Thursday, June 30, 2011

எனது இலக்கிய அனுவங்கள் - 4.ஆசிரியர் உரிமை (3)

'எடிட்டிங்' என்கிற 'பிரதியைச் செப்பனிடுதல்' பத்திரிகை ஆசிரியரின்
தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில்
பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள். இதற்கென்றே
ஒவ்வொரு பதிப்பகமும் தனித்திறமை மிக்க எடிட்டர்களை வைத்திருப்பார்கள்.
எவ்வளவு பெரிய எழுத்தாளரானாலும் இவர்களது கண்டிப்புக்குத் தப்ப முடியாது.
தமது வெளியீடு தரமாக அமைய வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும்
அக்கறை பிரமிப்பானது. தமிழ்ப் பதிப்பாளர்களில் 'க்ரியா' இதில் தனிக் கவனம்
செலுத்துவதாக அறிகிறேன். தங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறவரை எழுத்தாளரைத்
திரும்பத் திரும்ப எழுத வைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போது
'தமிழினி' அப்படிக் கவனம் காட்டுவதாக அறிகிறேன்.

இலக்கியச் சிற்றிதழ்களில் பக்கக் கட்டுப்பாடு காரணமாக வெட்டுகள் நிகழலாம்.
அது தவிர்க்க முடியாது தான். அப்படி வெட்டும் போது 'தீபம் திருமலை', வெட்டியது
தெரியாமல் செப்பம் செய்வதில் வல்லவர். வணிக இதழ்களில் இது ஆசிரியரின்
தனியுரிமை. குமுதத்தில் கேட்கவே முடியாது. பெரிய கதையை சின்னஞ் சிறுகதையாய்
வெட்டி, ஒரு பக்கக் கதை, அரைப்பக்க கதை, ஏன் துணுக்காகவும் கூட வெளியிடுவது
உண்டு. முன்பெல்லாம் அப்படி படைப்பாளியைப் பதற வைக்கிற மாதிரி செப்பம்
செய்வதில்லை. அதில் வெளியான என் ஒரே சிறுகதையைக் கூட தலைப்பில் தான்
மாற்றம் செய்தார்களே தவிர கதையில் கை வைக்கவே இல்லை. நான் எழுதி
அனுப்பியபடியே தான் வெளியானது!

விகடனில் வெளியான பத்துக்கு மேற்பட்ட என் கதைகளில் இரண்டு கதைகள்
தான் - ஒன்றில் தலைப்பு மட்டும், மற்றதில் தலைப்பு மாற்றத்துடன் வெட்டும்
நிகழ்ந்தது. தலைப்பு மட்டும் மாற்றப்பட்ட கதைக்கு நான் ஆட்சேபம் ஏதும்
தெரிவிக்கவில்லை. ஆனால் வெட்டுகள் அதிகம் நிகழ்ந்த கதைக்கு, அனுபவ
மின்மையால் ஆத்திரத்துடன் ஆசிரியருக்கு ஒரு ஆட்சேபக் கடிதம் எழுதினேன்.
ஏனெனில் வெட்டப்பட்ட பகுதிகள் அவசியமானவை என்று கருதினேன். அதோடு
கதையின் சில பாராக்கள் முன் பின்னாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. சில
வார்த்தைகளும் பாத்திரப் பெயர்களும் கூட வெட்டப்பட்டிருந்தன. தலைப்புகூட
நான் தந்திருந்த மாதிரி காத்திரமாக இல்லை என்றும் கருதினேன். என் ஆத்திரமான
கடிதத்தை ஆசிரியர் பொருட்படுத்தி இருக்கவேண்டியதில்லை. இப்படி வருகிற
கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதி அவர்களுக்குக் கட்டுப்படியாகாதுதான்.
ஆனால் அப்போதைய விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் -
அவரும் எழுத்தாளர் என்பதால், என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பரிவுடன்
பதில் எழுதி விகடனின் பெருமையை உயர்த்தினார்.

கதைக்கு நான் வைத்த தலைப்பு 'ஜெயஸ்தம்பம்'. அது 'வெற்றிக் கம்பம்'
என மாற்றப்பட்டிருந்தது. வடமொழி வார்த்தை என்பதால் அதை மாற்றினீர்களா?'
என்றும், மாசிலாமாணிக்கம் பிள்ளை என்ற ஒரு கிராமத்துப் பாத்திரப் பெயரை
வெறும் 'மாணிக்கம்' என்று வெட்டியது ஏன் என்றும், சில ரசமான கிராமத்து
வர்ணனைகளை வெட்டியுள்ளீர்கள் என்றும், கதையின் நீளத்தையும் வெகுவாகக்
குறைத்து விட்டீர்கள், இது எழுத்தாளரது உரிமயைப் பறிப்பதாக ஆகாதா என்றும்
கேட்டிருந்தேன். அதற்கு ஆசிரியர் பொறுமையாக, பரிவோடு இப்படி பதிலெழுதினார்;

'அன்புடையீர்,

வணக்கம். 27-1-90 தேதியிட்ட தங்கள் கடிதம் பெற்றேன். விகடனில்
அண்மையில் வெளியான தங்களுடைய 'வெற்றிக் கம்பம்' சிறுகதைக்கு வாசகர்களின்
ஒரு மனதான பாராட்டுக் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். தங்கள் கதையின் தலைப்பை தாங்கள் கூறியுள்ளபடி அது வடமோழியில்
அமைந்திருந்த காரணத்தால் தான் 'வெற்றிக் கம்பம்' என்று மாற்றினோம்.
'ஜெயஸ்தம்பம்' என்று கதைக்குத் தலைப்பு கொடுத்து விட்ட காரணத்தால் கதையின்
முடிவுப் பகுதிகளில் இந்த வார்த்தையை நிறைய இடங்களில் பயன் படுத்தி
இருக்கிறீர்கள். அதுவே 'வெற்றிக் கம்பம்' என்று மாற்றி விட்ட பிறகு கதையினுள்
அதைப் பயன்படுத்த இயலவில்லை. தவிர ஏற்கெனவே 'த்வஜெஸ்தம்பம்' என்ற
சொல் பிரபலமாக இருப்பதால் 'ஜெயஸ்தம்பம்' என்ற வார்த்தை தவறாகப் புரிந்து
கொள்ளப்படும்.

தவிர, இயன்ற வரையில் கதைகளின் தலைப்புகள் தமிழில் இருப்பதையே நாங்கள்
விரும்புகிறோம். கதையின் தலைப்பு மாற்றப்பட்டதாலேயே அதன் சிறப்பு குறைந்து
விட்டது என்று தாங்கள் கூறுவது முழுதும் ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை.
'மாசிலாமாணிக்கம் பிள்ளை' என்ற கதையில் வரும் பாத்திரத்தின் பெயர் படிக்கும்
போது எங்களுக்கு நெருடியது. இருவருடைய பெயர் ஒன்று சேர்ந்து விட்டது போன்ற
பிரமை ஏற்படுத்தியது.

'சதைப்பற்றும் அழகு அமைப்பும் கொண்ட குழந்தையை வெறும் எலும்புக்
கூடாக்கி அனுப்பியது போல.....' என்று கதையின் நீளத்தை குறைத்ததற்காக
வருத்தப் பட்டிருக்கிறீர்கள். எந்தக் கதையையுமே சேதப்படுத்தி வெளியிட வேண்டும்
என்பது எங்கள் எண்ணமாக இருக்கமுடியாது என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

தங்கள் கதையின் தொடக்கத்தில் காலைக்கடன் பற்றிய விளக்கம் நீக்கப்
பட்டிருக்கிறது. காரணம், கதையைப் படிக்கத் தொடங்கியவுடன் முகம் சுளிக்க
வைக்கும் வர்ணனையாக அது சிலருக்கு அமையலாம். கதைக்கோ, அது
சொல்லப்படும் சூழ்நிலைக்கோ தேவையற்றதாக நாங்கள் கருதியதால் கூலி
கொடுப்பதில் தாமதம் ஏற்படுவது பற்றிய விவரம் நீக்கப்பட்டது. 'பாப்பாரத் தெரு'
என்பது போன்ற சாதி சொற்பிரயோகத்தை கூடிய வரையில் நாங்கள் தவிர்க்க
விரும்புகிறோம். அதனாலேயே பாப்பாரத் தெரு பற்றிய விவரத்தை நீக்கினோம்.

கருப்பன் கால்காணி பூமி அதிகம் உள்ளவன் என்று சொல்லிவிட்டு, ஊர்ப்
பெரியவர்களிடம் அவன் காட்டும் அதிகமான பவ்யம், இந்தத் தொழில்புரிபவர்களை
அடிமைகளாகக் காட்டும் தொழில் ஏளனம்' என சிலருக்கு எரிச்சல் ஏற்படக்கூடும்.
அந்தவகையில் தான் 'சவரம்' என்ற வார்த்தையைக் கூட தவிர்த்தோம். கதை
எழுதப்பட்ட முழுவடிவமும் உங்களுக்குத் தெரிந்திருப்பதால் வெளியான கதை
எலும்புக்கூடு என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், அச்சான கதையை மட்டும்
படிக்கும் எந்த வாசகருக்கும் இந்த உணர்வு ஏற்படாது.

கதை எடிட் செய்யப்பட்டிருப்பதில் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பது
புரிகிறது. 'கதையின் இந்தப் பகுதிகளெல்லாம் நீக்கி வெளியிடப்படும்' என்று
முன் கூட்டியே நாங்கள் சொல்லியிருந்தால் தங்களுக்கு இப்போது இந்த அதிர்ச்சி
ஏற்பட்டிருக்காது. அப்படி செயல்படாததற்காக நாங்கள் வருந்துகிறோம். நன்றி.

இப்படிக்கு,

...................

எனது அயர்ச்சி தரும் நீண்ட கடித்துக்கு இப்படிப் பொறுமையாய்ப் படித்து
என் ஒவ்வொரு புகாருக்கும் விளக்கம் சொல்லி 3 பக்க அளவில் நீண்ட
கடிதத்தை ஆசிரியர் எழுத வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏதுமில்லை தான்.
இப்படி எல்லா பத்திரிகை ஆசிரியர்களும் இந்தளவு பொறுப்பும் பொறுமையும்
கொண்டிருக்க முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஆனந்தவிகடனின்
பாரம்பரியமான நேர்மை, பெருமை என்பதை சமீபத்தில் 'ஆனந்தவிகடனும் நானும்'
என்ற தலைப்பில் ஒளி இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் இது போன்றதொரு
அனுபவத்தைப் படித்தபோது தெரிந்தது. அதோடு எடிட்டிங் பற்றிய மரியாதையும்
என்னுள் கூடியது. 0

Thursday, June 23, 2011

எனது இலக்கிய அனுவங்கள் - 3. ஆசிரியர் உரிமை (2)

எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனது
ரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்கு
ஏற்ப மாற்றுவது ஆசிரியரின் இன்னொரு உரிமையாகும். சில சமயம் மாற்றப்படும்
தலைப்பு எழுத்தாளருக்கு உவப்பானதாகவும் அமைந்து விடுவதுண்டு. அநேகமாக
எழுத்தாளர் முகம் சுளிப்பதாகவே மாற்றம் அமைவதுதான் யதார்த்தம். அதே
சமயம் வாசகருக்கும் உவந்ததாகவும் அமைந்து விடலாம். ஆனால் படைப்பாளி
முகம் சுளிப்பதில் பயனில்லை. அடுத்து அவருக்கு வாய்ப்பு இல்லமால் போகக்
கூடும். எல்லா பத்திரிகைக்கும் இது பொதுவானதுதான் என்றாலும் 'குமுதம்'
பத்திரிகைக்கு தலைப்பை மாற்றுவது என்பது அத்தியாவசியமான செயல்
போலிருக்கிறது. மாற்றினால்தான் அது சரியான 'எடிட்டிங்'!

என் கதை ஒன்றிற்கு 'குமுதத்தி'ல் இப்படி நேர்ந்திருக்கிறது. நான் 'அண்ணா
மலைப் பல்கலை'யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு படிக்கும் போதுதான் 1956ல்
ஆனந்தவிகடனில் முதல் 'மாணவர் திட்டம்', வாசன் அவர்களால் தொடங்கப்
பட்டது. வாரம் தோறும் மாணவர் ஒருவரது படைப்பு தேர்வாகி பிரசுரமாகி வந்தது.
'குழந்தைத்தெய்வம்' என்கிற என்னுடைய கதையும் அப்போது 1957ல் வெளியானது.
அதற்குப் பிறகு சில கதைகள் விகடனில் வெனியான நிலையில் 'குமுதத்'தில் கதை
வெளியானால் தான் ஜென்மம் சாபல்யமாகும் என்ற அற்ப ஆசையால் அதற்கும்
முயன்றேன். 1963ல் அந்த ஆசை 'கொஞ்சம் குறைகிறது' என்ற கதை மூலம்
நிறைவேறியது. 'குமுதத்'தில் கதை வெளியான பூரிப்பை முழுமையாக அனுபவிக்க
முடியாதபடி கதையின் தலைப்பு உறுத்தியது. நான் கொடுத்திருந்த தலைப்பு
'மனிதனுக்கு மனிதன்' என்பதுதான் பொருத்தமானது என்ற என் கருத்துக்கு மாறாக
சம்பந்தமில்லாமல் 'கொஞ்சம் குறைகிறது' என்று மாற்றிவிட்டார்களே என்ற
ஆதங்கத்தை அவர்களுக்கு எழுத முடியுமா? கதை வெளியானதே பெரிய
விஷயம்! அதோடு சன்மானமும் அந்தக் காலகட்டத்திற்கு கணிசமானதாக
ரூ.60 வேறு கிடைத்திருந்தது. எனவே எதிர்காலப் பிரசுரம் கருதி கசப்பை
விழுங்கிக் கொண்டேன்.

கதையைக் கோடிகாட்டினால் தான் என் ஆதங்கம் புரியும்.

ஒரு முன்னிரவு நேரத்தில் ஒரு தொழிலாளி, மனைவியுடன் பேருந்தில் பயணம்
செய்கையில் பயணச்சீட்டுக்கு காசு கொஞ்சம் குறைகிறது. முன் இருக்கையில்
இருக்கிற தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்
தரவில்லை. நடத்துநர் தாட்சண்யம் காட்டாது அவர்களை பேருந்திலிருந்து இறக்க
முயல்கையில் முதலாளிக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சாமியார் இரக்கப்பட்டு,
குறைகிற காசைக் கொடுத்து அவர்கள் தொடர்ந்த பயணிக்கு உதவுகிறார். முதலாளி
'அவன் வேஷம் போடுகிறான் அவனுக்கெல்லாம் உதவ வேண்டியதில்லை' என்கிறார்
சாமியாரிடம். அவர் 'இருக்கட்டும், ஏதோ மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டியதுதான்!'
என்கிறார். உடனேயே முதலாளி பயணச் சீட்டுக்குப் பணம் தர வேண்டிய போது அவரது
பணப்பை காணாமால் போயிருப்பது தெரிகிறது. 'ஊர் போய்ச் சேர்ந்ததும் தருவதாக
முதலாளி சொல்ல, நடத்துனர் மறுத்து 'பணம் இல்லாவிடில் இறங்கி விடுங்கள்'
என்கிறார். முதலாளி, சாமியரிடமே உதவி கேட்கிறார். அவர் தன்னிடம் இனி பணம்
இல்லை என்று சொல்ல, 'மனிதனுக்கு மனிதன் இது கூடச் செய்யக் கூடாதா?' என்று
அவரிடமே அவரது பாடத்தைப் படிக்கிறார். 'அது சரிதான்! மனிதனுக்கு,
முன்பே நான்செய்து விட்டேன்' என்கிறார்சாமியார். நடத்துனர் தாட்சண்யம் காட்டாது
கும்மிருட்டில் முதலாளியை இறக்கி விட்டுவிட, பேருந்து நகர்கிறது.

அடுத்த வார 'குமுதத்தி'ல் என் கதைக்குப் பாராட்டும் கண்டனமும் வந்திருந்தன.
நான் ஆதங்கப்பட்ட தலைப்பு மாற்றத்தைப் பாராட்டி இரண்டு பேர் எழுதி
இருந்தார்கள். 'சில்லரை கொஞ்சும் குறைகிறது என்பதைத் தலைப்பு சுட்டுவது
பொருத்தமாக உள்ளது' என்று ஒருவரும், 'பண்பாடு கொஞ்சம் குறைகிறது என்பதை
கதை நாசூக்காய்சுட்டுகிறது' என்று மற்றொருவரும் பாராட்டி இருந்தார்கள். கண்டனம்
தெரிவித்தவர் 'கதை யதர்த்தமாக இல்லை. முக்கியஸ்தராக அப்பகுதியில் இருக்கிற
முதலாளி ஒருவரை இப்படி எல்லாம் எந்த நடத்துனரும் இறக்கி விட்டுவிட மாட்டார்'
என்று எழுதி இருந்தார். இதற்குப் பதிலாக, அடுத்த வாரம் ஒருவர், 'இப்படி இறக்கி
விட்டு விடுவாரா என்பதல்ல கதை; இப்படிப் பட்டவர்களை இரக்கமின்றி இறக்கி விட
வேண்டும் என்பதுதான் கதை!' என்று எனக்காகப் பரிந்து எழுதினார். வாசகர் பல விதம்!
அதுதான் பத்திரிகை ஆசிரியரின் பலம். ஆனால் ஒரு திருப்தி! என் கதை ஒரு
வார்த்தை கூட வெட்டுப் பெறாமல் நான் அனுப்பியபடியே முழுமையாக வெளியாகி
இருந்தது!

பிறகு வந்த என் கதைத் தொகுப்பில் நான் வைத்த தலைப்பிலேயை கதை
வெளியானது. 0

Tuesday, June 14, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 2.ஆசிரியர் உரிமை(1)

'படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு'
என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. 'தன் படைப்புகளில்
கை வைக்கக்கூடாது' என்று கறாராகச் சொல்லும் எழுத்தாளர்களும் உண்டு.
பத்திரிகையின்கொள்கை, பக்க அளவு காரணமாக படைப்புகளைச் சுருக்கவோ,
பகுதிகளை வெட்டவோ நேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தாளர்
எழுதாததை - தன் கருத்தாக ஆசிரியர் சொல்ல நினைப்பதை - தான் பிரசுரிக்கும்
படைப்பில் நுழைப்பதற்கு உரிமை எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ள
முடியவில்லை. எனக்கு அப்படி ஒருஅனுபவம் நேர்ந்தது.

ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையில், ஒரு பிரபல நாவலுக்கு நான் மதிப்புரை
எழுதினேன். நாவலாசிரியர் புதியவர். இளைஞர். அதற்கு முன் பத்திரிகையில்
எழுதிய அனுபவம் இன்றி, மு.வ போல நேரடியாக நூலாகப் பிரசுரிக்கப் பட்டு
பெரிதும் பேசப்பட்ட நாவல் அது. என் மதிப்புரையை வெளியிட்ட இதழாசிரியர்
மதிப்புரையின் இறுதி வரியாக 'இந்த நாவலைப் படித்து முடித்ததும் புகழ் பெற்ற
'...........' என்ற ஆங்கிலநாவல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை'
என்று சேர்த்து வெளியிட்டிருந்தார். எடுத்த எடுப்பிலேயே, இவ்வளவு சின்ன வயதில்
இந்த எழுத்தாளருக்கு இப்படி ஒரு பிரபலம் கிடைத்திருப்பது அவரை உறுத்தியதோ
என்னவோ! தான் சொல்லமுடியாததை என் தலையில் கட்டி விட்டார்.

பிரசுரமான மதிப்புரையைப் பார்த்த எனக்கு, நான் எழுதாத அவதூறை நான்
எழுதியதாக வெளியிட்டதில் எரிச்சல் ஏற்பட்டது. அடுத்த வாரம் அந்தப் பத்திரிகை
அலுவலகத்துக்குப் போன போது, ஆசிரியரிடம், "என்ன இப்படிச் செய்து விட்டீர்களே?
நான் அப்படிக் குறிப்பிடவே இல்லையே!" என்று ஆதங்கப் பட்டேன். அதற்கு அவர்,
"அதனால் என்ன? திரு.'........' தான் அப்படிச் சொன்னார். அவர் நிறைய ஆங்கில
நாவல்கள் படிப்பவர்!" என்றார் கொஞ்சமும் சங்கடமின்றி. "அப்படியானால் அவரையே
அப்படி எழுதச் செய்திருக்கலாமே! நாவலாசிரியர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?"
என்று கேட்டேன். அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டார். விடுங்கள்" என்று
கழற்றிக்கொண்டார். ஆனால், எனக்குப் பரிச்சயமான அந்த நாவலாசிரியரின் முகத்தில்
எப்படிவிழிப்பது என்ற சங்கடம் எனக்கு ஏற்பட்டது.

பத்திரிகை ஆசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்ததுமே அந்த
நாவலாசிரியரை வாயிலில் சந்திக்கும்படி நேர்ந்து விட்டது. குசலம் விசாரித்த
பின் அவர் கேட்டார், "அந்த ஆங்கில நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா?".
எனக்குச் சங்கடமாகி விட்டது.'இல்லை! சத்தியமாக அதை எழுதியதும் நான் இல்லை!'
என்று கத்தத் தோன்றியது. பதற்றத்தைக் குறைத்துக் கொண்டு நடந்ததைச் சொல்லி
வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன். இன்று மிகவும் பிரபலமாகி விட்ட அவர்,
பெருந்தன்மையுடன் "போகட்டும் விடுங்கள்" என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

கதைகளில் அல்லது கட்டுரையில் அவசியம் ஏற்பட்டு ஒரு வரி சேர்ப்பதால்
படைப்புக்கு வலு ஏற்படும் என்று தோன்றினால் ஆசிரியர் உரிமை எடுத்துக்
கொண்டு சேர்ப்பதை வேண்டுமானால் ஏற்கலாம். ஆனால் இப்படி தன் விருப்பு
வெறுப்புகளைக் காட்ட, படைப்பாளியின் எழுத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்
உரிமையை எப்படி ஏற்க முடியும்? 0

Thursday, June 09, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 1. இலவசக் கரு.

'தன் மனைவிக்கு மாற்றானிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தை
என்று கொண்டாடுவது மாதிரி, பிறரது கதையைத் திருடி எழுதி தன் கதை
என்று சொல்வது பேடித்தனம்' என்று சொன்ன புதுமைப்பித்தன் - இந்தத் திருட்டை
'இலக்கிய மாரீசம்' என்ற ஒரு புதுப் பிரயோகத்தால் வருணித்தார். பின்னாளில்
அவர் மீதும் அத்தகைய குற்றச்சாட்டும், அதன் பேரில் நிகழ்ந்த வாதப் பிரதி
வாதங்களும் இலக்கிய உலகில் பிரசித்தம்.

இத்தகைய 'இலக்கிய மாரீசம்' அநேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும்
தெரிந்தோ தெரியாமலோ, பிரக்ஞை உடனோ பிரக்ஞை இன்றியோ நேர்வதுண்டு.
கண், காது, வாய் ஆகிய மூன்று புலன்களையும் இழந்து போன ஹெலன்கெல்லர்
தன் வாழ்வின் மீட்புமுயற்சிக் காலத்தில் கதை எழுத முயன்ற போது, அவருக்கு
இந்த விபத்து நேர்ந்தது. 'பனி மனிதன்' என்று அவர் எழுதிய கதை திருடப்பட்ட
கதை என்ற குற்றச்சாட்டு எழுந்த போது அவர் துடிதுடித்துப் போனார். உண்மையில்
அது அவரது பிரக்ஞை இன்றியே நிகழ்ந்தது. சிறு பிராயத்தில் படித்தோ கேட்டோ
ஆழ்மனதில் பதிந்து போன கதை - அவர் கதை எழுத முற்பட்ட போது தனது
சொந்தக் கற்பனை என்ற பிரமை ஏற்பட்டு, 'பனி மனிதன்' என்ற கதையை அவர்
எழுதினார். பிறகுதான் தன் மனமே தன்னை ஏமாற்றி விட்டது புரிந்தது. அதற்காக
மிகவும் வேதனைப் பட்டார். அது போல எனக்கும் ஒரு விபத்து ஏற்பட்டது.

அண்ணாமலையில் பட்டப் படிப்பு படிக்கும் போது, ஒரு நல்ல இலக்கிய
நண்பர் கிடைத்தார். நிறையப் படிப்பவர். ரசனை மிக்கவர். ஆனால் படைப்பாளி
அல்லர். நான் கதை எழுதுகிறேன் என்றறிந்தது முதல் என்னை மிகவும் உற்சாகப்
படுத்தி எழுத வைப்பவர். முதல் ரசிகராக பத்திரிகைக்கு அனுப்புமுன்பாக கைப்
பிரதியிலேயே படித்துப் பாராட்டுவார். என் இலக்கிய வளர்ச்சியில் உண்மையிலேயே
அக்கறை கொண்டவர்.

நான் அப்போது தான் 'ஆனந்த போதினியி'ல் அறிமுகமாகி, அதில் சில
கதைகள் வந்த பிறகு, அதன் சகோதர பத்திரிகையான 'பிரசண்ட விகடனி'ல்
நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். அவ்விரண்டு பத்திரிகைகளின் ஆரிரியரான
காலஞ்சென்ற நாரண துரைக்கண்ணன் அவர்கள் மாணவனாக இருந்தாலும் என்
கதைகளை ஏற்றுப் பிரசுரித்து வந்தார்.

ஒரு நாள் என் இலக்கிய நண்பர், தன்னிடம் ஒரு அருமையான கதைக் கரு
இருப்பதாகவும், அதனைக் கதையாக்கினால் அருமையான சமூக விமர்சனமாக
அது அமையும் என்றும் சொன்னார். 'ஒரு கலெக்டரின் செல்ல நாய் இறந்து
போகிறது. துக்கம் விசாரிக்க ஊர்ப் பிரமுகர்களும், வியாபாரிகளும் இன்னும்
அவரது கடாட்சத்துக்காகக் காத்திருப்பவர்களுமாய்க் குழுமி, நாயின் சவ
அடக்கம் அமோகமாக நடந்தேறுகிறது. பிறகு ஒரு நாள் கலெக்டரே இறந்து
போகிறார். ஏராளமான பேர் துக்கம் விசாரிக்கவும், ஆறுதல் கூறவும் வரப்
போகிறார்கள் என்று காத்திருக்கிற கலெக்டரின் மனைவிக்கு, ஏமாற்றமே
மிஞ்சுகிறது. ஒரு காக்கை குருவி கூட எட்டிப் பார்க்கவில்லை'. இது தான் கரு.

அற்புதமான சமூக முரண் என்பதால் நான் வெகு உற்சாகத்தோடு ஒரே
மூச்சில் அங்கதச்சுவை மிக்கதாய், அந்தக் கதையை எழுதி முடித்தேன். நண்பர்
படித்து விட்டு, "பிரமாதமாய் வந்திருக்கிறது. உடனே பத்திரிகைக்கு அனுப்புங்கள்"
என்றார். எனக்கு உடனே ஆதரவு தரும் பிரசண்ட விகடனுக்கு அன்றே பிரதி
எடுத்து கதையை அனுப்பி வைத்தேன்.

அனுப்பிய சுருக்கில் அடுத்த இதழிலேயே பிரசுரமாகிவிடும் என்று ஆவலுடன்
காத்திருந்த எனக்கு, நான்கு நாளில் கதை திரும்பி வந்தது அதிர்ச்சியாக இருந்தது.
ஏமாற்றத்துடன் பிரித்துப் பார்த்த போது கதையின் அடியில் இப்படி ஆசிரியரின்
குறிப்பு இருந்தது:

'நீங்கள் மாணவராக இருந்தாலும் சுயமாகச் சிந்தித்து நன்றாக எழுதுகிறீர்கள்
என்பதால் உங்கள் படைப்புகள் பிரசுரிக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த
நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டீர்கள். இனி பிறரது கதைகளை எடுத்து
எழுதாதீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது உதவாது!'

பிடரியில் அறைந்த மாதிரி இருந்தது எனக்கு. யாரோ மண்டபத்தில் சொன்ன
கவிதையைத் தன் கவிதை என்று மன்னரிடம் காட்டி, அது மறுதலிக்கப்பட்ட போது
புலம்பிய தருமி போலப் புலம்பாதது தான் பாக்கி!

'அற்புதமான கரு' என்று நண்பர் சொன்னது திருட்டுக்் கருவா? நம்மீது
நாரண துரைக்கண்ணன் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த இரவல்
கருவை வாங்கி எழுதி, போக்கிக் கொண்டு விட்டோமே என்று இடிந்து போனேன்.
உடனே நண்பரை(!)த் தேடிப் போய், சண்டை பிடித்தேன். நண்பர் அதிரவில்லை!
அலட்டிக் கொள்ளாமல், 'எனக்கு ஒரு நண்பர் சொன்ன கருதான் அது. அதைத்தான்
உங்களிடம் சொன்னேன்' என்றார் வெகு சாதாரணமாக! அதற்கு மேல் அவரது
முகத்தில் விழிக்கக்கூட மனமின்றி, விடுதி அறைக்குத் திரும்பினேன். ஆசிரியருக்கு
நான் மோசம் போன கதையை பரிதாபமக விளக்கி, மன்னிப்புக் கோரி கடிதம் எழுதி
தபாலில் சேர்த்து விட்டு வந்த பிறகு தான் மனம் சாந்தமடைந்தது.

பின்னாளில்தான் தெரிந்தது - அதே கதையை அநேகர் அநேக மொழிகளில் இப்படி
'இலக்கிய மாரீசம்' செய்திருக்கிறார்கள் என்று! நாராண துரைக்கண்ணன் அவர்கள்
மிக்க
பெருந்தன்மையுடன் என் சமாதானத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை, அதற்குப் பிறகு
நான் அனுப்பிய கதைகளை 'பிரசண்ட விகடனி'ல் வெளியிட்டதன் மூலம் அறிந்தேன்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு, தெனாலிராமனிடம் சூடு கண்ட பூனை போல 'இலவச
கரு' என்று யார் உதவ வந்தாலும் காத தூரம் ஓட ஆரம்பித்தேன்! 0

Saturday, June 04, 2011

இவர்களது எழுத்துமுறை - 40.பி.எஸ்.ராமையா.

1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், 'சிறுகதை உருவம்'
என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா?

பதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்கு
சிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் கதைகளை எழுதும்
போது அதைப் படிக்கப் போகிற மக்களைப் பற்றிய பிரக்ஞை கூட எனக்குக்
கிடையாது. எங்கேயோ தொடங்கி ஒரே ஓட்டமாக ஓடி கதையை எங்கோ
முடிப்பேன். அதில் விழுந்ததுதான் அதன் உருவம். அதன் விதி. இன்றுவரை
நான் ஒரு கதை கூட உருவத்தைப் பற்றி சிந்தித்தோ, தெரிந்தோ எழுதியது
இல்லை.

2. கேள்வி: 'மலரும் மணமும்' சிறுகதைக்குப் பிறகு உங்களுக்கு சிறுகதை
பற்றிய உருவப் பிரக்ஞை வந்து விட்டதா?

பதில்: 'மணிக்கொடி' சகவாசம் மூலம் சிறுகதை பற்றிய பிரக்ஞை தெளிவு
பெற்றது. இருந்தும் வடிவம் பிடிபடவில்லை. வெளி நாட்டிலே அதற்கு மவுசு
அதிகம். எனவே அதற்குள்ள மதிப்பு மார்க்கட்டு எல்லாம் தெளிவாகி விட்டது.

3. கேன்வி: ஒவ்வொரு கதைக்கும் ஒரு வரலாறு உண்டா? அப்படி இருக்கத்
தான் வேண்டுமா?

பதில்: வாழ்க்கையில் எனக்கு நிகழும் சிறு நிகழ்ச்சிகளில் கூட நாடக
ரசத்தைக் காணும் மனப் பழக்கம் வளர்ந்து வந்திருக்கிறது. இந்த மனநிலை
கதைகளில் உணர்ச்சி வேகத்தை ஏற்றுவதற்கு, நாடகச் சுழிப்புகளைக்
கொண்டு வருவதற்கு மிக மிக உதவியாக இருக்கிறது.

4. கேள்வி: தங்கள் கதைகளில் 'ஐரனி' என்கிற விடம்பனம் அதிகமாகத்
தொனிப்பதாகத் தெரிகிறது. அதனால் தங்கள் வாழ்க்கைப் பார்வையே
அதுதான் என்று கொள்ளலாமா?

பதில்: நான் பிறந்தபோது வாங்கிக் கொண்டு வந்த வரமா அல்லது வளர்ந்த
போது ஏற்பட்ட அனுபவங்களின் விளைவா என்று என்னால் சொல்ல முடியாது.
ஆனால் நான் கதை எழுதும் போது இந்த விடம்பன மனப்போக்கு பீறிக்கொண்டு
மேலோங்கி வந்து விடுகிறது. அது நான் மனதார தெரிந்து செய்வது அல்ல.
வாழ்க்கையில் இந்த விடம்பனம் நிறைந்து கிடக்கிறது. ஆகையால் நொடிகளில்
விழும்போது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மனப்போக்கு
வளர்ந்திருக்கிறது. இது என் கதைகளிலிருந்து எனக்குக் கிடைத்த பலனா அல்லது
என்னிடமிருந்து கதைகளில் வெளியாகும் மன நிலையா என்பதை என்னால்
சொல்ல முடியவில்லை.

5. கேள்வி: உங்கள் கதைகளை நீண்டகாலமாகப் படிக்கிறவர்கள் பழைய ராமையா,
புதிய ராமையா என்று பிரித்துப் பேசுகிறார்களே, அது சரிதானா?

பதில்: அது சரிதான் என்று எனக்குத் தோன்றுகிறது. என் மனப்போக்கிலோ,
அழகு உணர்ச்சியிலோ, அதை எடுத்துக் காட்டும் ஆர்வத்திலோ எவ்வித
மாறுதலும் நிகழவில்லை. ஆனால், மணிக்கொடி காலத்தில் எழுதும் போது நான்
உணர்ச்சி வெப்ப நிலையில் இருந்த வாசகர்களுக்கு எழுதினேன். இன்று வியாபாரத்
துறையில் நடத்தப்படும் பத்திரிகைகளின் வழியாக லட்சக்கணக்கானவர்கள் படிப்ப
தற்காக எழுதுகிறேன். ஆகையால் கட்டட அமைப்பு கதை சொல்லும் நடை
ஆகியவற்றை மனதறிந்து மாற்றி எழுதுகிறேன். இரண்டிலும் இலக்கியத்தன்மை
இருக்க வேண்டும் என்ற குறிகோள் என் உள்ளே இருக்கிறது. 0