எழுத்து, நான்
அன்று அந்தப் பையன்கள் என்னை விளையாடச் சேர்த்துக்
கொண்டிருந்தால், நான் பின்னால் எழுதியே இருக்க மாட்டேன். அவர்கள் மைதானத்தின்
நடுவே விளையாடிக் கொண்டிருபார்கள். நான் மைதானத்தின் ஓரத்தில் ஒரு புத்தகத்தைப்
படித்தவாறு,
அவர்களுடைய ஷூ, செருப்பு, ஸ்வெட்டர் ஆகியவற்றுக்குக் காவலாக உட்கார்ந் திருப்பேன்.
அவர்களுடைய ஷூ, செருப்பு, ஸ்வெட்டர் ஆகியவற்றுக்குக் காவலாக உட்கார்ந் திருப்பேன்.
அது என்னுடைய
ஒரு குறைபாடாக, பலவீனமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் என் மனம் அதை ஒரு
பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டது. நான் அவர்களைவிட புத்திசாலியாம், புத்தகம்
படிக்கிறேனாம். எனக்கு அவர்களைவிட நிறைய ஏதேதோ தெரியுமாம், நிறையக் கறபனா சக்தி
வேறு இருக்கிறதாம்! நிறைய – கையில் கிடைத்ததை எல்லாம்-படித்தேன். பிறகு ஒருநாள்
நானே எழுதவும் தொடங்கினேன். ‘இரவு பனிரெண்டு மணி.....முதலியார் வீட்டுக்
காம்பவுண்ட் சுவரை ஒரு கரிய உருவம் தாண்டிக் குதித்து’ என்று தொடங்கும்
கதைகள்.
இப்போது
நினைத்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. சந்தேகமாகவும் இருக்கிறது. ஓர்
ஏக்கம். நான் தவறு செய்து விட்டேனா?
மைதானத்தின் நடுவே போய் நானும் விளையாடியிருக்க வேண்டுமா? எழுதி எழுதி, அதன்மூலம்
எனைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகி – இந்தப் பிம்பத்துக்கு ஏதோ ஒரு கட்டத்தில் நான்
பலியாகிவிட்டேனோ என்னவோ.ஆனால் நான் முழுதும் பலியாக வில்லை என்று நம்புவதுதான்
எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது ஏதோ ஒரு மட்டத்தில், நடைபெறும் என் இயக்கங்களில்
ஒன்று என்றும், எழுத்து நீங்கலாகவும் சில பரிமாணங்களை உடையவன் நான் என்றும்
நம்புவது; எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்தப்பட்டவுடன், ஏதோ விசித்திரமான
ஜந்துவைப் பார்ப்பது போலச் சிலர் என்னைப் பார்க்கிறார்களே, அது எனக்குப் பிடித்த
ஒன்று. ‘இவனுக்கும் இரண்டு காலும் கையும்தானே இருக்கிறது. பின்னே-‘ என்று என்னுடைய
விசித்திரம் எங்கேதான் இருக்கிறது என்று தேடும் பார்வை அது.
இரண்டு கையும்
காலும்உள்ள ஒரு மனிதனாக மட்டுமே உணரப்படுவதிலும் ஓர் இன்பம் இருக்கத்தான்
செய்கிறது. அன்று அந்தப் பெண் என் பரந்த பாதத்தைப்
பார்த்ததும்
அவள் முகத்தில்
மின்னிட்டு மறைந்த வியப்பு எனக்குப் பிடித்திருந்தது. நண்பா, நான்
நன்றாகப்பாடுவதாக நீ சொன்னபோதும் எனக்குப் பிடித்திருந்தது. நேற்று கிளம்பிவிட்ட
பிறகு அந்தப் பஸ்ஸைத் துரத்திப் பிடித்து ஏறியபோது எவ்வளவு உற்சாகமாக இருந்தது!
ஒரு புதிய சாதனை உணர்வு.....
நானென்ன,
என்னிடமிருந்தே தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னைக் கண்டுபிடிக்கவா?
எனக்கே
தெரியவில்லை.
புது தில்லி 1974
மழை சற்றே நின்றிருக்கும்
ஒரு ஆகஸ்ட் மாலை.
கே.எஸ்.சுந்தரம்.
( ஆதவன் )
கே.எஸ்.சுந்தரம்.
( ஆதவன் )
No comments:
Post a Comment