Thursday, September 22, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 16 . எழுத்தாளர் சந்திப்பு - 3 (அசோகமித்திரன்)

'கணையாழி' தொடங்கிய 1965ஆம் ஆண்டின் இறுதியில், திரு. அசோமித்திரன்
அவர்களை சென்னை பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தான்
முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவர் கணையாழியின் சென்னை பொறுப்பாளராக இருந்தார். கணையாழியின் முதல் இதழ் முதல் பெற விரும்பி, என்னிடம் இல்லாத இதழ்களை வேண்டி அவரைச் சந்தித்தேன். கைவசம் இருந்த முன் இதழ்களைத் தந்து, விட்டுப்போனவற்றைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி அப்படியே பிறகு வாங்கியும் தந்த அவரது அன்பையும், கரிசனத்தையும் நான் என்றும் மறக்க முடியாது.

அன்று அவர் அதிகம் பிபலமாகி இருக்கவில்லை. அவரது இயற் பெயரான
ஜ.தியாகராஜன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார். கலைமகள் நடத்திய
'வண்ணச் சிறுகதை'ப் போட்டி'யில் அவரது 'மஞ்சள் கயிறு' என்ற கதை
முதற் பரிசு பெற்ற பிறகுதான் அவர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தார். பிறகு
தான் 'அசோகமித்திரன்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

கணையாழி இதழ்களுக்காகாக அவரைச் சந்தித்த பிறகு, சென்னை சென்ற
போதெல்லாம் தி.நகர் பேருந்து நிலையத்துக்கு எதிரே தாமோதர ரெட்டிதெருவில்
இருந்த அவரது வீட்டுக்குச் சென்று பலமுறை சந்தித்திருக்கிறேன்.

1967ல் திருச்சிக்கு, வானொலி நிலையத்தின் 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' பதவிக்கான
தேர்வு ஒன்றிற்காக நான் சென்றிருந்தபோது அதே தேர்வுக்கு அசோமித்திரனும்
வந்திருந்தார். அப்போது அவர் எங்கும் வேலையில் இல்லை. "இது வெறும்
கண்துடைப்பு! முன்பே ஆளைத் தேர்ந்து வைத்துக்கொண்டு நம்மை அழைத்திருக்
கிறார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை. வீணாக செலவு செய்து கொண்டு வந்தது
தான் மிச்சம்" என்று விரக்தியோடு பேசினார். முடிவு அவர் சொன்னபடியேதான்
ஆயிற்று. வானொலியில் முன்பே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்
ஒருவருக்குத்தான் அந்த வேலை கிடைத்தது,

கஸ்தூரிரங்கன் சென்னைக்குத் திரும்பி, கணையாழி பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்ட பின், அசோகமித்திரன் அதிலிருந்து விலகிக்கொண்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு மேலாக கணையாழியின் வளர்ச்சிக்கு பலன் கருதாமல் உழைத்தவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத ஆதங்கத்தில் அவர் விலகியதாகப் பேச்சு அடிபட்டது. அதற்குப் பிறகு அவர் கணையாழியில் எழுதவுமில்லை. தொடர்பும் இல்லை. தன்னைப் புறக்கணிப்பதாக அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது என்றார்கள். எனக்கு அது பற்றி அப்போது அதிகம் தெரிந்திருக்கவில்லை.

இந்நிலையில் கணையாழி தொடங்கி முப்பது ஆண்டுகள் 1995ல் ஆனதை ஒட்டி,கணையாழியின் கடந்த காலங்களை நினைவு படுத்தும் வகையில் ஒரு தொடர் எழுதுமாறு திரு.கி.க அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி 19995 ஜூன் முதல் 'கணையாழியின் பரிணாம வளர்ச்சி' என்ற தலைப்பில், முதல் இதழ் முதல் மாதம் ஒரு இதழாக அதன் வளர்ச்சியை எழுதி வந்தேன். அத்தொடரில் அசோகமித்திரன் படைப்புகளை அவ்வப்போது குறிப்பிட்டும் அவரது பொறுப்பில் சென்னையிலிருந்து வெளியானது பற்றிக் குறிப்பிட்டும் வந்திருக்கிறேன். ஆனால் யாரோ அவரிடம் அத்தொடரில் அவரை இருட்டிப்பு செய்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். முன்பே வருத்தம் இருந்த நிலையில் கஸ்தூரிரங்கள் அவர்கள் சொல்லித்தான் நான் அவரைக் குறிப்பிடாது எழுதி வருவதாக எண்ணி இருக்கிறார்.

அந்நிலையில், ஒருமுறை அவரை நான் இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில்
சந்தித்தபோது ஆர்வமுடன் பேச அணுகிய போது அவர் சுமுகம் காட்டவில்லை.
பின்னணி தெரியாமல், "நான் கணையாழியில் எழுதி வரும் தொடரைப் பார்க்கிறீர்களா?"என்று கேட்டதற்கு அவர் அசிரத்தையாய் "பார்த்து என்ன ஆகப் போகிறது? நீங்களும் அப்படித்தான்!" என்றார். பிறகு நான் அவரது அதிருப்தியின் காரணத்தை உணர்ந்து,"நீங்கள் படிக்கவில்லையா? கிடைத்தால் பாருங்கள். உங்களைப்பற்றி பல இதழ்களில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்காமல் யார் சொல்வதையாவது நம்பாதீர்கள்" என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் திருப்தியடைந்த மாதிரி அவரது முகத்தோற்றம் இல்லாதது எனக்கு வருத்தத்தை அளித்தது. பிறகு அவருடனான தொடர்பு விட்டுப் போயிற்று. 0

Saturday, September 17, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் – 15.எழுத்தாளர்கள் சந்திப்பு – 2.ஜெயகாந்தன்





எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில் படித்தேன். பிறகு ‘ஆனந்தவிகடனி’ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின. அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிற வராகவும் எனக்குத் தெரிந்தார்.

1962ல் அரியலூரில் நடைபெற்ற ‘கலை இலக்கியப் பெருமன்ற’ ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் அவர்கள் பேச வந்தபோது, மன்றத்தின் அப்போதைய செயலாளரும், என் உறவினருமான திரு.ஏ.ஆர்.சீனிவாசன் அவர்கள், நான் ஜெயகாந்தனின் ரசிகன் என்பதை அறிந்திருந்ததால், அவரை எனக்கு அறிமுகப்படுத்துவதற்காக என்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார். நானும் ஆர்வத்துடன் சென்றேன்.

திரு.சீனிவாசன் அவர்கள் என்னை ஜெயகாந்தன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் இன்னொரு அரிய வாய்ப்பினையும் எனக்கு நல்கினார். அன்றைய விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டியவர் வராத நிலையில், என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். ஜெயகாந்தன் அவர்களைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் வந்த எனக்கு, அவரது கூட்டத்து்க்குத் தலைமை தாங்கும் வாய்ப்புக் கிட்டுமென்று நான் கனவு கூடக் கண்டதில்லை. அதனால், அவரது பிரம்மாண்டம் கருதி அதை ஏற்கத் தயங்கினேன். பேராசிரியர் எம்.எஸ்.நாடாரும் அவ்விழாவுக்கு வந்திருந்தார. அப்போது நான் ‘ஆனந்தபோதினி’, ‘பிரசண்ட விகடனை’த் தாண்டி, மெல்ல,’ஆனந்தவிகட’னில் எழுதும் வளர்ச்சி பெற்றிருந்தேன். அதனைச் சுட்டிக் காட்டி திரு.சீனிவாசன் அவர்கள்,” நீங்களும் எழுத்தாளர் – அதோடு அவரது தீவிர ரசிகர் என்பதால், நீங்கள் தலைமை ஏற்கத் தகுதியானவர்தாம் தயங்க வேண்டாம்” என்று சொல்லி, தலைமை ஏற்க வைத்தார்.

மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் ஜெயகாந்தன் என் பக்கம் திரும்பிப் பார்க்கவோ சுமுகம் காட்டவோ இல்லை. அப்போதைய அவரது மனநிலையில் என்னைப் போன்ற கற்றுக்குட்டி எழுத்தாளர்களோ ரசிகர்களோ அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். நெருக்கமற்ற எவரிடமும் அவர் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார் என்ற பேச்சு இருந்தது. எனவே அவரது உதாசீனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது கூட்டத்துக்குத் தலைமையேற்கும் வாய்ப்புக் கிடைத்த பூரிப்பில் அப்போது நான் இருந்தேன்.

எனது தலைமை உரையில், “திரு.ஜெயகாந்தன் அவர்கள் புதுமைப்பித்தனுக்குப் பிறகு நமக்குக் கிடைத்த அரிய எழுத்தாளர். புதுமைப்பித்தனைப்போலவே அற்புதமாக எழுதுகிறார்” என்றேன். ஜெயகாந்தன் அவர்கள் தனது உரையில், “திரு.சபாநாயகம் அவர்கள் நான் புதுமைப்பித்தனைப் போல எழுதுவதாகச் சொன்னார். இல்லை! நான் புதுமைப்பித்தனை விடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்” என்று வெட்டினார். அப்போது யார் என்ன பேசினாலும் வெட்டிப் பேசுவது அவரது பாணியாக இருந்தது.

கூட்டம் முடிந்து திரு.சீனிவான் வீட்டில் மதிய உணவுக்குப்பின் பேசிக் கொண்டிருந்தபோது, “நீங்கள் என்ன புத்தகம் படிப்பீர்கள்” என்று ஒரு வாசகனின் அசட்டு ஆர்வத்தோடு கேட்டேன். ” நான் எதுவும் படிப்பதில்லை” என்று மறுபடியும் என்னை வெட்டினார்.மேலும் அவருடன் பேச்சைத் தொடர முடியாதபடி எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

பின்னாளில் அவருடன் நெருக்கமாகப் பழகும் நிலை ஏற்பட்டபோது, ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் பல புத்தகங்களைக் குறிப்பிட்டார். உடனிருந்த நான் “என்ன ஜே.கே! உங்களை நான் முதன்முதல் சந்தித்தபோது, ‘நான் எதுவுமே படிப்பதிலை’ என்றீர்களே!” என்று கேட்டேன். “அதுவா? அப்போது நீங்கள் புதுசில்லையா? ஒரு மிரட்சிக்காக அப்படிச் சொல்லி வைத்தேன்!” என்று சிரித்தார். அப்போது அவருடன் ஒரு படமும் எடுத்துக் கொண்டேன்.

வேலூர் மாவட்டம் திருபபத்தூரில் அவருக்குப் பல நண்பர்கள உண்டு. அவர்களில் எனது நண்பரான திரு.பி.ச.குப்புசாமி அவருக்கு மிகவும் அணுக்கமானவர். சென்னையில் அவருக்கு அலுப்பு ஏற்படும்போதெல்லாம் திருப்பத்தூருக்கு வந்து விடுவார். அப்படி அவர் வரும் போதெல்லாம் குப்புசாமி எனக்கு எழுதி அங்கு என்னையும் அழைத்துக் கொள்ளுவார். இரண்டு மூன்று நாட்கள் இலக்கிய போதையோடு நண்பர் குழாம் மெய்ம்மறந்து நிற்கும்.

அப்படி ஒரு முறை, திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஜம்னாமரத்தூர் என்கிற மலைகிராமத்தில் அங்குள்ள பயணியர் மாளிகையில் திரு.குப்புசாமியின் ஏற்பாட்டின் படி நண்பர்கள் புடைசூழ ஜெயகாந்தன் அவர்களுடன் கழித்த மூன்று நாட்கள் மறகக வியலாதவை. கூடத்தின் நடுவே, அவர் அக்கிராசனர் போல் கட்டிலில் அவர் சம்மணமிட்டு, நடராஜரின் சடாமுடி போல தலைமுடி விரிந்து பிடரியில் தொங்க, மீசையை முறுக்கிய படி, ஒரு சிம்மம் போல் அமர்ந்திருக்க, நாங்கள் கட்டிலைச் சுற்றி அமர்ந்திருப்போம். திரையுலக நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள மற்றம் அந்த மலைப் பிரதேசத்துப் பிரஜைகள் சிலரும் அதில் அடக்கம். பாரதியை தனது குருவாகக் கொண்ட அவரது பேச்சில், பாரதியின் கவிதை வரிகள் உணர்ச்சி பொங்க, வெள்ளமாய்க் கொட்டும். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்ததால், ‘தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த….’ போன்ற பாடல்களை இடையிடையே அவர் பாடும் போது, கேட்கச் சிலிர்ப்பாக இருக்கும். ‘கள்ளால் மயங்குவது போலே, கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்’ என்கிற பாரதியின் வரிகளைத்தான், அவரது பேச்சிலும் பாட்டிலும் கிறங்கி நின்ற எங்கள் நிலையைச் சொல்ல முடியும். ஒரு மேதையின் சந்நிதானத்தில் நிற்கிற ஒருவித பரவசத்தை நான் அப்போது அனுபவிதேன்.

திடீரென்று எழுந்து திறந்தவெளிக்கு வந்து, அவரது ‘ஆலமரம் ஆலமரம், பாலூத்தும் ஆலமரம்…’ என்கிற அற்புதமான பாடலைத் தனி ராகத்தில் பாடுவார். எல்லோரும் வெளியில் வந்து அதை ரசிப்போம். சிலரை அழைத்து அதைப் பாடச் செய்வார். உடனே காட்சி மாறும். அவரது ‘ஒருமனிதன், ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் ஹென்றி பாடுகவதாக வரும், ‘சோப்பெங்கப்பா……. சோப்பெங்கப்பா……’ சொல்லி விட்டு, குனிந்து நிமர்ந்து ‘சோப்பெங்கப்பா……. சோப்பெங்கப்பா……’ என்று சுற்றிச் சுற்றி வந்து நடன மிடுவார். அது முன்பே பரிச்சயமான குப்புசாமி போன்றவர்களும் உடன் அப்படியே பாடி ஆடியபடி, சுற்றி வருவர். ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாய் அப்போது அவர் தோன்றுவார்.

பிறகு உள்ளே சபை மறுபடியும் கூடும். கேள்வி நேரம் தொடங்கும். பலரும் பல்வித வினாக்களைத் தொடுப்பர். அவரும் அவருக்கே உரித்ததான சமத்காரத்துடன் பதில் அளிப்பார். அப்போது அங்கிருந்த திருப்பத்தூர் கல்லூரி மாணவர்களில் ஒருவர், “ஐயா, உங்களது சிறுகதைத் தலைப்புக்களைத் திருடி, தம் படங்களுக்கு, – உதாரணமாக ‘புதிய வார்ப்புகள்’ போன்று பெயரிடுகிறார்களே……”என்று இழுத்தார். அதற்கு ஜே.கே சற்று அதட்டலாக, “ஏம்’பா! அந்தக்கதைய நீ எழுதினியா?” என்று கேட்டார். மாணவர் மிரட்சியுடன் “இல்லை ஐயா, நீங்கதான் எழுதுனீங்க!” என்றார். “கதைய எழுதின நானே கவலைப்படலே, உனக்கென்ன? நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எவரும் எடுத்தாளுவர். போ!” என்றார். அதுதான் ஜெயகாந்தன்!

70களில் நான் உளுந்தூர்பேட்டைக்கு அருகில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் என்னும் ஊரில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு வீட்டின்மாடியில் குடி இருந்தேன். ஒரு நாள் மாலை பொழுது சாயும் நேரத்தில், என் பகுதிக்கு வரும் மாடிப்படியில் “சாமியே சரணம் ஐயப்பா” என்று சத்தம் கேட்டது. அது எனக்குச் சம்பந்தமற்றதும் அந்த நேரத்துக்குப் பொருத்தமற்றதுமாக இருந்ததால், நான் அதிர்ந்து எழுந்து படிகளை நோக்கிப் போனேன். கருப்பு உடையில் கழுத்தில துளசிமணி மாலைகளுடன் நண்பர் பி.ச.குப்புசாமி படியேறி வந்து கொண்டிருந்தார். எனக்கு வியப்பு அதிகமாயிற்று. ‘இந்த நேரத்தில் இவர் எப்படி?’ என்று நான் புருவம் உயர்த்தியதும், அவர் மறுபடியும் ‘சாமியே சரணம் ஐயப்பா!’ என்று ராகம் இழுத்தபடி, “என்ன சபா! தெரியலியா?” என்றார். “அய்ய! இது என்ன வேஷம் குப்புசாமி?’ எனறு கேட்டேன். “சபரி மலைக்குப் போறோம் கீழே ஜே.கே காரில் இருக்கிறார்!” என்றார். “அப்படியா!” என்று பரபரத்தபடி கீழே ஓடினேன்.

வீட்டு வாசலில் அவரது வெள்ளைக் கார் நின்றிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் இருந்த ஜே.கே எனைக் கண்டதும், “சாமியே…. சரணம்!” என்றார். காரின் உள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் அதே சரணத்தை வழி மொழிந்தன. அவர்கள் – திருப்பத்தூர் வையவன், தண்டபாணி, வெள்ளக்குட்டை ஆறுமுகம் ஆகியோர். எல்லோரும் ஜே.கே உட்பட கருப்பு உடையில் கழுத்தில் துளசிமணி மாலைகளுடன் இருந்தனர். “வாங்க ஜே.கே! மேலே போகலாம்” என்று அழைத்தேன். ” நாங்க விரத்தத்துலே இருக்கோம். மலைக்குப் போய்த் திரும்பும் வரைககும் இல்லம் எல்லாம் விலக்கம்! உங்க பள்ளிக் கூடம் எங்கே இருக்கு? அங்கே போகலாம்” என்றார். “போகலாம், கொஞ்சம் இருங்க. ராத்திரி ஆகாரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டு வரேன்” என்றேன. ” அதெல்லாம் வேணாம்! எல்லாம் கொண்டு வந்திருக்கோம். பாலுக்கு மட்டும் சொல்லுங்க. ஏறுங்க போவோம்” என்றார். நான் மேலே ஓடி என் மனைவியிடம் பால் காய்ச்சி அனைவருக்கும் அனுப்பச் சொல்லிவிட்டு வந்து காரில் ஏறிக் கொண்டேன்.

பள்ளிக்கூடம் கூப்பிடு தொலைவில்தான் இருந்தது. விளையாட்டு மைதானத்தை ஒட்டிய திறந்த காற்றோட்டமான அறையில், கார் டிக்கியிலிருந்து அவர்களது மூட்டை முடிச்சுகள் – உணவுப்பண்டங்கள் அடங்கியவை – இறக்கப்பட்டன. வகுப்பு சாய்வு மேஜைகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, வட்டமாக உட்கார சிமிண்ட்தரை விஸ்தாரமாக்கபட்டது. சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்த பின் பள்ளிக் கிணற்றில் அனைவரும் குளித்து, சந்தனப் பூச்சணிந்து அறைக்குத் திரும்பி, அய்யப்பப் பாடலகள் ஒலிக்கப் பூஜை நடத்தினார்கள். பிறகு மூட்டைகளைப் பிரித்து, கொண்டு வந்திருந்த கடலை, பொரி உருண்டைகள், அதிரசம், பழங்களை உண்டு பாலருந்தினார்கள். என்னையும் சாப்பிட வைத்தார்கள்.

பிறகு ஆரம்பித்தது சபை. வழக்கம் போல ஜே.கே சபை நடுவில் சம்மணமிட்டு அமர, நாங்கள் அனைவரும் சுற்றிலும் உடகர்ந்ததும பாரதி பாடம் ஆரம்பமாயிற்று. பின்னர் அவரது இனிய கர்நாடக இசைப்பாடலில் கிறங்கி நின்றோம். அப்போது நடுநிசியாகி இருந்தது. ” வாங்க நிலவொளிக்குப் போகலாம்” என்று ஜே.கே எழுந்நததும் நாங்களும் தொடரந்தோம். எதிரே இருந்த மைதானத்தில் வட்டமாகக் கூடினோம்.

நிலவு பளிச்சென்று பரவி இருந்தது. எல்லும் கருப்பு உடையில், நான் வெள்ளை உடையில். திடீரென்று ஜே.கே, “சிலும்பிப் போடடா!…..” என்றபடி கைகளை உயர்த்தி எம்பிக் குதித்தார். உடனே எல்லோரும் அவரைப் பின்பற்றி, “சிலும்பிப் போடடா…. சிலும்பிப் போடடா!…..” என்று கூவியபடி, வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்துச் சுற்றி வந்தார்கள். எனக்கு அந்த விளயாட்டு பரிச்சயமில்லாததால் வட்டத்துக்கு நடுவில் நழுவினேன். நிலவு வெளிச்சப் பின்னணியில், கருப்பு உடையில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து நடனமாடினர்கள். இந்த விளையாட்டு முடிந்ததும், “சோப்பெங்கப்பா போடுங்கப்பா” என்று ஜே.கே சொல்லி அவரே ஆட ஆரம்பித்ததும், என்னைத் தவிர எல்லோரும் “சோப்பெங்கப்பா…சோப்பெங்கப்பா……” நடனம் ஆடினார்கள். எனக்குக் கூச்சமாகிருந்ததுடன், அந்த ஊரில் தலைமை ஆசிரியராக இருக்கும் நான் அப்படிக் கூத்தாடுவதை ஊர்க்கார்ர்கள் யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயமும் காரணமாய் நடுவில் நின்றபடி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்படி பாட்டும் கூத்தும் பிரசங்கமுமாய்ப பொழு புலர்ந்தது. கையெழுத்து புலனாகு முன்பாக ஜே.கேயும் நண்பர்களும் ‘சாமியே சரணம் ஐயப்பா!’ என்று விளித்ததபடி காரில் ஏறி விடை பெற்றார்கள். அது அற்புதமான அனுபவம்! ஆண்டு பல கடந்தும் அந்த இனிய அனுபவம் இன்னும் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றது.

இப்படி எத்தனையோ சந்திப்புகள அவருடன் இந்த 50 ஆண்டுகளில்! அவர் எவ்வளவு நெருக்கமாக நம்மோடு பழகினாலும், அவரோடு சரிசமமாக வைத்து எண்ண முடியவில்லை. இந்த நூற்றாண்டின் மகத்தான இலக்கிய மேதையின் முன்னிலையில் உள்ளோம் என்பதும் அவரது நட்பு என்பது பெரும்பேறு என்பதுமே நினைவில் நிற்கிறது. 0

Thursday, September 08, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 14.எழுத்தாளர்கள் சந்திப்பு - 1 (அகிலன்)

சென்னை செல்லும்போதெல்லாம் இலக்கியப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய்
பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திப்பது போல, பிரபல எழுத்தாளர்களைச சந்திப்பதும்
ஆரம்ப காலத்தில் எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. அத்தகைய சந்திப்புகள்
பிறகு நட்பாகவும் நெருக்கமாகவும் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது.

முதன்முதல் எனக்கு அமரர் - தமிழின் முதல் ஞானபீட விருதாளர் - திரு.அகிலனுடன்
ஏற்பட்ட சந்திப்பு தற்செயலானது. 1957 வாக்கில், என் உறவினர் ஒருவரின் திருமணம்
நடந்த ஒரு சிறு கிராமத்தில் வைத்து நிகழ்ந்தது அந்த சந்திப்பு.

அதற்கு முன்பே, 1951ல் நான் கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்தே, கலைமகளில்
வந்த அவரது கதைகளில் மனம் பறிகொடுத்து அவரது தீவிர ரசிகனாகி இருந்தேன்.
நானும் கதை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவரது எழுத்துக்களைப்
படித்த பிறகுதான். பின்னாளில் என் மகனுக்கு 'அகிலநாயகம்' என்றும், நான் கட்டிய
என் வீட்டுக்கு 'அகிலம்' என்றும் பெயரிடும் அளவுக்கு நான் அவரது அதீத ரசிகனாக
இருந்தேன்.

1950 களில், அவர் இளைஞர்களின் நெஞ்சைக் கவரும் இதமான, விரசம் சிறிதுமற்ற
காதல் கதைகளும் நாவலும் எழுதியவர். அவற்றில் 'காதல் பிறந்தது' என்ற சிறுகதையும்,
'நெஞ்சின் அலைகள்' என்ற கலைமகளில வந்த தொடர் நாவலும் இன்னும் என் நெஞ்சில்
நான் அசை போடும் படைப்புகள். அது போலவே பத்திரிகையில் தொடராக வராமல்
நேரடியாக நூலாக வந்து பல பதிப்புகள் கண்ட 'சினேகிதி' என்ற அற்புதமான காதல்
நவீனத்தைப் பத்து தடவைக்கு மேல் கல்லூரிக் காலத்தில் படித்ததும், பார்ப்பவரிடம்
எல்லாம் அதைப் படிக்கப் பரிந்துரைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது. பின்னாளில்
அந்த நாவலைப் பகடி செய்து, 'அமுதசுரபி'யில் அமரர் விந்தன் அவர்கள் 'அன்பு
அலறுகிறது' என்ற தலைப்பில் நாவல் எழுதிப் பரபரப்பு ஊட்டினார்.

'கலைமகள்' அவருக்குத் தாய் வீடு போல. கி.வா.ஐ பெரிதும் ஊக்கமளித்தார். மறக்க
முடியாத அற்புதமான சிறுகதைகளையும், நாவல்களையும் அவர் கலைமகளில எழுதி
புகழின் உச்சியில் அக்காலகட்டத்தில் இருந்தார். கலைமகள் நடத்திய முதல் நாவல்
போட்டியில் அவரது 'பெண்' எனும் நாவல் 1000ரூ. பரிசு பெற்றது. 50களில் அது பெரிய
தொகை. தொடர்ந்து பல பரிசுகளை - ராஜா அண்ணாமலை செட்டியார் 10000ரூ. பரிசு,
சாகித்யஅகாதமி விருது, ஞானபீடப் பரிசு என அவர் வாங்காத பரிசே இல்லை என்ற
நிலைக்கு உயர்ந்தார். அப்போது டாக்டர் மு.வ. அவர்களுக்கும், அகிலன் அவர்களுக்கும்
தான் ரசிகர்கள அதிகம். திருமணங்களில் அவர்களது நூல்களதான் அதிமும் பரிசாக
வழங்கப்பட்டன. ஐம்பதுகளின் மத்தியில் ஜெயகாந்தன் பிரபலமாகும் வரை அவரது
கவர்ச்சி இளைஞர் மத்தியில் மங்கவே இல்லை.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டது தான், அவர்
பத்தாண்டுகளுக்கு மேலாக வெளி உலகுடன் தொடர்பு கொள்ளாமலும், தோனறாமலும்
இருந்ததை மாற்றி மக்கள் மத்தியில் தோன்றிப் பங்கேற்ற நிகழ்ச்சி எனலாம். அதுவரை
அவர் மிகப் பிரபலமாகி இருந்தாலும், அவரது போட்டோ கூட எந்தப் பத்திரிகையிலும்
வெளி வந்திருக்கவில்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை.
தன்னை வெளிக் காட்டிக் கொளவதில்லை என்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததால்
அவரை யாரும் எங்கேயாவது பார்த்தாலும் அவர் தான் 'அகிலன்' என்று தெரியாமல்
இருந்தது. ஆனால் அந்த அஞ்ஞாதவாசத்தை உடைத்து அவர் வெளியே வரவேண்டிய
நிர்ப்பந்தம் ஒன்று பின்னர் ஏற்பட்டதால் தான், அவர் வெளிப்பட்டார். நண்பரின்
திருமணம் தான் அந்த முதல் நிகழ்ச்சி.

அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்ததை ஒரு எத்தன் பயன் படுத்திக்
கொண்டான். அவரது தீவிர ரசிகர்களைத் தேடிச் சென்று, "நான் அகிலன். பயணத்தின்
போது பர்ஸ் தொலைந்து விட்டது. பஸ்ஸுகுப் பணம் வேண்டும். போய் அனுப்பி
வைக்கிறேன்" என்ற சொல்லிப் பலரிடம் கணிசமான தொகையை வாங்கி விட்டான்.
கண்மூடித்தனமான ரசிகர்களில் பலர் பதறிப்போய், போலி அகிலனுக்குப் பண உதவி
செய்துள்ளனர். பிறகு யாரோ ஒரு சித்திக்கப் பொறுமை இருந்த ரசிகர் சந்தேகப்பட்டு
அகிலனுக்குப் போன் செய்ய குட்டு வெளிப்பட்டது. பல நாள் திருடன் ஒருநாள்
பிடிபட்டு சிறைக்குப் போனான். அதன் பிறகு அகிலன் விழித்துக் கொண்டார். பொது
மேடைகளில் தோன்ற ஆரம்பித்தார். பத்திரிகைகளில் அவரது படத்துடன் அவரது
படைப்புகள் வெளி வரத் தொடங்கின.

இந்த நிலையில்தான் அவர் என் நண்பரின் திருமணத்தில் பேச வந்திருந்தார்.
அந்தநாட்களில் பெருந் தனவந்தர்களின் வீட்டுத் திருமணங்களில் இசைக்கச்சேரிக்கு
ஏற்பாடு செய்வது வழக்கம். இலக்கிய ஆர்வலர்கள் பிரபல பேச்சாளர்களை, திருமணத்தில்
வாழ்த்திப்பேச அழைப்பதும் வழக்கமாய் இருந்தது. அகிலன் அவர்கள் பேசும் நிகழ்ச்சிக்குத்
தலைமை ஏற்கும்படி நண்பர் என்னைக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் அதிகம்
பிரபலமாகி இருக்கவில்லை என்றாலும் அந்தக் குக்கிராமத்தின் அந்தக் கூட்டத்தில்
அகிலனைப் பற்றி அதிகமும் அறிந்து வைத்திருந்ததும் அவரது ரசிகனாகவும் நான்
மட்டுமே கிடைத்தேன். அகிலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்
கூட என்று அப்போது அறிந்தேன். அது முதல் அகிலன் அவர்களுடன் நெருக்கமான
தொடர்பு ஏற்பட்டது.

அவரது கதைகளையும், நாவல்களையும் அவை வெளியானதும பாராட்டி எழுதுவேன்.
அவரும் தவறாமல் பதில் எழுதுவார். பிறகு ஒரு நாள் அவரது திரையுலகப் பிரவேசம்
நிகழ்ந்தது. கல்கியில் வெளியாகிப் பிரபலமாகி இருந்த 'பாவை விளக்கு' என்ற அவரது
நாவல் சிவாஜி கணேசன் நடித்துப் பிரபலமாகப் பேசப்பட்ட பின், அவரது இன்னொரு
நாவலான 'வாழ்வு எங்கே' 'குலமகள் ராதை' என்ற பெயரில் படமான போது தான்
அவர் தான் பார்த்து வந்த இரயில்வே சார்ட்டர் பணியை ராஜிநாமா செயது விட்டு,
திரைப்படத் துறையில் முழு நேரப் பணியாளராக நுழைந்தார் . அப்போது நான் அவருக்கு
ஒரு கடிதம் எழுதினேன்.

முன்பு கலைமகளில் 'மின்னுவதெல்லாம்' என்றொரு கதை எழுதி இருந்தார். திரை
உலகம் மின்னுகிற உலகம், அதில் சேர ஆசைப்பட்டு வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ளக்
கூடாது என்று அப்படி வாழ்வை நாசமாக்கிக் கொண்ட ஒரு நடிகையைப் பாத்திரமாக்கி
அவர் எச்சரிக்கை விடுத்த கதை அது. அதை நினைவூட்டித்தான் நான் கடிதம் எழுதினேன்.
'திரை உலகத்தை மின்னுகிற உலகம் என்று எச்சரிக்கை விடுத்த நீங்களே அந்த
மின்னுகிற உலகத்தில் நுழையலாமா?' என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், 'நம்மைப்
போன்ற படைப்பாளிகள் உள்ளே நுழைந்துதான் திருத்த வேண்டும். துணிந்து தான்
இறங்குகிறேன். என்னால் முடியும் என நம்புகிறேன்' என்று பதில் எழுதினார்.

ஆனால் 'நாய் வாலை நிமிர்த்த அதைப் படைத்தவனே முயன்றாலும் முடியாது'
என்பதை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார். படைப்பாளிகளுக்கு மரியாதையோ,
அவர்களது படைப்புக்குரிய அங்கீகாரமோ அங்கு கிடைக்காது என்பதை உணர்ந்து
அதை விட்டு வெளியேறினார். வெளியே வந்த பிறகுதான் தான் பார்த்துக் கொண்டிருந்த
நல்ல வேலை விட்டதன் கஷ்டம் பரிந்தது. கொஞ்ச நாட்கள் சிரமப் பட்ட பிறகு,
நண்பர்களின் உதவியால் சென்னை வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணி
ஏற்று கடைசி வரை அதில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் சென்னை வானொலியில் பணியாற்றியபோது, நான் ஒரு விஷயமாயக அவரது
யோசனையைக் கேட்க, சென்னை சென்று அவரது வீட்டில் சந்தித்தேன். அது 1966. நான்
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
ஆசிரியத் தொழிலை விரும்பித்தான் ஏற்றிருந்தேன் என்றாலும் எழுத்துத் துறையில் சேர
வேண்டும் என்னும் எனது வேட்கை - பத்து ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் மாணவ
திட்டத்தில் ஆசிரியர் குழுவில் சேர விரும்பி அது கிடைக்காமல் போன பிறகும் -
தீராமல், அகில இந்திய வானொலி புதிதாக அபப்போது கோவையில் தொடங்க இருந்த
கிளை நிலையத்துக்கு 'Script writer' பதவிக்கு மனுச்செய்து, ஒராயிரம் பேர்களில் தேர்வு
செய்யப்பட்ட 12 பேரில் ஒருவனாக, எழுத்துத் தெர்வுக்கு அழைககப் பட்டேன். என்னுடன்
தேர்வு செய்யப் பட்டவர்களில் திரு.அசோகமித்திரனும், கவிஞர் தெசிணி என்கிற
திரு.தெய்வசிகாமணியும் இருந்தனர். அந்தப் பணியில் சேர்வது விஷயமாகத்தான், அகிலன் அவர்களை அவர் வானொலியில் இருந்ததால் யோசனை கேட்கச் சென்றிருந்தேன்.

அவர் கேட்டார், "ஏன் இப்போது இருக்கிற பணியை விட்டு இதில் சேர விரும்புகறீர்கள்?"
என்று.

"வானொலியில் சேர்ந்தால் எழுத்துத் துறையில் வளர்ச்சி பெறலாம் என எண்ணுகிறேன்"
என்றேன்.

"அதுதான் இல்லை. வெளியே இருந்தால் பத்திரிகைகளில் சுதந்திரமாய் எழுதலாம். இங்கேஅந்த சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்காது. பண்ணைச் செயதிகளிலும் உழவர் நிகழ்ச்சிகளிலும் 'அவரை, துவரை' என்று பேசிக் கொண்டிருக்கத்தான் முடியும். மேலும் இதில் பதவி உயர்வுக்கு ஆசைப்பட முடியாது. இப்பொது நீங்கள் பார்க்கும் தலைமை ஆசிரியர் பணி சமூகத்தில் கௌரமான பதவி. அந்த கௌரவம், சமூக அங்கீகாரம் இங்கே உங்களுக்குக் கிடைக்காது.என்னைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்கு முயற்சிக்க வேண்டாம். பேசாமல் கௌரவமான தற்போதைய பணியிலேயே தொடருங்கள்" என்று சொன்னார்.

ஆனால் எனக்கு எழுத்தாளர் பதவி ஆசை கண்ணை மறைத்தது. அவரிடம் அப்போது
ஏதும் மறுத்துச் சொல்லாமல் திருச்சிக்கு எழுத்துத் தேர்வுக்குச் சென்றேன். ஆனல் முன்பே
அவர்கள் தீர்மானித்து வைத்திருந்த அத்துறையின் மூத்த ஊழியருக்கு அப்பதவி கிடைத்தது.
எனது ஏமாற்றத்தை திரு.அகிலன் அவர்களுக்குச் சொல்லவில்லை. அதன் பிறகு அவருடன்
இருந்த தொடர்பும் விட்டுப் போயிற்றறு. 0

Saturday, September 03, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 13.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு - 5 (கி.கஸ்தூரிரங்கன்)




கணையாழி 1965ல் தொடங்கப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகுதான் எனக்கு
அது பார்க்கக் கிடைத்தது. உடனே சந்தா அனுப்பி வைத்தேன். அப்போது அதன்
விலை 40 பைசா தான். அதோடு, முதல் இதழிலிருந்தே வாங்கிச் சேகரிக்கும்
என் வழக்கப்படி, விட்டுப்போன இதழ்களைக் கேட்டு ஆசிரியர் கஸ்தூரிரங்கள்
அவர்களுக்கு எழுதினேன். சில இதழ்களே கிடைத்தன. எஞ்சியவற்றை அதன்
சென்னை அலுவலகத்தின் பொறுப்பாளரான திரு.அசோகமித்திரன் அவர்களிடம்
கேட்டு, அவரும் அன்போடு, விட்டுப் போனவற்றைத் தேடி வாங்கி அனுப்பினார்.

பிறகு சென்னைக்கு கஸ்தூரிரங்கன் அவர்கள் வந்த பிறகு, சென்னை சென்ற
போதெல்லாம் அவரைச் சந்தித்து வந்தேன். பந்தா எதுவும் காட்டாமல் புன்
முறுவலுடன் வரவேற்று அன்போடு பேசுவார். 1972ல் 'கணையாழி'யில் என்
முதல் பிரவேசமாய் 'வாருமையா வாசகரே' என்ற கவிதை வெளியானது.
அதற்கு ரூ.5 சன்மானமாக வந்தது. சிறு பத்திரிகைகளில் சன்மானமெல்லாம்
அப்போது (ஏன் இப்போதும் தான்) கிடையாது. பிறகு 1978ல் 'தி.ஜா நினைவுக்
குறுநாவல் போட்டி'யில் அந்த ஆண்டுக்கான 12 பரிசுக் குறுநாவல்களில்
என்னுடைய 'அசல் திரும்பவில்லை'யும் தேர்வாகிப் பிரசுரமானதில் புதிய
உற்சாகமும் படைப்பார்வமும் மிகுந்தது. அந்தப் பிரசுரத்துக்கு ரூ.200 சன்மானம்
வந்தது. சன்மானம் அப்போதைக்கு அதிகம் என்பதோடு கணையாழியின் அங்கீகாரம்
கிடைத்தது பெரிய வரமாக எனக்குப் பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில்
மேலும் 3 குறுநாவல்கள் - 'இனி ஒரு தடவை', 'யானை இளைத்தால்', 'மீட்பு'
ஆகியவை அதே திட்டத்தில் வெளியாயின. 'இனி ஒரு தடவை' குறு நாவலை
கஸ்தூரிரங்கள் அவர்களும், ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த திரு.இ.பா
அவர்களும் அடுத்து அவர்களைச் சந்தித்தபோது பாராட்டிப் பேசியது என் இலக்கிய
வாழ்வில் மறக்க முடியாதது.

பிறகு சந்தித்தபோதெல்லாம் 'கணையாழி விமர்சனத்'துக்கு வந்த நூல்களைக்
கொடுத்து விமர்சனம் எழுத வைத்தார். அது கணையாழியில் எழுத எனக்கு நிரந்தர
இடத்தைப் பெற உதவியது. பின்னர் 1995ல் 'கணையாழி' தொடங்கி 30 ஆண்டுகள்
நிறைவுற்றதை ஒட்டி புதிய அம்சங்களைச் சேர்த்த வகையில், என்னை 'கணையாழி'
யின் தொடக்கம் முதல் ஒவ்வோரு இதழாக 'தணையாழியின் பரிணாம வளர்ச்சி'
என்ற தலைப்பில் கணையாழியின் இலக்கியப் பணியை விமர்சித்து எழுத வைத்தார்.
2000 வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய அத்தொடருக்கு நல்ல வரவேற்பு
கிட்டியது. அதனால் எனக்கு இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் கிட்டியது.

ஒவ்வொரு இதழாக எழுதினால் அதிக காலம் பிடிக்குமே, அதற்குப் பதிலாக
ஒவ்வொரு ஆண்டாக எழுதலாமே என்று நான் கேட்டபோது 'அது பற்றிக் கவலை
வேண்டாம். ஒவ்வொரு இதழாகவே எழுதுங்கள்' என்றார் ஆசிரியர். இது பற்றி ஒரு
எள்ளலான விமர்சனம் 'தினமணி கதிரி'ல் வந்தது. அப்போது அதன் ஆசிரியராக இருந்த
திரு.மாலன் அவர்கள், 'படித்ததில் பிடித்தது','படித்ததில் இடித்தது' என்ற தலைப்பில்
வாரம் தோறும் எழுதி வந்தார். ஒரு வாரம் என் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டு,
'ஒவ்வொரு மாதமாக எழுதினால் 30 ஆண்டுகளை எழுதி முடிக்க 30 ஆண்டுகள்
ஆகுமே அது சாத்யமா?' என்று இடித்திருந்தார்.

பிறகு 'கணையாழி' தசராவில் பொறுப்பில் வந்த பிறகு சில மாதங்கள் கழித்து,
'புதிய அமசங்களைப் புகுத்த இருப்பதால் இத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கலாமா?' என்று அப்போதைய ஆசிரியரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது.
'சரி' என்பதைத் தவிர வேறு நான் என்ன எழுத முடியும்? அதை ஒட்டி, செவியாறலாக
எனக்குக் கிடைத்த தகவல் என் மீது கி.க அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தை
உறுதிப் படுத்தியது. இட நெருக்கடியால் எனது தொடர் நிறுத்தப்பட உள்ளதாகக்
கேள்விப்பட்ட கி.க அவர்கள், 'இட நெருக்கடிதான் காரணமென்றால் நான் எழுதி
வரும் கடைசிப் பக்கங்களை நிறுத்தி, அதைத் தொடருங்கள்' என்று சொன்னதாகக்
கேள்விப்பட்டேன். அதற்கு என் மீது அவர் கொண்ட அபிமானம் என்பதை விட,
கணையாழியின் இலக்கியப்பணி பற்றி அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளும்
வாய்ப்பு போகிறதே என்ற ஆதங்கமே காரணம் என்று நான் நினைத்தேன். 2005 உடன்
அத்தொடர் முழுமை பெறாது நிறுத்தப்பட்டது.

பிறகு, 'கலைஞன் பதிப்பக' உரிமையாளர் திரு.மா.நந்தன் அவர்கள் கணையாழி இதழ்
தொகுப்பினை வெளியிட விரும்பி கி.க அவர்களை அணுகியபோது, என்னைத் தொடர்பு
கொண்டு எழுத ஏற்பாடு செய்தார். முதல் பத்தாண்டு இதழ்களைத் தொகுத்து 'கணையாழி
களஞ்சியம்' என்ற தலைப்பில் முதல் தொகுதி என் தயாரிப்பில் வெளியாயிற்று.
இதற்கிடையில் 'கணையாழியின் 30 ஆண்டு இதழ்களையும் இணையத்தில் ஏற்ற
திரு.அரவிந்தன்(கனிமொழியின் தற்போதைய கணவர்) உதவியில் முயன்றபோது, கி.க
அவர்கள் தங்களிடம் கூட இல்லாது என்னிடம் மட்டுமே அத்தனை இதழ்களும் இருந்ததால்,
அவற்றை அனுப்பித் தருமாறும், இணையத்தில் ஏற்றியதும் திருப்பி அனுப்பி வைப்பதாகவும்
என்னைக் கேட்டுக் கொண்டார். பொக்கிஷம் போல பழைய இதழ்களைப் பைன்ட் செய்து
வைத்துப் பாதுகாத்து வந்த எனக்கு, திரும்பக் கிடைக்கும் நம்பிக்கை இல்லாத்தால்
யாரையும் நம்பி அனுப்பி இழக்க மனமில்லை. ஆனால் என் மதிப்பிற்குரிய ஆசிரியரின்
வேண்டுகோளை மறுக்கத் தயங்கிய போது, 'பயப்படாதீர்கள்! நிச்சயம் பத்திரமாய்த்
திருப்பித் தந்து விடுகிறேன்' என்று கி.க அவர்கள் தொலைபேசியில் உறுதி அளித்ததின்
பேரில் அரை மனதுடன் லாரி சர்வீஸ் மூலம் 30 ஆண்டு கணையாழியின் பைன்ட்
வால்யூம்களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதனால் 'கணையாழி களஞ்சியத்'தின்
அடுத்தடுத்த தொகுப்புகளை என்னால் தயாரிக்க முடியவில்லை. கி.க அவர்கள் திரு இ.பா,
மற்றும் என்.எஸ்.ஜகந்நாதன் ஆகியோரைக் கொண்டு மீதி 3 தொகுதிகளையும் தயாரிக்கச்
செய்தார்.

இதனிடையே அரவிந்தன் அவர்கள் மூலம் இணையத்தில் 'கணையாழி'யை ஏற்றச் செய்த முயற்சி ஆரம்பத்திலேயே ஏதோ காரணங்களால் தொடர முடியாது போய் விட்டது. அதை அறிந்த நான் கி.க அவர்களுக்குப் போன் செய்து, எனது கணையாழி வால்யூம்களைத் திருப்பித் தருமாறு கேட்டேன். அதற்கு கி.க வெகு சாதாரணமாக சொன்ன பதில் என் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. 'சாரி சபாநாயகம். தொகுப்புக்காக பைன்டுகள் பிரிக்கபட்டதால் அவை சிதைத்து போய்விட்டன!' என்று கொஞ்சமும் தன் உறுதி மொழியின் உறுத்தலின்றி அவர் சொன்ன போது, கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டுத் தருவதாக நம் குழந்தையை அழைத்துப் போன ஒருவர் திருப்பிக் கேட்கையில், 'சாரி குழந்தை இறந்து போய் விட்டது!' என்று சொன்னால் நம் மனம் என்ன பாடுபடுமோ அத்தகைய வேதனையை அப்போது நான் அனுபவித்தேன். அதன் பிறகு சூடு கண்டபூனையாய், பல நெருங்கிய நண்பர்கள் என் இதர தொகுப்புகளைக் கேட்டு என்ன உறுதி மொழி கொடுத்தாலும் கொடுப்பதில்லை. 0