Tuesday, August 02, 2005

உவமைகள்-வருணனைகள் - 43

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 43:

வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து:

1. இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது அந்த ஒலி. கனத்த இருளின் கூரிய கதறல் போலும் ஒலித்தது அது. இரவின் அமைதியைக் குத்திக் குதற முயல்வதுபோல் எழுந்த கிறீச்சொலி அமானுஷ்யமானது அல்ல; மனித உதடுகள் எழுப்பிய சீழ்க்கை தான்.

- 'காத்தலிங்கம்'கதையில்.

2. வானம், கழுவிப் போட்டது போல், அழுத்தமான நீல நிறத்தோடு பளிச்சிட்டது. விண்ணிலும் மண்ணிலும், அவன் அதுவரை கண்டிராத அதிசயப் புதுமை இணைந்து கிடந்தது போல் தோன்றியது. இயற்கை புத்துயிரோடும் புது வனப்புடனும் காட்சி தந்து கொண்டிருப்பதாக அவன் கருதினான்.

- 'விழிப்பு'.

3. பார்க்கப் போனால், ஆனந்தக்குறிச்சிவாசிகள் அல்பாயுள் பேர்வழிகள் அல்ல. மண்ணில் அவர்களுக்குப் பிடிப்பு அதிகம். அவர்களுக்கே அலுத்துப் போய், 'சரி, போகலாமே!' என்று பட்டால் தான் சாவார்கள் போல் தோன்றியது.

- 'அந்தரங்கமான ஒரு போட்டி'.

4. பிறர் பார்வையில் எப்பவும் முதிர்ந்து கனிந்த உருவத்தினளாய் தோன்றிய அத்தை 'இளையளாய் மூத்திலள் கொல்லோ' என்ற கவிதை வரிக்கு - இளமைப் பருவம் வந்து பின் முதியவள் ஆகாமல் எல்லா காலத்திலும் முதுமையானவளாகவே இருந்தாள் போலும் என்ற ஐயப்பாட்டுக்கு - கண் கண்ட உதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

- 'அன்பு வறுமை'.

5. நசுநசுவென்று அழுகுணித் தூறல் சிணுங்கிக் கொண்டிருந்தது. ரஸ்தாப் பரப்பு எங்கும் தண்ணீர் தெளித்துவிட்டது போலிருந்தது. அது வேர்வையில் குளித்தது போலுமிருந்தது. சிறிது தொலைவுக்கு ஒன்றாக நின்ற எலெக்டிரிக் கம்பங்களில் ஒளிப்பூ பூத்துத் தொங்கியது. நசுநசுத் தூற்றல் அற்புதப் பூச்சிகள் போல் மினுமினுத்தது. விளக்குகளின் கண்ணீர்த் திவலைகள் போலுமிருந்தது.

- 'கொலைகாரன்'.

6. மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்கவில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும், கனவு நெசவுகளையும் செய்து அமைதியைக் கெடுக்கிறது.

- 'பேரிழப்பு'.

7. கதவு தட்டப்பட்டதும் அவள் வந்தாள் திறப்பதற்காக. நகர்ந்து வருகிற ஒளிக்கோடு மாதிரி.

-'பெண்'.

8. காலவெளியில் கால் பாவி, எண்ண வலையினால் விண்மீன்களைப் பிடிக்க ஆசைப்பட்டேன் நான்.

- 'இதய ஒலி'.

9. தீ சிறுகச் சிறுகப் பற்றியது. அணைந்து விடுவது போல் பம்மி, குபீரென்று எவ்விப்படர்ந்தது. புகை கக்கியது. ஒளி நாக்கு நீட்டி நர்த்தனமிட்டது. அகப்பட்டதை நக்கி வலிமை பெற்றது. அங்கும் இங்கும் தாவிக் குதித்து நெடுகிலும் பாய்ந்து பரவியது. செம்மையாய்ச் சிரித்தது.

- ' தீ வேலி'.

10.தன் எண்ணற்ற குச்சிக்கைகளிலும் ஆயிரமாயிரம் இலைகளை ஏந்தி வானவீதியைப் பெருக்க முயல்வதுபோல் சதா சலசலத்து நிற்கும் ஆலமரம்......

- 'அலை மோது கடல் ஓரத்தில்' நாவலில்.

- இன்னும் வரும்.

- அடுத்து வண்ண நிலவன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.