Wednesday, November 26, 2003

நினைவுத்தடங்கள் - 2

நாங்கள் சைவ வேளாளர்கள்; பரம்பரை பரம்பரையாய் சிவனை வழிபடுபவர்கள். சுத்த சைவம்.அப்பா இளைமையிலேயே சிவதீட்சை பெற்று, தினமும் புற்று மண்ணால் லிங்கம் செய்து ஒரு மணிக்கு மேலாக பூஜை செய்துவிட்டுத்தான் காலை ஆகாரமே உட்கொள்ளுவார்கள். காலை 11 மணிக்கு சாப்பாடுதான். சிற்றுண்டி இல்லை. ஒருமணி நேர பூஜையில் `உலகெலாமுணர்ந்து ஓதற்கரியவன்...` தொடங்கி, இசையோடு தேவாரம், திருவாசகம் திருவருட்பா எல்லாம் பாடுவார்கள். குழந்தையிலிருந்தே நான் சற்றுத் தள்ளி அமர்ந்து கண் அகல அப்பாவின் பூஜையைப் பார்த்தபடி,பள்ளியில் சேருகிறவரை அந்த ஒரு மணி நேரமும் உடனிருப்பேன்.


அப்பாவின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, எனக்கு ஐந்து வயதுக்குள்ளேயே அவர் பாடிய எல்லா பாடல்களும் மனப்பாடம் ஆகிவிட்டது. அதல்லாமல் இரவில் சிவதரிசனம் செய்து வந்த பிறகே இரவு உணவு கொள்வார்கள். அவர்கள் சிவன் கோவிலுக்குச் செல்கையில் என்னையும் உடன் அழைத்துப் போவார்கள். பிரகாரத்தைச் சுற்றும்போது தட்சிணாமூர்த்தியையும் சண்டிகேஸ்வரரையும் மற்ற விக்கிரகங்களையும் சம்பந்தப்பட்ட தகவல்களோடு சொல்லுவார்கள். இரவு படுக்கப் போகுமுன் பெரியபுராணத்திலிருந்தும் திருவிளையாடற் புராணத்திலிருந்தும் கதைகளை உணர்ச்சியோடும் காட்சிப் படுத்துதலோடும் இடையிடையே அப்புராணங்களின் பாடல்களைப் பாடி நாடகம் போலச் சொல்லுவார்கள். ஒரு சின்ன பையனுக்கு சொல்வதாக அது இல்லாமல் தனக்காகவே சொல்வதாகவே இருந்தது.


தி?ருவிளையாடற் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலம் என்று ஒரு திருவிளையாடல் உள்ளது. அதில் ஒருவன் தன் தாயைப் பெண்டாளுவான். தடுத்த தந்தையைக் கொல்வான். அவனுக்குப் பிரம்மஹத்தித் தோஷம் பிடித்துவிடுகிறது. அவன் எங்கே போனாலும் பிரம்மஹத்தி `அய்யோ, அய்யோ` என்று அனற்றியபடி பின் தொடரும்.அந்தக் காட்சியை அப்பா வருணித்தது இப்போது அறுபது ஆண்டுகளுப் பிறகு நினைத்தாலும் சிலிர்ப்பை உண்டாக்குகிறது. அப்படி ஏழெட்டு வயதிற்குள் கற்றவைகளால் தான் நான் இன்று பேச்சிலும் எழுத்திலும் ரசனையுடன் செயல்பட முடிகிறது. அதிலிருந்துதான் கதை
கேட்கிற ஆவலும் வளர்ந்தது. புராணக்கதைகளை என் அப்பாவிடம் கேட்டேன் என்றால் ராஜா ராணிக் கதைகளையும், மாயா ஜாலக் கதைகளையும் -தி.ஜானகிராமனுக்குக் கிடைத்த கண்ணாடிப் பாட்டி மாதிரி எனக்குக் கிடைத்த என்னைவிடப் பத்து வயது மூத்த-வயதுக்கு வந்து திருமணத்துக்குக் காத்திருந்த என் மாமா மகளிடமிருந்து கேட்டேன். அலுத்துக் கொள்ளாமல்
அன்று அவர் சொன்ன கதைகள் தான் இன்று நான் கதை எழுதுவதற்கு உரமாக இருந்தன எனத் தோன்றுகிறது.


அப்புறம் என் அப்பா வாங்கிய பத்திரிகைகளில் படிக்கக் கிடைத்த குழந்தைக் கதைகளும் என்னை ஈர்த்தன. என் அப்பா அந்தக்காலத்தில் ஜஸ்டிஸ்கட்சி அனுதாபியாய் இருந்ததால் அக்கட்சியின் பத்திரிகை எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தது. தினமணிசுடர், திராவிடநாடு பத்திரிகை அளவில் நீளவாட்டில் அந்தப் பத்திரிகை இருக்கும். அந்தச்
சின்ன வயதில் அரசியல் தெரியாது என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவருள் ஒருவரான பன்னீர்செல்வம் அவர்கள் விமான விபத்தில் இறந்ததை அட்டையில் பெரிதாக -கனத்தமீசையும் கோட்டும் டையுமாய் கம்பீரமாய்க் காட்சி தரும் அவரது படத்தைப் போட்டு இரங்கல் தெரிவித்திருந்தது அப்படியே இப்போதும் கண்ணில் தெரிகிறது. அந்தப் பத்திரிகை யில்
குழந்தைகளுக்கான பகுதி வரும். அப்பா சொல்லாமலே அதில் வந்த கதைகளைப் படித்திருக்கிறேன். ஆண்டு பல ஆன
பின்னும் அதில் பார்த்த கதைப்படம் இன்னும் மனதில் பசுமையாய் நிற்கிறது. கடல் பற்றி எரிவதாகவும் தீயை அணைக்க ஓடுவதாகச் சொல்லியபடி அக்குள்?ல் வைக்கோல் திரையுடன் ஓடுகிற நரியின் படத்தைப் பார்த்தது மட்டும் நினைவிருக்கிறது. அதுதான் நான் பத்திரிகையில் முதன் முதலில் கதை படித்தது என்று நினைக்கிறேன்.


அப்புறம் விடுமுறையில் என் பெரியம்மா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்கள் வீட்டில் வாங்கிவந்த ஆனந்தவிகடன் பாப்பா மலரில்- தனிப் பகுதியாக இள நீலம் அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தாளில் வந்த குழந்தைக் கதைகளும் என்ஆர்வத்தை வளர்த்தன. ஆர்.கே.நாராயணனின் `சுவாமியும் சினேகிதர்களூம்` இந்தப் பாப்பா மலரில்தான் தமிழாக்கம் செய்யபப்பட்டு பின்னாளில் வந்தது. பள்ளிகூடத்துக்கு வெளியே இப்படி என் வாசிப்பு ஆர்வம் வளர்ந்தது என்றால்
பள்ளிக்குள்ளே அந்தக் காலத்து அரசியல் பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்ததும் அப்போதைய இரண்டாம் உலக மகாயுத்தத்தால் தான்.
- தொடர்வேன்.
- வே.சபாநாயகம்.



Sunday, November 23, 2003

நினைவுத் தடங்கள் - 1

ரசனை என்பது ஒரு வரம்; ஒரு கொடை. எல்லோருக்கும் அது பிறவியிலயேயே வாய்த்துவிடுவதில்லை. பயிற்சியால் பலர் அதை அடையலாம். பாரம்பரியமாகக் கூட அனேகருக்கு அது சித்திப்பதுண்டு. பிறவியிலேயே ரசனை வாய்க்கப் பெற்றவர்கள் பாக்யசாலிகள். தி.ஜானகிராமன் ரசனை பற்றி எழுதும்போது, `மதுரைமணி ஒரு அற்புதம் என்றால் மதுரைமணியின் பாட்டைக் கேட்டு ஓடுகிறானே அவனும் கூட ஒரு அற்புதந்தான்` என்பார். எப்படி ஓட முடிகிறது என்பது அவருக்கு வியப்பு.மனிதர்கள் அனைவருக்கும் அது இயல்பாகவே இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். `பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்பார்கள்` என்பார் பாரதி. மாணிக்க
வாசகரது பாடல்களை வியக்கின்ற வள்ளலார்,

`வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில் அங்கு நானடைதல் வியப்பன்றே`

- என்று ஆறறிவில்லாத ஜீவராசிகளுக்கும் ரசனை இருப்பதைச் சொல்லுகிறார்.


ரசனை இசைக்கு மட்டுமல்ல-பிற எல்லா கலைகளுக்குமே வேண்டும்தான். அதற்கு ஒரு மனலயம் வேண்டும். தொட்டதில் எல்லாம் தோய்கிற ஒரு மனம் வேண்டும். பார்ப்பதில் எல்லாம் பரவசம் கொள்ளுகிற ஒரு பக்குவம் வேண்டும். பாரதிக்கு அந்த மனலயம் இருந்தது.
அதனால்தான் பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்ணனின் பச்சைநிறம் நிறம் அவருக்குத் தென்பட்டது; கேட்கும் ஒலியிலெல்லாம் கண்ணனின் கீதம் இசைப்பதைக் கேட்க முடிந்தது; தீக்குள் விரலை வைத்தால் கண்ணனைத் தீண்டும் இன்பம் கிட்டியது. அந்த மனலயம்
கிட்டியதால்தான் கவிமணிக்கு

`வண்டியும் அற்புதப் பொருளாம்,
வண்டி மாடும் அற்புதப் பொருளாம்
மாடு பூட்டும் கயிறும்
மனதிற் கற்புதப் பொருளாம்`
என்று பாட முடிந்தது.


பாரதிதாசனுக்கு அந்த மனலயம் இருந்ததால்தான்
`ஆலம் சாலையிலே கிளைதோறும் கிளிகள்
கூட்டம்தனில் அழகென்பாள் கவிதை தந்தாள்`.


உங்களுக்கு அழகு உபாசனை வாய்க்குமானால் எங்கும் எதிலும் அழகு தென்படும். எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஒரு தடவை ஏற்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் திருமணம் நடந்த புதிதில் கும்பகோணத்தில் என் மாமனாரின் நண்பரின் மகன் திருமணத்துக்கு
அழைப்பு வந்து கலந்து கொண்டேன். பெரிய தனவந்தர் வீட்டுத் திருமணம் அது. அப்போதைய நடைமுறைப்படி திருமணம் முடிந்ததும் இசைக்கச்சேரி நடந்த்தது. மதுரை சோமசுந்தரம் பாட்டு- கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின். கச்சேரி தொடங்கு முன், பக்கத்தில் பார்த்தேன். இரண்டு இடம் தள்ளி நாகப்பழம் போன்ற கருப்பில் பட்டுப்புடவையும் நகைகளுமாய் ஒரு பெண் வீற்றிருந்தாள். சொள்ளை நாகப்பழம் போல அவளது முகமெங்கும் அம்மை பொளித்து, பார்க்க விகாரமாய் இருந்தாள். மறுமுறை பார்க்கத் தோன்றவில்லை. மதுரை சோமசுந்தரத்தின் பாட்டு என்னைப் பரவசப் படுத்தியது. அற்புதகானம் என்னைச் சிலிர்ப்பூட்டியது. மனதில்
ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. எங்கும் எதிலும் அழகே தென்பட்டது. இப்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அடடா! எத்துணை அழகு அவள்! அவளது கருப்பும் அம்மைத் தழும்புகளும் உதிர்ந்து போயிருந்தன. மகா அழகியாய் அவள் அப்போது எனக்குத் தென்பட்டாள்.



அட! இசைக்கு அந்த அற்புத சக்தி உண்டா? ரசனை வரம் கிட்டியவர்களுக்கு அது கிட்டும் என்றே தோன்றியது. எனக்கு அந்த வரம் எப்போது கிட்டியது? நினைவுத் தடத்தில் பின்னோக்கி நடக்கிறேன். அறுபது ஆண்டுகளுக்கு முன் என் ஏழு அல்லது எட்டு வயதில்
ஏற்பட்ட ரசனை நினைவில் புரளுகிறது.

- தொடர்வேன். ---வே.சபாநாயகம்.