Monday, July 08, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 - ஜெயமோகன் – ‘புதிய காலம்’


Share

             தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைபற்றியும ஆசிரியர்களைப் பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல். அவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமர்சனங்கள் ஆகிவிடும்.

              ஆனாலும் எழுதத் தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கிய ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் வழியாகத் தாண்டிச் செல்லப்பட்டன. அவற்றின் மீது விரிவான விமர்சன ஆராய்ச்சி நிகழவே இல்லை. இது பல வகையில் சமகால வாசிப்புச் சூழ்நிலையைப் பாதிக்கிறது. சமகாலப் படைப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் நம்மால் இலக்கிய விவாதங்களை நிகழ்த்த முடியாது.

             இந்த விமர்சனங்களில் ஒரு பொது அம்சம் உண்டு. நான் என்னை மிகவும் கவர்ந்த ஆக்கங்களைப்பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன். பிடிக்காத, கவராத ஆக்கங்களைபற்றி ஏதும் சொல்லவில்லை. அவை காலத்தை வென்று வருமென்றால் பார்க்கலாம். இக்கட்டுரைகளில்.

                இவ்வாக்கங்கங்களின் சில குறைகள் சுட்டப்பட்டிருக்கலாம். அவைகள் குறைகள் என்றல்ல, அவ்வாசிரியர்களில் இயல்புகள் என்றே பொருள் படவேண்டும். ஓர் ஆசிரியனில் ஓர் அம்சம் இல்லை அல்லது பலவீனமாக இருக்கிறது என்றால் அது அவனது அகத்துக்குள் செல்வதற்கான ஒரு வழித்திறப்பாகவே அமையவேண்டும்.

               உதாரணமமாக தஸ்தயேவ்ஸ்கி ஒருபோதும் புறவயமான யதார்த்தங்களில் தன் புனைவை ஊன்றுவதில்லை. ஏனென்றால் அவர் கதைகளில் ஒவ்வொரு கணமும் மனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த அகத்தின் தன்னிச்சையான நகர்வை காட்டகூடிய ஒன்றே அவர் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தைச் சொல்லும் விதம்.

          இந்தக்கட்டுரைகளில் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகரன். போன்று சமகாலத்து முக்கியமான இலக்கிய ஆசிரியர்களும் ஒரே நாவல் மூலம் கணிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரே நூலில் இவர்களது ஆக்கங்கள்பற்றிய அவதானிப்புகள் தொகுக்கப்படும்போது வாசகர்களுக்கு தமிழில் என்ன நடக்கிறது என்று ஒட்டு மொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைககிறது.

        விமர்சனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமர்சனமும்  படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே.

ஜெயமோகன்
நாகர்கோயில்.

No comments: