Tuesday, July 23, 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 - ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’




Share
கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது ‘அலைகளில் புதிசு உண்டா?’ என்று கேட்டேன் நான். ‘’அலைகளில் ஏது புதிது, கரைகள் வேண்டுமானால் புதிது புதிதாகத் தோன்றலாம்” என்றார் நண்பர். .அலையா, கரையா? என்ற சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, பொதுவாக இன்று பெரிய பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளைப் பார்த்தோமானால் இலக்கியத் தரம் என்ற ரசமட்டத்தில் துல்லியமாக அடங்குவது மிக அரிது.

ஆனால் இன்று சிறுகதைகளில் ஒரு சோதனைக் காலம் அரும்பி தலைதூக்கி நிற்கிறது. என்பது மட்டும் உண்மை. எனினும் இன்று சிறுகதை உலகம் சற்றே பரபரப்பு உடையதாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தின் அத்தனை பிரதிபலிப்பையும் கண்ணாடியாகத் துலக்கும் கதை இலக்கியம் இனிமேல்தான் பிறக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.
வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைவிலிருத்திக் கொண்டு ‘மோக பல்லவி’ மூலம் என் பத்தாண்டு காலச் சிறுகதைகள் சிலவற்றை வாசகர் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆ.மாதவன்

திருவனந்தபுரம்.
19-6-1975.

Tuesday, July 16, 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 - சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’


Share
நான் காந்தி காலத்தோடு ஒட்டி வளர்ந்தவன். ஏன், செயலும் சிந்தனையும் அந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியவன், கொஞ்சம் முயற்சி செய்தவனும் கூட. நான் படைப்பாளியாக ஆன பிறகும் என் வாழ்க்கைப் பார்வை காந்தீய ஈடுபாடு கொண்டதாகவே இருந்து வருகிறது. என் இலக்கிய முயற்சிகளிலும் அந்தச் செல்வாக்கு அங்கங்கே என்னை வெளிக்காட்டி இருக்கிறது.

உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் நெப்போலியன் காலம், பிரஞ்சுப்புரட்சி நாட்கள், ரஷ்யப் புரட்சி ஆண்டு,, ஸ்பானிய உள் நாட்டுப் போராட்ட காலம், அமெரிக்க உள் நாட்டுப் போராட்ட காலம் போன்றவை சம்பந்தமாக எல்லாம் நாவல்கள், நாடகங்கள், கதைகள், கவிதைகள்,  இயற்றப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் தமிழ் இலக்கியத்திலோ கல்கி ஆரம்பித்து வைத்த சேர, சோழ பாண்டிய, பல்லவ காலத்து கற்பித நிலையைத்தாண்டி வரவில்லை. ஏன் கிழக்கு இந்திய கம்பனி நாட்களுக்குக்கூட வரவில்லை. அப்படி இருக்க காந்தி காலத்துக்கு எப்போது வரப்போகிறோம் என்றுதான் கேட்டுக்கொள்ளவேண்டி இருந்தது. ஏதோ அத்திப்பூத்ததாக சில சிறுகதைகளும், ஒரு சில நாவல்களும்.தான் இதுவரை வெளியாகி இருப்பது. கவிதைகளும் அதே போலத்தான்.

அந்தகாலத்தை சாட்சிக்காரனாக நின்று பார்க்கும் ஒரு பார்வை, ஒதுங்கி நின்று விருப்பு வெறுப்பு இன்றி, சாதனையை உணர்ந்து, அதை மதிப்பிட்டுப் பார்க்கும் சக்தியும் படைப்புக்கு அதைப்ப யன்படுத்தும் திறமையும் இன்னும் போதிய அளவு ஏற்படாததே காரணம் என்று தோன்றுகிறது.

என் பதினைந்து காந்தி கால கதைகளுக்குப்பிறகு ஒரு காந்தியுகநாவல் எழுத திட்டமிட்டு ஆரம்பித்தேன். முயல் கதையாக  வேகமாக ஓடி ஒரு கட்டத்தில் நின்று இருக்கிறது. அதுக்குள் ‘ நீ இன்று இருந்தால்’ எனக்குள் உருவானது.

‘நீ இன்று இருந்தால்’ குறுங்காவியத்தை நான் ஒரு வாழ்க்கை வரலாற்றுக் காவியமாக ஆக்க விரும்பவில்லை. ஆன்மீகத்தையும் அரசியலையும் பிணைத்து ஒரு  தத்துவ அடிப்படையில் ஒரு தேசத்துக்கு, சமூதாயத்துக்கு விமோசனம் ஏற்படச்செய்தது மட்டுமல்ல, மானிட ஜாதிக்கே விமோசனமாக  உதாரணமாக இருந்து வழிகாட்டிய ஒரு மாமனிதனின் தேஜஸை காட்டுவதுதான் என் நோக்கம். அதோடு அந்த அவதார புருஷன் வாழ்ந்த அடிச்சுவடே இல்லாது போய்விடுமோ என்ற மனப் புழுக்கத்தினிடையே ஏக்கத்தை வெளியிடும் மனக்குரலாகவும் பேசுகிறது.

இந்தக் குறுங்காவியம் வெளியாகி சில மாதங்கள் ஆன பிறகு சிறந்த ரஷ்யக் கவி மயகாவ்ஸ்கியின் 2500 வரிகள் கொண்ட ‘லெனின்’ என்ற நீண்ட கவிதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘லெனினின் கதையை
நான் ஆரம்பிக்க வேண்டிய
நேரம் வந்து விட்டது-
ஆனால் துக்கம்
இனிமேல் கிடையாது
என்பதல்ல’

என்று ஆரம்பித்து,

‘சரித்திரம் தெரியவந்த
எல்லா போர்களிலும்
தலை சிறந்த போர் இது’

என்ற முடியுமுன் ரஷ்ய புரட்சி சரித்திரத்தையும் லெனின் சாதனையையும் பிணைத்து தன் பார்வையில் எழுதி இருக்கிறார். அவர் பாணி வேறு, என் பாணிவேறு என்றாலும் அந்த இரண்டு ஆளுமைகளும் வெளித்தெரிய வந்திருக்கிறதாகவே படுகிறது.

    இந்தக்குறுங்காவியம் 1968ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில எழுதப்பட்டது.. ‘எழுத்து’வில் வெளியானது. இந்தக்கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப் பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். இலியட் தன் ‘பாழ் நிலம்’ கவிதையில் கையாண்டுள்ள ஒரு உத்தியை பின்பற்றியதாகும். அந்த வரிகள் என் கவிதைக்கு மேலும் நயமும் சத்தும் ஏற்றுகின்றன. கவிதை வாசகர்கள் இதை படிக்கும்போது உணரமுடியும்.

சி.சு.செல்லப்பா
சென்னை
21-6-74.

Monday, July 08, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 - ஜெயமோகன் – ‘புதிய காலம்’


Share

             தமிழில் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க ஆக்கங்களைபற்றியும ஆசிரியர்களைப் பற்றியும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எழுத்தாளர்கள் சமகால எழுத்தாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சிக்கலானது. அதிலும் அவர்கள் நம்முடைய அதே வயதை ஒட்டியவர்கள் என்றால் இன்னும் சிக்கல். அவர்கள் ஏதோ ஒருவகையில் நம்முடன் தங்களை ஒப்பிட்டபடியே இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அந்த ஒப்பீட்டின் பகுதியாகவே இந்த விமர்சனங்கள் ஆகிவிடும்.

              ஆனாலும் எழுதத் தூண்டிய காரணங்கள் சில உண்டு. சமகாலத்தில் வந்த பல முக்கிய ஆக்கங்கள் எளிய மதிப்புரைகள் வழியாகத் தாண்டிச் செல்லப்பட்டன. அவற்றின் மீது விரிவான விமர்சன ஆராய்ச்சி நிகழவே இல்லை. இது பல வகையில் சமகால வாசிப்புச் சூழ்நிலையைப் பாதிக்கிறது. சமகாலப் படைப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் நம்மால் இலக்கிய விவாதங்களை நிகழ்த்த முடியாது.

             இந்த விமர்சனங்களில் ஒரு பொது அம்சம் உண்டு. நான் என்னை மிகவும் கவர்ந்த ஆக்கங்களைப்பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன். பிடிக்காத, கவராத ஆக்கங்களைபற்றி ஏதும் சொல்லவில்லை. அவை காலத்தை வென்று வருமென்றால் பார்க்கலாம். இக்கட்டுரைகளில்.

                இவ்வாக்கங்கங்களின் சில குறைகள் சுட்டப்பட்டிருக்கலாம். அவைகள் குறைகள் என்றல்ல, அவ்வாசிரியர்களில் இயல்புகள் என்றே பொருள் படவேண்டும். ஓர் ஆசிரியனில் ஓர் அம்சம் இல்லை அல்லது பலவீனமாக இருக்கிறது என்றால் அது அவனது அகத்துக்குள் செல்வதற்கான ஒரு வழித்திறப்பாகவே அமையவேண்டும்.

               உதாரணமமாக தஸ்தயேவ்ஸ்கி ஒருபோதும் புறவயமான யதார்த்தங்களில் தன் புனைவை ஊன்றுவதில்லை. ஏனென்றால் அவர் கதைகளில் ஒவ்வொரு கணமும் மனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த அகத்தின் தன்னிச்சையான நகர்வை காட்டகூடிய ஒன்றே அவர் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தைச் சொல்லும் விதம்.

          இந்தக்கட்டுரைகளில் எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகரன். போன்று சமகாலத்து முக்கியமான இலக்கிய ஆசிரியர்களும் ஒரே நாவல் மூலம் கணிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரே நூலில் இவர்களது ஆக்கங்கள்பற்றிய அவதானிப்புகள் தொகுக்கப்படும்போது வாசகர்களுக்கு தமிழில் என்ன நடக்கிறது என்று ஒட்டு மொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைககிறது.

        விமர்சனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமர்சனமும்  படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே.

ஜெயமோகன்
நாகர்கோயில்.

Monday, July 01, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………25 - அசோகமித்திரன் – ‘தண்ணீர்’



    எனக்குத் தெரிந்து 1948–லிருந்தே சென்னையில தண்ணீர் ஒரு கவலைப் படவேண்டிய பொருள்தான். தனித்தனி வீடுகள், கிணறுகள்; ஆனால் குடிக்கும்படி இருக்காது. ஆதலால் (அன்று கார்ப்பரேஷன்) குழாய்த் தண்ணீரை நம்பித்தான் சென்னை வாசிகள் எல்லோரும் இருந்தார்கள். தெருக் குழாய்கள் எனப் பல இருந்தன. அவற்றில் எந்நேரமும் தண்ணீர் வரும். தண்ணீருக் கென்று யாரும் தனியாகச் செலவழித்தது கிடையாது. குழாய்த் தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்துவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது குழாயடியில் உள்ளங்கையைக் குவித்துக் கொண்டு தண்ணீர் குடித்திருக்கிறேன். ரயிலில் வெளியூர் போவதாக இருந்தால்தான் ஒரு கூஜாவில் தண்ணீர் எடுதுத்துப் போவார்கள். வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்று ஒரு பழமொழி அன்று உண்டு. அன்று அது உண்மை.

    முப்பது முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீர் வரி விதிக்கக்கூடியதாகவும் விலை கொடுக்க வேண்டியதாகவும் மாறத் தொடங்கிற்று. இந்த மாற்றம் மிக மெதுவாக வந்தது. இது எளிதில் புலப்படவில்லை.. உண்மையில் அன்று சென்னை மக்கள் அனுபவித்த பல இன்னல்கள் இந்த மாற்றம் வந்து கொண்டிருப்பதை உணராததுதான். தண்ணீர் வினியோகமும் ஒழுங்குபடவில்லை, இன்று சென்னை நகரில் குடிசைவாசிகள் உட்படத் தண்ணீருக்குக் கட்டணம் ஏதாவது ஒரு வகையில் கட்ட வேண்டியிருக்கிறது. கூரையிட்ட வீடுகளில் ஒரு குடும்பம் நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை மாதாமாதம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. பத்து மாடி. பனிரெண்டு மாடிகளில் வசிக்கும் செல்வந்தர்கள்(!) மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் தண்ணீர் வசதிக்காக ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

    ‘தண்ணீர்’ நாவல் இதெல்லாம் பற்றியல்ல. ஆனால் இவற்றிற்ககான அறிகுறிகள்ள் கொண்டதுதான். இதெல்லாம் நான் திட்டமிட்டு எழுதவில்லை. ஊர் பெயர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக்கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் கதை எழுதப்பட்டது.

    இந்த 2006-ஆம் ஆண்டின் இந்தத் ‘தண்ணீர்’ நாவலுக்கு எப்படிப் பொருத்தம் தேடுவது? தண்ணீர் மூலம் இருக்க முடியாது. ஆனல் இந்தக் கதையிலுள்ள நெருக்கடிகள் வேறு வேறு பொருட்களுக்காகவும் காரணங்களுக்காவும் நிகழ்கின்றன. நிர்பந்தங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. முயற்சி, வெற்றி, தோல்வி, நிராசை, இன்னும் வாழத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுப்பும் தருணங்கள் இருந்து கொண்டுதான். உள்ளன.

அசோகமித்திரன்

சென்னை,நவம்பர் 2005.