Sunday, June 07, 2009

'அசோகமித்திரனின் - '18 வது அட்சக்கோடு'

அசோகமித்திரனின் பெரும்பாலான கதைகளும் 'கரைந்த நிழல்கள்', 'தண்ணீர்', மற்றும் 'விடுதலை' போன்ற நாவல்களும் சென்னையையே மையமாகக் கொண்டவை. ஆனால் அவரது சிறந்த நாவலாகச் சொல்லப்படும் '18வது அட்சக்கோடு' நாவல், அவரது பால்ய கால வாழ்வின் நினைவுகளாய் இன்னும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிற செகந்தராபாத் நகரத்தை முழுதும் களமாகக் கொண்டது. இந்தியப் பிரிவினை சார்ந்த வரலாற்றுப் பூர்வமான இலக்கியப் பதிவு அது. அந்நகரம் வன்முறையில் சிக்கி எப்படி அவதிப்பட்டது என்பதை அசோகமித்திரன் அற்புதமாக இந்நாவலில் சித்தரித்திருக்கிறார்.

இந்நாவலில் அசோகமித்திரன் தன் இளமைக்காலத்து செகந்திராபாத் வாழ்க்கையையும் சமஸ்தானங்களை இணைத்தபோது ஹைதராபாத் நிஜாமுடன் ஏற்பட்ட சிக்கலையும் அது தொடர்பான போராட்டங்களையும்பதிவு செய்துள்ளார். பதின்ம வயது இளைஞன் சந்திர சேகரனின் பள்ளிப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரைஅவன் பார்த்த, அனுபவித்த செகந்தராபாத் வாழ்க்கை, அதில் போராட்ட காலத்தில் அவனது பங்கு என அவனது கூற்றாகவே நாவல் நடை போடுகிறது. இடையில் தன்மைக் கூற்றிலிருந்து ஆசிரியர் மாறி தானே சந்திரசேகரன் ஆகிவிடுகிறார். மீண்டும் தன்மைக்கூற்று. இது கொஞ்சம் நெருடினாலும் ஆசிரியரின் கதை சொல்லும் திறத்தால்,வாசிப்பு தடைப் படுவதில்லை. கதை நெடுக சந்திரசேகரனின் கிரிக்கட் ஆட்டப் பங்கேற்பும் அது தொடர்பான கிரிக்கட் ஆட்ட நுணுக்கங்களும் ஆர்.கே.நாராயணனின் 'மால்குடி டேஸ்' நாவலில் வருவது போன்று விஸ்தாரமாகச் சொல்லப்படுவது, கிரிக்கட் ஆட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்க்கு சற்று அலுப்பைத் தரக்கூடும்.
இது அவரது சுய சரிதை போன்றதுதான் எனும் போது, அவரது இன்றைய சாதுவான தோற்றத்துக்கும் அவரது இளமைத்துடிப்புக்கும், அச்சமற்ற சாகசங்களுக்கும் பெருத்த மாறுதல் தென்படுகிறது.

கதைப்போக்கில், ஹைதராபாத் நகரின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், கடைவீதிகள், வீதி அமைப்புகள், மக்களின் இயல்புகள், அவர்களின் குரூரம், சுயநலம், மூர்க்கமான குழுமனப்பான்மை முதலியவைகளை சாவதானமாகச் சொல்லிச் செல்கிறார். சந்திரசேகரனைச் சுற்றி வருகிற கதாபாத்திரங்கள் இந்துக்களாக, கிறிஸ்துவர்களாக, முஸ்லிம்களாக, பெண்களாக இருக்கிறார்கள். பெண்கள் பாலுணர்வின் தூண்டுதல்களாக சந்திரசேகனுக்கு அமைகிறார்கள். பெண்களை வசியப்படுத்தும் பார்வை இவனுக்கு இல்லாவிடினும், அடுத்த வீட்டில் இருக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தி இவனை அணைத்துக் கொள்கிறாள். இவனிடம் தன் துயரத்தை மனம் விட்டுச் சொல்கிறாள்.

ஹைதராபாத் சமஸ்தானத்தில் விடுதலைக்காக கங்கிரஸ்காரர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். சந்திரசேகரனும் கலந்து கொள்கிறான். நிஜாம் கல்லூரி மாணவர்கள் கல்லூரியைத் திரஸ்கரிக்கும்போது இவனும் வீட்டுக்குத் தெரியாமல் கல்லூரி செல்லாமல் இருக்கிறான். காந்தி சுடப்பட்டது அவனைத் தவிர அங்கே யாருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லை என்பது உறுத்துகிறது. அத்துடன் சந்திரசேகரன் அந்தச் செய்தியைக் கேட்டதும் தரையில் விழுந்து புரண்டு புலம்புவது சற்று மிகையாகவே காட்டப் படுகிறது. நாவல் முழுதும் நிதானமாகவே காட்டப்படும் சந்திரசேகரன் இப்போது தன்னை மீறிக் கத்துவது சற்று செயற்கையாகவே படுகிறது. ஆனால் அவனது குணச்சித்திரம் விசேஷமானது. அவன் இந்து என்றாலும் முஸ்லிம் நண்பர்
களோடு நெருக்கமாக இருப்பதும், இந்து முஸ்லிம் கலவரச் சூழ்நிலையிலும் அவன் தன்னை இந்து என்று வேறுபடுத்திக் கொள்ளாதிருப்பதும் அவனை உயர்த்துகிறது. கல்லூரி மாணவனாக இருந்தும் காணாமற்போன பசுமாட்டைத் தேடிஅலைவதும், கண்டுபிடிக்கப்பட்டதும் அதை அடித்து நொறுக்குவதும் பின்னர் இரக்கப்பட்டுத் தழுவிக்கொள்வதுமாய் கோபமும் அன்பு கொண்ட பாத்திரமாய்க் காட்டப்படுகிறான். எல்லா மனிதர்களிடமும் அவன் அன்பு செலுத்துபவனாய் இருக்கிறான். நிஜாமின் அடியாட்களான ரஸ்விகளை இந்திய ராணுவம்
வேட்டையாடும்போது, முஸ்லிம்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். வேடிக்கை பார்க்க வந்த சந்திரசேகரன், கலகக்காரர்களிடருந்து தப்ப ஒரு முஸ்லிம் குடும்பத்தின் வீட்டுச் சுவரேறிக் குதிக்கிறான். அவனைக் கலகக்காரனாக எண்ணி அந்த வீட்டின் இளம்பெண் ஒருத்தி அவன் முன்னே வந்து உடைகளைக் களைந்து நிர்வாணமாகி "எங்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள்" என்று கெஞ்சுகிறாள். சந்திரசேகரன் விதிர்விதிர்த்துப் போகிறான்.பாலுணர்வு ரீதியாய் ஒருபெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்த விடலைப் பருவத்து இளைஞன் அந்த அதிர்வால்
'மனிதன்' ஆக மாற்றம் கொள்கிறான். அதுவரை இந்தச் சமூக அமைப்புடன் ஒட்டாது இருந்தவன் இப்போது சமூகப்பிரக்ஞையும் அக்கறையும் உடையவனாக மாறுகிறான்.

'அவன் வழ்க்கையில் அவன் முதன் முதலாக நிர்வாணமாகப் பார்த்த பெண் அவனைச் சிதற அடித்து விட்டாள். அவனைப் புழுவாக்கி விட்டாள். அவள் வீட்டாரைக் காப்பாற்றத் எவ்வளவு இழிவு படுத்திக் கொண்டுவிட்டாள்! அவள் இன்னும் ஒரு குழந்தை. இந்த உலகில் உயிர் காப்பாற்றிக் கொள்ள ஒரு குழந்தை கூடஎவ்வளவு இழிவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது? அதற்கு அவனும் காரணமாகி விட்டான். இந்தக் கறையை என்று எப்படி அழித்துக் கொள்ள முடியும்? இதை அழித்துக் கொள்ளத்தான் முடியுமா?'

அவனது 'கண் கூசிற்று. தலைசுற்றி வாந்தி வந்தது. வாயில் கொப்பளித்து வந்த கசப்புத் திரளை அப்படியே விழுங்கிக் கொண்டு முன்பு உள்ளே வந்தபடியே சுவர் ஏறிக் குதித்து வெறி பிடித்தவன் போல ஓடினான்' என்று முடிகிறது நாவல்.

அசோகமித்திரன் கதைகளிலும் நாவல்களிலும் சம்பவங்கள் மிகுந்து காணப்படும். சின்னச் சின்ன நுணுக்கமான தகவல் கூட இயல்பாய் வந்து விழும். ஆனால் இவைதான் அவரது எழுத்துக்குச் சுவை கூட்டுபவை. அத்துடன் அவருக்கு மட்டுமே கைவந்திருக்கிற வேறு யாரும் பிரதி செய்ய முடியாத தனித்துவம் மிக்க நடையும் அவரது வெற்றிக்குக் காரணம்.

ஹெமிங்வே யின் பாதிப்பு அவருக்கு உண்டு. அவரைப் போலவே சின்னச் சின்ன வாக்கியங்கள், துல்லியமான சித்தரிப்பு கொண்ட தனி நடை அவருடையது. தோற்றத்தில் நகைச்சுவை உணர்வு உடையவர் என்று கருத முடியாவிட்டாலும் அவரது எழுத்தில் நெருக்கடியான மனநிலைக்கிடையேயும் நகைச்சுவை மிளிர்வதைக் காணலாம். எள்ளல் அவருக்கு இயல்பாகவே கைவந்த திறன். அவர் தன் படைப்புகளில் போலி உணர்வுகளை, அசட்டு அபிமான உருக்கங்களை உருவாக்கி வாசகரை அதில் திணிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னுமொரு குறிப்பிடத் தக்க அம்சம் அவரது படைப்புகள் எல்லாம் அநேகமாக உரையாடல்களாலேயே உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இந்த உரையாடல்கள் மூலம் பாத்திரங்களின் குண விசேஷங்களும், பண்புகளும் பிரசன்னமாவதைக் கூர்ந்து நோக்கினால் காணமுடியும்.

. 'அசோகமித்திரனின் மொழிநடைக்கு இந்திய மரபிலும் சரி, தமிழ் மரபிலும் சரி வேர்கள் இல்லை' என்ற ஜெயமோகனின் கூற்றுக்கு மாறாக அவரது நடையின் வேர் டாக்டர் உ.வே.சா எனலாம். அவரே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளது போல உ.வே.சாவின் 'என் சரித்திரம்' படித்த பாதிப்பு அது. மிக எளிமையானது. பின்னல், சிக்கல், சாமர்த்தியம் காட்டல் இல்லாத தெளிவான நடை. 'எளிமையானதாகத் தோன்றினாலும், எழுதுதவற்கு அரியது. நம்மை ஏமாற்றக்கூடிய அளவுக்கு எளிமையானது. அடுக்கு மொழியிலும் மேடைத் தோரணையிலும் தமிழ் தன்னைப் பெருக வைத்துள்ள சூழலில், தோரணைகளைக் களைந்து கொண்டு,
நெஞ்சில் உள்ளதை நேர்படப் பேசுவது நமக்கு அரிது ' என்பார் கோவைஞானி. 'அலாதியாக, துண்டாக அது தமிழ்ச் சூழலில் நிற்கிறது. எனவேதான் வினோதமாகப் பார்க்கப் படுகிறது, விவாதிக்கப்படுகிறது. அத்துடன் பல சமயம் புறக்கணிக்கவும் படுகிறது. நம்மையறியாமலே அத்துடன் ஒரு விலகல் உருவாகிறது, குறிப்பாக கிராமப் பின்புலம் உடைய வாசகர்களுக்கு, இத்தனை எளிமையான மொழிநடை பலருக்குப் படிக்க முடியாததாகக்கூட கருதப்படுகிறது. ஒரு வகையில் அந்தரத்தில் நிற்பதாயினும் அசோகமித்திரனின் நடை அவரது கதையுலகிற்கு மிகச் சரியாகவே பொருந்திவிடுகிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்' எனும் ஜெயமோகனின் கருத்து இங்கே எண்ணிப் பார்க்கத் தக்கது.

என்னைப் பொறுத்தவரை அவரது நடைக்கு, ஒரு பேட்டியில் திரு.அ.முத்துலிங்கம் அவர்கள் குறிப்பிட்டதே பொருத்தமானது என்று தோன்றுகிறது:

'Raymond Cover என்றொரு எழுத்தாளர் அற்புதமாக எழுதுகிறார். மிகச் சாதாரண எழுத்து. சாதாரணமான சம்பவங்கள். ஆனால் அவரைப் படிக்கும்போது ஒரு அசௌகரியம் ஏற்படுகிறது. ஏதோ மன உளைச்சல்.என்ன என்று தொட்டுச் சொல்ல முடியாது. ஆனால் மறக்கவும் முடியாது. கூரிய இரண்டு சொற்களில் ஒரு பக்கத்தில் சொல்ல வேண்டியதை அவர் சொல்லி விடுகிறார்.'

1977 ஆம் ஆண்டின் 'இலக்கியச் சிந்தனை' யின் விருது பெற்ற இந்நாவல் இப்போது 'கிழக்கு பதிப்பக'த்தாரால் செம்பதிப்பாக அழகாக வெளியிடப் பட்டுள்ளது. 0

நூலின் பெயர் : 18வது அட்சக்கோடு.
ஆசிரியர் : அசோகமித்திரன்.
வெளியீடு : கிழக்குப் பதிப்ப்கம், சென்னை.