Tuesday, July 05, 2005

களஞ்சியம் - 21

எனது களஞ்சியத்திலிருந்து - 21

விவேகசிந்தாமணி விருந்து - 10 - பாவையரைப் பழிக்கும் பாடல்கள்:

விவேகசிந்தாமணி விருந்தின் இறுதிப் பகுதிக்கு வந்திருக்கிறோம்.

பல்விதச் சுவைகளையும் கொண்ட பாடல்களை உள்ளடக்கியுள்ள விவேகசிந்தா மணியில் விரச உணர்வுக்குத் தீனி போடும் பாடல்களும் உண்டு. அவை பகிர்ந்து கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால் வேண்டுபவர் தேடிப் படித்து அதில் தென்படும் கவியழகையும் இனிய ஒசை நயத்தையும் ரசிக்கலாம்.

பெண்ணின்பத்தைச் சுவைபடச் சித்தரிக்கும் பாடல்கள் உள்ள அதே நூலில் பெண்களை இழிவு படுத்திப்பாடும் பாடல்களும் உள்ளன. பெண் தொடர்பினைத் துறக்கத் துண்டுவதாக அவை தோற்றம் தந்தாலும் அவை போலித் துறவறத்தையே உள்ளே கொண்டவை. அருணகிரியாருக்குப் பின் தோன்றிய அவை அக்காலத்தின் அடிச்சுவட்டைக் கொண்டவை.

வேசியரை நம்பக் கூடாது என்று சொல்கிற பாடல் ஒன்று:

ஆலகால விடத்தையும் நம்பலாம்;
.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;
கோல மாமத யானையை நம்பலாம்;
.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;
காலனார் விடு தூதரை நம்பலாம்;
.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;
சேலை கட்டிய மாதரை நம்பினால்
.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.

ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர்- இ¢த்யாதிப் பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.

இதையே மீண்டும் வலியுறுத்துவது போல இன்னொரு பாடல்:

படியின் அப்பொழுதே வதைத்திடும்
.....பச்சைநாவியை நம்பலாம்;
பழி நமக்கென வழி மறைத்திடும்
.....பழைய கள்ளரை நம்பலாம்;
கொடுமதக்குவடு என வளர்ந்திடு
.....குஞ்சரத்தையும் நம்பலாம்;
குலுங்கப்பேசி நகைத்திடும் சிறு
.....குமரர் தம்மையும் நம்பலாம்;
கடையிலக்கமது எழுதி வைத்த
.....கணக்கர் தம்மையும் நம்பலாம்;
காக்கை போல் விழி பார்த்திடும் குடிக்
.....காணியாளரை நம்பலாம்;
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும்
.....நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய்
.....நம்பொணாது மெய் காணுமே.

உண்டவுடனே கொல்லத்தக்க பச்சைநாவியான கொடிய நஞ்சையும் நம்பி உட்கொள்ளலாம்; 'பழி நமக்கு வரினும் வரட்டும்' என்று அதைப் பொருட்படுத்தாது வழி மறித்துக் கொள்ளையடிக்கும் கள்வரையும் நம்பி உறவு கொள்ளலாம்; கொடிய, மதத்தை உடைய மலைபோன்று வளர்ந்துள்ள யானையையும் நம்பி அதனை நெருங்கலாம்; உடல் குலுங்க பசப்பு வார்த்தைகளைப் பேசி நகைத்து ஏமாற்றும் சிறுவர்களையும் நம்பி நேசிக்கலாம்; குடிகளுக்குக் கணக்கின் உள்வயணத்தைக் காட்டாது மோசடியாய் தான் எழுதி வைத்த கட்டுத் தொகையைக் காட்டி வஞ்சிக் கும் கணக்கர்களையும் நம்பலாம்; ஒரே விழியை உடையதாயினும் கூரிய பார்வையை உடையதான காக்கையைப் போலப் பயிரிடும் குடிமக்களுக்கு யாதொரு பயனும் கிட்டாதபடி கட்டிக் காக்கும் காணியாட்சி உடையவரையும் நம்பலாம்; நடக்கும் போது உடலைக் குலுக்கியும், மஞ்சள் முதலியவற்றால் முகத்தை மினுக்கியும் பசப்பி, மிகுதியாகச் சிரிக்கும் இயல்புடைய நங்கையரை நம்பக்கூடாது; நம்பக்கூடாது; நம்பக்கூடாது. இது உண்மை.

( 'பழி நமக்கென வழி மறைத்திடும் பழைய நீலியை நம்பலாம்' - என்றும் ஒரு பாடம் உண்டு. பழியைக் கருதாது ஒரு வணிகனை வழி மறித்துக் கொலை செய்த பழையனூர் நீலி பற்றிய குறிப்பு இது. )

இன்னொரு பாடல் வேசியரின் சாகசங்களைப் பட்டியலிடுகிறது:

வெம்புவாள் விழுவாள் பொய்யே;
.....மேல் விழுந்து அழுவாள் பொய்யே;
தம்பலம் தின்பாள் பொய்யே;
.....சாகிறேன் என்பாள் பொய்யே;
அம்பினும் கொடிய கண்ணாள்
.....ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
.....நாயினும் கடை ஆவாரே.

உங்கள் துயரத்தைக் கண்டு வருந்தியவளாய் மயங்கி விழுவாள்; அது பொய்யே ஆகும். மேலே விழுந்து அழுவாள்; அதுவும் பொய்யே ஆகும். உங்கல் எச்சில் தாம்பூலத்தை உண்பாள்; அது பொய்யே ஆகும். 'உனக்காக நான் உயிர் விடுவேன் என்று உரைப்பாள்; அது பொய்யே ஆகும். அம்பை விடக் கூர்மையான கண்களை உடைய, ஆயிரம் சிந்தனைகளை உடைய இத்தகைய மங்கையரை நம்பியவர்
எல்லோரும் நாயை விடக் கீழான நிலையை அடைவர்.

இந்தப் பாடல்கள் எல்லாம் பொதுவாக எல்லாப் பெண்களையுமே பழிப்பது போலத் தோன்றினாலும் இவை விலைமாதரின் இயல்பையே சித்தரிக்கின்றன என்று கொள்ள வேண்டும். ஆயினும் கீழ்க்கண்ட பாடல் பெண்களின் பொது இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. மாதரின் நெஞ்சை யாராலும் அறிய இயலாது என்பதை அழகான அறிவார்ந்த உவமைகளுடன் எடுத்துச் சொல்கிறது.

அத்தியின் மலரும் வெள்ளை
.....ஆக்கை கொள் காகம் தானும்
பித்தர் தம் மனமும் நீரில்
.....பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரமதேவ
.....னால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம்
.....தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தியின் பூ, வெண்மை நிறமுள்ள காகம், பைத்தியக்காரர்களது உள்ளம், நீரில் பிறந்த மீனின் கால் ஆகியவற்றை யாராலாவது பார்க்க முடியுமா? ஒருவேளை பிரம்மதேவனால் அளவிடக் கூடுமோ என்னவோ? ஆனால் சித்திரத்தில் வரையப்பெற்ற கண்களைப் போன்ற விழிகளை உடைய மாதர்களின் உள்ளத்தின் நோக்கத்தைக் கண்டு தெளிந்தவர் உலகத்தில் யாரும் இல்லை.

மற்ற பாடல்களை ஏற்பதில் பலருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் பெண் கள்¢ன் மனம் பற்றிய இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்பார்கள்தானே?

- விவேகசிந்தாமணி திகட்டாத விருந்து. எனது எடுத்துக் காட்டுகள் இலக்கிய ரசனையுள்ள அனைவரையும் அந்நூலைத் தேடிப் படிக்க வைக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்த விருந்துப் பரிமாறலை முடிக்கிறேன்.

- எனது களஞ்சியத்திலிருந்து மேலும் எடுத்தளிப்பேன்.

- வே.சபாநாயகம்.

No comments: