Monday, January 28, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..........14 வண்ணநிலவன் - 'கடல்புரத்தில்’




          சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், ‘இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, ‘இவனும் ஏதோ சொல்லுகிறானே என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப்போயிருக்கிறது

எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள் தான். மனிதர்களுக்கு அன்பு எனகிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக் கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதுக்கும் ஏதாவது இருந்து கொண்டே தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, ‘எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம் என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது.

நானும் எழுதுகிறவர்களில் ஒருத்தனென்று ஆகிப்போனதால், இலக்கியத்தைப் பற்றி மனம்விட்டுப் பேசுகிறேன். 

     கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது. உண்மையோடு நெருங்கிய சமந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய் சொல்ல மாட்டான். கலைக்குப்பொய் ஆகாது.

இந்தக்கதையைப்பற்றி நான் சொல்ல வேணுமே?

     இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்கார்ர்களை நினைத்தால் வெகு வியப்பாய் இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப் படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனை வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.

     மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்புவழியைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் .போகிறேன்.

சென்னை                      உங்களுடைய,  
31-1-1977                      வண்ணநிலவன்                                                                                                            


  
 

                                                                           

No comments: