Monday, January 14, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..........12 .க.நா.சுப்ரமண்யம் – ‘இலக்கிய விசாரம்’




     லக்கிய விசாரம் என்பது சற்றுக் கனமான விஷயம்தான். அதைச் சுவைபடச் செய்ய வேண்டிய அவசியம் ஆரம்பத்தில் இன்றுள்ள நிலையில் உண்டு. கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுதும் ஆசிரியன் வாசகனை நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். எழுதி முடித்த பிறகு வாசகன் வரலாமே தவிர, அதற்கு முன் இலக்கியாசிரியன் முன் அவன் வரக்கூடாது; வந்தால் அவன் எழுத்துத் தரம் குறைகிறது. ஆனால் இலக்கிய விசாரம் செய்யும்போது மட்டும் எந்த இலக்கியாசிரியனும் வாசகனை மனத்தில் வைத்துக் கொண்டுதான் செய்தாக வேண்டும். இப்படிச் செய்கிற இலக்கிய விசாரத்தை ஒரு லக்ஷிய விசாரகனுக்கும் வாசகனுக்கும் நடக்கிற சம்பாஷணை  உருவத்திலே செய்தால் நன்றாக வருமே என்று எனக்குப் பல நாட்களாகவே ஒரு நினைப்பு.

     ஜியார்ஜ் மூர் என்கிற ஆங்கில இலக்கியாசிரியர் Conversations in Ebury Street என்று லேசாக ஆங்கிலச் சம்பாஷணைகள் மூலம் இலக்கிய விசாரம் செய்து பார்த்திருக்கிறார். அதைப் படிக்கும்போது, அதேமாதிரி நானும் செய்து பார்க்கலாமே என்று எனக்குத் தோன்றியதுண்டு. நண்பர் புதுமைப்பித்தன் பதிப்பித்த ‘தினமணி ஆண்டு மலரிலே இலக்கியச் சோலை என்று ஒரு சம்பாஷணை எழுதினேன். அது திருப்திகரமாகவே அமைந்தது. ஒரே நோக்கை மட்டும் எடுத்துச் சொல்லாமல், எதிர்க் கட்சியையையும் கூடியமட்டும் எடுத்துச் சொல்லிவிட முடிகிறது எனபது இந்த சம்பாஷணை உருவத்தில் ஒரு வசதி. அதேபோலப் பல வருஷங்களுக்குப் பிறகு பாரதியாரைப்பற்றி என்று பி.ஸ்ரீ.ஆசாரியா அப்போது நடத்திக் கொண்டிருந்த ‘லோகோபகாரி யில் ஒரு சம்பாஷணை எழுதினேன். அதுவும் எனக்குத் திருப்திகரமாகவே வந்தது.

     இந்த இலக்கிய விசாரம் என்கிற விஷயத்தைச் சம்பாஷணை உருவத்தில் நான் 1945, 1946ல் திட்டமிட்டேன். உலக இலக்கியம் பூராவும் சுற்றி வரவும், கனமான விஷயங்களை லேசாகச் சொல்லவும், அவசியமானபோது பேச்சு விஷயத்துக்குத் திருப்பம் தரவும் சம்பாஷணை உருவம் மிகவும் லாயக்கானது என்பது இதை எழுதிய பிறகு எனக்கே முன்னைவிட அதிகத் தீர்மானமாயிற்று. இந்த உருவத்திலே தொடர்ந்து இலக்கிய விசாரத்தைச் செய்து வர நான் உத்தேசித்திருக்கிறேன்.

     எந்த மொழியிலுமே இலக்கிய விசாரத்தின் ஆரம்ப காலத்திலே சில சிரமங்கள் உண்டு. சில வார்த்தைகளை நாம் எந்த அர்த்தத்தில் உபயோகிக்கிறோம் என்பது வாசகனுக்குத் தெளிவாகாத விஷயமாக இருக்கிறது. பழக்கத்தால் தான் அதை அவன் அறிந்து கொள்ள முடியும். வேதாந்தம், சைவ சித்தாந்தம் போன்ற துறைகளில் உள்ளதுபோல இலக்கிய விசார உலகமும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியது. நம்மிடையே தமிழ் இலக்கிய விசாரம் செய்ய ஆரம்ப்பிப்பவர்கள் மேலை நாடுகளில், முக்கியமாக ஆங்கிலம் வழங்கும் பிரதேசத்தில், உபயோகமாகும் Stream of Conciousness  சங்கேத வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்து உபயோகித்து விடுகிறார்கள். ஆங்கில, பிறமொழி சங்கேத வார்த்தைகள் எதுவும் வராமல் விமர்சனம் செய்ய வேண்டும் – தமிழுக்கு என்று தனியாக இலக்கிய விசார சங்கேதங்கள் ஏற்படும் வரையில் என்பது என் அபிப்பிராயம். இல்லாவிட்டால் தமிழ் இலக்கிய விசாரம் ஆங்கில, ஐரோப்பிய இலக்கிய விசாரத்தின் நிழலாகவே இருக்கும்; தனி உருவம் பெறாது.  

     இந்த வழக்குக்குப் பண்டிதர்கள்தான் முதல் பலியாகிறார்கள் – ஒரு பண்டிதர் lyric ன்கிற ஆங்கில சங்கேத பதத்திற்குத் தமிழ் அர்த்தம் தருவதற்காகப் படாதபாடு படுகிறார். வேறு ஒருவர் நனவோடை இலக்கியம் என்று Stream of Conciousness என்கிற ஒரு இலக்கிய நாவல் உக்தியை ஒரு இலக்கியமாகவே நினைத்துக் கட்டுரை எழுதுகிறார். இதிலே Conciousness என்பதே ஒரு தனிச் சாஸ்திரத்தின் தனிச் சங்கேதம். இலக்கியத்துக்கு வரும்போது அது எப்படி எப்படியோ மாறுகிறது. நமது பேராசிரியர் எழுதுவதற்கும், Stream of Conciousness என்று மேலைநாட்டார் சொல்வதற்கும் ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாது என்பது வெளிப்படை விஷயம் தெரிந்தவர்களுக்கு.

     இப்படியெல்லாம் இலக்கிய விசாரத்தை வளரவிடக்கூடாது. தமிழில் சிறுகதையும், நாவலும் இன்று தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளவன் நான். இலக்கிய விமர்சனமும் தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை நிறவேற இலக்கிய விசாரம் என்கிற இச்சிறு நூல் நான் கட்டுகிற முதல் படி.


திருவல்லிக்கேணி    க. நா. சுப்ரமண்யம்.
  10-8-58           

No comments: