Tuesday, November 22, 2005

நினைவுத் தடங்கள் - 36

எனது கலை ரசனைக்கு சிறுவயதில் நான் பார்த்த தெருக்கூத்து மற்றும் நாடகங்களும் காரணம். அந்த வயதில் நான் நாடகங்களைக் காணும் வாய்ப்பு எங்கள் எதிர் வீட்டில் இருந்த 'தொந்தி மாமா'வால் நேர்ந்தது. கனத்த பாரியான உடம்பு; ஒரு சின்னக் குதிர்போல இருப்பார். பெருத்த தொந்தி; தலையில் சின்ன மடக்கைக் கவிழ்த்தது போல வட்டமாய் நரை கலந்த முடி; மூக்கினடியில் காய்ந்து கருமஞ்சளில் காட்சி தரும் பொடி; எப்போதும், 'சவரம் செய்து கொண்டு ஒரு வாரம் ஆகியிருக்கும்' என்று எண்ண வைக்கும் முகவாய்; பெருத்த தொந்தி வயிற்றில் தொற்றிக் கொண்டு முழங்காலுக்குக்குச் சற்று கீழே தொங்கும் நாலு முழ வேட்டி; இடது தோளி¢ல் மூன்று முழத்துண்டு. இதுதான் தொந்தி மாமா. அவரது வித்தியாசமான பெரிய தொந்தியை உத்தேசித்தே எல்லோரும் அவரை 'தொந்திப் பிள்ளை' என்று அழைத்தார்கள். வயது அப்போதே அறுபதுக்கு மேலிருக்கும்.

அவருக்குக் குழந்தைள் கிடையாது. வெகு தாமதத் திருமணம் என்று எங்கள் அம்மா சொல்வார்கள். அவரது மனைவி அம்மாவுக்கு நெருங்கிய தோழி. அவர்களுக்கு நாங்கள்தான் குழந்தைகள். அம்மா கைவேலையாய் இருக்கும்போது எங்களை அவர்களிடம்தான் கொண்டு விட்டுவிடுவார்கள். மாமாவுக்கு நானும் என் தம்பியும் செல்லம். சிறு குழந்தைகளாய் இருக்கையில் எங்கள் இருவரையும் - என் தம்பியைத் தோளிலும் என்னை இடுப்பிலுமாகச் சுமந்து திரிவார். அவர் மடியில் எப்போதும் வறுத்த பாசிப் பயறோ வெவித்த மொச்சையோ எங்களுக்காக இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்து நடக்கிற வயதில் அவர் எங்களைப் பக்கத்து ஊரில் நடக்கும் தெருக்கூத்துகளுக்கும் நாடகங்களுக்கும் அழைத்துப் போவார். அப்படி அவர் ஒரு முறை அழைத்துப் போனது அரிச்சந்திரன் நாடகத்துக்கு. அப்பா எங்களை அப்படியெல்லாம் இரவில் அனுப்ப மாட்டார்கள். ஆனால் மாமாவின் பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டு அனுப்புவது உண்டு. நாடகம் கிராமங்களில் இரவு பத்து மணிக்கு மேல்தான் துவங்கும். வேலைக்குப் போனவர்கள் எல்லாம் வீடு திரும்பி ராத்திரி சாப்பாடு முடிந்து சாவகாசமாய்த்தான் நாடகம் ஆரம்பிக்கும். அப்போது அரிச்சந்திரன் வேஷத்துக்குப் புகழ் பெற்றிருந்தவர் சோழமாதேவி என்ற ஊரைச் சேர்ந்த நடேசன் என்பவர். மதனத்தூர் குண்டு என்பவர் பபூன் வேஷக்காரர். ராஜபார்ட் - சோழமாதேவி நடேசன், பபூன் - மதனத்துர் குண்டு வருகிறார்கள் என்றால் நாலா பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனக்கூட்டம் நெரியும். மேடைக்கு அருகில் இடம் பிடிக்க இரவு ஏழு மணிக்கே போட்டியாக இருக்கும்.

சோழமாதேவி நடேசனுக்கு அற்புதமான குரல் வளம். ஆளும் உயரமாய் கனத்த கட்டுமஸ்தான உடல் கொண்டவர். ராஜபார்ட்டுக்கு ஏற்ற உடல் அமைப்பு. ஜிகினா உடையும், பின்தோளில் முதுகின் பின்னே தொங்கும் நீண்ட வண்ணச் சால்வையும் பெட்ரோமாக்ஸ் ஒளியில் தங்கமாய் ஜொலிக்கும் கிரீடமும் வளைந்த காலணியுமாய் அவர் எட்டுக் கட்டை சுதியில் பாடிக் கொண்டே மேடையில் பிரவேசிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். கே.பி.சுந்தராம்பாளைப் போல கம்பீரமான கனத்த குரல். கம்பீரமான ரிஷபம் ஒன்று ஹ¥ங்காரம் செய்கிற மாதிரி இருக்கும் அவர் மேடையில் பாடும்போது. அரிச்சந்திர நாடகம் மூன்று நாட்கள் விடியவிடிய நடக்கும். அவர் மயான காண்டத்தில், சுடலை காப்பவனாகத் தோன்றி சந்திரமதியை நோக்கி கேதாரகௌளையில் 'யாரடி கள்ளி நீலீ......' என்று எட்டுக் கட்டையில் முழங்குவது ஒரு பர்லாங்கு தொலைவுக்குக் கேட்கும். சுருதி சுத்தமான அந்த சங்கீதம் என்னை அந்தச் சின்ன வயதிலேயே உருக்கி சங்கீதத்தில் ரசனையை ஏற்படுத்தியது. அந்தக் காம்பீர்யம் மிக்க குரல் இதை எழுதும்போதும் - ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குப் பின்னேயும் காதில் ரீங்காரமிடுகிறது.

இப்படி பத்து வயதுக்குள் பல தடவை தொந்தி மாமா எங்களை அழைத்துப் போனது எனக்கு நாடகத்திலும் இசையிலும் ஆர்வத்தை உண்டாக்கியது. பின்னாளில் கல்லூரியில் படிக்கும்போது விடுதிவிழாவுக்கு நாடகம் எழுதித்தரவும் கோடைவிடு முறையில் சிறுவர்களைக் கொண்டு ஓரங்க நாடகங்கள் தயாரித்து உள்ளூரில் நடைபெறும் நாடகங்களுக்கிடையே நடத்தவும் சிறுவயதில் பார்த்த நாடக ரசனையே காரணமாக இருந்தது. இதற்கு வாய்ப்புண்டாக்கித் தந்த தொந்தி மாமா நினைவில் என்றும் இருப்பார்.

நாடகத்துக்கு மட்டுமில்லாமல் பக்கத்து ஊர் கோயில் திருவிழாக்களுக்கும் எங்களை அவர் அழைத்துச் சென்றிருக்கிறார். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. இன்று இராஜேந்திரப் பட்டணம் என்று அழைக்கப்படும் திருஎருக்கத்தம்புலியூர் தேவாரப்பாடல்களுக்குப் பண் அமைத்த ஒரு தாழ்ந்த குலத்துப் பெண் பிறந்த ஊர். அங்கு ஆண்டு தோறும் மாசிமாதத்தில் பத்து நாட்கள் - கொடியேற்றம் நடந்து தேரும் தீர்த்தவாரியும் எங்களூரில் ஓடும் ஸ்வேத நதி என்கிற வெள்ளாற்றில் நடைபெறும். அந்தப் பத்து நாளும் மாமா எங்களை - ஐந்து வயதும் மூன்று வயதுமாய் இருந்த என்னையும் என் தம்பியையும் மூன்று மைலும் இடுப்பிலும் தோளிலும் சுமந்து அழைத்துப் போய்க் காட்டி நள்ளிரவில் பத்திரமாய் அவர் அழைத்து வந்ததை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.

சொந்தமாகத் தனக்கென்று பிள்ளை இல்லாத குறையை இப்படியுமா தீர்த்துக் கொள்ள முடியும் என்று மனம் உருகுகிறது. என்னுடைய ரசனைக்கு படிப்பறிவில்லாத தொந்திமாமாவும் காரணமாய் இருந்தார் என்பதை என் நினைவுத் தடங்களிலிருந்து எண்ணிப் பார்க்கிறேன். நான் படித்து வேலைக்கு வந்து அவருக்கு ஏதாவது செய்து அவரது பாசத்துக்கும் என்னுள் ரசனையை அவரையும் அறியாமல் ஏற்படுத்தியமைக்கும் நன்றிக் கடன் செலுத்தமுடியாது போனது உறுத்தலாக உள்ளது. பின்னாளில் நான் எழுத்தாளனாய் ஆன நிலையில் அந்தக் கடனை என் நாவலில் ஒரு முக்கிய பாத்திரமாய் அவரை உலவ விட்டும், 'தமிழரசி' மாத இதழில் 'தொந்தி மாமா சொன்ன கதைகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதிப் பிறகு அது நூலாக வந்தபோது அந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்தும் ஒரளவு தீர்த்தேன். ஆனால் அவர் இறந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எனக்குத் தகவல் கிடக்காது போன சோகம் மட்டும் இன்னும் தீராது தங்கியுள்ளது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, November 09, 2005

உவமைகள் - வர்ணனைகள் 45

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 45:

மாலன் படைப்புகளிலிருந்து:

1. ராஜசேகர் முகத்தில் லட்சங்களைச் சுவாசிக்கிற களை தெரிந்தது. ஒழுங்காக வாரி இருந்தான். கண்களில் பணம் பண்ணும் சாமர்த்தியம் சிகப்பாக ஒளிர்ந்தது. இவனை ஒரு துரும்பைப் பார்க்கிற மாதிரி பார்த்தான்.

- 'bait' கதையில்.

2. நிமிர்ந்து பார்த்தான். முதலில் என்னைப் பார் என்னும் மூக்கு. சிரிப்பதற்கில்லை இது சாப்பிட மட்டும்தான் என்பது போல் சிறிதாய்க் கீறின உதடுகள். மரத்தில் செதுக்கினாற்போல் இறுகிய முகம். முகத்தில்தான் எத்தனை வகை! உழுது பாத்தி கட்டின மாதிரி; திருஷ்டிப் பூசனி மாதிரி; தோய்த்து உலர்த்தின மாதிரி; எண்ணெயில் பொறித்த மாதிரி; செடியில் பூத்த மாதிரி. ஆனால் இவை ஒவ்வொன்றிற்கும் பின்னும், எல்லோருக்குள்ளேயும் ஒரு முகம் இருக்கிறது. கோபமாய்; அன்பாய்; சிலருக்குத் திமிராய்.......

- 'அக்னி நட்சத்திரம்'.

3. ஜனனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தேன் கூட்டில் கல் எறிவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது சரம் சரமாய்க் கேள்வி கிளம்பும்.

- 'தப்புக் கணக்கு'.

4. இவன் கண் திறந்த போது எல்லாமே முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன. அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புக்களை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.

- 'கல்கி'.

5. அப்பா லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தது எங்கோ தொலைவில் தொடுவானத்துக்கு அருகே இருந்து ஒலிப்பது போல் கேட்டது. இந்த ஆயிரம் பேரைச் சொல்லும் புண்ணியத்துக்காக அப்பா சமஸ்கிருதத்தைக் கடித்துத் துப்ப வேண்டாம். இவருக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ் லிபியில் அச்சான புத்தகத்தை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.தமிழும் இல்லாத சமஸ்கிருதமும் இல்லாத இந்தப் புதிய பாஷை லெட்சுமிக்குப் புரியவில்லையோ என்னவோ? இல்லாவிட்டால் இப்படித் தினமும் மழையோ, பனியோ ஐந்து மணிக்கு எழுந்து தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சின்சியாரிட்டிக்காகவேனும் அவர் கேட்டதைக் கொடுத்திருக்கலாம்.

- 'என் வீடு'.

6. "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"

பாடல் கேட்கப் பரவசமாய் இருந்தது. வெதுவெதுவென்று உஷ்ணமாய் உடல் சூடேறியது. 'ஆயுதம்' என்ற குரல் உச்சத்தில் போய் நின்றது. சடாரென்று அந்த நேரத்தில் கவிதையின் முழு அர்த்தமும் புரிந்தது. ஆயுதம்னா கத்தி கபடாவா? பாரதி சொல்லுக்கு எழுதுவதும் நம் ஆயுதம்(writing is our weapon) என்றல்லவா அர்த்தம்? சுரண்டறவன் வயித்தில் சொருகுகிற கத்தி மாதிரி நியூஸ்பேப்பர் வந்து விழவேண்டும். நசுக்கி வைத்திருகிறவர்கள் போல், ஆட்டம் பாம் போல் எழுச்சியூட்டும் கட்டுரைகள் வந்து விழவேண்டும்.மெஷின்கன் சுடுவது மாதிரி படபடவென்று கவிதை தெறித்துக் கொண்டு வரவேண்டும் என்றல்லவா அர்த்தம்? அர்த்தம் புரிந்து போனதில் மனசு பொங்கிற்று.

- 'ஆயுதம்'.

7. மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டிய மாதிரி லேசான பழுப்பில் நிலா முழுசாய் மிதந்து கொண்டிருந்தது. கையால் அள்ளித்தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மனம் இன்னும் சூடேறிப் போகவில்லை. எங்கேயோ ஒருசிறு குயில். தம்பூர்த் தந்தியைச் சுண்டி விட்டமாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எங்கே போனாலும், எதைத் தொட்டாலும் துரத்தித் துரத்தி வந்து ஊசியாய்க் குத்துகிற நினைப்பைத்தான் விரட்ட முடியவில்லை.

- 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்'.

8. மார்ச்சு மாதத்து மத்தியானத்து வெயில். சுகமான விடுமுறைச் சோம்பல். உடம்பைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் ஞயிற்றுக் கிழமையின் நல்ல தூக்கம் முறிந்து விழுந்தது. எனக்குள் சின்னதாய் ஒரு விஸ்வாமித்திரன். எதிரே என் சின்னத்தங்கை. கையிலே
ஒரு தந்தி. பார்த்தேன். உடம்பின் செல்களில் மெலிதாய் ஒரு மின்சாரம். நிறைய வியர்த்தேன். மனதுள் சோடாக் குமிழ் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே ஒரு சின்ன பயம்.

- 'சூரிய தேசம்' கட்டுரையில்.

9. யோசித்துப் பார்த்தால் இப்படித்தான் எல்லோரும் குளவி போல் வாயில் ஒரு பிரச்சினையைக் கவ்விக் கொண்டு இறக்கி வைக்க இடம் தேடி சுற்றிச்சுற்றி வருகிறார்கள் அலைச்சலும் இரைச்சலுமாய்.

- 'கோட்டை' கதையில்.

10. காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை மாதிரி ஒரு வதை. ஒரு சந்தோஷமான இம்சை. இன்னதென்று தெளிவாய் உருவம் புலப்படாமல் ஒரு கற்பனை.வாசிக்க வயலினை எடுத்தால் வழிதப்பிப் போகிறது. விதம் விதமாய் வில்லை ஓட்டிப் பார்த்தாயிற்று. நழுவி நழுவிச் சறுக்குகிறதே ஒழியப் பிடிகிடைக்கிற வழியாய் இல்லை. வெறுத்துப்போய் வில்லை வீசி விட்டு தோட்டத்தில் உலாவ வந்த நிமிஷத்தில் சட்டென்று பொறி தட்டிற்று. உற்சாகக் குருவி உள்ளே கூவிற்று. திடுமென ஒரு அலை பொங்கி அதில் தான் நுரைப் பூவாய் அலம்பி அலம்பிப் போகிற மாதிரி மிதப்பாய் இருந்தது. அவசரமாய் உள்ளே திரும்பி வயலினை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். வில்லை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் வாசல் பக்கம் தொந்தரவு. ரிஷபத்தை நீளக்கூவித் தெருக் கதவு திறந்தது. கற்பனை கலைந்து ரௌத்திரம் பொங்கக் கண்ணைத் திறந்து பார்த்தார்.

- 'வித்வான்'.

- மேலும் வரும்.

-வே.சபாநாயகம்.

Tuesday, November 08, 2005

நினைவுத் தடங்கள் - 35

எங்கள் வட்டாரத்தில் அப்போது எங்கள் குடும்பம்தான் எல்லா வகையிலும் முன்னணியில் இருந்தது. பொருளாதார நிலையிலாகட்டும், கல்வியிலாகட்டும், குடும்ப நபர்களின் எண்ணிக்கையிலாகட்டும் நாங்கள் தான் முதல். நாங்கள் எங்கள் பெற்றோருக்குப் பத்துப் பிள்ளைகள். ஐந்து பிள்ளைகள் ஐந்து பெண்கள். இப்போது போல அப்போது குடும்பக்கட்டுப்பாடு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

அனேகமாக எல்லா வீட்டிலும் சராசரியாக ஆறு முதல் எட்டுப் பிள்ளைகள். அப்போதெல்லாம் பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்வதை குறைவாக எண்ணுவ தில்லை. 'மாறாக மக்களைப் பெற்ற மகராசி' என்றே மதித்தார்கள். பின்னாளில் எங்களது அடுத்த கிராமத்தில் ஒரு பெற்றோருக்குப் பதினாறு பிள்ளைகள். 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ' வாழ்த்துவது பிள்ளைகள் எண்ணிக்கையில் என்ற அர்த்தத்தில் கொள்வதானால் அவர்கள் அதை நிரூபித்தார்கள். பெருவாழ்வு என்பதை செல்வச் செழிப்பில் என்று கொள்ளாமல் மன நிறைவான வாழ்வு என்று கொண்டால் அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். பல குடும்பங்களில் பத்துக் குழந்தைகள் போலப் பெற்றிருந்தாலும் இப்போது போல மருத்துவ வசதியில்லாததால் நிறையக் குழந்தைகள் மொட்டிலேயே உதிர்ந்து போனார்கள். பொருளாதார வசதி மற்றும் சுகாதார விழிப்புணர்வு காரணமாய் எங்கள் பெற்றோர்கள் எங்களை பாதிப்பு இன்றி வளர்த்து ஆளாக்கினர்கள். எங்களை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக உருவாக்கி இன்றளவும் எல்லோரும் நிறைவான வாழ்க்கை வாழ்வதில் எங்கள் அப்பாவைப் போல் எங்கள் அம்மாவுக்கும் பெரும் பங்கு உண்டு.

பின்னாளில் நான் தலை எடுத்து பணிக்கு வந்த பிறகு 1966ல் அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்த டேப் ரெகார்டர் கருவி ஒன்றை வாங்கினேன். அதில் முதல் பதிவாக என் தாயாரையே பேட்டி கண்டு பதிவு செய்தேன். அறுபதுகளில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகி இருந்த நேரம். "இப்போது பிள்ளைகள் அதிகம் வேண்டாம் என்று அரசாங்கமே தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதை எல்லோரும் குறைவாக எண்ணுகிற நிலைமை இருக்கிறதே- நீங்கள் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொண்டது பற்றிக் கூச்சமாக இல்லையா?" என்று பேட்டியின் போது கேட்டேன். "இதுலே என்ன கூச்சம்? வீடு நிறையப் பிள்ளைகள் இருப்பது ஒரு அழகுதான்! 'ஒரு மரம் தோப்பாகுமா? ஒரு பிள்ளையும் பிள்ளையாகுமா?' ண்ணுதான் அப்போ நெனச்சாங்க. இப்போ மாதிரி ரெண்டு போதும்னு நாங்க நெனைக்கலே" என்று என் தாயார் பதில் சொன்னார்கள்.

"ந்¢றையப் பிள்ளைகள் இருப்பது அழகாக இருக்கலாம். ஆனால் அத்தனை பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைமைக்குக் கொண்டு வரணும்னா இப்போது முடியுமா?'' என்று கேட்டேன். "வசதி உள்ளவங்களுக்கே முடியலையே?"

"இப்போ கஷ்டம்தான். அப்போ உங்களுக்கு காலையிலே பாலைக் கொடுத்து கையிலே ப்¢ஸ்கோத்து ஒண்ணக் கொடுத்து ஒரு ஓரமா ஒக்கார வச்சா நீங்க பதுவிசா ஒக்காந்திருப்பீங்களெ இப்போ அப்பிடியா? நாட்டுக் கைத்தறித் துண்டு ஒண்ணை- அப்போ நாலணா- இடுப்புலே கட்டினா சமத்தா பிள்ளைங்க அடம் புடிக்காம இருக்குமே இப்போ அப்படியா? டெரிலின்லே சட்டை, கால்சட்டை கேக்குதே! அப்போல்லாம் இந்த ஹார்லிக்சும், பால் பவுடரும் ஏது? அதெல்லாம் செலவுதான் ஆகும். கொடிக்குக் காய் பாரமா என்ன? உங்களாட்டமா எடுத்த துக்கெல்லாம் டாக்டருக்கிட்டே போனோம்? எல்லாம் கை வைத்தியம்தான்" என்று பெருமிதத்துடன் சொன்னார்கள்.

வீட்டில் எப்போதும் கோரோசனையும் தஞ்சாவூர் மாத்திரைகளும் இருக்கும். எங்களுக்கு என்று இல்லை - ஊரில் எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்கும் மாத்த்¢ரையும் மருந்தும் தந்து உதவுவார்கள். குழந்தை வைத்தியத்துக்காக என்று இல்லை -தங்கள் வீட்டில் நல்லது கெட்டது எதற்கும் அம்மாவையே 'ஆகிவந்த கை' என்று யோசனையும் உதவியும் கேட்பார்கள். எங்கள் தாயாரும் முகம் சுளிக்காமல் யார் கேட்டாலும் உதவுவார்கள். 95 வயது வரை வாழ்ந்து இப்போது 2001ல் தான் காலமானார்கள். கடைசி ஐந்து ஆண்டுகள் நினைவுப் பகுதி செயலிழந்து எங்களைக் கூட யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது தவிர எனக்குத் தெரிந்து நோய் என்று எப்போதும் படுத்ததில்லை. 90 வயதிலும் கண்ணாடி போடாமல் படிக்கவும் எழுதவும் அவர்களுக்கு முடிந்தது. வீட்டின் நிர்வாகம் அப்பாதான் என்றாலும் வரவுசெலவுக் கணக்கை தவறாமல் எழுதி வந்தது எங்கள் அம்மாதான். இன்றும் நான் கடந்த 50 வருடங்களாக வரவுசெலவுக் கணக்கை விடாது எழுதி வருவது அம்மாவிடமிருந்து கற்றதுதான். கடைசிவரை ஒரு பல் கூட எங்கள் தந்தையைப் போலவே அவர்களுக்கு விழவில்லை. அப்படிப் பட்ட உடல் நலமும் மன நலமும் உடையவர்களாக - அப்போதெல்லாம் நமது சராசரி வயது 28 ஆக இருந்தும் - எப்படி இருக்க முடிந்தது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

குழந்தை வளர்ப்பிலும் அப்படி ஒன்றும் தனிப்பட்ட விசேஷம் எதுவும் இருந்த தில்லை. இப்போதுபோல் காபியும் டீயும் இல்லை. காலையில் இட்டிலி , தோசை தொடர்ச்சியாக இல்லை. பழையதும் தயிரும் பழங்குழம்பும்தான். இருந்தும் நாங்கள் அதிகமும் நோய் வாய்ப்பட்டதில்லை. மாதம் ஒருமுறை கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவார்கள். சனிதோறும் எண்ணெய்க் குளியல். தின்பதற்கு ஏதாவது எப்போது கிடைக்கும். வீட்டில் செய்யும் பலகாரங்கள் தவிர தெருவோடு போகும் இலந்தை, மா, பலா, பாலப்பழம் என்று எது விற்றாலும் மாற்றாக நெல் போட்டு வாங்கித் தருவார்கள். படிப்பு விஷயத்தில் அவர்கள் பங்கு எதுவும் இல்லயே தவிர, நாங்கள் எல்லொரும் படித்து உத்தியோகத்துக்கு வந்தது தன் அண்ணன்கள் வீட்டைப் பார்த்துதான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மையில் எங்கள் தகப்பானார் 1914லிலேயே மெட்றிகுலேஷன் படித்தவர்கள். எங்கள் வட்டாரத்தில் அப்போது மெட்றிகுலேஷன் வரை படித்தவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை. அதனால் முன் யோசனையோடு அப்போதே எங்கள் அனைவரையும் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பினார்கள்.

அம்மா அப்படித் தன் பிறந்த வீட்டுப் பெருமையைப் பேசக் காரணம் உண்டு. எங்கள் தாய் மாமா ஒருவர் எங்கள் தந்தை படித்த காலத்திலே கல்லுரியில் படித்து வழக்கறிஞர் தொழிலில் அமோகமாய் சம்பாதித்து, அரசியலிலும் மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக - பக்தவத்சலத்தின் பார்லிமெண்ட்ரி செயலராக இருந்தவர். அவர் எங்கள் அப்பா போல தன் பிள்ளைக¨ளையும் தன் சகோதரர்கள் பிள்ளைகளையும் தானே படிக்க வைத்தவர். அதைப் பார்த்துத்தான் எங்கள் அப்பா எங்களையும் படிக்க வைத்ததாக எங்கள் தாயார் சொல்வது வழக்கம். எங்கள் தாயார் தன் பிறந்தகத்தைப் பற்றிப் பெருமைப்பட வேறொரு காரணமும் உண்டு.

எங்கள் தாயாரின் தந்தை ஜமீன் ஒழிப்புக்கு முன் ஒரு சின்ன கிராமத்துக்கு 'ஜாகிர்தார்' ஆக இருந்தவர். உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்ட அம்மாகுளம் என்கிற கிராமத்தின் வரிவசூல் மற்றும் பாராமரிப்பு உரிமை பெற்ற குட்டி ஜமீன். எங்கள் மாமாக்களில் ஒருவர் உடையார்பாளையம் ஜமீனில் பேஷ்கார் (நிதிப் பொறுப்பு) ஆக இருந்தவர். இதிலெல்லாம் எங்கள் அம்மாவுக்குப் பெருமை. ஜமீன் ஒழிப்பு நேர்ந்த போது ரு.60000 போல அரசாங்கத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையாக எங்கள் மாமாக்களுக்குக் கிடைத்தது.

அம்மாவின் பிறந்த ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை எல்லோரும் போய் ஒருமாதம் போல டேரா அடித்துவிட்டு வருவோம். அப்போது - 50 ஆண்டுகளுக்கு முன்வரை அந்தப் பக்கம் பேருந்தெல்லாம் இல்லை. ஓரிரு தனியார்கள் - டி.வி.எஸ் போல -நடத்தியவை பெரிய முக்கிய வழித்தடங்களில் மிகக் குறைந்த அளவில் இருந்தன. அதனால் எங்கும் மாட்டு வண்டிப் பயணம்தான். எங்கள் ஊரிலிருந்து ஏறக்குறைய 25 மைல் தூரம் அம்மா பிறந்த ஊரான வாணதிரையன் பட்டணம் . இப்போதைய ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் செல்லவேண்டும். நீளமான கூண்டு வண்டியில் விடியற்காலை 4 மணிக்குப் புறப்பட்டால் மாலை இருட்டும் வேளைக்கு 6 மணியளவில் போய்ச் சேர முடியும். மேல் படிப்புக்குப் போன மூத்த இரு சகோதரர்கள் தவிர அப்போதைக்கு இருந்த 5,6 பிள்ளைகளுடன் கட்டுசாதம் கட்டிக்கொண்டு அப்பா அம்மாவுடன் கிளம்புவோம். வண்டி மெதுவாகத்தான் போகும். வேகமாகப் போக சாலையும் அனுமதிக்காது. ஏறக்குறைய 12 மணிக்கு மேலாக பயணம் செய்தாலும் எங்களுக்கு அலுத்ததில்லை. பள்ளிக்கூடச் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை, வீட்டுக்கு வெளி¢யே புதிய இடங்களின் ஈர்ப்பு என பயணம் உற்சாகமாய் இருக்கும். இடையில் பத்து மைலுக்கு ஒரு தடவை சாலையோரம் தென்படும் பெரிய குளத்தருகே வண்டியை அவிழ்த்து நிறுத்தி கட்டுச்சோறு சாப்பிடுவோம். அது ஒரு ரசமான அனுபவம்.

மாமா வீட்டின் பின் பகுதியில் பெரிய மொட்டை மாடியுடன், உள்ளே விசால மான காலரி ஹால் போன்ற கூடம். அதில் உயரமான சுவரில் எங்கள் தாத்தா காலத்திலிருந்தே மாட்டப் பட்டிருந்த 3அடி உயரமான பெரிய பிரேம் போட்ட ரவிவர்மா ஓவியங்கள் இன்றும் இன்றும் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்முன்னே அப்படியே நிற்கிறது. பகீரதன் தவம், தமயந்தி அன்னத்தைத் தூது அனுப்புதல், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் என கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஓவியங்கள் என் கலைரசனைக்கு அந்தச் சின்ன வயதில் தூண்டுகோலாக இருந்தன. அதற்காகவே நான் அடிக்கடி அன்கே போக ஆசைப்படுவேன். இன்று அறுபது ஆண்டுகளுக்குப் பின் அங்கே ஒருமுறை போனபோது வீடு கைமாறி உருவம் மாறி பழைய அடையாளத்தை இழந்து எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. மாமாக்களி¢ன் வாரிசுகளும் இப்போது அங்கில்லை.

பெரிய இடத்திலிருந்து நிறைய நகைகளுடன் வந்த எங்கள் அம்மாவுக்கு ஊரில் மிகுந்த மரியாதை. எங்களது வளர்ச்சியில் அப்பாவுக்கு மிகவும் ஒத்துழைத்து, பெரியப்பா சுமத்திய பெரிய கடன் பங்கை அடைக்க தன் நகைகளை முகம் சுளிக்காமல் தந்துதவிய அம்மாவின் தியாகத்தை அப்பா நினவுகூர்வதுண்டு. ஆனால் அம்மா அதனைப் பெரிதாகச் சொல்லிக் காட்டாவிட்டாலும் அந்கக் காலத்தில் மிகக் கௌரவமாய்க் கருதப் பட்ட காசுமாலையைக் கொடுத்ததை ஆதங்கத்தோடு குறிப்பிடுவதுண்டு. பின்னாளில் மீண்டும் காசுமாலை வாங்கிவிட வேண்டும் என்ற அம்மாவின் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை. ஏனென்றால் எங்கள் பத்து பேரையும் ஆளாக்கி, திருமணம் செய்வித்துக் கரையேருவதற்குள் அம்மாவுக்கு அதற்கு நேரமோ வாய்ப்போ கிட்டவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் குறைதான்.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

Friday, October 28, 2005

உவமைகள் வர்ணனைகள் - 44

நான் ரசித்த உவமைகள்- வருணனைகள் - 44

வண்ணநிலவன் படைப்புகளிலிருந்து:


1. ............இத்தனைக்கும் ராமையா எல்லோரையும் விட நல்ல உயரம். ஆனால் அவனைப் பார்த்தால் யாருக்கும் ஒரு பயபக்தியோ மதிப்போ வருவதில்லை. குழிவிழுந்த கண்கள்; நீண்ட தாடை; நீளமான கழுத்து; தோள்பட்டையிலிருந்து இரண்டு கைகளும் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு பிடிமானமே இல்லாமல் தொங்கும்; ஆறரைஅடி உயரம்.

- 'கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன்' கதையில்.

2. 'ஸ்...ஸ்....ஸ்......' என்று சாரைப் பாம்பு சீறுகிறமாதிரி யாராவது வீட்டுக்குள் நுழைந்தால் அது பாடலிங்கம் பிள்ளைதான் என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். அவரிடம் அசந்து மறந்து யாராவது 'சுகமில்லை' என்று சொன்னால் தொலைந்தது. காயத்தைப் பொடி பண்ணித் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார். காயம் அவருக்குச் சர்வரோக நிவாரணி. ஜலதோஷம் முதல் எலும்புமுறிவு வரை காயத்தைப் பொடித்துத் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார்.

- 'ஞாயிற்றுக்கிழமை'.

3. அவர்கள் வீட்டில் ஒருத்தர் குரல் போல ஒருத்தருக்கு இல்லை. அவர்களின் அம்மாவுக்கு ஒரு குரல். விசித்திரம் நிரம்பிய - பூனை கூப்பிட்டு அழுகிறது போன்றது அம்மாவின் குரல்.

- 'அழைக்கிறவர்கள்.'

4. அப்பாவின் குரல் ரொம்ப மென்மையானது. அப்பாவைச் சந்தித்து விட்டுப் போன அவருடைய ரசிகர்களில் பலர், ஊருக்குப் போனதும் அப்பாவின் குரலைப் பாராட்டி எழுதாமல் இருந்ததில்லை. அவருடைய உள்ளங் கைகளைப் போலவே அவருடைய குரலில் சொல்ல முடியாத மிருது இருந்தது. அந்தக் குரலைக் கேட்டால், பூவால் காதைத் தொட்ட மாதிரி இருக்கும்.

- 'அண்டை வீட்டார்'.

5. பக்கத்தில் இருந்தவரை மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அவருடைய குரல் வியாபாரிகளுக்கே உரிய கள்ளத்தனமுள்ள கீச்சுக் குரலாக இருந்தது. சின்ன வயசிலேயே இந்த வியாபாரக் குரல் இவருக்கு வந்திருக்கும்போல. எல்லோரும் பின்னால் ஆகப் போகிறதைச் சின்ன வயதிலேயே இனம் காட்டி விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

- 'ஏழாவது நாள்'.

6. வேட்டியைப் பெரிதாக, ஒரு பிறந்த குழந்தை தூங்குகிற அளவிற்கு 'மடி'வ்¢ட்டுக் கட்டிக் கொண்டார். அப்படிக் கட்டிக் கொண்டால்தான் அவருக்கு வேட்டி கட்டிக் கொண்டது போல இருக்கும்.

- 'யுகதர்மம்'.

7. செல்லம்மா பாஷையில், வீட்டில் வாக்கரிசி முட்டிப் போகும்போது, பெரிய ஞானக்கிறுக்கன் போல் இந்தத் திண்ணையில் சாய்ந்து கொள்வான். மழுமழுவென்று, தயிர்க்காரியின் சிரட்டையைப் போல் சிரைக்கப்பட்ட தலை மேல் இரண்டு கைகளும் பின்னிக் கிடக்கும். இன்றைக்கும் அதே மோனத் தவத்தில் ஆழ்ந்து, மனம் எங்கோ பழங்கனவுகளில் லயித்துக் கிடக்கும்போதுதான் செல்லம்மாவின் குரல் ஆளையே அடிக்கிற மாதிரி பீரிட்டுக் கிளம்பியது.

- 'மயான காண்டம்'.

8. இருட்டைப் போக்கினது பஞ்சாயத்துபோர்டில் ந்¢றுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை வீசுகிற நிலா வெளிச்சமோ இல்லை. இருட்டை அழித்தது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக் குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக் கொண்டிருந்தாலும் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு ஒரு போதும் எஸ்தர் குடும்பத்திற்கு துயரம் தருகிறதாக இருந்தது இல்லை. இப்போது இருட்டு தருகிற துக்கத்தை, வெயிலின் கொடுமையைப் போலத் தாங்க முடியவில்லை.

- 'எஸ்தர்'.

9. அது நிலாக் காலம். வண்டியின் வேகத்தில் பனை ஓலைகளினூடே தெரிந்த நிலா ஒளிந்து பார்க்கிற மாதிரி மறைந்து மறைந்து தெரிந்தது. வண்டிக்கு அடியில் நிலா வெளிச்சத்தில் வண்டிச் சக்கர நிழல்கள், ரொம்ப தூரத்துக்கு ரோட்டை விட்டுக்கீழே இறங்கி, பெரிய ராட்க்ஷஸச் சக்கரங்களாக வண்டியுடன் கூடவே உருண்டு வந்து கொண்டிருந்ததைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.

- 'குழந்தைகள் ஆண்டில்'.

10. அவளுடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆயிற்று? மாடியிலிருந்து கிழித்துப் பறக்கவிட்ட பேப்பர்த் துண்டுகள் மாதிரி எந்த இடத்தில் தலை சாய்ப்பது என்று தெரியாமல் இருக்கிறாள்.

- 'ஒரே ஒரு நாள்' நாவலில்.

- இன்னும் வரும்.

- வே.சபாநாயகம்.

Monday, October 10, 2005

களஞ்சியம் - 22

எனது களஞ்சியத்திலிருந்து - 22

பாடல் ஒன்று - விளக்கம் இரண்டு :

இரட்டை அர்த்தம் தொனிக்கப் பாடப்படும் பாடல் சிலேடை எனப்படும். இங்கே குறிப்பிடுவது சிலேடைப் பாடல் பற்றி அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் பாடப்படும் பாடலுக்கு நயமான இன்னொரு விளக்கம் அளிப்பது பற்றியாகும். கவிக் காளமேகம் வெண்பாவில் எல்லாவித உக்திகளையும் வெற்ற்¢கரமாகக் கையாண்டு பாடியவன். அவன் பாடிய சிலேடைப் பாடல்களைக் கையாளாத பேச்சாளர்கள் இல்லை எனலாம். அவனது சிலேடைப் பாடல்களி¢ல் பல ரசக்குறைவானவை. சமத்காரமான சில பாடல்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணலாம். அவன் பாடிய பாடலுக்கு அவனே மாற்றுப் பொருள் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று அவன் நாகைப்பட்டினத்து சத்திரத்துக்குச் சாப்பிடப் போனபோது நேர்ந்தது.

நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான்.

ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை இழந்து சத்தம் போட்டவனை நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவன் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை. நாழியாகஆகப் பசி அதிகமாகி கவிஞனுக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டான். அதற்குள் அவரே அவனைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினான்.

கத்துக்கடல் நாகைக்
.....காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
.....அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
.....ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.

ஒலிக்கும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.

இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவுசெய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவனே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.

'காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.

காத்தான் போன்ற சாதாரண மனிதரிடம் என்று இல்லை - கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.

காளமேகம் பார்த்தான். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே" என்று புதிரை விடுவித்தான்.

'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னான்.

கன்னபுர மாலே
.....கடவுளிலும் நீ அதிகம்
உன்னை விட நான்
.....அதிகம்- ஒன்று கேள்
உன் பிறப்போ பத்தாம்
.....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை
என் பிறப்போ
.....எண்ணத் தொலயாதே.

காலத்தால் முற்பட்ட நந்திக் கலம்பம் என்ற நூலில் இதைவிடவும் ரசமான ஒரு பாடல் இரு பொருளுடன் அமைந்துள்ளதைக் காணலாம்.

நந்திக் கலம்பத்தின் நாயகன் நந்தி வர்மனின் வீரத்தைப் புகழ்ந்து பாடும் பாடல் அது. நந்திவர்மன் கோபத்தோடு படையெடுத்துக் கிளம்பாத போது, பகைவேந்தர்க ளின் செழிப்பான நாடுகளில் அழகான ஊர்கள் இருக்கும். அங்கே மகிழ்ச்சி ஆரவாரங்களும், பாட்டும் கூத்தும் ஏக அமர்க்களமாக இருக்கும். எங்கே பார்த்தாலும் தாமரைகள் பூத்து வனங்களும் சோலைகளுமாய் நீர்வளத்தையும் நாட்டு வளத்தையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும். பகை மன்னர்களிடம் தேர்களும் கூட இருக்கும்.

'ஊரும், அரவமும்,
....தாமரைக் காடும்,
உயர் வனமும்,
.....தேரும் உடைத்தென்பர்
சீறாத நாள்;'

ஆனால், பகை மன்னர்களின் அடங்காத்தனத்தையும், அக்கிரமங்களையும் கண்டு கோபமடைந்து நந்திவர்மன் படைகளோடு அந்நாடுகளுக்குள் புகுந்தால், அப்புறம் அவர்களது நிலை என்னவாகும் தெரியுமா? 'ஒன்றும் ஆகி விடாது; அப்படியதான் இருக்கும்' என்று கூறுவதுபோலச் சொல்லுகிறார் கவிஞர். சிலேடையும் ஹாஸ்யமும் கலந்த பேச்சு அது. நந்திவர்மனின் படைகள் புகுந்த பிறகும் அங்கே 'ஊரும் அரவமும், தாமரைக் காடும், உயர்வனமும், தேரும்' இருக்கத்தான் செய்யுமாம். ஆனால் இந்த 'ஊரும் அரவமும்' முதலியவை வேறு! தேசம் முழுதும் பாழாகிவிடும் என்பதைத்தான் கவிஞர் இங்கே சொல்ல வருகிறார்.

ஊரும் , அரவமும்,
.....தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பர்
.....சீறாத நாள்; நந்தி
சீறியபின்,
ஊரும் அரவமும்,
தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பரே
தெவ்வர் வாழும்
செழும்பதியே.

(ஊரும் அரவமும் - ஊர்ந்து செல்லும் பாம்புகளும்; தாமரைக் காடும் - தாவித்திரியும் மிருகங்களும் நிறைந்த காடுகளும் ; உயர்வனமும் - பெரிது பெரிதாக மரங்கள் நிறைந்த காடுகளும்; தேரும் - பேய்த்தேர் எனப்படும் கானல்நீரும்; தெவ்வர்-பகைவர்; செழும்பதி - செழிப்பான நாடு.)

நந்திவர்மனின் கோபத்துக்கு ஆளாகிவிட்டால் எதிரியின் நாடு காடாகிவிடும் என்ற விஷயத்தை இப்படி இரண்டு விதமாகப் பொருள்படும் படி ரசமாகப் பாடி விட்டார் நந்திக் கலம்பக ஆசிரியர். இவ்வளவு அற்புதமாகப் பாடிய கவிஞர் பெயர் தான் தெரியவில்லை.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, August 02, 2005

உவமைகள்-வருணனைகள் - 43

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 43:

வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து:

1. இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது அந்த ஒலி. கனத்த இருளின் கூரிய கதறல் போலும் ஒலித்தது அது. இரவின் அமைதியைக் குத்திக் குதற முயல்வதுபோல் எழுந்த கிறீச்சொலி அமானுஷ்யமானது அல்ல; மனித உதடுகள் எழுப்பிய சீழ்க்கை தான்.

- 'காத்தலிங்கம்'கதையில்.

2. வானம், கழுவிப் போட்டது போல், அழுத்தமான நீல நிறத்தோடு பளிச்சிட்டது. விண்ணிலும் மண்ணிலும், அவன் அதுவரை கண்டிராத அதிசயப் புதுமை இணைந்து கிடந்தது போல் தோன்றியது. இயற்கை புத்துயிரோடும் புது வனப்புடனும் காட்சி தந்து கொண்டிருப்பதாக அவன் கருதினான்.

- 'விழிப்பு'.

3. பார்க்கப் போனால், ஆனந்தக்குறிச்சிவாசிகள் அல்பாயுள் பேர்வழிகள் அல்ல. மண்ணில் அவர்களுக்குப் பிடிப்பு அதிகம். அவர்களுக்கே அலுத்துப் போய், 'சரி, போகலாமே!' என்று பட்டால் தான் சாவார்கள் போல் தோன்றியது.

- 'அந்தரங்கமான ஒரு போட்டி'.

4. பிறர் பார்வையில் எப்பவும் முதிர்ந்து கனிந்த உருவத்தினளாய் தோன்றிய அத்தை 'இளையளாய் மூத்திலள் கொல்லோ' என்ற கவிதை வரிக்கு - இளமைப் பருவம் வந்து பின் முதியவள் ஆகாமல் எல்லா காலத்திலும் முதுமையானவளாகவே இருந்தாள் போலும் என்ற ஐயப்பாட்டுக்கு - கண் கண்ட உதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

- 'அன்பு வறுமை'.

5. நசுநசுவென்று அழுகுணித் தூறல் சிணுங்கிக் கொண்டிருந்தது. ரஸ்தாப் பரப்பு எங்கும் தண்ணீர் தெளித்துவிட்டது போலிருந்தது. அது வேர்வையில் குளித்தது போலுமிருந்தது. சிறிது தொலைவுக்கு ஒன்றாக நின்ற எலெக்டிரிக் கம்பங்களில் ஒளிப்பூ பூத்துத் தொங்கியது. நசுநசுத் தூற்றல் அற்புதப் பூச்சிகள் போல் மினுமினுத்தது. விளக்குகளின் கண்ணீர்த் திவலைகள் போலுமிருந்தது.

- 'கொலைகாரன்'.

6. மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்கவில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும், கனவு நெசவுகளையும் செய்து அமைதியைக் கெடுக்கிறது.

- 'பேரிழப்பு'.

7. கதவு தட்டப்பட்டதும் அவள் வந்தாள் திறப்பதற்காக. நகர்ந்து வருகிற ஒளிக்கோடு மாதிரி.

-'பெண்'.

8. காலவெளியில் கால் பாவி, எண்ண வலையினால் விண்மீன்களைப் பிடிக்க ஆசைப்பட்டேன் நான்.

- 'இதய ஒலி'.

9. தீ சிறுகச் சிறுகப் பற்றியது. அணைந்து விடுவது போல் பம்மி, குபீரென்று எவ்விப்படர்ந்தது. புகை கக்கியது. ஒளி நாக்கு நீட்டி நர்த்தனமிட்டது. அகப்பட்டதை நக்கி வலிமை பெற்றது. அங்கும் இங்கும் தாவிக் குதித்து நெடுகிலும் பாய்ந்து பரவியது. செம்மையாய்ச் சிரித்தது.

- ' தீ வேலி'.

10.தன் எண்ணற்ற குச்சிக்கைகளிலும் ஆயிரமாயிரம் இலைகளை ஏந்தி வானவீதியைப் பெருக்க முயல்வதுபோல் சதா சலசலத்து நிற்கும் ஆலமரம்......

- 'அலை மோது கடல் ஓரத்தில்' நாவலில்.

- இன்னும் வரும்.

- அடுத்து வண்ண நிலவன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Friday, July 08, 2005

நினைவுத் தடங்கள் - 34

எங்கள் பெரியப்பாவுக்கு நேர் எதிரிடையான குண இயல்புடையவர் எங்கள் அப்பா. அவர் முரடர் என்றால் இவர் சாந்த சொரூபி. எங்கள் அப்பாவுக்குக் கோபம் வந்து பார்த்ததாக எங்களுக்கு நினைவில்லை. எனக்கு வினவு தெரிந்து எங்களில் யாரையும் அடித்ததில்லை. கண்டிப்பு உண்டே தவிர தண்டனை தருவதில்லை. வேலையாட்களைக் கூட பெரியப்பா போல நாக்கில் நரம்பின்றித் திட்டியதில்லை. அதிக பட்சம் 'மடையா', 'முட்டாள்' என்பதுதான் அவர்களது திட்டலாக இருக்கும். அதனால் பொது மக்களிடம் எங்கள் அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஒப்பிட்டுப் பார்க்க பெரியப்பாவின் குணம் அதற்குத் துணை புரிந்தது. இன்றும் நாங்கள் கிராமத்துக்குச் சென்றால் எங்கள் அப்பாவுக்குக் கிடைத்த அதே மரியாதை எங்களுக்குக் கிடைக்கும். எங்கள் அப்பா காலமான பிறகு என் சகோதரர்கள் அனைவரும் தங்கள் பங்கு நிலத்தை விற்றுவிட்டு சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் வீடு கட்டி இடம் பெயர்ந்த போது, நான் ஊருக்கு அருகில் உள்ள நகரில் வசித்ததால் மூத்தவர்கள் பலர் எங்கள் அப்பாவின் நினைவாக நானாவது நிலத்தை விற்காமல் பிறந்த மண்ணுடன் என்றும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதால் நான் விற்க வில்லை. அந்த அளவுக்கு எங்கள் தந்தையார் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எங்கள் அப்பாவின் தர்ம சிந்தையும் தயாள குணமும் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. எங்கள் எல்லோரையும் படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது போலவே எங்கள் ஊரில் உள்ள எல்லாப் பிள்ளைகளும் படித்து வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்கள். இரவில் சாப்பாடு முடிந்ததும் அண்டை அயலில் உள்ள பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்பிப்பதை வேடிக்கை பார்க்கவே இரவில் கூட்டம் கூடும். ஏனெனில் அப்போது ஆங்கிலம் பேசுவது ஒரு அதிசயம் மக்கள் மத்தியில். தங்கள் பிள்ளைகளும் அப்படிப் பேச எஙகள் தந்தை முயற்சி எடுப்பதில் அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. அப்படி அன்று எங்கள் தந்தையார் தூண்டியதே இன்று எங்கள் ஊரில் நிறைய பேர் - பெண்கள் உட்பட- படித்து முன்னேறி இருப்பதற்கு ஒரளவு காரணம் எனலாம்.

எல்லோரும் கல்வி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது போலவே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டினார்கள். அப்போதெல்லாம் காலரா போன்ற கொள்ளை நோய் வந்தால் மருத்துவ உதவி பெற எந்த வசதியும் வாய்ப்பும் மக்களுக்குக் கிடையாது. எங்கள் தந்தையார் காலரா மருந்தை தபாலில் வரவழைத்து கிராமத்தில் - குறிப்பாக சேரியில் காலரா வரும் போது, மிகுந்த பரிவோடு கொடுத்து எவ்வளவோ பேரைக் காப்பாற்றி யிருக்கிறார்கள். பெரியவர்களானால் சர்க்கரையிலும், குழந்தைகளானால் தேனிலும் காலரா மருந்தை வயதுக்கேற்றபடி சொட்டுகள் விட்டுத் தானே குழைத்து மணிக் கொரு தரம் உள்ளுக்குக் கொடுத்து கடுமையான பத்தியம் சொல்லி பேணிஉள்ளார்கள். சாவின் விளிம்புக்குப் போய் காப்பாற்றப் பட்டவர்கள் மிகுந்த விசுவாசத்துடன் வெகுநாள் வரை பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

அதே போல பாம்புக்கடிக்கும் ஒரு அற்புத மூலிகையைக் கொண்டு பலரது உயிர்களை எங்கள் சுற்று வட்டாரத்தில் காப்பாற்றி இருக்கிறார்கள். பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கட்டிலில் கிடத்தி தூக்கி வரப்பட்ட பலர் இந்த பச்சிலை வைத்தியத்தால் பிழைத்து எழுந்து நடந்து போன அதிசயத்தை இன்றும் எங்கள் ஊரில் நினைவு கூர்வதுண்டு. எங்கள் தந்தையாரைப் போலவே எங்கள் தாயாரும் குழந்தை வைத்தியத்தில் அக்கறை கொண்டு தஞ்சாவூர் மாத்திரை, கோரோசனை போன்ற மருந்துகளை வாங்கி வைத்துக் கொண்டு இரவு பகல் பாராது கொடுத்து உதவி இருக்கிறார்கள். எங்கள் தந்தையார் இப்படிப் பல உயிர்களைக் காப்பாற்றிய புண்ணியத்தால்தான் நாங்கள் பத்து பிள்ளைகளும் அமோகமாக வாழ்வதாக ஊரின் மூத்த குடிகள் இன்றும் சொல்லி எங்களை வாழ்த்துவார்கள்.

எங்கள் தந்தையார் தீவிரமான சிவபக்தரும் கூட. தினமும் அதிகாலையில் வயற்காட்டுக்குச் சென்று பயிர்களைப் பார்த்துவிட்டுப் பத்து மணி அளவில் திரும்பிய பிறகு அவர்களே கிணற்றில் நீரிறைத்து ஆசாரமாய்க் குள்¢த்துவிட்டு சிவபூஜை செய்த பிறகுதான் ஒரே வேளையாக மதிய உணவை உட்கொள்வார்கள். தினமும் புற்று மண்ணால் சிவலிங்கம் செய்து சந்தனமும் பூவும் சாத்த்¢, தேவாரமும் திருவாசகமும் பாடி ஒரு மணி நேரத்துக்கு மேலாக பூசை செய்வார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு எங்கள் எல்லோருக்கும் அவை பாடமாகி விட்டன. அதன் தாக்கமே என் இலக்கிய ஈடுபாட்டிற்கு அடிப்படை என எண்ணுகிறேன். இரவில் அனுஷ்டானம் செய்து சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து வந்த பிறகுதான் இரவு உணவு. இந்த நியதியை அவர்கள் உடல் தளர்ந்து, விழும் வரை கடைப்பிடித்தார்கள். அவர்கள் செய்த பூஜாபலன்தான் நாங்கள் இன்று குறைவின்றி வாழ்வதற்குக் காரணம் என்று எல்லோரும் சொல்வார்கள். அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்ச்சி நடந்ததை இங்கே சொல்ல வேண்டும்.

லால்குடியில் வாழ்ந்த என் மூத்த சகோதரி ஒருமுறை குழந்தைகளுடன் பஸ்ஸில் எங்கள் ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார்கள். அப்போது திருச்சியிலிருந்து எங்களூர் வரை பஸ் ஓடவில்லை. மூன்று மைலுக்கு அப்பால் உள்ள ஊரோடு பஸ் வந்து திரும்பிவிடும். ஊருக்கு வரவேண்டுமானால் அப்பாவுக்குக் கடிதம் போட்டு வண்டியை பஸ் நிற்கும் ஊருக்கு வரச்செய்துதான் வீட்டுக்கு வர முடியும். அப்படி அக்கா கடிதம் முன்னதாகப் போட்டிருந்தும் அன்று வரை அது கிடைக்காததால் வண்டி அனுப்பப் படவில்லை. பஸ் வந்த நேரம் அந்தி மயங்கும் வேளை. இடமோ எட்டியவரையில் அத்துவானக் காடு. திருடர்களும் குடிகாரர்களும் இருட்டிய பிறகு புழங்கும் இடம். வண்டியைக் காணோம் என்றறிந்ததும் என் சகோதரிக்கு அழுகையே வந்துவிட்டது. சின்னஞ் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கழுத்திலும் கையிலும் நகைகளுடன் எப்படி ஊர் போய்ச் சேரப்போகிறோம் என்று திகைத்து நிற்கையில் தெய்வமே இரக்கப்பட்டு அனுப்பியதுபோல் ஒரு கட்டை வண்டி விறகேற்றிச் சென்று விற்று விட்டுத் திரும்பியது - இருட்டில் யாரோ குழந்தைகளுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்து நின்றது. "யாரம்மா இந்த வேளையில் தனியாக ..?" என்று வண்டி யோட்டி அனுதாபத்துடன் கேட்க, என் சகோதரி வண்டி வராததைச் சொல்லித் தேம்பி இருக்கிறார்.

வெகு பாமரனான அந்த வண்டியோட்டி இறங்கி வந்து யார் எவர் என்று விசாரித்தார். சகோதரி எங்கள் ஊரையும் எங்கள் அப்பாவின் பெயரையும் சொல்ல அந்த ஆள் 'ஆ' என்று அதிர்ந்தவராய் "அம்மா அந்தப் புண்ணியவான் பொண்ணா நீங்க? அவுரு போட்ட பிச்சையிலே தான் நான் இன்னும் உசுரோட இருக்கேன். நல்ல பாம்பு கடிச்சி கட்டையா நீட்டி விட்டவன பச்சிலை குடுத்துக் காப்பாத்துன புண்ணியவான் அம்மா உங்க அய்யா! அவுரு பண்ண தருமம் தான் இந்த நேரத்திலே என்ன இங்க அனுப்பியிருக்கு. நீ பயப்படாதே. ஏறு வண்டியிலே. நா கொண்டு போய் அப்பா கிட்டே விடுறேன்" என்று அபயம் கொடுத்தார். பெற்றோர் செய்யும் புண்ணியம் பிள்ளைகளைக் காக்கும் என்பதை மெய்யாக்கியது போல நடந்தது இது. இப்படி எங்கள் தந்தையார் செய்த தர்மமும் சிவபூஜையும் எங்களைக் காத்ததே தவிர அவர்களைக் காக்கவில்லை என்பது பெரிய சோகம். அறுபது வயதில் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் கண்ணருகே அடிபட்டு அப்போது அது பாதிப்பை உண்டாக்காமல் பின்னாளில் சிறுகச் சிறுக கண் பார்வையை இழக்கும்படி ஆனது.அது அவர்களது நித்திய நியமங்களையும் பரோபகாரச் செயல்களையும் பாதித்தது. கடைசி இருபது ஆண்டுகள் இருட்டில் வாழ்வது போன்ற அந்தக வாழ்க்கை வாழ்ந்த கொடுமையைச் சொல்லி உருகாதவர் இல்லை. அவரிடமே சிலர் கேட்பார்கள்: " இவ்வளவு தர்மமும் சிவபூஜையும் செய்தீர்களே, உங்களுக்கு ஏன் இந்தக் கொடுமை?" என்று கேட்பவர்கள்¢டம், "நான் இந்த ஜென்மத்தில் ஏதும் பாவம் செய்ததில்லை. இது போன ஜென்மத்தின் கர்ம வினை" என்று அவர்களைத் தேற்றுவார்கள். ஜென்மம், பாவ புண்ணியம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவரையும் எங்கள் தந்தையாரது வாழ்க்கை சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, July 06, 2005

உவமைகள் வர்ணனைகள் - 42

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 42

பாலகுமாரன் படைப்புகளில் இருந்து:

1. சினிமா ஒரு காட்டாறு. அதற்கு இலக்கு முறைமை எதுவுமில்லை. காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நதி, கரை புரண்டு கிராமத்துப் பக்கம் போகும். பிறகு நகரத்தில் உலா வரும்.

- 'என் கண்மணி' நாவலில்.

2. சின்ன ஏரி மாதிரி இருந்தது லைப்ரரி.

- 'ஆருயிரே மன்னவரே' நாவலில்.

3. வெட்கம் ஒரு சுகமான விஷயம். வெட்கம் பழகப் பழகப் பிடித்துப் போகும். மறுபடி வெட்கப்பட மாட்டோமா என்று தோன்றும். வெட்கப் பட்டதை நினைத்து நினைத்து மறுபடி வெட்கப் படும். வெட்கம் காதலுக்கு உரம்.

- 'கல்யாண மாலை' நாவலில்.

4. இது மந்தை. மனித மந்தை. எங்கு போகிறோம் என்று தெரியாமல் இரு நூறு ஆடுகளுக்குள் எந்த ஆடு முதல் என்று முட்டிக் கொள்கிற மந்தை. நின்று நிதானித்து, தனித்து, தலை தூக்கி, எந்தத் திசை நோக்கி, எதற்கு என்று இவர்கள் கேட்டதே இல்லை. இவர்கள் இல்லை உலகம்; 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே'. உயர்ந்தவர்கள் யாரென்று உயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

- 'புருஷ விரதம்' நாவலில்.

5. காற்று, பத்து வயசுப் பெண்போல மின்விசிறி இறக்கைகளோடு கோத்துக் கொண்டு தட்டாமாலை ஆடிற்று. முரளிதரன் தலையைக் கலைத்தது.

- 'மரக்கால்' நாவலில்'.

6. "ஜலமில்லாத காவிரி மகாகொடுமை ரகு. தலையை மழிச்சு நார்மடி சுத்தி மூலையில் உம்மென்று உட்கார்ந்திருக்கிற கிழவி மாதிரி. ரொம்ப வேதனை ரகு. நீ இப்போ ஊருக்கு வராதே. ஜலம் வந்த பிறகு நான் உனக்கு எழுதுகிறேன்."

- 'ஏதோ ஒரு நதியில்' குறுநாவலில்.

7. வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. தரையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் புகையோடு எழும்பத் தொடங்கி விட்ட மாதிரி அதீத வேகம் கொண்டு விட்டது. உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேண்டும், சட்டையும், தலைமயிரும் மட்டுமில்லை, மனைவியே, மேற்கத்திய வக்கிரமும் நம்மீது வந்து விழுந்து விட்டது. கப்பலில் டிங்கு ஜுரம் வந்து இறங்குகிறது. பழங்கதைகள் பேசி லாபம் என்ன....?

- 'சேவல் பண்ணை' நாவலில்.

8. காதலித்த பிறகு அயர்ச்சி வருகிறதோ இல்லையோ திருமணம் என்பதற்குப் பிறகு ஒரு அயர்ச்சி வரத்தான் செய்கிறது. அது அயர்ச்சி இல்லை. இனி என்ன என்ற கேள்வி. கூத்து முடிந்து இல்லத்துக்குத் திரும்பும் போது கூத்து பாதியும், வீடு பாதியுமாய் நினைவிலிருக்குமே அதைப் போன்ற ஒரு அதிசயம்.

- 'கிருஷ்ண அர்ஜுனன்' நாவலில்.

9. யாரையுமே..... எதையும் எப்போதும் காதலித்தல் முடியாது. காதலுக்குக் கீழே இருக்கிற பொய் புரிந்து போன பிறகு முடியாது. கீழே இருக்கிற சேறு தெரிந்த பிறகு தாமரை உயரே வந்து விடும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சிரிக்கும். தெறித்தாலும் ஒட்டாது. சேறு கீழே விழும்.

- 'யானை வேட்டை' நாவலில்.

10. மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ. ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை. போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை. நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை. முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை. தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம் போல அழுக்கு இல்லை. கனகாம்பரம் போல அலட்டல் இல்லை. மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை. சாமந்தி போலத் திமிரில்லை. தாமரைபோல கர்வமில்லை. மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ. குடித்தனப் பொம்பிளை போல காதல், காமம், அமைதி, அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.

- 'அடுக்கு மல்லி நாவலில்'.

- இன்னும் வரும்.

- அடுத்து வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநயகம்.

Tuesday, July 05, 2005

களஞ்சியம் - 21

எனது களஞ்சியத்திலிருந்து - 21

விவேகசிந்தாமணி விருந்து - 10 - பாவையரைப் பழிக்கும் பாடல்கள்:

விவேகசிந்தாமணி விருந்தின் இறுதிப் பகுதிக்கு வந்திருக்கிறோம்.

பல்விதச் சுவைகளையும் கொண்ட பாடல்களை உள்ளடக்கியுள்ள விவேகசிந்தா மணியில் விரச உணர்வுக்குத் தீனி போடும் பாடல்களும் உண்டு. அவை பகிர்ந்து கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால் வேண்டுபவர் தேடிப் படித்து அதில் தென்படும் கவியழகையும் இனிய ஒசை நயத்தையும் ரசிக்கலாம்.

பெண்ணின்பத்தைச் சுவைபடச் சித்தரிக்கும் பாடல்கள் உள்ள அதே நூலில் பெண்களை இழிவு படுத்திப்பாடும் பாடல்களும் உள்ளன. பெண் தொடர்பினைத் துறக்கத் துண்டுவதாக அவை தோற்றம் தந்தாலும் அவை போலித் துறவறத்தையே உள்ளே கொண்டவை. அருணகிரியாருக்குப் பின் தோன்றிய அவை அக்காலத்தின் அடிச்சுவட்டைக் கொண்டவை.

வேசியரை நம்பக் கூடாது என்று சொல்கிற பாடல் ஒன்று:

ஆலகால விடத்தையும் நம்பலாம்;
.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;
கோல மாமத யானையை நம்பலாம்;
.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;
காலனார் விடு தூதரை நம்பலாம்;
.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;
சேலை கட்டிய மாதரை நம்பினால்
.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.

ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர்- இ¢த்யாதிப் பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.

இதையே மீண்டும் வலியுறுத்துவது போல இன்னொரு பாடல்:

படியின் அப்பொழுதே வதைத்திடும்
.....பச்சைநாவியை நம்பலாம்;
பழி நமக்கென வழி மறைத்திடும்
.....பழைய கள்ளரை நம்பலாம்;
கொடுமதக்குவடு என வளர்ந்திடு
.....குஞ்சரத்தையும் நம்பலாம்;
குலுங்கப்பேசி நகைத்திடும் சிறு
.....குமரர் தம்மையும் நம்பலாம்;
கடையிலக்கமது எழுதி வைத்த
.....கணக்கர் தம்மையும் நம்பலாம்;
காக்கை போல் விழி பார்த்திடும் குடிக்
.....காணியாளரை நம்பலாம்;
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும்
.....நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய்
.....நம்பொணாது மெய் காணுமே.

உண்டவுடனே கொல்லத்தக்க பச்சைநாவியான கொடிய நஞ்சையும் நம்பி உட்கொள்ளலாம்; 'பழி நமக்கு வரினும் வரட்டும்' என்று அதைப் பொருட்படுத்தாது வழி மறித்துக் கொள்ளையடிக்கும் கள்வரையும் நம்பி உறவு கொள்ளலாம்; கொடிய, மதத்தை உடைய மலைபோன்று வளர்ந்துள்ள யானையையும் நம்பி அதனை நெருங்கலாம்; உடல் குலுங்க பசப்பு வார்த்தைகளைப் பேசி நகைத்து ஏமாற்றும் சிறுவர்களையும் நம்பி நேசிக்கலாம்; குடிகளுக்குக் கணக்கின் உள்வயணத்தைக் காட்டாது மோசடியாய் தான் எழுதி வைத்த கட்டுத் தொகையைக் காட்டி வஞ்சிக் கும் கணக்கர்களையும் நம்பலாம்; ஒரே விழியை உடையதாயினும் கூரிய பார்வையை உடையதான காக்கையைப் போலப் பயிரிடும் குடிமக்களுக்கு யாதொரு பயனும் கிட்டாதபடி கட்டிக் காக்கும் காணியாட்சி உடையவரையும் நம்பலாம்; நடக்கும் போது உடலைக் குலுக்கியும், மஞ்சள் முதலியவற்றால் முகத்தை மினுக்கியும் பசப்பி, மிகுதியாகச் சிரிக்கும் இயல்புடைய நங்கையரை நம்பக்கூடாது; நம்பக்கூடாது; நம்பக்கூடாது. இது உண்மை.

( 'பழி நமக்கென வழி மறைத்திடும் பழைய நீலியை நம்பலாம்' - என்றும் ஒரு பாடம் உண்டு. பழியைக் கருதாது ஒரு வணிகனை வழி மறித்துக் கொலை செய்த பழையனூர் நீலி பற்றிய குறிப்பு இது. )

இன்னொரு பாடல் வேசியரின் சாகசங்களைப் பட்டியலிடுகிறது:

வெம்புவாள் விழுவாள் பொய்யே;
.....மேல் விழுந்து அழுவாள் பொய்யே;
தம்பலம் தின்பாள் பொய்யே;
.....சாகிறேன் என்பாள் பொய்யே;
அம்பினும் கொடிய கண்ணாள்
.....ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
.....நாயினும் கடை ஆவாரே.

உங்கள் துயரத்தைக் கண்டு வருந்தியவளாய் மயங்கி விழுவாள்; அது பொய்யே ஆகும். மேலே விழுந்து அழுவாள்; அதுவும் பொய்யே ஆகும். உங்கல் எச்சில் தாம்பூலத்தை உண்பாள்; அது பொய்யே ஆகும். 'உனக்காக நான் உயிர் விடுவேன் என்று உரைப்பாள்; அது பொய்யே ஆகும். அம்பை விடக் கூர்மையான கண்களை உடைய, ஆயிரம் சிந்தனைகளை உடைய இத்தகைய மங்கையரை நம்பியவர்
எல்லோரும் நாயை விடக் கீழான நிலையை அடைவர்.

இந்தப் பாடல்கள் எல்லாம் பொதுவாக எல்லாப் பெண்களையுமே பழிப்பது போலத் தோன்றினாலும் இவை விலைமாதரின் இயல்பையே சித்தரிக்கின்றன என்று கொள்ள வேண்டும். ஆயினும் கீழ்க்கண்ட பாடல் பெண்களின் பொது இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. மாதரின் நெஞ்சை யாராலும் அறிய இயலாது என்பதை அழகான அறிவார்ந்த உவமைகளுடன் எடுத்துச் சொல்கிறது.

அத்தியின் மலரும் வெள்ளை
.....ஆக்கை கொள் காகம் தானும்
பித்தர் தம் மனமும் நீரில்
.....பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரமதேவ
.....னால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம்
.....தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தியின் பூ, வெண்மை நிறமுள்ள காகம், பைத்தியக்காரர்களது உள்ளம், நீரில் பிறந்த மீனின் கால் ஆகியவற்றை யாராலாவது பார்க்க முடியுமா? ஒருவேளை பிரம்மதேவனால் அளவிடக் கூடுமோ என்னவோ? ஆனால் சித்திரத்தில் வரையப்பெற்ற கண்களைப் போன்ற விழிகளை உடைய மாதர்களின் உள்ளத்தின் நோக்கத்தைக் கண்டு தெளிந்தவர் உலகத்தில் யாரும் இல்லை.

மற்ற பாடல்களை ஏற்பதில் பலருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் பெண் கள்¢ன் மனம் பற்றிய இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்பார்கள்தானே?

- விவேகசிந்தாமணி திகட்டாத விருந்து. எனது எடுத்துக் காட்டுகள் இலக்கிய ரசனையுள்ள அனைவரையும் அந்நூலைத் தேடிப் படிக்க வைக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்த விருந்துப் பரிமாறலை முடிக்கிறேன்.

- எனது களஞ்சியத்திலிருந்து மேலும் எடுத்தளிப்பேன்.

- வே.சபாநாயகம்.

களஞ்சியம் - 20

எனது களஞ்சியத்திலிருந்து - 20

விவேக சிந்தாமணி விருந்து -9

காதலில் மலர்ந்த கவிதைகள்:

விவேக சிந்தாமணி ஒரு பல்சுவைக் களஞ்சியம். `எல்லாப் பொருளும் இதன் பாலுள' என்று திருக்குறளைச் சொல்வது போல, `எல்லாச் சுவையும் இதன்பால் உள' என்று விவேக சிந்தாமணியைச் சொல்லலாம். மென்மைமையான காதல் உணர்வைவைச் சித்தரிக்கும் இனிய பாடல்கள் பல இதில் உள்ளன.

ஒரு தலைவன் தன் தலைவியை இப்படிப் புகழ்கிறான்:

வண்டு மொய்த் தனைய கூந்தல்
.....மதன பண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள்
.....கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ
.....கனியொடு கலந்த பாகோ
அண்டமா முனிவர்க்கு எல்லாம்
.....அமுதம் என்று அளிக்கலாமே.

`என் காதலி வண்டுகள் மொய்த்தாற் போன்ற கூந்தலை உடையவள்; கயல்மீனைப் போன்ற விழிகளை உடையவள்; கிளியின் பேச்சு போன்ற மொழியினள்; `மதனக் களஞ்சியம்' என்ற கொடி போன்ற இவளது வாயின் நீர் கற்கண்டோ, சர்க்கரையோ, தேனோ, பழத்தோடு கூடிய பாகோ அறியேன். ஆனாலும் அதனைத் தேவர்கள் முனிவர் எல்லோருக்கும் அமுதம் என்று கொடுக்கலாம்' என்று புகழ்ந்துரைக்கிறான்.
(பண்டாரம்- களஞ்சியம்)

அதோடு மட்டுமல்ல அவள் மன்மதனும் மயங்கிப் போகும் மயக்கத்தினைத் தரக் கூடியவள் என்கிறான்:

அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகம் கண்டுஎதிர் செஞ்சிலை மாறனும்
கலகமே செயும் கண் இதுவாம் என
மலரம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்.

`ஒருதடவை - கரும்பு வில்லை உடையவனான மன்மதன், என் காதலியைப் பார்த்தான். வாளாயுதத்தைப் போன்ற கண்களை உடைய அவளது அழகிய நெற்றியில் உள்ள பொட்டின் அழகைக் கண்டான். இவளுடைய கண்கள் சாதாரணமானவை அல்ல - கலகம் விளைவிப்பவை, இவள் முன்னே நம் அம்புகளுக்கு வேலை இல்லை எனக் கருதி, தன் கையில் உள்ள மலர் அம்புகள் ஐந்தையும் அவள் முன்னர் வைத்து வணங்கினான் தெரியுமா?' என்கிறான்.
( அலகு வாள் - வாளாயுதம்; ஆயிழை - பெண்; நுதல் - நெற்றி; செஞ்சிலை - செவ்விய வில்; மாறன் - மன்மதன் )

அவளை முதன் முறையாகக் கண்டபோது தனக்கு ஏற்பட்ட கிளர்ச்சியையும், மயக்கத்தையும் சொல்கிறான்:

அருகில் இவள், அருகில் இவள், அருகில் வர உருகும்,
கரிய குழல் மேனி இவள் கானமயில் சாயல்
பெரிய தனம் சிறிய இடை பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.

`கரிய நிறம் கொண்ட கூந்தலையும், அழகிய மேனியையும், கானகத்து மயிலினை ஒத்த சாயலையும், பெரிய மார்பகங்களையும், சிறுத்த இடையினையும் கொண்ட அவள் அருகில்வர அருகில்வர உள்ளம் அப்படியே உருகிப் போகும். ஐயோ, இவள் தெருவில் நிற்கும் நிலையை நோக்கில் தெய்வப்பெண் என்றே மயங்கிச் சொல்லுதல் வேண்டும்` என உருகிப் பேசுகிறான். கம்பன் ராமனை `ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என்று உருகுவதை நினைவூட்டுகிறது. சந்தமும் கூட கம்பனது சந்தமே.

அவள் அருகில் வந்ததும் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து ரசிக்கிறான். அவளது நாசியைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் வருகிறது. அதை அவளிடமே கேட்கிறான்:

கொல்உலை வேல் கயல் கண்
.....கொவ்வையங் கனிவாய் மாதே!
நல்அணி மெய்யில் பூண்டு
.....நாசிகா பரண மீதில்
சொல்அரில் குன்றி தேடிச்
.....சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும்
.....புதைத்தனள் வெண்முத்து என்றாள்.

''கொல்லன் உலைக்களத்தில் காய்ச்சிக் கூர்மை செய்யப்பட்ட வேலாயுதத்தையும், கயல்மீனையும் போன்ற கண்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையையும் உடைய பெண்ணே! நல்ல ஆபரணங்களை தேகத்தில் அணிந்து மூக்கில் மட்டும் குற்றம் பொருந்திய குன்றிமணியை அணிந்து கொண்ட காரணம் யாதோ?"

அதற்கு அந்தப் பெண் வெட்கம் கொண்டு தனது கண்களையும் சிவந்த வாயையும் மூடிக் கொண்டு, ''அது குன்றிமணி அன்று; வெண்மை நிறமுடய முத்து'' என்றாள்.

அப்பெண்ணின் வாய்ச் சிவப்பாலும் கண் மையின் கருப்பாலும் வெண்மையான முத்து குன்றிமணி போலத் தோன்றியது என்பது குறிப்பு. அவள் வாயையும் கண்ணையும் மூடியதும், முத்து வெண்மையாக விளங்கியது. (அரில் - குற்றம்)

இன்னும் இது போன்ற நயமான அநேக சிருங்கார ரசப் பாடல்கள் நிறைந் துள்ள இலக்கியப்
பெட்டகம் விவேக சிந்தாமணி.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.

Tuesday, June 21, 2005

நினைவுத் தடங்கள் - 33

எங்கள் பெரியப்பா முரடர். மனைவி, பிள்ளை யாரும் எதிரில் நின்று பேச முடியாது. வாயில் வண்டைச்சொல்தான் திட்டுவதற்கு வரும். ஆட்களையெல்லாம் வசவுகளால் தான் அழைப்பார். அவர் முசுடு என்பதால் ஊரிலும் யாரும் கிட்டே நெருங்குவதில்லை. பேசவே முடியாது என்றால் அவருக்குப் புத்திமதி சொல்ல முடியுமா? அவரைவிட மூத்த, அடுத்த தெரு சொந்தம் ஒருவர்தான் - அவரை ஒருமையிலும், 'டா' போட்டும் பேசக்கூடியவர். மனைவி மக்களுக்கு முக்கியத் தேவை என்றால் கூட அவர்தான் வந்து சொல்ல வேண்டும். ஊர்ப்பரம்பரை பெரிய மனிதர் என்ற கர்வம் நிறைய. அதனால் தெருவில் நடக்கும்போது எங்கோ வெகு தூரத்தில் பார்வை- அரிமா பார்வை போல - பார்த்தபடி
நடப்பாரே தவிர, பக்க வாட்டில் யாரையும், யார் வீட்டையும் பார்க்க மாட்டார். யாரிடமும் வழியில் நின்று பேசமாட்டார். யார் வீட்டுத் திண்ணையிலும் உட்கார மாட்டார். ஊர் `உஷார் கமிட்டி'த் தலைவர் என்பதால் பஞ்சாயத்து எதுவும் அவரிடம் தான் வர வேண்டும்.

எங்கள் வீட்டெதிரில் ஒரு கல் -விளக்குத் தூண் வெகு நாட்கள் நின்றது இப்போதும் நினைவில் நிற்கிறது. அதற்குக் காரணம் அந்தத் தூணின் முக்கியத்துவம் தான். ஊரில் ஏதும் திருட்டு நடந்து ஆள் பிடி பட்டால் அந்தத் தூணில் கொண்டு வந்து கட்டி விடுவார்கள். மந்தைப் புளிய மரத்திலிருந்து ஒருபாகம் அளவிலான மிலார் கள் பத்துக்குக் குறையாமல் வெட்டிக் கொண்டு வந்து, திருட்டுக்கொடுத்தவர் எங்கள் குறட்டில் வைத்து விடுவார். பெரியப்பா உள்ளே இருப்பார். தெரு நிறைய, வேடிக்கை பார்க்க ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் ஒரு பெரிய பயங்கரக் காட்சியைப் பார்க்கப்போகிற படபடப்பில் இடித்துக் கொண்டு நிற்கும். பெரியப்பா வெளியே வருவதை கண்கொட்டாது அத்தனை பேரும் எதிர் பார்த்திருப்பார்கள். உள்ளே தகவல் போய் வெகு நேரம் ஜனங்களைக் காக்க வைத்த பின்னரே, இடுப்பு நாலுமுழ வேட்டியை நெஞ்சுவரை உயர்த்திக் கட்டியபடி தொண்டையைக் காறியபடி வருவார். அவருக்கு ஆஸ்த்துமா தொந்தரவு உண்டு. அதனால் எப்போதும் தொண்டையைக் காறியபடியே இருப்பார். கச்சலான உடம்பு. அதில் பலம் ஏதும் இருக்குமா என்று சந்தேகம் ஏற்படும்.

அவர் தலை தெரிந்ததும் 'கப்'பென்று கூட்டம் சப்தமெழுப்பாமல் அடங்கி புலிக் கூண்டிலிருந்து வரும் புலியைப் பார்க்கிற அச்சத்தோடு பார்க்கும். பெரியப்பா தலை உயர்த்தி கல் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனைத் தீர்க்கமாகப் பார்ப்பார். பூனை எலியைப் பார்க்கிற மாதிரி இருக்கும். அதிலேயே அவனுக்குப் பாதி உயிர் போய்விடும்.

'ஹ¥ம்......' என்றொரு ஹ¥ங்காரம் எழும். ''என்ன ?'' என்பது போல புகார் சொன்னவனைப் பார்ப்பார். அவன் தன் களத்தில் அல்லது வீட்டுக்குள் ராத்திரி நெல் திருடியதைச் சொல்லவும், நிமிர்ந்து குற்றம் சாட்டப்பட்டவனைப் பார்த்து, ''டலே! நெஜமா?" என்று கர்ஜிப்பார். எவ்வாளவு நெஞ்சழுத்தும் உடையவனாலும் அவர் முன்னே பொய் சொல்ல முடியாது. நடுங்கியபடி, 'சாமி! இனிமே செய்யமாட்டேன் சாமி!'' என்று பயத்தோடு அலறுவான்.

அவ்வளதுதான்! 'வீச்'சென்று பாய்ந்து அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் புளிய மிலாரை அள்ளிக் கொண்டு அவனெதிரில் போய், கண் மூக்குப் பாராமல் சரமாரியாக விளாசுவார். ஏதோ சாமியாடியின் ஆவேசம் போல வெறித் தாக்குதலாக அது இருக்கும். பரிதாபத்துக்குரிய அந்த மனிதனில் ஓலம் தெருவே எதிரொலிக்கும். குழந்தைகள் அக் குரூரத்தைப் பார்த்து வாய் விட்டு அழாமல் தேம்புவார்கள். அதிகபேருக்கு
அது பார்த்துப் பார்த்து மரத்துப் போன காட்சி. சிலை போல- பாரதி எழுதியபடி 'நெட்டை மரங்களாய்' நின்று பார்த்திருப்பார்கள். கை ஓய்கிறவரை, அல்லது மிலாறுகள் தீர்கிர வரை இந்தச் சித்திரவதை நடக்கும். யாரும் தட்டிக் கேட்பதில்லை; கேட்கவும் முடியாது. அவர்தான் நீதிபதி. அவர் தருவதுதான் தண்டனை. கிரேக்க அரசர்கள் அடிமைகளைப் புலியுடன் மோதவிட்டு அந்தக் குரூரத்தை ரசித்த அந்தக் காலத்து மாக்களைப் போலத்தான் இந்த இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்திலும் மக்கள் மாக்களாக இருந்தார்கள். போலீஸ் எல்லாம்
இப்படிபட்ட கிராமங்களில் நுழைந்து தலையிடுவதில்லை. இது போல ஊர்ப் பெரிய மனிதர் வைத்ததுதான் சட்டம்.

இதனால் எங்கள் பெரியப்பாவின் வம்சத்தையே ஊர் மறைவாகத் தங்களுக்குள்ளே கரித்துக் கொட்டும். அதற்காகப் பெரியப்பா ஒரு நாளும் கவலைப் பட்டதில்லை. ஆனால் அவரது வாரிசுகள் பின்னாளில் கவலைப்பட நேர்ந்ததுதான் காலத்தின் கட்டாயம். ஆனல் அந்தக் கொடூரத்துக்குச் சாட்சியாய் நின்ற கல்க் கம்பம் இன்றும் மக்கள் நாவில் புழக்கத்தில் இருப்பது தான் வரலாற்றின் நிதர்சனம். பஞ்சாயத்து, போலீஸ், நீதிமன்றம் என்று வந்துவிட்ட இந்த நாளிலும், வழக்கு என்று வந்து வாய்ப் பேச்சில் ஒருவன் கட்டடையாத தருணங்களில் அவர்களை அற்¢யாமலே, மனதில் பதிந்து விட்ட வாசகமாய், '' எலேய்! எதாவது மறுத்துப் பேசுனே- நடுத்தெருப்பிள்ளை வீட்டுக் கல்த்தூணுலே
புடிச்சுக் கட்டிடுவேன்!" என்றுதான் வரும். (எங்கள் தெருதான் நடுத்தெரு; நடுத்தெருப்பிள்ளை வீடு என்பது எங்கள் வீட்டைக் குறிக்கிறது) ஆனால் சொன்னபடிக் கட்டிவைக்க அந்தத் தூண் தான் இப்போது அங்கு இல்லை!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Thursday, June 16, 2005

உவமைகள் வர்ணனைகள்- 41

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 41

ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து:

1. வானத்தில் இரவின் கதவுகள் திறக்க ஆரம்பித்து உள்ளிருக்கும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல காட்சிக்கு வரலாயின. பிறகு நல்ல இருட்டில் விண்ணிலும், மண்ணிலும் விளக்குக் கற்றைகள் பளிச்சென்று பூத்தெழுந்தன.

- 'அரிசி விலையில் திருமணங்கள்' கதையில்.

2. வருஷங்கள் செல்கின்றன என்றால் இன்பங்கள் செல்கின்றன என்றுதானே அர்த்தமாகிறது? அன்பானவர்கள் மறைகிறார்கள். அழகானவை சிதைகின்றன. கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு துன்பத்தை, ஒவ்வொரு நிராசையை, ஒவ்வொரு நாசத்தை மனதில் பொருத்திவிட்டுச் செல்கிறது. வருஷங்களூடே நினைவுச்சுமை அதிகரிக்கிறது. நினைவு எல்லாம் கானல் நீர். ஆறுதலுக்காக அதை அணுகினால், துன்பமாகக் காட்சி அளிக்கிறது. போய்விட்ட இன்பங்களால் வறண்ட உள்ளத்தை வாட்டுவதுதான் நினைவு.

- 'ஒன்றே வாழ்வு'.

3. அப் பெண் மாநிறம். விசிறி போன்ற விரிந்த ரப்பை மயிரின் பின்னால் இரு கருவிழிகள். எண்ணெய் அறியாத வறண்ட கூந்தல்.அதிக உயரமோ சதையோ இல்லாத மென்மையான இளம் தேகம். வயதிற்குரிய ஒரு இயற்கையான பொலிவு. ஆனால் நீளமும், அகலமும் அற்ற அச் சிறு வடிவம் ஆழத்தினால் ஆக்கப்பட்டது போன்ற பிரமையை உண்டாக்கியது.

- 'பாசமும் பயனும்'.

4. தன்னைச் சுற்றித் தெறித்த முரணின் பொறிகளிலிருந்து நீலாவுக்கு, இந்த நெருப்பு எப்படி இத்தனை வருஷங்களான பின்னும் ஆறவில்லை என்று வியப்பாக இருந்தது. கிழவர்களின் அமைதியான பரஸ்பர அலட்சியத்தைப் பார்த்து, ஆழமான அன்பைப் போலவே ஆழமான வெறுப்பும் நிலையானதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.

- 'சந்திப்பு'.

5. ஒரு கணம் முகுந்தன் அவள் முகத்தை மனதில் பதித்துக் கொள்பவன் போல் மௌனமாய் உற்று நோக்கினான். பார்வையும் குரலும் பூக்களாய் அவன் மேல் உதிர்ந்தன.

- 'அடிக்கடி வருகிறான்'.

6. அவள் அழகியா இல்லையா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்த அழகு அது. ஒவ்வொருவரும் தம்தம் மனோபாவத்துக் கேற்ப அர்த்தமிட்டுக் கொள்ளத் தக்க பலமுகக் கவிதை போன்ற அழகு.

- 'நான்காம் ஆசிரமம்'.

7. காட்டராக்ட் கண்ணாடிக்குப் பின்னேயும் குளிர்ச்சி மாறாத பார்வை. சாப்பாட்டு நேரம் போக மற்ற சமயங்களில் பொய்ப் பற்களைக் கழற்றி வைத்து விட்டுப் பொக்கை வாயோடு சிரிக்கும் சிரிப்பு. இன்னும் அடர்த்தி குன்றாத நரை முடியில் சாம்பல் 'பிரமிட்'. மாநிற....... - வர்ணிப்பானேன்? இவற்றிலா மாமா அறியப்படுகிறார்? இவை மாமாவுடையவையாதலால் இவை அழகுடையவை; பொருடையவை.

- 'ரோஜா பதியன்'.

8. அன்பு மகா பயங்கரமான ஒரு நெருப்புக்குச்சி. அது இரண்டு ஆத்மாக்களைக் கொளுத்தி உருக்கி ஒன்றாக இணைத்து வார்த்து விடும்.

- 'அத்தை'.

9. வண்டி ஓட்டத்தினால் உள்ளே வீசிய காற்றையும் மீறி அவர் முகத்தில் வேர்வை மின்னியது. ஒவ்வொரு வேர்வைத் துளியும் 'பெண்ணின் தந்தை' என்று பறை சாற்றுவது போல இருந்தது.

- 'புவனாவும் வியாழக் கிரகமும்'.

10. ஈட்டிகளாய்ப் பார்வைகள் அவளைத் துளை செய்தன. பெண் பார்வைகள், ஆண் பார்வைகள்- அவளைப் பார்த்த யாவருமே, அவளது முகத்தைத்தான் பார்த்தார்கள் என்று சொல்லி விட முடியாது. கண்ணாலேயே கற்பழிக்கும் கிழங்கள்.

- 'பன்மை'.

- மேலும் வரும்.

- அடுத்து பாலகுமாரன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Monday, June 13, 2005

களஞ்சியம் - 19

எனது களஞ்சியத்திலிருந்து - 19

விவேகசிந்தாமணி விருந்து - 8

மயக்க அணி:

ஒரு பொருளை மற்றொரு பொருளாக எண்ணி மயங்கிச் செயலாற்றுவதை புனைந்து கூறுவது மயக்க அணியாகும். விவேகசிந்தாமணியில் மகிழ்ச்சியூட்டும் மயக்க அணியை உடைய பாடல்கள் சில உள்ளன.

ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் 'கெண்டைமீன்,கெண்டைமீன்' என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.

தண்டுலாவிய
.....தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை
.....முகத்தருகு ஏந்தினாள்;
'கெண்டை' 'கெண்டை'
.....எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள்
.....நின்று தயங்கினாள்.

மயக்க அணியை அற்புதமான பாடலால் புனைந்துரைக்கிறார் கவிஞர்.

இன்னொரு பாடலில் கற்பனை செய்யத் தெரியாத ஆறறிவில்லாத ஜீவன் ஒன்றின் மயக்கத்தை பார்க்கிறோம்.

ஒரு பெண் நாவல் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தாள். மலர்களிலுள்ள தேனையுண்ட கரிய வண்டுகள் மயங்கி வழியில் கிடந்தன. அவற்றைக் கண்ட மங்கை அவற்றை நாவற் பழங்கள் என்று நினைத்து ஒன்றைத் தன் பெரிய கையில் எடுத்துக் குனிந்து பார்த்தாள். அப்போது அந்த வண்டு அவளது அழகிய முகத்தை வானத்துச் சந்த்¢ரன் அருகில் வந்து விட்டது என்று எண்ணி விட்டது. தான் கிடந்த அவளது சிவந்த கையைத் தாமரைமலர் என்று மயங்கி, சந்திரன் வந்தால் தாமரை மலர் குவிந்து விடுமே எனப் பயந்து 'குப்'பென எழும்பிப் பறந்து விட்டது. அதைக் கண்ட மங்கை 'பறந்தது வண்டோ, பழமோ? என்ன இது இது புதுமையாய் இருக்கிறது!' என்று மயங்கினாளாம்.

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
.....தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
.....தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்
வான் உறு மதியம் வந்ததென்று எண்ணி
.....மலர்க் கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
.....புதுமையோ இதுவெனப் புகன்றாள்.

இன்னொருவித மயக்கத்தை வேறொரு பாடலில் காணலாம். தலைவன் ஒருவனின் கூற்றாக இப் பாடல் உள்ளது.

'வானத்தை முட்டும் உயரமான மேடை ஒன்றின்மீது என் தலைவி நின்று உலாவினாள்.அப்போது அவளது முகத்தை முழுமதி என்று நினைத்து நவக்கிரகங்களுள் ஒன்றான இராகு என்ற பாம்பு விழுங்குவதற்காக நெருங்கி வந்தது. அதைக் கண்டு பதறிய, பாகுபோன்ற இனிய மொழ்¢யுடைய என் காதலி பாதம் நோக நடக்க, அவளது சாயலைக் கொண்டு அழகிய தோகைமயில் எனப் பயந்து பின்வாங்கிவிட்டது' என்கிறான் தலவன்.

மாகமா மேடை மீதில்
.....மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்று எண்ணி
.....இராகு வந்து உற்ற போது
பாகுசேர் மொழியினாளும்
.....பதறியே பாதம் வாங்கத்
தோகை மாமயில் என்று எண்ணித்
.....தொடர்ந்து அரா மீண்டது அன்றே.

( மாகமா - வானத்தை அளாவும்; ஏகமா மதி - முழுமதி; அரா - அரவம், பாம்பு; அன்றே - அசை )

- இப்படி இன்னும் அழகழகான அணி நலன்கள் நிறைந்த பாடல்கள் விவேக சிந்தாமணியில் நிறைந்துள்ளன.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, June 08, 2005

உவமைகள் - வர்ணனைகள் - 40

நான் ரசித்த உவமைகள்- வருணனைகள் - 40

க.நா.சுப்ரமண்யம் படைப்புகளிலிருந்து:

1. ஒருதடவை பி.சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. சுந்தரம் பிள்ளையிடம் ஈடுபாடுள்ளவர் வையாபுரிப் பிள்ளை. அவர்தான் தமிழில் மறுமலர்ச்சிக்கு வித்தை ஊன்றியவர் என்கிற நினைப்பு உண்டு அவருக்கு. இலக்கியத் தரமே இல்லாத நூல் என்பது என் கட்சி. நாடகமாகவோ, கவிதையாகவோ, வெறும் கதை என்கிற அளவில்கூட வெற்றி பெறாத நூல். ஓடாத காளை மாட்டை வாலைக் கடித்து ஓட வைப்பது போலத் தமிழை ஓட வைக்கிறார் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை என்று நான் சொன்னபோது அவருக்குக் கோபமே வந்து விட்டது.

- 'வையாபுரிப் பிள்ளை - க.நா.சு பக்கம்'.

2. மனிதச் சிந்தனைகள் எல்லாமே ஓரளவுக்கு நன்கு சீல் வைக்கப் பட்ட இருட்டுக் கூடங்களாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் தெரிந்து கொள்வது நல்லதுதானே?

- 'கிருஷ்ணன் நம்பி - க.நா.சு பக்கம்'.

3. இப்போது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பொறையார் திராட்¨க்ஷயின் புளிப்பு மாறிவிட்டது. திரா¨க்ஷயின் தலைமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து புளிப்பை முழுவதும் இனிப்பாக மாற்றிவிட்டன- மனிதர்களின் மிகவும் கசப்பான நினைவுகள் கூட இனியவையாக மாறிவிடுவது மாதிரி.

- 'ஏ.கே.செட்டியார் - க.நா.சு பக்கம்'.

4. இலக்கியத் தரத்தை எட்டுவதற்கு ஏதோ ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. அதேபோல் சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. ராஜாஜிக்குப் பல சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கு வேண்டிய சக்தி இருந்தது என்பதுதான் விஷயம். இலக்கியத் தரத்துக்கு வேறு ஆளைத் தேடிக் கொள்ளலாம்.

- 'ராஜாஜியும் நானும் - க.நா.சு பக்கம்'.

5. மனித குலத்துக்கெல்லாம் பின்னாலுள்ள ஆத்மஞான மானஸ்ரோவரை எட்டி அணுகக் கற்றுக் கொண்ட கவிக்குக் கவிதை அற்புதமாகத்தான் அமையும் - அது டாண்டேயானால் என்ன, ஷேக்ஸ்பியரானால் என்ன?

- 'விமர்சனக்கலை'.

6 . மேட்டுத்தெருப் பெண்களைப் பெண்கள் என்று சொல்வது பொருந்தாது. அவர்களைப் பேய்கள் என்று சொல்வதும் ..... பேய்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடலாம்.

- 'பொய்த்தேவு' நாவலில்.

7. குறட்டுக்குக் கீழே வாசல் 'கேட்'டுக்குக் காவல் போல இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. எதையோ எதிர் பார்த்து வேண்டுபவை போல, வானத்தை நோக்கித் தூக்கும் பூமாதேவியின் கரங்கள் போல அவை ஆடாமல் அசையாமல் நின்றன.

- 'சர்மாவின் உயில்' நாவலில்.

8. அவளுடைய சிந்தனைத் தேருக்கு எண்ணற்ற அச்சுகள் இருந்தன. அவள் சிந்தனை களை அலைமோதும் கடலுக்கு ஒப்பிடலாம். அந்தக் கடலில் எண்ணற்ற சிற்றாறுகள் வந்து கலந்தன.

- 'சர்மாவின் உயில்'.

9. புயல், பெரும் புயல் அடித்தால் மரம் சாய்ந்துவிடும். நாகரீகம் என்ற புயல் அடித்துப் பல குடும்பங்களை வேரோடு கல்லிக்கொண்டு போய் நகரத்திலே சாய்த்து விட்டது.

- 'சர்மாவின் உயில்'.

10. எல்லாம் மாற வேண்டியதுதானே? காலம் என்கிற ஆற்றிலே விழுந்து உருமாறிப் போவதற்குத்தனே மனிதன் பிறந்திருக்கிறான்?

- 'சர்மாவின் உயில்'.

- மேலும் வரும்.

- அடுத்து ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Tuesday, May 31, 2005

நினைவுத் தடங்கள் - 32

எனது குண இயல்புகளையும், இலக்கிய ஈடுபாட்டையும், நிர்வாகத்திறன்களையும் உருவாக்கியதில் எங்கள் ஆசான் 'ஐயா'வின் பங்குக்கு ஈடானது என் தந்தையாரின் பங்கும். அவருடைய கல்வி எங்களை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்தது. அவர்கள் அந்தக் காலத்து (1914) மெட்ரிகுலேஷன். அவருக்கு முன்னால் எங்கள் வம்சாவளியில், அதிகம் படித்தவர்கள் யாரும் இல்லை. எங்கள் வட்டாரத்தில் கூட இல்லை. அதனால் அவருக்கு நிறைய மக்களிடம் மரியாதை இருந்தது. அந்த வட்டாரத்தில் யாருக்காவது தந்தி வந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தாலும் அவற்றைத் தமிழில் படித்துச் சொல்ல எங்கள் தந்தையைத்தான் தேடி வந்தார்கள். அதோடு எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் மட்டுமே மணியடிக்கும் சுவர்க் கடிகாரம் இருந்தது. 1932ல் எங்கள் தந்தையாரால் வாங்கப்பட்ட அந்தக் கடிகாரம் அவர் காலமான பிறகும்கூட 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தது. யார் வீட்டிலாவது பிரசவம் என்றால் குழந்தை பிறந்த நேரம் அறிய எங்கள் வீட்டுக்குத்தான் மணி கேட்டு ஆள் வரும். மணியையும் பார்த்து எங்கள் அப்பாதான் சொல்ல வேண்டும். அவர்கள் ஊரில் இல்லாத போது சொல்ல வேண்டும் என்பதற்காக அப்பா எங்கள் வீட்டு மூத்த பிள்ளைகளுக்கும், அண்டை அயல் பிள்ளைகளுக்கும் மணி பார்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்திருந்தார்கள். இதிலொரு வேடிக்கை என்னவென்றால் மணி பார்க்க வருபவர்கள் பிள்ளை பிறந்ததும் அவர்கள் வீட்டிலிருந்து வந்து பார்ப்பதற்குள் ஆகியுள்ள நேரமும் கணக்கில் சேர்ந்துவிடும். அதன் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகங்கள் எந்த அளவுக்கு முழுமையான பலன்களைச் சொன்னதோ தெரியவில்லை.

படிக்கும் காலத்திலேயே தந்தையார் சுவாமி வேதாச்சலம் - மறைமலை அடிகள், திரு.வி.க, கடலூர் ஞானியாரடிகள் ஆகியவர்களின் தமிழுணர்வால் ஈர்க்கப்பட்டு தமிழு ணர்வும் சைவமத ஈடுபாடும் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் சைவ சித்தாந்த நூல்களையும் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றையும் தானே முயன்று படித்துத் தேர்ந்தார்கள். அதன் காரணமாய் சிவதீட்சையும் பெற்று தினமும் சிவபூஜை செய்த பின்பே சாப்பிடும் வழக்கத்தையும் இறுதிவரை கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இளைஞராக இருந்தபோது செல்வாக்காக இருந்த ஜஸ்டிஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு தனது திருமணத்தை அய்யர் இல்லாத தமிழ்த் திருமணமாக - ஓதுவாரைக் கொண்டு தமிழில் மந்திரங்களைச் சொல்லச்செய்து, பலரது எதிர்ப்பையும் மீறி செய்து கொண்டார்கள். இருபதுகளில் அது பெரிய புரட்சியாகக் கருதப் பட்டிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஓராண்டில் தலைப்பிரசவத்தில் மனைவி இறந்துவிட அய்யர் வைக்காமல் திருமணம் செய்ததால்தான் அப்படி நேர்ந்தது என்று எல்லோரும் பேசினார்கள். அதனால் அடுத்த
திருமணத்துக்கு அய்யர் வைத்தால்தான் பெண் தரமுடியும் என்று மறுப்புக் கிளம்பவே எங்கள் தந்தையார் தன் பகுத்தறிவுக் கொள்கையைப் பலி கொடுக்க வேண்டியதாயிற்று. அதன்படி அய்யர் வைத்த திருமணமாய் எங்கள் தாயாரை மணந்தார்கள்.

தான் படித்திருந்ததால், தன் பிள்ளைகளான எங்கள் ஐவரையும் உயர்படிப்பு படிக்க வைத்ததும் உயர் அரசுப்பணிகளில் ஈடுபடுத்தியதும் அந்தக் காலகட்டத்தில் புதுமையாக வியந்து பேசப்பட்டது. உண்மையில் அந்த வட்டாரத்தில் நாங்கள்தான் முதல் பட்ட தாரிக் குடும்பமும் ஆகும். சின்ன வயதிலிருந்தே எங்களுக்குப் புராணக் கதைகளைச் சொல்லி இறையுணர்வும் அறவுணர்வும் கொண்டவர்களாக வளர்த்தார்கள். அவர்கள் காலப்பிரக்ஞை மிக்கவர்கள். எதையும் நேரம் தவறாது செய்ததுடன் எங்களையும் அப்படியே பழக்கியதால் எங்கள் பணியில் சிறப்பாகப் பெயர் பெற அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் நாணயம் தவறாத வாழ்க்கை அவர்களுடையது. எங்களையும் அந்த நெறியுடனே வளர்த்ததால் நாங்கள் எங்கள் பணிக்காலத்தில், கையூட்டுக்கு ஆசைப் படாத நாணயம் மிக்கவர்களாக வெற்றிகரமாக ஓய்வுபெற முடிந்தது. அதனால் இன்றும் ஊருக்குச் சென்றால் தந்தையாருக்குக் கிடைத்த அதே மரியாதை மக்களிடம் எங்களுக்கும் கிடைக்கிறது.

எங்களைப் படிக்க வைத்தது மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் மற்ற பிள்ளை களையும் உயர் படிப்புக்கு அனுப்பத் தூண்டினார்கள். இருந்தும் பொருள் வசதியில்லா ததால் யாரும் அப்போது எங்களைப் பின் பற்ற முடியவில்லை. அப்போது இப்போது போல ஊருக்கு ஊர் அஞ்சல் ந்¢லையம் இல்லை. எங்கள் ஊருக்கு, பத்து கல் தொலைவில் உள்ள திருமுட்டம் என்கிற ஊரிலிருந்துதான் வாரம் இருமுறை அஞ்சல்கள் வரும். எங்கள் அப்பா தினமணியும், ஜஸ்டிஸ் கட்சிப் பத்திரிகை ஒன்றும் சந்தாக் கட்டி வரவழைத்தார்கள். மூன்றுநாள் பேப்பர் சேந்து வரும். அண்டை அயலில் உள்ளவர்களையும் வழியோடு போகிறவர்களையும் கூட்டிவைத்துக் கொண்டு அப்பா தினமணியைப் படித்துச் சொல்வார்கள். அப்போது இரண்டாம் உலகப்போர் (1936-45)நடந்து கொண்டிருந்த நேரம். போர்ச் செய்திக¨ளையும் நாட்டுநடப்புகளையும் ஒரு கடமை உணர்வுடன் அப்பா படித்துச் சொல்வதை எங்கள் தெரு நடையில் அமர்ந்து ஒர் கூட்டம் ஆர்வமாய்க் கேட்கும்.

நிலம் நிறைய இருந்தும் அதைப் பின்னாளில் பார்த்துக் கொள்ள யாருமில்லாத படி பிள்ளைகள் எல்லோரையும் படித்து உத்தியோகத்துக்கு அனுப்பிவிட்டால் நிலத்தை யார் பார்ப்பார்கள் என்று சிலர் கேட்பார்கள். அதற்கு அப்பா ருஷ்யாவிலும் சீனாவிலும் நடைபெற்று வந்த பொதுவுடைமைப் புரட்சிகளை எடுத்துச் சொல்லி, 'இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் இந்தியாவிலும் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்து விடும். அப்போது நிலம் உழுகிறவனுக்கே சொந்தமாகிவிடும். அப்போது என் பிள்ளைகள் ஏரோட்டவேண்டி வரும். அதனால்தான் படிக்க வைக்கிறேன். எல்லோரும் உங்கள் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டியது அவசியம்' என்று சொல்வார்கள். இப்படி எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் ஊருக்கே வழிகாட்டியாக இருந்தார்கள்.

அப்போதெல்லாம் கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்பட்டிருக்கவில்லை. 'உஷார் கமிட்டி' என்ற ஒரு அமைப்பு இருந்தது. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர்தான் அதன் தலைவராக இருப்பார். வழக்கு, நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் அவரது தீர்ப்புதான் முடிவு. அப்போது எங்கள் பெரியப்பாதான் தலைவர். அவர் எங்கள் அப்பாவைப்போல் மக்களிடையில் மதிப்புக்குரியவராக இருக்கவில்லை. ஏனெனில் அவர் எல்லாவகையிலும் எங்கள் அப்பாவிடமிருந்து மாறுபட்டவர்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, May 25, 2005

உவமைகள்-வர்ணனைகள் 39

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 39

சி.சு.செல்லப்பாவின் படைப்புக்களிலிருந்து:

1. ஊரிலேயே பெரிய மனிதரான அவருக்கு பொதுவாழ்வு கை நகத்தோடே பிறந்த மாதிரி. வளர்கிற நகத்தைத்தான் வெட்டுகிறோமே தவிர அடி நகத்தை பெயர்த்து எடுக்கிறதில்லை. பொதுவாழ்வை அவர் அறுத்துக் கொள்ள விரும்பவில்லை. வளர்ந்த நகம் மாதிரி கட்சி உறவைத்தான் துண்டித்துக் கொண்டார்.

- 'எதிர்ப்பு' கதையில்.

2. சாதாரணமாக என் தூக்கத்தை தினமும் காலையில் கலைப்பது அல்லது பள்ளியெழுச்சி பாடி எழுப்புவது - ரோடு மெயின் குழாய் லைனிலிருந்து ஜலத்தை வீட்டுக்கு உறிஞ்சி இழுத்துக் கொணரும், கீழே உள்ள அந்த 'வாஷர்' முழுக்கத் தேய்ந்த பம்பின் கதறல்தான். ஆனால் அன்று அந்த துரிதகால தாள வாத்ய ஒலிக்கு வெகு முன்னதாகவே கிளம்பின ஒரு இனிமையான குரல் விழிக்கச் செய்தது.

- 'பக்தி'.

3. அத்தான் ஒரு பேச்சுக் களஞ்சியம். அவர் ஒருத்தர் இருக்கிற இடத்தில் ஏற்படும் கலகலப்புக்கு, ஆடிக்காற்றிலே அலைபடும் ஆயிரம் தென்னைகள் உள்ள ஒரு தோப்பில் உண்டாகிற சலசலப்புக்கு ஈடாகாது.கொட்டி அளக்கிறது என்பது அவருக்குப் பொருந்தும். எங்கள் கேள்விக்கு அப்படிப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.

- 'மச்சு வீடு'.

4. "நான் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண் நீலா தான் அது. நாம ஊரிலே இல்லாதபோது அவளுக்கென்று வந்திருக்கிறது. பாவம், பல்லாங்குழி பல்லாங்குழியாக உடல் பூராவும் அம்மைத்தழும்பு".

- 'அழகு மயக்கம்'.

5. சிறை ஒரு கோவில் மாதிரி. கடவுள் கோவிலில் இருப்பதாகக் கருதி கும்பிடுபோடப் போகிற பக்தனுக்குத்தான் கோவில். தனக்குள்ளே தெய்வத்தை வைத்துக்கொண்டு இருப்பவனுக்கு, தூணிலும் துரும்பிலும் தெய்வத்தைக் காண்பவனுக்கு கோவில் ஒரு அர்த்தமற்ற சின்னம். அதே மாதிரிதான் சிறையும். தேசப்பணிப் பாதையில் சிறைவாசம்தான் மகத்தான சாதனையாகும் என்று நினைப்பவனுக்குத்தான் ஜெயில்.
கண்களைச் சுழற்றி அகல விரித்து மனித ஜாதியை ஊன்றிப் பார்த்து தன் முதுகைக் கொடுத்து அதன் கால்களை உயர்த்த முயற்சிப்பவனுக்கு சிறைவாசம் அர்த்தமற்றது.

- 'மருதநாயகம்'.

6. லௌகிக உலகத்தில் துன்பமும் இன்பமும் மனிதனில் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்றி ஓய்ந்து போய், ஒடிந்து விழும் மனதுக்கு கோவிலும் கடவுளும், ஆறுதலும் நம்பிக்கையும் தரும் தூரத்து கலங்கரை விளக்கமாக இருப்பது போல் தான் அசதி தோன்றிவிட்ட உடலுக்கு ஆஸ்பத்திரியும் டாக்டரும்.

- 'கிழவி'.

7. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஸ்டெஷனை விட்டுப் புறப்பட்ட ரயில் இருட்டில் வகிடு எடுத்துக்கொண்டு சென்றது. அதே சமயம் இருள் நுரையை அலையடித்து ஒதுக்கிக் கொண்டு நிலவொளி ஆகாசத்தில் பரவ ஆரம்பித்தது. என் மனதிலும் பழைய நினைவுகள் பரவலாயின.

- 'பாத்யதை'.

8. வெகு காலம் ஆகிவிட்டது நான் கதை எழுதி. மூணு நாலு வருஷங்களாய் சூன்ய ஆண்டுகள். அதற்கு முன்னே மட்டும் என்ன? கஜகர்ப்பத்தில் எப்போதாவது ஒன்று பிறக்கும்.

- 'அப்பாவின் ராட்டை'.

9. ஒரு நாள் அஸ்தமன சமயம். நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள் அமிழ்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கப்பலைப் போல் சூரியன் மேகு மலைவாய்க்குள் போய்க்கொண்டிருந்தான். அதே சமயம், எதிரியின் கப்பல் மறையும் தருணம் பார்த்து, மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும், கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் நீர்மூழ்கிக் கப்பலைப் போன்று பூர்ணசந்திரன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருந்தான்.

- 'பந்தயம்'.

10.குலுக்கி விட்ட மரக்காலுக்குள் எல்லாம் படிந்து கொள்கிற மாதிரி இந்த மனசுக்குள்ளே எல்லாம் படிந்துதான் போகிறது.

- 'ஜீவனாம்சம்' நாவலில்.

- மேலும் சொல்வேன்.

- அடுத்து க.நா.சு வின் படைப்புக்களிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Thursday, April 14, 2005

வருணனைகள் - உவமைகள் - 38

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 38:

இராசேந்திரசோழன்(அஸ்வகோஷ்) படைப்புகளிலிருந்து:

1. பொழுது போகிறது. இருள் வருகிறது. தெருவிளக்கு வெளிச்சம் ஒருக்களித்த கதவு வழியாக ஏதோ துயரச் செய்தியைத் தாங்கி வந்தது மாதிரி செல்வதா வேண்டாமா என்பதுபோல எட்டிப்பார்க்கிறது.

- 'உளைச்சல்' கதையில்.

2. சணல் நெசவுக்குள் அடங்காத பாயின் கோரைகள் துஷ்டப் பிள்ளைகள் போல வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன.

- 'பகல் தூக்கம்'.

3. இன்ஸ்பெக்டர் இன்னும் அங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தார். வீலில் சிக்குகிற அளவுக்கு நீளமாக ரெட்டைக்கரைத் துண்டு போட்ட நகரக் கவுன்சிலர் ஒருவர் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், சைக்கிளில் போனவாறே "நமஸ்காரங்க" என்று
கையை உயர்த்திக் காட்டியபடி மிதப்போடு சென்றார் - விளக்கில்லாமல்தான்.....

- 'பக்க வாத்தியம்'.

4. வருத்தத்துடன் வழி தெரியாமல் தத்தளித்தான். பட்டணத்தில் ஜனசந்தடி அதிகம் என்று சொல்வார்கள்..... இந்தத் தெருவைப் பார்த்தால் திருடன் தெருவாட்டம் தெரிகிறதே......! இந்தத் தெருவில் மந்திரிகள் அல்லவா குடி இருப்பதாகச் சொன்னார்கள்......!

- 'மதறாசும்....மன்னார்சாமியும்.....'.

5. யாரோ ஏழெட்டுப் பேர் குந்தியிருக்கிறார்கள். எல்லாம் துண்டைக் கோவணமாகக் கட்டி, பெரிய சோமனை தோளில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கத்திப் ·பேஷன் இதுதான். பார்த்தீங்களா ஆட்களை. எப்படியிருக்கிறார்கள்....கரடு பாய்ந்த முகமும் மீசையும்....கண்களில் ஏதாவது சுத்தமிருக்கிறதா...! கொடூரமாய் ரத்தம் தெறிக்க.....எல்லாம் அவர்கள்தான். பக்கத்தில் ஒருத்தன் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, காடா பனியன் போட்டுக் கொண்டு சொட்டை விழுந்த நரைத்த தலையுடன் மெல்லீசாய் வீங்கி மாதிரி. அவன்தான் ஊருக்குக் கணக்கப்பிள்ளை. விஷமம் ஜாஸ்தி. எப்படியிருக்கிறான் பாருங்களேன், யாரை முழுங்கலாம் என்று.

- 'கொஞ்சம் இருட்டுக்குள் வந்து பாருங்கள்'.

6. இளவயசுக்காரி. மாஞ்செவுலு. கொசகொசவென்று மலிவான விலையில் உடம்பைச் சுற்றிய நைலக்ஸ் புடவை. வாயில் ரவிக்கை. ஆ·ப்வாயில். கைக்கு நாலு கண்ணாடி வளையல்கள். சின்ன நெற்றியில் காபி கலர் குங்குமப் பொட்டு. எதிலும் திருப்தி கொள்ளாத கொஞ்சம்
அலைச்சலான கரிய சிறுத்த கண்கள். புருவ மேட்டுக்குக் கீழே எப்போதும் எதையோ விழுங்கி விடுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும். மனசிலிருப்பதே குறியாய் சில சமயம் செய்கிற காரியமே மறந்துபோய் அதுபாட்டுக்கு எங்காவது லயிக்கும்.
- 'கைக்கிளை'.

7. பர்மாக்கார வீட்டம்மா வயது ஐம்பதைத் தாண்டியவள், ஒன்பது பிள்ளைகள் பெற்றவள் என்றாலும் உறுதி குலையாத கட்டை குட்டையான கனத்த சரீரம். அதற்கேற்ற நல்ல சாரீரமும். வாயைத் திறந்தாளானால் தெருக் கோடிவரை கேட்கும். எங்கே எந்த இடத்தில் சண்டை நடந்தாலும் பாய் வீட்டம்மா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாளா இல்லையா என்பதை காத தூரத்தில் இருந்தாலும் குரலை வைத்தே
சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு வளமான குரல்.

- 'விதிகள்!......விதிகள்!'.

8. கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இந்த உலகத்தில்வாழ முடியாது என்பது வாஸ்தவந்தான். ஆனால் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் ஒரு அந்தஸ்து வசதி வேண்டியிருக்கிறதே. ஆனால் அந்த அந்தஸ்து தெரியாமல் கடன் கொடுத்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்.

- 'கசிவு'.

9. பூவரச மரத்தின்கீழே இலைகள் பழுத்து உதிர்ந்து கிடந்தன. பசங்கள் பீப்பி செய்து ஊதுவது அனாதைக் குழந்தைகளின் கேவலைப் போலக் கேட்டது.

- 'தற்செயல்'.

10.என்னைப் பொறுத்தவரைக்கும் படைப்பு என்பது நன்றாகக் காய்ந்து நெறுநெறுக்கும் சுள்ளிகளையும் சருகுகளையும் போட்டுக் கொளுத்தினால் குப்பென்று தீப்பிடித்து சடசடத்து எரியுமே,திகுதிகுவென எரியும் தீயில் கொதிப்பேறிய திரவம் பாத்திரத்தைக் கடந்து பொங்கி வெளிவந்து பிரவாகமெடுத்து வழியுமே அந்த மாதிரி. அந்த மாதிரி மனநிலையில்தான் எனது படைப்புகள் பிரசவம் கொண்டிருக்கின்றன.

- 'இராசேந்திரசோழன் கதைகள்' பின்னுரையில்.

- மேலும் சொல்வேன்.

- அடுத்து சி.சு.செல்லப்பாவின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Wednesday, March 30, 2005

களஞ்சியம் - 18

எனது களஞ்சியத்திலிருந்து - 18

விவேகசிந்தாமணி விருந்து - 7

புரட்சிக் கவிஞர் போற்றிய பாடல்

விவேகசிந்தாமணியின் பாடல்களில் அதிகமும் பட்டியலிடுவதாகத் தோன்றுபவை. பயனற்ற ஏழு, பகைக்கக் கூடாத பன்னிருவர், விரைவில் அழிந்து போகக் கூடியவை, மற்றவர்க்குச் சொல்லத்தகாதவை, பெண் கொடுக்கத் தக்கவர், பெண் கொடுக்கத் தகாதவர் என்று நீதிகளைப் பட்டியல் இட்டே மனதில் பதியும்படி சொல்கிற பாடல்களே அதிகம். நீதியை மட்டுமல்ல சில நினைவூட்டல்களையும் பட்டியல்
இடும் பாடலும் உண்டு.

அடிக்கடி பயணம் செய்பவர் பயணத்திற்கான பொருள்களை, கடைசி நேரத்தில் தேடும் சிரமத்தைத் தவிர்க்க பட்டியல் தயாரித்து வைப்பார்கள் அல்லவா? அது போன்றவொரு பட்டியலை ஒரு பாடலில் பார்க்கலாம். இது பழைய காலத்தில், இன்று போல போக்குவரத்து வசதியில்லாமல் கூண்டு வண்டி கட்டிக் கொண்டு நெடும்பயணம் செய்கையில் வழியில் சமைத்துச் சாப்பிட அதற்கான பொருள்களுடன் செல்பவர்க்கான நினைவுப் பட்டியலாக உள்ளது.

'தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு
தாளிதப் பொருள்கள் பாத்திரங்கள்
தாம்பு நீர்தேற்றும் ஊன்றுகோல் ஆடை
சக்கிமுக்கியுடன் கைவிளக்கு
கண்டகம் முகுரம் பூசை வஸ்துக்கள்
கழல் குடை அடிமை சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் அடைக்காய்ப் பை
கரண்டகம் கண்டம் நல் உப்பில்
துண்டம் ஊறிய காய் கரண்டி நல்லெண்ணெய்
துட்டுடன் பூட்டு கைக்கத்தி
சொல்லிய இவைகள் குறைவரத் திருத்தித்
தொகுத்து வேற்று ஊர் செலும் மனிதன்
பெண்டுகள் துணையோடு எய்தும் வாகனனாய்ப்
பெருநிலை நீர்நிழல் விறகு
பின்னும் வேண்டுவ சேர் இடம் சமைத்துண்டு
புறப்படல் யாத்திரைக்கு அழகே.

(தண்டுலம் -அரிசி; நீர் தேற்றும் ஊன்றுகோல் - நீரின் ஆழத்தை அளவிடும் அளவுகோல்; கண்டகம் -அரிவாள்; முகுரம் - கண்ணாடி; கழல் - செருப்பு; அடைக்காய்ப் பை - வெற்றிலைப் பாக்குப் பை; கரண்டகம் - சுண்ணாம்புக் கரண்டகம்.)

'அயல் ஊருக்குப் பயணம் போகும் ஒருவன், அரிசி, மிளகுத் தூள், புளி, உப்பு, தாள்¢த்தற்குரியவை, பாத்திரங்கள், கயிறு, நீரின் ஆழத்தைக் காட்டும் ஊன்றுகோல், ஆடைகள், தீ உண்டாக்கும் சக்கிமுக்கிக்கல், கைவிளக்கு, அரிவாள், கண்ணாடி, பூசைக்குரிய பொருள்கள், செருப்பு, குடை, பணியாள், சிற்றுண்டிகள், கம்பளம், ஊசி நூல், வெற்றிலைப்பை, சுண்ணாம்புக் குப்பி, எழுத்தாணி, உப்பில் ஊறிய காய், கரண்டி, நல்லெண்ணெய், காசுகள், பூட்டு, கைக்கத்தி, என்று இவற்றைக் குறைவில்லா மல் திருத்தம் செய்து சேர்த்துக் கொண்டு பெண்களின் துணையுடன், பொருந்திய ஊர்தியுடன் புறப்பட்டு, இடையில் நீர்நிலை, நிழல், சமைப்பதற்குரிய விறகு, மற்றும் விரும்பத் தக்கவை ஆகியவை உள்ள இடங்களில் இறங்கித் தங்கிச் சமையல் செய்து உண்டு, பிறகு புறப்பட்டு கருதிய இடத்துக்குச் செல்லுதல் சிறப்பாகும்.'

எவ்வளவு தீர்க்க தரிசனமான முஸ்தீபு! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதைப் பின் பற்ற யாருக்கு அவசியம் ஏற்படப் போகிறது? இதை உத்தேசித்துத்தானோ என்னவோ இந்தப் பாடலைப் பின்பற்றி இன்றைய தேவைக்கேற்ப ஒரு பட்டியல் கொண்ட பாடலை எழுதியுள்ளார்
பாவேந்தர் பாரதிதாசன்.

'சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டிக் கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.'

( கவிகை - குடை; காப்பிட்ட - பாதுகாப்பான )

விவேகசிந்தாமணி பட்டியலில் உள்ளவற்றில் காலத்திற் கேற்றபடி தேர்வு செய்த பட்டியலை புரட்சிக் கவிஞர் அளித்துள்ளார்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்

Saturday, March 26, 2005

உவமைகள் வர்ணனைகள் - 37

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 37

பாரதியார் கதைகளிலிருந்து:


1. கந்தர்வ லோகத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினையுடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

- 'ஞானரதம்'.

2. குழந்தை சந்திரிகைக்கு இப்போது வயது மூன்றுதானாயிற்று. எனினும், அது சிறி தேனும் கொச்சைச் சொற்களும், மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப்புல்லாங்குழலின் ஓசையைப்போன்றது. குழந்தையின் அழகோ வருணிக்குந் தரமன்று; தெய்வீக ரூபம்; வனப்பின் இலக்கியம்.

- 'சந்திரிகையின் கதை'.

3. மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்..........

மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சினேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை, இடிபோல கர்ஜனை செய்வதையொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக் கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார்.

- 'மழை'.

4. வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருகிறான். உடுக்கை தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களூம் காட்டுகிறான். தாள விஷயத்தில் மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணிமூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைசட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலெ பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக்
காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல செய்கிறான்.

- ' புதிய கோணங்கி'.

5. ரவீந்திரநாத டாகூர் சொல்வது போல் இவளுடைய தலைமயிர் முக்காற் பங்கு பழமாகவும், காற்பங்கு காயாகவும் இருந்தது. அதாவது , முக்காற் பங்கு நரை; பாக்கி நரையில்லை.

- 'குழந்தைக் கதை'.

6. சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம். - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது- தயார் செய்து கொண்டு வருவார்கள். அதன் மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்று போகும். பிரச்சினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும்.எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும்
குதிரையை எப்படியாவது நகர்த்த வேண்டும் மென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர்கள் நின்று அதைத் தள்ளிக் கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒரு கையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு பவனி வருவார்.

- 'சின்னச் சங்கரன் கதை'.

7. தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன். அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வைரமான உடம்பு. இவன் மேலே மோட்டார் வண்டி ஓட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நூறு ராத்தல் கல் தொங்கவிடலாம். இவன் தலையில் நாற்பது பேர் அடங்கிய பெரிய தொட்டிலை
நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகாபாரத புஸ்தகத் தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.

- 'கலியுக கடோற்கசன்'.

8. "கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"

பேசிப் பார். மறுமொழி கிடைக்கிறதா இல்லயா என்பதை.

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப் போல.

- 'காற்று'.

9. குள்ளச்சாமி நெடிய சாமி ஆகிவிட்டார். நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமியார் ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார். ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப்போல இருந்தது. குனிந்தால் பிள்ளை யார் போல் இருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது மகாவிஷ்ணுவின் முகத்தைப்போலே தோன்றியது.

- 'சும்மா'.

10. சிறிது நேரத்துக்குள் புயல் காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன் நிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போலே மெதுவாய் என்னருகே வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீயொளியைப் போலே விளங்கிற்று.

- 'கடல்.

- தொடர்வேன்.

- அடுத்து இராஜேந்திரசோழன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

நினைவுத் தடங்கள் - 31

அப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிகளை ஆய்வும் தணிக்கையும் செய்வார்கள். அப்போது பள்ளிகள் குறைவு. அதனால் தவறாது நடக்கும். இப்போது பள்ளிகளின் அதீதப் பெருக்கத்தால் உயர்ந்¢லைப் பள்ளி, மேல் ந்¢லைப் பள்ளிகள் கூட 4,5 ஆண்டுகள் தொடர்ந்து தணிக்கை செய்யப்படுவதில்லை.

ஐயாவின் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாதலால், தணிக்கை தவறாது நடக்கும். ஆய்வும் உடன் சேர்ந்தே நடைபெறும். எல்லாநிலைப் பள்ளிகளிலுமே ஆய்வு என்பது திருவிழா மாதிரிதான். ஒரு வாரம் இருக்கவே பள்ள்¢க்கூடம் அமர்க்களப்படும். ஐயா மற்றவர்களை முடுக்கி விடுவதுடன் தானே அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவார். பொங்கலுக்கு ஒட்டடை அடித்து, வெள்ளையடித்து வீட்டுக்குப் புதுக்களை உண்டாக்குவது மாதிரி பள்ளிக்கும் புதுமெருகு ஏற்றப்படும். கலர் பேப்பர் வாங்கி சணல்¢ல் ஜண்டா ஒட்டி, பள்ளிக்கு உள்ளும் வெளியும் கட்டப் படும். இதிலெல்லாம்- பாடம் படிக்கும் வேலை இல்லை என்பதால் பிள்ளைகள் வெகு உற்சாகமாய் ஈடுபடுவார்கள். பள்ளிப் பரணில் வைக்கப்
பட்டிருக்கும் தேசப் படங்கள், பிராணிகள் மற்றும் கதைப் படங்களை எல்லாம் அப்போதுதான் பிள்ளைகள் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

கட்டுகளைக் கீழிறக்கித் தூசி தட்டித் துடைத்து, உள் சுவரிலும் வெளிச் சுவரிலும் ஆசிரியர்கள் மாட்டுவார்கள். ஐயா அருமையான, அறிவு பூர்வமான படங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவைதாம் எத்தனை வகை! ஒருகட்டு முழுதும் தேசப் படங்கள். சொந்த தாலுக்கா படத்திலிருந்து ஜில்லா, மாகாணம்(அப்போது சென்னை மாகாணம். தென் இந்தியா முழுதும் மொழிவழி பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்த
காலம்) இந்தியா, கண்டங்கள், உலகம் என்று எல்லாப் படங்களும் உண்டு. இன்னொரு கட்டில் தாயும் சேயுமாய் வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பறவைகள் என்று - அழகான இயற்கைப் பின்னணியில் பார்த்துப் பார்த்து ஐயா சேகரித்து வைத்திருந்தார். கதைப் படங்கள் - இப்போதைய காமிக்ஸ் புத்தங்களில் உள்ள மாதிரி படக் கதைகள்- 'நரியும் காக்கையும்', 'நரியும் திராட்சையும்' போன்ற கதைகளை விளக்கும் படங்கள் ஒரு கட்டு. அப்புறம், கணக்குக் கற்பிக்கும் மணிச் சட்டங்கள், சுழல் அட்டைகள், கன உருவ மாதிரிகள், பூகோள உருண்டைகள் என்று - கொலுவுக்கு வெளியே வரும் பொம்மைகள் மாதிரி வெளிப்படும். கொலு முடிந்ததும் பொம்மைகள் மீண்டும் பரண்
ஏறுவதைப் போல் பள்ளி ஆய்வாளர் வந்து போனதும் இவைகளும் பரண் ஏறிவிடும். அதனால் பிள்ளைகள் கண்காட்சி போல, இப்போதுதான் திகட்டத் திகட்ட அத்தனையையும் கண்ணகலப் பார்ப்பார்கள். அப்புறம் பார்க்க வேண்டுமானால் மேலும் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டுமே!

ஆய்வுக்கு வருகிறவர்களும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. 'எப்படி இவையெல்லாம் புதுக் கருக்கழியாமல், சிரஞ்சீவியாய் மார்க்கண்டேயன் மாதிரி இருக்கின்றன? உபயோகப் படுத்துவதே இல்லையோ?' என்று கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு இதெல்லாம் அவர்கள் வரும்போது தென்பட்டால் போதும். உள்ளூரில் வில்வண்டி வைத்திருப்பவரிடம் கேட்டு ஆசிரியர் ஒருவரை உடன் அனுப்பி ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் நகரிலிருந்து இன்ஸ்பெக்டரை அழைத்துவரவெண்டும். அப்போதெல்லாம் எங்கள் ஊருக்குப் பஸ் வரவில்லை. வண்டியில் புதுவெண்ணெய் - நாற்றமில்லாமல் ஐயாவே நேரில் பார்த்து வாங்கியது இரண்டு மூன்று சேர், புதிதாய்ப் பறித்த காய்கறிகள் ஒரு பை - போகும்.

இன்ஸ்பெக்டர் வண்டியை விட்டு இறங்கியதும் உள்ளே நுழையுமுன்பாக நகரிலி-ருந்து வண்டியிலேயே வாங்கி வந்திருக்கிற பூமாலையை வாங்கி, ஐயா வெகு மரியாதையோடு அவருக்கு அணிவிப்பார். முன்பே சொல்லிவைத்தபடி பிள்ளைகள் கனஜோராகக் கைத்தட்டுவார்கள். கடுமையாக இருக்க வேண்டும் என்று வந்தால் கூட இத்தகைய வரவேற்புக்குப் பின்னால் எப்படி இன்ஸ்பெக்டருக்கு சாத்யமாகும்? மனசு குளிர்ந்து புன்முறுவலுடன் உள்ளே நுழைவார். உட்கார்ந்ததும் தயாராய் சீவி வைத்தி ருக்கிற இளநீரை, இரவல் வாங்கி வைத்திருக்கிற வெள்ளித் தம்ளரில் ஊற்றி ஒரு ஆசிரியர் பவ்யமாக ந்£ட்டுவார். மதியம் ஊர்ப் பெரிய மனிதர் வீட்டில் சொல்லி கேரியரில் சாப்பாடு வரும். ஆய்வு நல்லபடி நடந்தேறும்.

உபசாரத்தினால் மட்டுமல்லாமல் ஐயாவின் நேர்மையான பணியை உத்தேசித்தும் இன்ஸ்பெக்டர்கள் ஐயாவிடம் கடுமை காட்டுவதில்லை. பொதுவாக ஐயாவைப் பற்றி அதிகாரிகளுக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் உண்டு. ஐயா மாதிரி யார் பள்ளிக் கூடமே கதியென்று ஞாயிற்றுக் கிழமைகளில்கூட பிள்ளைகளைக் கட்டி மேய்க்கிறார்கள்? ஐயாவின் 50 ஆண்டு சர்வீசில் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர்தான் அவரிடம் முரண்டு பண்ணித் தகராறு செய்தவர். அதன் பலனாய் அவமரியாதை அடைந்தும் திரும்பியவர். நாங்கள் படிக்கும்போது அது பற்றிப் பெரியவர்கள் கதை போலச் சொல்லுவார்கள். நாட்டுவக்கீல் என்று காரணப் பெயரால் அழைக்கப் பட்ட ஒருவர் - ஐயாவின் பழைய மாணவர்- எங்களுக்கு முன் தலைமுறைக்கு மூத்தவர், அடிக்கடி ஐயா அந்த இன்ஸ்பெக்டரிடம் சண்டை போட்ட வீரச் செயலைப் பற்றி தனக்கே உரிய ரசமான வருணனையோடு அலுக்காமல் சொல்லுவார். அது இன்னும் என் நினைவில் பசுமையாய் நிழலாடுகிறது.

"சாம்பமூர்த்தின்னு ஒரு இனிஸ்பெட்டர். ஜாதிலே அவுரு அய்யரு. அவுரு நாங்க படிக்கிறப்போ பரிட்சை பண்ண வந்தாரு. அந்தாளு கொஞ்சம் முசுடு. அவுருக்கு நம்ம வாத்தியாரு மேலே என்னாக் கோபமோ தெரியிலே. அந்தாளு கைக்கு வாங்கற வராட்டம் இருக்கு. இவுருதான் அதுலே கரெக்டாச்சே! ஏதோ வெண்ணெய், காய் கறின்னு இவுராப் பிரியப்பட்டுக் குடுத்தாத்தான். காசு வாங்கி ருசி கண்டவனுக்கு காய்கறியும் வெண்ணையும் எப்பிடிப் போதும்? சாடைமாடையாக் கேட்டும் இவுரு கண்டுக்கலை போல்ருக்கு. அந்தக் கோபம்
இனிஸ்பெட்டருக்கு. வரும்போதே ஒரண்டு கட்டிக்கிட்டு வந்தாரு. முன்கூட்டியே சொல்லிவச்சு வண்டி போய் அழச்சாறதுதான் வழக்கம். ஆனா இவுரு வாத்தியாருக்குச் சொல்லாமெக் கொள்ளாமே திடீருண்ணு குதுர வண்டியிலே வந்து எறங்குனாரு. அப்ப ஐயா மட்டும்தான் வாத்தியாரு. அவுருக்கு என்ன பண்றதுன்னே புரியலே. "வாங்க வாங்க! சொல்லியிருந்தா வண்டி அனுப்பிச்சிருப்பனே" ண்ணு பணிவாத்தான் சொன்னாரு. "ஏன் உம்மக் கிட்டே சொல்லிட்டுத் தான் வரணுமோ?" - அப்படீண்ணு முறைச்சாரு இனிஸ்பெட்டரு. "திடீருண்னு வந்தாத்தான் உம்ம வண்டவாளமெல்லாம் தெரியும்"ணு வேறே சொன்னாரு. சீண்டி விட்ட நல்ல பாம்பு மாதிரி வாத்தியாருக்கு 'புர்ரு'ண்ணு கோபம் வந்துடிச்சி. 'ஆஹா! பேஷாப் பாருமேன்! என் வண்டவாளத்த நீரு எடுத்துக் காட்டாமேப் போனீரு- அப்பறம் தெரியும் சேதி" ண்ணு ஒரு சீறு சீறுனாரு.

இனிஸ்பெட்டரு விடுவிடுண்ணு உள்ள போயி தானே நாக்காலிலே உக்காந்தாரு. அப்புறம் அரை நாழி 'தீவாளி'க் கேப்பு வெடிக்கிற மாதிரி 'சடபுடா'ன்னிட்டு அந்த ரிஜிஸ்டரக் கொண்டா, இந்த நோட்டக் கொண்டாண்ணு அதிகாரம் பண்ணி ஆர்ப் பாட்டம் பண்ணுனாரு. வாத்தியாரும் அப்பப்போ பதிலுக்கு எதிர்வாணம் மாதிரிச் சீறிக் கிட்டு அவுரு கேட்டத எல்லாம் எடுத்துக் காமிச்சாரு. பசங்களையும் வாய்ப்பாடு, மனக்கணக்கு, டிக்டேஷண்ணு பெரட்டி எடுத்தாரு. ஒண்ணுலியாவுது குத்தம் கண்டு புடிக்கணுமே! ஊகூம், நடக்குலே! எல்ல கஜகர்ணமும் போட்டுப் பாத்துட்டு, 'விசிட்' புஸ்தகத்த வாங்கி என்னுமோ விறுவிறுண்ணு கிறுக்குனாரு. வாத்தியாரு பேசாமப் பாத்துக் கிட்டே இருந்தாரு.
விசிட் புஸ்கத்தை எழுதி முடிச்சி மேசமேலே விட்டெ றிஞ்சாரு. வாத்தியாரு அத எடுத்துப் படிச்சுப் பாத்தாரு. படிக்கப் படிக்க மூஞ்சி பயங்கரமா செவசெவத்து உக்கிரமாயிடுச்சு! 'சர்'னு நோட்ட ரெண்டாக் கிழிச்சி இனிஸ்பெட்டரு தலமேல வச்சு, 'படக்'குண்ணு அவரோட பூணூல இழுத்துக் கையில புடிச்சிக்கிட்டு, "ஓய் சாம்பமுர்த்தி அய்யிரே! நெசந்தான் - இந்தப் பள்ளிக்கூடத்துல சுகாதார வசதியில்லே, கட்டடமில்ல, மரத்தடியிலதான் நடக்குது - அது இதுண்ணு 'கிராண்ட' வெட்டறதுக்குத் தோதா எழுதிப்புட்டீரு - சரி! - ஆனா அம்மாம் சத்திய வந்தரான உம்ம ஒண்ணு கேக்கிறேன் - உம்மப் பூணுலு மேலெ சத்தியமாச் சொல்லும்! இண்ணைக்குத் தேதி என்னா? முந்தா நாளுத் தேதிய போட்டுருக்கியே- அண்ணிக்குத் தான் இந்த 'ஸ்கூலை" விசிட் பண்ணியா நீ? உனக்குப் 'படி' கெடைக்குறத்துக்காக
அப்பிடி எழுதலேண்ணு சத்தியம் பண்ணு!" ண்ணு வாத்தியார் ஆங்காரமாக் கத்தவும் பயந்து பூட்டாரு இனிஸ்பெட்டரு. இரணியனக் கொடலப் புடுங்கி மாலையாப் போட்டுக்கிட்ட நரசிம்ம மூர்த்தி மாதிரி இருக்கு வாத்தியாரப் பாத்தா. அவுரு அலண்டு போயி எந்திருச்சி, 'சரி சரி! என்னே விடும்' ணு வெளியே பாய்ஞ்சி குதுர வண்டியிலே தாவி ஏறிப் பறந்துட்டாரு! பாவம், ஒரு வாய் காப்பிகூடக் கெடைக்கல அந்த மனுஷனுக்கு. எல்லாம் இருக்கிறபடி இருந்தால்ல? தம்பேர்லத் தப்பு இல்லேண்ணா, வாத்தியாரு லேசுலே உட்றமாட்டாரே!" என்று நாடகம் மாதிரி, அப்படியே நடிச்சுக் காட்டினார் நாட்டு வக்கீல் ஒரு தடவை எங்களுக்கு.

நேர்மையற்ற அதிகாரிகளுக்கு ஐயாவிடம் பயந்தான். நல்ல அதிகாரிகள் வந்து பார்த்து விசிட் புத்தகத்தில் ஐயாபற்றியும் அவரது போதனை பற்றியும் பாராட்டியே எழுதிப் போவார்கள். மக்களும் பிள்ளைகளும் அவரிடம் மதிப்பும் மரியாதையுமே கொண்டிருந்தார்கள். இப்படி மூன்று தலைமுறைகளுக்குக் கல்வி கற்பித்த அவர் கடைசி நாட்களில் நலிவடைந்து நாதியற்று பக்கத்து நகரில் பசியால் மயங்கி விழுந்து மரணமடைந்தது பெரும் சோகம். ஊருக்குப் பஞ்சாயத்து வந்தபோது அவர் இருந்த பொதுச் சாவடியைப் புதுப்பித்து அலுவலகம் ஆக்கினார்கள். அந்தக் கட்டடத்துக்கு ஐயாவின் நினைவாக அவர் பெயரை இட நானும் என் சகோதரர்களும் எவ்வளவோ முயன்றோம். ஆனால்
அவரது அருமையை அறியாத அடுத்த தலைமுறை அதை உதாசீனப் படுத்திவிட்டது. அது வெகு நாட்களாக என் மனதை உறுத்திக் கொண்டி ருந்தது. பிறகு 20 ஆண்டுகள் கழித்து, அவருக்கு நினைவுச் சின்னம் போல அவரது வாழ்வை மையப்படுத்தி என் முதல் நாவலை எழுதி அவருக்கு அர்ப்பணித்தேன். என் முதல் கதையின் நாயகனான அவரே என் முதல் நாவலின் நாயகனாகவும் அமைந்ததும் அந்த நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 1994ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான 10000 ரூ. பரிசு பெற்றதும் நான் எதிர்பாராதது. எனக்கு எண்ணையும் எழுத்தையும் கசடறக் கற்பித்ததோடு என்னை எழுத்தாளனாக அங்கீகாரம் பெறவும் செய்த ஐயா என்றும் என் நினைவில் நிற்பவர்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Friday, March 11, 2005

களஞ்சியம் - 17

எனது களஞ்சியத்திலிருந்து -17: விவேகசிந்தாமணி விருந்து - 6

அற்பர் இயல்பு:

நம்மைச் சுற்றி நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்திறார்கள். அவர்களை இனம் காணுவதெப்படி? அவர்களது இயல்புகளையும், அவர்களோடு சேர்வதால் ஏற்படும் பயன்களையும் பற்றி விவேகசிந்தாமணியில் அனேக பாடல்கள் உள்ளன.

அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:

கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.

மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.

இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.

நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.

நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.

இப்படிப் பட்டவர் கல்வி கற்றாலாவது நல்லவராக மாற மாட்டார்களா என்ற கேள்விக்குப் பதில் இன்னொரு பாட்டில் இருக்கிறது.

தூம்பினில் புதைத்த கல்லும்
துகள் இன்றிச் சுடர் கொடாது;
பாம்புக்குப் பால் வார்த்து என்றும்
பழகினும் நன்மை தாரா;
வேம்புக்குத் தேன் வார்த்தாலும்
வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலும்
துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.

( தூம்பு - வீட்டு வாயில்; துகள் - புழுதி, தூசி; துர்ச்சனர் - தீயவர், கீழானவர் )

என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப்பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில் லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர். இதைச் சுட்டுகிறது ஒரு பாடல்.

கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக்
கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப்
பொருந்தக் காட்டும்;
சொற்பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே
சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக
நடக்கும்தானே.

( கமழ்நீர் - வாசனை நீர்; கத்தூரி - கஸ்தூரி; பொற்பு - அழகு; போதம் - அறிவு )

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, March 01, 2005

உவமைகள்-வர்ணனைகள்-36

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 36

வ.ரா வின் படைப்புகளிலிருந்து:

1. நாணுவய்யரின் கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அவரது வலது கைவிரல்களை அவருடைய கையிலே காண வேண்டுமென்பதில்லை. பையன்களுடைய கன்னங்களில் ஐந்து விரல்களையும், ரேகைகள் உட்பட, விளக்கமாகக் காணலாம். இவ்வளவு திறமையுடன் கையை உபயோகிக்கும் நாணுவய்யருக்குப் பட்டாளத்துச் சிப்பாயின் சம்பளத்துக்குக் கொஞ்சம் குறைவு. இருபது ரூபாய்க்குள் அடக்கம்.

- 'வாத்தியார் நாணுவய்யர்'.

2. மலைநாட்டு வாசிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சதா 'ஏறி இறங்கும் திருமேனி'களாய் வாழ வேண்டிஇருப்பதால் உயரமாய் வளர்வதில்லை'. எப்போதும் உணவுக்கு வேலை செய்து கொண்டு இருக்க வேண்டுமாகையால், உட்கார்ந்து உயரமாய் வளர்வதுக்கு நேரம் இல்லையோ என்னவோ! உயரம் என்ற விஷயத்தில் அவர்கள் மோசம் போனார்களே ஒழிய, கனத்தில் அவர்கள் மோசம் போகவில்லை.
அவர்கள் 'கட்டைக் குட்டை'. தேகம் குண்டுக் கல். ஆனால் தூக்கிப் போட்டால் உடைந்து போக மாட்டார்கள்.

- 'மைக் குறத்தி'.

3. வார நாட்கள், வாரத்துக்கு ஒரு தரம் திரும்பித் திரும்பி வருவதனால் கொஞ்சம் தேய்ந்து போனாலும் போயிருக்கும். சூரியன் சதா உருண்டு கொண்டே இருப்பதனால் (சம்பிரதாயப் பொய். சூரியன் உருளுவதில்லை என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்) ஒரு பக்கம் மூளியாய்ப் போனாலும் போகலாம். ஆனால் இராப்பகலாய், சலிக்காமல், முப்பது வருஷ காலமாக எங்கள் வீட்டில் வேலை செய்து வரும்
அம்மாக்கண்ணுவின் உடம்பு ஏன் தேய்ந்து போகவே இல்லை?

- 'வேலைக்காரி அம்மாக்கண்ணு'.

4. சின்னப் பையன்களுடைய பாடப் புஸ்தகங்களில் மயில் தோகை குட்டி போடும். ரொக்கப் பணமும் 'பிள்ளைத்தாச்சி போல" வட்டிக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கும். ரொக்க லேவாதேவிப் பணம் மலடுமல்ல; அதற்குக் காய்த்து பழுத்து, அலுத்துப் போகிற காலமும் கிடையாது.

- 'செருப்புக்கு அடி அட்டையா?'.

5. குப்பண்ணாவை நீங்கள் பார்த்தால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்று உங்களாலே சொல்ல முடியாது. ரொம்பவும் 'டாப்பு சிறப்பாக' இருப்பார். உயர்ந்த ரகமான துணியைத்தான் அவர் உடுத்துவார். தேகத்தில் சட்டை இராது. தெரு வழியாக அவர் சமஸ்கிருத சுலோகம் சொல்லிக் கொண்டு போகும்போது, அவர் எதையோ பாராயணம் செய்து கொண்டு, அலுவலகத்துக்குக்ப் போவதாகத் தோன்றும். தெருப் பிச்சை எடுப்பவர் குப்பண்ணா என்று நீங்கள் சந்தேகிக்க முடியாது.

- 'வாழ்க்கை விநோதங்கள்'.

6. பொம்மையும், பள்ளிக் கூடமும் தான் தெரியும். பாடப்புத்தகம் தெரியும்; சொல்லிக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யத் தெரியும்; வெளித் தோற்றதையே கண்டு மயங்குகிற வயது. பிறந்த சத்தத்துக்கெல்லாம் காது கொடுக்கிற வயது; பொய்த் தூக்கமில்லாத வயது;
கிழிந்த மயிலிறகு குட்டி போடும் வயது. இந்த வயதிலே சுந்தரி விதவை ஆனாள். விதவை என்ற வார்த்தைக்கு இந்தியாவிலே கொடுக்கிற
முழு அர்த்தமும் அவளுக்குத் தெரியுமோ?

- 'சுந்தரி' நாவலில்.

7. கிருருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே விநோதமாய் இருக்கிறது. யாரை அவர் கேலி செய்கிறாரோ, அவரும் சேர்ந்து சிரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். நான் சிரிக்க மாட்டேன் என்பது போல, வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டிருப்பவர்களையும், கோட்டை வாசல் திறந்தது போல வாயைத் திறந்து பார்த்துக் கொண்டே இருக்கும் படியாகக் கிருஷ்ணன் செய்து விடுகிறார்.

- 'தமிழ்ப் பெரியார்கள்' - என்.எஸ்.கிருஷ்ணன்.

8. பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப்போல் படீர் என்று வெடிக்கும் சிரிப்பல்ல; அமர்ந்த சிரிப்புமல்ல. வஞ்சகத்தை உள்ளே வைத்துக் கொண்டு வாயை மட்டும் திறந்து, பல்லைக் காட்டி, சிரிப்பைப் பழிக்கும் சிரிப்பல்ல; புன்னகையைப் புஸ்தகத்திலே பாடிக்கலாம்; ஆனால், பாரதியாரின் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது; சங்கீதச் சிரிப்பைத்தான் காண முடியும்.

- 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து.

9. பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும். கண்ணைக் குத்தும் கெய்சர் மீசை அல்ல; கத்தரிக் கோல் பட்ட 'தருக்கு' மீசை அல்ல. தானாக வளர்ந்து பக்குவப் பட்டு., அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை. அவரது வலக்கை, எழுதாத நேரங்களில் எல்லாம் அனேகமாக மீசையில் இருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது; மீசைக்கு 'டிரில்' பழகிக் கொடுப்பது
போலத் தோன்றும்.

- 'மகாகவி பாரதியார்'.

10. சுமங்கிலியைக் கண்டிக்க ஒரு மாமியாரும், ஒரு மாமனரும் தான். ஆனால் பால்ய விதவைக்கோ உலகம் முழுதும் மாமனாரும், மாமியாரும்.

-'விஜயம்' நாவலில்.

- தொடர்வேன்.

- அடுத்து பாரதியார் கதைகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Thursday, February 24, 2005

நினைவுத் தடங்கள் - 30

எங்கள் ஐயா சாமினாத ஐயர் பிள்ளைகளுக்கு, படிப்பில் சிம்ம சொப்பனந்தான் என்றாலும் அவரிடம் கலைநெஞ்சம் இருந்தது. வெறும் எண்ணையும் எழுத்தையும் மட்டும் அவர் கற்பிக்கவில்லை. கோலாட்டம், நாடகம் போன்ற கலைகளையும் அவர் கற்பித்தார். சதா கடுகடுப்பும் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டால் கூடப்பொறுக்காத முன்கோபமும் அவரிடம் இருந்ததை, ஊர்மக்கள் ஒரு குறை போலவும் அதுவே அவரது பெருமை போலவும் பேசினார்கள். 'பிரம்மச்சாரிதானே? பிள்ளை குட்டி பெற்றிருந்தால் தானே பிள்ளைங்க அருமை தெரியும்?' என்றும் 'இப்படியும் கண்டிப்பு இல்லேண்ணா படிப்பு எப்படி வரும்?' என்றும் பேசுவார்கள். படிப்புக்கிடையே அவர் விஜய தசமியை ஒட்டி பிள்ளைகளுக்ககு கோலாட்டம் கற்பிப்பதை மன இறுக்கத்து ஒரு வடிகால் என்று எண்ணி சிலாகிப்பார்கள். இந்த கடின நெந்சுக்குள்ளே எப்படி இத்தனை கலைப்பிரேமை என்று வியக்கத்தோன்றும். அன்றைய கால கட்டத்தில் அனேகமாக அவரைப் போன்ற திண்ணைப் பள்ளிக்கூட ஆசி¢ரியர்கள் எல்லோருமே இப்படி படிப்பின் நடுவே கோலாட்டம் போன்ற கிராமீயக் கலைகளையும் கற்பித்தே வந்திருக்கிறார்கள்.

ஆவணியில் - அதாவது செப்டம்பர் மாதத்தில் - தசரா விடுமுறை ஏதும் ஐயா விடுவதில்லை. தசராவுக்குப் பதில் இந்தக் கோலாட்டம்தான் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தரும் காலம். விநாயகர் சதுர்த்தியை ஐயா விமர்சையாகவே பள்ளியில் கொண்டாடு வார். விநாயகர் சதுர்த்தி வருகிறதென்றால், அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குத் தினமும் சாயங்காலம் பிள்ளைகளுக்குக் குஷிதான். வாய்ப்பாடு, சதகம் ஒப்பிக்கிற பிடுங்கல் இருக்காது. கோலாட்டப் பயிற்சி, அன்று தொடங்கி சரஸ்வதி பூஜை வரை மாலையில் நடக்கும். அப்புறம் விஜயதசமி அன்று
எல்லோருடைய கோலாட்டக் கழிகளையும் கொலுவில் வைத்துப் படைத்து, அன்று முதல் வீடுவீடாய்ப் போய் கோலாட்டம் அடித்து, பிள்ளைகளுக்குப் பொரிகடலை, மிட்டாய், பழம் எல்லாம் தினமும் கிடைக்கும். ஐயாவுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒருரூபாய் வீதம் காணிக்கை கிடைக்கும்.

பதினெட்டாம் பெருக்கு, விநாயகர்சதுர்த்தி போன்ற விசேஷங்களுக்கு பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு அணாவோ இரண்டணாவோ ஐயா கேட்கிறபடி தர வேண்டும். அந்தப்பணத்தைக் கொண்டு ஐயா பூஜை சாமான்கள் வாங்கிப் படைப்பார். பதினெட் டாம் பெருக்கன்று ஐயா பிள்ளைகளை அருகில் ஓடும் வெள்ளாற்றுக்கு அழைத்துப் போவார். பிள்ளைகள் விநாயகர் அகவலை உரத்துப் பாடியபடி வரிசையாய்ப் போக வேண்டும். அப்போதெல்லாம் வெள்ளாற்றில் வற்றாத நீர் இருக்கும். நீர் ஓட்டத்தை ஒட்டி மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து காதோலை கருகமணி மஞ்சள்குங்கும் சார்த்தி பொரிகடலை, காப்பரிசி நைவேத்யம் வைத்து ஐயா படைப்பார். பூஜைமுடிந்து, எல்லொருக்கும் நைவேத்யம் வழங்கியதும் பழையபடி விநாயகர் அகவலைப் பாடியபடி பள்ளி திரும்ப வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியில் பிள்ளைகள் கொடுத்த காசில், ஐயா கொண்டைக் கடலை வாங்கி சுண்டல் செய்து நைவேத்யம் ஆனதும் எல்லோருக்கும் வினியோகிப்பார். பூஜையில் புதிய கோலாட்டக் கழிகளுக்கு மஞ்சள் மசேலென்று மஞ்சள் பூசி அவரவர் கழிகளுக்குத் தனி அடையாளமிட்டு விநாயகருக்கு முன்னே வைத்துப் படைப்பார்கள். பிறகு ஐயாவே தன் கையால் ஒவ்வொருவரது கோலாட்டக்கழிகளையும் அவரவர் அடையாளத்திற்கேற்ப எடுத்து வழங்குவார். உடனே முதல் அப்பியாசம் தொடங்கும். ஐயாவே பாட்டுப் பாடி, ஜால்ரா சப்திக்கத் தொடங்கி வைப்பார். அன்று முதல் தினமும் மாலையில் கோலாட்டப் பயிற்சி தொடங்கும். ஐயா தான் பயிற்சி தருவார். மற்ற ஆசிரியர்களுக்கு இதில் வேலையில்லை.

பலவித கோலாட்டங்கள்- பின்னல் கோலாட்டம், கப்பல் கோலாட்டம் என்று கால்ஜதியுடன் சொல்லித் தருவார். அருட்பா, அருணசலக்கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் நாடகக் கீர்த்தனைகள் என்று ஜதிக் கேற்றபடி ஐயா பாட, பிள்ளைகள் உடன் பாடி கோலாட்டக் கழிகளை அடித்து ஆட வேண்டும். கோலாட்டப் பயிற்சியில் தப்பு செய்தால் ஐயாவுக்குப் பயங்கர கோபம் வரும். தாளம் தப்பினாலும் கால்ஜதி மாறினாலும் அவரால் பொறுக்க முடியாது. தப்புச் செய்தவனது கோலாட்டக் கழியையே ஆயுதமாக்கி, ஒரு கழியை அவன் தலைமீது வைத்து மற்றக்கழியால் அதன்மீது அடிப்பார். 'விண்'ணென்று தலை நோவும். சமயத்தில் தன் கையிலிருக்கும் வெண்கல ஜால்ராவால் தப்புவதும் உண்டு. 'ணங் ணங்' கென்று மோதி அதுவும் வலி உயிர் போகும். ஆனால் பிள்ளைகளுக்கு சாதாரண நாளில் கிடைக்கிற தண்டனையை விட கோலாட்டத் தண்டனைப் பயிற்சி பெரிதாகப் படுவதில்லை. தொடர்கிற கோலாட்டமும் பாட்டும் அதை மறக்கச் செய்து விடும்.

தினசரி கோலாட்டப் பயிற்சி முடிந்ததும், 'வாழிப்பாடல்கள்' என்று எல்லோரும் மனப் படம் செய்ய வேண்டும். பிள்ளைகளின் வீடுவீடாகப் போய் கோலாட்டம் அடிக்குமுன் உள்ளூரில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் போய் அடிக்க வேண்டும். முடித்ததும் அந்தந்த தெய்வத்துக்கும் என்று உள்ள வாழிப்பாடலைப் பாட வேண்டும். ஐயாவே ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவர் என்று குறிப்பிட்டு எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்யச் செய்வார். வீடுகளில் அடிக்கும்போது அந்தந்த வீட்டுப் பிள்ளைகள் பாட, பொதுவான வாழிப்பாடல் உண்டு. தினமும் எல்லோரும் சேர்ந்து பாடி, பயிற்சி நடைபெறும்.

விநாயகசதுர்த்தி போலவே சரஸ்வதி பூஜைக்கும் பிள்ளைகளிடம் காசு வசூலித்துப் பூஜை நடைபெறும். சரஸ்வதி படம் கீழிறக்கப்பட்டு அதன்முன்னே பள்ளிக்கூட ரிஜிஸ்தர் கள், மைக்கூடு, பேனா, ரூல்தடி, தேசப்படங்கள் எல்லாம் சந்தனம் தெளிக்கப்பட்டு கொலுவில் வைக்கப்படும். எல்லோருடய கோலாட்டக் கழிகளும் கழுவி மஞ்சள்பூசப்பட்டு கொலுவில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். மறுநாள் விஜயதசமி அன்றும் பூஜை செய்த பிறகு கொலு பிரிக்கப்பட்டு முதலில் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள பிள்ளை யார் கோயிலில் கோலாட்டம் தொடங்கும். எல்லாப் பிள்ளைகளும் புதிய வண்ண உடைகளில் அந்த நாட்களில் ஜொலிப்பார்கள். மறுநாளிலிருந்து வேளைக்கு ஒரு
கோயிலாக தினமும் கோலாட்டம் நடைபெறும். சிவன், பெருமாள் கோயிலுடன் மாரியம்மன், செல்லியம்மன், துரௌபதை அம்மன், ஐயனார் என்று எல்லா நத்த தேவதை கோயில்களும் அடித்து முடிக்க நாலு நாளாகும்.

பிறகு ஊர்ப்புரோகிதர் வீட்டில் - அந்த வீட்டுப் பிள்ளைகள் படித்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி - முதலில் அடித்து விட்டுத் தான் மற்ற வீடுகளுக்கு, யார் பணம், தின்பண்டத்துடன் தயராக இருக்கிறார்களோ அவர்கள் வீடுகளுக்குப் போய் அடிப்பார்கள். வீட்டின் அந்தஸ்துக்கு ஏற்றபடி, கூடுதலாகவோ, குறைவாகவோ, அதிக அயிட்டங்களுடனோ நிகழ்ச்சிகள் இருக்கும். அதற்கேற்றாற் போல் சன்மானமும் ஐயாவுக்குக் கூடுதலாகக் கிடைக்கும். ஒருவீட்டில் அடித்து முடிந்ததும் அந்த வீட்டுப் பையன் அல்லது பெண் வாழி பாட, நிகழ்ச்சி முடிவுறும். பிறகு அந்த வீட்டுப் பையன் திண்ணையில் தயாராய் வைத்திருக்கிற - பழம், வெற்றிலைப் பாக்குடன் ஒருரூபாய் நாணயமும் கொண்ட தட்டை ஏந்தி வந்து ஐயாவிடம் நீட்டி வணங்குவான். ஐயா முகத்தில் மகிழ்ச்சி விகசிக்க, அவனை வாழ்த்தி ஆசி வழங்குவார். பிறகு எல்லோருக்கும் தின்பண்டம் வழங்கப்படும். தங்கள் வீட்டில் வித்தியாசமாகத் தரவேண்டும் என்பதில் எல்லாப் பிள்ளைகளும் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் வேறு வேறு தின்பண்டங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். வீடுகள் குறையக்குறைய ஐயோ முடியப்போகிறதே என்று பிள்ளைகளுக்குக் கிலேசம் உண்டாகும். கடைசி வீடு முடிந்ததும் எல்லோரும் கனத்த இதயத்தோடு பள்ளி திரும்பு வார்கள். மறுநாள் முதல் வழக்கமான சிறை வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.