Friday, February 09, 2007

நினைவுத் தடங்கள் - 37

இளமையில் என் ரசனையையும் இலக்கிய ஆர்வத்தையும் தூண்டியவர்களில்
ஒருவரான என் பெரியப்பா மகன் - சின்ன அண்ணன் என்பவரை அவசியம் நினைவு கூர்தல் வேண்டும். எங்கள் பெரியப்பாவின் குணவியல்புகளுக்கு ரசனை சாத்யமில்லை. ஆனால் அவரது இரண்டாவது மகனுக்கு இசை ரசனையும் இலக்கிய ரசனையும் இருந்தது. அவருக்கு என் பெரியப்பாவிடம் கடைசிவரை இணக்கமில்லை. எங்கள் அப்பாவிடம்தான் தன் இலக்கிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்.

பெரியப்பாவின் முரட்டு சுபாவம் மனைவி மக்களிடம் கூட இணக்கம் ஏற்படுத்தி இருக்க வில்லை. முன்பே நான் குறிப்பிட்டபடி அவர் சர்வாதிகாரி. யாரும் எதுவும் கேட்க முடியாது. ஒரே ஒருவர் மட்டும்தான் அவரைக் கேட்க முடிந்தவர். அவரும் கட்டுப் படுத்திவிட முடியாது. அடுத்த தெருவில் இருந்த அவரினும் மூத்த - 'ஆலத்தெரு மாமா' என்று நாங்கள் அழைக்கும் உள்ளூர் உறவினர்தான் அவர்.

எங்கள் சின்ன அண்ணன் கொஞ்சம் நவ நாகரிகம். அப்போதைய நாகரீகப்படி, கால் குதிக்குக் கீழே புரளும் எட்டு முழ மல்வேஷ்டி, பளிச்சென்ற வெள்ளை லாங் கிளாத்தில் கல்லிஜிப்பா, கழுத்தில் மைனர் சங்கிலி, ஸ்நோதடவி பவுடர் பூசிய முகம், குனேகா செண்ட், காலில் கட்ஷ¥ என்று வலம் வருவார். ஆனால் இதெல்லாம் பெரியப்பா கண்முன்னால் கிடையாது. ஒரு தடவை குதிபுரளும் வேட்டியில் பார்த்த பெரியப்பா பிடரியில் ஒரு அறை
வைத்து "இதென்ன தெருப் பெருக்கக் கட்டுறியா? தூக்கிக் கட்டுடா" என்றார். அவர் எப்போதும் கணுக்காலுக்கு நாலு விரற்கடை மேலேயே, நெஞ்சுவரை வேட்டியை உயர்த்திக் கட்டுபவர். ஜிப்பாவும், மைனர்செயினும் பெரியப்பாவுக்குப் பிடிக்காது. அப்போதெல்லாம் நாதஸ்வரம் வாசிக்கிறவர்கள்தான் ஜிப்பாவும், மைனர் செயினும் போடுவார்கள். ஜிப்பா- மைனர் செயினுடன் அண்ணனை ஒருதடவை பார்த்துவிட்ட பெரியப்பா அப்போது ஒரு அறை கொடுத்து "இதேன்ன மேளக்காரன் மாதிரி? கழற்றி எறி" என்று பெரியப்பா கண்டித்திருக்கிறார். ஆனாலும் வெகுநாட்கள் வரையிலும் அண்ணன் அவற்றை விடவில்லை. பெரியப்பா கண்மறைவில் - எங்காவது வெளியூர் கல்யாணத்துக்கு, பக்கத்து நகரமான விருத்தாசலத்துக்கு சினிமா பார்க்கப் போகும் போது என்று - மேற்சொன்ன அலங்காரங்களுடன் செல்வார். பெரியப்பா கண்டித்தும் விலக்காத ஜிப்பாவையும் மைனர் செயினையும் அவருக்கே விரக்தி ஏற்பட்டு எடுக்கும் நிலை ஏற்பட்டது சுவாரஸ்யமானது.

ஒரு முறை பக்கத்து ஊரில் ஒரு திருமணத்துக்கு, பெரியப்பாவின் பிரதிநிதியாக
சின்ன அண்ணன் தன் நண்பருடன் போயிருந்தார். நண்பரும் அண்ணன் மாதிரியே
ஜிப்பா- மைனர்செயின் அணிந்திருப்பவர். திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்டு விட்டு
கையில் தாம்பூலத்துடன் இருவரும் வெளியே வந்தார்கள். எங்கள் வட்டத்தில் ஒரு
பைத்தியம் வெகு நாட்களாய்ச் சுற்றிக் கொண்டிருப்பான். 'தளவாய்ப் பித்துக்குளி' என்று நாங்கள் அவனை அழைப்போம். வெறும் கோவணம் மட்டுமே அணிந்து புழுதியும் அழுக்குமான உடலுடன், அடர்ந்த தலை முடி, தாடியுடன் கல்யாண வீடுகளில் தவறாமல், எச்சில் இலைக்காகக் காத்திருப்பான். வாய் எதையாவது பினாத்திக் கொண்டிருக்கும்.
அன்றும் அவன் கல்யாண வீட்டுக்கு முன்னால் பந்தல் காலருகே நின்று கொண்டிருந்தான். அண்ணன் நண்பருடன் வெளியில் கையில் தாம்பூலத்துடன் வருவதைப் பார்த்து, "இப்பத்தான்
மேளக்காரனே சாப்புட்டு வரான்'' என்றான். அண்ணனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. 'இவன் என்னடா எங்கப்பா மாதிரியே சொல்றான்?' கிற மாதிரி நண்பரைப் பார்த்தார்.

அடுத்த விமர்சனம் அதிகார பூர்வமானது. அதே நண்பருடன் ஒருநாள் சினிமா
பார்க்க விருத்தாசலம் சென்றபோது கடைவீதியில் இருவரும் தனியான தெருவில் நடக்கிறமாதிரி சாவதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அது மாசிமக
விழா நேரம். போலீஸ், சாலையில் கும்பலாக நடக்கும் பாதசாரிகளை போக்கு வரத்துக்கு இடைஞ்சல் இல்லாதபடி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அது தெரியாத இருவரும் ஜாலியாகக் கைகோர்த்தபடி சாலை நடுவில் வந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் ஸ்டேஷன் வந்ததையோ அங்கு ஏட்டு நின்று கொண்டிருப்பதையோ பார்க்கவில்லை. ஆனால்
ஏட்டு பார்த்து விட்டார். "ஏ மைனர் செயின் தம்பிகளா! இப்பிடி வாங்க!" என்று அழைத்தார். இரண்டுபேரும் மிரண்டு போனார்கள். போலீஸ் என்றாலே பயப்படுகிற காலம். பயந்தபடி ஏட்டருகே வந்தார்கள். "உள்ள போய் அப்டி உக்காருங்க. இது என்னா உங்கப்பா வீட்டு ரோடுன்னு நெனைப்பா? மைனர்செயினும் ஜிப்பாவும் போட்டா கண்ணு
தெரியாதா?" என்று சொடுக்கினார். 'இது என்னடா இது? மைனர் செயினுக்கும் ஜிப்பாவுக்கும் எங்கே போனாலும் நக்கலா இருக்கே' என்று இரு மைனர்களும் குமைந்தார்கள். அப்புறம் எதை எதையோ சொல்லிக் கெஞ்சி சினிமா பார்க்க வைத்திருந்த காசை அழுது விட்டு 'தப்பினோம் பிழைத்தோம்' என்று வீடு திரும்பினார்கள். அதற்குப் பிறகு யாரும் அண்ணனையும் அவர் நண்பரையும் ஜிப்பா-மைனர் செயினில் பார்த்ததில்லை.

அண்ணன் வாய்ஜாலம் மிக்கவர். அவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசி யாரும் மீள முடியாது. வாதம் செய்தால் அவருக்கு ஒரு நியாயம் எதிரிக்கு ஒரு நியாயமாகத் தான் இருக்கும். தன் பொருள் என்றால் உயர்த்தியும் மற்றவர் பொருள் என்றால் மட்டம் தட்டியும் பேசுவது அவரது சுபாவம். ஒரு தடவை எங்கள் தெருவில் ஒரு மைனர் பையன், அப்போதைய
விடலைகளின் ஆசைக்கேற்ப எங்கேயோ ஒரு கூலிங் கிளாஸ் வாங்கி அணிந்து கொண்டு கம்பீரமாகத் தெருவில் வந்து கொண்டிருந்தான். அண்ணன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவர்தான் இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் அவன் ஈட்டுப் பையன்களுக்கு அத்தாரிட்டி என்பதால் அவரிடம் காட்டிப் பெருமைப்பட விரும்பினான். அண்ணனுக்கு தனக்கெதிரே
நேற்றைய பயல் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு நடப்பது உறுத்தியது. அவரே வம்புக்கு இழுக்க நினைக்கையில் அவனே விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சியென அருகில் வந்தான். கண்ணாடியைக் கழற்றி அண்ணனிடம் நீட்டி, "இதப் பார்த்துச் சொல்லுங்க அத்தான். எப்பிடி? தேவலையா?" என்றான். அண்ணன் முகத்தை அருவருப்பான எதையோ பார்க்கிற மாதிரி வைத்துக் கொண்டு, "ஏது இது?" என்றார். "நேத்து விருத்தாலம்
கடத்தெருலே வாங்குனேன். 15ரூபா பொறுமில்லியா?" என்றான் இறைஞ்சலாக. "என்னது? 15ரூபாயா? நல்லா ஏமாத்தி இருக்கான் உன்னை. மெட்றாஸ் ப்ளாட் பாரத்துலே இது 5 ரூபாய்க்கு சிரிப்பா சிரிக்குது! எத்தன வேணும் ஒனக்கு?" என்றார். பாவம் அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

அவர் ஒரு முறை ஹீரோ பேனா ஒன்றை வாங்கி வந்திருந்தார். அது ஜப்பான் சரக்கு. அப்போது நான் கல்லூரி மாணவன். என்னை விட்டால் அப்போதைக்கு ஊரில் அப்படிப் பட்ட வெளிநாட்டுப் பொருளைக் காட்டிப் பெருமைப்பட ஆளில்லை. எனவே என்னிடம் காட்டி, "தோ பாத்தியா? ஜப்பான் பேனா! என்ன விலை தரலாம்?" என்றார். அவர் சுபாவம் தெரிந்தபடியால் கொஞ்சம் உயர்த்தியே - அப்போது 10ரூபாய்க்கு ஹீரோ பேனா
கிடைத்தது - "15ரூபாய் கொடுத்தீங்களா?" என்றேன் பயந்து கொண்டே. "என்னது? 15ரூபாய்க்கு எவன் குடுக்கிறான்? எங்கே எனக்கு ஒரு நாலு பேனா 15ன்னு வாங்கிக் குடேன் பார்க்கலாம்!" என்று எகிறினார். "சொளையா 25ரூபா குடுத்தேன்" என்றார். "இருக்கும் இருக்கும்" என்று ஜகா வாங்கிவிட்டேன்- அவரிடம் மேற்கொண்டு வாதம் செய்வதில் பயனிருக்காது என்பதால்.

எங்கள் பக்கத்து ஊரான நேமத்திலிருந்து ஒரு கிழவன் மாம்பழங்கள், பலாப்
பழச்சுளை என்று சீசனுக்குத் தக்கபடி தலைச் சுமையாய்க் கொண்டுவந்து எங்கள் ஊரில் விற்பான். அவன் கொஞ்சம் முசுடு.விலையை எப்போதும் கூட்டியே சொல்லுவான். பேரமே பேச விடமாட்டான். அவன் சொன்ன விலைதான். எங்கள் அம்மா பேரம் பேசாமல் வாங்கியதில்லை. தினமும் அவனிடம் தகராறுதான்.கடைசியில், அம்மா தொடர்ந்து வாங்கும்
வாடிக்கையாளர் என்பதால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து விட்டு "எப்பவும் உங்கிட்ட இதே ரோதனைதான் ஆச்சி! சொன்ன வெலையைக் குடுக்கமாட்டியே" என்று முனகிவிட்டுக் கொடுத்து விட்டுப் போவான். சின்னண்ணன் இதை வெகுநாட்களாய்க் கவனித்து வந்தார்.

ஒருநாள் அவன் மாம்பழக்கூடையுடன் வந்தபோது சின்னண்ணன் அவனை அழைத்து மாம்பழங்கள் கேட்டார். அவன்சொன்ன விலைக்குப் பேரம் எதுவும் பேச வில்லை. அவனுக்கு மிகவும் சந்தோஷம். 5ரூபாய்க்குப் பழங்கள் கொடுத்தான்.
அண்ணன் பழங்களுடன் உள்ளே சென்றவர் கையில் 100ரூபாய் நோட்டுடன் வந்தார். "இந்தாப்பா! 5ரூபா போக மீதி 95ரூபா குடு" என்று 100ரூபாய் நோட்டை நீட்டினார்.. "ஐயோ சாமி! நீ தான் மொத போணி! எங்கிட்ட ஏது சில்லறே? 5ரூபாக் குடு சாமி" என்று பணிவுடன் சொன்னான். அண்ணன் அவனைத் திட்டத் தொடங்கிவிட்டார்.
"சில்லறை இல்லாம ஏண்டா வியாபாரம் பண்ண வர்ரே? சுத்த மடையனா இருக்கியே! 95ரூபாயக் குடுத்துட்டு 100ரூபாய வாங்கிக் கிட்டுப் போ!" என்று உள்ளே போய்விட்டார். பாவம்! அவனிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. கூடையில்
இருந்த பழமே 100ரூபாய்க்கு இல்லை. அழும் நிலைக்கு அவன் வந்து
விட்டான். "வேணாம் சாமி! எம் பழத்தக் குடுத்துடு. நான் போறேன்" என்று கெஞ்சினான். அண்ணன் வாங்கியதைத் தருவதற்கில்லை என்று மறுத்து விட்டார். ''95ரூபாயக் குடுத்துட்டு 100ரூபாய வாங்கிக்கோ1" என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.
பரிதாபத்துக்குரிய அக்கிழவன் அதன்பிறகு அனேக தடவைகள் நடையாய் நடந்துதான் அந்த 5 ரூபாயை வாங்க முடிந்தது. வாங்கிய பிறகு அவன் சொன்னான், "எதிர்த்த வூட்டு ஆச்சி எவ்வளவோ தேவலை. பேரம் பேசுனாலும் இந்த அழிச்சாட்டியம் இல்லே!" அதன் பிறகு அவன் எங்கள் தெருப் பக்கமே வருவதில்லை.

பெரியப்பாவிடம் சுமுகமாக இல்லையே தவிர அவரது அட்டூழ்¢யம் எல்லாம் அண்ணனிடம் இருக்கவே செய்தது. ஆனாலும் பெரியப்பாவிடம் இல்லாத ரசனை அவருக்கு இருந்தது. இசையில் அவருக்கு ஆர்வம் அதிகம். நான் முன்பே குற்¢ப்பிட் டுள்ளபடி எங்கள் ஊருக்கு முதலில் கிராமபோன் வாங்கி வந்து அந்த அதிசயத்தை ஊருக்குக் காட்டியவர் அவர்தான். ரேடியோ கூட அதுவரை கேட்டறியாத நாங்கள் அந்தக் கிராமபோன் பாட்டுக்களைக்
கேட்டு மயங்கினோம். அண்ணன் தெருத்திண்ணையில் கிராமபோனை வைத்து பிளேட்டைப் போட்டார் என்றால் ஊரே திரண்டு தெருவை நிறைக்கும். எம்.எஸ் பாட்டையும், தியாகராஜ பாகவதர் பாட்டையும், இன்னும் என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்தினம் காமிக் பாடல்களை யும் அங்குதான் முதலில் கேட்டு என் இசை ரசனை உருவாயிற்று. இன்று
தொலைக் காட்சியில் அந்தப் பழைய பாடல்களைக் கேட்கையில் அவற்றை முதன் முதல் கேட்ட இளம்பருவ நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

அடுத்து அவருக்கு வில்லி பாரதத்தில் அற்புதமான ஞானம். அவர் படித்தது எழாம் வகுப்புதான். ஆனாலும் பண்டிதர்களப் போல அனாயசமாக வில்லிபாரதப் பாடல்களை விளக்குவார். இது எப்படி சாத்யமாயிற்று என்றால்- எங்கள் ஊரில் ஆண்டுதோறும்
திரௌபதி அம்மன் கோயில் உற்சவத்தில் பாரத பூசாரி ஒருவர் - உள்ளூர் தச்சாசாரி-
பாரதம் பாடுவார். அண்ணன் தவறாது அந்தக் கதையைக் கேட்டு வளர்ந்தவர். பூசாரி யிடமே கேட்டறிந்து அவர் படிப்பது வில்லிபுத்தூரார் எழுதிய பாரதக் கதை என்று
தெரிந்து கொண்டு அப்பாவிடமிருந்து வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். ஆசான் யாரு மில்லை. அவரே திக்கித் திணறி, பதம் பிரித்து, சந்தம் அறிந்து, ராகம் போட்டுப் பாடிப் புலமை பெற்றார். பின்னர் அப்பாவிடமும் பாரதம் பாட வரும் வெளியூர்ப் பூசாரிகளிடமும் வாதம் செய்து அவர்களைத் திக்கு முக்காட வைப்பார். அதை அருகிருந்து கேட்டுக் கேட்டு எனக்கும் வில்லிபாரததத்தில் ஒரு ரசனையும் பிடிப்பும் ஏற்பட்டது. அந்த சின்ன வயதில்
அப்பாவிடமிருந்து கேட்ட பெரிய புராணமும், திருவிளையாடற் புராணமும், அண்ணனிடம் கேட்ட வில்லிபாரதமும் பின்னாளில் என் இலக்கிய ரசனைக்கும் படைப்புக்கும் பெரிதும் ஆதாரமாய் இருந்தன. அந்த வகையில் சின்னண்ணன் என் நினைவில் என்றும் நிலைத்திருப்பார்.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.

No comments: