Tuesday, May 31, 2011

இவர்களது எழுத்துமுறை - 39.பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்)

1. என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள்
தாம். சமூகம், நாடக மேடையில் 'காட்சி ஜோடனையாக' மட்டும் இருந்தால்
போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்
என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன.
மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும்
தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

2. அன்றாடம் சந்திக்கும் பஸ் ரயில் பிரயாணிகள், காரியாலய சிப்பந்திகள்,
டாக்சிக்காரன், பிச்சைக்காரன், பெரிய மனிதன், சிறிய மனிதன் எல்லோரும்
பிரும்மாண்டமான பட்டைக் கண்ணாடியின் பல பட்டைகள். இவர்கள் எல்லாக்
காலத்திலும் இருக்கிறவர்கள். இவர்களைத் தான் என் எழுத்தில் அறிமுகப்
படுத்த ஆசைப்படுகிறேன். முயற்சி செய்கிறேன்.

3. நான் எவ்வளவு தூரத்துக்கு, நான் பார்த்த, சந்தித்த, பழகிய ஆண் பெண்
களின் சிந்தனைகளையோ, உணர்ச்சிகளையோ வெற்றிகரமாக என் எழுத்தில்
கொண்டு வந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும்
உறுதி. வெற்றியை நாடி நான் உழைக்கிறேன்.

4. வசதியான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வயிறு வாடாமல் இருக்க ஒரு
நல்ல வேலையிலும் உள்ளவன் நான். குடும்பப் பிரச்சினைகளோ, வறுமை
வாழ்க்கையோ அறியாதவன். இதனால் எனக்கு நிறையப் படிக்கவும்,
சிந்திக்கவும், எழுதவும் நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் உழைக்கிறேன்.
எழுத்தாளனும் ஒரு தச்சனைப் போல, பொற்கொல்லனைப் போல உழைத்து
உழைத்துத்தான் முன்னுக்கு வர முடியும் என்பது என் சித்தாந்தம். 'நான் இன்று
மூடில் இல்லை. எழுதக் கதை வரவில்லை' என்று கூறும் எழுத்தாளன் பிறரையும்
ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான் என்று நான் நினைக்கிறேன்.

5. கதைகளைப் படிக்கும் போது, எல்லா வாசகர்களுக்குமே, எழுத வேண்டும்
என்ற ஆவல் பிறக்கும். ஏன் வெறி கூடக் கிளம்பும். என்னைப் பொறுத்த
வரையில், நல்ல வேளையாக கதைகளைப் படிக்கும் போதோ, படித்த பின்போ
எழுத ஆசையோ வெறியொ தோன்றுவதில்லை. என் கதாபாத்திரங்கள், என்
வாழ்க்கையிலேயே, என்னைச் சுற்றிலுமே, பல வீடுகளிலுமே இருப்பதால்
நான் கதை படித்துக் கதை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகவில்லை.

6. என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் சம்பவங்கள் நிறையவோ,
பெரிதாகவோ இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்குத்
தோன்றவில்லை. நான் முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவனுள்ள உரையாடல்
களுக்கும் ,மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகளுக்கும் தான். உரையாடல்
களின் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கூறுவது தான் சிறந்த
முறை என்று கருதுகிறேன்.

7. 'கலையைத் தெரியப்படுத்தி கலைஞனை மறைத்துக் கொள்வது தான்
கலையின் விளையாட்டு' என்றார் ஆஸ்கார் ஒயில்டு. அது நூறுக்கு நூறு
உண்மை. எப்போது எழுத்தாளன் தன் தலையை நீட்டி, கலையம்சத்தை
உள்ளே தள்ளுகிறனோ அப்போதே, அவன் மடியும் முன்பே அவனுடைய
எழுத்து மடிந்து விடுகிறது. என் எழுத்து எனக்கு முன்னால் மடிய நான்
ஆசைப்படவில்லை. 0

Saturday, May 21, 2011

சூர்யகாந்தனின் - 'ஒரு தொழிலாளியின் டைரி'

'மண்ணையும், மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாக அமைந்து விட்டால்,அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை! மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு' என்கிறார் கவிஞர் புவியரசு. அப்படித் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த பேறுகளில் ஒருவர் சூர்யகாந்தன். வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் பார்வையும், வாழ்வின் வலி கண்டு உருகும் மனிதநேய மும் அவருக்கு அமைந்திருப்பதால் அவரது கதைகளில் மனித வாழ்வின் வதைகளும், போராட்டங்களும் உருக்கமாய்ச் சித்தரிக்கப் படுகின்றன. கொங்குநாட்டு மண்ணின் மைந்தரான அவர் தன் பிராந்தியம் மட்டுமின்றி சென்னை போன்ற இடங்களிலும் தான் கண்ட, நெகிழ்ச்சியுற்ற நிகழ்வுகளை, அனுபவம் சார்ந்த வலிகளை, வாசிப்பவர் மனங்கொள்ளுமாறு 'ஒரு தொழிலாளியின் டைரி' என்னும் கதைத்தொகுப்பில் உள்ள கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள 12 கதைகளுமே நெஞ்சைத் தொடுபவை. தலைப்புக் கதையான 'ஒரு தொழிலாளியின் டைரி', டைரிகளை உருவாக்கும் தொழிலாளி ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது. எந்த உற்பத்தி இடத்திலும் அதைச் செய்கிற தொழிலாளி அந்தப் பொருளுக்கு ஆசைப்பட முடியாது. ஆசை அற்றுப் போவது தான் இயல்பு. இக்கதையைச் சொல்லும் தொழிலாளி, தனக்கு டைரியில் ஆர்வமில்லை என்றும், கிடைத்தாலும் எழுத நேரமில்லை என்றும் ஆனால் அதைச் செய்கிற தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு டைரி தர முதலாளிக்கு மனமில்லையே என்று மறுகுவதும், பின்னர், 'எனக்கெதற்கு டைரி? என்னோட கஷ்டங்களையும், குமுறல்களையும் டைரியில் எழுதி வைத்து அவற்றைத் தன் பிள்ளைகள் படித்து வேதனையடைவானேன்' என்று சமாதானப்படுத்திக் கொள்வதையும் உருக்கமாய்ச் சித்தரிக்கிறது கதை.

பேருந்து பயணம் ஒன்றில் இரு பயணிகளுக்கிடையே நடைபெறும் ரசமான உரையாடல், இடம் பிடிக்க நடக்கும் நித்ய போராட்டம், நடத்துனரின் வசவு எல்லாவற்றையும் மிகையின்றி அசலாகக் காட்சிப் படுத்துகிறது 'எதிரெதிர் குணங்கள்' என்கிற கதை. பயணிகள் முகம் சுளிக்கும்படி விவாதித்துக் கெண்டிருக்கும் ஒரு இளஞனும் முதியவரும் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மனித இயல்பின்படி சமாதானமாகிப் பிரிவதுமான யதார்த்த குணவியல்பை ரசமாகச் சொல்கிறது கதை.

ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் சொந்தப் பிரச்சினையை - வீட்டில் சாகக் கிடக்கும் குழந்தையைக்கூட கவனிக்க முடியாதபடி எஜமானியின் இரக்கமற்ற உத்தரவுகள், மற்றும் வேலை செய்யும் நிர்ப்பந்தம் பற்றிய வாதையை 'பிழைப்பு' என்கிற கதை பேசுகிறது..

பிள்ளைகளை சதா 'படி படி' என்று அவர்களுக்கு வேறு பொழுதுபோக்குக்கே இடம் தராமல் கண்டித்து, அடிக்கும் அப்பாக்கள், அதனால் அந்தப் பிள்ளைக்கு உடல் நலம் கெடும்போது மனம் மாறும் நடைமுறைத் தவறினை 'தடம் மாறும் தவறுகள்' சுட்டிக்காட்டுகிறது.

'குந்தை பணியாளர்'க்காக அரசும் அதற்கான அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிற இன்றைய நிலையில், அப்படி ஒரு சிறுவன் - தன் தாய் பட்டினி கிடக்கக் கூடாது என்ற கவலையில் சுண்டல் விற்கும் தன் வேலையின் துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் கொடுமையைப் படம் பிடித்துக்காட்டுகிறது 'ஆத்தா பட்டினியிருக்கக் கூடாது' என்கிற கதை.

குடிகாரர்கள் விவஸ்தையே இல்லாமல் இழவு வீடானாலும், கல்யாண வீடானாலும் புகுந்து கலாட்டா செய்கிற சிறுமையை வேதனையோடு வெளிப்படுத்துகிறது 'பங்காளிகள்' என்கிற கதை.

'அவர்களில் இருவர்' என்ற கதை வேறொரு சமூகப் பிரச்சினையைப் பேசுகிறது. 'ஒரு பெண் விபசாரம் செய்வதற்கும் விபசாரியாக ஆக்கப்படுவதற்கும் சொல்லில் அடங்காக் காரணங்கள் உண்டு. அந்தப் பிரச்சினை யில் விபசாரத்துக்கு ஆட்படும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளில் ஒன்றை இக்கதை நெகிழ்ச்சியோடும் மனித நேயத்தொடும் எடுத்துக் காட்டுகிறது.

மனிதர்களின் சிறுமைகளை மட்டுமல்லாமல் பெருமைகளையும் சூர்யகாந்தன் தன் கதைகளில் எடுத்துக்காட்டுகிறார் 'பெருந்தன்மைகள்' என்ற கதையில். ஒரே கதையில் அத்தகைய பெருமையையும் சிறுமையையும் இணைத்துக் காட்டி சிலிர்க்க வவைக்கிறார். தான் சேமித்த பணத்தை ஒரு நண்பரிடம் கொடுத்து வைக்கிறார் ஒருவர். அதைத் தன் டைரியில் குறித்தும் வைக்கிறார். திடீரென்று அவர் மாரடைப்பால் ஒருநாள் இறந்து போகிறார். பணத்தை வாங்கிய நண்பருக்கு அப்பணத்தைக் குடும்பத்தருக்குத் தெரியாமல் மறைத்து விட்டால் என்ன என்கிற அற்பத்தனமான ஆசை தோன்றுகிறது. அதே நேரத்தில் இறந்தவரது மனைவி நடந்து கொள்ளும் பெருந்தன்மையான செயல் கதையின் மகுடமாக விளங்குகிரது. கணவரின் டைரியைப் பார்த்து விட்டு, கணவர் அத்தொகையைக் கடன் வாங்கி இருப்பாதாகக் கருதி நண்பரைத் தேடிவந்து அத்தொகையைத் திருப்பிக் கொடுப்பது கதையின் ரசமான திருப்பு முனை. அந்தப் பெருந்தன்மைக்கு முன்னே நண்பர் சின்ன எறுபாகச் சிறுத்துப் போவதைக் கதை சுட்டுகிறது.

பேருந்து, ரயில் பயணங்களில் சூர்யகாந்தனின் எழுத்தாளர் மனம் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் உரையாடல்களில் லயித்து போகிறது . பிறகு அவை கதையாகி விடுகின்றன. அப்படி உருவான கதை 'சில நியாயங்கள்'. ரயில் நிலையத்துக்கு அருகில் இருப்பவர்களில் சிலர் வேடிக்கை பார்க்கவோ, தேனீர் அருந்தவோ பிளாட்பாரம் டிக்கட் எடுக்காமல் உள்ளே நுழைந்து திரும்புவதுண்டு. டிக்கட் பரிசோதகர் சிலர் அதைக் கண்டு கொள்வதில்லை. சிலர் பிடித்து அபராதம் வசூலித்து விடுவதுண்டு. அப்படி ஒருவனை இக்கதையில் பரிசோதகர் பிடித்து அபராதம் விதித்து விடுகிறார். அவன் எவ்வளவோ கெஞ்சியும், பக்கத்தில் குடி இருக்கும் தொழிலாளிதான், பயணம் செய்யவில்லை என்று எடுத்துச் சொல்லியும் அவர் கண்டிப்பாக இருந்து விடுகிறார். தொகையைக் கட்டுமுன் அவருக்குப் புரிகிற நியாயம் ஒன்றை தன் சகாக்களுடனான பேச்சுவாக்கில்கவன் உணரவைக்கிறான் அவன். அதைக் கேட்டதும் பரிசோதகர் சரேலென்று நகர்ந்து விடுகிறார். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாமரர்கள் புரிந்து வைத்திருக்கும் எதார்த்தத்தை அழகாகக் சொல்கிறது கதை.

கணவனால் பணம் கேட்டு தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்ணொருத்தி குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டியபடி, கணவனின் வீடு திரும்பத் தேவையான பனத்தைத் திரட்ட முடியாத தன் பிறந்த வீட்டு வறுமையையும், திரும்பிப் பார்க்காத கணவனையும் பற்றிய சிந்தனைகளுடன் மறுகிறாள். காலம் என்ன மாறினாலும் இந்த அபலைகளின் துயரம் மாறாத அவலத்தை 'ஆடும் தொட்டில்கள் ஆடுகின்றன' என்னும் கதையில் ஆசிரியர் காட்டுகிறார்.

கிளி சோசியன் ஒருவனது விரக்தியின் முடிவைச் சொல்வது 'விடுதலைக் கிளிகள்'. கிளி சோசியத்தை நம்பும் மக்களின் பலவீனத்தில், கிளியை நம்பி பிழைப்பு நடத்துகிற ஒரு கிளி சோசியன் ஒரு கட்டத்தில் கிளிக்கு ஒரு மணி நெல் கொடுக்கவும் வருமானமற்று, 'ஒரு சின்னஞ் சிறு பறவையைக் கூண்டில் அடைத்து, அதை நம்பி வாழ்க்கை நடத்துவது எவ்வளவு அசிங்கமான செயல்' என்று மனசாட்சி உறுத்த அந்தக் கிளிக்கு விடுதலை கொடுப்பதை அனுதாபத்தோடு ஆசிரியர் சித்தரிக்கிறார்.

கடைசிக் கதையான 'கடைசியில் கனல்தான் ஜெயிக்கும்', மருத்துவ மனையினால் அலைக்கழிக்கப் படுகிற பெண்ணொருத்தி புறக்கணிப்பின் வலிகளின் தீவிரத்தால் போராட்டத்தில் குதிக்கும் எதார்த்தத்ததைச் சித்தரிக்கிறது.

இப்படி இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே சூர்யகாந்தனின் சமூகப் பார்வையையும், மனிதநேயத்தையும் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளன. கதையினூடே அநாயசமாக விழும் கொங்கு நாட்டு மற்றும் சென்னை பேச்சு வழக்குகளும், கலாரசனைமிக்க வருணனைகளும் வாசிப்பைச் சுவாரஸ்யமாக்கி சூர்யகாந்தனின் எழுத்து மகுடத்தில் இன்னொரு வண்ணச் சிறகைச் சேர்க்கின்றன. 0


நூல்: ஒருதொழிலாளியின் டைரி
ஆசிரியர்: சூர்யகாந்தன்
வெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை: 45 ரூ.

Monday, May 16, 2011

இவர்களது எழுத்துமுறை - 38.மீ.ப.சோமசுந்தரம்

1. கேள்வி (தீபம்): தாங்கள் எழுத்தாளர் வாழ்க்கையைப் பெரிதும்
விரும்புகிறீர்களா?

பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது? எழுத்துக்கு
முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும்.
பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு முக்கியத்துவம்
குறையும். இந்த இரண்டையும் சரிகட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.


2. கேள்வி: எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறீர்கள்?

பதில்: பெரும்பாலும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து எழுதுவதே
என்னுடைய பழக்கமாகும். தொடர்கதை எழுத வேண்டிய நாள் என்று
வாரத்தில் ஒரு நாளைத் திட்டப்படுத்திக் கொள்வேன். அந்த நாளில்
அதிகாலையில் எழுந்து எழுதுவேன். இந்த வழக்கத்தைப் பயிற்சியின்
மூலம் ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டு விட்டேன். குறித்த நாளில்
என்னிடமிருந்து அந்த அத்தியாயம் கண்டிப்பாக வந்து விடும் என்பது
அனுபவத்தில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும்.

2. கேள்வி: கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் எப்படி அமைக்
கிறீர்கள்? கதைக்குக் கருப்பொருள் முக்கியமா? பாத்திரம் முக்கியமா?

பதில்: தொடர்கதைகள் என்றால் ஓரளவு மனத்திற்குள் தோராயமாக
ஒரு வடிவம் வைத்துக் கொள்ளுவது உண்டு. சரித்திரக்கதை என்றால்
ஆராய்ச்சிக் குறிப்புகளை விரிவாகச் சேகரித்து அவற்றையும் தொகுத்து
வைத்துக் கொள்வதுண்டு. மற்றப்படி அந்தந்த வாரம் அந்தந்த அத்தியா
யங்களை எழுதுவதுதான் என்னுடைய பழக்கமாக இருந்து வருகிறது.
நினைவும் கற்பனையும் துணை செய்வதைப் பொறுத்து நிகழ்ச்சிகள்
சூடேறிச் செல்ல வேண்டும். அதை ஒட்டியே பாத்திரங்களின் செயல்களும்
அமையும். எல்லாவற்றிற்கும் ஓர் அடிப்படை மனத்துள் உருவாகி
இருப்பதால் எழுதுவது ஒரு வழக்கமாகி விடுகிறது.

3. கேள்வி: தொடர் கதைகள் நீங்கள் பிரசுரத்துக்கு முன்பாக முழுதும்
எழுதி வைத்துக் கொள்வதில்லையா?

பதில்: இல்லை.

4. கேள்வி: அப்படியானால் அவற்றின் ஒருமைப்பாடு கெடாதா?

பதில்: ஒருமைப்பாடு ஒரு தரம் உட்காருவதைப் பொறுத்ததா? அது
மனத்தின் உள்ளே உள்ள சிந்தனையின் ஒருமை உணர்வைப் பொறுத்தது
அல்லவா? ஒரே மொத்தமாக ஒரு கதையை எழுதி முடித்துவிட்டு பிறகு
தொடராக எழுதி வெளியிடுகிற எழுத்தாளர் கூட கதை முழுவதையும்
ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுவதில்லை. விட்டு விட்டுத்தான் எழுத
வேண்டி இருக்கிறது. ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்கும்
மத்தியில் மாதக்கணக்கில் கூட சில சமயங்களில் இடைவேளை ஏற்பட்டு
விடுவதுண்டு. எனவே ஒருமைப்பாடு என்பது மன உலகின் ஒருமை உணர்வு.
சிந்தனையின் மையம் அது. காலையில் உட்கார்ந்து மாலையில் முடித்து
விடும்ஒருமைப்பாடு இல்லை அது. என் வரையில் நான் ஒரு அத்தியாயத்
துக்கும் அடுத்ததற்கும் ஒரு வார இடைவெளி கொடுக்கிறேன். அவ்வளவு
தான் வித்தியாசம்.


5. கேள்வி: கவிதை, கட்டுரை, சிறுகதை, சமூக நாவல்கள் சரித்திர நாவல்கள்
சமைத்துள்ள தங்களுக்கு எதில் அதிக ஈடுபாடு? ஏன்?

பதில்: என்னுடைய ஈடுபாடு என்பது, வாசகர்களுக்கு அவ்வப்போது
என்னிடமிருந்து எது தேவை என்று கருதிப் பத்திரிகை ஆசிரியர்கள்
என்னிடம் கேட்கிறார்களோ அதுதான். 0

Tuesday, May 10, 2011

இவர்களது எழுத்துமுறை - 37.ஹெப்சிபா ஜேசுதாசன்

1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மட்டேன்.
ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான்
வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது.
என்னதான் உந்தித் தள்ளினாலும் எழுத முடியாது. எழுத முடியலேன்னு
நான் வருத்தப்படவே இல்லை.

2. என் நாவல்களில் மதப்பிரச்சாரம் கூடவே கூடாது என்று கண்டிப்போடு
தான் எழுதியிருக்கிறேன். நான் பைபிள் பிரச்சாரம் நெறையவே செய்தி
ருக்கேன். ஆனா என் படைப்பு வாயிலாகச் செய்யல்லே. எந்தவிதப்
பிரச்சாரமானாலும் வாழ்க்கைக்கு நேரான சத்தியத்தை எதிர்ப்பதாகுமென்று
நினைக்கிறேன்.

3. என்னுடைய வாழ்க்கையில் பெண்ணியத்திற்கான தேவை ஏற்பட்டதே
இல்லை. ஏனென்னா என் அப்பாவுக்கு நான் மகனாத்தான் வளர்ந்தேன்.
என் கணவரும் வீட்டிலே எனக்குத் தந்திருப்பது ரண்டாம் ஸ்தானமில்லே.
அதனாலே எனக்குப் பெண்ணியத்தெப் பத்திய சிந்தனையே இல்லை.

4. நாவல் எழுதுவதற்கென்று தனி வரைமுறைகள் கிடையாது. பொதுவாக
சில வரைமுறைகள் உண்டு. நம்மொ ஒரு கதை சொல்கிறோம். அந்தக்
கதை சத்தியத்தோடு (எதார்த்தம்) சேர்ந்திருக்கணும். இப்படித்தான்
நடந்திருக்கணும், அந்த ஆளு இப்படித்தான் பேசியிருக்கணும் என்னுள்ளதை
மனசிலே வச்சிக்கிட்டு நம்மொ எப்படி செய்தாலும் எந்த technic வச்சாலும்
சரிதான். ஆனா ஒரு technic வச்சிக்கிட்டு நாவல் எழுதப் போனோமானா,
அந்த நாவல் தோல்வியேதான். இதுதான் எனக்கு 'டக்டர் செல்லப்பா' விலே
சம்பவிச்சது. 'புத்தம் வீட்டி'லே எந்த technic-ம் கையாளல்லே. 15 நாளிலே
எழுதினதாக்கும். என்ன எழுதினோம்னு தெரியாம எழுதினதாக்கும்.

5. எப்பம் ஒரு மனுசன் தன்னை விட சத்தியம் பெரிசு என்னு நெனைச்சு,
அந்த சத்தியத்தை மற்றவியளுக்குத் தெரிவிக்க வேணுமென்ன வேகத்தொட
எழுதினானோ, அந்தப் படைப்பு நாலு பேருகிட்டே போய்ச் சேரும்.
inspiration என்னு சொல்லுறதை நம்பக்கூடியவளாக்கும் நான். inspiration
என்னா, வெளியிலே இருந்து ஒரு சக்தி உள்ளே வருது. அப்படி அந்த
சக்தி வந்து எழுதணும். ஆனா, இது எல்லோருக்குள்ளேயும் வராது.
நம்மொ அதுக்கு அடிபணிஞ்சு இருக்கணும். சத்தியத்துக்கு நாலுபேர்
இருந்தாலும் கட்டாயம் தமிழில் இலக்கியம் வளரும். 0

Monday, May 02, 2011

இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்

1. மௌனிக்கு அவரது வீடே உலகம். எனக்கோ உலகமே வீடு. நான் ஒரு

கிராமத்துக்காரன். என் அனுபவத்தில் கால்வாசியைக்கூட நான் இன்னும்

எழுதி முடிக்கவில்லை.


2. மௌனி குறைவாக எழுதியதால் அவர் எழுத்தில் அடர்த்தி அற்புதமாய்

அமைந்திருந்தது. நான் நிறைய எழுதுவதால் நீர்த்துப்போன எழுத்துக்களை

எழுதுகிறேன் என்பது நகரத்தில், தனிமையிலிருக்கிற சித்தம் போக்கு சிவன்

போக்கு மனம் படைத்தவர்களின் சிந்தனையாக இருக்கலாம். மக்கள் திரளோடு

சேர்ந்திருக்கிற எவருக்கும் இந்த ஆபத்து இல்லை.


3. எழுத்தாளனாக வேண்டும் என்ற பொறி என்னுள் இளமையில் எப்போதுமே

நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது. கிடைத்த சந்தர்ப்பங்களும், அங்கீகாரங்களும்

என்னை மேலும் முன்னேற ஊக்குவித்தன. 1964ல் இலங்கையில் இலக்கியம்

சித்தாந்தரீதியில் போரிட்டுக் கொண்டிருந்த நேரம். முற்போக்கு இலக்கியம்,

'இழிசனர் இலக்கியம்' என விவரிக்கப்பட்ட நேரம். அவ்வேளையில் முற்போக்கு

இலக்கியத்தின் குரலாக என் முதல் நூல் 'யோகநாதன் கதைகள்' பவ்கலைக்

கழகத்திலேயே வெளியிடப் பெற்றது. இந்த அங்கீகாரம் என்னை வலுப்படுத்தியது.


4. நான் அரசியல் மூலம் இலக்கியத்துக்கும் இலக்கியத்தின் மூலம் அரசியலுக்கும்

அறிமுகமானவன். என்னைப் பொறுத்தவரை இல்லக்கியமென்பதே மறைமுக

அரசியல்தான். இதில் ஒளிவு மறைவு வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்.


5. எனக்கு வயது தெரிந்த காலத்திலிருந்தே சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக்

குரல் கொடுத்து வந்திருக்கிறேன். எழுதி வருகிறேன். இதுதான் என் இலக்கிய

சித்தாந்தம். என் எழுத்துக்களும் என் சித்தத்தையே பேசுகின்றன.


6. சமூக ஒடுக்குமுறை, அதிகாரத்துவ மமதை - இவ்விரண்டுமே ஒட்டு மொத்தமான

சமுதாய மாறுதல் மூலமே அழிந்து போக முடியுமென்று நான் எண்ணுகிறேன்.

இவற்றுக்கு எதிராக என் எழுத்தை ஒரு ஆயுதமாகக் கொள்வதை என் தார்மீகக்

கடமையாக உணர்ந்து எழுதி வருகிறேன்.


7. என் எழுத்து பற்றி எனக்கு தீர்க்கமான தீர்மானமுண்டு. நான் சகல ஒடுக்குமுறை

களையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்புகிறேன். இதை என்

எழுத்தாக்குகிறேன். எழுத்து என் அரசியல். என் ஆயுதம். என் சுவாசம். 0