Sunday, November 29, 2009

'யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை' - விமர்சனக் கட்டுரைகள்

'தலைப்பே படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்' என்பார்கள். அப்படி
'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள வெங்கட்சாமிநாதனின் இந்த விமர்சனத் தொகுப்பின் தலைப்பும் உள்ளே நுழையத் தூண்டுகிறது. ஒரு புதிய எழுத்தாளர் தொடங்கி புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் வரை தமிழ் இலக்கியப் படைப்புகளின் பரிணாம மாற்றங்களைச் சொல்வதாக
இருக்கும் என்று கருதி உள்ளே நுழைந்தால் மேற் சொன்ன இருவரையும் உள்ளடக்கிய,
பல்வேறு சந்தர்ப்பங்களில் தானாகவும் - அவரே தலைப்பினடியில் குறிபிட்டுள்ளபடி 'கேட்டீர்கள், சொல்கிறேன்' என்று - கேட்கப்பட்டும் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் என்று தெரிய வருகிறது. தலைப்பு பற்றிய நமது குழப்பத்தை எதிர் பார்த்தே வெ.சா தனது முன்னுரையில் (முன்னுரையே ஒரு சுவாரஸ்யமான கட்டுரை) எழுதுகிறார்: 'யூமாவாசுயிலிருந்து' - என்று நான் இத்தொகுப்பின் தலைப்பைத் தொடங்குவது ஒரு கோட்டின் தொடக்கத்தைக் குறிக்க. சு.சமுத்திரம் அக்கோடு முடியும் புள்ளி. இக்கோட்டைப் பலவாறாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இதன் பல நிலைகளில், பரிமாணங்களில் பலவும் உண்டு. வண்ணங்களில், தரும் சுவாரஸ்யத்தில், எழுத்துத்திறனில், இலக்கிய நோக்கில் தான் பெற்ற அனுபவத்திலிருந்து அர்த்தம் பெறப்படுகிறதா அல்லது வெளியிலிருந்து பெற்ற அர்த்தம் அந்த அனுபவத்துக்குள் திணிக்கப்படுகிறதா என்று பலவாறாக அவரவர் பார்வைக்கேற்றவாறு பொருள் கொள்ளலாம்'.

இப்படி ஒரு விளக்கம் தருவதற்கு, தொடர்ந்து அதே முன்னுரையில் அவர் தன்னைப்பற்றி சொல்கிற -'நான் பிறக்கும்போதே சங்கிலிப் பிணைப்புடன் பிறந்தவன். சாதி மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள குண்டாந்தடி.அதை நான் மறந்தாலும் மற்றவர்கள் மறப்பதில்லை. அதெப்படி மறப்பார்கள்? அதுதான் அவர்களுக்குக் கிடைத்த வலுவான ஆயுதமாயிற்றே, என் சுதந்திரப் போக்குப் பிடிக்காதவர்கள் என்னை தாக்க' - என்கிற சுய பச்சாதாபமும் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் நடுநிலையான சிந்தனையுள்ள வாசகர்கள் - அவர் அகிலனையும், வல்லிக் கண்ணனையும், தி.க,சியையும், சமுத்திரத்தையும், தன்னை விமர்சிக்கிற ச.தமிழ்ச்செல்வன் போன்ற இன்னும் சிலரையும் கடுமையாய்த் தாக்கினாலும், தன்னைக்கடுமையாய்த் தாக்கும் சோலை சுந்தரப் பெருமாள் போன்றவர்களின் 'தப்பாட்டம்'
போன்ற தரமான படைப்புகளை மனமாற லயிப்புடன் பாராட்டுதைப் பார்க்கும்போது, அவரது விமர்சனத்திறனையும், தரமானவற்றை மறுக்காமல் பாராட்டும் நேர்மையையும் மட்டுமே கருத்தில் கொள்வார்கள்.

இத்தொகுப்பில் உள்ள 39 விமர்சனக் கட்டுரைகளில், இரண்டு விதமான விமர்சனப்போக்கைக் காண முடியும். ஒன்று- தில்லி வானொலி, அமுதசுரபி, சி·பி.டாட்காம், கணையாழி போன்றவை கேட்டதன் பேரில் எழுதியுள்ள - அவரது அடையாளமற்ற, யாரும் எழுதக்கூடிய சாதாரண விமர்சனங்கள். மற்றது அவரே விரும்பி, அல்லது இலக்கிய நெறிகள் மீறப்படும் போது பொங்கி எழும் உணர்வின் சீற்றத்தால் காத்திரத்துடன் எழுதியுள்ள விமர்சனங்கள் மற்றும் முன்னுரைகள். பின்னதிலுல் இரு வகை. தனக்குப் பிடித்தவற்றை வஞ்சனையின்றி ஓகோ என்று பாராட்டுவதும், தனக்குப் பிடிக்காதவற்றை, தாட்சண்யமற்றுக் கடுமையாய்ச் சாடுவதுமான விமர்சனங்கள்.

தனக்குப் பிடித்த நூல்களை - நீல பத்மனாபனின் 'தலைமுறைகள்',
அமிர்தம் சூர்யாவின் கட்டுரைத் தொகுப்பு, கந்தர்வனின் 'கொம்பன்' சிறுகதைத் தொகுப்பு, சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' நாவல், அஸ்வத்தின் 'நல்லூர் மனிதர்கள்' கதைத்தொகுப்பு, என்.சிவராமனின் 'சுவர்கள்' போன்றவற்றின் நயங்க¨ளையும் சிறப்புகளையும் ரசித்துச்
சொல்லி அவற்றைத் தேடிப் படிக்கவைக்கும் விமர்சனங்கள் அவரது ஆரோக்கியமான நேரிய சிந்தனைக்கு உதாரணங்களாகும்.

ஜெயகாந்தனோடு பலசமயங்களில் முரண்பட்டாலும், அவருக்கு 'ஞானபீட விருது கொடுக்கப்பட்ட போது, அவரது தகுதியை மனமாரப் பாராட்டியும், அவரது எழுத்தின் கம்பீரத்தை வியந்தும் எழுதிய இரு கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

தனக்குப் பிடிக்காதவர்களை இவர் சாடுவதும் ரசமானதுதான். அகிலனுக்கு 'ஞானபீட விருது' கிடைத்த தற்கும், தி.க.சிக்கு வல்லிக்கண்ணனின் சிபாரிசில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததற்கும் அவரது சாடல்கள் அத்தகையவை. சு.சமுத்திரத்துக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது இவருக்கு அது சம்மதமில்லை எனினும் அகாதமியின் 'Indian Literature'ன் அப்போதைய ஆசிரியர் D.S.ராவின் வற்புறுத்தலின் பேரில் விருப்பமின்றி அப்பரிசு பற்றி, சமுத்திரத்தைப் பற்றிய பாராட்டா அல்லது கேலியா என்பது புரியாதபடி எழுதியது பற்றி முன்னுரையில் குறிப்பிடுகிறார். 'அவர் வேலை பாதிக்கப்படக்கூடாது என்று, ஒரு வார்த்தைகூட பாதகமாக இல்லாது மறைமுகமாகவே கிண்டலாகவே சமுத்திரத்தின் எழுத்தைப் பற்றியும் பரிசு பெற்ற புத்தகத்தைப் பற்றியும் எழுதினேன். 'சாமிநாதனே என்னைப் பாராட்டி விட்டார். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை' என்று சமுத்திரம் சொல்லிக் கொண்டி ருந்தார்/எழுதி இருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அந்தக் கட்டுரையும் இத்தொகுப்பில். எத்தகைய பாராட்டு அது என்பதை எல்லோரும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.' என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார். பாவம் சமுத்திரம்! சாமிநாதனைப் பிடிக்காதவர்களில் ஒருவராக இருந்தும், அவரது வஞ்சகப் புகழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அகமகிழ்ந்தது, தனக்குப் பாராட்டுக் கிடைத்தால் பழையதை மறந்து போகும் பலரது பலவீனத்துக்கு உதாரணம்.

பாராட்டானாலும் மறுப்பானாலும் அவரது விமர்சனங்கள் சுவாரஸ்யமானவை.
யூமா வாசுகியின் 'ரத்த உறவுகள்' நாவலை விமர்சிக்கும் போது, 'யூமா வாசுகியின் ரத்த உறவு
படிக்க சுவாஸ்யமான புத்தகம் அல்ல. வல்லிக்கண்ணன் குறிப்பிடும் எத்தகைய, எந்த ரக
இன்பமும் அதில் கிடைப்பதற்கில்லை. படிப்பதற்கு மிகவும் மனதைச் சிரமப் படுத்தும் வாழ்க்கையைச் சொல்கிறது இந்த நாவல். நமக்குக் கொஞ்சம்கூட வாசிப்பு இன்பம் தராத
இதை நாம் ஏன் படிக்க வேண்டும், யூமா வாசுகி இதை ஏன் எழுதியிருக்க வேண்டும் என்றால்,
யூமா வாசுகி, 'நான் வாழ்ந்த வாழ்வு யாருடைய சுவாரஸ்யத்துக்காவும் இலக்கிய இன்பத்துக்காவும் மாற்றி எழுதக் கூடிய ஒன்றல்ல; இது என் அனுபவம்;இதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று சொல்லலாம். நம்மில் ஒருவர் வாழ்ந்த வாழ்வும் பெற்ற அனுபவமும் இப்படி என்றால், நம்முன் அது வைக்கப்பட்டுள்ளது என்றால் நாம் அதை ஒதுக்க முடியாது.' என்று எழுதுவது அவரது பொறுப்பு
மிக்க விமர்சனத்துக்கு ஒரு சான்று.

ஒரு வகையில் வெ.சாவின் விமர்சனங்களைப் படிப்பது அவற்றின் சுவாரஸ்யத்துக்காக மட்டுமின்றி, எத்தனையோ புதிய தகவல்கள், நாம் அறிந்துகொள்ள வேண்டிய இலக்கிய ஆளுமைகள், நமக்குப் பரிச்சயமில்லாத புதிய எழுத்தாளர்கள், இலக்கிய இதழ்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று அறிமுகங்கள் பெறுவதற்கும் உதவும்.

சில இலக்கிய ஆளுமைகளை இத்தொகுப்பில் அறிமுகப் படுத்துகிறார்.
'அதிசயப் பிறவி வ.ரா', 'செல்லப்பா நினைவில்'. 'என்னைக் கேட்டால்' - கணையாழியில் இத்தலைப்பில் பத்தி எழுதிய என்.எஸ்.ஜெகந்நாதன் ஆகிய கட்டுரைகள் சம்மந்தப்பட்ட அறிவுஜீவிகளின் நம் அறியாத பெருமைக¨ளைச் சொல்வன.

'அட்லாண்டிக்குக்கு அப்பால்' கட்டுரைகள் எழுதியுள்ள பி.கே.சிவகுமார், 'மேட்டுக்குடியினரின் தலித்துகளா'ன சவுண்டி பிராமணர்களது வாழ்க்கையின் அவலத்தைச் சித்தரிக்கும் 'கல்மண்டபம்' எனும் நாவலின் ஆசிரியர் வழக்கறிஞர் சுமதி,
'அடிவாழை' கதைத்தொகுப்பின் பெங்களூரு தமிழாசிரியர் சகதேவன் என்று குறிப்பிடத்தக்க
புதிய இளம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வாழ்த்தும் உள்ளமும் வெ.சாவுக்கு இருப்பதை அவர்களைப் பற்றிய கட்டுரைகளில் பார்க்க முடிகிறது.

ந.முத்துசாமி - சி.மணி நடத்திய 'நடை'. இவரது ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்த 'யாத்ரா', இவருக்குக் கென்றே இவர் பெயரில் தஞ்சை பிரகாஷ் நடத்திய 'வெ.ச.எ' ஆகிய இதழ்களின் தோற்றம் மற்றும் சாதனைகள் பற்றியும் வெ.சா இத்தொகுப்பில் விரிவாக எழுதியுள்ளார்.

'நேற்றையவற்றின் மதிப்புகள் இன்று நமக்குத் தரப்படும்போது, புனர் விசாசரணை செய்யப்பட வேண்டி இருக்கின்றன என்று தொடங்கும் 'ஒரு மறுவிசாரணை', 'தமிழ் நாவலில் சில புதிய முயற்சிகள்', 'எதிர்ப்பு இலக்கியம்', 'நாமும் எழுத்தாளர்களும்' ஆகிய இலக்கிய விசாரம் பேசும் - சிந்தனையைக் கிளறும் அரிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதிய 'தமிழ் நாவல் நூறாண்டு
வளர்ச்சி' என்கிற நூல் பல முக்கியமான- அன்றுவரை தெரிந்திராத பல நீண்ட உரைநடை நூல்களை வெளிக் கொணர்ந்திருப்பதைச் சொல்லும் போது, அவற்றில் மிக முக்கியமானதும் சுவாரஸ்ய மானதுமான 'முத்துக்குட்டி ஐயரின் வசன சம்பிரதாயக் கதை' நூலை வெ.சா மிக அருமையாய் அறிமுகப்படுத்துகிறார். வாய்மொழியாகச் சொல்லப்பட்ட அக்கதையின்
வித்தியாசமான உரைநடைக்கு ஒரு சில மாதிரிகளைக் காட்டி, அது பிறந்த கதையையும்,
அதன் சிறப்புகளையும் ரசமாகச் சொல்லி அவசியம் படிக்க வேண்டிய நூல் என்று அவர் சிபாரிசு செய்திருக்கும் பாணியே அதைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது. இன்னும் இது போன்ற அரிய நூல்களை அறிமுகம் செய்து தொகுப்பை கவனத்துக்குள்ளாக்குகிறார்.

விமர்சனங்கள் எப்படி எழுதப்பட வேண்டும் என்று காட்டும் கட்டுரைகளும் அவற்றை அவர் சொல்லியுள்ள வாசிப்பை சுவாரஸ்யமாக்கும் நடையும் கொண்ட இத்தொகுப்பை வெ.சாவின் ரசிகர்கள் மட்டுமின்றி, மாற்றுக் கருத்து உள்ளவர்களும் படிக்கலாம். 0


நூல் : யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை.
ஆசிரியர் : வெங்கட் சாமிநாதன்.
வெளியீடு : எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Sunday, November 22, 2009

'குறுந்தொகை'க்கு ஒரு புதிய உரை

மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டும், தமிழரின் பெருமை பேசும் 'சங்க இலக்கியங் கள்' போன்ற நமது அரிய கருவூலங்களை இன்றும் நம்மால் படிக்க முடிவதால் தான் 'கன்னித்தமிழ்' என்று தமிழ்மொழி போற்றப்படுவதற்குக் காரணம் என்று ரசிகமணி டி.கே,சி ஒரு முறை குறிப்பபிட்டார். 400 ஆண்டுகளே ஆகி இருந்தாலும் ஆங்கில
இலக்கியத்தின் 'ஷேக்ஸ்பியரி'ன் நாடகங்கள், சமகால வாசிப்பில் பொருள் கொள்வதில் நெருடலாக இருப்பதையும், 2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் அன்று எழுதப்பட்ட அதே பொருளில், நயத்தில் ரசிக்க முடிவதையும் குறிப்பிட்டே அவர் இதைச் சொன்னார். ஆனால் சங்க இலக்கியத்தைப் பண்டிதராக இல்லாத சாமான்யரும் படித்து ரசிப்பதில் உள்ள சிரமம் 'அதன் காலத்தாலும் மொழியாலும் உள்ள தொலைவுதான்' என்பார் முனைவர் சற்குணம். எனவேதான் தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு வட்டார மொழியை இன்னொரு வட்டாரத்தில் புரிந்து கொள்வதில் சிரமமாய் உள்ளது என்று அவர் சொல்வதை நாம் இன்று அதிகமும் உணர்கிறோம். இதே பிரச்சினைதான் மிகப் பழைய இலக்கியங்களைப் படித்து ரசிப்பதிலும். எனவேதான் அகராதிகளும் உரைகளும் அறிஞர்களால் எழுதப்பட்டன.

சங்க இலக்கியத்தில் 'எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான, 'நல்ல குறுந்தொகை' என்று பாராட்டப் பட்டுள்ள 'குறுந்தொகை' நூலுக்கு, பேராசிரியர் தொடங்கி ரா.இராகவ அய்யங்கார், டாக்டர் உ.வே.சா போன்ற பெரும் புலவர்கள் உரை எழுதியுள்ளார்கள். இப்போது நம் தலைமுறையில், புதிய கண்ணோட்டத்துடனான வித்தியாசமான உரை ஒன்று 'கவிஞர் சக்தி'யால் எழுதப் பெற்று வெளியாகி உள்ளது.

தென்னார்க்காடு கவிஞர் பெருமன்றத்தின் தலைவராக உள்ள கவிஞர் சக்தி ஒரு அற்புதமான மரபுக் கவிஞர். புதுக்கவிதை புகுந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், மரபுக்கவிதை செத்துவிட்டது என்று பலர் பிதற்றியும், இன்னும் அவர் மரபுக்கவிதைக் காதலராகவே நீடிக்கிறார். கவிமணி, பாரதியின் பாடல்களுக்குச் சொன்னதைப் போலவே அவரது கவிதைகள் 'துள்ளும் மறியைப்போலத் துள்ளும். வீரியமும் விறுவிறுப்பும் மிக்க காத்திரமான சொல்லாட்சியும், கற்பனை வளமும், நயமும் நகாசும் நிறைந்த வருணனைப் பாங்கும், 'சடசடவென கோடைமழையெனக் கொட்டும் கவித்திறமும் கருதி 'கவிக்காளமேகம்' என்று சக கவிஞர்களாலும் கவிதை ரசிகர்களாலும் போற்றப்படுபவர். கவிதைத் தொகுப்பு ஒன்றும். கதைத் தொகுப்பு ஒன்றும், குறுநாவல் தொகுப்பு ஒன்றும் சிறுவர் நூல் இரண்டும், உரைநூல் ஒன்றும் என இவரது இலக்கியப் பங்களிப்பு கணிசமானது. மகாகவி பாரதியின் தீவிர பக்தரான இவர் சங்க இலக்கியங்கள் மீதும் தராத காதலுடையவர். அதன் காரணமாகவே சங்க இலக்கியங்களை ரசிக்க புதிய அணுகுமுறைகளைத் தேடி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அம்முயற்சிகளில் ஒன்றுதான் இந்த 'குறுந்தொகை - புதிய உரை'.

அப்படியென்ன மற்றவர் இதுவரை செய்திடாத புதுமை இவரது உரையில் என்று கேட்கத் தோன்றும். அதற்கான பதிலை கவிஞர் சக்தியே கூறுகிறார்:

'கலித்தொகை, ஐங்குறு நூறு போன்று இந்நூல் திணைவழியில் பகுக்கப்படவில்லை. ஒரே கவிஞரின் பாடல்கள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. ஒரு திணையைப் பற்றிய பாடல்கள் ஒரே இடத்தில் இருந்தால் கற்க எளிதாக இருக்கும். ஒரு கவிஞரின் பாடல்களை ஒரே இடத்தில் தொகுப்பது, அக்கவிஞரின் நடை அமைதியையும் கவிதைச்
சிறப்பையும் அறியப் பெரிதும் உதவும்.'

- இதனைக் கருத்தில் கொண்டே கவிஞர் சக்தி, திணை அடிப்படையிலும், பாடல் ஆசிரியரது பெயர் அடிப்படையிலும் அப்பாடல்களை மாற்றி அமைத்து இதனைப் பதிப்பித்துள்ளார். மேலும், 'சங்ககால மொழி தெரிந்த ஒருவர், எந்த உரையுமின்றி, நேரே கவிதைகளை உணர்ந்து திளைக்க முடியும். சங்ககாலத் தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுதான் சங்ககாலக் கவிதைளைப் படிக்கத் தடையாய் அமைகிறது. கவிதையின் உயிர்ப்பை உணர வேண்டுமானால், கவிதையை நேரே படித்து உணர்ந்து, அதில் ஒன்ற வேண்டும். அதற்கு உரைகள் உதவி செய்ய வேண்டும். கவிதையின் உயிர்ப்பைக் கூடியவரை வெளிக்காட்டுகிற, எளிய நடையில் அமைந்த உரை எழுத வேண்டும் என்பது என் ஆசை. இலக்கிய ஆர்வம் உள்ள எவரும் அறியவேண்டும் என்ற ஆசையாலும், கவிதைகளின் நேரான பொருளை எளிய தமிழில் தரவேண்டும் என்ற எண்ணத்தினாலும், சுவைஞர்கள் நேரே கவிதைகளைப் படித்து, உணர்ந்து, சுவைத்து மகிழத்தக்க வகையில்' இந்த உரையை எழுதியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.

இப்பதிப்பில், பாடல்கள் திணைவழி பிரிக்கப் பட்டுள்ளதுடன், ஒரே திணையுள்ளும்ஒரே கவிஞர் பாடிய பாடல்கள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டுள்ளன. ஐங்குறுநூறு, கலித்தொகை போலன்றி பொருள் தொடர்பு கருதி பாடல்களை குறிஞ்சி,நெய்தல், மருதம், பாலை, முல்லை என்னும் முறையில் தாம் வரிசைப்படுத்தி இருப்பதற்கான காரணங்களைக் குறிப்பிடுகையில், தலைவனும் தலைவியும் முதலில் சந்திப்பது முதல் பின்னர் இல்வாழ்வில் ஈடுபட்டு நிகழும் பிரச்சினைகள் வரிசையில் - களவின்பம் துய்ப்பது குறிஞ்சி, தலைவன்திருமண ஏற்பாட்டுக்காகப் பிரிதல் நெய்தல், பின்னர் இல்வாழ்கை, பரத்தையரது தொடர்பால் ஊடல் முதலியன மருதம், அரசுப் பணிக்கோ, பொருளீட்டலுக்கோ தலைவன் பிரிதல் பாலை, அதன்பின் அவனது திரும்புதலை எதிர்நோக்கித் தலைவி காத்திருப்பது முல்லை எனவரிசைப்படுத்தி இருப்பதாக
உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

இவரது உரை சொல்லும் பாணி - முதலில் பொருள் விளங்காத கடினச் சொற்களுக் குப் பொருள் தருதல், பின்னர் பாடலின் நேர் பொருளைத் தருதல், தேவையான பாடல் களுக்கு சிறப்புரை தருதல், குறிப்புகள் எழுதுதல், பாடல் பொருளுக்கேற்ப சில இடங்களில் கூற்றுக்களை மாற்றி அமைத்தல் - எனும் வகையில் உள்ளது.

மற்ற உரை பொருந்தாது என்றோ தன் உரையே சரியானது என்றோ வாதிடாமல், ஆங்காங்கே பிறர் கூறும் உரைகளையும் ஏற்கும் போக்கில் அவற்றைச் சுட்டிச் செல்வது அவரது நேர்மையைக் காட்டுகிறது. தேவையான இடங்களில் நுட்பமாக தன் உரை வேறுபாட்டைச் சுட்டவும் செய்கிறார். சான்றாக ஒரு பாடலில், தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு. 'நிலத்தினும் பெரிதே, நீரினும் உயர்ந்தன்று - நீரினும் ஆரளவின்றே' என்கிறாள். 'நீரினும் ஆரளவின்றே' என்பதற்கு முந்தைய உரைகாரர்கள். 'கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது' என்று உரை கூறியுள்ளனர். ஆனால் சக்தி 'நீரினும் அருமை உடையது' என்று கூறுவதுடன் சிறப்புரையில், 'நீர் உணவாவது, நீர் உயிர் தருவது, நீர் இனிது. எனவே நீரினும் அருமை உடையது என் நட்பு' என்றும் குறிப்பிடுகிறார்.

'மடல் ஊர்தல்' பற்றிய இவ்வுரையாசிரியரின் கருத்து சிந்திக்கத் தக்கது. 'மனதில் காமம் முற்றினால், குதிரை என எண்ணி மடலும் ஊர்வர். பூ என எண்ணி முகை அவிழும் எருக்கம் கண்ணியையும் சூடுவர். பிறர் தன்னைக் கண்டு கேலி செய்யும்படியும் நடந்தும் கொள்வர். பிறவும் செய்வர்.' என்று மனம் திரிந்த நிலையாகக் கூறுகிறார்.

நம் எல்லோருக்கும் பரிச்சயமான, புராணக்கதையாகவும் பேசப்படும் 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?' என்னும் சர்ச்சையைக் கிளறும் 'கொங்குதேர் வாழ்க்கை...' என்ற பாடலுக்கு சிறப்புரை எழுதுகையில் பகுத்தறிவு சார்ந்த நோக்குடன், நாம் ஆமோதித்து ஏற்கும் வகையில் சொல்கிறார்: 'காதல் வயப்பட்டவன் மனத்தடுமாற்றத்தை இப்பாடல் உணர்த்துகிறது. வண்டு உண்மையைக் கூறுமோ என ஐயம் கொள்கிறான். 'வண்டே! நீ அறிந்த மலர்களிலே என் காதலியின் கூந்தலைவிட அதிக மணமுள்ள மலரும் உண்டோ?' எனக் கேட்கிறான். முதல் வினாவில் நம்பிக்கை இன்மை தொனிக்கிறது. இரண்டாவது வினாவில் தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணமுள்ள மலர்கள் எதுவும் இல்லை என வண்டு கூறவேண்டும் என்ற ஆதங்கம் தொனிக்கிறது. இது காதலர்க்கே உரிய உளப்பாங்காகும்.'

- இப்படி திணை மற்றும் பாடல்கள் பகுப்பு முறையாலும், யதார்த்தமான சிந்தனையை உள்ளடக்கிய சிறப்புரையாலும் இவ்வுரையைப் படித்து முடித்ததும் இதனைப் 'புதிய உரை' என ஏற்பதில் நமக்குத் தயக்கமிராது என்றே கருதுகிறேன். 0

நூல்: குறுந்தொகை - புதிய உரை
ஆசிரியர்: கவிஞர் சக்தி.
வெளியீடு: மகாகவி பதிப்பகம், பாரதி வீடு, கெடிலம், திருநாவலூர் 607 204.

Sunday, November 08, 2009

'மூன்று விரல்' மோகம்! விரல்' - இரா.முருகனின் நாவல்பற்றி.

நூல் வாசிப்பு பற்றி கி.ரா ஒருதடவை எழுதியதாக ஞாபகம். 'புஸ்தத்துக்குள் நுழையாலாம்னுதான் பாக்ககுறேன். ஆனா உள்ள நொழைய விட மாட்டேங்குறானே! காலைப் பிடிச்சு இழுக்குறானே!' என்பது போல வாசிப்புக்கு இடம் தராத எழுத்து பற்றிச் சொன்னதாக நினைவு. இரா.முருகனின் எழுத்தில் அந்தச் சங்கடமே இல்லை. உள்ளே நுழைய வேண்டியதுதான் - முதலை தண்ணீருக்குள் இழுத்துக்கொண்டு அடிஆழத்துக்குக் கொண்டுபோகிறமாதிரி அவரது எழுத்து நம்மை மெய்மறக்கச் செய்து தன்னுள் ஆழ்த்தி விடும்! அதற்கு சரியான எடுத்துக்காட்டு 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ள அவரது 'மூன்று விரல்' என்கிற நாவல். 'கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமுடியாது' என்பது உயர்வு நவிற்சியல்ல - இந்த நாவலைப் பற்றியவரை உண்மை!

'சிலிகன் வேலி' என்கிற கணினி உலகத்து உத்தியோகம் பற்றி நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும் மோகத்தைச் சிதைக்க வைப்பதாய் - அசலான அந்த உலகத்தின் பிரச்சினைகள், மாயைகள், வலிகள் பற்றிய யதார்த்தத்தை, அத்துறையில் வல்லுனரான, அதில் பணியாற்றிய வெளிநாட்டு அனுபவங்களின் அடிப்படையில், இரா.முருகன் அற்புதமாக இந்நாவலைப் படைத்துள்ளார். சுஜாதாவை நினைவூட்டுகிற - அவரை விடவும் இன்னும் அதிகமான புருவ உயர்த்தலுக்கு வாசகனை ஆளாக்குகிற, வரிக்கு வரி மென்னகை பூக்க வைக்கிற, திகட்ட வைக்கிற நடை!

'சிலிகன் வேலி' மோகமும் அதன் விபரீத யதார்த்தமும் பற்றி தான் எழுத நேர்ந்ததுபற்றி இரா.முருகனே தனது முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்: 'மற்ற எந்தத் தொழிலில் இருப்பவர்களையும்விட, முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள்தாம். கணினி மென்பொருள் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்
பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயதுவரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்சச்சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் - இந்தியச் சராசரி வருமானத்தைவிடப் பலமடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் - வருமானங் களைப்பற்றிப் பலுனாக ஊதப்பட்ட வண்ணவண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் ஆரம்பித்தபோது,இதெல்லாம் சீக்கிரமே தரைக்கு வந்துவிடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்பந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கி இருந்தேன். ஆனால், தமிழில் ஒரு படைப்புக்கூட
இதுவரை மென்பொருளாளர்களைப்பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ,தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்க¨ளைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன் வைக்க உத்தேசித்தேன்'.

இக்கதையில் வரும் சுதர்சன் மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதி; சாண் ஏறினால் முழம் சறுக்குகிற வகையைச் சேர்ந்தவன். இங்கிலாந்து, தாய்லாந்து, அமெரிக்கா என விமானத்தில் பறந்து சென்று மென்பொருள் தயாரித்துக் கொடுக்கிறவன். தற்செயலாக ஒரு விமானப்பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் இருந்த அவ்தார்சிங் என்கிற சா·ப்வேர் கம்பனி முதலாளியின் பார்வையில் பட்டு அவரதுவேலைக்காக தாய்லாந்துக்கு பிராஜெக்ட் மானேஜராக தன்னுடன் ஒரு கோஷ்டி சா·ப்ட்வேர் ஆட்களுடன் போகிறான். அங்கே அவனுக்கேற்படும் வெற்றிகளும், வித்தியாசமான பிரச்சினைகளும், இடையே அமெரிக்கப் பெண்
ஒருத்தியிடம் ஏற்படும் காதலும், ஊரில் இருக்கும் ஆசாரமான அப்பா அம்மாவின் பாசமும், ஊரில் இவனை விரும்பும் பெண்ணின் நினைவும் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறான பிரச்சினைகளில் சிக்கித் தடுமாறுகிறான். விதியின் விளையாட்டுக்கு மென்பொருள் விற்பன்னனும் விதிவிலக்கு அல்ல என்று காட்டுவதுபோல எதிர்பாராதவிதமாய் சிகரத்தை எட்டியவன் தலைகுப்புற விழுகிறான். காதலியும், முதலாளியும் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பில் ஈடுபட்ட விமானத்தில் சிக்கி இறக்கிறார்கள். ஊரில் இவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணையும் முன்பே உதறியாயிற்று. இவனது வாழ்க்கையே புரண்டு போகிறது. பிராஜெக்ட் மானேஜராக இருந்தவன் வெறும் புரொகிராமராக, தான் நிராகரித்த உள்ளூர்ப் பெண்ணின் தயவில் பிழைக்கிற அவலத்துக்கு ஆளாகிறான். சரசரவென்று உச்சாணிக்கு ஏறிக்கொண்டிருந்தவன், சடசடவென மரம் முறிந்து விழுகிறமாதிரி சரிய, வெகுசுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருந்த கதை மகா சோகத்தில் முடிவது நெஞ்சில் வலியை ஏற்படுத்துகிறது.

'திடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டர் குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும் கூட' என்பதை இந்நாவலின் மூலம் முருகன் உணர்த்துகிறார். கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நம்மில் பெரும்பாலோர் நினக்கிறபடி தலையில் கொம்பு முளைத்த, சட்டைபையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும், நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம் மென்றபபடி தரைக்கு மேலே சரியாகப் பத்து செண்டிமீட்டர் உயரத்தில் பறக்கிற' அசாதாரண மனிதர்கள் இல்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் தாம்; மென்பொருள் பிழைப்பு என்பது நாய் படாத பாடு என்று நமக்குத் தெரியப்படுத்துகிறது நாவல்.

நாவலின் அநாயசமான ஓட்டம் நம்மையும் உடனிழுத்துக் கொண்டு ஓடுகிறது. 'இரா.முருகனின் நேர்த்தியான கதை சொல்லலில் நாமும் நிரந்தரமில்லாத மென்பொருள் உலகத்தில் குதிக்கிறோம். காசுக்காக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பறக்கிறோம்'. 'நேரம், காலம், சுற்றுப்புறம், கலாச்சாரம், சொந்த வாழ்க்கை
என்று எதையும் சட்டை செய்யக்கூட நேரமில்லை. குறிப்பிட்ட டெட்லைனுக்குள் புராஜெக்ட் முடியவேண்டும்.மென்பொருள் சரியாக வேலை செய்ய வேண்டும். கிளையண்ட் பணம் தர வேண்டும். அது ஒன்றுதான் முதலாளிக்குக் குறி. அவனது ஏவல் நாயான நமக்கும் அதுதான் குறியாகிறது,' என்கிற சா·ப்ட்வேர்காரர்களின் அவசரமும் அவஸ்தையும் நம்மையும் பற்றிக்கொள்கிறது.

வேலைக்கிடையே என்னகாரணத்தாலோ ஸ்தம்பித்துப் போகிற கணினியை ரீபூட் செய்ய 'கன்ட்ரோல்-ஆல்ட்-டெலிட்' என்கிற 'மூன்று விரல் இயக்கத்'தை மேற்கொள்வது போல, வாழ்க்கையின் பல கணங்களிலும் எதிர்கொள்ள கடினமான பிரச்சினையிலிருந்து விலகி மீண்டும் புதுமையாக உயிர்த்துவிட முடியாதா என்கிற ஏக்கத்தின் குறியீடாக நாவலின் தலைப்பு அமைந்திருக்கிறது.

'அரசூர் வம்சம்' நாவலில் வந்த மாதிரி இந்நாவலிலும் பாத்திரங்கள் காதருகில் வந்து கற்பனையில் பேசுகின்றன. முன்னதில் பின்நவீனத்துவ உக்தியாகக் கையாளப்பட்டது இதில் நனவோடை உக்தியாகக் கையாளப்பட்டிருப்பது ரசிக்கத் தக்கதாக உள்ளது. சுதர்சன் போனில் அம்மாவிடம் பேசும்போதும், அவனது காதல், காமம் நினைவுகளினூடேயும் அவனது காதலி சந்தியா குறுக்கிட்டு காதருகில் வந்து எச்சரிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்றவை மென்னகை பூக்க வைக்கின்றன.

அவரது வித்தியாசமான சுவாரஸ்யம் கூட்டும் நடைக்கு ஒரூ உதாரணம்: வாசல் கதவுக்குக் கீழே பத்திரிகை உள்ளே வரலாமாப்பா இல்லே இன்னும் கொஞ்சம் தூங்கப் போறியா என்று எட்டிப் பார்த்து விசாரித்தது.' அவர் கையாளும் உவமைகளும் ரசமானவை: 'பெரிய கான்கிரீட் வனமாகக் கோலாலம்பூர் விமான நிலையம் ஆள் அரவமில்லாமல் அச்சமூட்டிக் கொண்டிருந்தது.'

'ஒரு விபத்தின் பயங்கரத்தை அசலாக உணர வேண்டுமென்றால் விபத்து நடந்த வண்டிக்குள் நீங்கள் இருந்தாக வேண்டும்' என்று காண்டேகர் சொன்னது போல - 'வரிக்கு வரி நகைச்சுவையும், மனதைச் சுண்டுகிற உவமைகளுமாய் நிறைந்திருக்கிற இந்நாவலைப் படிப்பதே தனி சுகம்தான்' என்று நான் என்னதான் திருப்பித் திருப்பிச் சொன்னாலும். அதை நீங்கள் திகட்டத் திகட்ட அனுபவிக்க நாவலை முழுதுமாய்ப் படிப்பதுதான் ஒரே வழி!

'எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்துவிடுகிறது' என்கிறார் முருகன் தன் முன்னுரையில். உண்மைதான். கதை முடிந்த பின்னும் நம் எண்ண ஓட்டங்கள் விரிந்து பரவுவதைத் தவிர்க்க
முடியவில்லைதான்!. 0


நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா.முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.