Tuesday, June 21, 2005

நினைவுத் தடங்கள் - 33

எங்கள் பெரியப்பா முரடர். மனைவி, பிள்ளை யாரும் எதிரில் நின்று பேச முடியாது. வாயில் வண்டைச்சொல்தான் திட்டுவதற்கு வரும். ஆட்களையெல்லாம் வசவுகளால் தான் அழைப்பார். அவர் முசுடு என்பதால் ஊரிலும் யாரும் கிட்டே நெருங்குவதில்லை. பேசவே முடியாது என்றால் அவருக்குப் புத்திமதி சொல்ல முடியுமா? அவரைவிட மூத்த, அடுத்த தெரு சொந்தம் ஒருவர்தான் - அவரை ஒருமையிலும், 'டா' போட்டும் பேசக்கூடியவர். மனைவி மக்களுக்கு முக்கியத் தேவை என்றால் கூட அவர்தான் வந்து சொல்ல வேண்டும். ஊர்ப்பரம்பரை பெரிய மனிதர் என்ற கர்வம் நிறைய. அதனால் தெருவில் நடக்கும்போது எங்கோ வெகு தூரத்தில் பார்வை- அரிமா பார்வை போல - பார்த்தபடி
நடப்பாரே தவிர, பக்க வாட்டில் யாரையும், யார் வீட்டையும் பார்க்க மாட்டார். யாரிடமும் வழியில் நின்று பேசமாட்டார். யார் வீட்டுத் திண்ணையிலும் உட்கார மாட்டார். ஊர் `உஷார் கமிட்டி'த் தலைவர் என்பதால் பஞ்சாயத்து எதுவும் அவரிடம் தான் வர வேண்டும்.

எங்கள் வீட்டெதிரில் ஒரு கல் -விளக்குத் தூண் வெகு நாட்கள் நின்றது இப்போதும் நினைவில் நிற்கிறது. அதற்குக் காரணம் அந்தத் தூணின் முக்கியத்துவம் தான். ஊரில் ஏதும் திருட்டு நடந்து ஆள் பிடி பட்டால் அந்தத் தூணில் கொண்டு வந்து கட்டி விடுவார்கள். மந்தைப் புளிய மரத்திலிருந்து ஒருபாகம் அளவிலான மிலார் கள் பத்துக்குக் குறையாமல் வெட்டிக் கொண்டு வந்து, திருட்டுக்கொடுத்தவர் எங்கள் குறட்டில் வைத்து விடுவார். பெரியப்பா உள்ளே இருப்பார். தெரு நிறைய, வேடிக்கை பார்க்க ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் ஒரு பெரிய பயங்கரக் காட்சியைப் பார்க்கப்போகிற படபடப்பில் இடித்துக் கொண்டு நிற்கும். பெரியப்பா வெளியே வருவதை கண்கொட்டாது அத்தனை பேரும் எதிர் பார்த்திருப்பார்கள். உள்ளே தகவல் போய் வெகு நேரம் ஜனங்களைக் காக்க வைத்த பின்னரே, இடுப்பு நாலுமுழ வேட்டியை நெஞ்சுவரை உயர்த்திக் கட்டியபடி தொண்டையைக் காறியபடி வருவார். அவருக்கு ஆஸ்த்துமா தொந்தரவு உண்டு. அதனால் எப்போதும் தொண்டையைக் காறியபடியே இருப்பார். கச்சலான உடம்பு. அதில் பலம் ஏதும் இருக்குமா என்று சந்தேகம் ஏற்படும்.

அவர் தலை தெரிந்ததும் 'கப்'பென்று கூட்டம் சப்தமெழுப்பாமல் அடங்கி புலிக் கூண்டிலிருந்து வரும் புலியைப் பார்க்கிற அச்சத்தோடு பார்க்கும். பெரியப்பா தலை உயர்த்தி கல் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனைத் தீர்க்கமாகப் பார்ப்பார். பூனை எலியைப் பார்க்கிற மாதிரி இருக்கும். அதிலேயே அவனுக்குப் பாதி உயிர் போய்விடும்.

'ஹ¥ம்......' என்றொரு ஹ¥ங்காரம் எழும். ''என்ன ?'' என்பது போல புகார் சொன்னவனைப் பார்ப்பார். அவன் தன் களத்தில் அல்லது வீட்டுக்குள் ராத்திரி நெல் திருடியதைச் சொல்லவும், நிமிர்ந்து குற்றம் சாட்டப்பட்டவனைப் பார்த்து, ''டலே! நெஜமா?" என்று கர்ஜிப்பார். எவ்வாளவு நெஞ்சழுத்தும் உடையவனாலும் அவர் முன்னே பொய் சொல்ல முடியாது. நடுங்கியபடி, 'சாமி! இனிமே செய்யமாட்டேன் சாமி!'' என்று பயத்தோடு அலறுவான்.

அவ்வளதுதான்! 'வீச்'சென்று பாய்ந்து அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் புளிய மிலாரை அள்ளிக் கொண்டு அவனெதிரில் போய், கண் மூக்குப் பாராமல் சரமாரியாக விளாசுவார். ஏதோ சாமியாடியின் ஆவேசம் போல வெறித் தாக்குதலாக அது இருக்கும். பரிதாபத்துக்குரிய அந்த மனிதனில் ஓலம் தெருவே எதிரொலிக்கும். குழந்தைகள் அக் குரூரத்தைப் பார்த்து வாய் விட்டு அழாமல் தேம்புவார்கள். அதிகபேருக்கு
அது பார்த்துப் பார்த்து மரத்துப் போன காட்சி. சிலை போல- பாரதி எழுதியபடி 'நெட்டை மரங்களாய்' நின்று பார்த்திருப்பார்கள். கை ஓய்கிறவரை, அல்லது மிலாறுகள் தீர்கிர வரை இந்தச் சித்திரவதை நடக்கும். யாரும் தட்டிக் கேட்பதில்லை; கேட்கவும் முடியாது. அவர்தான் நீதிபதி. அவர் தருவதுதான் தண்டனை. கிரேக்க அரசர்கள் அடிமைகளைப் புலியுடன் மோதவிட்டு அந்தக் குரூரத்தை ரசித்த அந்தக் காலத்து மாக்களைப் போலத்தான் இந்த இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்திலும் மக்கள் மாக்களாக இருந்தார்கள். போலீஸ் எல்லாம்
இப்படிபட்ட கிராமங்களில் நுழைந்து தலையிடுவதில்லை. இது போல ஊர்ப் பெரிய மனிதர் வைத்ததுதான் சட்டம்.

இதனால் எங்கள் பெரியப்பாவின் வம்சத்தையே ஊர் மறைவாகத் தங்களுக்குள்ளே கரித்துக் கொட்டும். அதற்காகப் பெரியப்பா ஒரு நாளும் கவலைப் பட்டதில்லை. ஆனால் அவரது வாரிசுகள் பின்னாளில் கவலைப்பட நேர்ந்ததுதான் காலத்தின் கட்டாயம். ஆனல் அந்தக் கொடூரத்துக்குச் சாட்சியாய் நின்ற கல்க் கம்பம் இன்றும் மக்கள் நாவில் புழக்கத்தில் இருப்பது தான் வரலாற்றின் நிதர்சனம். பஞ்சாயத்து, போலீஸ், நீதிமன்றம் என்று வந்துவிட்ட இந்த நாளிலும், வழக்கு என்று வந்து வாய்ப் பேச்சில் ஒருவன் கட்டடையாத தருணங்களில் அவர்களை அற்¢யாமலே, மனதில் பதிந்து விட்ட வாசகமாய், '' எலேய்! எதாவது மறுத்துப் பேசுனே- நடுத்தெருப்பிள்ளை வீட்டுக் கல்த்தூணுலே
புடிச்சுக் கட்டிடுவேன்!" என்றுதான் வரும். (எங்கள் தெருதான் நடுத்தெரு; நடுத்தெருப்பிள்ளை வீடு என்பது எங்கள் வீட்டைக் குறிக்கிறது) ஆனால் சொன்னபடிக் கட்டிவைக்க அந்தத் தூண் தான் இப்போது அங்கு இல்லை!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Thursday, June 16, 2005

உவமைகள் வர்ணனைகள்- 41

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 41

ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து:

1. வானத்தில் இரவின் கதவுகள் திறக்க ஆரம்பித்து உள்ளிருக்கும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல காட்சிக்கு வரலாயின. பிறகு நல்ல இருட்டில் விண்ணிலும், மண்ணிலும் விளக்குக் கற்றைகள் பளிச்சென்று பூத்தெழுந்தன.

- 'அரிசி விலையில் திருமணங்கள்' கதையில்.

2. வருஷங்கள் செல்கின்றன என்றால் இன்பங்கள் செல்கின்றன என்றுதானே அர்த்தமாகிறது? அன்பானவர்கள் மறைகிறார்கள். அழகானவை சிதைகின்றன. கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு துன்பத்தை, ஒவ்வொரு நிராசையை, ஒவ்வொரு நாசத்தை மனதில் பொருத்திவிட்டுச் செல்கிறது. வருஷங்களூடே நினைவுச்சுமை அதிகரிக்கிறது. நினைவு எல்லாம் கானல் நீர். ஆறுதலுக்காக அதை அணுகினால், துன்பமாகக் காட்சி அளிக்கிறது. போய்விட்ட இன்பங்களால் வறண்ட உள்ளத்தை வாட்டுவதுதான் நினைவு.

- 'ஒன்றே வாழ்வு'.

3. அப் பெண் மாநிறம். விசிறி போன்ற விரிந்த ரப்பை மயிரின் பின்னால் இரு கருவிழிகள். எண்ணெய் அறியாத வறண்ட கூந்தல்.அதிக உயரமோ சதையோ இல்லாத மென்மையான இளம் தேகம். வயதிற்குரிய ஒரு இயற்கையான பொலிவு. ஆனால் நீளமும், அகலமும் அற்ற அச் சிறு வடிவம் ஆழத்தினால் ஆக்கப்பட்டது போன்ற பிரமையை உண்டாக்கியது.

- 'பாசமும் பயனும்'.

4. தன்னைச் சுற்றித் தெறித்த முரணின் பொறிகளிலிருந்து நீலாவுக்கு, இந்த நெருப்பு எப்படி இத்தனை வருஷங்களான பின்னும் ஆறவில்லை என்று வியப்பாக இருந்தது. கிழவர்களின் அமைதியான பரஸ்பர அலட்சியத்தைப் பார்த்து, ஆழமான அன்பைப் போலவே ஆழமான வெறுப்பும் நிலையானதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.

- 'சந்திப்பு'.

5. ஒரு கணம் முகுந்தன் அவள் முகத்தை மனதில் பதித்துக் கொள்பவன் போல் மௌனமாய் உற்று நோக்கினான். பார்வையும் குரலும் பூக்களாய் அவன் மேல் உதிர்ந்தன.

- 'அடிக்கடி வருகிறான்'.

6. அவள் அழகியா இல்லையா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்த அழகு அது. ஒவ்வொருவரும் தம்தம் மனோபாவத்துக் கேற்ப அர்த்தமிட்டுக் கொள்ளத் தக்க பலமுகக் கவிதை போன்ற அழகு.

- 'நான்காம் ஆசிரமம்'.

7. காட்டராக்ட் கண்ணாடிக்குப் பின்னேயும் குளிர்ச்சி மாறாத பார்வை. சாப்பாட்டு நேரம் போக மற்ற சமயங்களில் பொய்ப் பற்களைக் கழற்றி வைத்து விட்டுப் பொக்கை வாயோடு சிரிக்கும் சிரிப்பு. இன்னும் அடர்த்தி குன்றாத நரை முடியில் சாம்பல் 'பிரமிட்'. மாநிற....... - வர்ணிப்பானேன்? இவற்றிலா மாமா அறியப்படுகிறார்? இவை மாமாவுடையவையாதலால் இவை அழகுடையவை; பொருடையவை.

- 'ரோஜா பதியன்'.

8. அன்பு மகா பயங்கரமான ஒரு நெருப்புக்குச்சி. அது இரண்டு ஆத்மாக்களைக் கொளுத்தி உருக்கி ஒன்றாக இணைத்து வார்த்து விடும்.

- 'அத்தை'.

9. வண்டி ஓட்டத்தினால் உள்ளே வீசிய காற்றையும் மீறி அவர் முகத்தில் வேர்வை மின்னியது. ஒவ்வொரு வேர்வைத் துளியும் 'பெண்ணின் தந்தை' என்று பறை சாற்றுவது போல இருந்தது.

- 'புவனாவும் வியாழக் கிரகமும்'.

10. ஈட்டிகளாய்ப் பார்வைகள் அவளைத் துளை செய்தன. பெண் பார்வைகள், ஆண் பார்வைகள்- அவளைப் பார்த்த யாவருமே, அவளது முகத்தைத்தான் பார்த்தார்கள் என்று சொல்லி விட முடியாது. கண்ணாலேயே கற்பழிக்கும் கிழங்கள்.

- 'பன்மை'.

- மேலும் வரும்.

- அடுத்து பாலகுமாரன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Monday, June 13, 2005

களஞ்சியம் - 19

எனது களஞ்சியத்திலிருந்து - 19

விவேகசிந்தாமணி விருந்து - 8

மயக்க அணி:

ஒரு பொருளை மற்றொரு பொருளாக எண்ணி மயங்கிச் செயலாற்றுவதை புனைந்து கூறுவது மயக்க அணியாகும். விவேகசிந்தாமணியில் மகிழ்ச்சியூட்டும் மயக்க அணியை உடைய பாடல்கள் சில உள்ளன.

ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் 'கெண்டைமீன்,கெண்டைமீன்' என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.

தண்டுலாவிய
.....தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை
.....முகத்தருகு ஏந்தினாள்;
'கெண்டை' 'கெண்டை'
.....எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள்
.....நின்று தயங்கினாள்.

மயக்க அணியை அற்புதமான பாடலால் புனைந்துரைக்கிறார் கவிஞர்.

இன்னொரு பாடலில் கற்பனை செய்யத் தெரியாத ஆறறிவில்லாத ஜீவன் ஒன்றின் மயக்கத்தை பார்க்கிறோம்.

ஒரு பெண் நாவல் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தாள். மலர்களிலுள்ள தேனையுண்ட கரிய வண்டுகள் மயங்கி வழியில் கிடந்தன. அவற்றைக் கண்ட மங்கை அவற்றை நாவற் பழங்கள் என்று நினைத்து ஒன்றைத் தன் பெரிய கையில் எடுத்துக் குனிந்து பார்த்தாள். அப்போது அந்த வண்டு அவளது அழகிய முகத்தை வானத்துச் சந்த்¢ரன் அருகில் வந்து விட்டது என்று எண்ணி விட்டது. தான் கிடந்த அவளது சிவந்த கையைத் தாமரைமலர் என்று மயங்கி, சந்திரன் வந்தால் தாமரை மலர் குவிந்து விடுமே எனப் பயந்து 'குப்'பென எழும்பிப் பறந்து விட்டது. அதைக் கண்ட மங்கை 'பறந்தது வண்டோ, பழமோ? என்ன இது இது புதுமையாய் இருக்கிறது!' என்று மயங்கினாளாம்.

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
.....தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
.....தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்
வான் உறு மதியம் வந்ததென்று எண்ணி
.....மலர்க் கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
.....புதுமையோ இதுவெனப் புகன்றாள்.

இன்னொருவித மயக்கத்தை வேறொரு பாடலில் காணலாம். தலைவன் ஒருவனின் கூற்றாக இப் பாடல் உள்ளது.

'வானத்தை முட்டும் உயரமான மேடை ஒன்றின்மீது என் தலைவி நின்று உலாவினாள்.அப்போது அவளது முகத்தை முழுமதி என்று நினைத்து நவக்கிரகங்களுள் ஒன்றான இராகு என்ற பாம்பு விழுங்குவதற்காக நெருங்கி வந்தது. அதைக் கண்டு பதறிய, பாகுபோன்ற இனிய மொழ்¢யுடைய என் காதலி பாதம் நோக நடக்க, அவளது சாயலைக் கொண்டு அழகிய தோகைமயில் எனப் பயந்து பின்வாங்கிவிட்டது' என்கிறான் தலவன்.

மாகமா மேடை மீதில்
.....மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்று எண்ணி
.....இராகு வந்து உற்ற போது
பாகுசேர் மொழியினாளும்
.....பதறியே பாதம் வாங்கத்
தோகை மாமயில் என்று எண்ணித்
.....தொடர்ந்து அரா மீண்டது அன்றே.

( மாகமா - வானத்தை அளாவும்; ஏகமா மதி - முழுமதி; அரா - அரவம், பாம்பு; அன்றே - அசை )

- இப்படி இன்னும் அழகழகான அணி நலன்கள் நிறைந்த பாடல்கள் விவேக சிந்தாமணியில் நிறைந்துள்ளன.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, June 08, 2005

உவமைகள் - வர்ணனைகள் - 40

நான் ரசித்த உவமைகள்- வருணனைகள் - 40

க.நா.சுப்ரமண்யம் படைப்புகளிலிருந்து:

1. ஒருதடவை பி.சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. சுந்தரம் பிள்ளையிடம் ஈடுபாடுள்ளவர் வையாபுரிப் பிள்ளை. அவர்தான் தமிழில் மறுமலர்ச்சிக்கு வித்தை ஊன்றியவர் என்கிற நினைப்பு உண்டு அவருக்கு. இலக்கியத் தரமே இல்லாத நூல் என்பது என் கட்சி. நாடகமாகவோ, கவிதையாகவோ, வெறும் கதை என்கிற அளவில்கூட வெற்றி பெறாத நூல். ஓடாத காளை மாட்டை வாலைக் கடித்து ஓட வைப்பது போலத் தமிழை ஓட வைக்கிறார் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை என்று நான் சொன்னபோது அவருக்குக் கோபமே வந்து விட்டது.

- 'வையாபுரிப் பிள்ளை - க.நா.சு பக்கம்'.

2. மனிதச் சிந்தனைகள் எல்லாமே ஓரளவுக்கு நன்கு சீல் வைக்கப் பட்ட இருட்டுக் கூடங்களாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் தெரிந்து கொள்வது நல்லதுதானே?

- 'கிருஷ்ணன் நம்பி - க.நா.சு பக்கம்'.

3. இப்போது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பொறையார் திராட்¨க்ஷயின் புளிப்பு மாறிவிட்டது. திரா¨க்ஷயின் தலைமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து புளிப்பை முழுவதும் இனிப்பாக மாற்றிவிட்டன- மனிதர்களின் மிகவும் கசப்பான நினைவுகள் கூட இனியவையாக மாறிவிடுவது மாதிரி.

- 'ஏ.கே.செட்டியார் - க.நா.சு பக்கம்'.

4. இலக்கியத் தரத்தை எட்டுவதற்கு ஏதோ ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. அதேபோல் சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. ராஜாஜிக்குப் பல சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கு வேண்டிய சக்தி இருந்தது என்பதுதான் விஷயம். இலக்கியத் தரத்துக்கு வேறு ஆளைத் தேடிக் கொள்ளலாம்.

- 'ராஜாஜியும் நானும் - க.நா.சு பக்கம்'.

5. மனித குலத்துக்கெல்லாம் பின்னாலுள்ள ஆத்மஞான மானஸ்ரோவரை எட்டி அணுகக் கற்றுக் கொண்ட கவிக்குக் கவிதை அற்புதமாகத்தான் அமையும் - அது டாண்டேயானால் என்ன, ஷேக்ஸ்பியரானால் என்ன?

- 'விமர்சனக்கலை'.

6 . மேட்டுத்தெருப் பெண்களைப் பெண்கள் என்று சொல்வது பொருந்தாது. அவர்களைப் பேய்கள் என்று சொல்வதும் ..... பேய்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடலாம்.

- 'பொய்த்தேவு' நாவலில்.

7. குறட்டுக்குக் கீழே வாசல் 'கேட்'டுக்குக் காவல் போல இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. எதையோ எதிர் பார்த்து வேண்டுபவை போல, வானத்தை நோக்கித் தூக்கும் பூமாதேவியின் கரங்கள் போல அவை ஆடாமல் அசையாமல் நின்றன.

- 'சர்மாவின் உயில்' நாவலில்.

8. அவளுடைய சிந்தனைத் தேருக்கு எண்ணற்ற அச்சுகள் இருந்தன. அவள் சிந்தனை களை அலைமோதும் கடலுக்கு ஒப்பிடலாம். அந்தக் கடலில் எண்ணற்ற சிற்றாறுகள் வந்து கலந்தன.

- 'சர்மாவின் உயில்'.

9. புயல், பெரும் புயல் அடித்தால் மரம் சாய்ந்துவிடும். நாகரீகம் என்ற புயல் அடித்துப் பல குடும்பங்களை வேரோடு கல்லிக்கொண்டு போய் நகரத்திலே சாய்த்து விட்டது.

- 'சர்மாவின் உயில்'.

10. எல்லாம் மாற வேண்டியதுதானே? காலம் என்கிற ஆற்றிலே விழுந்து உருமாறிப் போவதற்குத்தனே மனிதன் பிறந்திருக்கிறான்?

- 'சர்மாவின் உயில்'.

- மேலும் வரும்.

- அடுத்து ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.