Thursday, January 05, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 1 - பயணம்

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குத் தென் மேற்கில் 3000 கி.மீ தொலைவில் மொரீஷியஸ¤க்கு வடக்கில், தென்னாப்ரிக்காவுக்கு அருகில் முத்துக்கள் சிதறினாற்போல் உள்ள தீவுக் கூட்டம்தான் சி¦ஷெல்ஸ். இத்தீவுகளின் அழகை ரசித்த ஐரோப்பியர்கள் இதனை 'Garden of Eden' என்று அழைக்கிறார்கள். இந்த ஈடன் தோட்டத்தை ஒருநாள் போய்ப் பார்ப்பேன் என்று கற்பனை கூட நான் செய்ததில்லை. ஆனால் அங்கு சென்று 70 நாட்கள் தங்கி வரும் வாய்ப்பு சமீபத்தில் வாய்த்தது.

1989லேயே அங்கு பணி நிமித்தம் சென்று பிறகு அங்கேயே குடியுரிமை பெற்று நிரந்தரமாகத் தங்கிவிட்ட என் மகளும் மாப்பிள்ளையும், போன நாளாய் வருந்தி அழைத்தும் பணியைக் காரணம் காட்டியும், முதுமையைச் சொல்லியும் தவிர்த்து வந்தேன். ஆனால் இந்த ஜனவரியில் (2005) அவர்கள் அங்கே சொந்த வீடு கட்டி அதைப் பார்க்கவாவது அவசியம் வரும்படி வற்புறுத்தவே மேலும் தவிர்க்க வாய்ப்பின்றி நானும் என் மனைவியும் ஜூலை 10ஆம் தேதி புறப்பட்டுச் சென்றோம். அங்கு போன பிறகுதான் 'அடடா, எவ்வளவு அரிய வாய்ப்பினை இத்தனை நாளாய் தவற விட்டுவிட்டோம்' என்று உணர்ந்தேன். அந்தத் தீவுகளின் அழகும், சீதோஷ்ணமும், மக்கள் வாழ்க்கையும், அவர்களது பண்பாடும் கண்டு 'ஆகா! வாழ்ந்தால் இங்கு வாழ வேண்டும். இது பூலோக சொர்க்கம்தான்' என்று உருகிப் போனேன். யான் பெற்ற இன்பத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே இத்தொடர்.

சென்னையிலிருந்து துபாய் வழியே சிஷெல்ஸ் சென்றோம். பம்பாய் போய் அங்கிருந்து போவதுதான் சுருக்கு வழி என்றாலும், சிஷெல்ஸ் விமானப் போக்குவரத்தை இந்த ஏப்ரல் முதல், குறைந்த பயணிகளைக் கொண்டு நடத்துவதில் நஷ்டம் கண்டதால் நிறுத்தி விட்டார்கள். எனவே துபாய் வழியே செல்வதுதான் சாத்யம். சென்னையிலிருந்து துபாய்க்கு 4 மணி நேரப் பயணம். அங்கிருந்து அதன் தொடர்ச்சி விமானத்துக்கு பத்து மணி நேரம் போலக் காத்திருக்க வேண்டும். துபாய் போனதும் நம் கடிகாரத்தை நாம் திருத்த வேண்டி உள்ளது. ஏனெனில் அவர்கள் நம்மை விட ஒன்றரை மணி பின் தங்கி உள்ளார்கள். அதாவது இங்கு காலை 8 மணி என்றால் அங்கு அப்போது காலை ஆறரை மணி. சிஷெல்ஸிலும் அதேதான்.

சென்னையில் இருந்தும் துபாயில் இருந்தும் நாங்கள் பயணம் செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானம். ஒரே கம்பனியின் விமான சேவை என்பதால், துபாயில் நாம் இறங்கும்போது நம் லக்கேஜ்களையும் இறக்கி ஏற்ற வேண்டியதில்லை. அவர்களே நாம் செல்லவேண்டிய அடுத்த விமானத்துக்கு மாற்றி விடுகிறார்கள். எமிரேட் விமான சேவை 86 நாடுகளுக்கு துபாயிலிருந்து நடத்தப் படுகிறதாம். உலகத்திலேயே அதிக விமான சர்வீசை நடத்தும் 2வது (முதலாவது பெர்லின்) நிறுவனமான இதன் பயணம் மிகப் பத்திரமானது என்கிறார்கள். அது மட்டுமல்ல சுகமான அலுப்பில்லாத பயணமும் என்பதை அனுபவத்தில் கண்டோம்.


நாங்கள் பயணம் செய்த விமானம் மிகப் பெரிய 850 பேர் பயணம் செய்யக்கூடிய ஜம்போ ஜெட் விமானம். 3 வரிசைகளாக 2, 4, 2 இருக்கைகள் கொண்டது. மேலே கை லக்கேஜ் வைக்க பெட்டி போன்ற அமைப்பு. சௌகர்யமான இருக்கை. விமானம் கிளம்பும் போதோ இறங்கும்போதோ குலுக்கலோ அதிர்ச்சியோ இல்லாமல் ஒரு பருந்து சுழன்று வட்டமடித்து அலட்டாமல் இறங்குவது போல செயல்படுவது அதன் சிறப்பு. இறங்கும்வரை எந்தவித பதற்றமோ பயமோ ஏற்படவில்லை. இருக்கையின் முன்னே இருக்கிற குட்டித்திரை (LCD screen) நமக்குத் தைரியம் தருவது போல தொடர்ந்து நாம் போய்க் கொண்டிருக்கும் பாதை, பறக்கும் உயரம் (அதிக பட்சமாக 90000 அடி) பறக்கும் வேகம் (அதிக பட்சமாக மணிக்கு 975கி.மீ), கிளம்பிய இடத்திலிருந்து அப்போது உள்ள தூரம், கடக்க வேண்டிய தூரம், கடந்து வந்த நேரம், கடக்க வேண்டிய நேரம், போய்ச் சேரும் நேரம் என்று காட்டிக்கொண்டே இருப்பது அதன் டி.வி திரையில் பார்க்கும் படத்தைவிட சுவாரஸ்யமாக இருக்கிறது. சென்னையில் காலை 10மணிக்குக் கிளம்பிய விமானம் துபாய் நேரப்படி காலை 12.45க்கு துபாய் சென்றடைந்தது.

துபாய் விமான நிலையம் பார்க்க வேண்டிய ஒரு அற்புதம். உலகத்திலேயே மிகப் பெரிய விமான நிலையம் என்கிறார்கள். விமானம் இறங்கும்போது பார்த்தால் கீழே நாலா பக்கமும் புறாக் கூட்டம் அமர்ந்திருப்பது போல எண்ண முடியாத விமானங்களைக் காணும்போது பிரமிப்பாக இருக்கிறது. சென்னை நோக்கிச் செல்கையில் மீனம்பாக்கம் விமான நிலையம் நெருங்கும் போது அங்கு நிற்கிற, இறங்குகிற ஒன்றிரண்டு விமானங்களை அதிசயமாய்ப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. வானத்திலிருந்து இறங்குகிற, ஏறுகிற விமானங்கள் கிராமத்து ஏரியில் மீன் பிடிக்கையில் வட்டமிட்டு நீர்ப் பரப்பை உரசிச் செல்கிற பருந்துகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அத்தனை விமானங்கள்!

விமானத்திலிருந்து இறங்கி உள்ளே போனால் மிகப் பெரிய, மிக நீளமான உள்தளம் பிரமிப்பின் உச்சத்துக்கு நம்மைத் தள்ளுகிறது. இருபுறமும் பக்கத்துக்கு 11 வீதம் 22 வாயில்களைக் கொண்ட அந்த தளம் ஒரு முனையிலிருந்து மறு முனை தௌ¤வாகத் தெரியாத தொலைவில் உள்ளதாக, நடந்துதீராத தூரம் போல பிரம்மாண்டமானது. மிக உயரமான, கூண்டு வடிவிலான கூரையுடன் அவ்வளவு விஸ்தாரத்துக்கும் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டிருப்பது மலைக்க வைக்கிறது. தளம் முழுதும் அப்போதுதான் போட்டமாதிரி, பளபளப்புடனும் புது மெருகு குலையாமலும் வழுவழுப்பான மொசாய்க் தரை கண்ணைப் பறிக்கிறது. மிகப் பிரகாசமான ஒளிகள் இரவைப் பகலாக்குகின்றன.

அதன் கீழ்த் தளம் முழுதும் வரியில்லா வர்த்தகக் (Duty free shops) கடைகள்.

அரசே அனுமதித்த கடைகள் என்பதால் அங்கு வாங்கும் சாமான்கள் - அனுமதிக்கப்படும் கை லக்கேஜ் தலா 7 கிலோவைத் தாண்டினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. மேல் தளத்திலிருந்து கீழே இறங்கவும் ஏறவும் எக்ஸலேட்டர்கள் உள்ளன. கீழ்த்தளக் கடைகள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை. 'குண்டூசி முதல் யானை வரை' என்பார்களே - அப்படி அங்கே இல்லாத பொருள் இல்லை. விலை சாதாரணர்களுக்கு சாத்யப்படாதவை. ஈரோ, டாலர் சம்பாத்யம் உள்ளவர்களே வாங்கமுடியும். மற்றவர்கள் கண்காட்சியைச் சுற்றிவருவது போல - பத்து மணி நேர்த்தைப் போக்க வேண்டுமே - கண் அகலப் பார்த்து வியக்கலாம்.

மேல் தளத்தில் ஒரு முனையிருந்து மறு முனைக்கு நடந்து தீராது என்பதால் எக்ஸலேட்டர் போலவே நகரும் தரை அமைப்பு உள்ளது. அதில் நின்று கொண்டால் நடக்கும் சிரமமின்றி கடைசி வரை போய்விடலாம். அதுவும்கூட முடியாத முதியவர், பெண்கள், குழந்தைகளுக்காக சின்னச் சின்ன திறந்த ஜீப்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. கை காட்டினால் ஏற்றிச் சென்று விரும்பும் இடத்தில் விடுகிறார்கள்.

கட்டணம் ஏதுமில்லை. பயணிகள் தங்கி ஓய்வெடுக்க தனி அறையென்று ஏதுமில்லை.

ஆனால் தளம் முழுதும் வசதியான இருக்கைகளும், கைக்கெட்டும் தூரத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதியும், மிகச் சுத்தமான கழிப்பறைகளும், ஆங்காங்கே டீ, ¡பி, ஸ்னாக்ஸ் ஸ்டால்களும் தொலைபேசிகளும் நிறைந்துள்ளன. மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படும் கழிப்பறைகளையும் அங்கே ஈரக்கையை உலர்த்திக்கொள்ளும் வெப்ப உலர்த்திகளையும் பார்த்தபோது - நம் பேருந்து நிலையங்களில் காசுவாங்கிக் கொண்டு காணச் சகிக்காதபடி மோசமான பராமரிப்பில் உள்ள நம்மூர் கழிப்பறைகள் நினவுக்கு வந்து இந்த மாதிரி வசதியெல்லாம் நமக்குக் கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்குமோ என்று ஏக்கம் உண்டாகிறது. தங்கிப் படுத்து வசதியாய் ஓய்வெடுக்க விரும்பினால் வாடகைக்கு அறைகளும் தளத்திலே உள்ளன. இவையும் சாமான்யருக்குக் கட்டிவராதவை. ஆனால் 8 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேர்கிற பயணிகளுக்கு உணவு வசதி இலவசமாகத் தருகிறார்கள்.

சிஷெல்ஸ¤க்குச் செல்லும் எங்களது அடுத்த விமானம் பின்னிரவு 2.15 மணிக்கு வந்தது. 350 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம் ஆளே இல்லாமல் 40, 50 பேர் மட்டுமே கொண்டதாகக் கிளம்பியது. துபாய்க்கு எல்லா விமானங்களும் காலியிடமின்றி நிரம்பி இருக்கும். சீஷெல்ஸ¤க்குப் பயணிப்பவர்கள் குறைவு. மீண்டும் 4 மணி நேரப் பயணம். அரைத் தூக்கத்துடன் அலுங்காமல் ஜூலை 11 காலை 6.45 மணிக்கு சிஷெல்ஸில் இறங்கினோம்.

(தொடரும்)

No comments: