Monday, April 25, 2011

இவர்களது எழுத்துமுறை - 35.எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)

1. கேள்வி (சுபமங்களா): பிறந்தது யாழ்ப்பாணம், குடும்பமாகி வாழ்ந்தது
மட்டக்களப்பு. ஆனால் உங்கள் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்தை மையமிட்டே
இருக்கின்றன. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

பதில்: 'தீ' நாவல் மட்டக்களப்பு சூழலை வைத்து எழுதியபோதிலும்
மட்டக்களப்பு பழக்க வழக்கங்களையோ சொற்களையோ போட்டு அதற்கொரு
பிராந்தியத் தன்மையை நான் கொடுக்கவில்லை. ஆனால் பிராந்தியத் தன்மை
கொடுத்து செய்யப்பட்டது அனைத்துமே யாழ்ப்பாணத்தைக் களனாகக்
கொண்டவைதான். காரணம் யாழ் வாழ்க்கையைக் காரசாரமாக விவாதித்தவன்
நான் யாழ்ப்பாணத்து ஜாதியத்தின் கொடுமையை நேரடியாக அனுபவித்தவன்
நான். எனவே யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாண வாழ்க்கையின் பழக்க
வழக்கங்களை உட்கொண்டு யாழ்ப்பாணத்தவனாக இருந்து கொண்டே, அதே
சமயத்தில் அதிலிருந்து வேறுபட்டவனாக இருந்து பார்க்கும் பொழுது ஒரு
அலாதியான ஒட்டுறவு அற்ற ஒரு துறவு போன்ற மனோபக்குவத்துடன் அந்த
வாழ்க்கையைப் பார்க்க முடிந்தது. மற்றவர்களுக்கு இல்லாத பார்வை அது.
எனவேதான் மற்றவர்கள் கதைகளிலே இல்லாத ஒரு தன்மையை என்னுடைய
அணுகுமுறையிலே பார்க்கலாம். அது துறவு நிலை. அதில் பந்தபாசம் கிடையாது.
அதுதான் அந்த வித்தியாசம்.

2. கேள்வி: உங்களது படைப்புகள் மீதான விமர்சனங்களும் பாராட்டுகளும்
இருந்தாலும் அதன் உண்மை நிலை - தனித்துவம் உங்களுக்கேயான பிரத்தி
யேகமான சிறப்பு என்ன என்று சொல்ல முடியுமா?

பதில்: Plot, Theme இரண்டுக்கும் ஏற்றதாக நடையையும் உருவத்தையும்
கொடுக்க வேண்டும் என்று நான் கலைஞனாக முயற்சி செய்தபோதிலும்,
அதற்கு ஒரு முழுமையான இலக்கிய உருவம் கொடுப்பதற்கு இத்தகைய நடை
தான் உதவும் என்று நான் நினைத்த போதிலும் இந்த வேறுபட்ட நடைகளைக்
கூட என்னுடைய கதைகளைச் சுவாசிக்கும் பலரும் இது எஸ்.பொவினுடையது
தான் என்று பெயர் போடாமலே இனங்கண்டு கொள்வார்கள். இந்த நடை
வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எப்படி இனம் காண்கிறார்கள்? சற்றுப்
பெருமையாகச் சொன்னாலும் ஊடுபாவாக உள்ளது இலக்கியச் சத்தியம். நான்
எதைச் சொல்லப் புறப்பட்ட போதிலும் என்னுடைய பக்குவத்திற்கேற்ப நான்
எதைச் சத்தியம் என்று நினைக்கிறேனோ அதன் ஒலி அதில் இருக்கும். இது
சத்தியத்தின் ஒலி, நடைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேர்ந்த வாசகனால்
இனங்காண முடியும். எனவே There was something in common in
the diversityof styles which I employ. அதை மறுக்க இயலாது.

3. கேள்வி: உங்களுக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் என்ன பிரச்சினை?
நற்போக்கு இயக்கம் என்ற ஒன்றை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள்?

பதில்: முற்போக்கு இலக்கியத்துக்கும் எனக்கும் அதிகம் முரண்பாடு
இருந்ததாகச் சொல்ல முடியாது. இந்த முற்போக்கு இலக்கிய கோஷத்தை
ஒரு கட்டத்தில் தலைமையேற்று நடத்த வந்தவர்கள் தவறான பாதையில்
இட்டுச் சென்றார்கள்.அது எனக்குத் தெரிந்தது. அதனால் முரண்பட்டேன்.
மார்க்ஸீயம் வளர்க்கப்பட்ட ரஷ்யாவில் உள்ள எழுத்துக்கள்தான் எங்கள்
மாதிரிகள் என்று சொல்லும் பொழுது, எங்களுடைய மண்ணிலிருந்தும்,
எங்களுடைய தேசச் சூழலிலிருந்தும் அந்நியப்படுத்தும் வேலையை அவர்கள்
செய்தார்கள். தமிழ் இலக்கியத்திலிருந்து வந்து விட்டால் தமிழ் மொழியினதும்,
இனத்தினதும் தனித்துவமான சில விழுமியங்களும் சில மரபுகளும் இருக்கின்றன.
தமிழ்ச் சொற்களை நான் உபயோகிக்கும் போது அந்த தமிழ் இனத்தினுடைய
அடையாளத்தைப் பேணும் ஒரு பணியிலும் நான் ஈடுபட்டிருக்கிறேன்.
நம்முடைய மரபுகளின் தொடர்ச்சியாகவே இந்தப் புதுமைகள் தன்மைகள்
செய்ய வேண்டும். அதுதான் நற்போக்கு.

4. கேள்வி: இன்றைய நவீன தமிழ் இலக்கியம் பற்றி?

பதில்: நம் தமிழ் வாழ்கையில் உள்ள அவலங்களை - அவதிகளை -
ஏக்கங்களை - எதிர்பார்ப்புகளை - அவர்களுடைய நம்பிக்கைகளை -
சோகங்களை தமிழ் இலக்கியங்களாகப் படைத்துத் தர முனையும்போது
தமிழ் மண்ணின் உண்மையான உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எந்த இஸமும்
எனக்கு ஒரு புதிய வலுவைத் தராது என்றே நம்புகிறேன்.இலக்கியவாதிகள்
படைப்புச் சத்தியத்துக்கு முதன்மை கொடுத்துப்படைக்கட்டும். அதன்
உண்மையே அழகு. பொய்க்குத்தான் பூவேலையும்பூச்சுவேலையும் தேவை.
படைப்பிலே சத்தியத்தைக் கோட்டை விட்டுவிட்டு, அதன் வலிமைக்கு
இசம்களின் துணையைத் தேடுவதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. 0

Wednesday, April 20, 2011

'இவர்களது எழுத்துமுறை' - 34.வாசவன்

1. நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள்
என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி
உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்
கொண்டு இலக்கிய உலகத்துக்கு வந்த நான், இப்போது தீயைக் கண்டு அஞ்சவில்லை.
தீமையைக் கண்டே அஞ்சி அலறுகிறேன். இதனலேயே சிக்கிக்கொண்ட தவிப்பொடு,
மீள வழி இருந்தாலும் கூட மீளப்பிடிக்காமல் அலறுகிறேன்.

2. 'நான் சிக்கிக்கொண்டேன்' என்று நான் குறிப்பிட்டதற்கு, இதைவிட்டு ஓடிவிட
நினைக்கிறேன் என்று பொருள் அல்ல. நான் மீள்வதற்காகச் சிக்கிக் கொள்ள
வில்லை. உயிரின் பந்தத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்தில்
கிடைக்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த ஊதியத்தையும் நான் பிச்சையாகக்
கருதுகிறேன். இந்த நேர்மையில் பாதிநாள் சோறு வேகும். மீதிநாள் நெஞ்சு வேகும்.

3. எழுத்தையும் என்னையும் நான் எப்போதும் வேறாக்கிக் கொண்டதில்லை. எழுத்து
புல் நுனியில் மின்னும் பனித்துளியே. அதைக் கையில் எடுத்துப் பார்க்க ஆசைப்
பட்டால், அது 'டப்'பென்று உடைந்து போகும். இதைப் புரிந்து வைத்துக் கொண்டி
ருக்கிற பல எழுத்தாளர்கள் பிழைப்புக்கு ஓர் இடத்தில் காலை ஊன்றிக் கொண்டு,
எழுத்தின் முட்கள் வாழ்க்கையில் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பலபேர்
களுக்குப் பிழைப்பைக் கொடுக்கிற ஒரு குடும்பத்தில் பிறந்த நான், என்பிழைப்பில்
மண்ணை அடித்துக் கொண்டு வந்த பிறகு, முட்களுக்குப் பயந்தால் முடியுமா? நான் பயப்படாததற்காக முட்கள் குத்தாமல் இருக்குமா? இன்றுவரை குத்திக் கொண்டே இருக்கின்றன.

4. எழுத்து எனக்கும் என் குடும்பத்துக்கும் சோற்றுப்பானை. என்னுடைய
சிருஷ்டிகளில் நான் எதைக் கொண்டு வருகிறேன் என்பதில் அரிசியும் கலந்து
இருந்தது. இதற்காகநான் எத்தனையொ பத்திரிகைகளில் எப்படி எல்லாமோ
ஒத்துப் போனேன் என்பதை வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன். திருக்குறளுக்கு
உரை எழுதினேன். துப்பறியும் கதை எழுதினேன். விழுந்து விழுந்து ப(பி)டிக்கக்
கூடிய காதல் கதை எழுதினேன். வெங்காய சாம்பார்க்கதை எழுதினேன். கொலு
பொம்மைக்கதை எழுதினேன். இப்படி எல்லாம் 'இன்னார்க்கு இன்னபடி' என்று
எழுதிதான் வளர்ந்தேன். என் வருமானம் மட்டும் வளரவில்லை.

5. எனக்கு ஒரு கொள்கை அல்ல; இரண்டு கொள்கைகள் இருந்தன. ஒன்று: எதை
எழுதினாலும் 'இது வாசவன்' என்று முத்திரை விழ வேண்டும். இரண்டு: எழுத்துதான்
எனக்கு ஜீவன்; ஜீவனம். இத்தனை ஆண்டு காலமாக இந்த இரண்டு கொள்கைகளையும்
நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

6. நான் அந்தக் காலத்தில் செய்த புதுமைகளும் புரட்சிகளும் ஒரு வகையில்
தீமையானவை.சமூகத்தின் உண்மைகளை, மறைவிடங்களை ஒரு வேட்டை நாயைப்
போல துரத்தும்போது, அந்த வெறியில் உணமையான மனித உணர்ச்சிகளை, எனக்குத்
தெரியாமல் எங்கெங்கோ சிதறிக் கிடந்த மனிதத் தன்மைகளை நான் காட்டத் தவறி
விட்டேன். ஆவேசம் பிடித்த எழுத்தாளனால் நேர்கிற தீமை இது. அவசரத்தில்
கண்ணை மூடிக்கொள்கிற குருட்டுத்தனம் இது. எழுத்தாளன் பொய் சாட்சி சொல்வது
தீமை.

7. பிறகு நான் நான் புரட்சியைச் செய்ததில்லை. என்னை உயரமாகக் காட்டுவதற்கு
நான் கழைக்கூத்து ஆடுவதில்லை. கவடி பாய்வதில்லை. கூச்சல் போடுவதில்லை.
கூட்டம் சேர்ப்பதில்லை. இப்பொழுது கங்கையின் அமைதியைத் தேடுவது என் எழுத்தின்
நோக்கம். ஆயிரம் புயல்கள் அழிந்து போயின. ஆனால் கங்கை இன்னும் இருக்கிறது.
நாளைக்கும் இருக்கும்.

8. ஒரு காலத்தில் நான் நிறைய எழுதினேன். பத்திரிகைகளுக்குத் தீனி கொடுத்துக்
கொடுத்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் குறைவாகவே
எழுதுகிறேன். ஆனால் நிறைய எழுத வேண்டும் என்ற தவிப்பில் ஒவ்வொரு சொல்லாக
ஊற்றுக் கண்ணைத் திறந்து எடுக்கிறேன். 0

Monday, April 11, 2011

'இவர்களது எழுத்துமுறை' - 33.எம்.வி.வெங்கட்ராம்

1. என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும்,
பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும்,
சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன்.

2.ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜன், வடுவூர் துரைசாமி அய்யங்கார்
முதலியவர்கள் தழுவலாகவோ, சொந்தமாகவோ எழுதிய நாவல்களையும்,
கலைமகள், ஆனந்தவிகடன் உள்ளிட்ட மாத, வார இதழ்களையும் ஆர்வத்துடன்
படித்ததால் நானும் ஏன் எழுதக்கூடாது என்ற அடங்காத ஆசை என்னுள்
மூண்டது. இந்த ஆசை தவிர்க்கமுடியாத துன்பமாகி எழுதுகிற முயற்சியில்
ஈடுபட்டேன்.

3. எனக்கு பத்திரிகையில் பெயரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை
இருந்தது. அப்போது எனக்கு பதினைந்து பதினாறு வயசுதான் இருக்கும்.
எஸ்எஸ்.எல்.சி முடிப்பதற்குள்ளேயே ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி
விட்டேன். எழுதிய கதைகளை கலைமகள், ஆனந்தவிகடன், பிரசண்டவிகடன்
போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். சில கதைகள் திரும்பி வரும்.
சில அங்கேயே தங்கிவிடும். ஆனால் யாருமே வெளியிடவில்லை. ஆயிரக்
கணக்கான பக்கங்கள் எழுதியதன் பயனாக எனக்கு மொழியின்மேல் ஒரு
ஆளுமை, கட்டுப்பாடு ஏற்பட்டது. இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன்.

4. பண்டிதர்களுடனோ, எழுத்தாளர்களுடனோ அப்போது எனக்குப் பழக்க
மில்லை. எனக்கு சங்கோஜம் அதிகம். அதனால் நான் எழுதிய கதையை
யாரிடமும் காண்பிப்பது கிடையாது. நான் பாட்டுக்கு எழுதி அனுப்பிக்
கொண்டே இருப்பேன்.

5. சென்னையில தங்கியிருந்தபோது என் செலவுகளையும் பார்த்துக் கொண்டு,
என்னுடைய பெரிய குடும்பத்தின் தேவைக்களுக்கும் பணம் அனுப்ப வேண்டிய
சூழ்நிலை. அதனால் ஒவ்வொரு நாளும் பத்திரிகை அலுவலகங்களுக்கும்,
புத்தக வெளியீட்டு நிறுவனங்களுக்கும் அலைந்தேன். அவர்கள் எது
கேட்டாலும் எழுதித் தர நான் தயாராய் இருந்தேன். ஆனால், என் தேவை
களுக்காக என் எழுத்தின் தரத்தைக் குறைத்து எப்போதுமே நான் காம்ப்ரமைஸ்
செய்து கொண்டதில்லை.

6. என்னுடைய குடும்பச் சூழ்நிலை எனக்குச் சாதகமாக இல்லாதிருந்தும் கூட
நானே விரும்பி எழுத்துப் பணியை மேற்கொண்டேன். என்னுடைய ஆன்மீகத்
தேட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இலக்கியத் தேட்டத்தையும் நான் கருதுகிறேன்.
ஆனால் இதன் எல்லையை நான் இன்னும்தொடவில்லை. சாதிக்க வேண்டியது
இன்னும் ஏராளம் உண்டு. 0