Saturday, February 24, 2007

கடித இலக்கியம் - 46

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 46

திருப்பத்தூர்.வ.ஆ.
22 - 8 - 96

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பேத்தி பிறந்த செய்தி அறிந்து நண்பர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். தண்டபாணியும் ஆறுமுகமும் கூட தங்களுக்கும் கடிதம் வந்துள்ளதைத் தெரிவித்தனர்.

உடனடியாகப் பதில் எழுதத்தான் உத்தேசித்தேன். வெண்பாவில் குழந்தையை வாழ்த்தலாம் என்று தோன்றியது. அந்த வேளைக்குக் காத்திருந்ததில் இவ்வளவு தாமதமாகி விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.

அகிலனுக்கும் வேதத்துக்கும் எங்கள் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் கூறுங்கள்.

'அகிலத்து வேதத்தின் ஆழ்ந்த உரையாய்
மகிழ்ந்திங் கவதரித்த மகளே! - புகழ்சேர்
மணியாம் உனக்குன் மரபே அமையும்
அணிபிறவும் நீயணி வாய்!'

'குழந்தையர்க் கெல்லாம் குழந்தைகள் தோன்றும்
அழகிதின் உண்டோ அழகு? - குழந்தாய்!
கலக்கக் கலக்கக் கவின்பெறும் வண்ணத்(து)
இலக்கண மாய் நீ இரு!'

வைஷ்ணவிக்கு வரன் இன்னும் அமையவில்லை. சரசுதான் மிகவும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறாள்.

சிவகுமார் SPICல் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி ராஜிநாமா செய்து விட்டான். SQUARE - D என்கிற நந்தனத்தில் உள்ள ஒரு பன்னாட்டுக் கம்பனியில் (Software consultancy) சேர்ந்துவிட்டான்.

ஜுன் 23ல் மருமகளின் வளைகாப்புக்கு நாங்கள் சென்னை சென்று திரும்பினோம். ஸெப்டம்பர் 6 அல்லது 7 தேதியில் பிரசவத்துக்கு நாள் குறித்திருக்கின்றனர்.

JK வை ஜூலை மாத ஆரம்பத்தில் திருச்சியில் சென்று பார்த்ததுதான். அடுத்த வாரம்தான் சென்னை சென்று பார்க்க வேண்டும். அல்லது அவரைத் திருப்பத்தூருக்கு அழைக்க வேண்டும்.

எல்லா விவரங்களையும் விளக்கமாக எழுதத்தான் ஆசை. கடிதம் எழுத இன்னும் தாமதமாகிவிடுமே என்கிற ஜாக்கிரதையினால் இவ்வளவோடு நிறுத்துகிறேன்.

- தங்கள்
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் -45

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 45

3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.

22-3-94

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

ஒருவழியாக, JK மணிவிழா மலருக்கான ஒரு கட்டுரையையும், பசும்பொன் தேவர் மாவட்டம் கிருங்காக்கோட்டையிலிருந்து வெளிவரும் "தொடரும்" என்கிற இதழின் ஆசிரியர் எழுதிக் கேட்டதால், அவருக்கு ஒரு கட்டுரையும் எழுதி அனுப்புகிற பணி, படாதபாடு பட்டு, இன்று மாலைதான் நிறைவுற்றது. இதனிடையில் தாங்கள் அருணாசலத்துக்கு எழுதிய கடித விவரங்களை அறிந்தேன்.

நமது டில்லிப் பயணத்தை அசை போட்டு அது பற்றி எழுதுங்கள். ரிஷிகேஷ், ஹரித்வார் போட்டோக்களை அருணாசலம் முதற்கொண்டு அனைவரும் பாராட்டினர். இரவு பூராவும் செய்த களைப்புமிக்க பயணத்துக்குப் பிறகும், ரிஷிகேஷில் நாம் எவ்வளவு புத்துணர்ச்சியோடு குளுகுளுவென்றிருக்கிறோம் பார்த்தீர்களா? அந்தப் போட்டோக்களை நானும்கூட இன்னும் பார்த்து முடியவில்லை. தாங்கள், JK ஹரித்வாரில் கங்கையில் குளிக்கும் போட்டோ ஒன்றை எனக்கு அனுப்பி உதவ வேண்டும் - நண்பர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக!

ஒய்வு பெற்ற பின்பு தங்களுடைய ஒவ்வொரு நாளும் அலாதியான அழகோடு கழிவதை நண்பர்களுக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறேன். இயன்ற பயணங்களுக்கு எல்லாம் தங்களை இனிமேல் இழுக்கலாம் என்று ஆசை பிறக்கிறது. பாப்பா வசிக்கும் செஷல்ஸ்தீவுக்குச் சென்று வாருங்கள். புதிய வானத்தின் வேறொரு புறத்தில் உள்ள ஒரு புதிய கடலின் எதிரே, பாப்பாவுக்கு நீங்கள் எங்கள் ஆசிகளைக் கூறுகிற பொழுது, எங்கள் ஆசிகளும் மந்திரத்தொனி கொண்டு புதிதாய் ஒலிக்கக் கடவன.

உங்களது நாவல் 'ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது' - புத்தக வேலைகள் முழுமை பெற்றுவிட்டனவா? நமது டில்லிப் பயணம் பற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு, சுவைபட நிறையச் சொன்னீர்களா?

JK 25-3-94 வெள்ளி இரவில் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கும் சேரன் எக்ஸ்பிரஸில் கோவை போகிறார். அநேகமாக நானும் கூடப் போகவேண்டியதாய் இருக்கும். ஞாயிறு இரவு அதே வண்டியில் திரும்புகிறோம். இன்ஷாஅல்லாஹ்!

ஒரு கடிதம் எழுதுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி

ஒரு பின்னிணைப்பு:

சில வெண்பாக்கள் கிறுக்கினேன். உங்கள் மாதிரி நெருக்கமானவர்களோடு அதைப் பங்கிட்டுக் கொள்ள மனம் விழைகிறது.

பொய்....பொய்.....பொய்


நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யினும் பொய்யாகும் போ!

சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொயுன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!

வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என்?

- பி.ச.கு

கடித இலக்கியம் - 44

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 44


3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.

2 - 2 - 94

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் கோவை பாரதியார் பல்கலைக் கழக 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' முடிந்து திரும்பி இருப்பபீர்கள். ஜனவரி 9ஆம் தேதி இரவு புறப்பட்டு, 10ஆம் தேதி காலை 8 மணிக்கு JK வுடன் கோவை வந்து கொஞ்ச நேர அவகாசத்திலேயே கோத்தகிரி புறப்பட்டு விட்டோம். திரும்பி கோவை வரும்போது தங்களை பாரதியார் பல்கலைக் கழகத்தில் வந்து பார்க்க முடியும் என்று நம்பினேன். அது இயலாது போயிற்று.

கருத்தரங்கு பற்றியும், கருத்தரங்கில் தாங்கள் படித்த கட்டுரை பற்றியும், நண்பர் பூவண்ணன் அவர்களைச் சந்தித்தது பற்றியும், இடைக்கால எண்ணங்கள், அனுபவங்கள், முயற்சிகள் பற்றியும் எழுதுங்கள். நிறைய எழுதுங்கள். நானும் இத்தனை நாட்கள் போல் அல்லாமல் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன்.

பிப்ரவரி 13ஆம் தேதி JK சென்னையிலிருந்து புறப்பட்டு டில்லி செல்கிறார்.போன வருஷமே என்னையும் கூப்பிட்டார். என்னால் இயலவில்லை. இந்தமுறை, "நீ வருகிறாய்" அதட்டலாக உத்தரவு போட்டு விட்டார். எனவே போகலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன்.

என்னுடைய இந்தக் கடிதம் இன்னும் கூடத் தாமதமாகி விட்டிருக்கும். திடீரென்று எனக்கொரு நினைவு வந்தது. தாங்களும் டில்லி வந்தால், JKவோடு நாமெல்லாம் ஓர் ஆறு நாட்கள் வித்தியாசமான ஓய்வில் நிறைய அனுபவிக்கலாமே என்று தோன்றிற்று. டில்லியில், பாண்டிச்சேரி ஹவுஸ் என்கிற புதுவைஅரசு மாளிகை யில் தங்குகிறோம். ஓரிரு நாட்கள் JKவுக்கு சாஹித்ய அகாதெமி கூட்டங்கள். பிறகு ஹரித்துவார், ரிஷிகேஷ் என்றும், ஆக்ரா என்றும் சில டிரிப்புகள். ஆரணி நண்பர் ஆனந்தனும், சென்னையிலுள்ள பழனி என்கிற நண்பரும், திப்புசுல்தான் என்கிற நண்பர் ஒருவரும், நானும் - இதுவரை டில்லி செல்ல இருக்கிற நபர்கள் ஆவோம். நான் நம் வெள்ளக்குட்டை ஆறுமுகத்தையும் உடன் இழுக்கலாம் என்று இருக்கிறேன். அருணாசலம் விஷயம் இன்னும் தெரியவில்லை.

- இப்போதைய சூழ்நிலையில், தாங்கள் வருவது எளிது என்றும், தாங்கள் இதை மிக விரும்புவீர்கள் என்று கருதி, தங்களையும் அழைக்கும் எண்ணம் எனக்குத் தலையெடுத்தது. அதற்காகவே, தங்கள் திருப்பத்தூர் வருகையை ஒட்டிய எங்கள் உணர்ச்சி வர்ணனைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, இக்கடிதத்தை எடுத்தவுடன் காரியார்த்தமாகத் தொடங்கி விட்டேன். தங்களுக்கு இது ஓய்வாகவும் இருக்கும். JKவுடனான மிகச் சிறந்த உடனிருப்பாகவும் இருக்கும். நான் உங்கள் இருவருடனும் கூட இருந்த மிகச் சிறந்த பேறு பெரூவேன். இவ்வாறு ஐந்தாறு நாட்கள் Jk, தாங்கள், நான் மற்றும் நண்பர்கள் எல்லாம் உடன் உறையும் இவ்வாய்ப்பு வாழ்வில் இனி எளிதில் நேருமா என்ன?

இது குறித்து உடனே எழுதுங்கள். உடனே எழுதுவது உத்தமம்.

- தங்கள் பி.ச.குப்புசாமி

நினைவுத் தடங்கள் - 38

எனது இளமைப் பருவத்தில் எனக்கு ஓவியத்தில் ஈடுபாடு ஏற்படக் காரணமானவர்களையும், அதற்கான சூழ்நிலைகளையும் முன்பே சொல்லி இருக்கிறேன். கோயிலுக்காக மரச்
சிற்பங்கநளையும் சுதைச் சிற்பங்களையும் செய்த எங்கள் ஊர் அப்பாவு ஆசாரி என்கிற தச்சாசாரியும், எபோதும் காதில் கூர் சீவிய பென்சிலைச் சொருகிக் கொண்டு ஊரில் சுவர் கிடைத்த இடங்களில் எல்லாம் தெய்வ உருவங் கநளை வரைந்து கொண்டிருந்தவருமான அவர் மகன் நடேச ஆசாரியும் தான் எனக்குப் பிள்ளைப் பிராயத்திலேயே ஒவிய, சிற்பக் கலைகளில் மோகத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் அவ்வேலைகளில் ஈடுபட்டிருந்த போது நான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்ததால் அவற்றின் மீது நாட்டம்
ஏற்பட்டது.

கொஞ்சம் வளர்ந்து ஆரம்பப் பள்ளியில் படித்தபோது எனக்கு ஓவியம் வரைய வழிகாட்டியாக இருந்தவர் என்னை விட இரண்டு வகுப்பு மேலே படித்தவரும் எங்கள் ஊர்ப் புரோகிதரின் மகனுமான ராமு என்கிற ராமச்சந்திரன் என்பவர். அவர் ஒரு டிராயிங் நோட்டு வைத்துக் கொண்டு வரலாற்றுப் பாடப்புத்தகத்திலுள்ள அக்பர், சிவாஜி, தாஜ்மஹால் படங்களையெல்லாம் தடியான ஒரு பென்சிலால் அப்படியே அச்சு அசலாய் பெரிய அளவில் வரைந்து எங்களை எல்லாம் பிரமிக்க வைப்பார். நானும் அவரைப் போலவே டிராயிங் நோட்டு வாங்கி அவர் வரைந்த படஙங்களை எல்லாம் வரைவேன். அவர் அதற்காக என்னைப் போட்டியாகக் கருதாமல் நான் வரைந்தவற்றைத் திருத்தித் தருவார். இதனால் எங்கள் நட்பு வளர்ந்தது.

எங்களூர்ப் படிப்பு முடிந்ததும் அவர் மேலே படிக்க வசதியில்லாதாலும் அருகில் மேல்வகுப்புள்ள பள்ளி இல்லாததாலும் சிதம்பரத்தில் அவரது சகோதரி வீட்டுக்குப் போய் அங்கு
அப்போது பிரபலமாய் இருந்த சுதைச்சிற்பியும் ஓவியருமான யான கோவிந்தராஜு என்பவரிடம் அவரது ஓவிய வேலைகளுக்கு உதவியாளராகச் சேர்ந்தார்.அவரிடம் பல ஆண்டுகள் உடனிருந்து சுதைச்சிற்பஙகளுக்கு வண்ணம் தீட்டுவதிலும் சுவர் ஓவியங்கள் வரையவும் தேர்ச்சி பெற்றார். அதற்குள் நான் பள்ளிப் படிப்பெல்லாம் முடிந்து கல்லூரிப் படிப்புக்காகச் சிதம்பரம் சென்றதும் அவருடன் நெருக்கமான தொடர்பும் அதன்மூலம் ஓவிய நுட்பங்களை அவரிடமிருந்து கற்றுக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

என் கல்லூரிப் படிப்பு முடிந்து வீடு திரும்ப்஢யபோது அவரும் சுயமாக ஓவிய வேலைகளுக்குப் போகும் தகுதி பெற்று ஊருக்கு வந்து விட்டார். இப்போது எங்கள் நட்பு மேலும் நெருக்கமாயிற்று. எப்போதும் - தூங்குகிற சாப்பிடுகிற நேரம் தவிர ஒன்றாகவே இருந்தோம். அனேகமாக நான் அவரது வீட்டில்தான் அதிகம் இருந்தேன். அவரது அம்மாவின் பேச்சு எப்போதும் ரசமாக இருக்கும். பேச்சில் அநாயசமாக நகைச்சுவை துள்ளும். உவமைகளும் வருணனைகளும் கதை எழுதுகிறவர்கள் தோற்று விடுவார்கள். அவர்கள் சொல்லும் பழமொழிகளும் சொலவடைகளும் நாம் வழக்கமாய்க் கேட்பதற்கு மாறாய் வித்தியாசமாய் இருக்கும். 'சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்' என்பதை 'வெடிப்புலே விழுந்தது கால் பனம் வெட்டி எடுக்க முக்கால் பணம்' என்பது போல வித்தியாசமாகச் சொல்வது சிரிக்க வைக்கும்.

ஒருமுறை நான் அவர்கள் வீட்டுக்கு, ஊரிலிருந்து வந்திருந்த என் அண்ணன் குழந்தையை - நல்ல சிகப்பு - பளிச் சென்ற வெய்யலில் தூக்கிக் கொண்டு போனேன். துரத்திலேயே
அந்த அம்மா அதைப் பார்த்து விட்டார்கள். நான் நெருங்கியதும் "வா, யாரு அண்ணா கொழந்தையா? காக்கா மொளாப்பழம் தூக்கிண்டு வரமாதிரி இருக்கு!" என்று என் கருப்பு நிறத்தை குழந்தையின் நிறத்துடன் ஒப்பிட்டுச் சொன்னது நக்கலாகப் உறுத்தாமல் அதில் இருந்த உவமை ரசனையை மிகவும் ரசித் தேன்.அப்படி அவர்கள் பேச்சைக் கேட்டுக்கேட்டு எனக்கு என் கதைகளில் அக்ர காரத்து மொழி சரளமாய் விழுவதற்கு உதவியது.

நண்பரின் அப்பா புரோகிதராய் இருந்தாலும் புதிய சிந்தனைகளும் மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் காட்டுகிற செயல் பாடும் உடையவர். கூரைவீடுதான். ஆனால் அதில் அவர்
அரசருக்கான கம்பீரத்துடன் வாழ்ந்தார்.அவருக்குப் படியளக்கிற உள்ளூர்ப் பணக்காரர்களை விட அவர் நாகரீகமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தார். வேத, புராண விஷயங்களை கேட்பவர் வாய்பிளந்து ரசிக்கிற மாதிரியான சொல் வளமும் ரசனையும் மிக்கவர். என் அப்பாவிடம் நான் சிறுவயதில் தமிழ் புராணக் கதைகளையும் தமிழ்க் கவிதைகளையும் கேட்டது
என் எழுத்துக்கு உரமாக அமைந்த மாதிரி அவரிடம் கேட்ட சம்ஸ்கிருத இலக்கியக் கதைகளும் கருத்துக்களும் கூடப் பின் பலமாய் உதவுகிறது.

எங்கள் ஊரில் முதன்முதலாய் கிராமபோன் வாங்கி ஊரே அவர் வாசலில் நின்று பிரமிக்க வைத்தது அவர்தான். ஒற்றைக் குதிரை பூட்டிய சின்ன ரேக்ளாவில் தான் அவர் பக்கத்துக்
கிராமங்களுக்குப் புரோகிதத்துக்குச் செல்வார்.அதை வேடிக்கை பார்க்கவே சிறுவர்கள் அவர் வீட்டுக்கு முன்தினமும் கூடி நிற்பார்கள்.

அவர்கள் வீட்டில் அனைவருமே நல்ல சங்கீத ரசனையும் குரல் வளமும் உடையவர்கள். நண்பர் நன்றாகப் பாடவும் மிமிக்ரி செய்யவும் வல்லவர். அதனால் எங்காவது கச்சேரிக்குப் போய்வந்தால் அதே பாணியில் அச்சு அசலாய் முக சேஷ்டை களுடன் எனக்குப் பாடிக் காட்டுவார். மதுரை மணி ஐயரின் சங்கீதத்தில் எனக்கு ருசி ஏற்பட்டது அப்படித்தான். சினிமாவுக்குப் போய் வந்தாலும் அதன் கதை பாடல் முழுதும் அப்படியே சொல்லி உடனே அப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை உண்டாக்கி விடுவார். அப்போதைய சினிமாக்கள் எல்லாம் 40 பாடல்கள், 50 பாடல்கள் என்று இருக்கும். பாபநாசம் சிவன் பாடல்களை தியாகராஜ பாகவதரும், பி.யூ.சின்னப்பாவும்பாடி, தமது அற்புதமான குரல் வளத்தால் சினிமாவின் மூலம் தமிழ் இசையைப் பரப்பி வந்தனர். நண்பர், நான் போய்ப் பார்க்க முடியாத அவர்களது பாடல்களைப் பாடி எனக்கும் சங்கீத ரசனையை உண்டாக்கினார். ஒவ்வொரு பாடலும் என்ன ராகம், என்ன தாளம் என்றெல்லாம் சொல்லுவார். கே.பி.சுந்தராம்பாள் நடித்த ஜெமினியின் ஓளவையார் பாடல்களை அதே கனத்துடனும் உருக்கத்துடனும் பாடி என்னை அப்படத்தை தேடிப் பார்க்க வைத்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது. அவர் பாடியதும் கண் முன்னால் நிற்கிறது. அப்பாடல்கள் இன்றும் - 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எத்தனையோ பேர் என் இளமையில் என்னைப் பாதித்து என் கலை, இலக்கிய ரசனைகளை வளர்த்து இன்று நானும் ஒரு ரசிகனாகவும் படைப்பாளியாகவும் ஆவதற்கு உதவியிருக்கிறார்கள். அது இளம்பிராயத்தில் வேறு யாருக்கும் கிடைக்காத பாக்யம் என்றே சொல்ல வேண்டும்.

- வே.சபாநாயகம்.

உவமைகள் - வர்ணனைகள் - 49

நான் ரசித்த உவமைகள் - வருணனைகள் - 49

அ.முத்துலிங்கம் படைப்புகளிலிருந்து

1. கையிலே கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். சற்றுமுன் வரை செவ்வாய்க்கிழமையாக இருந்த நாள் இப்போது உருண்டு புதன்கிழமையாக மாறி விட்டது. ஒரு நாள், தன் பெயரை மாற்றும் சடங்கை அவன் நேருக்கு நேர் கண்டு விட்டான். ஏதோ ஒரு கள்ளனை தனியாய்ப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.

- 'ஆயிரம் பொன்'.

2. அந்தப் பெண் தன் இடது பக்க மார்பில் ஜெனிஃபர் என்று பெயர் எழுதி வைத்திருந்தாள். (வலது பக்கத்து பேர் எங்கள் ஊகத்துக்கு விடப் பட்டிருந்தது). கோடுகள் அடித்த தலை மயிர். நீட்டிய சதுர நகங்கள். முற்றுப்புள்ளி இல்லாத வசனம்போல முடிவே இல்லாத கண்கள்.

- 'கனடாவில் சுப்பர் மார்க்கட்'.

3. ஒரு பக்கத்தில் சிறந்த கலாச்சாரப் பதிவுகள் நடக்கின்றன. மறுபக்கத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் சிலர் வாழ்வில் பரவிக்கிடக்கின்றன. கிணற்றுத் தவளைகள் எங்கேயும் உண்டு. ஆனால் கனடாவுக்கு வந்த தவளைகள் இங்கே கிணற்றையே வெட்டிவிட்டதுதான் ஆச்சரியம்.

- 'கனடாவில் கிணறு'.

4. முன் வரிசைகளில் கதாகாலட்சேபங்களுக்கு உட்காருவதுபோல சிறுவர் கூட்டம் நாற்காலிகளிலும் நிலத்திலுமாக குவிந்துபோய் இருந்தது. நான் விடா முயற்சியாக முன்னேறி, மழைநாள் நாய் ஈர இலைகளை மூக்கால் தள்ளிப் பார்ப்பது போல, ஒவ்வொரு லேஞ்சியாக கிளப்பி கிளப்பிப் பார்த்து ஒரு சீட்டை பிடித்து விட்டேன்.

- 'காத்தவராயனுக்கு காத்திருப்பது'.

5. இவன் 21 வயது இளைஞன். கறுத்து மெலிந்து பந்தல் போடாத பயத்தங் கொடிபோல உயரமாக இருப்பான். அசைந்து அசைந்து நடந்து வரும்போது காற்றிலே நடுவில் முறிந்து விடுவானோ என்ற அச்சம் ஏற்படும்.

- 'பெரிய முள் இரண்டில் வந்தவுடன்'.

6. ஆறில் நின்ற கடிகாரமுள் சட்டென்று ஒன்பதுக்கு நகர்ந்தது போல கிழவர் விறைப்பாக பக்கவாட்டில் திரும்பினார்.

- 'அங்க இப்ப என்ன நேரம்?'

7. சுப்பிரமணியம் மாஸ்டர்தான் எங்களுக்கு பூமி சாஸ்திரம் எடுத்தவர். எவ்வளவு தான் உண்மையை நீட்டினாலும் இவருடைய உயரம் 5 அடி 3 அங்குலத் தைத் தாண்டாது. 20 வயதானதும் இவர் உயரமாக வளர்வதை நிறுத்தி விட்டார்; ஆனால் அகலமாக வளர்வதை நிறுத்தவில்லை. வயது கூடக்கூட அகலமும் கூடியது. நான் பள்ளிக்கூடத்தை விடும் வரைக்கும் அவர் வகுப்பு வாசல்களுக்குள்ளால் வரும்படியான சைஸில்தான் இருந்தார்.

- 'நான் பாடகன் ஆனது'.

8. ஒரு பத்தொன்பது வயது மெல்லிய பையன். காளான் தலை முடிவெட்டு; கிழித்துவிட்ட கால்சட்டை. ஓட்டையை மிச்சம் பிடிப்பதற்காக ஒரு காது ஓட்டையில் மாட்டிய இரண்டு வளையங்கள். ஒரு பொத்தான்களும் போடாமல் திறந்து விடப்பட்ட X அல்லது XL சைஸ் சேர்ட். அந்த சேர்ட்டின் இரண்டு நுனிகளும் கையில் அகப்படாமல் ஒரு பறவையின் செட்டைகளைப் போல படபடவென்று அடித்தன. ஒரு கார்க் கண்ணாடி துடைப்பான் போல தலையை இரண்டு பக்கமும் மாறிமாறி ஆட்டியபடி வந்து கொண்டிருந்தார்.

- 'பாப்பம்'.

9. ஜெனிவீவைப் பார்த்தேன். மேக்கப் என்பதே கிடையாது. ஆனால் முகம் பளிச்சென்று உள்ளுக்கு இருந்து யாரோ வெளிச்சம் அடிப்பது போலப் பிரகாசமாக இருந்தது.

- 'உனக்கு எதிராக ஓடு'.

10. யூடி நட்பான சுபாவம் கொண்டவர். அவர் வயதைக் கேட்கமுடியாது. ஆனால் மதிக்கலாம்.எழுபத்தைந்துக்கு மேலே, எண்பதுக்குக் கீழே. ஒரு செவ்வாய்க் கிழமை காலை என் வீட்டுக்கு காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தக் காருக்கு அவர் வயதாகி இருந்தது. இதற்கு முன் நான் கேட்டிராத பலவித சப்தங்களை எழுப்பிக் கொண்டு அவருடைய கார் என் வீட்டு வாசலில் வந்து திரும்பியது. நான் ஏறியதும் காரைத் திருப்பி எடுக்க யூடிக்கு சரியாக ஐந்து நிமிடம் பிடித்தது.

- 'சேக்ஸ்பியர் என்னும் சூரியன்'.

(மேலும் வரும்)

- வே.சபாநாயகம்

Friday, February 09, 2007

எனது களஞ்சியத்திலிருந்து : 25

பிணி தந்த பாடல்கள்:

திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன.

அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது
அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத்
தெரியவில்லயே!" என்று பாடுகிறார்.

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

(இடும்பை - துன்பம்; வறுமை)

அவ்வையார் வயிற்றோடு பேசியது போல மதுரகவிராயர் என்ற புலவர் தன் வறுமையுடன் பேசுகிறார். வறுமை நோயால் மிகவும் வாடிய அவர் அக்காலத்தில்
இரப்போர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளலைப் பார்த்துப் பாடல் பாடிப் பரிசில் பெறலாம் என்று கருதி வள்ளலின் ஊரான திருநின்றை
யூர் நோக்கிச் செல்கிறார். இடைவழியில் இருட்டி விட்டது. எனவே அருகில் இருந்த ஒரு மண்டபத்தில் இரவைக் கழிக்க எண்ணிப் படுத்தார். படுத்தபடியே சிந்திக்கிறார்.
நாளை தன் வறுமை தன்னை விட்டு நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.
பின் தன்னை வாட்டும் வறுமையிடம் பேசுகிறார்:

"ஏ வறுமையே! என்னை விட்டு நீங்காத என் நிழல்போல என்னைப் பின்பற்றி இவ்வளவு நாளும் நீ திரிந்து வருந்தினாய். நாளைக்கு நான் திருநின்றையூர் சென்று வள்ளல் காளத்தியப்பரைக் காணப்போகிறேன். தமிழ்ப் பாடல்களைப் பாடப் போகி றேன். அவ் வள்ளல் அவற்றைக் கேட்டதும் பொன்னும் பொருளும் வாரி வழங்குவார். உன்னை ஓட்டி விடுவார். பாவம்! நாளைக்கு நீ எங்கேயோ நான் எங்கேயோ? போகட்டும், இன்றைக்குச் சற்று என்னுடன் இருந்து விட்டுப் போ!"

நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக்(கு) இருப்பையோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே இரு.

(உழன்றாய் - வருந்தினாய்; நல்குரவு - வறுமை; காளத்தி - வள்ளல் காளத்தியப்பர்; நின்றை - திருநின்றைவூர்.)

உள்ளப்பிணி மட்டுமல்ல உடற்பிணிகளும் பாடல் பெற்றிருக்கின்றன.

சமணத் தலைவர் தருமசேனராக நாவுக்கரசர் வாழ்ந்தபோது அவரைத் தடுத்தாட் கொள்ள சிவபெருமான் அவருக்குக் கடுமையான சூலை நோயைக் கொடுத்துச்
சோதிக்கிறார். சமண வைத்தியர்கள் தாம் அறிந்த வழியிலெல்லாம் அந்நோய் தீர்க்க முயன்றும் தீர்க்கப்படாத நிலையில் அவரது தமக்கையான திலகவதியாரின் அறிவுரைப் படி திருவதிகைக் கெடில வீராட்டானம் சென்று அங்கு உறையும் வீரட்டானேஸ்வரரிடம் பாடி முறையிடுகிறார்.அற்புதமான அப்பாடல்களில் தன்னை வருத்தும் சூலை நோயின் கடுமையைச் சொல்லி இறைஞ்சுகிறார்:

கூற்று ஆயினவாறு விலக்கலீர்;
கொடுமை பல செய்தன அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றில் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.

- இன்னும், சூலை நோயின் கடுமை குறித்து,

'சுடுகின்றது சூலை' எனவும், 'வலிக்கின்றது சூலை' எனவும்,
'என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்திட்டேன்'
எனவும்,'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் ...என் வேதனை' என்றும் பாடுகிறார்.

நம் காலத்துக் கவிஞரான கவிமணியை சிரங்கு நோய் வருத்துகிறது. என்ன மருந்து எடுத்துக் கொண்டும் சிரங்கு ஆறுவதாய் இல்லை. வேதனையான அவ்வனுபவத்தை நகைச்சுவையுடன் பாடுகிறார்.

சிரங்கை தாஜா செய்ய 'சிரங்கப்பராயர்' என்று உயர்வு நவிற்சியில் விளிக்கிறார். சிரங்கப்பராயர் தனக்குத் தந்த சீதனம் பற்றிப் பட்டியலிடுகிறார்:

முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.

சிரங்கு நீங்க மேற்கொண்ட மருந்துகளால் பயன் இல்லாததைச் சொல்லி முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்:

செந்தில்குமரா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய
கையிரண்டும் போதாது காண்.

வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு
மறைந்திடத் தா நீ வரம்.

முருகனிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே 'சாட்சிக்காரன் காலில் விழுவ
திலும் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்று சிரங்கப்பராயரிடமே சரணடை கிறார்:

உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு
சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு.

'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொன்னார் அல்லவா வள்ளுவர்? அதன்படி கவிஞரிடம் வேதனையிலும் வெண்பா கொஞ்சி விளையாடுகிறது.

இவரது அற்புதமான வெண்பாவில் உளம் பறிகொடுத்ததால் தான் ரசிகமணி, தன் ஒரே மகனின் இழப்பையும் மறந்து அவர் அனுப்பிய இரங்கப்பாவைப் பாராட்டுகிறார்.

ரசிகமணி டி.கே.சி அவர்களின் ஒரேமகனும் சிறந்த கவிஞருமான செல்லையா என்று செல்லமாய் அழைக்கப்பட்ட தீபன் என்கிற தீத்தாரப்பன்- இளம் வயதில் அகால மரணம் அடைந்தபோது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், மனம் உருக கீழ்க்கண்டவாறு ஒரு இரங்கற்பாவினை அனுப்பி வைத்தார்.

எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி.

'அப்பா' என்ற அருமைச் சொல்லைப் படித்ததும் அழுது புலம்ப வேண்டாமா தந்தை? ஆனால் ரசிகமணி எந்நிலையிலும் நல்ல கவிதையை ரசிப்பவர் அல்லவா? அதனால் அவர் தன் இழப்பை மறந்து "இப்படி ஒரு பாடல் கிடைக்குமானால் எத்தனை பிள்ளை களையும் இழக்கலாமே" என்றாராம்.

உவமைகள் - வருணனைகள் - 48

நான் ரசித்த உவமைகள் - வருணனைகள் : 48

விமலாதித்த மாமல்லன் கதைகளிலிருந்து:


1. வீட்டிற்கு ஸ்நோஸிம் அடித்திருந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந் திருக்கும் பெண்ணின் தாயாரைப் போல, ரொம்ப ஜாக்கிரதையுடன் கண்காணித்து வந்தாள் மாமி. வீட்டின் வெளிச்சுவரில் போஸ்டர்களை யாரும் ஒட்டிவிடாமல் இருப்பதற்காக கருங்கல் ஜல்லிபதித்து,அதன்மேல் ஸ்நோஸிம் அடித்து வைத்தாள். தேர்தல் சமயத்தில் மாமியின் பார்வையையும் மீறி ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தம் சின்னங்களை சுவரில் எழுதி விட்டார்கள். சுயேச்சை ஆசாமி கூட, தன் சின்னமான சைக்கிளைத் தாரால் வரைந்து விட்டிருந்தான். மாமிக்கு ஏகக் கோபம். அந்தத் தேர்தலில் மாமி ஓட்டுப் போடப் போகவில்லை.

-'இலை' கதையில்.

2. சுவரைக் கையால் பிடித்தபடி ஓரமாக நடந்து சப்தம் செய்து விடாதவாறு குளியல றைக் கதவை மெல்ல திறந்தான். கால், சொம்பில் பட்டுவிட பெரிய உளறல் போல அது உருண்டபடி சப்தமிட்டது. அவன் திடுக்கிட்டவனாய் அசைவொடுங்கி நின்றான். தூக்கம் அறுந்தவராய் அப்பா மிரட்டல் தொனியில் குரல் கொடுத்தார்.

- 'சரிவு'.

3. இருபத்தியெட்டு வயதிற்குள் ஒரு பெண் இப்படியா நார்நாராகி விடுவாள். பழைய ஜமுனா இவளுடைய பெண்ணோ என நினைக்குமளவுக்கு மூப்படைந்து விட்டாள் ஆறே வருஷத்தில்.

- இழப்பு'.

4. அந்த அறையில் இருந்த கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்து விட்டிருந்ததால், நெடுக்காக வைத்துப் பார்க்க சாத்யப்படவில்லை. ஜன்னல் மீது குறுக்காக வைத்தால் தலைமுடியையும் கண்ணையும் சேர்ந்தாற்போல் பார்க்க முடியவில்லை. ஏதேனும் ஒன்றை மட்டுமே பார்த்துச் சீவினால் மனசுக்கு உகந்தபடி அமையாமல் போனது. கொஞ்சம் உடம்பைக் குறுக்கிக் கொண்டே தலை சீவிக்கொள்ள முடிந்தது.

- 'கயிறு'.

5. மேம்பாலம் தெரிந்தது. நடையின் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்தான்.
புதிதாகப் போடப்பட்ட விளக்குகள் - தெருவை, தெருவில் போகிற சைக்கிளை, சைக்கிளில் போகிற மனிதர்களை, பஸ்ஸ்டாப்பை, ரிக்ஷாவை எல்லாம் அறைந்து ஆரஞ்சு வண்ணம் பூசுவதைக் கண்டு,சாயங்காலம் போல இருப்பதாகச் சொல்லிக் கொண்டான்.

- 'எதிர்கொள்ளல்'.

6. சுவாரஸ்யம் ஏதுமின்றிக் கழிந்து போய்விட்ட அன்றைய தினத்தை நினைத்தபடி படுக்கையில் கிடந்தான் மூர்த்தி. ஒரு தலையணையையும் பாயையும் படுக்கை யென சொல்லலாமெனில் அவன் படுத்திருந்தது படுக்கைதான்.

- அறியாத முகங்கள்'.

7. இவன் முகத்தை என்ன பார்ப்பது, முகத்தை. முகத்தில் தெரிகிறதா என்ன இவன் செய்கிற
அட்டூழியம்.முகத்தில் என்னவோ சாந்தமான ராயர்களைதான். பவ்யமாக, நெற்றியில் பொட்டு வேறு. அயோக்கிய ராஸ்கலுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.
இவன் கெட்ட கேட்டுக்கு ஹிட்லர் மீசைவேறு.அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு
கூத்தடிக்கிற பொட்டைப் பயலுக்கு மீசை ஒரு கேடு - பேமானி. வாழ்க்கையை
ஒவ்வொரு தினமும் நரகமாக்கிக் கொண்டு இருக்கிறான்.

- 'பெரியவர்கள்'.

8. வழக்கம் போல் இருந்தது தெரு. மாவுமிஷின் இரைச்சல். தெருக்கோடியில்
மரத்தடியில் நிழல் வாங்கும் ரிக்ஷாக்கள். சாராயத் தள்ளாட்டம். கிழங்கு விற்கும்
கிழவிகள். சாக்கடையில் கால்வைத்து கோலியடிக்கும் சிறுவர்கள். குந்தியிருந்து
நடக்கிற சூதாட்டம். கைஸ்டாண்டில் சலவைத் துணி சுமக்கும் கடைப் பையன்.
போஸ்டர் தின்னும் பசுமாட்டின் மூத்திரத்தை உத்தரணியில் பிடிக்கும் திவசப்
புரோகிதர்.ரோகம் பீடித்த நகரோரத்தெரு வழக்கம் போல இருந்தது.

- 'சிறுமி கொண்டு வந்த மலர்'.

9. பாலக்காட்டிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒன்றுவிட்ட பெரியப்பாவின்
ஒரே சீமந்தப்புத்திரன், பர்மிடோஸ் மட்டும் அணிந்து கொண்டு, பிதுங்கி வழியும்
இடுப்புச் சதைகளில் கைகளை வைத்தபடி, எருமை மாட்டைப்போல பால்கனியில்
நின்றிருந்தான். கயிற்று நாடாவை உள்ளே போட வேண்டுமென்பதில் கூடக்
கவனம் செல்லாததைப் போலக் காட்டிக் கொள்ளும் கம்ப்யூட்டர் மண்டை.
பர்மிடாஸின் நாடா வேறு பாசக்கயிறு போல ஆடிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

- 'உயித்தெழுதல்'.

10.பல்லாண்டுகளின் உறக்கம் கலைக்கப்பட்டதில் பைல்கள் துவண்டும் படபடத்தும்
சோம்பல் முறித்துக் கொண்டன. ஆரம்ப முனைப்பு மட்டுப்பட்டு, மெல்ல சத்தம் குறையத் தொடங்கி, ஒருத்தர் பின் ஒருத்தராக அன்றாட ஆஸ்திகளை சேகரித்துக்
கொண்டு, பாத்ரூம் கண்ணாடிகளில் சாயங்காலத்துக்கான முகத்தை அணிந்து, சர்வீசுக்கேற்ப
தலைமைகுமாஸ்தாவிடம் சொல்லிக் கொள்ளாமல், சொல்லிக் கொண்டு,கேட்டுக்கொண்டு வெளியேறினர், ஐந்துமணியாகிற சமயத்தில்.

- 'தாசில்தாரின் நாற்காலி'.

- வே.சபாநாயகம்.

நினைவுத் தடங்கள் - 37

இளமையில் என் ரசனையையும் இலக்கிய ஆர்வத்தையும் தூண்டியவர்களில்
ஒருவரான என் பெரியப்பா மகன் - சின்ன அண்ணன் என்பவரை அவசியம் நினைவு கூர்தல் வேண்டும். எங்கள் பெரியப்பாவின் குணவியல்புகளுக்கு ரசனை சாத்யமில்லை. ஆனால் அவரது இரண்டாவது மகனுக்கு இசை ரசனையும் இலக்கிய ரசனையும் இருந்தது. அவருக்கு என் பெரியப்பாவிடம் கடைசிவரை இணக்கமில்லை. எங்கள் அப்பாவிடம்தான் தன் இலக்கிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்.

பெரியப்பாவின் முரட்டு சுபாவம் மனைவி மக்களிடம் கூட இணக்கம் ஏற்படுத்தி இருக்க வில்லை. முன்பே நான் குறிப்பிட்டபடி அவர் சர்வாதிகாரி. யாரும் எதுவும் கேட்க முடியாது. ஒரே ஒருவர் மட்டும்தான் அவரைக் கேட்க முடிந்தவர். அவரும் கட்டுப் படுத்திவிட முடியாது. அடுத்த தெருவில் இருந்த அவரினும் மூத்த - 'ஆலத்தெரு மாமா' என்று நாங்கள் அழைக்கும் உள்ளூர் உறவினர்தான் அவர்.

எங்கள் சின்ன அண்ணன் கொஞ்சம் நவ நாகரிகம். அப்போதைய நாகரீகப்படி, கால் குதிக்குக் கீழே புரளும் எட்டு முழ மல்வேஷ்டி, பளிச்சென்ற வெள்ளை லாங் கிளாத்தில் கல்லிஜிப்பா, கழுத்தில் மைனர் சங்கிலி, ஸ்நோதடவி பவுடர் பூசிய முகம், குனேகா செண்ட், காலில் கட்ஷ¥ என்று வலம் வருவார். ஆனால் இதெல்லாம் பெரியப்பா கண்முன்னால் கிடையாது. ஒரு தடவை குதிபுரளும் வேட்டியில் பார்த்த பெரியப்பா பிடரியில் ஒரு அறை
வைத்து "இதென்ன தெருப் பெருக்கக் கட்டுறியா? தூக்கிக் கட்டுடா" என்றார். அவர் எப்போதும் கணுக்காலுக்கு நாலு விரற்கடை மேலேயே, நெஞ்சுவரை வேட்டியை உயர்த்திக் கட்டுபவர். ஜிப்பாவும், மைனர்செயினும் பெரியப்பாவுக்குப் பிடிக்காது. அப்போதெல்லாம் நாதஸ்வரம் வாசிக்கிறவர்கள்தான் ஜிப்பாவும், மைனர் செயினும் போடுவார்கள். ஜிப்பா- மைனர் செயினுடன் அண்ணனை ஒருதடவை பார்த்துவிட்ட பெரியப்பா அப்போது ஒரு அறை கொடுத்து "இதேன்ன மேளக்காரன் மாதிரி? கழற்றி எறி" என்று பெரியப்பா கண்டித்திருக்கிறார். ஆனாலும் வெகுநாட்கள் வரையிலும் அண்ணன் அவற்றை விடவில்லை. பெரியப்பா கண்மறைவில் - எங்காவது வெளியூர் கல்யாணத்துக்கு, பக்கத்து நகரமான விருத்தாசலத்துக்கு சினிமா பார்க்கப் போகும் போது என்று - மேற்சொன்ன அலங்காரங்களுடன் செல்வார். பெரியப்பா கண்டித்தும் விலக்காத ஜிப்பாவையும் மைனர் செயினையும் அவருக்கே விரக்தி ஏற்பட்டு எடுக்கும் நிலை ஏற்பட்டது சுவாரஸ்யமானது.

ஒரு முறை பக்கத்து ஊரில் ஒரு திருமணத்துக்கு, பெரியப்பாவின் பிரதிநிதியாக
சின்ன அண்ணன் தன் நண்பருடன் போயிருந்தார். நண்பரும் அண்ணன் மாதிரியே
ஜிப்பா- மைனர்செயின் அணிந்திருப்பவர். திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்டு விட்டு
கையில் தாம்பூலத்துடன் இருவரும் வெளியே வந்தார்கள். எங்கள் வட்டத்தில் ஒரு
பைத்தியம் வெகு நாட்களாய்ச் சுற்றிக் கொண்டிருப்பான். 'தளவாய்ப் பித்துக்குளி' என்று நாங்கள் அவனை அழைப்போம். வெறும் கோவணம் மட்டுமே அணிந்து புழுதியும் அழுக்குமான உடலுடன், அடர்ந்த தலை முடி, தாடியுடன் கல்யாண வீடுகளில் தவறாமல், எச்சில் இலைக்காகக் காத்திருப்பான். வாய் எதையாவது பினாத்திக் கொண்டிருக்கும்.
அன்றும் அவன் கல்யாண வீட்டுக்கு முன்னால் பந்தல் காலருகே நின்று கொண்டிருந்தான். அண்ணன் நண்பருடன் வெளியில் கையில் தாம்பூலத்துடன் வருவதைப் பார்த்து, "இப்பத்தான்
மேளக்காரனே சாப்புட்டு வரான்'' என்றான். அண்ணனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. 'இவன் என்னடா எங்கப்பா மாதிரியே சொல்றான்?' கிற மாதிரி நண்பரைப் பார்த்தார்.

அடுத்த விமர்சனம் அதிகார பூர்வமானது. அதே நண்பருடன் ஒருநாள் சினிமா
பார்க்க விருத்தாசலம் சென்றபோது கடைவீதியில் இருவரும் தனியான தெருவில் நடக்கிறமாதிரி சாவதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அது மாசிமக
விழா நேரம். போலீஸ், சாலையில் கும்பலாக நடக்கும் பாதசாரிகளை போக்கு வரத்துக்கு இடைஞ்சல் இல்லாதபடி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அது தெரியாத இருவரும் ஜாலியாகக் கைகோர்த்தபடி சாலை நடுவில் வந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் ஸ்டேஷன் வந்ததையோ அங்கு ஏட்டு நின்று கொண்டிருப்பதையோ பார்க்கவில்லை. ஆனால்
ஏட்டு பார்த்து விட்டார். "ஏ மைனர் செயின் தம்பிகளா! இப்பிடி வாங்க!" என்று அழைத்தார். இரண்டுபேரும் மிரண்டு போனார்கள். போலீஸ் என்றாலே பயப்படுகிற காலம். பயந்தபடி ஏட்டருகே வந்தார்கள். "உள்ள போய் அப்டி உக்காருங்க. இது என்னா உங்கப்பா வீட்டு ரோடுன்னு நெனைப்பா? மைனர்செயினும் ஜிப்பாவும் போட்டா கண்ணு
தெரியாதா?" என்று சொடுக்கினார். 'இது என்னடா இது? மைனர் செயினுக்கும் ஜிப்பாவுக்கும் எங்கே போனாலும் நக்கலா இருக்கே' என்று இரு மைனர்களும் குமைந்தார்கள். அப்புறம் எதை எதையோ சொல்லிக் கெஞ்சி சினிமா பார்க்க வைத்திருந்த காசை அழுது விட்டு 'தப்பினோம் பிழைத்தோம்' என்று வீடு திரும்பினார்கள். அதற்குப் பிறகு யாரும் அண்ணனையும் அவர் நண்பரையும் ஜிப்பா-மைனர் செயினில் பார்த்ததில்லை.

அண்ணன் வாய்ஜாலம் மிக்கவர். அவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசி யாரும் மீள முடியாது. வாதம் செய்தால் அவருக்கு ஒரு நியாயம் எதிரிக்கு ஒரு நியாயமாகத் தான் இருக்கும். தன் பொருள் என்றால் உயர்த்தியும் மற்றவர் பொருள் என்றால் மட்டம் தட்டியும் பேசுவது அவரது சுபாவம். ஒரு தடவை எங்கள் தெருவில் ஒரு மைனர் பையன், அப்போதைய
விடலைகளின் ஆசைக்கேற்ப எங்கேயோ ஒரு கூலிங் கிளாஸ் வாங்கி அணிந்து கொண்டு கம்பீரமாகத் தெருவில் வந்து கொண்டிருந்தான். அண்ணன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவர்தான் இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் அவன் ஈட்டுப் பையன்களுக்கு அத்தாரிட்டி என்பதால் அவரிடம் காட்டிப் பெருமைப்பட விரும்பினான். அண்ணனுக்கு தனக்கெதிரே
நேற்றைய பயல் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு நடப்பது உறுத்தியது. அவரே வம்புக்கு இழுக்க நினைக்கையில் அவனே விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சியென அருகில் வந்தான். கண்ணாடியைக் கழற்றி அண்ணனிடம் நீட்டி, "இதப் பார்த்துச் சொல்லுங்க அத்தான். எப்பிடி? தேவலையா?" என்றான். அண்ணன் முகத்தை அருவருப்பான எதையோ பார்க்கிற மாதிரி வைத்துக் கொண்டு, "ஏது இது?" என்றார். "நேத்து விருத்தாலம்
கடத்தெருலே வாங்குனேன். 15ரூபா பொறுமில்லியா?" என்றான் இறைஞ்சலாக. "என்னது? 15ரூபாயா? நல்லா ஏமாத்தி இருக்கான் உன்னை. மெட்றாஸ் ப்ளாட் பாரத்துலே இது 5 ரூபாய்க்கு சிரிப்பா சிரிக்குது! எத்தன வேணும் ஒனக்கு?" என்றார். பாவம் அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

அவர் ஒரு முறை ஹீரோ பேனா ஒன்றை வாங்கி வந்திருந்தார். அது ஜப்பான் சரக்கு. அப்போது நான் கல்லூரி மாணவன். என்னை விட்டால் அப்போதைக்கு ஊரில் அப்படிப் பட்ட வெளிநாட்டுப் பொருளைக் காட்டிப் பெருமைப்பட ஆளில்லை. எனவே என்னிடம் காட்டி, "தோ பாத்தியா? ஜப்பான் பேனா! என்ன விலை தரலாம்?" என்றார். அவர் சுபாவம் தெரிந்தபடியால் கொஞ்சம் உயர்த்தியே - அப்போது 10ரூபாய்க்கு ஹீரோ பேனா
கிடைத்தது - "15ரூபாய் கொடுத்தீங்களா?" என்றேன் பயந்து கொண்டே. "என்னது? 15ரூபாய்க்கு எவன் குடுக்கிறான்? எங்கே எனக்கு ஒரு நாலு பேனா 15ன்னு வாங்கிக் குடேன் பார்க்கலாம்!" என்று எகிறினார். "சொளையா 25ரூபா குடுத்தேன்" என்றார். "இருக்கும் இருக்கும்" என்று ஜகா வாங்கிவிட்டேன்- அவரிடம் மேற்கொண்டு வாதம் செய்வதில் பயனிருக்காது என்பதால்.

எங்கள் பக்கத்து ஊரான நேமத்திலிருந்து ஒரு கிழவன் மாம்பழங்கள், பலாப்
பழச்சுளை என்று சீசனுக்குத் தக்கபடி தலைச் சுமையாய்க் கொண்டுவந்து எங்கள் ஊரில் விற்பான். அவன் கொஞ்சம் முசுடு.விலையை எப்போதும் கூட்டியே சொல்லுவான். பேரமே பேச விடமாட்டான். அவன் சொன்ன விலைதான். எங்கள் அம்மா பேரம் பேசாமல் வாங்கியதில்லை. தினமும் அவனிடம் தகராறுதான்.கடைசியில், அம்மா தொடர்ந்து வாங்கும்
வாடிக்கையாளர் என்பதால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து விட்டு "எப்பவும் உங்கிட்ட இதே ரோதனைதான் ஆச்சி! சொன்ன வெலையைக் குடுக்கமாட்டியே" என்று முனகிவிட்டுக் கொடுத்து விட்டுப் போவான். சின்னண்ணன் இதை வெகுநாட்களாய்க் கவனித்து வந்தார்.

ஒருநாள் அவன் மாம்பழக்கூடையுடன் வந்தபோது சின்னண்ணன் அவனை அழைத்து மாம்பழங்கள் கேட்டார். அவன்சொன்ன விலைக்குப் பேரம் எதுவும் பேச வில்லை. அவனுக்கு மிகவும் சந்தோஷம். 5ரூபாய்க்குப் பழங்கள் கொடுத்தான்.
அண்ணன் பழங்களுடன் உள்ளே சென்றவர் கையில் 100ரூபாய் நோட்டுடன் வந்தார். "இந்தாப்பா! 5ரூபா போக மீதி 95ரூபா குடு" என்று 100ரூபாய் நோட்டை நீட்டினார்.. "ஐயோ சாமி! நீ தான் மொத போணி! எங்கிட்ட ஏது சில்லறே? 5ரூபாக் குடு சாமி" என்று பணிவுடன் சொன்னான். அண்ணன் அவனைத் திட்டத் தொடங்கிவிட்டார்.
"சில்லறை இல்லாம ஏண்டா வியாபாரம் பண்ண வர்ரே? சுத்த மடையனா இருக்கியே! 95ரூபாயக் குடுத்துட்டு 100ரூபாய வாங்கிக் கிட்டுப் போ!" என்று உள்ளே போய்விட்டார். பாவம்! அவனிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. கூடையில்
இருந்த பழமே 100ரூபாய்க்கு இல்லை. அழும் நிலைக்கு அவன் வந்து
விட்டான். "வேணாம் சாமி! எம் பழத்தக் குடுத்துடு. நான் போறேன்" என்று கெஞ்சினான். அண்ணன் வாங்கியதைத் தருவதற்கில்லை என்று மறுத்து விட்டார். ''95ரூபாயக் குடுத்துட்டு 100ரூபாய வாங்கிக்கோ1" என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.
பரிதாபத்துக்குரிய அக்கிழவன் அதன்பிறகு அனேக தடவைகள் நடையாய் நடந்துதான் அந்த 5 ரூபாயை வாங்க முடிந்தது. வாங்கிய பிறகு அவன் சொன்னான், "எதிர்த்த வூட்டு ஆச்சி எவ்வளவோ தேவலை. பேரம் பேசுனாலும் இந்த அழிச்சாட்டியம் இல்லே!" அதன் பிறகு அவன் எங்கள் தெருப் பக்கமே வருவதில்லை.

பெரியப்பாவிடம் சுமுகமாக இல்லையே தவிர அவரது அட்டூழ்¢யம் எல்லாம் அண்ணனிடம் இருக்கவே செய்தது. ஆனாலும் பெரியப்பாவிடம் இல்லாத ரசனை அவருக்கு இருந்தது. இசையில் அவருக்கு ஆர்வம் அதிகம். நான் முன்பே குற்¢ப்பிட் டுள்ளபடி எங்கள் ஊருக்கு முதலில் கிராமபோன் வாங்கி வந்து அந்த அதிசயத்தை ஊருக்குக் காட்டியவர் அவர்தான். ரேடியோ கூட அதுவரை கேட்டறியாத நாங்கள் அந்தக் கிராமபோன் பாட்டுக்களைக்
கேட்டு மயங்கினோம். அண்ணன் தெருத்திண்ணையில் கிராமபோனை வைத்து பிளேட்டைப் போட்டார் என்றால் ஊரே திரண்டு தெருவை நிறைக்கும். எம்.எஸ் பாட்டையும், தியாகராஜ பாகவதர் பாட்டையும், இன்னும் என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்தினம் காமிக் பாடல்களை யும் அங்குதான் முதலில் கேட்டு என் இசை ரசனை உருவாயிற்று. இன்று
தொலைக் காட்சியில் அந்தப் பழைய பாடல்களைக் கேட்கையில் அவற்றை முதன் முதல் கேட்ட இளம்பருவ நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

அடுத்து அவருக்கு வில்லி பாரதத்தில் அற்புதமான ஞானம். அவர் படித்தது எழாம் வகுப்புதான். ஆனாலும் பண்டிதர்களப் போல அனாயசமாக வில்லிபாரதப் பாடல்களை விளக்குவார். இது எப்படி சாத்யமாயிற்று என்றால்- எங்கள் ஊரில் ஆண்டுதோறும்
திரௌபதி அம்மன் கோயில் உற்சவத்தில் பாரத பூசாரி ஒருவர் - உள்ளூர் தச்சாசாரி-
பாரதம் பாடுவார். அண்ணன் தவறாது அந்தக் கதையைக் கேட்டு வளர்ந்தவர். பூசாரி யிடமே கேட்டறிந்து அவர் படிப்பது வில்லிபுத்தூரார் எழுதிய பாரதக் கதை என்று
தெரிந்து கொண்டு அப்பாவிடமிருந்து வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். ஆசான் யாரு மில்லை. அவரே திக்கித் திணறி, பதம் பிரித்து, சந்தம் அறிந்து, ராகம் போட்டுப் பாடிப் புலமை பெற்றார். பின்னர் அப்பாவிடமும் பாரதம் பாட வரும் வெளியூர்ப் பூசாரிகளிடமும் வாதம் செய்து அவர்களைத் திக்கு முக்காட வைப்பார். அதை அருகிருந்து கேட்டுக் கேட்டு எனக்கும் வில்லிபாரததத்தில் ஒரு ரசனையும் பிடிப்பும் ஏற்பட்டது. அந்த சின்ன வயதில்
அப்பாவிடமிருந்து கேட்ட பெரிய புராணமும், திருவிளையாடற் புராணமும், அண்ணனிடம் கேட்ட வில்லிபாரதமும் பின்னாளில் என் இலக்கிய ரசனைக்கும் படைப்புக்கும் பெரிதும் ஆதாரமாய் இருந்தன. அந்த வகையில் சின்னண்ணன் என் நினைவில் என்றும் நிலைத்திருப்பார்.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.

கடித இலக்கியம் -43

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 43

திருப்பத்தூர்.வ.ஆ.
13-10-92

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

வந்ததிலிருந்து பலமுறை எழுத நினைத்தேன். ஒவ்வொரு முறையும், அத்தகைய உயர்ந்த காரியத்துக்கு உகந்த மனநிலை இப்பொழுது இல்லையே என்று ஒரு நொண்டிச்சாக்குக் கிடைக்க, அம்முயற்சி தவிர்ந்து போயிற்று.

இன்று திருப்பத்தூரில் அடைமழையின் காரணமாக, ஊரும் இந்த வீடும் இரவு எட்டு மணிக்கெல்லாம் அடங்கிப் போய்விட்டது. நான் ஓர் அறையுள் தனியாக அகப்பட்டுக் கொண்டு விட்டேன். உறக்கம் வரமாட்டேனென்கிறது. தஙகளுக்கு நம் பழைய நாட்கள் போல, எழுதுவதற்கு இது உகந்த சூழ்நிலை என்று தைரியங் கொண்டுவிட்டேன்.

தங்களிடம் அதிகம் பேச முடியவில்லையே தவிர, அகிலனின் கல்யாணத்தை நாங்கள் நன்கு அனுபவித்தோம். கால யந்திரம் ஒன்று கிடைக்கப் பெற்று நமது முன்னோரின் சமேதராய் நாங்கள் அங்கு - நான் அங்கு, சஞ்சரித்தேன். என்னோடு இருந்தவர்களும் என்னோடு அங்கெல்லாம் வந்தார்கள். எங்கள் மனநிலைகள் அகிலனுக்கு மகத்தான ஆசிகள் ஆகுக என்று நான் கோயிலில் போய்ப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

ஒரு மாபெரும் கடமையை முடித்த ஓய்வில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

-திருமணத்திற்கு வருகிறபோது, வழியில் நான் ஆறுமுகம் கொண்டு வந்த 'ஏரெழுபது' படித்துக் கொண்டு வந்தேன். இத்தகைய பாடல்கள் பெற வேளாளர் குடி எத்தகைய பாக்கியம் செய்தது என்று வியந்தேன். திருப்பத்தூரில் பஸ் புறப்பட்ட உடனேயே நான் படிக்க ஆரம்பித்தேன். அது திருமண ஊர்வலம் கிளம்பு முன் நாதஸ்வர ஓசை கிளம்பியது போல் தொனித்தது.

வாழ்க. புறப்பொருள்கள் கொண்டும், புற நிகழ்ச்சிகள் இயற்றியும் எங்கள் ஆசீர்வாதத்தைப் பூரணமாகத் தெரிவிக்க இயலவில்லை. சோழர் படை நடந்த மண்ணில், கம்பன் வாழ்ந்த காலம் முதலாய், தங்கள் முன்னோர் இயற்றிய பெருமைகளை எல்லாம் நேருறக் கண்டவர் போல் நாங்கள் நெஞ்சு நிரம்பினோம். புதுமணத் தம்பதியர்க்குப் பல்லாண்டு கூறுகிறோம்.

தாங்கள் எப்பொழுதும் போல் இளமையாய் இருக்கிறீர்கள். பரபரவென்று செயலும், படபட வென்று பேச்சும், வாயிலே வந்து வெளியிலே விழுகின்ற மனமுமாக எப்பொழுதும் போல் திகழ்ந்தீர்கள்.

- தாங்கள் எங்களுக்கு அமர்த்திக் கொடுத்த அறை! சோழமண்டலத்தின் சமவெளிக் காற்று அலைஅலையாகப் பரவிவந்த அந்த மொட்டை மாடி, ஆண்டுகளின் இடைவெளியிலேனும் அவ்வப்பொழுது ஒரு ஞாபகார்த்தம் போல் அங்கு வந்து தங்க வேண்டும் என்கிற ஆசையைத் தோற்றுவித்தன. ஆறுமுகமும் அதை அங்கீகரித்தார். அது ஒரு சாதாரண லாட்ஜ் வாசம் போல் எங்களுக்குத் தோன்றவில்லை.

-அந்த அனுபவத்திற்கு மரியாதை செலுத்தும் வண்ணம், நாங்கள் மறுநாள் இரவு, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து திரும்பி வந்து, மறுபடியும் அதே லாட்ஜில் அடுத்த அறையில் தங்கினோம். அறை தான் வித்தியாசப் பட்டது. ஆகாயமும், அடித்த காற்றும், ஆட்களின் மனோபாவமும் அகிலனின் திருமணத்துக்கான ஆசிகளும், நானும் ஆறுமுகமும் பேசின பேச்சுக்களின் பொருளும், ஓர் உற்சாகமான பொழுதின் உள்ளடக்கங்கள். பூராவும், தங்களால் என்கிற அடிப்படை இழையும் மாறாமல் அப்படியே இருந்தன.

எங்கள் சந்தோஷங்கள் பூராவும் ஆசிகளாக உருமாறி அகிலனுக்குப் போய்ச் சேரக் கடவது என்று நான் அப்பொழுதே நினைத்துக் கொண்டேன்.

கடிதம் என்பது ஒரு தகவல் பரிமாற்றுச் சாதனம் என்பதை மறந்து, அதை நாம் எழுதும் கதை அல்லது கட்டுரை அல்லது புத்தகம் என்று கருதுகிற காரணத்தால்தான் அதை நாம் இப்போதெல்லாம் எளிதில் எழுத முடிவதில்லையோ என்று நான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதிலும், கடிதம் எழுதாக் கொடுமையைத் தங்களுக்கு எவ்வளவு இழைத்து விட்டேன் என்கிற குற்ற உணர்ச்சியும் பெருகுகிறது. சில நேரங்களில், நீளமாக ஒரு கடிதம் எழுதுவதைவிட, நேரில் ஒரு visit செய்து விடுவது சுலபமாகவும் தெரிகிறது. எல்லாவற்றின் காரணமாகவும், தாங்களும் விரைவில் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறப் போவதாலும், நமது கடிதங்களையும் நேருறக் காணல்களையும் அதிகப் படுத்திக் கொள்வதற்குக் கடவுள் நம்மை அனுமதிக்கப் பிரார்த்திக்கிறேன்.

- தங்கள்
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 42

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 42


3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.

1 - 9 - 90

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

மூன்று நாட்களுக்கு முன் ஆறுமுகம் வந்திருந்தார். தோட்டத்துப் பக்கம் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, "மனசு ஏனோ விருத்தாசலம் போகிறது. சபா கடிதம் எழுதுகிறாரோ என்னவோ?" என்று கருதினேன். நேற்று தங்கள் கடிதம் வந்தது.

ஆஸ்பத்திரியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் திடுக்கிட வைத்தன. குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சையின் போது உங்களது நாடித்துடிப்பு இறங்குவதைக் ஒரு நர்ஸ் கவனித்து எச்சரிக்கை செய்து உடனடியாகப் பிராண வாயு அளித்துக் காப்பாற்றப் பட்டதைக் கேட்க மனசு நடுங்குகிறது. அந்த நர்ஸின் கவனம் எவ்வளவு தெய்வீகமானது என்றும், எவ்வளவு அற்புதமான தருணங்களை நமக்காகத் தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்திருக்கிறார் என்கிற உணர்வும் தோன்றி, ஒரு நம்பிக்கை நன்கு நிறைவேறிய ஆறுதல் பெருமூச்சை நானும் அனுபவித்தேன்.

திட நம்பிக்கையுள்ள தீரர்களாயிருப்போம். நமது நம்பிக்கை மேலும்மேலும் திடப்படட்டும். இந்தக் கடிதம் எழுத ஆரம்பிக்கு முன்பு, 'ஸ்ரீராமகிருஷ்ண அமுதமொழிகளை'ப் பிரித்து ஒரு பக்கத்தின் ஆரம்பத்தில் படித்துப் பார்க்கலாம் என்ன வருகிறதோ, என்று பிரித்துப் படித்தேன்.

"எவ்வளவுக்கு நம்பிக்கை அதிகரிக்குமோ, அவ்வளவுக்கு ஞானம் அதிகரிக்கிறது. பார்த்துப் பார்த்துத் தீனி தின்னும் பசு விட்டுவிட்டுப் பால் கொடுக்கும். ஆனால் இலை, செடி, தோல், பொட்டு என்று எதைக் கொடுத்தாலும் லபக் லபக் என்று எந்தப் பசு தின்றுவிடுமோ அந்தப் பசு தொடர்ந்து பால் கொடுக்கும்" - என்று ஸ்ரீராமகிருஷ்ணர் பேசுகிற பகுதி வந்தது. உடனே உங்களுக்கு இதை எழுதிவிட வேண்டும் என்றும் தோன்றியது. இந்தச் சிறு குறிப்பை, தங்கள் உடல் நலம் வாழ்த்தி, நான் தரும் ஒரு ஆலயப் பிரசாதம் போல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஏதோ ஒன்றிற்கு நாம் எல்லை கடந்த நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒரே விதமான பாஷையில் சொல்லி அதை வெறும் உளறல் ஆக்கி விட்டார்கள். விதவிதமாகச் சொன்னால் அந்த அருள் மேலும் நன்கு விளங்குகிறது. ஆபரேஷன் தொடக்கத்திலேயே அந்தப் பிரச்சினை தோன்றியதும், அப்போது மறு உத்திரவாதம் போல் அந்த நர்ஸின் பார்வையின் உன்னிப்பும், யாரோ தேவதூதர்கள் வானத்தில் நின்று நமது நலத்திற்காகக் கட்டளையிட்டது போல் இருக்கிறது. வெகு சூட்சமமான இயந்திரங்கள் செயல்பட்டன போலும் தெரிகிறது.

- சிவகுமார் பிறந்த சிசேரியன் ஆபரேஷனிலும், அப்புறம் சரசுக்கு நடந்த தைராய்டு ஆபரேஷனிலும், இதையொத்த அனுபவங்கள் ஏற்பட்டு, இப்பொழுதும் கூட எனக்குச் சொல்லச் சொல்ல உடல் சிலிர்க்கும். ஆதலால், நீங்கள் எழுதியதையெல்லாம் நன்கு உணர்ந்தேன்.

6-9-90 இரவு.

தங்கள் கடிதம் வந்தபோது, ஒரு புரொகிராம் இருந்தது, இன்னும் இருக்கிறது. (நான்தான் அதைத் தவர விட்டு விட்டேன்). 7-9-90 வெள்ளி இரவு கொல்லம் மெயிலில் புறப்பட்டு, JK தென்காசி செல்கிறார். அங்கே, குற்றாலத்தில், சாமியார் அருவியின் பக்கத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் பழப்பண்ணை வாரியத் தின் விருந்தினர் விடுதியில் தங்குகிறார். 8,9 அங்கே. முன்பொரு முறை அருணாசலமும் நானும் அதே இடத்தில் JKவோடு இருக்கும் பேறு பெற்றோம். 8 mm மூவியும் அருணாசலம் எடுத்து வைத்திருக்கிறார். "சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்ப வந்தாட விரும்புகிறேன்" என்கிற JK கவிதைப் பிரகாரம், இது நாங்கள் சென்று கலக்க வேண்டிய புரோகிராமே ஆகும். முதலில் அருணாசலம் - அவர் வருவதற்கில்லை என்றாயிற்று. சற்றுமுன்பு எட்டு மணிக்கு நான் JKவோடு போனில் பேசும் போது, நான் மட்டுமாவது போவேன் என்று தோன்றிற்று. வீடு வந்ததும், இந்த உலகம், இத்தகைய இன்பங்களின்பாலும் குற்றம் சாட்டும் என்பதறிந்த விரக்தியில், "நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலம் மட்டும்தானா உகந்த இடம்? ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்பது போல், நாங்கள் சந்திக்கும் ஸ்தலம் திருத்தலம்" என்று தீர்மானித்து, நானும் போவதில்லை என்றாயிற்று. இன்ஷா அல்லாஹ்!

- தங்களுக்காவது முன்கூட்டி எழுதி உஷார்ப்படுத்திக் கிளம்பியிருக்கலாம். செப்டம்பர் சாரலையும் அருவிக் குளியலையும் தங்கள் உடல்நிலை - சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் ஏற்குமோ என்பதுபோல் கருதித் தயங்கி விட்டேன்.

மொத்தத்தில் என்ன தோன்றுகிறது என்றால், எல்லாவற்றையும் விதியின் வழியே விட்டுவிடத் தோன்றுகிறது. இதையெல்லாம் எதிர்த்துத்தான் இத்தனை காலமும் சளைக்காமல் போராடினோம். சுற்றியுள்ள உலகம் பூராவும் சேர்ந்து நம்மைச் சபிக்கும் போலும். ஒரு குருவும் சீடர்களும் குழுமுவது பற்றித்தான் உலகத்தில் எத்தனை பேச்சு? உற்றாருக்குத்தான் எத்தனை பொறாமை?

இந்த மூடமக்களை நாம் ஏமாற்றுவோம். நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலமும் எந்த மலையின் கொடுமுடியும் தேவையில்லை. குப்பைத் தொட்டி ஓரமும் குக்கிராமங்களிலும் நாங்கள் சந்தித்துக் குதூகலித்திருப்போம்.

குற்றாலம் போவதில்லை என்று தீர்மானித்தவுடன், அடுத்து உங்களுக்கு எழுதுகிற கடிதத்தைத் தொடர்கிற வேலையை எடுத்துக் கொண்டேன்.

எனக்கு மிக விருப்பமான ஒன்றை நான் இன்று துறந்தேன். துறவுப் பாதையில் எனது வளர்ச்சிக்கு இந்த அனுபவத்தைத் துணையாகக் கொள்வேன்.

தங்கள் - பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 41

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 41

திருப்பத்தூர்.வ.ஆ.
19-3-90

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தண்டபாணியின் தந்தி உங்களுக்குக் கிடைத்து, அதன் மூலம் அந்த வாரம் JK வரவில்லை என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். இன்றுதான் அவருக்கு, இனிமேல் நீங்கள் என்றைக்கும் வரலாம் - வருகிற தேதியை ஊர்ஜிதப்படுத்துங்கள் என்று ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். நாளை அவரோடு போனிலும் பேசுவேன். தங்களுக்கும் தகவல் உரிய நேரத்தில் வரும். இந்த முறை நீங்கள் அவசியம் வர முயலுங்கள். தங்களுக்குப் பேரன் பிறந்ததற்கு, தாங்கள் எங்களுக்குத் தரும் treat ஆக இதைக் கருதுங்கள்.

- இடையில் எனக்கும் பல வேலைகள் உள்ளன. எங்கள் A.E.O வுடன் ஒர் இறுதி யுத்தத்துக்குத் தயாராகாவிட்டால் என்னைத் தாழ்வு மனப்பான்மை சூழ்ந்து விடும். ஆனாலும் அதை ஏப்ரல் மாதம் மூன்றாவது சனிக்கிழமை வரை ஒத்திவைக்க முடியும். அதற்குள் , JK வுக்கு விடுத்த அழைப்பையும், தங்களைச் சந்திப்பதையும் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் தாங்கள் என்னுடைய இன்னொரு தகவலை எதிர்பாருங்கள்.

22 - 3 - 90

20ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு JK வோடு போனில் பேசினேன். அன்றுதான் அவருக்கு என் கடிதம் கிடைத்திருந்ததாகையால், நிதானமாக யோசனை செய்து தெரிவிப்பதாகக் கூறினார். அநேகமாக நான் உங்களுக்குப் போன் மூலமாகத்தான் தகவல் தர முடியும் என்று நினைக்கிறேன். அவசியம் வருக. நிற்க, உங்களுக்கு நான் எழுதுகிற கடிதங்களில் ஒரு சுதந்திரத் தன்மையை உணர்கிறேன். மனக் கூச்சங்களிலிருந்து மட்டும் விடுபட்ட சுதந்திரம் அன்று இது. காலத் தின் தளைகளிலிருந்தும் விடுபட்ட சுதந்திரம் இது. ஓர் ஐந்து நிமிஷ நேரத்தின் எண்ண அலைகளை விடவும் (அதாவது குறைந்த பட்சம் ஓர் 'அர்ஜெண்ட்' டான கடிதம் எழுத ஆகும் நேரம்) அவகாசம் அதிகம் கிடைத்த - நாட்கணக்கிலும் வாரக்கணக்கிலும் கூட - எண்ணங்களின் சுதந்திரமான வெளியீடுகளாக உங்களுக்கு எழுதுகிற கடிதங்களைக் கருதுகிறேன். சுயதம்பட்டத்தின் குரல் ஒன்றுமட்டும் இதில் கேட்கக் கூடாது - அப்பொழுது சுதந்திரம் மதிப்பிழந்து போகிறது என்கிற அழுத்த மான புரியுணர்வு எனக்கு உண்டு.

என் கடிதங்கள் அதிக பட்சம், நான் எதையாவது, யாரையாவது அதிகமாகப் புகழ்கிறேன் என்கிற குறை உடையனவாக இருக்கக் கூடும். காணாத சத்தியத்தைக் கண்டவர்க்கு, அதைத் தொழுவதிலும் வழிபடுவதிலும் கட்டுப்பாடு எதற்கு? எனவே அந்தக் குற்றச்சாட்டை, நான் உணர்ந்தே ஏற்கிறேன்.

புகழ்கிறவர்கள் எல்லாம் மனதாரப் புகழ்கிறார்களோ? புகழ்ச்சிகள் எல்லாம் பொய்யையும் அறியாமையையும் கலக்காதவைதானோ? என் புகழுரைகளில் பொய்மையும் இல்லை; பிறரொடு ஒப்பிடுகையில் எனக்குப் பெரிய அறியாமையும் ஏதும் இல்லை. ஆனால் ஆர்வமும் ஆசையும் காதலும் அன்பும் தவிப்பும் அதிகம் இருக்கின் றன. அதனால் உண்டான ஆத்ம வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே, உலகின் அளவுகோல்கள் என்னும் ஆகாயத்தைக் கடந்த அப்புறத்திலிருந்து நான் எழுதுகிறேன் என்று கருதுவீர்கள் என்று நம்புகிறேன்.

எனவே எனது கடித தாமதங்களையும் கந்தரகோளங்களையும் புரிந்துகொள் வீர்கள் என்றும் நம்புகிறேன்.

28 - 3 - 90

JK விடமிருந்து தகவல் வந்து விட்டது. 6-4-90 வெள்ளி இரவு 12.00மணிக்கு சென்னையிலிருந்து அவர் பஸ்ஸில் தோழர்கள் புடைசூழப் புறப்பட்டு, 7-3-90 சனிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்குத் திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டில் வந்து இறங்குகிறார். அதற்குள் பட்டுக்கோட்டையிலிருந்தும் கோவையிலிருந்தும் ஈரோட்டிலிருந் தும் ஆரணியிலிருந்தும் தோழர்கள் திருப்பத்துர் வந்து சேர்கின்றனர்; தாங்களும்! திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டிலிருந்து அப்படியே புறப்படுகிறோம். நான் முன்பு வசித்த நாகராஜம்பட்டி கிராமத்துக்கு நேர் கிழக்கே உள்ள குரும்பேரி என்னும் கிராமத்துக்கும் கிழக்கெ, ஜவ்வாது மலை அடிவாரத்தில் நண்பர் ஒருவரின் "கொல்லைக் கொட்டாய்' ஒன்றும் களம் ஒன்றும் மாட்டுக் கொட்டகை ஒன்றும் காலியாக்கப் பட்டு, நாம் தங்குவதற்குத் தயாராக வைத்திருக்கும். தாங்கள் ஒரு புதிய காட்சியைக் காண்பீர்கள். மற்றவை குறித்து இப்போது நான் குறிப்பிடுவது நயமற்றதும் பாங்கற்றதும் ஆகும்.

தாங்கள் இந்தமுறை அவசியம் வந்து விடுங்கள். இத்தகைய ஒரு காட்சியைக் காண ஏற்பாடு செய்ய அடுத்த வருஷம் எனக்கு வலிமையிருக்குமோ என அஞ்சுகிறேன். இது தங்களுக்கு, நாம் எல்லாம் கலந்து கொள்ளும் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையைக் கொண்ட, பிற சந்திப்புகளுக்கெல்லாம் புறம்பான, free ஆன ஒரு சந்திப்பாக, அனுபவமாக இருக்கும் என்கிற நம்பிக்கையினால், இவ்வழைப்பை எத்தனை முறை வற்புறுத்தி எழுதவும் விரும்புகிறேன்.

- இந்த வருகை, குறைந்த பட்சம் ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது போன்ற மனநிறைவையாவது அளிக்கும் என்று நம்புகிறேன்.

8-4-90 அன்று ஞாயிறு, பங்குனி உத்திரம். எங்கள் தெருவும், தெருவில் உள்ள தண்டபாணிசாமி கோயிலும் - பெரியப்பாவும் மு.வ வும் அந்தி வேளையில் லாந்தர் விளக்கில் தமிழ் பயின்ற ஸ்தலம் - பங்குனி உத்திரத்தை முன்னிட்டுக் கோலாகலமாய் இருக்கும்.

கலைமகளுக்குக் குறுநாவலை அனுப்பி விட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தாங்கள் இக்கடிதம் கிடைத்த உடனே ஒரு பதில் எழுதிப் போட்டு, தங்கள் வருகை பற்றிய எங்கள் உத்தேசத் திட்டத்தை வகுத்துக் கொள்ள உதவுங்கள்.

அனைவர்க்கும் எங்கள் அன்பும் நன்றியும் கூறுங்கள்.

- தங்கள், பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 40

( 'சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள் )

கடிதம் - 40

திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-90

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

முன்பொரு முறை, துன்பங்களில் நான் உழலும்போது, உங்களுக்குக் கடிதம் எழுதுவது நின்றுவிடுகிற மாதிரியும், சந்தோஷங்களின் அலை அடிக்கையில் தவிர்க்க முடியாமல் உங்களுக்கு எழுதத் தொடங்குவதாகவும் நான் என் கடிதமொன்றில் குறிப்பிட்ட நினைவு.

இப்பொழுதோ சந்தோஷங்களின் போது கூட உங்களை மறக்க முடிகிறது. ஆனால் என் ஆழ்ந்த துன்பங்களின் போது, அது சரிதானா என்று உரசிப் பார்க்கும் கல்லோடு, அருகிலேயே நீங்கள் நிற்பது கண்டு, அப்போதெல்லாம் எனக்கு எழுதத் தோன்றுகிறது என்று இப்போது எழுதத் தோன்றுகிறது!

இரண்டின் தாத்பர்யமும் ஒன்றே. ஆழ்ந்த நேரங்களில் நாம் நமது அருமந்த நண்பர்களை நினைக்கிறோம்.

அதுவும் நமது உறவு, ஆரம்பத்திலிருந்தே தனது நீண்ட கடிதங்களால், பிறரு டையதையும் விடவும் விசேஷப் பிணைப்புடையது. எனவே, எதையுமே, எடுத்தவுட னேயே உங்களுக்குத்தான் எழுதத் தோன்றுகிறது.

'எழுத்தாளன்' என்கிற ரீதியில் என்னை இப்போது யாரேனும், " இதுவரை நீ என்ன எழுதியிருக்கிறாய்?" என்று கேட்டால், சபாவுக்குப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்று பதிலளிப்பேன்.

நான் மத்தியில், போன பௌர்ணமியன்று JK மாயவரம் செல்வதறிந்து, தங்களையும் வந்து அழைத்துக் கொண்டு நாமிருவரும் மாயவரம் போகலாமா என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். மாயவரம் பெண்கள் கல்லூரியில் பாரதிதாசன் விழாவில் JK பேசினார்.

வருகிற பௌர்ணமி 11-3-90 அன்று - 9,10 இருதேதிகளும் வெள்ளி, சனியாக வருகின்றன. JK ஒருக்கால் இந்த நாட்களில் இங்கு வரலாம். அப்படியாயின், போதிய அவகாசத்தோடு தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அல்லாத பட்சத்தில், அவசரமாக ஒரு போன் போட்டாவது சொல்கிறேன். அந்த நாட்களில் தாங்கள் எங்களோடு இணைந்து கொள்ள முடிந்தால், இரு தரப்பின் பாக்கியமும் ஆகும் அது.

தங்கள் கதை வந்த உடனேயே ஆறுமுகம் தான் அதைப் படித்து விட்டு வந்து எனக்குச் சொன்னார். கதை என்னவென்று நான் கேட்டேன். கிராமப்புற வாழ்க்கையில் மிக நுட்பமாக நடக்கும் அந்த நாடகம் ஒரு ரசமான கதைப் பொருள்தான். கதையைக் காதால் கேட்ட மாத்திரத்திலேயே அங்ஙனம் நன்றாய் இருந்தது. ஆனால், சமீப நாட்களில் என் பழக்கம் காரணமாக ஆனந்த விகடன் என் கண்ணிலேயே படவில்லை. எந்த ஒரு விகடனையும் புரட்டிப் பார்க்கக்கூட மனம் இப்போது அயர்கிறது. அரசியலின் அதன் வாடை எனக்கு அவ்வளவு குமட்டுகிறது.

இனிமேல்தான் அந்த விகடனைத் தேடிப் பிடித்துப் படிப்பேன்.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து எழுதுகிறீர்கள். இந்தத் தொடர்ச்சி என்னும் அம்சம் தெய்வீகமானது - நம்மையொத்த கலைஞர்களுக்கு! அது தங்களுக்கு வாய்த்திருப்பது ஒன்றே மகிழ்ச்சிக்குரியது. இலக்கணங்களையும் விமர்சங்களையும் அதிகம் பொருட்படுத்தாதீர்கள். உங்களுக்கே இலக்கணம் தெரியும். உங்களுக்குள்ளேயே உங்களுக்கான விமர்சகன் இருக்கிறான்.

இந்தக் கடிதத்தை இன்னும்கூட எழுதலாம். நாளைய தபாலில் சேர்க்க முடியாமல் இன்னும் ஒத்திப்போய்விடும். அதனால் உடனே முடிக்கிறேன்.

- தங்கள் -
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 39

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 39

திருப்பத்தூர்.வ.ஆ.
30-7-89

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி குழந்தைகளுக்கு எழுதும் புத்தகத்திற்காக - அதற்கான குறிப்புகளைத் தரும் கடிதங்களை இனி நான் நிறைய எழுத முடியும் என்று நம்புகிறேன்.


எனவே, எடுத்த உடனேயே அந்தக் காரியத்தைத் தொடங்குகிறேன்.

உங்கள் நூலின் மேலான பலனும் திறனும் எவ்வாறாய் இருக்க வேண்டும் என்றால், கடவுள் என்றும் பக்தி என்றும் மதம் என்றும் ஆன்மிகம் என்றும், அதற்கப்புறம் குரு சிஷ்ய உறவென்றும் சொல்லப் படுகிற - பல பெரியவர்களுக்கே தெளிவாக அத்துபடியாகாத - அவற்றின் அனுஷ்டானங்களில் பல பெரும் குருட்டுப் பிழைகள் செய்கிற அளவுக்கு, அர்த்தமாகாத, அந்த அற்புதமான விஷயங்களை எல்லாம், குழந்தைக்கு அதற்குப் பிடித்தமான பண்டத்தை - அதே நேரத்தில் ஆரோக்கியமும் ஆற்றலும் அளிக்கிற பண்டத்தை, அது விரும்பி வாங்க, நாம் எப்படி ஆர்வத்துடன் ஊட்டுவோமோ - அது போல் ஊட்டுவதாயிருக்க வேண்டும்!

இந்த நூலுக்கு இப்பொழுது அவசியம் என்னவென்று கேளுங்கள். இது இந்தக் காலத்துக்கு நாம் செய்கிற நாம் கற்ற வைத்தியம். மதங்களின் பேராலும், வகுப்புகளின் பேராலும், தத்தம் கடவுள் நம்பிக்கைகளின் பேராலும் இன்றைக்கு இந்தியாவிலும் உலகிலும் தலையெடுக்கிற எத்தனையோ விபரீதப் போக்குகளுக்கு ஆட்படாமல் நமது இளைய தலைமுறைக் குழந்தைக¨ளைக் காக்க வேண்டும் என்கிற ஆழ்ந்த உளமார்ந்த அக்கறையே இந்த அவசியத்தை உண்டாக்குகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர், மஹாமேதாவியான விவேகாநந்தருக்கே, கடவுளை துளைத்துத் துளைத்து கேள்வி கேட்ட அவருக்கே, கடவுளை அவர் ஒப்புக்கொள்ளும் வண்ணம் உணர்த்த இயன்றது. ராமகிருஷ்ணர் பற்றிய செய்திகள், ஒவ்வொருவராலும் நன்கு உணர்ந்து கொள்ளப்படுகிற அவரது வாழ்க்கை, எல்லாருக்கும் அந்த நலத்தை அளிக்க முடியும்.

பல மஹான்களின் வாழ்க்கை பற்றி நிறையப் பேசி இருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்; சிறிது படித்துமிருக்கிறோம். ஆனால், கண்ணெதிரில், (கண்ணெதிரில் என்றால் காலத்தின் கண்ணெதிரில்) பல நுட்பத் தகவல்களோடும், அழகான காட்சி மாற்றங்களுடனும் கவனிக்கப்பட்டு, காலம் செய்த பெரும் பாக்கியத்தின் காரணமாக அவையெல்லாம் பதிவு செய்யப்பட்டு, நமக்குக் காணக் கிடைக்கிறபொழுது, அந்த வாழ்க்கையை உணர்ந்து கொள்கிறபோது, அவர் மஹான் அல்லர், கடவுளின் அவதாரமே என்று அவரது அந்த அத்யந்த சிஷ்யர்களைப் போலவே நாமும் ஒப்புக் கொண்டோம்.

எனக்குத் தோன்றுகிற விஷயமிது. அவர் கடவுளைச் சுலபமாகக் காட்டியருளுகிறார். ஓடிப்போய் நாம் அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறோம்.அப்புறம் அவர் நமது பக்தியில் இருக்கிற வெட்கப்பட வேண்டிய விஷயங்களை யெல்லாம் கழிக்கிறார். இவர் எல்லா மதங்களிலும், அவற்றின் ஆசாரியர்களின் ரூபத்தில் பிறந்திருக்கிறார். இவரின் சீடர்கள் எல்லாம், அந்த ஆசாரியர்களின் சீடர்களாக ஏற்கெனவே பிறந்தவர்கள்தாம் என்று அதை உறுதியாய் உணர்ந்து அனுபவிக்கிறோம். கதை, கதை, கதை, கதை என்று இவர்போல் கதைகளின் அலைகளை உண்டாக்கிய இன்னொரு உலக எழுத்தாளர் இல்லை, ஆனால் இவர் எழுதவே இல்லை. அன்னை சாரதாமணி தேவியாரின் வாக்கில் "ஒருமுறை ஸ்ரீராம கிருஷ்ணரின் பிடியில் சிக்கியவர்கள், வீழ்ச்சி அடைவது என்பதே இல்லை!"

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணாமடம் 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்' என்னும் நூலின் மூன்று பெரிய பாகங்களை வெளியிட்டுள்ளது. அந்த மூன்று பாகங்களையும் வாங்கிப் படியுங்கள். மகேந்திரநாத் குப்தா என்பவர், ஸ்ரீராமகிருஷ்ணரை அருகிருந்து தரிசித்த சம்பவங்களும், அப்பொழுது நிகழ்ந்த பல அற்புதமான சிறுசிறு விவரக் குறிப்புகளும் கூட - அந்தக் காலத்தின் ஒரு டயரி போல் அதில் உள்ளன. அவற்றை நீங்கள் படித்து விட்டீர்களானால், அப்புறம் வேறு என்னென்ன படிக்க வேண்டும், அறிய வேண்டும் என்கிற வேட்கை உங்களுக்கு ஆரம்பமாகி விடும். நீங்கள் எழுதப் போகிற நூலுக்கு இவ்வாறு அற்புதமான உபகரணங்கள் எல்லாம் உள்ளன.

தங்கள் - பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 38

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 38

திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-89

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் அன்பான கடிதத்துக்குச் சிலநாட்கள் தாமதமாகப் பதில் எழுதுகிறேன். இந்த நாட்களில் தங்களுக்கு ஆரஅமர எழுதுகிற ஒரு தருணத்ததிற்காகக் காத்திருந்தேன்.

ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை தாங்கள் எங்கள் ஆசிரியர் சங்கத்தில் உரையாற்ற இயலுமா என்பதை உடனடியாகத் தெரிந்து கொண்டு எனக்குத் தெரிவியுங்கள்.

எனது பேராசை என்னவென்றால், ஒரு Decade க்குப் பிறகு இங்கெல்லாம் நல்ல மழை பெய்துள்ளது. எங்களது ஜவ்வாதுக் குன்றுகளில் உள்ள ரம்யமான இடங்களையெல்லாம் நானும் அருணாசலமும் மட்டுமே ஓடோடிச் சென்று பார்த்து உல்லாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உரையை ஆற்றும் சாக்கில், தாங்களும் -நாங்கள் அனைவரும் விரும்புகிறபடி தம்பதி சமேதராய் வந்தால், ஒரு நிர்ப்பந்தத்தின் காணமாகவாவது, நாம் எல்லாரும் நமது குடும்பங்களுக்குத் தரவேண்டிய - அவசியம் தரவேண்டிய - மாற்றுச் சூழ்நிலைகளையும், மறக்க முடியாத பொழுதுகளையும் உண்டாக்கித் தருவோமே என்பதுதான்.

தங்களது பணிமாற்றம் மகிழ்ச்சி தருகிறது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டு வடலூர் ஆசிரியர்பயிற்சி நிலையத்துக்கு முதுநிலை விரிவுரையாளராகச் செல்வது அறிந்தேன். மாணாக்கர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி போரடிக்காமல், புதிது புதிதாக அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேசப்போனால், எந்த விஷயம் பற்றியும், எந்தத் தலைப்பின் கீழும், அவர்களுக்குச் சொல்லப் புதிது புதிதான அல்லது சுவை மிகுந்த விஷயங்கள் உங்களிடம் இருக்கின்றன.

பிறர் கேட்க நாம் நமது கருத்துக்களை - எண்ணங்களைச் சொல்கிற நிலை, ஒரு சன்னதம் வந்த நிலை என்பது என் சொந்த அனுபவம்! எனவே, தாங்கள் புதிய பணியில், எதுவும் சள்ளை இல்லை என்பதோடு கூட, சுவையும் மிகுந்திருக்க வேண்டுமென்று நான் கணிக்கிறேன்.

ஆகஸ்டு மூன்றாம் வாரம் இயலவில்லை எனில், எந்த மாதத்தின் மூன்றாவது வாரச் சனிக்கிழமையும் தாங்கள் இங்கு பேச வரலாம். பேசுவதையே பிரதானமாகப் பிரஸ்தாபிக்கக் காரணம், தாங்கள் இப்போது ஆற்றுகிற பணி, ஆசிரியர்களாகிய எங்களால் நிச்சயம் தவறாது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதானே? ஒரு சிறந்த வாக்குமூலம் எங்களுக்கெல்லாம் தங்களையன்றி யாருண்டு? எனவே, பேசவருகிறோம் என்கிற திட்டத்துடனேயே வருவது பற்றி எழுதுங்கள்.

வருவதை, மழைக்காலம் பனிக்காலத்திற்குள்தான் நான் மிகவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான், மலையும் மேகமும் மழையும் பனியும் பச்சையும் பயிருமாய், எங்கள் காய்ந்த வடார்க்காடு உங்க¨ளைக் கவர முடியும்.

எந்தக் காரியத்தை ஒழுங்காகச் செய்தோம் என்று பார்த்தால், பேசுகிற காரியத்தைத்தான் சிறப்பாகச் செய்திருக்கிறோம். இது பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஒரு பெருமிதம் வேறு சில பாக்யங்களை இழக்கும் போலும். திருவேறு தெள்ளியராதல் வேறுதானே?

பரவாயில்லை என்றும், உத்தமமே என்றும் எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பயிற்றுவித்திருக்கிறார். நீங்கள், குழந்தைகள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அதே நேரத்தில் பெரியவர்களும் வியக்கும் வண்ணம், அவரைப் பற்றி ஒரு புத்த்தகம் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு புத்தகம் எழுதுகிற முயற்சியில் பத்துநாள் இங்கேயே வந்து தங்கவேண்டும்.

இது ரொம்பப் பெயர் பெறும். இந்தக்காலத்துக்கு, இப்பொழுது, இப்பொழுது என்றால் இதோ இப்பொழுதே, எதிரே இருக்கும் பிரச்சினைக்கு மாற்றுச் சொல்லும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சங்கதி. இதைக் குழந்தைகளுக்குச் சொல்ல முற்படுகையில், ஓர் ஆன்மீக வாழ்க்கையின் வேதாந்தப் புதிர்களெல்லாம் கூட விலகி, ஸ்ரீராமகிருஷ்ண சத்தியம் எளிதும் தெளிவும் உடையதாகும் என்று நான் நம்புகிறேன். இந்தக் காரியத்தில் நீங்கள் இறங்குகிற க்ஷணத்திலிருந்து, நாங்கள் உங்களுக்கு எல்லா சேவைகளும் செய்யத் தயாராக உள்ளோம்; உண்மை என்னவெனில், அத்தகைய முயற்சியில் ஸ்ரீராமகிருஷ்ணரே தங்களுக்கு உதவுவார்.

இதைக் கருதுக.

சென்ற ஆண்டு, எனது 25 வருஷ சர்வீஸைக் கொண்டாட, முதல் வகுப்பை எடுத்துக் கொண்டு, அதே மாணவர்களுக்குத் தொடர்ந்து இப்போது இரண்டாம் வகுப்பு எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் பணியாற்றிய ஆண்டுகளிலேயே மிக முக்கிய ஆண்டுகளாக இவற்றைக் கருதுகிறேன். இந்தப் பிள்ளைகளுடனேயே ஐந்தாம் வகுப்பு வரை போக ஆசை.

- தங்கள் பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 37

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 37

திருப்பத்தூர்,
23-10-89

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

சமீபத்தில் ஒருமுறை JK ''இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத அதீத ராமகிருஷ்ண பக்தி உனக்கு இருக்குமேயானால் அது ஒழிக!" என்றார்.

நான் சற்றுத் திடுக்கிட்டேன். 'இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத எந்த பக்தி எனக்கு இருக்கிறது? அப்படி எதுவும் இல்லை. எல்லாரிடமும் இருக்கும் எல்லா பக்தியிலும் கலந்து பிசைந்த ஏகப் பேருண்டையின் ஒரு விள்ளல் என்னிடம் இருக்கிறது. அவ்வளவுதான். எனது பக்தி பூராவும் எனக்குப் பிறர் கொடுத்தது. நான் சம்பாதித்ததை நான் இழக்கத் துணிவேன். பிறர் எனக்குத் தந்ததைப் பறிகொடுக்க மாட்டேன்..............எனக்கும் எந்த பக்தியும் இவர்களுக்கு இருக்கும் மாபெரும் பக்தியின் சாயல்தான்...............' என்றெல்லாம் சமாதானம் செய்து கொண்டேன்.

கடந்த 15-10-89 ஈரோடில், JK வின் 'புதுச் செருப்பு கடிக்கும்' விசேஷப் படக் காட்சியும், அன்று மாலை நேரு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டமும்.

இந்தச் சந்திப்பில் JK சொன்னார்:

அவரது மனைவியிடம் 'வாழ்க்கை அழைக்கிறது' என்னும் அவரது நாவலை மட்டும் படிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தாராம். (பக்குவப் படாத பருவத்தில் எழுதியது என்று அவருக்கு நாணம்). ஆனாலும் அவர்கள் அதைப் படித்து விட்டார்களாம். "நான் படிக்க வேண்டாம் என்று சொல்லியும் ஏன் படித்தாய்?" என்று JK கேட்டாராம். "ஏன் என்றால் என்ன பதில் சொல்வது? கடவுளை எனக்குக் காட்ட முடியுமா என்று எல்லாரையும் கேட்க விவேகாநந்தருக்கு ஏன் தோன்றியது?" என்று அவர்கள் மறுமொழி சொல்ல, விஷயம் நமது ஆர்வத்துக்குகந்த இடத்தைத் தொட்டி ருக்கிறது. JK அவர்களின் மனைவியார் சொன்னாராம்: "உங்களுக்கும் ராமக்¢ருஷ்ணருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது!"

- இதைச் சொல்லி JK, "குப்பா, அப்போது உன்னை நான் நினைத்துக் கொண்டேன்" என்றார். எனக்கு எத்தகைய அற்புத உணர்ச்சி உண்டாகியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனாலும், நாம் பெரிய ராமகிருஷ்ண பக்தர் என்று நாம் பிலுக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லதே. அவரை நாம் உயிர் வாழும் காலம் தோறும் நினையாதிருக்க யாரால் இயலும்? நாம் எல்லாரும் தயக்கமின்றி ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ் ஓதுவோமாக. அவரது க்யாதியே எஞ்ஞான்றும் பரவுவதாக.

இந்தமுறை அப்புறம் நான் JKவுக்குச் சொன்னேன்:

"உங்களை நாங்கள் பருவந்தோறும் வெவேறு பாத்திரமாகப் பார்த்திருக்கிறோம். பாரதியாகப் பார்த்தோம். ஏன், பரமசிவனாகக் கூடப் பார்த்துவிட்டோம். அவ்வாறு இப்போது ராமகிருஷ்ணராகப் பார்க்கிறோம். இவ்வளவு தானே தவிர.......(இதன் நடுவில் அவர் ஏன் ராமகிருஷ்ணராகத் தெரிகிறார் என்ற விஷயத்தையும் சொன்னேன் - அந்த அதியற்புத சம்பாஷணை.......... .பேச்சொழுங்கு, கிளைபடரும் சுவை மிக்க கதைகள் .......பேசப்பேசக் convince ஆக்கும் அந்த அதிசயக்கலை ......) உங்களை ஒரு சிமிழுக்குள் அடைத்து விடவேண்டும் என்பதற்காக ராமகிருஷ்ணர் என்று கூறவில்லை" என்று நயமாகத் தெரிவித்துக் கொண்டேன்.

"நீங்க அடைச்சிடுவீங்க என்று இல்லை அப்பா, நான் அடைஞ்சிடக்கூடாது என்பதற்காக........" என்று JK சொன்னார்.

இந்த இடத்துச் சம்பாஷணையில் எனக்கு ஒரு தேவரகசியத்தின் குரல் கேட்டது.

(JK வோடு நிகழ்ந்த சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிற போது, அவற்றை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அவை பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று நம்புகிற முதல் ஆளாகத் தாங்கள் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.)

இவரை ராமகிருஷ்ணரோடு ஒப்புமைப் படுத்துகிற எங்கள் நேர்மையான துணிச்சலை நன்பர்கள் சிலர் நாங்கள் தனியே பேசிக் கொண்டோம். உலகை ஏமாற்றுவதற்காக ராமகிருஷ்ணரோடு ஒரு மனிதரை ஒப்பிடவேண்டுமென்றால்,அதற்கு JK வினுடையது போன்ற ஒரு personality யையும் அதன் வாழ்முறையையும் தேர்ந்தெடுக்கிற ஓர் அஞ்ஞானியைக் கற்பனை செய்ய இயலுமோ? (contrast முறையிலும் சௌந்தர்யம் உதயமாவதைக் கவனம் கொள்க)

வீட்டில் தற்போது நானும் சரசுவும் பாப்பாவும் மட்டும்தான் இருக்கிறோம்.போக, ஏஞ்சல் நாயும் இரண்டு பூனைக்குட்டிகளும் உள்ளன. வீட்டை விட்டு வருவதே பெரிய கஷ்டம். இல்லையேல், நாங்கள் வந்து அங்கே பாப்பாவைப் பார்ப்போம்.

சில விஷயங்களை நினைத்துச் சும்மா விடுவது, சும்மா விடுவது ஆகாது! அவற்றை அமரத்வத்தின் வர்ணத்தில் தோய்த்து எழுதுவதற்கு நிகராகும் அவ்வாறு நினைப்பது.

தாங்கள் இனி எந்நேரத்திலும் வரலாம். இதுதான் சுருக்கமான பதில். தங்கள் வருகையைக் கொண்டாடுவதற்கு சில கனவுகள் வைத்திருக்கிறேன். நடுவில் ராமகிருஷ்ணர் பற்றியும் பேசலாம்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

கடித இலக்கியம் - 36

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 36

திருப்பத்தூர்.வ.ஆ.
8-4-88

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய விஷயம் - ஆனால் ஒரு புராதன விஷயமும் கூட - ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தான். ராமகிருஷ்ணர் ஒரு வரி கூட எழுதி எதையும் உலகுக்கறிவித்தவர் அல்லர். தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் அவர் பேசியதே பெரியதோர் உலகச் செய்தி ஆயிற்று.

ஆனால், அன்பு செலுத்துவதில் தான் அவர் ரகஸ்யம் பூராவும் அடங்கியிருந்தது. நான் இதுகாறும் கண்ட உலக மாந்தர் இடத்தே, எவர் இடத்தும் அன்பு அமுதப் பிரவாகமாகப் பொங்கி வழிந்ததெனில், அது ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தே தான்!

அந்த அன்பின் சுவையை நான் மாந்த ஆரம்பித்து விட்டேன். உங்கள் தோட்டத்தில் நின்று, " எண்ணற்ற எனது முன்னோர்களையும் இனி வரப்போகும் ஏராளமான சந்தததிகளையும் ஒருங்கே சேர்ந்து கண்டு உடன் நிற்பது போல" உணர்ந்தேனே அப்போதே நான் இறையருளால் அன்பு பற்றிய இந்த மாபெரும் போதத்துக்கு ஆட்பட்டிருந்தேன் என்பது நன்கு புரிகிறது. அப்புறம், இந்த இடைக்காலத்தில், எனது ஆற்றல், அறிவு, உணர்ச்சி, கற்பனை, ஞானம், தெளிவு என எல்லாமே இந்த அன்பு கலந்து இருமடங்கு மும்மடங்கு வளர்ச்சி பெற்றன ஸ்ரீராமகிருஷ்ணரால்!

போகப்போகப் புறச்செயல்கள் ஒடுங்குகின்றன. அகத்தினுள் ஆழ்ந்த குழப்பங்கள் ஆரம்பமாகின்றன.

உங்களோடு உடனே ஒருபொழுது பேசி மகிழ்ந்தால்தானே, வந்த மங்கலச் சேதிக்குச் சரியான மறுமொழியாகும்? அ·தின்றி, எழுதுதில் என்ன உயிரிருக்க முடியும் என்று எண்ணினேன் போலும்! தங்களது அதீத - அநியாய - ஏக்கம், எழுத்துக்கும் உயிருண்டு என்கிற உண்மையை எனக்குச் செவிட்டில் அறைந்து கற்பித்தது. அதனால்தான் துணிந்து கிறுக்குகிறேன்.

நெடுநாள் அடைத்து நிற்கும்! அப்புறம் அதன் உச்சத்தில் புழுங்கும்! பிறகு சிறிது கசிந்து போக்குக் காட்டும். அப்புறம் பிரவாகமாக அடித்துப் பெய்யும். உங்கள் ஊரில் இப்படி ஒரு மழையைப் பற்றி உங்கள் பழைய கடிதமொன்றில் ஒருமுறை எழுதி, அதை என் கடிதத்துக்கே உவமையாக்கி இருந்தீர்கள்.

தகிக்கும் உலகுக்கு அப்படி ஒரு பெருமழை வரும் பொருட்டு, ஒரு கடித மழை பொழிந்து பூஜிப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.

சந்தித்துக் கொண்டாலும் - அதுவன்றி நினைத்துக் கொண்டாலும் மகிழ்கிற பேறுடைய மாந்தர், அவர் அவ்வாறு குழுமியதே அவர் பாக்கியமும் பாக்கியத்தின் பயனும் அன்றோ? நாமெல்லாம் சேர்ந்தது சந்தித்தது அறிந்தது பிரிந்தது எல்லாம் தெய்வீகமான விஷயங்களே!

எழுதுகிறபோது - சில பொழுது நான் பிதற்றுகிறேனோ என்ற சங்கை வந்து விடுவதுண்டு. அப்படி நின்ற கடிதங்கள் ஐந்தாறு தேடினால் கிடைக்கும். எனவே, எழுதுவது எழுதாதிருப்பதின் வித்தியாசத் திரை கிழிந்து கீழே வீழட்டும்.

மனம் புண்படுவதா? அந்த இதயத் துர்ப்பலம் யாருக்குண்டு? "நைதத் த்வய் உபபத்யதே:" என்று கீதை சொல்வதைக் கற்றுக் கொண்டு, மனம் புண்படுவது என்கிற இதய பலவீனத்துக்கு நான் எப்பொழுதும் ஆட்படுவதே இல்லை! நான் பலவீனன், நான் பாவி, நான் துக்கிக்கிறேன் என்று சொல்வதே பெரிய பலவீனம், பெரிய பாவம், பெரிய துக்கம் - இதனினும் பெரிய கொடிய பலவீனமும் பாவமும் துக்கமும் வேறில்லை.

இதை அறிந்து கடந்துவிட்டதாக நான் ஒரு தெய்வீக அகம்பாவம் கொண்டிருக்கிறேன்.

நான் கண்ட ருசிகளில் மனம் இனி சலிப்பதென்பதும் களைப்பதென்பதும் தெவிட்டலென்பதும் இல்லை. ஓர் உன்னத உறவை ஒரு மனப்புண்ணின் மூலஸ்தானமாக்கும் மடமை, என்னுள் இருக்க இடமில்லை. இது இனி எஞ்ஞான்றுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டது.

தங்கள் - பி.ச.குப்புசாமி.