Monday, September 07, 2015

ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.

‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம் வெகுவாக உயர்ந்த பின் அது சோகமான வியாபாரம் அல்ல- கொழுத்த வியாபாரம்!

ஊதியம் மிகக் குறைவாக இருந்த போது, ஆசிரியர்களது வாழ்க்கை - வசதிக் குறைவாக இருந்தும் மனநிறைவோடு மனசாட்சிக்குப் பயந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பிள்ளைகளுக்குப் போதித்தார்கள். இப்போது தேவைக்கு அதிகமான ஊதியம் கிடைப்பதால், அர்ப்பணிப்பு எல்லாம் வருமானத்தை மேலும் பெருக்குவது, கற்பிப்பதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்றாகி விட்டது.

இந்நிலையில் திரு.பி.ச.குப்புசாமியின் அனுபவங்களைச் சொல்லும் இந்த ’ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ - ‘இப்படியும் கூட ஒரு ஆசிரியரால் பணியாற்ற முடியுமா?’ என்று புருவம் உயர்த்த வைக்கிறது!

இலக்கியவாதியான திரு.குப்புசாமி வித்தியாசமான ஆசிரியர்.. தொழிலை மிகவும் நேசித்தவர். ‘மலை வாழை அல்லவோ கல்வி’ என்று பிள்ளைகளுக்கு ருசி காட்டி அன்போடும் பரிவோடும் போதித்து பிள்ளகளின நேசத்தையும் பெற்றவர்களின் மதிப்பையும் பெற்றவர். இவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ஆரம்பப்பள்ளியின் குறிக்கோள் ‘குறைந்த பட்ச அன்பு – அதிக பட்சம் அமரத்துவம்’.

இந்த வாசகத்தை பள்ளி முகப்பில் பார்த்த கல்வி அதிகாரி இதன் விளக்கத்தைக் கேட்டபோது இவர் சொன்னார் ; “முடிந்தால் நமது மாணவர்களை மகாத்மா காந்தி மாதிரியும் மகாகவி பாரதி மாதிரியும் அமரத்துவம் வாய்ந்தவர்களாக ஆக்கி விடுவது; அது இயலாத பட்சத்தில், குறைந்த பட்சம் அந்த மாணவர்களிடம் அன்பாவது செலுத்துவது” -

அதிகாரிக்கு மட்டுமல்ல நமக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது! இது சாத்தியமா? ஆம் என்று, முழு நம்பிக்கையுடன் அந்த இலட்சியத்தை எட்ட அவர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அவரது ஒவ்வொரு அனுபவமும் காட்டுகிறது.

பாடப் புத்தகத்தில் இல்லாதவற்றைப் போதிக்கும் சுதந்திரம் ஆசிரியருக்கு வேண்டும் என நினைப்பவர். அதனால் தன் மாணவர்களுக்கு அவர்கள் 4,5 வகுப்பில் படிப்பவராக இருந்தும் படிப்பை ரசிக்கும் வண்ணம், விரும்பி பள்ளிக்கு வரும்படி ஆர்வமூட்ட பாடத்துக்கு இடையே இசையும் கவிதையும், இலக்கியமும் புகட்டி தன் மாணவர்களை மட்டுமல்ல தன்னையும் உயிர்ப்புடன் வைத்திருந்தவர்.

இவரது போதனா முறைக்கு ஒரு சான்று - இந்நூலில் இல்லாதது, தனிப்பட்ட முறையில் நானறிந்ததைச் சொல்லுகிறேன். ஆரம்பப்பள்ளி நிலையில் பயிலும் இளம் பிள்ளைகளுக்கு எளிதில் புரிகிற மாதிரி யதார்த்தமாக அவர் விளக்குவது ரசமானது. மகாபாரதத்தில் வரும் பகாசுரனைப் பற்றி பாடம். பகாசுரன் பிரம்மாண்டமான அரக்கன். அவனது பிரம்மாண்டத்தை இளம் நெஞ்சங்கள காட்சிப்படுத்திக் கொள்ள, இவர் அறிமுகம் செய்கிறார். “இந்தப் பகாசுரன் இருக்கிறானே அவன் பெரீய்ய மலை போல இருப்பான். அவன் எத்தனை பெரியவன் தெரியுமா? அவன் கண்களில் ஏதொ உறுத்தியது – கண் ரெப்பையை நிமிண்டினான். பார்த்தால் ஒரு கட்டை வண்டி! மூக்குத் துளையில் விரலை விட்டு இழுத்தால் ஒரு யானை புகுந்திருக்கிறது!” பிள்ளைகள் கண் அகல, அதைப் புரிந்து கொள்வார்கள் தானே?

அவர் பணியாற்றிய சின்னக் கிராமத்து மக்கள் - ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ‘வில்லேஜ் ஸ்கூல் மாஸ்டரில் கிராமத்து ஆசிரியரை வியப்பது போல - தங்கள் பிள்ளைகளிடம் இவர் ஏற்படுத்தும் மாற்றங்களை வியந்து இவரை 'மந்திரக்காரர்' என்று வியக்கிறார்கள். வீட்டில் திருடுகிற மாணவனுக்கு தினமும் ஒரு ரூபாய் தந்து திருடும் பழக்கத்திலிருந்து அவனை மீட்பதும், பள்ளிக்கு ஒழுங்காக வராத மாணவனிடம் ‘நீ நேற்று வராததால் எனக்குப் பாடம் நடத்தவே மூடு இல்லைடா’ என்று சந்தனம் பூசி அவனை தினமும் பள்ளிக்கு வரும்படி செய்வதும், விடியற்காலையில் ஒரு நாடோடிப் பெண் பாடிய மழைப்பாடலை தான் ரசித்ததுடன் தன் மாணவர்களுக்குச் சொல்லி ரசிக்க வைத்து, மாலை வீடு திரும்பும் போது கூட்டமாய் அந்தப் பாடலை உரக்கப் பாடிச் சென்றால் மழை பெய்யும் என்று சொல்ல, அதன்படி அவர்கள் பாட மழையும் பெய்கிறது என்றால் ஊர்க்காரர்கள் அவரை ‘மந்திரக்காரர்’’ என்று ஏன் சொல்ல மாட்டார்கள்?

இந்த மந்திரக்காரரின் சாதனைகள் இன்னும் பல. பணிக்காலம் முழுதும் சலிக்காமல் நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறார்,

சின்ன கிராமம் ஒன்றில், கதவில்லாத ஒரு எளிய கூரை வீட்டில் குடி இருந்தபோது வீட்டுக்கு வெளியே உலர்த்தி இருந்த வாயில் வேட்டி அவர் பள்ளிக்குச் சென்ற போது திருடு போய்விடுகிறது. ஊர்க்காரர்கள் ஒரு திருட்டுப் பழக்கம் உள்ளவனை சந்தேகிக்கிறர்கள். அவனை பஞ்சாயத்தில் நிற்க வைத்து அபராதம் விதிக்க முனைகிறார்கள். அவன் மகன் சகாதேவன் இவரிடம் படிக்கிறவன். ஊர்க்காரர்களை இவர் சமாதானப் படுத்தி அதை நிறுத்துகிறார். அன்றைய வகுப்பில் திருக்குறளில் ‘பண்புடமை’ பாடம் நடத்தும் போது, சகாதேவன் அதில் நெகிழ்ந்து தன் அப்பா திருடிய வேட்டியை அவரிடம் சேர்ப்பிக்கிறான்.

பள்ளியில் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது சைக்கிளில் தொங்கிய பைக்குள் இருந்த 5000 ரூபாய் பணக்கட்டு திருடு போய் விடுகிறது. பள்ளி விட்டு பாதி மாணவர்கள் போய் விடுகிறார்கள். ஆசிரியர்கள் இருக்கிற மாணவர்களைச் சோதனையிடுகிறார்கள். குப்புசாமி பதற்றப் படவில்லை. ‘விடுங்கள், நாளை பார்க்கலாம்’ என்று வீட்டுக்குக் கிளம்பிப் போய் விடுகிறார்.

ஆசிரியர்கள் பணம் போனது போனதுதான் என்று தீர்மானிக்கிறார்கள். மறுநாள் குப்புசாமி எல்லா வகுப்பு மாணவர்களையும் உட்கார வைத்து யாரிடம் என்றில்லாமல், மாணவர் எவரையும் பார்க்காமல் சூன்யத்திடம் பேசுவது போல பேசுகிறார். ‘பணத்தை எடுத்தவன் யார் என்று எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்’ என்றெல்லாம் உருக்கமாய்ப் பேசி, எடுத்தவன் இப்போது இன்டர்வெல் நேரத்தில் தனித்தனியாய் போய் இருந்து, யாரும் கவனிக்காதபடி, எடுத்த பணத்தை காம்பவுண்டு சுவரோரம் போட்டு விடலாம், நான் யாரிமும் சொல்லமாட்டேன்’ என்கிறார்.

ஆசிரியர்களுக்கு இந்த ஜாலத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் மந்திரஜாலம் போல பணம் சுவரோரம் போடப் படுகிறது. நம்ப முடிகிறாதா? ஆனால் குப்புசாமி அதனைச் சாதித்திருக்கிறார். இது வயது முதிர்ந்த உயர் கல்வி மாணவரிடையே நடக்குமா? கபடறியாத குழந்தைகளிடம் இந்த மாயத்தை நிகழ்த்தியுள்ளார் குப்புசாமி!

கல்வி போதனையிலும் இவர் வித்தியாசமாய்ச் சிந்தித்து மாணவர் முன்னேற பல திட்டங்களை நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் நிறைவுற்றபோது அதை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார். தலைமை ஆசிரியர் பெரிய வகுப்பை எடுக்க வேண்டும் என்ற வழக்கத்துக்கு மாறாக ஒன்றாம் வகுப்பை எடுத்துக்கொண்டு ஐந்தாம் வகுப்புவரை அவரே போதிக்கும் நடை முறையைச் செயல்படுத்தி அதன் மூலம் அந்த குறிப்பிட்ட செட் மாணவர்களது தரத்தை உயர்த்திக் காட்டுகிறார்.

‘ஆழ உழு தம்பி! அத்தனையும் பொன்னாம்’ என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரியைச் சொல்லி, 5 வருஷ காலதில் ஆழ உழலாம் என்று சக ஆசிரியர்களுக்கும் சிபாரிசு செய்கிறார். ஒரு குறிப்பிட்ட மேலதிகாரி அதை ஆட்சேபித்தும் அதை ஏற்காமல் அவருக்கும் மேலே உள்ள அதிகாரியின் ஒப்புதலையும் பாராட்டையும் பெறுகிறார். ஆசிரியருக்கு, போதனையில் சுதந்திரம் வேண்டும் என்பதை மீண்டும் நிலைநாட்டுகிறார்.

உயர், மேல்நிலைப் பள்ளிகளிலேயே சாத்தியப் படாத – தனக்கு இளமையில் பள்ளியில் வாய்க்காத - ‘உல்லாசப் பயண’ அனுபவத்தைத் தன் பள்ளிகளில் நிகழ்த்தி,. சஞ்சீவிராயர் குன்றில் காடும் கானாறும் தரும் பரவச உணர்வுகளைத் தன் மாணவர்களுக்குத் தருகிறார்.

பிள்ளைகளை அடிப்பதில் அவருக்கு சம்மதம் இல்லை. ‘படிப்பு வரவில்லை என்பதற்காக உங்களை அடிக்க மாட்டேன்’ என்று தன் மாணவர்களிடம் சொல்பவர் அவர். அதே சமயம் மாணவர்களை ஆசிரியர்கள் அவமதிப்பதையும் கடுமையாக எதிர்த்தவர். ’ஒரு வாத்தியார் தன் மாணவனை அடிக்கக் கூட அடிக்கலாம் ஆனால் அவனை அவமதிக்கக்கூடாது’ என்கிறார்.

காந்தியடிகளைப் போலவே தன் கையெழுத்து அழகாக இல்லை என்ற ஏக்கம் காரணமாக தன் மாணவர்களின் கையெழுத்தை அழகாக ஆக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தினார். காப்பி நோட்டில் எழுதிக் கொடுபதிலும் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டார். ‘அன்பு உலகை வெல்லும்’ என்று முதல் வரி அமையும். அடுத்த வரி ‘அதையே வேதம் சொல்லும்’ என்று எழுதித் தருவார் எங்கும் எதிலும் அன்பையே ஆராதித்தார். ஒரு ஆசிரியனுக்கு அது மிக அவசியம் என உணர்ந்தவர்.

எண்ணும் எழுத்தும் கற்பிப்பதோடு அல்லாமல் வாழ்வில் கொள்ள சில மேலான மனோபாவங்களையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த தன்னால் முடிந்த அளவுக்கு முயன்றிருக்கிறார். பெண்களை மதிப்பதும் போற்றுவதும் அவற்றில் பிரதானமாயிருந்தன..

கிராமப்புறங்களில் ஆசிரியராக இருப்பவர்கள் உடல்நலக் கேட்டிற்கு சிகிச்சை அளிக்கும் அடிப்படை உபாயம் தெரிந்தவர்களாயிருப்பது எவ்வளவு உத்தமமானது என்பதை உணர்ந்திருந்த இவர், தான் பணியாற்றிய இடங்களில் பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்தவனையும் ‘டெட்டனஸ்’ பாதிப்பு ஏற்பட்டவனையும் உடனடியாக மருத்துவ மனைகளில் சேர்த்துக் காப்பாற்றியது – சில இழப்புகளை அவருக்கு ஏற்படுத்தினாலும் மன நிறைவைக கொடுத்திருக்கிறது.

ஆசிரியர் தொழிலை இவர் நேசித்தாலும், ‘என்னத்துக்குஇந்த வேலைக்கு வந்தோம்?’ என்ற சலிப்பும் ஒரு காலகட்டத்தில் வந்திருக்கிறது.

‘ஆசிரியரின் அந்தஸ்து பெரிது’ என்ற ஒரு அந்தரங்கச் செருக்கு இவருக்கு எப்போதுமே உண்டு. ஆசியர்களை இழிவு படுத்துபவர் யாராக இருந்தாலும் இவருள் இருக்கும் புரட்சியாளன் பொங்கி எழுவான். மேலதிகாரிகள் – குறிப்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை, அவர்கள் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்த போது துச்சமாக எண்ணி அவமதிக்கும்போது, தைரியமில்லாத பலரும் வாய் மூடி மௌனம் காத்த போது குப்புசாமி சீறி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அதனால் இவருக்கு பணப் பயன்கள தாமதிக்கப் பட்டாலும் அற்ப பணத்துக்காக இவர் கவலைப் படவில்லை.

அரசாங்கத் திட்டமான குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் பிடித்தல், பல திட்டங்களுக்கு போதனைப் பணியைக் கவனிக்க விடாமல் ஈடு படுத்துதல் போன்றவற்றிற்கு இவர் காட்டிய தார்மீக எதிர்ப்பும், தர்க்கமும் அதிகாரிகளைப் பதில் சொல்ல முடியாமல் நழுவி விலகச் செய்துள்ளது. அதனால் அவரது பள்ளிக்கு பார்வையிடச் செல்வதை ஊழல் அதிகாரிகள் தவிர்த்தனர். நேர்மையான அதிகாரிகள் இவரது பணி அர்ப்பணிப்பையும் நியாயத்துக்குப் போராடும் தீரத்தையும் பாராட்டி அங்கீகரித்ததும் நேர்ந்திருக்கிறது.

மேலே நான் சொன்னவை வெறும் தகவல்கள்தாம். அவற்றை உயிர்த்துடிப்புடன் அனுபவிக்க நீங்களே தொகுப்பை .படித்தால் தான் முடியும். குறிப்பாக குப்புசாமியின் எழுத்துத் திறனை, பரந்துபட்ட அவரது நூலறிவை, வாசிப்பு சுகமளிக்கும் நடையழகை முழுவாசிப்பில் தான் உணரமுடியும்.

வாசிப்பினிடையே, கவித்துவம் மிக்க ஆசுகவியாய் அவர் பாடிய வெண்பாக்களையும், கம்பர், பாரதி, கவிமணி ஆகியோரின் கவிதை வரிகளையும் ரசிக்கலாம். கலிங்கத்துப்பரணியும் காரல்மார்க்ஸும் சிந்தனைக்கு விருந்தளிப்பார்கள். அவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்பதையும் அறியலாம். போதனைப் பணியில் அர்ப்பணிப்பும், குழந்தைகளிடம் பாசாங்கற்ற நேசமும், சுய கௌரவத்தைப் பேணிய அந்தரங்கச் செருக்கும் மிக்கவராக திரு.குப்புசாமி எனகிற ஆசிரியரின் இருப்பு கல்வித்துறையில் ஒரு அசாதாரணமான அரிய நிகழ்வு (A rare phenomenon) என்றே சொல்வேன்.


(கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள பி.ச.குப்புசாமியின் "ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்" என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரை)

Monday, June 08, 2015

கணையாழியும் நானும்

1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப்பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல இலக்கிய சிற்றேடுகளுக்கு சந்தா கட்டி வரவழைக்கும் ஆர்வமுடையவனாக இருந்தேன். அதற்கு முன்னோடியாகத்தான் தீபமும், கணையாழியும் என் சேகரிப்பில் வந்தன. இவை இரண்டும்தான் எனக்கு இலக்கிய உலகின் நான் அறியாத சாளரங்களைத் திறந்து விட்டன.

தீபம் முழுக்க முழுக்க இலக்கியம் என்றால் கணையாழி ஆரம்பத்தில் அதன் ஆசிரியக் குழுவினரின் அரசியல் ஈடுபாடு காரணமாய் - ‘தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளி லிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும், அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்ற முடிவோடு ஆரம்பமாயிற்று. நாட்பட நாட்பட கி.கஸ்தூரி ரங்கன் அவர்கள் சென்னை வந்த பிறகு இ.பா போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் கூட்டமைப்பில் முழுக்க முழுக்க இலக்கிய இதழாகி, இன்றைய ம.ராஜேந்திரன் அவர்களது ஆர்வத்தால் புதிய புதிய அம்சங்களுடன், புதிய பரிமாணங்களுடனும் வளர்ந்து 50ஆம் ஆண்டை நெருங்கி பொன்விழா கொண்டாட உள்ளது.

முதல் பத்து இதழ்கள் கிடைக்காத நிலையில், எனது இயல்பின்படி எதுவும் தொடக்க முதலே வேண்டும் என்ற அவாவில், தீபம் எஸ். திருமலையின் யோசனைப்படி பெல்ஸ் ரோடில் இருந்த அப்போதைய சென்னை அலுவலகப் பொறுப்பில் இருந்த திரு.அசோகமித்திரன் அவர்களைச் சந்தித்து, விட்டுப் போன இதழ்களைப் பெற்றுத் தர வேண்டினேன்.

அப்போது அ.மி அவர்கள் பொறுப்பில் கணையாழி சென்னையில் தயாரிக்கப் பட்டு தில்லியில் அச்சாகி வெளிவந்து கொண்டிருந்தது. அ.மி அவர்கள் சற்றும் சுணக்கமில்லாது, அலுவலத்தில் கிடைத்தவற்றோடு விற்பனையாளர்களிடம் தேங்கிப் போன இதழ்களை எனக்காக சிரமம் மேற்கொண்டு கேட்டுப்பெற்று உதவியதை நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன். அவர்களது அந்த உதவியால் தான் கணையாழியுடான எனது உறவு வலுப்பெற்றது எனலாம்.

தில்லியில் கஸ்தூரிரங்கனுடன் இ.பாவும், ஸ்ரீரங்கம் எஸ். ஆர் என்ற பெயரில் சுஜாதா அவர்களும், தி.ஜானகிராமன் அவர்களும் இணைந்து வித்தியாசமாக கணையாழியை வெளியிட்டு வந்தனர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற சுஜாதா வாசகர்கள்களை புதிய ரசனைக்கு இட்டுச் சென்று கணையாழிக்கு ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தித் தந்தார். தி.ஜாவின் மிகச் சிறந்த ‘மோகமுள்’ போன்ற நாவல்கள் வெளிவந்து கணையாழிக்கு கனம் கூட்டின. சென்னையில் அ.மி அவர்களது பங்கு மகத்தானது. தயாரிப்பில் பெரும்பணி யாற்றியதோடு அவரும் நிறைய எழுதி கணையாழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார். கி.கஸ்தூரி ரங்கன் சென்னையில் நிரந்தரமாய்த் தங்க நேர்ந்தபோது அ.மி யுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு அ.மி கணையாழியிலிருந்து விலகிக் கொண்டார்.

கி.க சென்னை வந்த பிறகு நான் சென்ன சென்ற போதெல்லாம் அவரை கணையாழி அலுவலத்தில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இ.பா வும் உடனிருப்பார். இருவரும் என்னை ஒரு நல்ல வாசகனாக உணர்ந்து எழுத உற்சாகப்படுத்தி வந்தனர். கி.க அவர்கள் கணையாழி விமர்சனத்துக்கு வந்திருக்கும் நூல்களை, எனது சென்னை சந்திப்போதெல்லாம் தந்து விர்சனம் எழுத வைத்தார். அதன் மூலம் கணையாழி வாசகருக்கு என்னை பரிச்சயப் படுத்தினார் இதன் மூலம் கணையாழி குடும்பத்தில் ஒருவன் போல ஆனேன்.

அடுத்து கணையாழியின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாகும் வாய்ப்பு 1987இல் தொடங்கப்பட்ட ‘தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி’ என்னை வாசகர்கள் கவனிக்கும்படி செய்தது. பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட என்னுடைய ‘அசல் திரும்பவில்லை’ பெரிதும் பாராட்டுக்கு உள்ளானது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நான் எழுதிய ‘இனியொரு தடவை’, ‘யானை இளைத்தால்.....’. ‘மீட்பு’ குறுதாவல்கள் ‘தி.ஜா. நினைவு’ப் போட்டியில் தேர்வாகி வெளிவந்தன. என்னுடன் மேற்கண்ட போட்டியில் பரிசு பெற்றவர்களில் ஒருவரான ம.ராஜேந்திரன் எனது ’இனியொரு தடவை’ ரசித்துப் பாராட்டியதுடன் அவரது பொறுப்பில் கணையாழி வந்த பிறகு ‘மீட்பு’ என்ற குறுநாவலை வெளியிட்டு கணையாழியுடனான எனது தொடர்பை உற்சாகப்படுத்தினார்.

1995இல் மே மாதம் நான் வழக்கம்பொல கி.கவைச் சந்தித்தபோது, கணையாழிக்கு முப்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கணையாழியின் புதிய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுப்படுத்தும் வகையில கடந்த 30 ஆண்டு இதழ்களை வரும் ஆண்டுகளில் அறிமுகப் படுத்த நினைப்பதாகவும் அதை நான் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார்கள்.

25 ஆண்டுகள் முடிந்தபோது ‘கணையாழி 25’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக மாலன் எழுதியதைச் சுட்டிக்காட்டி, ‘கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் 1965 முதல் ஒவ்வொரு இதழாக அறிமுகப்படுத்தி எழதச் சொன்னார். ஒரு ஆண்டு இதழ்களை மாதந்தோறும் எழுதலாமே, ஒவ்வொரு இதழாக எழுதினால் முடிவே இல்லமல் போய்க்கொண்டிருக்குமே என்று நான் சொன்னபோது, அதைப்பற்றிக் கவலைப் படாமல் தொடங்குமாறு சொன்னார்.

அதன்படி, 1995ஜூன் முதல் தொடங்கி 2000 வரை எழுதினேன். அனேகமாக கணையாழியில் தொடர்ந்து நீண்ட நாட்கள் இதழ் தோறும் எழுதியது நானாகத்தான் இருப்பேன் என்று எண்ணுகிறேன். பின்னர் கணையாழியில் புதிய அம்சங்களை வெளியிட எண்ணுவதால் என் தொடரை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைக்கக் கேட்டபொழுது, நான் அதன்படி செயல்பட்டேன். ஒவ்வொரு இதழாக அறிமுகப் படுத்தியதை மாலன் தினமணிக்கதிரில் ‘படித்ததும் பிடித்ததும்’ என்ற தலைப்பில் நான் எழுப்பிய அதே சந்தேகத்தை எழுப்பி விமர்சித்திருந்தார்.

இத்தொடரை வரவேற்றாலும் கணையாழியின் வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமாய் இருந்த அசோக மித்திரன் அவர்களது அதிருப்திக்கு ஆளாக நேர்ந்தது துரதிஷ்டமானது. அவரிடத்தில் யாரோ இத்தொடரில் அவரைப் புறக்கணிப்பதாகச் சொல்லக் கேட்டு என்மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார். உண்மையில் வெகுநாட்களாக அவரது அருமையை உணர்ந்த நான் நிறைய தடவை அவரது பங்களிப்பைப் பாராட்டி எழுதி இருக்கிறேன். அவர் அதிருப்தியில் இருப்பதை அறியாமல் ஒருதடவை இலக்கிய சிந்தனை விழாவொன்றில் அவரைச் சந்தித்த நான், ‘தொடரைப் பார்க்கிறீர்களா, உங்களைப் பற்றி நிறையக் குறிப்பிட்டுள்ளேன்’ என்றேன். அவர் என்னைப் பார்க்காமல், சுமுகம் காட்டாமல் ‘எல்லாரும் அப்பபடித்தான்’ என்றார். நான் பதறிப்போய் உண்மையை உணர்த்த முற்பட்டபோதும் அவர் சமாதானம் அடையவில்லை என்பது இன்னும் உறுத்தலாவே உள்ளது.

பின்னாளில் கி.க அவர்களின் வேண்டுகோளின்படி, கணையாழி இதழ் தொகுப்பை 4 பகுதிகளாக ‘கலைஞன் பதிப்பகம்’ வெளியிட்டபோது முதல் பத்தாண்டு இதழ்களைத் தொகுத்ததும் கணையாழியிண் தொடர்பில் எனக்குக் கிடைத்த பேறாகும்.

 பின்னர் தொடர்ந்து கணையாழியில் எழுதாவிட்டாலும் அவ்வப்போது என் சிறுகதையை வெளியிட்டும் , இணையத்தில் அறிமுகப்படுத்த ‘கணையாழியின் கதை’யை எழுத வைத்தும் இப்போது பொன்விழாத் தொடக்கத்தில் ‘கணையாழியும் நானும்’ என்ற தலைப்பில் என் கணையாழி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வைத்தும் என்னைக் கௌரவப்படுத்தும் ம.ராஜேந்திரன் அன்பில் நெகிழ்கிறேன். முதல் இதழ் 40 பைசா விலையில் செய்தித்தாள் போன்று கவர்ச்சியின்றி வெளியான கணையாழி, இன்று வெகுவாகத் தோற்றத்திலும் தரத்திலும் உயர்ந்து நிற்பதைக் காணும்போது ம.ராஜேந்திரன் அவர்களது இலக்கிய ஆர்வமும் கலாரசனையும் விதந்து போற்றுதலுக்கு உரியதாகும். மேலும் பல சாதனைகளை நிகழ்த்த கணையாழி நூற்றாண்டு விழாவும் காணவேண்டும் என வாழ்த்துகிறேன்.