16, 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 - சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’


Share
நான் காந்தி காலத்தோடு ஒட்டி வளர்ந்தவன். ஏன், செயலும் சிந்தனையும் அந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியவன், கொஞ்சம் முயற்சி செய்தவனும் கூட. நான் படைப்பாளியாக ஆன பிறகும் என் வாழ்க்கைப் பார்வை காந்தீய ஈடுபாடு கொண்டதாகவே இருந்து வருகிறது. என் இலக்கிய முயற்சிகளிலும் அந்தச் செல்வாக்கு அங்கங்கே என்னை வெளிக்காட்டி இருக்கிறது.

உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் நெப்போலியன் காலம், பிரஞ்சுப்புரட்சி நாட்கள், ரஷ்யப் புரட்சி ஆண்டு,, ஸ்பானிய உள் நாட்டுப் போராட்ட காலம், அமெரிக்க உள் நாட்டுப் போராட்ட காலம் போன்றவை சம்பந்தமாக எல்லாம் நாவல்கள், நாடகங்கள், கதைகள், கவிதைகள்,  இயற்றப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் தமிழ் இலக்கியத்திலோ கல்கி ஆரம்பித்து வைத்த சேர, சோழ பாண்டிய, பல்லவ காலத்து கற்பித நிலையைத்தாண்டி வரவில்லை. ஏன் கிழக்கு இந்திய கம்பனி நாட்களுக்குக்கூட வரவில்லை. அப்படி இருக்க காந்தி காலத்துக்கு எப்போது வரப்போகிறோம் என்றுதான் கேட்டுக்கொள்ளவேண்டி இருந்தது. ஏதோ அத்திப்பூத்ததாக சில சிறுகதைகளும், ஒரு சில நாவல்களும்.தான் இதுவரை வெளியாகி இருப்பது. கவிதைகளும் அதே போலத்தான்.

அந்தகாலத்தை சாட்சிக்காரனாக நின்று பார்க்கும் ஒரு பார்வை, ஒதுங்கி நின்று விருப்பு வெறுப்பு இன்றி, சாதனையை உணர்ந்து, அதை மதிப்பிட்டுப் பார்க்கும் சக்தியும் படைப்புக்கு அதைப்ப யன்படுத்தும் திறமையும் இன்னும் போதிய அளவு ஏற்படாததே காரணம் என்று தோன்றுகிறது.

என் பதினைந்து காந்தி கால கதைகளுக்குப்பிறகு ஒரு காந்தியுகநாவல் எழுத திட்டமிட்டு ஆரம்பித்தேன். முயல் கதையாக  வேகமாக ஓடி ஒரு கட்டத்தில் நின்று இருக்கிறது. அதுக்குள் ‘ நீ இன்று இருந்தால்’ எனக்குள் உருவானது.

‘நீ இன்று இருந்தால்’ குறுங்காவியத்தை நான் ஒரு வாழ்க்கை வரலாற்றுக் காவியமாக ஆக்க விரும்பவில்லை. ஆன்மீகத்தையும் அரசியலையும் பிணைத்து ஒரு  தத்துவ அடிப்படையில் ஒரு தேசத்துக்கு, சமூதாயத்துக்கு விமோசனம் ஏற்படச்செய்தது மட்டுமல்ல, மானிட ஜாதிக்கே விமோசனமாக  உதாரணமாக இருந்து வழிகாட்டிய ஒரு மாமனிதனின் தேஜஸை காட்டுவதுதான் என் நோக்கம். அதோடு அந்த அவதார புருஷன் வாழ்ந்த அடிச்சுவடே இல்லாது போய்விடுமோ என்ற மனப் புழுக்கத்தினிடையே ஏக்கத்தை வெளியிடும் மனக்குரலாகவும் பேசுகிறது.

இந்தக் குறுங்காவியம் வெளியாகி சில மாதங்கள் ஆன பிறகு சிறந்த ரஷ்யக் கவி மயகாவ்ஸ்கியின் 2500 வரிகள் கொண்ட ‘லெனின்’ என்ற நீண்ட கவிதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘லெனினின் கதையை
நான் ஆரம்பிக்க வேண்டிய
நேரம் வந்து விட்டது-
ஆனால் துக்கம்
இனிமேல் கிடையாது
என்பதல்ல’

என்று ஆரம்பித்து,

‘சரித்திரம் தெரியவந்த
எல்லா போர்களிலும்
தலை சிறந்த போர் இது’

என்ற முடியுமுன் ரஷ்ய புரட்சி சரித்திரத்தையும் லெனின் சாதனையையும் பிணைத்து தன் பார்வையில் எழுதி இருக்கிறார். அவர் பாணி வேறு, என் பாணிவேறு என்றாலும் அந்த இரண்டு ஆளுமைகளும் வெளித்தெரிய வந்திருக்கிறதாகவே படுகிறது.

    இந்தக்குறுங்காவியம் 1968ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில எழுதப்பட்டது.. ‘எழுத்து’வில் வெளியானது. இந்தக்கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப் பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். இலியட் தன் ‘பாழ் நிலம்’ கவிதையில் கையாண்டுள்ள ஒரு உத்தியை பின்பற்றியதாகும். அந்த வரிகள் என் கவிதைக்கு மேலும் நயமும் சத்தும் ஏற்றுகின்றன. கவிதை வாசகர்கள் இதை படிக்கும்போது உணரமுடியும்.

சி.சு.செல்லப்பா
சென்னை
21-6-74.

No comments: