Tuesday, November 30, 2010

இவர்களது எழுத்துமுறை - 17 - தி.ஜானகிராமன்

1. நான் பணத்திற்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும்
இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாட்சண்யத்திற்காக, எனக்கே
எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு,
யாருக்கு என்று தெரியாமல் - இப்படிப் பல மாதிரியாக எழுதுகிறேன்.

2. எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன். நான்
பார்த்தவர்களையும், பார்த்ததுகளையும் பற்றி எழுகிறேன்.....அல்லது என்
கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுகிறேன்.
சில சமயம் அம்மாமி பாஷையாய் இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள்.
அதற்கு நான் என்ன செய்ய? அம்மாமிகளைத்தான் எனக்கு அதிகமாய்த் தெரியும்.
ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரியும். தெரிந்த விகிதத்துக்குத்தான்
எழுத்தும் வரும்.

3. எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும்
நிலைக்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை
மென்று கொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றிச்சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற,
வழி காணாமல் தவிக்கிற, வழிகாணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக்
கொண்டே உட்கார்ந்திருக்கிறேன். சாப்பிடும்பொழுது, வேறு வேலை செய்யும்
பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க்களமும், தவிப்பும், நடந்து
கொண்டுதான் இருக்கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுத
முடிகிறது. அவ்வளவுக்குமேல் அதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

4. என் தவம் எத்தனைக்கெத்தனை தீவிரமாக ஒன்றிப்பிலும் தன் மறப்பிலும்
கனிந்து எரிகிறதோ அப்போது வடிவம் தானாக அமைந்து விடும். அது சில
சமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். ஆனால் பூப்பு நிலையில்
பூவில் இட்ட முட்டை வண்டாக வளர்கிற மாதிரி, அதை நான் தடுத்திருக்க
முடியாது. தவிர்க்க முடியாத நிலையில் எழுதப்பட்ட விதி. இந்தக் கனிவில்தான்,
இந்தத் தவத்தில்தான் என் சுயரூபம் எனக்குத் தெரிகிறது.

5. என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை
எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன்.
என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக
சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப்
பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து
கொள்கிறேன்.

6. சிறுவயது முதலே என்னுடைய மனத்தில் "கன்வென்ஷன்" என்று சொல்லப்
படும்படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும்படியான ஒரு மனோபாவம்
உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும்(டிரெடிஷன்) கட்டுப்பாட்டையும்
ஒன்றுசேர்த்து குழப்பிக் கொள்ளுகிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள்
காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு அன்றாட
வாழ்வில் நிரந்தரமான ஒரு இடத்தை அளிக்க முற்படும்போதுதான் தனி மனித
சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச்
சக்தியுடன் கூடிய ஜீவனானது இம்மாதிரியான கட்டுப்பாடுகளினால் நசித்துப்
போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மன விகாரங்களைப்
பற்றி எழுத முற்படும்போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக்கிறது.
"அம்மா வந்தாள்" பற்றி எனக்கு வேறு சொல்லத் தோன்றவில்லை. 0

Monday, November 22, 2010

இவர்களது எழுத்துமுறை - 16 - சா.கந்தசாமி

1. கேள்வி: நீங்க எழுதுகிற எழுத்து உங்களுக்குத் திருப்தியாக இருகிறதா?

எல்லாமே திருப்திதான். எப்படி திருப்தி இல்லாமல் அது வெளிவர முடியும்?
எழுதுகிறபோது அது பரிபூரணமாக வரும்கிற நம்பிக்கைதான். எழுதி முடித்த
பிறகு அதைப் பலமுறை திருத்தி எழுதறேன். ஒரு நாவலையோ சிறுகதையையோ
அச்சுக்குக் கொண்டு போறதுக்கு முன்னால் நான் அதில பரிபூரணமாக உழைக்கிறேன்.
பரிபூரணமாக என்று சொல்லும்போது 'இதைப் பத்திரிகை ஆசிரியர்கள் எப்படி
ஏற்றுக் கொள்வார்கள், வாசகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள' என்பதைப்
பற்றிய பரிபூரணமில்லை.என்னளவில் எப்படிப் பரிபூரணமாகச் செய்ய முடியும்
என்பதுதான் என் கவலை.

2. உங்கள் எழுத்துக்களில் மொழி வளமாக மிடுக்காக இல்லை என்ற குற்றச்சாட்டு
இருக்கிறதே?

மொழி என்பது அலங்காரமாக இருக்கக்கூடாது என்பது என் கொள்கை.
அண்ணா, கருணாநிதி, லா.ச.ரா இவர்களைப் படிச்சதுனாலே ஏற்பட்ட விளைவு
மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.

3. இலக்கியத்துக்கு அடிப்படை மொழி. அந்த மொழிக்கு நடை, அழகு அல்லது
அலங்காரம் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கிறீங்களா?

இலக்கியத்துக்கு மொழியே அவசியமில்லை. நான் அறிவு உள்ளவர்களை,
ஞானமுள்ளவர்களைப் பற்றி எழுதுகிறேன். எனக்கு craftல் நம்பிக்கை இல்லை.
கலையற்றவன்தான் craftஐப் பிடித்துக் கொள்ளவேண்டும். எனக்கு மொழியும்
தேவையில்லை. நான் பயன்படுத்துவதெல்லாம் புழக்கத்தில் உள்ள இருநூறு,
முன்னூறு சாதாண வார்த்தைகள்தான்.

4. இப்ப தமிழ் மொழியிலதான் எழுதப் போகிறோம். இந்த மொழிக்கு ஒரு வளம்
இருக்கு. அதை ஒட்டி சில விஷயம் இருக்கு.......

வளம் என்பது அலங்காரமில்லை. சங்க இலக்கியம் அலங்காரத்தை ஒழிச்சிருக்கு.


5. உங்கள் கதைகளில் 'கதைகளே' இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே!

நிச்சயமாக அதுதான். கதையிலிருந்து 'கதை'யை வெளியேற்றுவதுதான் என்
வேலை. கதை சொல்வது என் வேலை இல்லை. எல்லோரும் கதை சொல்வது
போல, கற்பனையாக, போலியாக கதை சொல்ல முடியாது. நான் வாழ்க்கையை
எழுதுகிறேன். வாழ்க்கை எனபது கதை அல்ல. நான் தனிப்பட்ட மனிதனுடைய
வாழ்க்கையைப் பற்றியும் சொல்வதில்லை. தனிப்பட்ட மனிதனை முன் நிறுத்தி
மனித சமுதாயத்தின் வாழ்க்கையை முழுக்கச் சொல்ல முடியுமா என்று பிரயாசைப்
படுகிறேன். மனிதன் சாசுவதமில்லை என்றாலும் மானுடம் சாசுவதமானது.
மனிதனுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் என்னுடைய நாவல்கள்.


6. நாவல்கள் எழுதுவதில் உங்களது கொள்கை என்ன?

வாழ்க்கையைப் பற்றி சொல்வதுதான் என் நாவல்கள். வாழ்க்கை எவ்வாறு
இருக்கிறது என்று நான் எழுதுகிறேன். இதற்கான தீர்வை வாசகர்கள்தான்
கண்டுபிடிக்க வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய அறிதலுக்கான வழிகாட்டி
யாகத்தான் நான் எழுதுகிறேன். 0

Tuesday, November 16, 2010

இவர்களது எழுத்துமுறை - 15 - ஆர்.கே.நாராயணன்

1. எழுதியவற்றில் எப்போதுமே நான் நிறைவு பெறுவது கிடையாது. என் முக்கிய
கவனம் எழுதவிருக்கும் புத்தகத்திலும், எழுத எண்ணிக் கொண்டிருக்கும் புத்தகத்திலும்
தான். கதையோ நாவலோ அது அச்சுக்குப் போனதுடன் அதைப் பற்றிய உற்சாகம் மறந்து
விடுகிறது. எழுதியதை நான் மீண்டும் பார்ப்பதில்லை. பார்க்கத் துணிவதுமில்லை.
வாழ்க்கையில் நான் முக்கியம் எனக் கருதுவது எது, அவற்றை எந்த அளவிற்கு என்
படைப்புகளில் வெளிப்படுத்தினேன் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல இயலாது.

2. வெளி நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைப் பற்றி எழுத வேண்டிய ஆசிரியர்களுக்கு
தாய் நாட்டைப்பற்றி ஒரு ஏக்க மனப்பான்மை உள்ள காரணத்தால், அவர்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் எழுத முடியும். யாரையும் இப்படி எழுதவேண்டும், இப்படி எழுதக்கூடாது என்று கூறுவதை நான் வெறுப்பவன். எனினும் எங்கு வாழ்க்கை அமைந்து விடுகிறதோ அந்த நாட்டின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டினால்தான் அது சாரமுள்ள உண்மைப் படைப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

3. மனித உறவைத்தான் நான் மிகவும் அதிகமாக, நெருக்கமாக மதிக்கிறேன். எந்த உருவில்
இருப்பினும், எல்லா உருவில் இருப்பினும், வீட்டிலும் சரி, வெளியிலும் சரி மனித உறவுதான்
உயிர் வாழ்வதைப் பயனுள்ளதாக ஆக்குகிறது. இந்தத் தத்துவத்தை என் படைப்புகளில்
நேர்த்தியுடன் வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன்.

4. என்னுடைய படைப்புகளுக்கு யாருடைய தூண்டுகோலும் கிடையாது. நாவலை எழுதும்
போது வேறு ஆசிரியர்களின் எந்த நாவலையும் படிக்காத வண்ணம் மற்றவர்களின்
தூண்டுகோலைத் தவிர்க்கிறேன். எப்போதும் ஏதாவது ஒரு நாவலில் நான் ஈடுபட்டுக்
கொண்டுள்ளதால், மற்றவர்கள் எழுதிய எந்த நாவலையும் நான் அநேகமாகத் தவிர்க்கிறேன்.
ஏனெனில் அவற்றில் ஏதாவநு ஒரு வகையில் ஒற்றுமைத் தனமை இருக்க நேரிடலாம். அல்லது
ஏதாவது ஒரு வழியில் தூண்டுகோலாகவும் அமைந்து விடலாம்.

5. எனக்குத் தூண்டுகோலாக அமைவதெல்லாம் வாழ்க்கை, சுற்றுப்புற சூழ்நிலை, ஒரு சிறிய
பெட்டிக்கடை (street shop) இவைதான். எங்கு சென்றாலும் நான் தேடுவது வாழ்க்கையைத்தான்.
மக்கள் அவர்களின் ஈடுபாடுகள், ஆசைகள், அவதிகள் - இவற்றைத்தான் நான் தேடுவது. 0

Monday, November 08, 2010

இவர்களது எழுத்துமுறை - 14 - டாக்டர். மு.வரதராசனார்

1. கேள்வி: கதைகளுக்கான கருத்து, சம்பவம் முதலியவைகளை நீங்கள் உண்மை
வாழ்க்கையிலிருந்து தேர்ந்து கொள்வதுண்டா? அல்லது எல்லாம் கற்பனையா?

பெரும்பாலும் சுற்றப்புறத்தார், நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கையில்
காணும் உண்மைச் சம்பவங்களையே கதைகளுக்குத் தேர்ந்து கொள்கிறேன். சில
சமயங்களில் கற்பனைச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

2. கேள்வி: நீங்கள் பலதரப்பட்ட நூல்களை எழுதியிருக்கிறீர்கள். அவற்றுள்
உங்களுக்கு மிகப் பிடித்தமானவை எவை?

நாவல்கள் கட்டுரைகள் எழுதுவதே.

3. தங்கள் நாவல்களில் எத்தகைய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன?

என் முந்தின நாவல்களில் காதலே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால்
பின்னர்எழுதிய நாவல்களிலோ சமூக, பொருளாதாரப் போராட்டங்களே முக்கியமாக
இடம் பெற்றுள்ளன.

4. கதாபாத்திரங்களின் விஷயமும் இப்படித்தானா? அதாவது வாழ்க்கையில் காணும்
நபர்களையே கதாபாத்திரங்களாக அமைத்து விடுவீர்களா?

ஆம். அறிந்தோ, அறியாமலோ சில நாவல்களில் என்னையே கூட
கதாபாத்திரமாகச் சித்தரித்தரித்துக் கொண்டிருக்கிறேன்.

5. நீங்கள் வேகமாக எழுதக் கூடியவரா? அல்லது, சொல்லி எழுதச் செய்யும்
வழக்கமுண்டா?

இரண்டுமில்லை. என் எழுத்துக்களை நானேதான் எழுதி முடிக்கும் வழக்க
முடையவன். கட்டுரைகள் மட்டும் சில வேளைகளில் சொல்லி எழுதச் செய்வதுண்டு.

6. தினமும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தில் - இந்த அளவு எழுதி முடிக்க
வேண்டுமென்ற நிர்ணயம் உண்டா? ஒரு நாவலை எழுதி முடிக்க சாதாரணமாக
எவ்வளவு காலம் பிடிக்கும்?

தினமும் எழுதுவது எனும் வழக்கம் கிடையாது. நினைத்தபோது எழுதுவேன்.
ஒரு நாவலை எழுதி முடிக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும்.

7. நாவலை எழுதி முடித்தபின் அதைப் படித்துத் திருத்தங்கள் செய்வதுண்டா?

அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

8. வெறும் பொழுது போக்காக என்று நான் எதையும் எழுதுவதில்லை. இடையிடையே
பொழுபோக்கு அம்சங்களை வாசகர்களைக் கவருவதற்கான ஒரு கருவியாகவே
பயன்படுத்துகிறேன். 0

Tuesday, November 02, 2010

இவர்களது எழுத்துமுறை - 13 - கு.அழகிரிசாமி

1. சிறுகதைகளைப் படைப்பதில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்க நெறிகள் யாவை?

என்ன உக்தியைக் கையாளலாம் என்பது பற்றி நான் தனியே யோசிப்பது கிடையாது.
நுணுக்கம், அமைப்பு இவைகளைப்பற்றியும் வரையறுத்துக்கொண்ட ஒருசட்ட வரம்புக்குள்
உட்பட்டு நான் எண்ணிப் பார்ப்பதும் கிடையாது. நேரடியாக அன்றாட வாழ்வில் பெறும்
அனுபவங்களை,அவற்றின் உணர்வுகளின் தூண்டுதலின் பேரில் மனத்தில் ஏற்படும்
கற்பனை வளத்துடன் சேர்த்து எழுதுகிறேன்.

2. மனிதத் தன்மையை விளைநிலமாகக் கொண்டு வளர்ந்து படரும் பல்வேறு கொடிகளே,
எழுத்துத் துறையில் நான் செய்யும் பல்வேறு பணிகள். சிலசமயங்களில் நான் கண்ட
உண்மைகளைக் கூறுவேன், நான் பெற்ற இன்பத்தை உணர்த்துவேன். நான் விரும்பும்
சீர்திருத்தை வற்புறுத்துவேன். நான் அழிக்க விரும்பும் தீமைகளைச் சாடுவேன்.
இத்தனையும் செய்யாவிட்டால் மன உலகில்கூட நான் சுதந்திர புருஷனாய் இருக்க
முடியாது.

3. எனக்கு அமைந்த எழுத்துக்கலையின் மூலம் நான் என்னையும், நான் வாழும்
உலகத்தையும் என்னளவில் உயர்த்த விரும்புகிறேன்.

4. என்.ஆர்.தாசன்:
------------
i. கு.அழகிரிசாமி ஒரு வித்தியாசமான நடையில் எழுதினார். அவரது நடையின்
குண அம்சங்கள் என்ன? அது எளிமையானது. நேரடித்தன்மை கொண்டது. சுற்றி
வளைத்து மூக்கைத் தொடாதது. மற்றவர்களைப்போல வார்த்தைகள் மூலம் மிரட்டவும்,
மயக்கவும், பிரமிப்பூட்டவும் முயலாமல், வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தைக்
குறைத்து, அதன் மூலம் கதையின் உள்ளடக்கங்களைத் தூக்கலாகத் தெரிய வைத்தவர்.

ii. கு.அ வின் கதைகள், வாசிப்பில் மேலான உணர்ச்சிரூபங்களை
(visual feelings)த்தோற்றுவிக்கும். அவை சொல்லப்படுவதற்கு வசதியாகச்
சுருக்கப்படும் போது சாதரணமாகத் தோன்றும். காரணம் அவரது கதைகள் ஸ்தூல
நிகழ்ச்சிகளில் காலூன்றிநிற்கவில்லை. நவீனச் சிறுகதையின் கூறு என்று கூட இதைச்
சொல்லலாம்.

iii. பொதுவாக கதைக்கான விஷயத்தில் மரபுவழிப்பட்டதை ஒதுக்கி விடுவதுதான்
கு.அ வின் வழக்கம்.

iv. மன இயல்புகளையும், இயக்கங்களையும் நினைவு வழியே 'அப்ஸ்ராக்ட்'டாக
கு.அசொல்வதில்லை. தத்ததுவ வாசகங்களாகவோ, சித்தாந்த வாய்ப்பாடுகளாகவோ
அவர்மாற்றித் தருவதில்லை. சிறுசிறு சம்பவங்களின் மூலமே இதைச் செய்கிறார்.

v. பொதுவாகவே கு.அ வின் கதைகளில் ஆசிரியரே வெளியில் தெரியமாட்டார்.
பிரச்சினைகளும், அவற்றின் முகங்களுமே தெரியும். அவை அவைகளை, அவை
அவைகளுக்குரிய ஸ்தானங்களில் அமர்த்திவிட்டு அவர் ஒதுங்கி விடுவார்.

vi. உக்திகளை சிலுவைகளாக்கி அவர் கதைகளைச் சுமக்கச் செய்யவில்லை. அதே
சமயத்தில் கதையின் உள்ளடக்கத்திற்கேற்ப, இயல்பான முறையில், வாசகரது
புரிதலுக்கு வசதியாக உக்திகளைக் கையாண்டுள்ளார். o