Wednesday, January 18, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 6

நான் கண்ட சிஷெல்ஸ் - 6: கல்வி - மருத்துவம் எல்லாம் இலவசம்.

விக்டோரியா 25000 மக்களைக் கொண்ட தலைநகரமும், துறைமுகமும் ஆகும்.

ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத் தொகை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகட்கே ஒதுக்கப் படுகிறது. இதனால் மக்களிடையே 80 விழுக்காடுக்கும் அதிகமாக எழுத்தறிவு வளர்ச்சியும், உடல் நலச் செம்மையும் காணப்படுகிறது.

சிஷெல்ஸில் கிரியோல் (Creole), ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மூன்று மொழிகளை ஆட்சிமொழிகளாக அங்கீகரித்துள்ளார்கள். எல்லா மக்களாலும் பேசப்படும் கிரியோல் மிகப் பழைமையான மொழி. ஆப்பிரிக்க மற்றும் பிரஞ்ச் மொழிகளைக் கலப்பாகக் கொண்டது. தேசீயமொழியான கிரியோலில்தான் மக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

கல்வி இங்கு எல்லோருக்கும் இலவசம். இப்பொதுதான் நம் நாட்டில் அமுலில் இருக்கிற - எல்லா வகுப்புகளுக்கும் இலவச பாட மற்றும் நோட்டுப் புத்தகங்கள் திட்டம் - எழுதுபொருட்கள் உட்பட, அங்கு வெகு நாட்களாகவே செயல் பட்டு வருகிறது. அத்துடன் இலவச பேருந்து பயண வசதியும் எல்லா பிள்ளைகளுக்கும் அங்கே தரப்படுகிறது. கல்விமொழி ஆங்கிலமும் பிரஞ்சும். அரசுப் பள்ளிகளின் தரம் நமது நராட்சிப் பள்ளிகளில் உள்ளபடிதான். இந்தப் பள்ளிகளில்தான் வசதியற்ற மக்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்களில் அதிகமும், கலப்பின மக்களான உள்ளுர்வாசிகள் தாம். பிள்ளைகளில் அதிகம் பேர் பள்ளி வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்களைவிட ஆகிருதி மிக்கவர்களாகத் தோற்றம் தருபவர்கள். ஆசிரியர்களைப் பெயர் சொல்லியே அழைப்பவர்கள். என் மகள் மங்களநாயகி இத்தகைய அரசுப் பள்ளியில்தான் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். தலைக்குமேல் உயரமான அவள் வகுப்பு மாணவர்கள் 'மிஸஸ் மங்ளா' என்றே அழைப்பார்கள். கட்டுப்படுத்த முடியாதபடியும் படிப்பில் அக்கறை அற்றவர்களாயும் இருப்பதால் ஆசிரியர்கள் என்னதான் முன்றாலும் அவர்களிடம் வேலை வாங்க முடியவில்லையாம். எல்லாம் இலவசம் என்பதால் பெற்றோருக்கும் தம் மக்களின் படிப்பில் அக்கறை இல்லை. மேலதிகாரிகளும் ஆசிரியர்களது இந்தக் குறைபாட்டுக்கு செவி சாய்ப்பதில்லை. அதனால் உண்மையாக உழைக்க விரும்பினாலும் பலனில்லை.


மாறாக நம் நகரங்களில் உள்ளது போலவே தரமான தனியார் பள்ளிகள் உள்ளன. ஆனால் அங்கு கல்விக்கட்டணம் நமது தனியார் தொழிற்கல்லூரிகள் போல மிக அதிகம். ஆண்டுக்கு 2-3 லட்சம் போல உயர்நிலைப் பள்ளிக்கே ஆகிறது. அதனால் வசதியுள்ளவர்கள் பிள்ளைகளே இங்கு பயில்கிறார்கள். பிரைமரி என்பது 1-5 வகுப்பு வரையிலானது. அடுத்து செகண்டரி. இதை A leval என்கிறார்கள். இது 6 முதல் 10 வரை. அடுத்து O level. நம் பிளஸ் 2 போல. இதில் 'பிரகாசமான வெற்றி' பெறும் மாணவர்களை அரசாங்கமே உதவித் தொகை கொடுத்து வௌ¤நாடுகளுக்கு மேற்கல்வி பயில அனுப்புகிறது. தங்கள் நாட்டின் அறிவுஜீவிகஆளை மேம்படுத்த அரசின் கொள்கை இது. செகண்டரிக்குப் பின் தொழிற்கல்வி பயில விரும்புகிறவர் களுக்கு பாலிடெக்னிக் பள்ளிகளும் (Vocatinal schools) உள்ளன. கம்யூட்டர் சயின்ஸ் நம் நாட்டைப் போலவே அதிகமான மாணவர்களை ஈர்க்கிறது. பெண்கள் அதிகமும் நர்சிங் படிப்பில் சேர்கிறார்கள். நர்சிங் படிப்பில் சேர பெரும் போட்டி. ஏனென்றால் இங்குள்ள அரசு மருத்துவ மனைகளில் உடனே வேலை கிடைத்து விடுகிறது.

4 வயதில் Maternity school என்ற படிப்பில் சேர்க்கலாம். இது நம் Pre-Primary போல. இது முடிந்து - 5 வயதில் தான் Piraimary முதல் வகுப்பு. 1997ல் நம் இந்திராகாந்தி திறந்தவௌ¤ப் பல்கலைக் கழகம் தன் கிளை ஒன்றை இங்கே திறந்துள்ளது. இதில் கலை, வணிகவியல் பட்டப் படிப்பும் சட்டப்படிப்பும் கற்பிக்கப் படுகின்றன.

இங்கு எல்லா அலுவலங்களும் பள்ளிகள் உட்பட- காலை 8 மணிக்கே துவங்கி விடுகின்றன. பள்ளிக்கூடங்கள் மாலை 3 மணிக்கும் மற்ற அலுவலகங்கள் - தனியார் நிறுவனமானாலும் மாலை 4 மணியுடனும் முடிவடைய வேண்டும். தொழிலாளர் நலம் பேணும் பொதுவுடமைச் சித்தாந்த நாடு ஆதலால் இந்த வேலை நேரக் கணக்கில் கடுமையாக இருக்கிறார்கள். ஓவர்டைம், கதவைப் பாதி சார்த்திக் கொண்டு வேலை செய்தல் என்பதெல்லாம் கூடாது. கட்டாயமாக மாலை 4 மணிக்கு அலுவல்கஆளை முடித்துக் கொண்டு மூடி விடவேண்டும். அதே போல சனி, ஞாயிறு எல்லோருக்கும் கட்டாய விடுமுறை. அந்த இரண்டு நாளும் கீழ்மட்ட மக்கள் 5 நாளில் சம்பாதித்ததை நாள் முழுதும் குடித்துக் கழிக்கிறார்கள். 'அலுவலகங்களில், அறிவாளிக்குத் தனிச் சலுகை ஏதும் இல்லை. அறிவாளிக்கும் முட்டாளுக்கும் ஒரே சம்பளம்தான்.உங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை' என்பது நம் நாட்டுத் திறமைசாலி களின் மனக்குறை. சம்பளமும் பிரசிடென்ட் வரை ஒன்றும் அதீத வித்யாசமில்லை. ஆனால் கடைசி தொழிலாளிக்கும் கூட ஏறத்தாழ ரூ.5000 (நம் பணத்தில் ரூ. 40,000) ஊதியம் கிடைக்கிறது. அதனால் வாழ்க்கை மோசமில்லை.

பொதுச் சுகாதாரம் இங்கு நன்கு பேணப்படுகிறது. சிங்கப்பூர் போல நூறு சதவீத சுத்தம் இல்லை என்றாலும் நாள் முழுதும் மினி வேன்களில் துப்புரவுத் தொழிலாளர்கள்- அதிமும் பெண்கள்- கைகளில் நீண்ட பெருக்குகிற படல்களும் தோளில் பெரிய பிளாஸ்டிக் பையுமாகச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான பீச் போன்ற இடங்களில் குப்பை சேராமல் பார்த்துக் கொள்கிறார்கள். நம் ஊர்களில் உள்ளது போல குப்பைத் தொட்டிகள் தெருவுக்குத் தெரு இல்லை. ஒரு பகுதியின் முடிவில் நடமாட்டம் மிகுந்த சாலையருகில் பெரிய பெரிய பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் 4,5 வைக்கப் பட்டுள்ளன. மக்கள் காலை 7 1/2 மணிக்கு அலுவலுக்குச் செல்லும் போது வீடுகளில் நாள் முழுதும் சேர்ந்திருக்கிற குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்து இந்தத் தொட்டிகளில் போட்டு விட்டுப் போகிறார்கள். இது விஷயத்தில் மக்களது பொறுப்புணர்ச்சி பாராட்டும்படி உள்ளது. நம்மூர்போல குப்பையை வௌ¤யே தெருவில் எறிவதோ பொதுஇடத்தில் கொட்டுவதோ இல்லை. காரில் செல்பவர்களும் டிக்கியில் குப்பைப் பைகளை வைத்துக் கொணர்ந்து நிறுத்தி பொதுத் தொட்டிகளில் போட்டு விட்டுப் போகிறார்கள். அதனால் எங்கேயும் குப்பை மேடுகளைப் பார்க்க முடியாது. இந்தத் தொட்டிகளில் சேரும் குப்பைகளை அடிக்கடி லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள்.

தலை நகர் விக்டோரியாவில் பெரிய பொதுமருத்துவ மனை உள்ளது. மற்ற - மக்கள் அதிகம் உள்ள பிராலன் போன்று 3 தீவுகளிலும் பொது மருத்துவமனைகள் உள்ளன. இந்த நாட்டுக் குடிமக்கள் எல்லோருக்கும் மருத்துவ வசதி இலவசம். பெரிய அறுவைசிகிச்சை ஆனாலும், எக்ஸ்ரே, ஸ்கேன் எதுவானாலும் கட்டணமில்லை. மக்களது உடல்நலம் பற்றி அரசு காட்டும் அக்கறையால் இங்கு இறப்பு விகிதம் குறைவு. சராசரி வயது 72.7.

முன்பே குறிப்பிட்டபடி, இங்கு பணியாற்றும் டாக்டர்கள் மக்களிடம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்புகிறபடிதான் வைத்தியம் செய்யவேண்டும்.

எல்லாவற்றிற்கும் ஊசிதான்; எக்ஸ்ரேதான்! அவசியமில்லை என்று சொன்னால் உடனே பிரெசிடெண்டுக்குப் புகார்தான்! அதோடு இங்கு டாக்டர்கள் பிரைவேட் பிராக்டீஸ் செய்ய அனுமதியில்லை.

இங்கு தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் நிறையபேர் அரசுப் பணியில் உள்ளார்கள். இவர்களில் 1980லேயே இங்கு வந்து எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர், மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோயிலைச் சேர்ந்தவரான டாக்டர் வி.ராமதாஸ். இங்கு மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிற அவரை - நான் போயிருந்த போது அவர் சென்னைக்கு வந்திருந்ததால்- சந்திக்க முடியாது போனதில் எனக்கு வருத்தமே. தொழில் முறையில் 'எலும்பியல் அறுவை சிகிச்சை' நிபுணரான (Orthopaedic Surgeon) அவர் 1980ல் சிஷெல்ஸ் ராணுவத்தில் மருத்துவப் பணியில் சேர்ந்தார். பின்னர் பிரசிடென்டின் பிரத்தியேக மருத்துவரானார்.


இன்று டாக்டர் ராமதாஸ் சிஷெல்சின் மிகப் பெரிய தொழிலதிபர். சில ரெஸ்டாரெண்ட்கள், உணவு விடுதிகள், மாஹேயிலும் பிராலன் தீவிலும் கேளிக்கை அரங்கங்கள் என பலவகைத் தொழில்களில் வெற்றி கரமாக இயங்கிக் கொண்டி ருப்பவர். விக்டோரியாவில் உள்ள இவரது 'Pirates Arms' என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளூர் மற்றும் வௌ¤நாட்டுப் பயணிகளை மிகமும் ஈர்க்கிற புகழ் வாய்ந்தது. மக்களால் மிகவும் விரும்பப்படும் 'Beau Vaalan' என்கிற கடற்கரையின் அருகில் அமைந்துள்ள இவரது உணவுவிடுதியான 'Cocod'Or' எப்போதும் உல்லாசப் பயணிகளால் ஆக்ரமிக்கப் பட்டிருக்கும். இந்த விடுதியில் நான் வியந்தது தரைவிரிப்பு முதல் உச்சிக் கூரைவரை இந்திய அடயாளங்களைக் காட்டுவதாக அமைந்திருப்பது. தென்னையின் எல்லாப் பகுதிகளுமே பயன் படுத்தக் கூடியது என்பார்கள். இவர் தஞ்சை மாவட்டக்காரர் என்பதால் தென்னையின் எல்லா உறுப்புகளும் இந்த விடுதியில் வித்யாசமான முறையில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். தென்னைக் குருத்தோலைகள் நம்மூர் போலத் தோரணங்களாகத் தொங்குகின்றன. மட்டைஓலைகள் அழகான விசிறிகள் போன்று விரித்து எங்கும் நடப்பட்டுள்ளன. மேலே கூரையில் தென்னங்கீற்றுகள் அலங்காரமான முறையில் வேயப்பட்டுள்ளன. கொட்டாங்கச்சி ஆஷ்ட்ரேயாக மாற்றப் பட்டிருக்கிறது. அடிமட்டைகள் ஆங்காங்கே துப்பாக்கிகளை மூன்று மூன்றாய் முக்காலி வடிவில் நிறுத்தி வைப்பது போல நிற்க வைக்கப் பட்டிருக்கின்றன. பருத்த அடிமரங்கஆளை நட்டு அதன் மீது பெரிய அடி மரங்களைக் குறுக்குவாட்டில் வில்லையாக நறுக்கியது போன்ற அமைப்பில் வைத்து மேஜையாக்கி இருக்கிறார்கள். நம்மூரில் என்றால் இது வியப்பளிக்காது. ஆனால் அங்கு இது வித்யாசமான அலங்காரமாய் மனங்கவர்கிறது. இதே போலவே அவரது எல்லா நிறுவனங்களிலும் இந்திய அடையாளம் தெரியும். இந்த நிறுவனங்களுக் கெல்லாம் எங்கள் மாப்பிள்ளை திரு. ராஜசுந்தரம் தான் சட்ட ஆலோசகர். டாக்டரின் இரு சகோதரர்களும் அவருக்கு உதவியாய் நிறுவனங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் பழுத்த முருக பக்தர். ஆனால் சர்ச்சுகளுக்கும் ஈடுபாட்டுடன் செல்பவர். நம்மூர் வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து 'புனித வேளாங்கண்ணி மாதா'வின் விக்கிரகம் ஒன்றைக் கொண்டுவந்து இங்குள்ள ரோமன் கத்தோலிக சர்ச் ஒன்றில் நிறுவியுள்ளார். அதோடு அன்னை வேளாங்ககண்ணிக்கு ஆண்டுதோறும் உற்சவம் ஒன்றையும் கோலாகலமாய் நடத்தி வருகிறார். இவர் இந்நாட்டுக் குடியுரிமை பெற்று சிஷெல்ஸின் பிரஜை ஆகி விட்டவர். இந்நாட்டுக் குடியுரிமை உடையவரே இங்கும் நிலம், வீடு வாங்கமுடியும்.

தற்போது பிரசிடெண்டின் தனிமருத்துவராக இருப்பவரும் தமிழர்தான். டாக்டர் செல்வம் என்று அழைக்கப்படும் டாக்டர் பன்னீர்செல்வம் தஞ்சையைச் சேர்ந்தவர்., மருத்துவப் பணிக்கான அர்ப்பணிப்பும் அன்பு நெஞ்சமும் கொண்டவர். எப்போதும் சிரித்தமுகம். அலுத்துக் கொள்ளாத, நோயாளிகளுக்கு நோயின் கடுமை தெரியாமல்

நம்பிக்கையூட்டி மருத்துவம் செய்பவர். இராசியானவர் என்று மக்களிடையே பெயர் பெற்றவர். எனக்கு அங்கிருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் லேசாச நெஞ்சில் வலியும் படபடப்பும் ஏற்பட்டபோது, என் மாப்பிள்ளை அவரது நெருங்கிய நண்பரான டாக்டர் செல்வத்துக்குப் போன் செய்தபோது, 'நீங்கள் வரவேண்டாம், நானே இதோ வருகிறேன்' என்று சொல்லி அந்த அர்த்த ராத்திரியில் 8 கி.மீ தொலைவிலிருந்து வந்து என்னை சோதித்து, 'ஒன்றும் பயமில்லை. இது சாதா வலிதான். மாத்திரை தருகிறேன். தூங்கினால் சரியாகி விடும்' என்று தைர்யமளித்துத் திரும்பிய அந்த அன்புள்ளம் என்னை நெகிழ்த்தியது. நம்மூரில் அத்தனை எளிதில் இப்படி மருத்துவரின் உதவி கிடைக்குமா என்று மனம் எண்ணிப் பார்த்தது. இவரும் இந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்தான்.

'இவர் டாக்டர் ஷேக்ஸ்பியர் - நம்மூர்க்காரர் தான்' என்று டாக்டர் செல்வம் ஒருவரை அறிமுகப் படுத்தியபோது வித்யாசமான பெயரால் புருவம் உயர்த்தினேன்.

அவரது தந்தை ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் தனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞரின் பெயரை வைத்தாராம். ஆனால் அந்தப் பெயருக்கு ஏற்றவாறு தனக்கு ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடோ கவியெழுதும் ஆற்றலோ இல்லை என்று குறைப் பட்ட அவர் தன் மகளுக்கு ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற பாத்திரங்களில் ஒன்றான ஜூலியட்டின் பெயரை வைத்திருப்பதாகவும் அவர் தாத்தாவைப் போலவே ஆங்கிலத்தில் புலமைம் கவிதை எழுதும் திறமும் பெற்றவர் என்று சொன்னார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளை தன் மகள் எழுதி இருப்பதாகவும் சொன்னார். இவர் கலை ரசனையும் நடிப்பார்வமும் மிக்கவர். தமிழ் சினிமாவில் நம்மூரில் ஒரு படத்தில் உப பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பதை டாக்டர் செல்வம் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜவஹர் கிருஷ்ணமூர்த்தி தூத்துக்குடிக்காரர். அங்குள்ள பிரபல தொழிலதிபர் திரு பி.எஸ்.கிருஷ்ணமுர்த்தி நாடாரின் மகன். அவர் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. இங்கு சிஷெல்ஸ¤க்கு வந்து சொற்பொழிவுகள் ஆற்றி இ¤ருக்கிறார். 1990ல் சுகாதார அமைச்சகத்தில் பணியில் சேர்ந்த டாக்டர் ஜவஹர்

தற்போது Sychelles Marketting Board என்கிற வர்த்தக நிறுவனத்தில் மருத்துவ அரிகாரியாக உள்ளார். மிக எளிமையானவர். சன்னக் குரலில் - ஆனால் அழுத்தமாக எதிலும் தன் கருத்தை வலியுறுத்தும் தன்மையர். பகவான் இராமகிருஷ்ணரிடம் பெரிதும் ஈடுபாடு மிக்கவர். சீஷெல்ஸ் பற்றி நிறையத் தவகல்களை எனக்குத் தந்தவர். இவரது மனைவி திருமதி சுந்தரி ஜவஹர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். சமூக அறிவியல் பட்டதாரியான இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். ஒரே ஊர், ஒரே தொழில் என்பதால் என் மகள் மங்களநாயகின் நெருங்கிய தோழி. சாயிபாபா பக்தை. சனிக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி வரை சக பாபா பக்தைகளுடன் சேர்ந்து உள்ளூர் வினாயகர் கோயிலில் சாய்பாபா பஜனை செய்து வருகிறார்.

டாக்டர் பாலா என்கிற பாலகுருநாதன் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றொர் இருவருமே தமிழ் ஆசிரியர்கள் என்பதால், நல்ல தமிழறிவும் பற்றும் மிக்கவர். அங்கு நான் இலக்கியச் சொற்பொழிவு செய்தபோது மிகவும் ரசித்து அதன்மூலம் என்னிடம் பற்றுக் கொண்டவர். நாங்கள் நாடு திரும்பியபோது அவரும் சென்னையில் வேறு பணியாக உடன் வந்தவர்- சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு கால் டாக்சி பிடித்து ஏற்றிவிட்டு எங்களை வழியனுப்பி வைத்த அன்பினையும் உதவியையும் மறக்க முடியவில்லை. இவர் 1990ல் இங்கு வந்து, 13 ஆண்டுகள் அறுவை சிகிச்சை நிபுணராக (M.S) பணிசெய்தவர். தற்போது சீஷெல்ஸில் தனி மருத்துவ மனையை நடத்தி வருகிறார். இவரும் சிஷெல்ஸ் குடியுரிமை பெற்றவரே.

இப்படி நிறையத் தமிழர்கள் கல்வித் துறையிலும் மருத்துவத் துறையிலும் சிறப்பாகப் பணி புரிந்து செல்வாக்குடன் வாழ்கிறார்கள்.

-தொடரும்.

நான் கண்ட சிஷெல்ஸ் - 5

நான் கண்ட சிஷெல்ஸ் - 5 - பொருளாதாரமும், வளங்களும்

சிஷெல்ஸ் தீவுக்கூட்டங்கள் பூமத்யரேகையை அண்மித்து இருப்பதால் சில சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன. எந்தவிதமான சூறாவளிக் காற்று, மற்றும் இயற்கை அழிவுகள் இல்லாத சூழல். சென்ற ஆண்டில் உலகையே அச்சுறுத்திய சுனாமியால் இங்கு பாதிப்பு ஏதும் இல்லை. இங்குள்ள மக்கள் உலகின் சலசலப்பான வாழ்க்கை முறையிலிருந்து ஒதுங்கி, அமைதியான சூழலில் வாழ்கின்றனர்.

சுற்றுலாத் துறையும், மீன் வளமும் முக்கிய பொருளாதார அடிப்படைகள். இங்கு வரும் உல்லாசப் பயணிகளில் எண்பது சதவீதம் ஐரோப்பியர்கள். இந்த நாட்டின் அரசியல் அமைதி, சிறந்த வௌ¢ளை மணல் கடலோரங்கள், பவளப் பாறைகள், இயற்கை எழில் மற்றும் செடி, கொடி, பச்சிலைகள், மீன்வளம், அபூர்வ பறவைகள் போன்ற இயற்கை வளங்கள், உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாய்ப் பலரையும் ஈர்க்கின்றன.

தீவைச் சுற்றிலும் அழகிய ஆழமற்ற கடல். சுமார் ஒரு மைல் தூரத்திலேயே பவழப் பாறைகள் கடல் அலைகளைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன. எங்கு பார்த்தாலும் நீலக்கடல். இதன் இயற்கையழகில் மயங்கித்தான் இதனை 'ஈடன் தோட்டம்' என்கிறார்கள்.

ஆண்டுக்கு 130,000 பயணிகள் வருகிறார்களாம். அனுமன் சிரஞ்சீவி மலையைச் சுமந்து செல்கையில் சிதறி விழுந்த துண்டுகளால் இத் தீவுக்கூட்டங்கள் அமைந்ததாய் ஒரு ஐதீகம் இங்குள்ளது. அதனால் இப் பிரதேசத்தில் விஷ ஜந்துக்கள் என்றுமே காணப் படுவதில்லையாம். பாம்பு, தேளை இங்கு யாரும் கண்டதில்லையாம்.

` தேங்காய் உற்பத்தியும் மீன் பிடித்தலுமே முக்கியத் தொழில் என்றாலும் முன்பே சொன்னபடி சுற்றுலாப்பயணிகளின் வருகை மூலமே இந்நாடு பெரும் வருவாய் ஈட்டுகிறது. இங்கு கிடைக்கும் 'டியூனா' என்கிற ருசியான மீன் இந்நாட்டின் கடல் செல்வம் எனலாம். இது அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுவூட்டுகிறது. இந்த மீனைப் பிடிப்பதற்காக, சிஷெல்ஸ் நாட்டுடன் ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

சிஷெல்ஸின் மற்றொரு இயற்கை தந்த சீதனம் - தீவு முழுதும் உள்ள தென்னை மரங்கள். ஏறக்குறைய 2500 டன் கொப்பரைத் தேங்காய் இங்கு உற்பத்தி செய்யப் படுகிறது. அத்தொடு லவங்கப் பட்டை, சிறிதளவு தேயிலை முதலியனவும் கிடைக்கின்றன. லவங்கப் பட்டையும் பிரிஞ்சு இலைகளும் CINNAMAN என்ற மரத்திலிருந்து கிடைக்கின்றன. இது எல்லா வீடுகளிலும் தானாகவே நம்மூர் புளியமரங்கள் போல தென்படுகின்றன. இது தென்னைக்கு அடுத்த படியான இரண்டாவது பணப் பயிராகும்.

அடுத்து, உலகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத COCO-DE-MER என்கிற திருவோடு காய்க்கும் பனைமரங்கள் பிராலின் என்கிற இரண்டாவது பெரிய தீவில் 4000 ஆயிரத்துக்கும் அதிகமாக விளைகின்றன. மற்ற தீவுகளிலும் வீடுகளில் கூட இவை தானாக வளர்ந்தாலும் இது நம் சந்தன மரங்கள் போல பொது உபயோகத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இது முழுதும் அரசுக்குக்கே உரிமை உடையவை. தனிஉடமை அல்ல. உங்கள் வீட்டில் வளர்ந்ததாலும் அரசின் அனுமதி பெற வேண்டும். மிகப் பெரிய யாழ்ப்பாணத் தேங்காய் அளவில் - மிகப் பெரிய பனம்பழம் போன்ற இதன் காயிலிருந்துதான் திருவோடு தயாராகிறது. இதனால் இதனைத் 'திருவோடு காய்க்கும் திருநாடு' என்று தமிழர்கள் பெருமிதத்துடன் அழைக்கிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் வர்த்தகர்களால் காய்ந்த திருவோடுகள் மலிவு விலையில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. தற்போது அரசுக் கண்காணிப்பில் ஏற்றுமதித் தடைப்பொருளாகப் பாதுகாக்கப் படுவதோடு, அனுமதியுடன் பெறுவதாயின், திருவோட்டுக் காய் ஒன்று ஏறக்குறைய 100 அமெரிக்க டாலர் விலையாகும்.

இங்குள்ள நாணயம் 'சிஷெல்ஸ் ருப்பி' என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டு ஒரு ரூபாய் நமது நாட்டின் எட்டு ரூபாய்க்குச் சமம். ஆகவே நமது நாட்டைப் போல எட்டு மடங்கு பொருளாதாரத்தில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். விலைவாசி மிக அதிகம். ஆனால் நம் நாட்டுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் அதிகமல்ல. உதாரணத்துக்கு அங்கு ஐந்து ரூபாய்க்கு மூன்று முருங்கைக்காய் என்றால் நம் பணத்தில் ஒரு காய் எட்டு ரூபாய் ஆகிறது. ஆனால் அப்படி நம் பணத்துக்கு மாற்றிப் பார்க்கக் கூடாது என்று எங்கள் மாப்பிள்ளை, நான் அடிக்கடி அப்படிக் கணக்கிட்டு 'அம்மாடி! அவ்வளவு விலையா?' என்று வாய் பிளக்கும் போது சொல்லுவார். 'அது சரிதான். நம்மூரிலும் ஐந்து ரூபாய்க்கு மூன்று முருங்கைக் காய்கள் தானே?' என்று நினைப்பேன். அதனால் அங்கு விலைவாசி அதிகம் என்று சொல்வதும் சரியல்லதான். அங்கு நிறைய சம்பாதிக்கிறார்கள். அதே போல நிறைய- மிகத் தாராளமாகச் செலவும் செய்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அங்கு சம்பாதிக்கும் பணத்தை டாலராகவோ யூரோவாகவோ தனிப்பட்டவர் மாற்ற முடியாது. சில குறிப்பிட்ட அனுமதிக்கப்படும் செலவினங்களுக்கு மட்டும் சொற்ப அளவில் மட்டும் ஒரு டாலருக்கு சிஷெல்ஸ் ருப்பி ஆறு வீதம் அரசு வங்கி முலம் அனுமதிக்கப் படுகிறது. இல்லையெனில் இரு மடங்கு விலையில் - அதாவது ஒரு டாலருக்கு 13 ரூபாய் கொடுத்து கருப்புச் சந்தையில் வாங்க வேண்டியதுதான். அது எல்லோருக்கும் சாத்யமில்லாததால் தாராளமாகச் செலவிடுவதில் அவர்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் உலகிலேயே மிக அதிக வாழ்க்கைச் செலவு பிடிக்கும் நாடு என்று சொல்லப்படுகிற இலண்டன் நகரை விட அந்த நாட்டு வாழ்க்கை செலவு அதிகம் என்று அங்குள்ள சிலர் சொல்கிறார்கள்.

-(தொடரும்)

Thursday, January 05, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 4 - அரசியலும் ஆட்சியும்

தமிழ் நாட்டு அரசியலையும் அரசியல்வாதிகளையும் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு சிஷெல்ஸின் அரசியல்வாதிகளைப் பார்க்கும் வாய்ப்பும் அங்குள்ள அரசியல் பற்றி அறியவும் நேர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அங்கு சென்ற மறுநாள் நான் எங்கள் மாப்பிள்ளை திரு ராஜசுந்தரம் அவர்களுடன் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட ஒருவர், நின்று அவரிடம் நலம் விசாரித்தார். அவர் பெர்முடா கால்சட்டையும் டீ ஷர்ட்டும் கையில் பழம் மற்றும் சில பொருள்கள் கொண்ட பையுடன் மிக எளிமையாக இருந்தார். அவர் எங்களைக் கடந்ததும் மாப்பிள்ளை சொன்னார், "மாமா, இவர் யார் தெரியுமா? இவர் முன்னாள் அமைச்சர். இங்கு நம் ஊர் மாதிரி அரசியல்வாதிகள் பந்தாவெல்லாம் செய்ய மாட்டார்கள். தாங்களே நேரில் சென்று மக்களோடு மக்களாகக் கலந்து நின்று கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். மக்களிடம் நலம் விசாரிப்பார்கள். ஜனாதிபதி உட்பட எல்லா அமைச்சர்களும் யார் அழைத்தாலும் விருந்துக்குச் சென்று கௌரவிப்பார்கள். அவ்வளவு எளிமை. அது மட்டுமல்ல. இவர்கள்- ஜனாதிபதி உட்பட, தன் காரைத் தானே ஓட்டி வருவார்கள். முன் பின்னாக கார்கள் பவனி வருவதையோ, ஜனாதிபதி வருவதற்காக போக்குவரத்தைத் தடை செய்வதையோ பார்க்கமுடியாது. சிவப்புச் சுழல்விளக்கு, சைரன்ஒலி எல்லாம் அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மட்டும்தான். மற்ற வேளைகளில் ஜனாதிபதி போவதே தெரியாது" என்றார்.

"பாதுகாப்புப் பிரச்சினை இல்லையா?" என்று நான் கேட்டேன்.

"இங்கு ஜனாதிபதிக்கு மட்டும்தான் பாதுகாப்பு. நம்மூர் போல யாரோ பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்பதற்காக சகட்டு மேனிக்கு யாருக்கு வேண்டு மானாலும் இசர்ட் பிரிவு பாதுகாப்பு தருவது போல இங்கு கிடையாது" என்றார்.

நம்மூரில் சாதாரண வட்டம், ஒன்றியம் தலைவர்களே செய்கிற பந்தா, படாடோபம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நினைவுக்கு வந்து மனதுக்குள் அலுத்துக் கொண்டேன்.

"அதோடு இங்கு ஜனாதிபதியையே 'மிஸ்டர் பிரசிடென்ட்' என்று நேரில் விளித்துப் பேச முடியும்" என்றார். நம்மூரில் அம்மாவையோ அய்யாவையோ பெயர் சொல்லிக் கூட்டத்திலாவது பேசிவிட முடியுமா? ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புகளும் கிழித்துவிடமாட்டார்களா? சிஷெல்சில் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடுபவர் இல்லை. சின்ன நாடாக இருந்தாலும் அவர்கள் அரசியல்வாதிகளைத் தெய்வம் ஆக்குகிற அளவுக்கு சுயசிந்தனை அற்றவர்கள் அல்ல.

ஊழல் உலகமயமாகி எல்லா நாடுகளிலும் வியாபித்திருப்பதும் ஊழலை ஆண்டவனே வந்தாலும் இனி எங்கும் தடை செய்ய முடியாது என்பதும் நிதர்சனமாக உள்ள நிலைலையில் இங்கு ஒரு நடிகர் ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சி கோருகிற பிள்ளை விளையாட்டை இங்குதான் பார்க்கிறோம். ஊழல் இல்லாத உடோப்பிய கனவு சாத்யமா என்று நாம் விதிர்க்கையில் சாத்யமே என்பதை சிஷெல்ஸில் அறிந்தேன்.

சிஷெல்ஸ் நாட்டு அரசியலும் அரசியல்வாதிகளும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவர்கள் என்று சொன்னார்கள். அங்கு ஊழலே இல்லையாம். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சிந்திக்க வைத்தது. மந்திரிகள், அதிகாரிகள் அனைவருக்கும் பணத்தேவை குறைவு. பந்தா, பகட்டு இல்லை. அவர்களது தேவைக்கு அரசாங்கமே கொடுத்துவிடுகிறது. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை அந்நாட்டில் அனைவருமே உணர்ந்திருப்பதுதான் ஊழல் இல்லாததற்குக் காரணம் என்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அங்கு இல்லை. சிறிய நாடு. பணப்புழக்கம் அதிகம் இல்லை.

அரசியல்வாதிகள் எங்கேயாவது 'கை' வைத்தாலும் உடனே தெரிந்துவிடும். அங்குள்ள மக்களும் நமக்கென்ன என்று இருப்பவர்கள் அல்ல. மந்திரிகள், அதிகாரிகள் யார் மீது சந்தேகம் எழுந்தாலும் பொது இடத்தில் வைத்தே நேருக்குநேர் கேட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. மக்களது இந்தக் குண இயல்பும் ஊழலுக்கு எதிரான கொள்கையை உருவாக்கி இருக்கிறது.

மந்திரிகளையும் அதிகாரிகளையும் எந்தப் பிரச்சினை என்றாலும் எளிதாக அணுகலாம். உடனடியாகத் தீர்வு கிடைத்துவிடும். "உங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று ஜனாதிபதிக்குப் போன் செய்தால் போதும். உடனே அவர் குடிநீர் வழங்கும் துறையின் தலைவருக்குப் போன் செய்து உடனே கவனிக்க ஆணையிடுவார்" என்றார் அங்கு அரசுமருத்துவராகப் பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் ஜவஹர். 'இது அடிப்படையில் கம்யூனிசச் சார்புள்ள நாடு. எல்லோரும் சமம் என்கிற சோஷலிசக் கோட்பாடு உண்மையிலேயே செயல் படுத்தப்படும் நாடு. இங்கு பாரபட்சமில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைதான்" என்றார் அவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் செல்வம் என்பவர் ஜனாதிபதியின் பிரத்தியேக மருத்துவர். அவர் சொன்னார், "முன்பெல்லாம் - ஜனநாயக ஆட்சி ஏற்படும் வரை மக்களுக்கு அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை. எல்லோரது வீட்டிலும் பச்சிலைகள் வளர்ப்பார்கள். தலைவலி, ஜுரம் என்றால் கைவைத்தியம்தான். எல்லாவற்றிற்கும் பச்சிலைதான். வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்பினால் வெந்நீரில் ஒரு பச்சிலையைப் போட்டு ஊறவிட்டுக் குளி¤ப்பார்கள். உடம்பு வலி போய்விடும். இப்போது அப்படி இல்லை. பொது மருத்துவ மனைகள் ஏற்பட்டு எல்லோருக்கும் இலவச வைத்தியம் என்றானதும் தலைவலி என்றால் கூட மருத்துவ மனைக்கு வந்து விடுவார்கள். நம்மைப் போல மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்ள மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் ஊசி போடச்சொல்வார்கள். அது தலைவலியாக இருந்தாலும்! டாக்டர்கள் 'இதற்கெல்லாம் ஊசி வேண்டாம்' என்று சொல்லிவிட முடியாது. நேரே ஜனாதிபதியிடம் போய்விடுவார்கள்" என்றார்.

எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மையத்தில் பணியாற்றும் நிபுணரான மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு பாபு என்பவர் "எங்கள் யூனிட் எப்போதும் பரபரப்புடன் பணியாற்றும் அவசரகாலப் பிரிவாகும். எல்லோருக்கும் எக்ஸ்ரேயும் ஸ்கேனும் இங்கு இலவசம். மருத்துவர்கள் சொல்ல வேண்டுமென்பதில்லை. நோயாளிகளே மருத்துவரிடம் சொல்லி சோதனை செய்து கொள்ள வருவார்கள். தவிர்க்கமுடியாது" என்றுசொன்னார்.

"மக்களுக்கு அவ்வளவு வசதியும் உரிமையும் இங்கே உள்ளது".

சோஷலிச உணர்வு எல்லோருக்கும் இருப்பதுடன் மக்களுக்குப் பொறுப்புணர்ச்சியும் அதிகம். இங்கே வேலை நிறுத்தம் கதவடைப்பெல்லாம் கிடையாதாம். கற்பழிப்பும் எங்கும் இல்லை. மரணதண்டனையும் இந்த நாட்டில் கிடையாது.

ஆரம்பத்தில் ராணுவ ஆட்சி, பிறகு பலகட்சி ஆட்சி முறை என்று இருந்தாலும் 1977 முதல் அமெரிக்கப் பாராளுமன்ற முறையிலான ஜனநாயக ஆட்சி ஏற்பட்ட பின் முறையான தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல். ஜனாதிபதி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் பிரதமரையும் மந்திரிகளையும் நியமிப்பார். ஆனால் அதற்குப் பார்லிமெண்டின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். இலங்கையில் சென்றமுறை நடந்தது போல ஜனாதிபதி ஒரு கட்சியும் பிரதமர் ஒருகட்சி அமைந்து விடவும் இதனால் நேர்வதுண்டு. மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக இருந்து விட்டால் இப்படி அமைந்துவிடும்.

சிஷெல்ஸில் மூன்று அரசியல் கட்சிகள் உள்ளன. ஜனநாயகக் கட்சி (Democratic party), மக்கள் கட்சி (Seychelles People's progrssive front), தேசீயக்கட்சி (Seychelles National party) ஆகியவை அவை. இப்போது ஆளும் கட்சியாக இருப்பது SPPF என்னும் மக்கள் கட்சி. எதிர்க் கட்சியாக இருப்பது SNP என்னும் தேசீயக் கட்சி. இங்கு தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிமுக கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருப்பது போல அங்கே ஆளும் கட்சி, நம் திமுக போல கடும் போட்டியில் இருக்கும் எதிர்க்கட்சியான தேசீயக் கட்சியுடன் கடுமையாக மோதவேண்டிய நிலையில் உள்ளது. இம்முறை ஜெயிக்க முடியாது போனால் இன்னும்15 ஆண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிக்கமுடியாது போய்விடும் என்கிற நெருக்கடியில் மக்கள் கட்சி உள்ளது. இதன் தலைவர் ரெனே என்பவர்தான் இராணுவப் புரட்சி செய்து முன்பு ஆட்சியைப் பிடித்தவர். இப்போது மீள்வாரா என்பது சீஷெல்சில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். ஏனெனில் சமீபத்தில் அங்கு தேர்தல் வருகிறது.

(தொடரும்)

நான் கண்ட சிஷெல்ஸ் - 3 - வரலாறு

கி.பி. 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள் கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறது சிஷெல்ஸ். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கும் இந்தத் தீவுக்கூட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.

பிரஞ்சுக்காரர்கள் புதுவையில் கப்பல் கட்டும் தொழிலை ஆரம்பித்து விட்டு, அதற்கான மரங்களைத் தேடி சிஷெல்ஸ் வந்திருக்கிறார்கள். அங்கிருந்து மரங்களைக்அ கொண்டு வந்த வேலையைச் செய்தவர்களில் தமிழர்களும் உண்டு. முதலில் தொழில்ரீதியாக வந்துபோன தமிழர்கள் 1770ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அங்கு குடியேறி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்த முதல் கப்பலில், எந்த ஆண்டு, யார் யார் எந்த ஊரிலிருந்து வந்தார்கள் என்ற தகவலை நாட்டின் ஆவணக்காப்பகத்தில் பார்க்கலாம்.

இந்நாடு முதலில் பிரஞ்சுக் கட்டுப்பாட்டிலும் பின்னர் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஒரு சிலகாலம் மொரீஷியஸ¤டன் இணைந்த ஆட்சியிலிருந்து, 1903ல் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. 1976ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

1977ஆம் ஆண்டு ஜேம்ஸ் மான்கம் என்பவர் முதல் அதிபரானார். 1977ல் அவர் வௌ¤நாடு சென்றிருந்தபோது அவரின் கீழ் பொறுப்பில் இருந்த ஆல்பர்ட் ரெனே என்பவர் பாகிஸ்தான் முஷாரப் போல அதிரடிப் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தார். அதுமுதல் தனிக்கட்சி ஆட்சி நாடாக இருந்தது - 1993ல் பலகட்சி நாடாக மாறி, மக்கள் கருத்துக் கணிப்பின்படி புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்குப் பின் மக்களாட்சி அமுலுக்கு வந்திருக்கிறது.

போர்ச்சுகல் நாட்டுக் கடலோடிகளே முதலில் இத் தீவுக்கூட்டத்தைக் கண்டறிந்தார்களாம். கேரள மாநிலத்தின் குஞ்சலியும் கடலாடிகளும் இந்துமாக் கடலில் ஐரோப்பியப் படைகளையும் கடற்கொள்ளையரையும் தாக்கியபோது, கடற்கொள்ளையர் இங்கு வந்து தமது விலையுயர்ந்த பொருட்களைப் புதைத்தமை அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரிகிறது.

1770ல் பதிவான முதற் குடியேற்றத்தின் போது 15 வௌ¢ளையர்கள், 7 கருப்பின அடிமைகள், 5 தமிழர்கள் மாஹே தீவுக்கு வந்தனர். அவர்களின் வழித்தொன்றல்களே தற்போதைய 'சிஷெல்வா' என்றழைக்கப்படும் சிஷெல்ஸ் குடிமக்கள்.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் 'கோண்டுவானா' என்ற கண்டம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இக்கண்டம் ஆப்பிரிக்காவிலிருந்து பெர்சியா, இந்தியா, கீழே ஆஸ்திரேலியா உள்ளடக்கியதாக இந்தியப் பெருங்கடல் முழுதுமாகப் பரந்திருந்திருக்கிறது. பின்னர் அவை துண்டு துண்டாக உடைந்து பிரிந்து இன்றுள்ள நிலையில் அமைந்தன. 10000 ஆண்டுகளுக்கு முன் சிஷெல்ஸ் தீவுகள் இந்தியா, ஆப்ரிக்கா விலிருந்து துண்டுகளாகி ஒரு கூட்டமாய் அமைந்தன. இது- இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாட்களில் காணப்படும் தாவரங்கள் கிரானைட், மற்றும் பவழப் பாறைகள், சில விலங்குகள், பறவைகள் சீஷெல்ஸிலும் இன்று காணப் படுவதிலிருந்து நிரூபணமாகிறது. நான் சீஷெல்ஸ் வந்த மறுநாளே நடைப் பயிற்சிக்காக மகள் வீட்டிலிருந்து காலையில் அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்றபோது வழியில் தென்பட்ட தாவரங்கள், நாய்கள், பூனைகள், சேவல்கள், மணிபுறாக்காள், தேன்சிட்டுகள் தமிழ் நாட்டில் இருப்பதே போன்ற உணர்வை ஏற்படுத்தின. அதிகாலை கொக்கரக்கோ என உரத்துக் கூவி எழுப்பிய சேவலும், வீட்டுக்கு வௌ¤யே தத்திப் பறந்து இரை பொறுக்கிய மணிப் புறாக்களும், பூச்செடிகளில் தேன் உறிஞ்சிய தேன் சிட்டுகளும் வேற்று நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை நம்பவிடாதபடி செய்தன. இங்கு என் வீட்டில் உள்ள அத்தனை குரோட்டன்களும். செம்பருத்திச் செடிகளும், கரிசிலாங் கண்ணி, கீழானெல்லி, அம்மாம்பச்சரிசிப் பச்சிலை - எல்லாம் பாதையின் இரண்டு பக்கமும் தென்பட்டன. சாலை ஓரம் வேப்ப மரங்களும் கொய்யா மற்றும் மாமரங்களும் இங்குள்ளவை போலவே இருந்தது வியப்பளித்தது. வழியில் மண்ணில் புதைந்து துருத்திக் கொண்டிருந்த நத்தை ஓடுகளும் கிளிஞ்சல்களும் கூட இங்குள்ளவை போலவே இருந்தன.

300 ஆண்டுகளுக்குமுன் கண்டறியப்பட்டு, 180 ஆண்டுகளுக்கு முன்தான் மனிதக் குடியேற்றம் நிகழ்ந்திரூக்கிறதே - ஏன் இத்தனை தாமதம்? ஏன் இன்னும் முன்னதாகவே இத்தீவுகள் கண்டுபிடிக்கப் படவில்லை? ஏனென்றால் அருகே 1000 மைல்களுக்கு நிலம் ஏதுமில்லாததும் அதிவேக எந்திரப் படகும் ஆப்ரிக்காவிலிருந்து அங்கு போக 3 நாட்கள் பிடிக்கும் என்பதாலும் அவ்வளவு தொலைவிலிருந்தவை கண்களில் படவில்லை.

இத்தீவுகள் பிரிட்டிஷாரின் வசம் இருந்தபோது பதினான்காம் லூயி காலத்தில் பிரிட்டனின் நிதிமந்திரியாக இருந்தவர் Viscount Jeen Moreen de Seychelles என்பவர். அவரை கௌரவிப்பதற்காக அவரது பெயரை இத் தீவுகளுக்கு வைத்தார்களாம்.

(தொடரும்)

நான் கண்ட சீஷெல்ஸ் - 2 - மாஹே

சென்னையிலிருந்து எங்களுடன் எங்கள் மாப்பிள்ளை-சீஷெல்ஸில் வழக்கறிஞராக இருப்பவர் உடன் வந்ததால் சென்னையிலும் துபாயிலும் கஸ்டம்ஸ் சோதனை மற்றும் இதர சடங்குகள் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டதால் எங்களூக்கு முதன்முறை பயணம் செய்வது போன்ற பதற்றமோ தடுமாற்றமோ இல்லை. சீஷெல்ஸ் விமான நிலையம் மிகச் சிறியது. சுத்தம் சூழ்நிலை கூட நம்மூர் ரயில்வே நிலையம் போல் பராமரிப்பு சுமாராகத்தான் உள்ளது. என்றாலும் கெடுபிடியெல்லாம் எங்கும் ஒரே மாதிரிதான். கஸ்டம்ஸ் சோதனை முடிந்து தற்காலிக விசாவுக்கு மனுச்செய்து 15 நாட்களுக்கு அனுமதி பெற்றோம். சீஷெல்ஸ் தீவுக்கு யார் வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இருந்தால் போகலாம். எங்கள் விஷயத்தில் 'யாராவது உறவினர் அழைப்பின் பேரில் வந்தால் முன்னதாகவே விசாவுக்கு மனுச் செய்யாமல் இறங்கியதும் மனுச் செய்து பெற்றுக் கொள்ளலாம்', என்ற விதிப்படி பெற்றோம். 15 நாட்களுக்குப் பின் மீண்டும் புதுப்பிக்க மனுச்செய்தால் 3 மாதங்களுக்கு நீட்டிப்பார்கள்.

விமான நிலையத்துக்கு என் மகள் - அங்குள்ள அரசு கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணி புரிபவர் - காருடன் வரவேற்கக் காத்திருந்தார். ஆனல் அவருக்கு முன் மழை எங்களை வரவேற்றது. வௌ¤யில் வந்ததும் நம்முர் யூனிபாரம் போடாத போர்ட்டர் போல் - அரைக் கால்சட்டையும், டி ஷர்ட்டும் ஹவாய் செருப்புமாய் மிகச் சாதாரணமாய்க் காட்சி தந்த ஒருவரை, பெரிய தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பெரிய தொழில் அதிபருக்கான பந்தா, படாடோபம் சிறிதுமற்ற அந்த எளிமையை என்னால் நம்ப முடியவில்லை. பிறகு காரில் ஏறிய பின்தான் விளக்கினார்கள் - அதுதான் சீஷெல்சின் தேசீய உடை என்றும் பிரசிடெண்ட் முதல் சாதாரணத் தொழிலாளிவரை அந்தப் பெர்முடா காற்சட்டையும் டி ஷர்ட்டும் அலுவலகத்திலும் அணிவார்கள் என்று. கொஞ்ச தொலைவு போனதும் மழை பெய்த சுவடே இல்லை.

அதற்கும் விளக்கம் சொன்னார்கள். அதுதான் சீஷெல்ஸின் சீதோஷ்ண நிலையாம்.

எப்போது வேண்டுமானாலும் மழை தூறும். அடித்துப் பெய்வதில்லை. குளிராது. எப்போதும் வெம்மையாய் இருக்கும் என்பதைப் பிறகு அனுபவத்தில் கண்டேன். ஏற்றமும் இறக்கமுமான கொண்டை ஊசிவளைவுகள் அதிகம் கொண்ட மலைப் பாதையில் எதிரே சீறிவரும் வாகனங்களில் மோதாமல் ஒலிப்பானை எழுப்பாமலே லாகவமாய் வளைந்து போக்குவரத்து வரத்து விதிகளை சற்றும் மீறாமல் அநாசயசமாய் அங்கு கார் ஓட்டுவதைக் கண்டு வியந்தேன்.

விமான நிலையத்திலிருந்து 15கி.மீ பயணம் செய்து மகள் வீட்டை அடைந்தோம். சீஷெல்ஸ் முழுவதுமே மலைப்பகுதிகள் தான். நமது ஊட்டி கொடைக்கானல் போல மஞ்சு தவழும் மலைகள். எங்கும் பசுமை. கண்ணுக்கு இதமான இயற்கைக் காட்சிகள்.

எங்கு போனாலும் கூடவே சலசலத்து ஓடி வரும் மலையருவி என்று முதல் நோக்கிலேயே அந்தத் தீவு மனதை மயக்கியது. வந்திறங்கியது முதல் இரவு வரை மகள், மாப்பிள்ளையின் நண்பர்கள் குடும்பம் குடும்பமாய் வந்து எங்களை வரவேற்றதும் நலம் விசாரித்ததும், ஒரு நாள் தங்கள் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று அழைத்ததுமான அந்த நாட்டுப் பண்பு கண்டு நெகிழ்ந்தோம்.

சீஷெல்ஸ் என்பது 116 சிறுசிறு தீவுகள் கொண்ட தீவுக்கூட்டம். 130 லட்சம் சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் 30 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாசம் செய்கிறார்கள். இதில் மிகப்பெரிய தீவு மாஹே என்பதாகும். இது 27 கி.மீ நீளமும் 11 கி.மீ அகலமும் உடையது. சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா இதில்தான் உள்ளது. துறைமுகமும், விமான நிலையமும் தலைநகரில்தான் உள்ளன. சீஷெல்ஸின் மொத்த நிலப்பரப்பே 455 சதுர கி.மீ தான். இதில் 49 சதவீதம் பாதுகாக்கப்பட்ட அல்லது தேசீய பூங்கா. கணக்கில் அடங்கா தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மொத்த மக்கள் தொகை 85 ஆயிரம்.

இதில் 72 ஆயிரம் பேர் மாஹே தீவில் வசிக்கின்றனர். இதில் இந்தியர் 8000 பேர். அதில் தமிழர்கள் சரிபாதி. இவர்களில் 800பேர் மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வந்திருப்பவர்கள். முதன் முதலில் அங்கு வேலைக்காகவோ, வியாபாரம் செய்யவோ சென்றவர்கள் பின்னர் தங்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று அழைத்து வந்து பெருகி விட்டவர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்வரை மனிதசஞ்சார மற்றிருந்த

இங்கு முதலில் மனிதர்கள் வந்ததெப்படி? அதற்கு சீஷெல்ஸின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

(தொடரும்)

நான் கண்ட சிஷெல்ஸ் - 1 - பயணம்

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குத் தென் மேற்கில் 3000 கி.மீ தொலைவில் மொரீஷியஸ¤க்கு வடக்கில், தென்னாப்ரிக்காவுக்கு அருகில் முத்துக்கள் சிதறினாற்போல் உள்ள தீவுக் கூட்டம்தான் சி¦ஷெல்ஸ். இத்தீவுகளின் அழகை ரசித்த ஐரோப்பியர்கள் இதனை 'Garden of Eden' என்று அழைக்கிறார்கள். இந்த ஈடன் தோட்டத்தை ஒருநாள் போய்ப் பார்ப்பேன் என்று கற்பனை கூட நான் செய்ததில்லை. ஆனால் அங்கு சென்று 70 நாட்கள் தங்கி வரும் வாய்ப்பு சமீபத்தில் வாய்த்தது.

1989லேயே அங்கு பணி நிமித்தம் சென்று பிறகு அங்கேயே குடியுரிமை பெற்று நிரந்தரமாகத் தங்கிவிட்ட என் மகளும் மாப்பிள்ளையும், போன நாளாய் வருந்தி அழைத்தும் பணியைக் காரணம் காட்டியும், முதுமையைச் சொல்லியும் தவிர்த்து வந்தேன். ஆனால் இந்த ஜனவரியில் (2005) அவர்கள் அங்கே சொந்த வீடு கட்டி அதைப் பார்க்கவாவது அவசியம் வரும்படி வற்புறுத்தவே மேலும் தவிர்க்க வாய்ப்பின்றி நானும் என் மனைவியும் ஜூலை 10ஆம் தேதி புறப்பட்டுச் சென்றோம். அங்கு போன பிறகுதான் 'அடடா, எவ்வளவு அரிய வாய்ப்பினை இத்தனை நாளாய் தவற விட்டுவிட்டோம்' என்று உணர்ந்தேன். அந்தத் தீவுகளின் அழகும், சீதோஷ்ணமும், மக்கள் வாழ்க்கையும், அவர்களது பண்பாடும் கண்டு 'ஆகா! வாழ்ந்தால் இங்கு வாழ வேண்டும். இது பூலோக சொர்க்கம்தான்' என்று உருகிப் போனேன். யான் பெற்ற இன்பத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே இத்தொடர்.

சென்னையிலிருந்து துபாய் வழியே சிஷெல்ஸ் சென்றோம். பம்பாய் போய் அங்கிருந்து போவதுதான் சுருக்கு வழி என்றாலும், சிஷெல்ஸ் விமானப் போக்குவரத்தை இந்த ஏப்ரல் முதல், குறைந்த பயணிகளைக் கொண்டு நடத்துவதில் நஷ்டம் கண்டதால் நிறுத்தி விட்டார்கள். எனவே துபாய் வழியே செல்வதுதான் சாத்யம். சென்னையிலிருந்து துபாய்க்கு 4 மணி நேரப் பயணம். அங்கிருந்து அதன் தொடர்ச்சி விமானத்துக்கு பத்து மணி நேரம் போலக் காத்திருக்க வேண்டும். துபாய் போனதும் நம் கடிகாரத்தை நாம் திருத்த வேண்டி உள்ளது. ஏனெனில் அவர்கள் நம்மை விட ஒன்றரை மணி பின் தங்கி உள்ளார்கள். அதாவது இங்கு காலை 8 மணி என்றால் அங்கு அப்போது காலை ஆறரை மணி. சிஷெல்ஸிலும் அதேதான்.

சென்னையில் இருந்தும் துபாயில் இருந்தும் நாங்கள் பயணம் செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானம். ஒரே கம்பனியின் விமான சேவை என்பதால், துபாயில் நாம் இறங்கும்போது நம் லக்கேஜ்களையும் இறக்கி ஏற்ற வேண்டியதில்லை. அவர்களே நாம் செல்லவேண்டிய அடுத்த விமானத்துக்கு மாற்றி விடுகிறார்கள். எமிரேட் விமான சேவை 86 நாடுகளுக்கு துபாயிலிருந்து நடத்தப் படுகிறதாம். உலகத்திலேயே அதிக விமான சர்வீசை நடத்தும் 2வது (முதலாவது பெர்லின்) நிறுவனமான இதன் பயணம் மிகப் பத்திரமானது என்கிறார்கள். அது மட்டுமல்ல சுகமான அலுப்பில்லாத பயணமும் என்பதை அனுபவத்தில் கண்டோம்.


நாங்கள் பயணம் செய்த விமானம் மிகப் பெரிய 850 பேர் பயணம் செய்யக்கூடிய ஜம்போ ஜெட் விமானம். 3 வரிசைகளாக 2, 4, 2 இருக்கைகள் கொண்டது. மேலே கை லக்கேஜ் வைக்க பெட்டி போன்ற அமைப்பு. சௌகர்யமான இருக்கை. விமானம் கிளம்பும் போதோ இறங்கும்போதோ குலுக்கலோ அதிர்ச்சியோ இல்லாமல் ஒரு பருந்து சுழன்று வட்டமடித்து அலட்டாமல் இறங்குவது போல செயல்படுவது அதன் சிறப்பு. இறங்கும்வரை எந்தவித பதற்றமோ பயமோ ஏற்படவில்லை. இருக்கையின் முன்னே இருக்கிற குட்டித்திரை (LCD screen) நமக்குத் தைரியம் தருவது போல தொடர்ந்து நாம் போய்க் கொண்டிருக்கும் பாதை, பறக்கும் உயரம் (அதிக பட்சமாக 90000 அடி) பறக்கும் வேகம் (அதிக பட்சமாக மணிக்கு 975கி.மீ), கிளம்பிய இடத்திலிருந்து அப்போது உள்ள தூரம், கடக்க வேண்டிய தூரம், கடந்து வந்த நேரம், கடக்க வேண்டிய நேரம், போய்ச் சேரும் நேரம் என்று காட்டிக்கொண்டே இருப்பது அதன் டி.வி திரையில் பார்க்கும் படத்தைவிட சுவாரஸ்யமாக இருக்கிறது. சென்னையில் காலை 10மணிக்குக் கிளம்பிய விமானம் துபாய் நேரப்படி காலை 12.45க்கு துபாய் சென்றடைந்தது.

துபாய் விமான நிலையம் பார்க்க வேண்டிய ஒரு அற்புதம். உலகத்திலேயே மிகப் பெரிய விமான நிலையம் என்கிறார்கள். விமானம் இறங்கும்போது பார்த்தால் கீழே நாலா பக்கமும் புறாக் கூட்டம் அமர்ந்திருப்பது போல எண்ண முடியாத விமானங்களைக் காணும்போது பிரமிப்பாக இருக்கிறது. சென்னை நோக்கிச் செல்கையில் மீனம்பாக்கம் விமான நிலையம் நெருங்கும் போது அங்கு நிற்கிற, இறங்குகிற ஒன்றிரண்டு விமானங்களை அதிசயமாய்ப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. வானத்திலிருந்து இறங்குகிற, ஏறுகிற விமானங்கள் கிராமத்து ஏரியில் மீன் பிடிக்கையில் வட்டமிட்டு நீர்ப் பரப்பை உரசிச் செல்கிற பருந்துகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அத்தனை விமானங்கள்!

விமானத்திலிருந்து இறங்கி உள்ளே போனால் மிகப் பெரிய, மிக நீளமான உள்தளம் பிரமிப்பின் உச்சத்துக்கு நம்மைத் தள்ளுகிறது. இருபுறமும் பக்கத்துக்கு 11 வீதம் 22 வாயில்களைக் கொண்ட அந்த தளம் ஒரு முனையிலிருந்து மறு முனை தௌ¤வாகத் தெரியாத தொலைவில் உள்ளதாக, நடந்துதீராத தூரம் போல பிரம்மாண்டமானது. மிக உயரமான, கூண்டு வடிவிலான கூரையுடன் அவ்வளவு விஸ்தாரத்துக்கும் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டிருப்பது மலைக்க வைக்கிறது. தளம் முழுதும் அப்போதுதான் போட்டமாதிரி, பளபளப்புடனும் புது மெருகு குலையாமலும் வழுவழுப்பான மொசாய்க் தரை கண்ணைப் பறிக்கிறது. மிகப் பிரகாசமான ஒளிகள் இரவைப் பகலாக்குகின்றன.

அதன் கீழ்த் தளம் முழுதும் வரியில்லா வர்த்தகக் (Duty free shops) கடைகள்.

அரசே அனுமதித்த கடைகள் என்பதால் அங்கு வாங்கும் சாமான்கள் - அனுமதிக்கப்படும் கை லக்கேஜ் தலா 7 கிலோவைத் தாண்டினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. மேல் தளத்திலிருந்து கீழே இறங்கவும் ஏறவும் எக்ஸலேட்டர்கள் உள்ளன. கீழ்த்தளக் கடைகள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை. 'குண்டூசி முதல் யானை வரை' என்பார்களே - அப்படி அங்கே இல்லாத பொருள் இல்லை. விலை சாதாரணர்களுக்கு சாத்யப்படாதவை. ஈரோ, டாலர் சம்பாத்யம் உள்ளவர்களே வாங்கமுடியும். மற்றவர்கள் கண்காட்சியைச் சுற்றிவருவது போல - பத்து மணி நேர்த்தைப் போக்க வேண்டுமே - கண் அகலப் பார்த்து வியக்கலாம்.

மேல் தளத்தில் ஒரு முனையிருந்து மறு முனைக்கு நடந்து தீராது என்பதால் எக்ஸலேட்டர் போலவே நகரும் தரை அமைப்பு உள்ளது. அதில் நின்று கொண்டால் நடக்கும் சிரமமின்றி கடைசி வரை போய்விடலாம். அதுவும்கூட முடியாத முதியவர், பெண்கள், குழந்தைகளுக்காக சின்னச் சின்ன திறந்த ஜீப்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. கை காட்டினால் ஏற்றிச் சென்று விரும்பும் இடத்தில் விடுகிறார்கள்.

கட்டணம் ஏதுமில்லை. பயணிகள் தங்கி ஓய்வெடுக்க தனி அறையென்று ஏதுமில்லை.

ஆனால் தளம் முழுதும் வசதியான இருக்கைகளும், கைக்கெட்டும் தூரத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதியும், மிகச் சுத்தமான கழிப்பறைகளும், ஆங்காங்கே டீ, ¡பி, ஸ்னாக்ஸ் ஸ்டால்களும் தொலைபேசிகளும் நிறைந்துள்ளன. மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படும் கழிப்பறைகளையும் அங்கே ஈரக்கையை உலர்த்திக்கொள்ளும் வெப்ப உலர்த்திகளையும் பார்த்தபோது - நம் பேருந்து நிலையங்களில் காசுவாங்கிக் கொண்டு காணச் சகிக்காதபடி மோசமான பராமரிப்பில் உள்ள நம்மூர் கழிப்பறைகள் நினவுக்கு வந்து இந்த மாதிரி வசதியெல்லாம் நமக்குக் கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்குமோ என்று ஏக்கம் உண்டாகிறது. தங்கிப் படுத்து வசதியாய் ஓய்வெடுக்க விரும்பினால் வாடகைக்கு அறைகளும் தளத்திலே உள்ளன. இவையும் சாமான்யருக்குக் கட்டிவராதவை. ஆனால் 8 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேர்கிற பயணிகளுக்கு உணவு வசதி இலவசமாகத் தருகிறார்கள்.

சிஷெல்ஸ¤க்குச் செல்லும் எங்களது அடுத்த விமானம் பின்னிரவு 2.15 மணிக்கு வந்தது. 350 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம் ஆளே இல்லாமல் 40, 50 பேர் மட்டுமே கொண்டதாகக் கிளம்பியது. துபாய்க்கு எல்லா விமானங்களும் காலியிடமின்றி நிரம்பி இருக்கும். சீஷெல்ஸ¤க்குப் பயணிப்பவர்கள் குறைவு. மீண்டும் 4 மணி நேரப் பயணம். அரைத் தூக்கத்துடன் அலுங்காமல் ஜூலை 11 காலை 6.45 மணிக்கு சிஷெல்ஸில் இறங்கினோம்.

(தொடரும்)

வர்ணனைகள் உவமைகள் - 46

நான் ரசித்த வர்ணனைகள் - உவமைகள்: 46

அசோகமித்திரன் படைப்புகளிலிருந்து:

1. ஆட்டிவிட்ட கடிகாரம் மீண்டும் நின்றுவிட்டது. இந்த நாளில் பெண்டுலம் உள்ள கடிகாரங்களே அதிகம் காணமுடியாது. பாசம் மிகுந்த வீடுகளில்தான் பார்க்க முடியும். பல வீடுகளில் அவை ஓடாமல் அப்படியே சுவரில் ஒட்டடையும் தூசும் படிந்து கிடப்பதைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு கடிகாரத்தின் மீது குருவிகூடு கட்டி இருந்தது. சாவைக் குறிக்கும் கடிகாரத்தின் மீது, செத்துப் போன
கடிகாரத்தின் மீது ஒரு குருவி கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் திட்டமிட்டிருந்தது. பாசத்தைக் கிண்டல் செய்வது போலிருந்தது. வாழ்க்கையே கிண்டல் மிகுந்ததுதான். ஒவ்வொரு கணமும் மனிதனின் இயலாமையையும் அறியாமையையும் கண்டு கிண்டல் செய்வதுதான் அதன் முக்கிய பணி. இந்த வீட்டில் அதை இந்தக் கடிகாரத்தின் மூலம் செய்து கொண்டிருக்கிறது.

- 'கடிகாரம்' கதையில்.

2. அவன் இப்போது நிலவைப் பார்த்தான்.பௌர்ணமிக்கு மூன்று நாட்கள் இருந்தன. ஆதலால் நல்ல, பெரிய பிரகாசமான சந்திரன். கண்களுக்குத் தெரியாதபடி ஏதோ திரவம் போன்றது ஒன்றையும் நிலவு மேலிருந்து பூமிக்கு இறங்க வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆற்றல் சூரியனுக்குக் கிடையாது. சூரியன் பலநூறு மடங்கு அதிக வெளிச்சம் தரலாம். தணலாகச் சுட்டு, வறுத்து எடுக்கலாம். ஆனால் பரிமாணமுள்ளது எதையும் தரமுடியாது. சந்திரனால் முடிந்தது. சந்திரன் இறக்கும் அப்பொருளின் பளு தாங்கமுடியாமல்தான் எல்லோரும்
படுத்துக் கொண்டு விடுகிறார்கள். மாடுகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன. பறவைகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன.

- 'குதூகலம்'.

3. எங்கெங்கோ தூரத்திலிருந்து மெல்லிய ஒலிகள் வந்து கொண்டிருந்த நகரக் கடலில் அவன் தெரு ஒரு குமிழியாக மிதந்து கொண்டிருந்தது. வெளியமைதி பொறுக்க முடியாமல் கத்தி விடலாமென்று அவனுக்குத் தோன்றியது.

- 'காத்திருத்தல்'.

4. காற்று மண்டலமே கலங்கிய திரவமாகி அதன் அடியில் தங்க விழையும் சுண்ணாம்பாக பனி இறங்கிக் கொண்டிருந்தது. பனி மூட்டத்தில் ஒரு பர்லாங் தள்ளி இருந்த மனிக்கூண்டுக் கடிகாரம் மங்கலாகத் தெரிந்தது. அந்தக் கடிகார விளக்கு வானத்து நட்சத்திரங்களுடன் ஒரு அபத்தமான போட்டி நடத்திக் கொண்டிருந்தது.

- 'காட்சி'.

5. நான் வசிக்கும் பேட்டைக்கு வடக்கு தெற்கு உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை தெற்குப் பகுதிக்குப் போனேன். அங்கு கடிகார ரிப்பேர்க்காரர் யாராவது இருப்பாரா என்று தேடினேன். வடக்குப் பகுதியில் மூவர் உண்டு. மிகவும் அருகில் இருப்பவர் கடிகாரத்தைக் கையாளும் விதம் நரசிம்மாவதாரத்தை நினைவூட்டும். இன்னொருவர் முதல்வருக்கு ஏறக்குறைய எதிர்க் கடை. அந்தக் கடை முதலாழ்வார்களை நினைவு படுத்தும். தெருவில் இருந்தபடியே எட்டிக் கொடுக்க வேண்டும்'

- கைகாட்டி மரம் கடிகாரம்....'கட்டுரையில்.

6. திடீரென்று மல்லையாவுக்கு அவன் கனமெல்லாம் கொட்டிப் போய் ஏதோ காற்றால் ஆனவன் போலிருந்தது. அவன் கை கால்கள் ஒவ்வொன்றும் தனிஅறிவு பெற்று இயங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று. இடது காலுக்குக் கிளட்சின் சூட்சுமம் போலீஸ்காரன் எரிச்சலோடு கையை விசிறியபோது தெரிந்துவிட்டது.

- 'திருப்பம்'.

7. சைக்கிளில் உட்கார்ந்தபடியே வலது காலைக் கீழே ஊன்றி பார்வை கொள்ளும் அளவுக்கு வயல் வெளியைப் பார்த்தான். மூன்று நான்கு வயல்களைத் தவிர அங்கே முற்றும் நன்கு ஓங்கி வளர்ந்த பயிர்க் கதிர்கள் காற்றில் அசைந்து ஏரித்தண்ணீர் மேற்பரப்பு போல் சிற்றலைகளாகத் தென்பட்டது. தொலைவில் மலைத்தொடர் அப்போதே கலையத்தொடங்கும் பனி மூட்டத்தில் பிரம்மாண்டமான நாடகத்
திரை போல் காட்சியளித்தது.

- 'விரிந்த வயல்வெளிக்கப்பால்'.

8. அத் தோட்டங்களில் அப்போது ஒரு பூக்கூட காணக் கிடைக்கவில்லை. இதே தோட்டங்கள் வெயில் காலத்தில் பல வண்ணப் புஷ்பங்களை ஏராளமாகச் சுமந்து காண்டு அடக்கம் அறியாப் பெண்கள் போலிருக்கும். இயற்கையோடு இசைந்து ருப்பவர்களுக்கு அடக்கம் எதற்கு? மனிதன் கூட ஆதிநாட்ளில் காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் குளிரால் வ்வளவு கஷ்டப் பட்டிருக்க மாட்டான்.
அவனுக்குக் குளிரை எதிர்க்க இவ்வளவு சாதனங்கள் தேவைப் பட்டிருக்காது.

- 'தலைமுறைகள்' நாவலில்.

9. நான் இருட்டில் பின்வாங்கினேன். மேகங்கள் வெகு அவசரமாக எங்கோ பாய்ந்து காண்டிருந்தன. நான் சிறுவனாய் இருந்தபோது இரவில் அசையும் மேகங்கள் னக்குப் பயத்துக்குரியதாக இருந்தன. கீழிருந்து பார்க்கும்போது ஒரு சிறு மூட்டை போலக் காட்சியளித்தாலும் அது அளவில் மிகப் பெரியதாக இருக்கும் என்று சொன்னால் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. நான் அறிந்த
குன்றுகளையும் மலைகளையும் விடப் பெரியதாக வானத்தில் நகரும் மேகம் எனக்கு எப்போதுமே பயமூட்டியது. ஆனால் இன்று இந்த மேகங்கள் விபரீதமான உருவமும் அளவும் கொண்டதாயிருந்தாலும் எனக்கு அவை பயமூட்டவில்லை. மாறாக எனக்குத் துக்கம் மேலிட்டது.

- 'பாவம் டல்பதேடா' நாவலில்.

10. புன்னகையும் பருவநிலையும் தபால் பெட்டியில் தபாலைப் போடுவதைப் போல. கடிதத்தைப் பெட்டியின் வாயில் நுழைத்தவுடன் விஷயம் முடிந்து விடும்.

- 'இரு ஒற்றர்கள்' நாவலில்.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.