Sunday, December 13, 2009

பாவண்ணனின் 'துங்கபத்திரை' கட்டுரைகள்.

பாவண்ணன் லா.ச.ராவைப் போல ஒரு அழகு உபாசகர். 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதிதாசன் சொன்னது போல அவருக்கு எங்கெங்கும் அழகே தென்படுகிறது. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் அவரது கண்களில் தென்படுபவை எல்லாமே அழகுதான். பூங்காக்களில் தத்தித் தாவும் வண்ணப் புள்ளினங்களில், அங்கே விளையாடும் குழந்தைகளில், வானில் வலசை போகும் பறவைகளில், மஞ்சு தவழும் மலைக்குன்றுகளில், அவற்றிடையே வானின்று ஒழுகும் அருவிகளில், ஆரவாரமற்று அமைதியாய் ஓடும் ஆறுகளில் என்று - 'தொட்ட இடமெல்லாம் 'புரட்சிக் கவிஞருக்கு 'அழகென்பாள் கவிதை தந்த' மாதிரி, பாவண்ணனுக்கு படைப்புக்கான விஷயங்கள் கிடைக்கின்றன. தொட்டதில் எல்லாம் மனம் தோய்கிற வரம் பெற்றவராக, 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலாரைப்போல தான் காணும் வதைபடும் மாந்தர்களுக்காக மனங்கசிந்து உருகுபவராக அவரது கட்டுரைகள் அவரை நமக்குக் காட்டுகின்றன. பார்க்கிற காட்சிகள் மட்டுமல்ல, படிக்கிற கவிதைகள், பழம்பாடல்கள் எல்லாமும் அவரைப் பரவசப் படுத்துகின்றன. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் பெருநோக்கில், அவற்றைத் தான் பரவசப்பட்டு உணர்ந்தவாறே தனது வாசகரையும் உணர வைத்து உருகவைப்பதில் வெற்றி காண்பவர். 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள இந்த 'துங்கபத்திரை' கட்டுரைத் தொகுப்பு அதை நிரூபிக்கிறது. இதில் அவர் காட்டும் காட்சிகள், நிகழ்வுகள் எல்லாம் நாமும் காண்பவையாகவும், நம்முடையவையாகவும் இருப்பதால் நாம் அவருடன் நெருக்கத்தை உணர முடிகிறது. இது ஒரு சிறந்த படைப்பாளிக்கே சாத்தியம்.

ஒவ்வொரு கட்டுரையுமே ஒரு சிறுகதைபோல் சுவாரஸ்யமாக இருக்கிறது. 'ஒரு வீட்டின் ஆயுட்காலம்'என்னும் முதல் கட்டுரை, தேவையைப் பொறுத்து அமைகிற சொந்த வீடு பற்றிய அபிமான உருக்கத்தின் பல நிலைகளைப் பேசுகிறது. ஆசைப்பட்டுக் கட்டிய, வாங்கிய வீட்டை விற்க நேரும்போது உள்ள மனநிலை, நேசித்த வீட்டைப் பிரியும்போது ஏற்படும் மனக்கிலேசம் பற்றியெல்லாம் இதில் பாவண்ணன் காட்டும் காட்சிகள் நம்மையும் உருக வைக்கின்றன. வீட்டை இடிக்கிற தொழிலாளிகூட 'கட்டினவங்களுக்கு என்ன மொடையோ, பாத்துக்க முடியாத பிரச்சினையோ, வித்துடறாங்க. ஆனா வீடுங்கறத வெறும் சிமிட்டும் மண்ணும் கலந்த செவுருன்னு நெனச்சிடலாமா ஐயா. எவ்வளவோ நல்லது கெட்டதுங்க இந்த வீட்டுக்குள்ள நடந்திருக்கும். மனுஷங்க சந்தோஷம், துக்கம், சிரிப்பு, அழுகை எல்லாத்தயும் இதுவும் மௌனமாப் பாத்துக்கிட்டுதானே இருக்குது. அதுக்கும் உயிர் இருக்குமில்லையா?' என்று பாவண்ணனிடம் வீட்டை இடிக்க நேருகிற பாவத்தை மனம் வலிக்கப் பேசுகிறான். நமக்கும் வலிக்கவே செய்கிறது.

அடுத்துள்ள 'எரிந்த வீடும் எரியாத நினைவும்' என்கிற கட்டுரையும் ஒரு வீட்டின் இழப்பைப் பேசுகிறது.கண்ணனின் இதழ் ஸ்பரிசத்தை அறிந்த வெண்சங்கு- ஆண்டாளுக்கு எழுப்பியிருக்கும் கேள்விகளும், தலைவனின் வருகையை எதிர்பார்த்து ஏங்கும் குறுந்தொகைத் தலைவி தோழியிடம் எழுப்பும் ஐயங்களும், கன்னடக் கவிஞர் சிந்தாமணி கொட்லேகெரேயின் 'கங்கைக் கரையில் கிடந்த கல்' எனும் கவிதையில் வரும் கல் அவருள் எழுப்பும் காட்சிகளுமான - பாவண்ணனை அசைபோட வைக்கும் அவரது அவதானிப்புகளால் நமக்கு ரசமான இலக்கிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. இலங்கைக் கவிஞர் வில்வரத்தினத்தின் வீடு இந்திய அமைதிப்படையால் அழிக்கப் பட்ட போது, அந்த வீட்டின் நினைவாக ஒரு பொருளை எடுத்துவரச் சென்ற அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை வேதனையோடு குறிப்பிடுகையில் கவிதைப்பரப்பின் அதிசயங்களை தானும் வியந்து நம்மையும் வியக்க வைக்கிறார்.

கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில் அன்று 15 ரூபாய் பரீட்சைக்குக் கட்ட முடியாத பெற்றோரையும், இன்று லட்சக்கணக்கில் பணம் கட்ட வசதி இருந்தும் பிள்ளைகளின் கல்வி வாய்ப்புக்கு அலைகிற, பிள்ளைகளின் மனப்போக்கு பற்றிக் கவலைப்படுகிற இன்றைய பெற்றோர்களையும் ஒப்பிட்டு சில யதார்த்தங்களைச் சுட்டி 'புதிய பெற்றோர்கள்' என்னும் கட்டுரை பேசுகிறது.

தலைப்புக்கட்டுரையான 'துங்கபத்திரை'- துங்கபத்திரை நதி பாவண்ணனுக்கு ஏற்படுத்திய வித்தியாசமான அனுபவங்களை ரசமாகச் சொல்கிறது. பல்வித எண்ண அலைகளை அங்கு சுற்றுலாவரும் பள்ளிக் குழந்தகளும் அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களும் எழுப்புகிறார்கள்.

அவரது சொந்த ஊரில் அவர் மிகவும் நேசிக்கும் ஏரி - நீர்தளும்பி அலையடித்த நிலை மாறி இன்று வறண்டு கிடக்கும் கோலத்தைப் பார்க்கும் பாவண்ணனுக்குள் மனித வாழ்கையின் சுமைகள், முடிவே இல்லாத - பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்பற்றி எல்லாம் எழும் ஆழ்ந்த சிந்தனைகளை 'வாழ்க்கை எனும் சுமை' என்கிற கட்டுரை விரிவாகப் பேசுகிறது. வாழ்க்கைச் சுமையை யதார்த்தமாக ஏற்கும் லட்சுமி அம்மா என்கிற உழைக்கும் பெண்மணியின் கதை இந்தியாவின் உழைக்கும் பெண்களின் வாழ்வே இப்படித்தான் என்று
காட்டுகிறது.

'மகிஜா என்றொரு மனிதர்' கட்டுரையில், பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம் ஆண்டுக் கணக்கில் குப்பை மேடாக மாறி இருந்தது - மகிஜா என்றொரு மாமனிதரின் முயற்சியால் அற்புதப் பூங்காவாக மாறியது பாவண்ணனைக் கவர்கிறது. அதற்கு அவர் பட்ட சிரமங்கள், அரசியல்வாதிகளின் அலட்சியம், அரசு அலுவலர்களின் சிகப்புநாடா நடைமுறை என்று எவ்வளவோ தடை ஏற்பட்டும் அம்மாமனிதர் அயராது நடை நடையாய் நடந்து வெற்றி கண்டதற்கு தானும் நண்பர்களும் உதவியதையும், இடையே அரசியல்வாதிகளைப் பற்றிய எள்ளல்களையும் பாவண்ணன் ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார்.

பார்க்கிற எளிய மனிதர்களிடம் எல்லாம் பாவண்ணனுக்குப் பரிவும் அக்கரையும் உண்டாகின்றன. 'ஆறுதல்' என்கிற கட்டுரையில் பூங்காவில், கடலை விற்கும் ஒரு மனிதரின் சோகக் கதையைக் கேட்டு உருகி அவருக்கு ஆறுதல் சொன்னதை நினைவு கூர்கிறார். 'சந்திப்பு' உதவ யாருமற்ற குப்பம்மாள் என்கிற வயதான ஏழை மூதாட்டியின் சோகக் கதையை விவரிக்கிறது.

'சொர்க்கத்தின் நிறம்' என்னும் ஈரானிய திரைப்படம் தந்த, அழுத்தமான விடுபடமுடியாத தாக்கம் பற்றி ஒரு கட்டுரையில் சொல்கிற பாவண்ணன், அப்படம் 'செல்வமோ வசதியோ சொர்க்கமாக இருக்க முடியாது. மனம் விரும்புவதை அடைவதே மிகப்பெரிய சொர்க்கம்' என்று உணர்த்துவதைக் காட்டுகிறார். வில்லியம்ஸ் என்கிற மேலைநாட்டு மருத்துவர் ஒருவரைப் பற்றி அவர் படிக்க நேர்ந்த புத்தகத்தில் கண்ட அம் மருத்துவரது அரிய சாதனை அவரை நெகிழ்த்திய அனுபவத்தை 'சாவை வென்ற வீரர்' சிலிர்ப்புடன் விவரிக்கிறது. புரந்திர
தாசரின் பாடல்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது 'நெஞ்சை நிரப்பிய பாடல்கள்' என்கிற புரந்திரதாசர் பாடல்கள் பற்றிய பாவண்ணனின் ரசானுபவம்.

இயற்கையின் மீதான பாவண்ணனின் தீராத தாகத்தையும் பரவசத்தையும், கர்நாடகாவின் 'ஜோக்' அருவியை அவர் கண்டு சிலிர்த்த அனுபவத்தை அதே பரவசம் நமக்கும் ஏற்படுகிற மாதிரி சொல்லியுள்ள 'அருவி எனும் அதிசயம்' கட்டுரையில் காண்கிறோம். அந்த அருவி பற்றிய கவித்துவமான வருணனையே அற்புதமானது.நாமும் அவருடன் நின்று ஜோக் அருவியின் சாரலையும் அது ஒழுகும் அழகையும் ரசிக்கிறோம்.

'Out of sight is out of mind' என்பார்கள். நம் பார்வையிலிருந்து தப்பியவை நம் கவனத்திலிருந்தும் தப்பிவிடுவது நம் அனுபவம். ஆனால் பாவண்ணன் பார்வைக்குத் தப்பியதை அவர் மறப்பதே இல்லை. அவரது தேடல் மனம் விடாது அதைத் தேடிக் கண்டடைகிறது என்பதற்கு 'பச்சை நிறத்தில் ஒரு பறவை' என்கிற கட்டுரையே சான்று. ஒரு நாள் மைதானம் ஒன்றில் புதிய பச்சைநிறப் பறவை ஒன்றைக் கண்டவர் அதன் அழகில் மயங்கி அதன் பெயரை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அது என்ன பறவை என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களுடன் காத்திருந்தும் அந்தப் பறவை மீண்டும் வரவில்லை. போகட்டும் என்று நாமானல் விட்டு விடுவோம். ஆனால் பாவண்ணன் அதை மறந்துவிடாமல் மறுநாள் அதே நேரத்தில் அதே இடத்தில் காத்திருந்தும் பறவை வரவில்லை. பிறகு ஒரு நாள் அவருக்கு மட்டும் அது காட்சி தருகிறது. தன்னை ஈர்த்த எதையும் பற்றி, விடாது தேடி ஆராய்கிற அவரது தேடல் மனத்தை இதில் பார்க்கிறோம்.

'தாமரை இலையின் தத்துவம்' எனும் கட்டுரையும் அவரது தன்னை மறந்த தேடல் தாகத்தைச் சொல்வதாக உள்ளது. அவரது மேலதிகாரியின் புதுமனை புகுவிழாவிற்காக திருவானைக்காவுக்குச் சென்றவர் மலைக்கோட்டையையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும், கல்லணையையும் பார்க்கப்போய் நிகழ்ச்சி முடிந்தபின் அதிகாரியின் வீட்டுக்குப் போகும்படி நேர்ந்து விடுகிறது. மலைக்கோட்டையின் உச்சியில் நின்று கருநீல வண்ணத்தில் விரிந்திருக்கும் வானத்தையும், இறைந்துகிடக்கும் நட்சத்திரங்களையும் ரசிப்பதிலும், சித்தன்னவாசல் ஓவியங்களில் கண்ட பற்றின்மையை உணர்த்தும் தாமரை இலைகள் சுட்டும் வாழ்க்கைத் தத்துவத்திலும் ஆழ்ந்து போகிறார்.

சித்தமருத்துவ நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவருடைய ஊர்த் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றவர் அந்த நண்பரின் குடும்பத்தாரிடையே பரம்பரையாகத் தொடரும் சித்த மருத்துவம், சிலம்பம் முதலிய கிராமியக் கலைகள், அங்குள்ள ஈஷா மையப் பள்ளியின் கல்விமுறை ஆகியவற்றைக் கண்டு வியந்த அனுபவத்தை'அழிந்து போன அறிதல் முறை' கட்டுரை சுவைபடச் சொல்கிறது.

கடைசிக் கட்டுரையான 'பார்வையும் பரிவும்', இன்றைய தாராளமயப் பொருளாதாரமும் ஏழைகளின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதாயில்லை என்பதும், அப்பாவி எளிய மக்கள் மீது பலருக்கும் உள்ள மனச்சித்திரம் அவ்வளவு உயர்ந்ததாய் இல்லை என்பதும் அவர் பார்க்க நேரிடும் பிச்சைக்காரர்களும், கழைக் கூத்தாடிகளும் உழைக்கும் மக்களும் உணர்த்தி மனதைப் பாரமாக்குவதை உருக்கமாகச் சித்தரிக்கிறது.

இவ்வாறு, தன்னைச் சுற்றியுள்ள புறவுலகின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் கூர்ந்து கவனிப்பவராகவும், தொடர்ந்து தன்னைப் பாதித்தவற்றை அசை போடுபவராகவும் பாவண்ணனைக் இக்கட்டுரைகளில் காண்கிறோம். அத்துடன் அழகுணர்ச்சியொடும் சமூக அக்கரையோடும் மனித நேயத்தோடும் தான் கண்டுணர்ந்தவற்றையும், ரசித்தவற்றையும் - அலுப்பை ஏற்படுத்தாத எளிய இனிய நடையில் படைத்தளிக்கும் திறம் கொண்டவராகவும் அவரை இவை நமக்குக் காட்டுகின்றன. 0

நூல் : துங்கபத்திரை
ஆசிரியர் : பாவண்ணன்
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை

Tuesday, December 08, 2009

இ.பா வின் 'வேதபுரத்து வியாபாரிகள்' - ஒரு அரசியல் அங்கத நாவல்.

இன்று புதுமைப்பித்தனுக்குப் பிறகு அற்புதமான அங்கதம் அமைய எழுதுபவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். இவரது சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் அங்கதச்சுவை மிக்கவை. புதுமைப்பித்தனின் அங்கதம் கடுமையாகவும் எள்ளலாகவும் இருக்கும். ஆனால் இ.பா வின் அங்கதம் மென்னகை பூக்க வைப்பதோடு, சில சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைப்பதாகவும், மறைமுகமாகச் சாடுவதாகவும் இருக்கும். 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டிருக்கும் இவரது 'வேதபுரத்து வியாபாரிகள்' ஒரு மிகச் சிறப்பான அரசியல் அங்கத நாவல்.

கல்கியில் தொடராக வந்த இந்நாவலின் பிறப்பு பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது, இ.பா அவர்கள் அங்கதம் எழுதுவது பற்றிச் சொல்கிறார்: "கல்கி ராஜேந்திரன் 'கல்கி'க்கு ஒரு அரசியல் அங்கதத் தொடர் எழுதித் தரும்படி கேட்டார். "அங்கதம் இனி எழுத முடியாது என்று தோன்றுகிறது' என்று நான் அவரிடம் சொன்னேன். 'ஏன்?' என்றார் அவர். 'நடப்பு நிகழ்வுகளை மிகைப்படுத்திக் கற்பனையுடன் நகைச்சுவை தோன்ற எழுதுவதுதான் அங்கதம்
என்றால், இப்போது நாட்டில் நடப்பன அனைத்துமே அங்கதம்தான். நான் அங்கதம் என்று நினைத்துக்கொண்டு எழுதினால், அது படிப்பவர்களுக்கு வெறும் செய்தித் திரட்டாக இருக்கக் கூடும்' என்றேன்." அந்தளவு இன்றைய அரசியல்வாதிகளின் செயல்கள் கற்பனயாக எழுத அவசியமில்லாமல் அப்படியே எழுதுவதே அங்கதம் மிக்கதாக இருக்கும் என்று இன்றைய யதார்த்தத்தை எள்ளலுடன் குறிப்பிடுகிறார். அப்படி அவர் யதார்த்தமாக உணர்ந்தவற்றை
வரிக்குவரி அங்கதச்சுவை அமைய இந்நாவலைப் படைத்திருக்கிறார்.

'எல்லா மொழிகளிலுமே 'அங்கதங்களுக்கு' ஒரு ஆயுள் வரையறை (morality rate) உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில், ஜானதன் ஸ்·ப்ட் (Jonatan SWift) 'கலிவரின் பயணங்கள்' என்ற ஒரு மகத்தான சமூக அங்கத நாவல் எழுதினார். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ஜார்ஜ் ஆர்வெலின் '1984', 'விலங்குப்பண்ணை' (Animal Form) ஆகிய இரண்டு நாவல்களுமே மனித சுபாவம் பற்றிய உளவியல் படைப்புகளாகவே அறியப்படுகின்றனவே அன்றி, கம்யூனிசக் கோட்பாடுகளை பற்றிய விமர்சனம் என்ற கருத்தோட்டம் மறைந்து வருகிறது' என்றுகுறிப்பிடும் இ.பா'நல்ல வேளை, இந்திய, தமிழ்நாட்டு அரசியல், சமூக சூழ்நிலைகள் நான் இந்நாவலை எழுதிய பத்தாண்டு காலத்தில் மாறுதல் இல்லாமலே இருந்து வருகின்றன என்பது இந்த நாவலின் அதிர்ஷ்டம்' என்கிறா¡ர். ஏனெனல், எந்தக்காரணத்துக்காக இந்த அங்கதம் அன்று எழுதப்பட்டதோ அதே காரணத்துக்காக இன்றும் அங்கதமாகவே' இதைப் படிக்க முடிவதற்குக் காரணம் நமது அரசியல்வாதிகளின் செயல்பாட்டுகள் பல ஆண்டுகளாக மாறாது கேலிக்குரியதாக இருப்பதுதான்.

அபூர்வா என்கிற தமிழின் மூலத்தைக் கொண்ட, அமெரிக்கப் பெண்ணொருத்தி தன் தாய் நாடான தமிழ்நாட்டுக்கு - மக்களுடன் பழகி இந்நாட்டைப் பற்றி புத்தகம் எழுதும் எண்ணத்துடன் வருகிறாள். இங்கே வந்துஇங்குள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்கையில், அவள் வந்த நோக்கத்திலிருந்து விலகி, அவளது விருப்பத்துக்கு மாறாக இந்த நாட்டு அரசியலில் பங்கேற்கவும் தலைவி ஆகவும் நேர்கிறது. 'இக்கலாச்சாரத்தில்
உய்ய வேண்டும் என்றால், ஆட்கொள்ளப்படுதலைத் தவிர வேறு வழியில்லை என்கிற ஓர் அவல நிலையை எய்துதல்தான், இந்நாவலின் துன்பியல் முடிவு' என்கிறார் ஆசிரியர்.

இந்நாவலில் வரும் பாத்திரங்களும், இடங்களும் வாசிப்பவருக்கு எளிதில் அர்த்தமாகின்றன. வேதபுரம் என்பதுபுதுச்சேரியின் பெயர்களில் ஒன்று என்றாலும், அது தமிழ்நாட்டையும், 'வேதபுரத்தில் வியாபாரம் பெருகுது என்ற பாரதியின் வார்த்தைகள் அங்கு நடக்கும் அரசியல் வியாபாரத்தையும் சுட்டுவதை உணர முடிகிறது. 'இந்திரப்பிரஸ்தம்' என்று நாவலில் வரும், நாட்டின் தலைநகர் 'தில்லி' என்பதையும் அறிய முடிகிறது. தலைநகர் ஒன்று உள்ளது என்ற பிரக்ஞையே இல்லாமல், வேதபுரத்தைத் தனி சுதந்திர நாடாகக் கருதி அங்கு ஆளும் அரசியல் தலைவர்கள் முடியாட்சி நடத்தும் விசித்திரத்தையும், அங்கு நிலவும் கலாச்சாரச் சீரழிவையும் ஒளிவு மறைவின்றித் தத்ரூபமாய் நாவல் சித்தரிக்கிறது. தலைவரைச் சந்திக்க முடியாத, தலவரை நேரில் பார்க்க வியலாத கீழ்மட்டத் தலைவர்களின் அவலத்தையும், காலில் விழும் கலாச்சாரத்தையும், தலைவருக்கு நெருக்கமான ஒருவரே எல்லாவற்றையும் இயக்குவதையும் கதை நாயகி அபூர்வா பார்க்கிறாள். எந்த நேரத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அல்லது வீழ்ச்சி நிகழும் என்று தீர்மானிக்க இயலாத தலைவரின் விசித்திர நடவடிக்கை கண்டு வியக்கும் அவளுக்கே, அந்த அதிர்ச்சியான உயர்வும் விசித்திரங்களும் நேர்கின்றன. அவளும் சந்திக்க முடியாத அந்தத் தலைவரையும் அபூர்வவின் மூலப்பாத்திரத்தையும் நாம் இனங்கண்டு ரசிக்க முடிகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ, அரசியல் தலைவரையோ கிண்டல் செய்வது தன் நோக்கமில்லை என்று ஆசிரியர் சொன்னாலும், நமக்கு அந்தக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது.
வரிக்குவரி கிண்டலும் கேலியுமாய் படிப்பவரை நாவல் பரவசப்படுத்துகிறது. எழுத்தாளர்களை இப்படியும் ஒரு அற்புதமான அங்கத எழுத்தை நம்மால் எழுத முடியுமா என்று ஏங்க வைக்கிறது.

என்னதான் நான் இ.பாவின் அங்கதச் சிறப்பை வளைத்து வளைத்து எழுதினாலும் நாவலைப் படித்தால் மட்டுமே பரிபூரண வாசிப்பு சுகத்தை அனுபவிக்க முடியும். இந்த வாசிப்பு சுகம் தி.ஜானகிராமன் போன்று, அபூர்வமாக ஒரு சிலரது எழுத்துக்களில்தான் காணமுடியும். அப்படிப்பட்ட அபூர்வமான எழுத்து இ.பாவினுடையது. வாசகர்ளின் வாசிப்புக்குப்புத் தூண்டும் விதமாக கீழ்க்கண்ட சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும்கூட கேலியும் கிண்டலும் தொனிக்கிற கற்பனையான எடுத்துக்காட்டு கள் - 'வேதபுரத்தில்தான் தலைவர்களின் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுதல் என்ற மரபு ஏற்பட்டிருக்க முடியும்;மேலைநாடுகளில் இம்மரபு தோன்றி இருக்க இயலாது. காரணம் அந்த நாடுகள் குளிர்ப்பிரதேசங்கள், காலில் எப்போதும் பூட்ஸ் போட்டிருப்பார்கள்; பாதங்களின் நேரடி தரிசனம் கிடைப்பது சாத்தியமில்லை'. ('பாத பூஜை ஆய்வு' - ஆசிரியர், எஸ்.எம்.ஆர்.என்.கிருஷ்ணசாமி. பக்.34-35)' போன்று தரப்பட்டிருப்பதும் ரசனைக்குரியது.

'வேதபுரத்துக்கு வந்த புதிதில், அவள் இங்கு நடைபெறுவது முடியாட்சிதான் என்று நினைத்தாள். தலையில் கிரீடத்துடன் தெரு ஓரங்களை அலங்கரித்த ஆளுங்கட்சித் தலைவரின் விஸ்வரூப படத் தோற்றங்கள் அவளை அவ்வாறு நினைக்க வைத்தன.'

'இடக்குத்தகை'ன்னா.... ஒவ்வொரு மூலையிலும் நம்ம தலைவரு ஜனங்களுக்கு தரிசனம் கொடுத்துக்கிட்டிருக் காரில்லே? அந்த இடத்தை ஏலத்துலே குத்தகைக்கு விடுறது. குத்தகைக்கு எடுத்தவரு அப்புறம் ஒவ்வொரு மூலையையும், தலைவரது உருவத்தை வைக்கப் பிரியப்படறவங்களுக்கு வாடகைக்கு விடுவாரு....'

'எங்க நாட்டை நீங்க புரிஞ்சிக்கணும்னா, தேவைப்படுகிற அளவுகோலே வேற... பகுத்தறிவுக்கு டாட்டா சொல்லணும். ஆனா நாங்க கொடுக்கிற பட்டங்களெல்லாம் 'பகுத்தறிவுச் செம்மல்', பகுத்தறிவு மறவன்', அது இதுன்னுதான். சுயமரியாதைன்னு சொல்லுவோம், கால்லே விழுந்து காரியத்தைச் சாதிச்சுப்போம்.'

'எங்கள் நாட்டில் யார் என்ன சொன்னாலும் அப்படியே அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு கமிஷன் அமைத்து விசாரிப்பதுதான் மரபு.'

'நீங்க பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு பிரசாரம் பண்ணலாம். ஆனா, சாதாரண ஜனங்க விரும்பறது, பகுத்தறிவிலேருந்து விடுமுறை, 'நம்பிக்கையின்மைய விரும்பிப்புறக்கணித்தல்'ங்கறது வேதபுரத்திலேதான் சாத்தியம்'.

- அரசியல்வாதியை மட்டுமல்ல ஆன்மீகவாதிகளையும் இ.பா விட்டு வைக்கவில்லை: 'ஞானச்செல்வர் சிங்காரம் அடிகளார், சிவப்பு வேட்டி, சிவப்பு சால்வை சகிதமாக அவள் (தலைவர்) வருகைக்காகக் காத்துக் கொண்டு மேடையருகே நின்றார்.

'வேதபுரத்து மக்கள ஆளப்பட வேண்டிய இனமே தவிர, ஆள்ற இனமே இல்ல. எல்லோரும் இந்நாட்டு மன்னர்ங்கிறதெல்லாம் வேதபுரத்துக்குப் பொருந்தி வராது. 'எங்களைப் போட்டு மிதிங்க, மிதிங்க'ன்னு சொல்லி, ஒருத்தரைத் தலைவராகவோ, தலைவியாகவோ ஆக்கி, அவங்களாலே மிதிபடறதையே சொர்க்கமா நினைக்கிற அப்பாவிக் கூட்டம்'.

'அபூர்வா தேவி தர்ம தரிசனம் கொடுக்கத் தயாரான போது அவரெதிரெ, அவர் தோழி வனிதா தேவி, சர்வாலங்கார பூஷிதையாய், சரீரமே நகைக்கடையாய் வந்து நின்றாள்.'

அங்கதம் மட்டுமல்ல இ.பாவின் வருணனைகளும் அற்புதமானவை: 'வீட்டுக்காரர் முற்றத்தில் நின்று கொண்டுஇருந்தார். இடுப்பை ஒரு சிறு துண்டு அலங்கரித்தது. மற்றபடி, 'அல்லையாண்டு அமைந்து', திறந்த திருமேனி.'

'உள்ளே வந்தவர் நீளமான ஒரு சாய்ந்த நேர்க்கோடு போலிருந்தார். கண்ணாடி. மைனஸ் ஏழு அல்லது எட்டு இருக்கலாம். முகத்தில் தெரிந்தது புன்னைகையா, வேதனைக் குறிப்பா என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருந்தது.'

- இவ்வாறு நாவல் முழுதும் நிறைந்துள்ள அங்கதமும், சொல்லாடல்களும், வருணனைகளும், கலைத்தன்மையும் வாசகனது நெஞ்சில் பரவசத்தை ஊட்டுகின்றன.

'இத்தகைய கலாச்சார சூழ்நிலை உருவாவதற்கு யார் காரணம்? நாம்தான். நமக்குத் தகுதியான அரசியலும் கலாச்சாரமுந்தான் நமக்குக் கிடைக்கிறது' என்று சாடும் இ.பா இந்நாவலை எழுதியதற்கான காரணத்தைப்
பின்கண்டவாறு விவரிக்கிறார்:

'பிந்தைய அறுபதுகளுக்குப் பிறகே நம் கலாச்சார வீழ்ச்சி தொடங்கியது என்று கூறமுடியும். தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் இரண்டறக் கலந்தன. ''சினிமாவும் அரசியலும் இரண்டென்பர் அறிவிலார், அரசியலே சினிமா என்றறிந்தபின், நிழலே நிஜம் என்றிருப்பாரே" என்ற ஒரு 'ஆன்மிகக் கொள்கையின்அடிப்படையில்ஒரு புது சமயம் உருவாயிற்று. அதை உருவாக்கிய 'சித்தர்'களே அரசியல் தலைவர்களானார்கள். இதன் வெளிப்பாடாக அமைந்ததுதான் தமிழ்நாட்டின் அன்றைய, இன்றைய கலாச்சாரம். இது எல்லாத் துறைகளையும் பாதித்தது. இதைச் சுட்டிக் காட்டவே இந்நாவலை எழுதினேன்.'

'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்' என்ற சமூகப் பிரக்ஞையுடனும் நமது கலாச்சாரத்தின் சீரழிவு பற்றிய கவலையுடனும் எழுதப்பட்ட இந்நாவலுக்கு 1997ஆம் ஆண்டின் பாரதீய பாஷா பரிஷத் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 0

நூல்: வேதபுரத்து வியாபாரிகள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.