Tuesday, August 15, 2006

கடித இலக்கியம் - 17

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 17

நாகராஜம்பட்டி
12.2.77

அன்புள்ள சபா,

வணக்கம். நான் எழுதிய ஒன்றன் பின் ஒன்றான இரண்டு கடிதங்களும் கிடைத்திருக்கும். அவற்றைப் படித்து, நான் ஏதோ மிதமிஞ்சிய சந்தோஷத்தில் இருப்பதாகவோ, அல்லது தவிர்க்க முடியாத பெருந்துயரத்தில் இருப்பதாகவோ கருதிவிட வேண்டாம். இரண்டுமே மாயை என்கிற மனப்பக்குவமும் எனக்கு உண்டு. மரணம் வரைக்கும் வாழ்க்கைக்கு இந்த இரண்டில் ஏதோ ஒன்றை நாம் பூசி இயங்குகிறோம். அதுதான் பிரத்தியட்சமானது.

நில்லாத விளையாட்டின் மகிழ்ச்சியுடனும், நின்று நினைத்தால் எவ்வளவோ துயரமானதுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. இதில் ஒன்றை மட்டும் ஊர்ஜிதம் செய்து கொள்ளும் ரஸாயனம் அவரவர் உள்ளத்திலேயே உண்டு. நீங்கள் என் கடிதங்களை எதற்கோ இவ்வளவு எதிர்பார்ப்பானேன்?

***** ***** *****

20-2-77

உங்களுக்கு என் கடிதங்கள் தடைப்படுமானால், உலகவாழ்வின் அலைச்சல்களில் நான் ஊடாடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். அதனிடையிலும் ஒரு நேரம் கண்டு உங்களுக்கு எழுதுவதை நிறுத்தமாட்டேன் (இன்ஷா அல்லாஹ்!). ஒருவிதத்தில் உங்களுக்கு எழுதுவது எனக்கும் தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது.

உங்களிடமிருந்து பதில் வரத் தாமதமானதுதான் எனக்கு இம்முறை எதிர்பாராததாக இருந்தது. என் ஸ்திதியிலேயே உங்களையும் வைத்துச் சமாதானம் அறிந்து கொண்டேன்.

இம்முறை உங்கள் கடிதம் - இன்னும் வேறு ஏதாவது கூட நீங்கள் எழுதியிருக்கலாம் - பெரும் பகுதியும் உத்தியோகம் பற்றியும் அதை விடுவது பற்றியும் இருந்தது. விட முடியாத, விடக்கூடாத நிலையில் இருக்கிறோம் என்பது உண்மைதான். அவசரப்பட்டு விடமாட்டேன். ஆனால் நமக்கென்று வரம்புகள் உண்டு. விடமுடியாவிட்டாலும், இதில் தொடர்ந்து நீடிப்பதற்காக நாம் தொந்தரவு பட்டுக் கொள்ளத்தான் வேண்டும். அதற்குத் தயாரில்லாமல், ஊமை போல் அடங்கி வாழ்ந்து கணவன் மீது மரியாதையற்ற - பயத்தை மாத்திரம் வைத்திருக்கும் கற்பில்லாத மனைவி போல் நாம் நடந்து கொள்ள முடியாது. நல்ல அதிகாரிகள் நம்மை நன்கு புரிந்து கொள்வார்கள். ஓர் அதிகாரிக்கு, அவர் இதுவரை சந்தித்திருக்கும் எல்லா செகண்டரி கிரேடு ஆசிரியர்களையும் போலவே எதிர் பார்க்க என்ன உரிமை? அவர் அப்படி எதிர்பார்ப்பதும் ஒரு நியாயம் என்றால், அப்படி நான் இல்லாமலிருப்பதும் எவ்வளவு பெரியதோர் நியாயம்?

- கொஞ்சம் பாதிப்புகளுக்கு உட்படலாம். ஆனால், சில நேரங்களில் உடம்பில் ஒரு பாகம் லேசாக வலிக்கும்போது, அந்த வலி ஒரு சுகம் போலவும் துணை போலவும் கூடத் தோன்றுவதுண்டு. அவ்விதமானதாக அந்தப் பாதிப்புகளை எதிர்பார்க்கத் தயாராகி விட்டேன்.

***** ***** *****

24-2-77

வாழ்வின் விசித்திரங்களை - அது அதன் இயல்புமாம் - எவ்வெவ்வாறோ விளக்கிச் சொல்லலாம். உயர்ந்த மகிழ்ச்சிகளும் ஆழ்ந்த துயரங்களும் உண்மையில் தம்முள் என்ன கலப்புகளைக் கொண்டிருக்கின்றன என்று எப்படியும் விவரிக்கலாம். மரணத்திற்கு என்ன சொல்வது? அது பெரும் மகான்கள் தொட்டுப் பரிசீலித்த விஷயம். அதன் விஷயத்தில் முடிவு எடுப்பதில் மட்டும் நான் இப்போது எல்லாம்
'அம்பேல்' வைத்து விட்டிருக்கிறேன். இதைத் தவிர என் கணக்கீடுகள்(calculations) எல்லாம் என்னளவில் ஊர்ஜிதமாக உறுதியானவை. விடை தப்பு என்றால் மட்டும் - தப்பான விடை என்று மட்டும் எப்படித் தெரிந்துகொள்வது? - பின்னால் அது ஒப்புக் கொள்ளப்பட்டு உண்மையான வேறு வழிகளில் நீளும். ஆனால் உண்மையும் பல வழிகளில் வந்து சேர்கிற கேந்திரம் தானே? நாம் இதுவரை பெற்ற ஞானத்துடன் இப்போது கொள்கிற உணர்ச்சிகளுடனும் மட்டும் தொடர்ந்து வாழவேண்டி இருக்கிறோம்.

இதெல்லாம் எதைகுறித்துத் தங்களுக்குப் பதில்களாக எழுதப்படுகின்றன என்று உண்மையில் பலவற்றை நான் குறிப்பிட முடியும். இது குடும்பக் கட்டுப்பாடு விஷயம் பற்றியோ, அல்லது அதற்கும் சேர்த்து அமையட்டும் என்றோ எழுதப் பட்டதன்று. நான்கு நாட்கள் கழித்து இன்னொரு மனநிலையில், முற்றிலும் புதியதோர் விஷயத்தை உள்மனம் சதா முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது எழுதுகிறேன்.

மனநிலைகளும் ஆழங்களும் என்ன மந்திர ஜாலம் பண்ணுகின்றன! ஒரு காலையின் களிப்பு மாலையில் மாறுகிறது. மற்றொரு மாலையின் துயரம் காலையில் அண்ட முடியாமல் தூர ஒதுங்கிக் கொள்கிறது.

நனவினால் நல்காரை நோவர் கனவினால் காணாதவர் என்று, திருக்குறளை எத்தனையோ உடையணிவித்துப் பார்த்து உணரலாம். இடையில் 'காதலர்க் காணாதவர்' என்று வரும். காதலர் என்பது ஒரு நோக்கத்தின் உருவகம் என்று நான் இங்கு கொள்கிறேன். அதாவது லக்ஷ்யத்தின் - நீண்ட லக்ஷ்யத்தின் அல்லது அந்த க்ஷணத்தின் லக்ஷ்யத்தின் உருவகம். அதைக் கனவினால் காணாதவர் நவினால் நல்காரை நோவர். நாம் நோவதுண்டோ? என் லக்ஷ்யம் யதார்த்தத்தில் என்னை வாழவைக்கா விட்டாலும் அதை நான் நோவேனோ?

- பி.ச.குப்புசாமி

Tuesday, August 08, 2006

கடித இலக்கியம் - 16

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 16

நாகராஜம்பட்டி
7-2-77

அன்புள்ள சபா,

வணக்கம்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எழுதி, இன்றுதான் ஒரு கடிதம் உங்களுக்குத் தபாலில் சேர்த்தேன். இன்று மறுபடியும் இதை எழுதுகிறேன். எந்தச் சூழ்ந்¢லையில் இருந்து கொண்டு நமது சித்தம் இயங்குகிறது என்பதற்குச் சான்றாக, இந்தக் கடிதத்தில் சில விஷயங்களைப் பிரஸ்தாபிக்கப் போகிறேன்.

முன் எப்பொழுதையும் விட இப்பொழுதுதான் நமக்கும் நமது உத்யோகத்திற்கும் அனுசரிக்கவொண்ணாததோர் முரண்பாடு எழுந்துள்ளது. ஓர் ஆசிரியன் என்கிற முறையில் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு அமுல் முறை எனக்குச் சம்மதப்படமாட்டேன் என்கிறது. உள்மனத்தின் ஆட்சேபணைகள் சமயங்களில் உரக்க வெளியே வந்து விடுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டு கேஸ¤கள் எப்படியாவது போட்டு ஆக வேண்டுமாம். இலக்கைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று தயை செலுத்தி அரசாங்கம் உத்தரவிட்டிருந்தாலும் அதிகாரிகள் தங்கள் கைவசம் உள்ள அதிகாரங்களை நமது கழுத்துக்குப் பெருங்கயிறாகத் திரிக்கிறர்கள். இல்லாவிட்டால் என்னென்னவோ செய்வார்களாம். கன்னா பின்னாவென்று நம் பணியாற்றும் இடங்களைக் கலைப்பார்களாம். மாறுதல் கொடுப்பார்களாம். மிரட்டுகிறார்கள்.

இது அரசாங்கத்துக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். அது செய்கிற நல்ல காரியங்கள் கூட மறைகிற அளவுக்கு இந்தக் குடும்பக் கட்டுப்பாடு திட்ட அமுல் புழுதியை, அதிகாரிகள் வாரி இறைக்கிறார்கள். ஒவ்வொருவரும் 'நான் என்ன செய்யட்டும்' என்று கையை மேலே சுட்டிக் காட்டுகிறார்கள். கடைசியில் இந்த ஆணை எங்கேதான் பிறக்கிறது?

நாம் கொண்டிருக்கும் அச்சத்திலிருந்து பிறக்கிறது மனித இனவிருத்தியின்மீது நாம் கொண்ட அச்சம்.

- இது சம்பந்தமாகப் பேசிக்கொண்டு போவது வேறு கிளை. அது போகட்டும். இப்போது நாம் என்ன செய்வது?

இந்த உத்தியோகம் நாம் வகிக்கத் தகுமா? வகித்துத்தான் தீர வேண்டுமெனில் அதற்கப்புறம் நம் அந்தஸ்து - ஒரு குருவின் பீடம் - என்னாவது? நம் இலக்கியத்தின் குரல்கள் எல்லாம் போலியாகி விடாதா? அப்புறம் நமக்கு இலக்கியம் தான் எதற்கு? நாம் எதைப் பற்றி எந்த அடிப்படையில் பேசுவது?

இந்த உத்தியோகமே இல்லையெனில் நமது பெண்டு பிள்ளைகள் என்னாவது? நிலம் நீர் உள்ளவர்கள் எல்லாம் இப்போது மஹா பாக்கியவான்கள். நமது தாய் தந்தையர் என்னாவது?

திருவள்ளுவனுக்கு என்ன திடம்!

"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"

இதை ரசிக்கும் நமது ரசனை கூடவல்லவா அப்புறம் போலி? என்ன செய்வது?

தூரத்தில் ஓர் அழைப்புக் குரல். அழைப்பதாகக் கூட உறுதியாகச் சொல்ல முடியாது. அது நம்முடன் பேசுகிறது. இந்த உத்தியோகத்தை ராஜிநாமா செய்து விடுவது மேல் என்கிறது. நமது எழுத்துத்துறை சம்பந்தப்பட்ட வேறு ஏதாவதோர் எளிய சம்பளத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு வேறு மாதிரியாக வாழ்க்கையை நடத்தத் துணிந்துதான் பார்க்கலாமே, மெதுவாக யோசனை செய்யேன் - என்கிறது. இந்த இக்கட்டிலிருந்து மேலே வழி எப்படியெப்படி பிரியுமோ தெரியவில்லை.

நாமெல்லாம் கொஞ்சம் தைரியவான்களாக இராமல் போய் விட்டோம். எல்லாவற்றிற்கும் அடிப்படையான குறை இதுதான் என்று சிந்தித்துச் சிந்தித்துச் சலிப்புத் தோன்றுகிறது.

ஓர் ஆசிரியன் எங்கே, குழந்தைகள் மீது அவனுக்குள்ள அன்பு எங்கே, போதனையில் அவனுக்குள்ள ஆசை எங்கே, நான் சொல்லுகிறேன் குழந்தைகளே என்று சீடர்களுக்குச் சொல்வவதற்கு அவனுக்குள்ள அதிகாரம் எங்கே, தவம் போல் அவன் வாழவேண்டிய வாழ்நெறி எங்கே - புரோக்கர்களுக்குத்தான் கடைசியில் லாபம் என்பதாக அவன் கிட்டத்தட்டத் தன் ஒரு மாத ஊதியத்தை வாரியிறைத்து ஒரு குடும்பக்கட்டுப்பாடுக் கேஸை அலைந்து திரிந்து அதிகாரிக்குப் பயந்து பிடித்து ஊமைபோல் குமுறும் இந்த அவலம் எங்கே?

இதற்கு என்ன பதில்? என்ன வழி? என்ன தீர்வு? இந்த சிந்தனை தேச விரோதமானதா? எவரிடத்தும் இதை நாம் வெளிப்படுத்தத் தயங்கினால், அடே இலக்கியகர்த்தாவே, உன்னைவிட ஒரு பாமர தைரியம் இந்தத் தேசத்தை உய்விக்கும் போடா என்று சொல்லத் தோன்றுகிறது. இல்லையா?

- பி.ச.குப்புசாமி

Tuesday, August 01, 2006

கடித இலக்கியம் - 15

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 15

நாகராஜம்பட்டி
4-2-77

அன்புமிக்க சபா,

வணக்கம்.

வழக்கமான நினைப்பு உண்டு. திடீரென்று கடிதம் மட்டும் இப்போது நினைத்துக் கொண்டு எழுதுகிறேன்.

எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருங்கள். வாழ்வதற்குப் பல சிரமங்கள் செலுத்தத்தான் வேண்டும். எதனாலும் பாதிக்கப்படாத ஒரு துரிய தூய ஆனந்த நிலையில் மனசை வைத்துக் கொண்டு விட்டால், அந்தப் பீடத்தில் போய் உட்கார்கிற ஒரே ஒரு சிறிய கணத்திலேனு அந்தச் சிரமங்களையெல்லாம் நாம் எளிதாகவே தாங்கிச் செல்லக் கூடும் என்பது புலப்படும். இது அப்படியே என் சொந்த அனுபவத்தில் நான் எடுத்துச் சொல்கிற விஷயம். ஒரு சத்தியத்தை அறிமுகப் படுத்துகிற சர்வ மங்கள அதிகாரத்தோடு இதை நான் சொல்லுகிறேன்.

முழுமனதோடு எந்தக் காரியமும் செய்யுங்கள். உங்கள் சிரமங்கள் தீர்ந்து போவதற்கான நெளிவு சுளிவுகளை நீங்கள் காண்பீர்கள்.

துறக்கத் தயாராகி விடுங்கள். விரக்தியோடு அல்ல. ஒரு காதலனின் விருப்பத்தோடு. உங்கள் சொந்தத் தொல்லை என்று இவ்வுலகத்தில் இன்னும் ஒன்று உருவாகவில்லை என்கிற பிரமிக்கத்தக்க உண்மையை மிக எளிதாக உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்கள் உறவுகள் எல்லா நலன்களும் பெற்று இனிதே சுகித்திருக்கட்டும். அதைக் கண்டு நிற்கிற உங்கள் ஆனந்தங்கள் கணக்கிட முடியாதவை என இருக்கட்டும். அங்ஙனம் துறந்து விடுங்கள்.

நான் சொல்லுகிற நிலை எதுவென்று நான் இன்னும் எப்படியெல்லாம் சொல்லட்டும்? வேதாந்தத் தமிழில் இதற்கு வெகு காலமாகவே சில குறியீட்டுச் சொற்கள் உண்டு. அவற்றை உபயோகிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அவ்வாறுள்ளதே 'துறவு' என்னும் சொல். நான் உங்களை ஒரு நிஜக் காவியோ மானஸீகக் காவியோ கட்டிக் கொண்டு சந்நியாசியாகிவிடச் சொல்லவில்லை. இந்தத் தெளிவு கலந்த பார்வையோடு நான் மேலே சொன்னவற்றில் ஏதேனும் அர்த்தம் தேடுங்கள்.

என்னுடைய வாழ்க்கை மட்டும் எப்படி இருக்கிறது? அதுவும் இவ்வாறாக ஓடுவதாலேயே இந்தச் சமுத்திரத்தில் நான் கலக்க முடிகிறது.

நமது ஆறுகள் ஓடித் தாம் நாடுகிற கடல்களைச் சேரும். நம்பி மகிழுங்கள்.

இந்தக் கடிதத்தில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் எழுதலாம். ஆனால் விண்டுரைக்க முடியாத ஒரு சத்தியத்தின் நாடி இதில் விளங்கினால் போதுமானது.

சபரிமலைப் பயணம் சென்று வந்தோம். இந்தமுறை முழுநிலவு கண்டோம். போதும் என்கிற மாதிரி ஆனந்தத்தின் ருசி எல்லையற்றுத்தான் இருக்குமோ? ஆஹா, பின் ஒருக்கால் நினைத்துப் பார்த்துக் கொண்டால் அற்புதங்களாக நிற்கிற நிகழ்ச்சிகள்தாம் எத்தனை?

தந்தையாரைப் பற்றி எழுதுங்கள். நான் வந்து அவரைப் பார்க்கவா? சூழ்நிலையில் தங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது? நமக்கு மத்தியில் சாங்கியங்கள் இல்லை. நம் இருவருக்கும் சிரமமற்றதோர் - இருப்பினும், அந்தச் சிரமங்களைக் கடந்ததோர் துய்ய மகிழ்ச்சி நிலை எதன்பொருட்டும் வலிந்திழுக்கப் படலாகாது. தந்தையாரிடம் நிறைய ஆன்மீக விஷயங்களைப் பேசுங்கள். அது- சம்பந்தப்பட்ட அனைவரையும் அமைதிப்படுத்தி ஒரு குழந்தையைப்போல் வைத்துக் கொள்ளும். மனித குலம் தனது குழந்தைகளை வளர்த்து வளர்த்து விடுவதையன்றி வாழ்க்கை என்பது வேறு என்ன? சிறப்பாக வளர்த்தவர் தாமும் என்றும் செழிப்பாக வாழ்வார்.

தங்கள் - பி.ச.குப்புசாமி
4-2-77